Category: பொது

  • உலக புத்தக தினம்!

    பவள சங்கரி

    harry-potter-500

    எழுத்தாளர்களின் தலைவிதி பெரும்பாலும் பல்வேறு நிராகரிப்புகளின் இடையேதான் நிர்ணயிக்கப்படுகிறது. இது இன்று நேற்று அல்ல..  பல காலமாக தொடர்வதுதான். உலகின் மிகச் சிறந்த படைப்பாளர்களின் ஒருவரான பிரித்தானிய எழுத்தாளரான ஜே. கே. ரௌலிங் என்பவரால் எழுதப்பட்ட ஏழு கனவுருப் புனைவுப் புதினங்களின் தொகுப்புதான்  ஹாரி பாட்டர் என்ற நூல். இந்த நூல் பிற்காலங்களில் எவ்வளவு பிரபலமடைந்திருக்கிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால் ரௌலிங் இந்த புதினத்தை எழுத ஆரம்பித்தபோது உணவு, உறைவிடம், உடை என அடிப்படைத் தேவைகளுக்குக்கூட அல்லாடிய நிலைதான் என்பதை எத்தனைபேர் அறிந்திருப்போம்? அவர் பெரும் மன வேதனையில் இருந்த காலம் அது. தெருவோரங்களிலும், காப்பி கடைகளிலும் அமர்ந்து ஒரு பழைய தட்டச்சு இயந்திரம் மூலமாக தட்டச்சிய புதினத்தை பல பதிப்பாளர்களிடம் கொண்டு சென்று தவம் கிடந்தும்  அவர்கள் பதிப்பிட மறுத்தனர். இறுதியாக  ஒரு மிகச் சிறிய பதிப்பு நிறுவனமான ப்ளும்ஸ்பரி என்ற நிறுவனம்  1,000 பிரதிகளுக்கு 2,250 பவுண்டு தருவதாக ஒப்புக்கொண்டு வெளியிட அத்துணையும் மிக விரைவிலேயே விற்றுத் தீர்ந்து வசூலிலும் சாதனை படைத்து சரித்திரம் படைக்க ஆரம்பித்துவிட்டது!

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் புகழ்படைத்துவரும் இளம் பொருளாதாரப் பேராசிரியர்.

    முப்பால் எனப்படும் திருக்குறளில் நடுவாக இருப்பது பொருள். தமிழில் பொருள் என்னும் சொல் வியப்புறும் பல ஆழமான பொருள்களைக் கொண்டது. ஒரு சொல்லின் பொருள், வாழ்க்கையின் குறிக்கோள் அல்லது உயர்பயன் என்னும் பொருள், கருத்துவடிவமும் பருவடிவமும் கொண்ட அனைத்துமான பொருள், திருவள்ளுவர் சொல்வாரே பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என, அப்படியான பொருள், கடைசியில் இவையனைத்தையும் மீறி கடவுளுக்கே பொருள் என்று ஒரு பெயரும் உண்டு. ”காசேதான் கடவுளடா” என நினைத்துவிட வேண்டாம். சமய இலக்கியங்களிலே வரும் வரிசையாகிய இருள், மருள், தெருள், அருள், பொருள் என்பதில் வரும் கடைசிச்சொல் கடவுளைக் குறிக்கும். ஆனால் மக்களின் இவ்வுலக வாழ்க்கைக்கு அடிமுதன்மையான பொருளாகிய பணம், செல்வம் என்பதை அடிப்படையாகக் கொண்ட துறையே பொருளியல் அல்லது பொருளாதாரம் என்பது.

    ஏப்பிரல் 11, 2016 ஆம் நாள் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (Stanford University) வெளியிட்ட செய்தியில் [2], பேராசிரியர் இராசு செட்டி அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளைப்பற்றியும் அமெரிக்காவில் வாழும் மக்களின் வாழிடத்துக்கும், அவர்களின் ஆயுளுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்புபற்றியும் அவர் வெளிட்ட ஆய்வுக்கட்டுரையைச்சுட்டி [3] புதிய கண்டுபிடிப்பு எனப் பாராட்டியிருக்கின்றார்கள். தற்போதுள்ள நிலையில், அமெரிக்காவைப் பொருத்த அளவிலே (இவ்வாய்வு பிறநாடுகளுக்கும் பொருந்தும் வாய்ப்புள்ளது) சராசரியாக ஒருவருடைய வாணாளை (வாழ்நாளை)த் தீர்மானிப்பது, அவர் எங்கு வாழ்கின்றார், அவருடைய வருமானம் எவ்வளவு என்பதைப் பொருத்தது. பொருளாதார நிலையில் கடைசி 5% இருக்கும் ஒருவர் நியூயார்க்கில் வாழ்ந்தால் அவர் அதே கீழ்நிலை வருமானம் உள்ள, கே’ரி இண்டியானாவில் (Gary, Indiana) வாழும் இன்னொருவரைவிட 5 ஆண்டுகள் அதிகமாக உயிர்வாழ்வார். இவ்வேறுபாடு மிக அதிகமாகக் கருதப்படுகின்றது.

    பொருளாதார நிலையில் கடைசிநிலையில் இருப்பவர்கள் அமெரிக்காவில் எவ்விடத்தில் வாழ்கின்றார்கள் என்பதைப்பொருத்து வாணாள் (வாழ்நாள்) அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதைக் காட்டும் படம் [4]

    பேராசிரியர் இராசு செட்டி அவர்களின் பொருளாதாரக் கண்டுபிடிப்புகள் அமெரிக்காவுக்குக் கொள்கை வகுக்கப் பயன்படுமென அறிஞர்கள் கருதுகின்றார்கள். அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பராக்கு ஒபாமா அவர்கள் தன்னுடைய நாட்டுநிலவரத்தைப்பற்றி நிகழ்த்தும் பேருரையில் “State of the Union Address” பேராசிரியர் இராசு செட்டியின் கொள்கைகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

    இராசு செட்டி அவர்கள் அமெரிக்காவுக்கு 9 வயதில் தன் பெற்றோர்களுடன் சிறுவனாக வந்தார். தனக்கு அகவை 23 நிறையும்பொழுது உலகப்புகழ்பெற்ற ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் (Harvard University) பொருளாதாரத் துறையில் முனைவர்ப் பட்டம் பெற்றார். கி.பி. 1636 ஆம் ஆண்டு தொடங்கிய ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் 380 ஆண்டு வரலாற்றிலேயே மிக இளவயதில் நிலைபெற்றப் பேராசிரியர்களுள் (tenured professor) ஒருவராக இவர் தன் 29 ஆவது அகவையில் உயர்ந்தார்.

    பேராசிரியர் இராசு செட்டி (Professor Raj Chetty) [1]

    இவர் தற்பொழுது இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் பேராசிரியாக இருக்கின்றார். 2012 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மெக்கார்தர் நிறுவனத்தின் சிறப்பாளர் (MacArthur Fellow) ஆனார். இவருடைய ஆய்வுக்காக கட்டுப்பாடுகளற்ற விதமாக $500,000 அமெரிக்க வெள்ளி வழங்கியது [5]. 2013 ஆம் ஆண்டு சான் பே’ட்சு கிளார்க்குப் பதக்கம் (John Bates Clark Medal) இவருக்கு வழங்கப்பட்டது. இதனைக் குட்டி நோபல்பரிசு (Baby Nobel) என்பார்கள். இப்பதக்கத்தை வென்ற பலர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். நியூயார்க்கு தைம்சு நாளிதழ், இப்பதக்கம் பெற்றதைப்பற்றிக் கீழ்க்காணுமாறு குறித்தது [6]:

    “The medal is given by the American Economic Association for achievement by an economist under the age of 40. At 33, Mr. Chetty is one of the youngest winners of the prize. (Paul Samuelson, who went on to win a Nobel, received the award when he was 31 or 32.) Past recipients also include the former Treasury secretary Lawrence Summers, Milton Friedman, and Robert Solow.”

    வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கம் (FeTNA) 2014 இல் தமிழ் அமெரிக்க முன்னோடிகள் (Tamil American Pioneer Award, TAP award) விருதை அளித்துப் பெருமைப்படுத்தியது. அதனைப் பெற்றுக்கொண்டு, தன் வாழ்க்கையைப்பற்றியும் தன் ஆய்வைப்பற்றியும் உரைநிகழ்த்தினார் [7].

    ஆகத்து 4, 1979 இல் பிறந்து பெரும்புகழ் ஈட்டியிருக்கும் இளம் பேராசிரியர் இராசு செட்டி (Raj Chetty) அவர்களை இந்தவார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

    அடிக்குறிப்புகள்:
    [1] படம்- விக்கிப்பீடியா (https://commons.wikimedia.org/wiki/File:Chetty_2012_hi-res-download_2.jpg)
    [2] http://news.stanford.edu/news/2016/april/poverty-chetty-siepr-041116.html
    [3] http://jama.jamanetwork.com/article.aspx?articleid=2513561
    [4] http://www.citylab.com/housing/2016/04/when-youre-poor-where-you-live-determines-how-long-youll-live/477687/
    [5] https://www.macfound.org/search/?q=raj+chetty
    [6] http://economix.blogs.nytimes.com/2013/04/12/raj-chetty-wins-the-john-bates-clark-medal/
    [7] https://www.youtube.com/watch?v=bJvC0Rwwai4 (இராசு செட்டி பேசுவது மணித்துளி 11:52 இல் இருந்து தொடர்கின்றது. அதற்கு முன்பு அவரை அறிமுகப்படுத்துவதை கேட்கலாம்)

    Share
  • சட்டத்தின் உரிமை மீறல்

    — சு.காந்திமதி.

    சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்று நாம் அனைவரும் கூறுகிறோம். அது மட்டும் அல்ல மதம், இனம், மொழி, தேசியம், மற்றும் பாலியல் ரீதியாக எந்தவொரு பாகுபாடின்றி அனைவருக்கும் எல்லா இடங்களிலும் மனித உரிமை கிடைக்கப் பெற சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தனி மனிதர் ஒருவருக்குப் பிரச்சனை என வந்தால் நாம் எல்லோரும் விலகி ஓடுகிறோம். வீட்டில் நிம்மதியாகக் கூட உறங்க முடிவதில்லை.

    பொதுவாகக் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் திருவிழாக்கள் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் சூழ்நிலை தவறி சண்டை சச்சரவுகள் வந்து விடுகின்றது. இதில் சிலரது கோபத்தினாலும் சூழ்ச்சியினாலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்படப் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இதில் எந்தத் தவறும் செய்யாத அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சண்டை சச்சரவுகளில் ஈடுபடாத அப்பாவிகள் வீட்டில் இருந்தாலும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடாத அப்பாவி பொது மக்களையும் பிரச்சனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும் சூழ்நிலையும் அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிடுகிறது. சூழ்நிலையும், அக்கம் பக்கத்தினர் கூறுவதையும் மதிக்காமல் சம்பந்தம் இல்லாத அப்பாவி பொது மக்கள் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். இதனால் பொது மக்கள் அதிக மன உளைச்சலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது சட்டத்தின் உரிமை மீறல் தானே!

    ____________________________________________

    சு.காந்திமதி
    ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் நிர்வாக வளர்ச்சித் துறை
    காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம், காந்திகிராமம்

    Share
  • எளிமையான தலைவர்!

    பவள சங்கரி

    லால்

    இத்தகைய மாமனிதர்களும், அரசியல் தலைவர்களாக வாழ்ந்த புண்ணிய பூமிதான் நம் இந்தியா! நம்புங்கள் நண்பர்களே..  ஆம், நம்ம லால் பகதூர் சாஸ்திரி பற்றித்தான் சொல்கிறேன். சாஸ்திரி அப்போது நேருவின் மந்திரி சபையில் இருந்தார். நம்முடைய அண்டை நாடான நேபாளத்திற்கு ஒரு விழாவிற்காகச் செல்ல வேண்டிய நேரத்தில், நேருவிற்குப் பதிலாக சாஸ்திரியை அனுப்பிவைத்தவர், அது கடுமையான குளிர் காலம் என்பதால் தம்முடைய கோட் ஒன்றை அந்தக் குளிருக்கு அவருக்குத் தேவைப்படும் என்று சொல்லி அவரிடம் கொடுத்தனுப்பினார். இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாஸ்திரி, அதாவது நேருவின் மறைவிற்குப் பிறகு நம் நாட்டின் பிரதமரானார். அப்போது இலண்டனில் நடந்த காமன்வெல்த் பிரதம மந்திரிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுக்கொண்டிருந்தார் சாஸ்திரி. அவருக்குத் தேவைப்படும் என்பதையறிந்த அவருடைய மனைவி சாஸ்திரி அவர்களுக்கு ஒரு கோட் தைக்க ஏற்பாடு செய்தார். இதையறிந்த சாஸ்திரி அதை மறுத்துவிட்டு நேரு பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்குக் கொடுத்த அதே கோட்டை தன்னுடைய அப்போதைய அளவிற்கு சரிசெய்து தரும்படி தையற்காரரிடம் சொல்லி, சரிசெய்த பின்பு அந்தக் கோட்டையே இலண்டன் மாநாட்டிற்கு அணிந்து சென்றாராம்!

    Share
  • அழகென்னும் தெய்வம்

    -ச.சவகர்லால்

     

    mountain

     

     

     

     

     

     

     

     

     

    பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்
       -புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்
    காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்
       -கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்
    சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்
       -திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி   
    ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;
       -அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.

    காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்  
       -கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.
    சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்
       -சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.
    காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்
       -கட்டுறுதித் தோளசைவில், அழகைக் கண்டேன்.
    மாலைவரும் புள்ளினத்தின் வரிசை தன்னில்
       -மயக்குகிற அழகென்னும் தெய்வம் கண்டேன்.

    மலைமீது கொஞ்சுமிளம் பசுமை; அங்கே
       -மலர்மாலை எனவீழும் அருவி, ஓடி
    மலையளக்கும் மான்கூட்ட அருமை, ஆளை
       -மயக்குகிற காட்டுமர இசைகள், என்றே
    மலையெல்லாம் அழகுகொஞ்சி நிற்ப தால்தான்
       -மனமகிழத் தமிழ்முருகன் மலையைக் கொண்டான்.
    மலைகண்டு குடிகொண்டு வாழு மந்த
       -மலைக்கொழுந்தில் அழகென்னும் முழுமை கண்டேன்.

    தெய்வத்தைக் காணவெனில் தூய்மை கொஞ்சித்
       -திகழ்கின்ற மனம்வேண்டும்; அதுபோ லத்தான்
    தெய்வமெனும் அழகினையே காண வேண்டின்
       -செப்பமுற்ற கவிதைமனம் வேண்டும்; அந்தத்
    தெய்வத்தைக் கண்டுணரப் பழகி விட்டால்
       -தெருவெல்லாம் அழகுநடம் மிளிரும்; அந்தத்
    தெய்வமனம் கவிதையுளங் கொண்ட வன்நான்
       -தெய்வமெனும் அழகிற்கே அடிமை யானேன்.

     

     

    Share
  • படைப்பாளியின் படைப்பு பொதுவுடமையா?

    பவள சங்கரி

    11593728

    படைப்புகள் வெளியிட்ட பின்பு அது படைப்பாளிக்கு மட்டும் தனியுடைமை அல்ல .. பொதுவுடைமையாகிவிடுகிறது என்பார்கள். படைத்தவர்களே அதைத் தள்ளி நின்று ஒரு வாசகராகத்தான் காண முடியும்! இந்த யதார்த்த நிலைக்கு உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிகாசோ மட்டும் விதிவிலக்கா என்ன?

    the-blockbuster-mystery11-16-11-8

    ஆம், ஒரு முறை பிகாசோ வீட்டில் தம் நண்பர்களுக்கு மிகப்பெரிய விருந்து வைத்துக்கொண்டிருந்தாராம். எல்லோரும் ஆனந்தமாகக் கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியின் எல்லையில் திளைத்தவாறு அமர்ந்து அளவளாவிக்கொண்டிருந்தார்களாம்.. அப்போது அவர்களில் ஒரு நண்பர் வீட்டை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தவர், சுவர்களையெல்லாம் கவனித்துவிட்டு, பிகாசாவின் ஒரு ஓவியம்கூட அவருடைய வீட்டுச் சுவற்றை அலங்கரிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் , ‘ஏனப்பா உன் ஓவியம் உனக்கே பிடிக்காதா, ஒன்றுகூட இங்கு இல்லையே’ என்று கேட்டாராம்.

    img276

    அதற்கு ஓவியர் பிகாசா மிக யதார்த்தமாக, ‘சுவரில் ஓவியங்களை மாட்டி அழகு பார்க்க எனக்கும் ஆசைதான். ஆனால் அதன் விலை எனக்குக் கட்டுப்படி ஆகாதே.. நான் என்ன செய்ய..?’ என்றாராம்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 57-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல
    மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா
    பங்கயக் கைநலம் பார்த்தலவோ – இந்தப்
    பாரில் அறங்கள் வளரும் அம்மா!
     என்று மங்கையரைப் போற்றினார் கவிமணி. அத்தகைய மாதவத்தோரான மங்கையர் புன்னகைபூத்த முகத்தோடும், புதுவண்ணங்கள் வழியும் உடலோடும் புகைப்படத்தில் நின்றிருப்பது வாராதுபோல் வந்த வசந்தகாலத்தை வரவேற்கவோ?

    girls with holy colors

    திரு. ராஜ எடுத்திருக்கும் இந்த வண்ணப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். நன்றி இவ்விருவருக்கும்!

    கவிஞர்களின் புத்தாக்கங்களைப் படித்துமகிழும் தருணமிது! புறப்படுங்கள்!

    ***

    ”சாயம்பூசி வசந்தம் கொண்டாடும் இந்த அழகுச் சிறுமலர்களைக் காமுகர்களிடமிருந்து காத்திடுங்கள் கடவுளரே” என்று மங்கையரின் நல்வாழ்வுக்காக மன்றாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    சாயம் உடலில் பூசிடினும்
    சாயா அழகுச் சிறுமலர்கள்,
    மாயம் மந்திரம் ஏதுமில்லை
    மாறா வெகுளிப் புன்னகைகள்,
    காயம் மனதில் உள்ளவர்தம்
    காமப் பார்வை தனில்சிக்கிக்
    காயம் படாமல் காத்திடவே
    கணத்தில் வருவீர் கடவுள்களே!

    *** 

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துவருவோம்!

    ’பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்று பகர்ந்த தெய்வப்புலவன் அவதரித்த தமிழ்நாட்டில் இன்றோ வருணாசிரமத்தின் பெயரால் கருணையின்றி மனித உயிர்கள் காவுவாங்கப்படுகின்றன!  சக மனிதர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி நம் பண்பாட்டை அழிப்போர் சகத்தில் வாழ்வது மாந்த இனத்திற்கே பெருத்த அவமானம் ஆகும்!

    ”வண்ணங்களால் வசந்தம் பூசிக்கொள்ளும் மனித மனத்தை, எண்ணங்களால் மனிதன் வேறுபடுத்துதல் வேதனைக்குரியது; வண்ணங்களே இயற்கைக்கு அழகூட்டுவன; புதிய சாலங்கள் காட்டுவன. அவற்றை மனிதனின் சுயநலம் சிதைக்கலாகாது” என்று நயமாய் உரைக்கும் கவிதை நெஞ்சைத் தொடுகின்றது!

    வண்ணங்களே இங்கு
    வாழ்க்கையாகின்றன….
    எண்ணங்களால் அதை
    பேதப்படுத்துகிறான் மனிதன்!

    வண்ணங்களால் மனம்
    வசந்தத்தைப் பூசிக்கொள்கிறது….
    வார்த்தைகளால் அதன்
    தட்பவெப்பநிலை மாறுபடுகிறது.

    வண்ணங்களால் இயற்கை
    எல்லையிலா எழில் பெறுகிறது…..
    சுயநலத்தால் மனிதரதைச்
    சிதைத்து விடுகின்றனர்.

    வண்ணங்களால் இறைவனும்
    வடிவழகைப் பெறுகின்றான்……
    மதப்பூச்சால் வேறுபட்டு
    மாகடவுள் நிறமிழக்கின்றான்.

    வண்ணங்களால் சூழுலகு…அதன்
    வடிவம் கெடாது கொண்டாடு பெண்ணே…
    வண்ணத்துப்பூச்சிகளை இழந்துவிட்டு
    அவையுதிர்த்த வண்ணங்களால் ஏதுபயன்?

    வண்ணங்களை மனதிலிருந்தகற்றி
    வாழ்க்கையினை வாழ்ந்து பார்!
    புறவுலகின் பூக்களெலாம்
    வண்ணங்களின் பாடம் புகட்டும்!

    இன்னும் பலமுறை
    பேதமிலாது
    வண்ணங்கள் பூசிக்கொள்ளுங்கள்….
    இருக்கின்ற உலகம்
    அடடாவோ…..
    எத்தனை எழில் கொள்ளும்!

    புறவுலகின் பூக்கள் நம் அகவாழ்வுக்கு அழகுசேர்க்கட்டும் என்று இதமாய்ச் சொல்லுகின்ற இனிய இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. இளவல் ஹரிஹரன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.

    ***

    வறுமை மறந்து வானவில்லாய் ஆடுங்கள்; சாதி மறந்து சமத்துவ ஹோலி கொண்டாடுங்கள் என்று உற்சாகமூட்டும் கவிதை ஒன்று!

    வறுமை மறந்து சிரித்திடவே 
    வானவில் லாட்டம் ஆடிடுங்கள் !
    பெருமை சிறந்து திகழ்ந்திடவே
       பொறுமை யாட்டம் இருந்திடுங்கள் !
    கருணை கொண்ட விளங்கிடவே 
    கடவு ளாட்டம் மின்னிடுங்கள் !
    சாதி மறந்து வாழ்ந்திடவே 
    சமத்துவ ஹோலியை விதைத்திடுங்கள் !

    எளிய வரிகளில் அரிய வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லியிருக்கும் திருமிகு. ஹிஷாலியைப் பாராட்டுகின்றேன்.

    கவிஞர் பெருமக்களே! கவிதைகளின் வரவு இவ்வாரம் மிகவும் குறைந்திருக்கக் காண்கின்றேன். சிந்தனைச்செல்வம் நிரம்பப்பெற்ற உங்களிடமிருந்து அதிக ஆக்கங்களை வரும் வாரங்களில் எதிர்பார்க்கின்றேன். நன்றி!

     

     

    Share
  • கோபம் ஆகாதுங்க…!

    பவள சங்கரி

    images (2)அதிக கோபம் என்னென்ன பிரச்சனையை ஏற்படுத்தும் என்று நாம் அறியாததல்ல..  ஒருவர் அதிகமாக கோபப்படும்போது அவருக்குள் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து உடலினுள் ஒருவகை இரசாயணம் உருவாகிறதாம். இதையும் ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்திருக்கிறாராம். அதீதமான அச்சத்திலோ, அல்லது கோபத்திலோ உள்ள ஒருவரிடமிருந்து இரத்தத்தை எடுத்து  பரிசோதனைக்காக  சோதனைக் கூடத்தில் இருந்த பன்றிகளுக்குச் செலுத்திப்பார்த்தபோது அவை இரண்டு நிமிடங்களில் இறந்துபோய்விட்டதாம். ஓர் உயிரைக் கொல்லும் அளவிற்கு  பலம் வாய்ந்த இரசாயணம் நமக்குள் எத்தகைய பிரச்சனைகளையெல்லாம் தோற்றுவிக்கும்? ஆம் அதீதமான பயம், கோபம், எரிச்சல், ஏமாற்றம், மன உளைச்சல் போன்றவைகள்  தோற்றுவிக்கும் இரசாயணம் மனிதனின் உடலையும் உயிரையும் பெரிதும் பாதிக்கவல்லது! என ஆராய்ச்சியாளர்கள் கவலையோடு தெரிவித்துள்ளனர். சுருக்கமா சொல்லணும்னா நமது மனது தான் நமது உடலின் சிற்பி. நம் உடலை நல்ல சிலையாகவோ அல்லது பின்னமான உருவமாகவோ அமைப்பது நம் கையில்தான் உள்ளது!

    Share
  • ‘நேர்மாற்று உளவியல்’

    பவள சங்கரி

    reverse-psych

    ‘நேர்மாற்று உளவியல்’ அப்படின்னு ஒரு விசயம் இருக்கு தெரியுங்களா..? இது  வெற்றிக்கான ஒரு எளிதான உத்தி. சமீபத்தில் ஒரு கடற்கரையில் ஒரு தேநீர் விற்கும் சிறுவனிடம் இதைக்கண்டு ஆச்சரியப்பட்டேன். செம அறிவாளி போல… இந்தப் பையன் இருக்க வேண்டிய இடமே வேறு.. பிற்காலத்துல பெரிய ஆளா வருவாயப்பா என்று வாழ்த்திவிட்டுத்தான் வந்தேன்..  அப்படி என்ன செய்தான்னுதானே யோசிக்கறீங்க..? பின்ன என்னங்க.. எல்லோரும் டீ…  டீ…  சாய்… சூப்பர் பால் டீ..  சூப்பர் ஏலக்காய் டீ…..   சூப்பர் இஞ்சி டீ அப்படீன்னு விற்கறத பார்த்திருக்கோம். இவன் மட்டும் ‘படு மோசமான டீ..’ ரொம்ப ரொம்ப மோசமான டீ..’ அப்படீன்னு கூவிக்கொண்டிருந்தான்.  என்ன ஆச்சரியம் கொஞ்ச நேரத்தில் அத்தனை தேநீரையும் விற்று தீர்த்து விட்டான் அந்த சிறுவன். தேநீர் அதிகமாக குடிக்கும் வழக்கம் இல்லாத நான்கூட அப்படி என்ன மோசமான டீ, குடித்துதான் பார்க்கலாமே என்று வாங்கிக் குடித்தேன் என்றால் பாருங்கள். இதே உத்தியை சமீபத்தில்  விஜய் தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் பயன்படுத்தி தன் நூல் ஒன்றிற்கு ‘இதை வாங்க வேண்டாம்’ என்று எதிர்மறையாக தலைப்பிட்டு விற்பனையில் சாதனை படைத்தாரே, அது  நினைவிருக்குமே? என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா.. !

    Share
  • புத்திசாலித்தனமும், அறிவும் ஒன்றா?

    பவள சங்கரி

    images
    சாக்ரடீசு மிக யதார்தமான அறிஞர். ஒரு நாள் அவருடைய அபிமானி ஒருவர் அவரிடம் வந்து, ஐயா புத்திசாலித்தனமும், அறிவும் ஒன்றா? இல்லையென்றால் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? என்று வினவுகிறார்.

    அவரும் மெல்லிய புன்னகையுடன், “அதோ அங்கு திண்ணையில் உட்கார்ந்திருக்காரே அந்த பெரியவர்கிட்ட போய், இங்கிருந்து அடுத்த ஊருக்குப்போக எவ்வளவு நேரம் ஆகும்னு கேட்டுவிட்டு வா” என்றார்.

    அந்த மனிதரும் அப்படியே போய் அந்தப் பெரியவரிடம் கேட்க, அவரோ பதிலேதும் கூறாமல் மேலும், கீழும் பார்த்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டாராம். இவரும் விடாமல் 2,3 முறை கேட்டுவிட்டு, பாவம் மனநிலை சரியில்லாதவர்போல என்று நினைத்து திரும்பிச்செல்ல நான்கு அடி எடுத்து வைத்தார்.

    உடனே அந்தப் பெரியவர், ‘யப்பா, நீ ஒரு 15 நிமிடத்தில் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்துவிடலாம்’ என்று சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டார்.

    இத்தனை முறை கேட்டு பதில் சொல்லாத பெரியவர் திடீரென்று ஏன் சொன்னார் என்ற ஆச்சரியத்துடன், அவரையே அதற்கான காரணமும் கேட்டார்.

    ‘ஏம்ப்பா நீ எவ்வளவு வேகமாக நடக்கக்கூடியவன் என்று தெரிந்தால்தானே நீ கடக்க வேண்டிய தூரத்திற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று நான் கணக்கிட முடியும்’ என்றவரை ஆச்சரியமாகப் பார்த்ததோடு கும்பிட்டுச் சென்றவன் அதை அப்படியே போய் சாக்ரடீசிடம் சொல்கிறார்.

    அதற்கு சாக்ரடீசு அதே புன்னகையுடன், ‘இதற்குப் பெயர்தானப்பா புத்திசாலித்தனம்’ என்றாராம்!

    Share
  • ‘தேவ வாத்தியம்’

    பவள சங்கரி

    ‘தேவ வாத்தியம்’ என்பது எது? ஏன் அது அப்படி அழைக்கப்படுகிறது?

    images (1)

    ‘கடம்’ என்ற மண்பானை போன்ற தோற்றமுடைய அந்த எளிமையான இசைக்கருவிதான் ‘தேவ வாத்தியம்’ என்று அழைக்கப்படுகிறது. இது கர்நாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று. தோற்றத்தில் சாதாரண மண் பானை போலவே இருந்தாலும் இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கடம் தயாரிப்பதற்கு மூன்றுவிதமான மண் தேவை. வைகையாற்று வண்டல், கண்மாயில் பதிந்து கிடக்கும் களிமண் மற்றும் மணல். ஒரு மாட்டு வண்டி வண்டலில் 40 கடம் செய்யலாமாம். சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற ‘குடமுழவு’ எனும் இசைக்கருவியே நாளடைவில் மருவி ‘கடம்’ என்று ஆனதாகவும் சொல்கிறார்கள்.

    சாதாரண பானையை 4 மணி நேரம் நெருப்பில் வேகவைத்தால் போதும். ஆனால் கடம் உருவாக 16 மணி நேரம் நெருப்பில் வேக வைக்க வேண்டுமாம். 10 கிலோவுக்குக் குறையாமல் இதன் கனம் இருக்கும். பானையைப் போல இதை எளிதாக உடைக்க முடியாது. கடம் அரிவாள் வைத்துக் கொத்தினாலும் சில்லுகள் பெயராது!

    சரி இதற்கு ஏன் ‘தேவ வாத்தியம்’ என்று பெயர் வந்தது என்று பார்ப்போமா. ஒரு கஞ்சிரா உருவாக ஒரு உடும்பின் உயிர் தேவையாம். ஒரு தவில் உருவாக ஒரு மாட்டின் உயிர் தேவை. ஆம் மேற்கண்ட இரண்டும் அந்த உயிரினங்களின் தோலினால்தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் கடமோ மண்ணில் இருந்தே உருக்கொள்கிறது. நிலத்திலிருந்து மண், மழையிலிருந்து நீர், காற்றினால் உலரச்செய்து, தீயினால் சுட்டு உருவாக்கப்படும் ஒரு கடத்தில் வெற்றிடமாக அந்த ஆகாயம் இருக்கிறது. ஆக, ஐம்பூதங்களும் இந்த கடத்திற்குள் அடக்கம். அதனால்தான் இதனை ‘தேவ வாத்தியம்’ என்கிறார்கள்.

    images (2)

    பாரம்பரியமாக இசைக்கருவிகள் தயாரித்து வரும் பல கலைஞர்கள் இன்று அத்தொழிலை விட்டு விலகியதால் பல அரிய இசைக்கருவிகள் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதன் காரணம் இசைக்கருவிகளை இசைக்கும் மீப்பெரும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் அதற்குப் பின்புலமாக விளங்கும் அத்தகைய கருவிகளைத் தயாரிப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான்! சொல்லப்போனால் கடம் தயாரிக்கும் ஒரு சாதாரண மனிதருக்கு அந்த இசையின் முழு பரிமாணமும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதுதான் ஆச்சரியம். ஆம், கடம் செய்வோருக்கும் இசைஞானம் இருந்தால்தான் அதன் சரியான நாதம் மற்றும் சுருதி பேதம் என அனைத்தையும் சரிபார்க்க முடியுமாம்!

    02-1399006537-pranab-meenachiammal-600

    இந்தியாவிலேயே சிறந்த கடம் தயாரிப்பாளர் என மானாமதுரையைச் சேர்ந்த மீனாட்சியம்மாளுக்கு இந்திய அரசு அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கையால் விருது பெற்றுள்ளார் என்பது ஆறுதலான விசயம்!

    இணையப்படங்களுக்கு நன்றி.

    Share
  • கலைமாமணி” பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு எங்கள் கண்ணீரஞ்சலி!

    -கவிஞர் காவிரிமைந்தன்

     

    Anandan

     

    “கலைமாமணி” பிலிம்நியூஸ் ஆனந்தன்…
    திரைத்துறைத் தகவல்களின் கருவூலம்
    விரல்நுனியில் தந்திட்ட பேரறிஞர்!
    இவருடனே பழகுகின்ற நாட்களையே
    தந்ததெல்லாம் நிச்சயமாய்ப் பாக்கியமே!!

    தேனொழுகப் பேசுகின்ற பண்பாளர்
    தினையளவும் கோபம்வரா ஓர்மனிதர்!
    வயதுகளைக் கடந்தபடி வரவேற்பளிப்பார்!
    சுயநலங்கள் இல்லாது வாழ்ந்தாரே!!

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்சார்ந்து
    தமிழகத்தின் தலைநகரில் சிலையமைத்தோம்!
    திருமகனின் பெயரில்பல விருதளித்தோம் – அதைத்
    திராவிட மொழிகளுக்கு வழங்க வைத்தார்!!

    அவர்தந்த அறிவுரையை அப்படியே ஏற்று
    தெலுங்கு கன்னடம் மலையாள கவிஞர்களுக்குக்
    கவியரசு கண்ணதாசன் விருதளித்த ஆண்டு 1994
    முழுமையாய் ஒத்துழைப்பு நல்கினாரே!!

    மக்கள் தொடர்பு அதிகாரி  என்னும் பதவி
    உருவாக்கித் தந்தவரே மக்கள் திலகமன்றோ?
    நாடோடி மன்னன் திரைப்படத்தில் – அதை முதன்
    முதலாய் ஏற்றவரும் பிலிம்நியூஸ் ஆனந்தனே!

    காலைமுதல் இரவுவரை ஓய்விலா உழைப்பு
    பயன்கருதாப் பற்றுவைத்த திரைத்துறை உறவு
    படம் எடுத்தவரே மறந்தபோதும் – தகவல்களை
    பட்டென்று சொல்வாரே – இனி எவரோ??

    வாழ்நாளின் பெரும்பகுதி இதற்காக வாழ்ந்துகாட்டி
    வரலாறு படைத்தவர் இவரென்றால் மிகையில்லை!
    சாதனைகள் படைத்த ”தமிழ்த்திரை வரலாறு” நூலினைத்
    தன்வாழ்நாள் சாதனையாய் வழங்கியவர் புகழ்வாழ்க!!

     

     

     

    Share
  • ஆணவக் கொலை!

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழர் பண்பாடு தரணியிலேயே தலைசிறந்தது என்று பெருமைபேசிப் பூரிப்படைவோர் நாம். உண்மை…வெறும் புகழ்ச்சியில்லை! அத்தகைய பீடும் பெருமையும் உடையதுதான் நம் பண்பாடு. எனினும், அவ்வுயரிய பண்பாட்டைப் பேணுவதிலும், அழியாது கட்டிக்காப்பதிலும் எவ்வளவுதூரம் நாமின்று முனைப்பாயிருக்கிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டிய தருணமிது!

    பகுத்தறிவுப் பகலவன் ஒளிவீசிய தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் இனவாதச் சிந்தனைகளும், சாதிப் படுகொலைகளும், இந்த அநியாயங்களையெல்லாம் வோட்டுக்காகவும் பதவிக்காகவும் கைகட்டி வேடிக்கைபார்க்கும் அரசியல்கட்சிகளின் கையாலாகாத்தனமும், ’பண்பாடு’ என்ற ஒன்று நம் தமிழரிடம் இன்னமும் மிச்சமிருக்கின்றதா? எனும் கேள்விக்கணையை நம் நெஞ்சில் கூர்மையாய்ப் பாய்ச்சுகின்றது.

    நாட்டையாளும் அரசனாயினும் சரி, காட்டில் திரியும் மனிதனாயினும் சரி, இருவரும் உண்பது நாழியளவே; உடுப்பவை இரண்டே; பிற அடிப்படைத் தேவைகளும் அவ்வாறே சாமானிய மாந்தர்க்கும், நாடாளும் வேந்தர்க்கும் பொதுவானவை என்பது சங்கப் பெரும்புலவர் நக்கீரர் கண்டறிந்த உண்மை.

    தெண்கடல் வளாகம் பொதுமையின்றி
    வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
    நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
    கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
    உண்பது நாழி உடுப்பவை இரண்டே
    பிறவும் எல்லாம் ஓரொக்
    கும்மே….(புறம் – 189 – நக்கீரனார்)

    வாழ்வின் இயல்பு இவ்வாறிருக்க, தங்களை ’ஆண்ட பரம்பரை’ என்று சிலர் கூறிக்கொண்டு தருக்கித் திரிவதும், வேறுசிலரை தீண்டத்தகாத அடிமைகளாய்க் காலிலிட்டு மிதிப்பதும், நாம் மக்களா இல்லை விலங்குநிலையிலிருந்து சற்றும் விலகாத மாக்களா எனும் ஐயத்தையும், சீற்றத்தையும் தோற்றுவிக்கின்றது.

    இவ்விடத்தில் ஆயுதங்களின் பயன்பாடு குறித்தும் நாம் ஆராயவேண்டும். நம் முன்னோர் அரிவாளைக் கண்டுபிடித்தது கதிரறுக்கத்தானே ஒழிய (நமக்கு வேண்டாதோரின்) கழுத்தை அறுக்க அன்று! ஆனால் இப்போதைய நடைமுறைகள் இதனை முற்றிலும் பொய்யாக்கிவருகின்றன. களைவெட்டிய அரிவாள் இன்று மனிதரின் தலைவெட்டிச் சாய்க்கின்ற அவலத்தை என்னென்பது? சாதிப்பூசல்களும் இனக்கலவரங்களும் அரிவாளின் துணையுடனேயே இற்றைநாளில் அனுதினமும் அரங்கேற்றம் காண்கின்றன!

    ஓர்ஆண்மகன் வேற்றுசாதிப் பெண்ணைத் தன் ’பெண்சாதி’ (மனைவி) ஆக்கிக்கொள்ளத்தான் நம் சமூகத்தில் எத்தனைத் தடைகள்!? அதிலும் அந்த ஆடவன், வக்கிரபுத்தி படைத்த, (so-called) மேட்டுக்குடியினரால் ’தாழ்த்தப்பட்டோன்’ என்று முத்திரை குத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாயிருந்தால்….? அவன் செத்தான்!

    காதலுக்குச் சாதியில்லை மதமுமில்லையே என்று முழங்கினார் கவியரசர். ஆனால் சாதிவெறிகொண்ட கூட்டமோ, “மதமும் இனமும் பாராது வருகின்ற காதலில் எமக்குத் துளியும் சம்மதமில்லை” என்று கொக்கரிக்கின்றது. மனம் பார்த்து வருகின்ற காதல், இனி இனம்பார்த்து வந்தால்தான் காதலும் காதலித்தோரும் தப்பிப்பிழைப்பர் போலிருக்கின்றது!

    அதற்குச் சமீபத்திய சான்று 19 வயதே நிரம்பிய இளம்பெண் கௌசல்யா!

    காதல்ஒருவனைக் கைப்பிடித்துத் தன் இல்லற வாழ்வைத் தொடங்கிய கௌசல்யா, தன் சொந்தக் குடும்பத்தினராலேயே எங்கே தன் கணவனுக்கும் தனக்கும் முடிவு நெருங்கிவிடுமோ என ஒவ்வொருநாளும் அஞ்சியஞ்சிச் செத்தவண்ணமே வாழ்ந்துவந்திருக்கின்றார்!! அவர் நினைத்ததுபோலவே இதயமற்ற சாதிவெறி இருசக்கரவண்டியில்வந்து அந்த இளஞ்சோடியைச் சரமாரியாய் வெட்டியிருக்கின்றது. கண்ணெதிரிலேயே தன் காதற்கணவன் கோரமாய் மாண்டுபோவதைக் கண்ட அந்த இளம்பெண்ணின் உள்ளம் எப்படிப் பரிதவித்திருக்கும்? பதறித் துடித்திருக்கும்?

    தங்கள் சாதியின் கவுரவத்தைத் (!) தக்கவைத்துக்கொள்வதற்குத்தான் பெண்ணின் குடும்பம் இந்தக் கொலையில் இறங்கியது என்று இந்த காட்டுமிராண்டித்தனமான வெறிச்செயலுக்கு நியாயம் கற்பிக்கப்படுகின்றது கயவர்களால்! ஐயகோ! கொலையா ஒரு சமூகத்தின் கவுரவத்தைக் காத்துநிற்கப் போகிறது??!! நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!

    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போல் போற்றாக் கடை
    என்றார் வள்ளுவர். பிற உயிர்களுக்குக் கொடுந்தீங்கு இழைக்கும் இத்தகைய அறிவற்ற கொலைபாதகரைக் கண்டால் அந்த தெய்வப்புலவரும் கண்ணீர்விட்டன்றோ கதறுவார்!

    இளம் உள்ளங்களில் இயல்பாய்த் தோன்றும் மலரினும் மெல்லிய காதலைச் சிதைத்துவிட்டுச் சாதி எனும் நச்சரவை அங்கே குடியேற்றுவதால் தேவையற்ற சச்சரவும் சண்டையும், இனப்பகையுந்தான் வளருமேயன்றி மனிதநேயம் மலராது.

    சங்கக் கவிஞன் பூங்குன்றனைப்போல் ‘யாவரும் கேளிர்’ எனும் அளவிற்கு நாம் பரந்தமனம் கொள்ளாவிடினும் பரவாயில்லை; ”என் இனத்தைத் தவிர அனைவரும் என் பகைஞர்!” என்று ஆவேச முழக்கமிட்டு ஆயுதமேந்தாமல் இருந்தாலே போதுமானது என்று சொல்லுமளவுக்கு அல்லவா தமிழனின் தரம் இன்று தாழ்ந்து போய்விட்டது! நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்ணும் நனிநாகரிகம் கொண்டிருந்த தமிழன், இன்றோ தமிழினத்தைச் சேர்ந்தவனையே பகைத்து, அவன் வாயில் வலியச்சென்று நச்சை ஊட்டவும் துணிந்துவிட்டான்!

    ’என் சாதி உயர்ந்த சாதி’ எனும் பொருளற்ற அகந்தை கொண்டு, அருள் கொன்று, விலைமதிப்பில்லா மனித உயிர்களை ’ஆணவக் கொலை’ செய்வதற்குப் பதிலாய், நம்மிடம் குடியிருக்கும் ’நான்’ எனும் ஆணவத்தைக் கொலை செய்வோம்! அதுதான் உண்மையான ஆணவக் கொலை!

    மாந்தர்காள்! கிடைத்தற்கரியது இம்மானுடப் பிறவி. இப்பிறவி வாய்த்தோர், ஒருவரோடு ஒருவர் அன்புபாராட்டியும், இனியவை கூறியும், இன்னா செய்யாது, இன்முகத்தோடும், இரக்கத்தோடும் கூடிவாழ்ந்தால் கோடியின்பம் நம்மை நாடி வாராதோ?

     

     

    Share
  • வாக்குமூலம்

    -மீ.விசுவநாதன்

    ஓடியோடிப் போகின்றேன் – உயிர்
    ஓட்டப் பந்தய வீதியிலே!
    ஆடியாடிக் களிக்கின்றேன் – அதில்
    ஆசை பொங்கிட வேர்க்கின்றேன்!

    வாசலிலே கோலத்தில் – கலை
    வாசம் செய்வதை ரசிக்கின்றேன்!
    நேசமிகு சேய்களுடன் – தினம்
    நெகிழ்ந்து கரைவதை உணர்கின்றேன்!

    கற்றகல்வி கர்வமெலாம் – சல்லிக்
    காசுக் கீடிலை அறிகின்றேன்!
    உற்றதுணை சுற்றமுடன் – மனம்
    ஒத்து வாழ்ந்திட நினைக்கின்றேன்!

    ஆடுமாடு பறவையுடன் – என்
    ஆத்ம ஈர்ப்பிலே பழகுகிறேன்!
    கூடுவிட்டுக் கூடுபாய்ந்து – கவி
    கொஞ்சிக் கூத்திட உருகுகிறேன்!

    நல்லிசையைக் கேட்டபடி – செவி
    நரம்பு ஆழ்ந்திட விரும்புகிறேன்!
    மல்லிகைப்பூ வாசமென – நான்
    மற்றவர் மகிழ்ந்திட அரும்புகிறேன்!

     

     

    Share
  • பாண்டியர் காலத்தில் சமசுகிருத மொழிப் புலமை

    பவள சங்கரி

    தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டு செய்த பாண்டியர்கள் சமசுகிருதத்தையும் சமமாகப் போற்றி வந்துள்ளனர்.

    தமிழ்நாட்டு மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழி மட்டுமல்லாது சமசுகிருத மொழியையும் பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சோழர் காலத்தின் சமசுகிருத கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்களில் காணப்படும் அரசாணைகள், குறிப்புகள் ஆகியவற்றில் சமசுகிருத மொழி பயன்படுத்தப் பட்டிருப்பதிலிருந்து இதனை அறிய முடிகிறது. பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், கவிஞர்களைப் போற்றியவர்களாகவும் இருந்துள்ளனர். தமிழ் சமசுகிருதம் என்ற பேதமற்று கவிஞர்களைப் போற்றியிருந்தனர்! முதலாம் மாறவர்மன் ராஜசிம்மன் என்னும் பாண்டிய மன்னன், ‘வித்யாசார விபூஷணன்’ அதாவது கல்விக்கு அணிசேர்ப்பவன் என்ற பட்டப் பெயர் பெற்ற மன்னனாவான்.

    பாண்டியர்களுக்கும் அகத்திய முனிவருக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஒரு சுலோகம்

    अस्तम्भयत्क्षितिधरं प्रविजृम्भमाणं
    अम्भसमस्तमपिबज्जलधेश्च यस्य |
    कुम्भोद्भवो भवति यस्य मुनि: पुरोधसा
    श्रीनिधिर्जयति पाण्ड्य नरेन्द्र वंश: ||

    அஸ்தம்ப⁴யத்க்ஷிதித⁴ரம்ʼ ப்ரவிஜ்ருʼம்ப⁴மாணம்ʼ
    அம்ப⁴ஸமஸ்தமபிப³ஜ்ஜலதே⁴ஶ்ச யஸ்ய |
    கும்போ⁴த்³ப⁴வோ ப⁴வதி யஸ்ய முனி: புரோத⁴ஸா
    ஶ்ரீநிதி⁴ர்ஜயதி பாண்ட்³ய நரேந்த்³ர வம்ʼஶ: ||

    இதன் விளக்கம்:

    விந்திய மலை வளருவதைத் தடுத்து, கடலத்தனையும் குடித்த, குடத்தில் பிறந்த குறுமுனி அகத்தியரைக் குலகுருவாகக் கொண்ட, மனிதர்களில் மாண்புடைய பாண்டிய மன்னர்கள் வாழ்க! செழுமையில் குறைவிலாத இவர் தம் வம்சம் வளர்க.

    ‘கடைச்சங்கத்தில் கடல் கடந்த கொங்கு கலாச்சாரம்’ என்ற என் நூலிலிருந்து.

    Share