செ. இரா.செல்வக்குமார்

இந்தக் கிழமையின் வல்லமையாளர் புகழ்படைத்துவரும் இளம் பொருளாதாரப் பேராசிரியர்.

முப்பால் எனப்படும் திருக்குறளில் நடுவாக இருப்பது பொருள். தமிழில் பொருள் என்னும் சொல் வியப்புறும் பல ஆழமான பொருள்களைக் கொண்டது. ஒரு சொல்லின் பொருள், வாழ்க்கையின் குறிக்கோள் அல்லது உயர்பயன் என்னும் பொருள், கருத்துவடிவமும் பருவடிவமும் கொண்ட அனைத்துமான பொருள், திருவள்ளுவர் சொல்வாரே பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என, அப்படியான பொருள், கடைசியில் இவையனைத்தையும் மீறி கடவுளுக்கே பொருள் என்று ஒரு பெயரும் உண்டு. ”காசேதான் கடவுளடா” என நினைத்துவிட வேண்டாம். சமய இலக்கியங்களிலே வரும் வரிசையாகிய இருள், மருள், தெருள், அருள், பொருள் என்பதில் வரும் கடைசிச்சொல் கடவுளைக் குறிக்கும். ஆனால் மக்களின் இவ்வுலக வாழ்க்கைக்கு அடிமுதன்மையான பொருளாகிய பணம், செல்வம் என்பதை அடிப்படையாகக் கொண்ட துறையே பொருளியல் அல்லது பொருளாதாரம் என்பது.

ஏப்பிரல் 11, 2016 ஆம் நாள் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (Stanford University) வெளியிட்ட செய்தியில் [2], பேராசிரியர் இராசு செட்டி அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளைப்பற்றியும் அமெரிக்காவில் வாழும் மக்களின் வாழிடத்துக்கும், அவர்களின் ஆயுளுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்புபற்றியும் அவர் வெளிட்ட ஆய்வுக்கட்டுரையைச்சுட்டி [3] புதிய கண்டுபிடிப்பு எனப் பாராட்டியிருக்கின்றார்கள். தற்போதுள்ள நிலையில், அமெரிக்காவைப் பொருத்த அளவிலே (இவ்வாய்வு பிறநாடுகளுக்கும் பொருந்தும் வாய்ப்புள்ளது) சராசரியாக ஒருவருடைய வாணாளை (வாழ்நாளை)த் தீர்மானிப்பது, அவர் எங்கு வாழ்கின்றார், அவருடைய வருமானம் எவ்வளவு என்பதைப் பொருத்தது. பொருளாதார நிலையில் கடைசி 5% இருக்கும் ஒருவர் நியூயார்க்கில் வாழ்ந்தால் அவர் அதே கீழ்நிலை வருமானம் உள்ள, கே’ரி இண்டியானாவில் (Gary, Indiana) வாழும் இன்னொருவரைவிட 5 ஆண்டுகள் அதிகமாக உயிர்வாழ்வார். இவ்வேறுபாடு மிக அதிகமாகக் கருதப்படுகின்றது.

பொருளாதார நிலையில் கடைசிநிலையில் இருப்பவர்கள் அமெரிக்காவில் எவ்விடத்தில் வாழ்கின்றார்கள் என்பதைப்பொருத்து வாணாள் (வாழ்நாள்) அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதைக் காட்டும் படம் [4]

பேராசிரியர் இராசு செட்டி அவர்களின் பொருளாதாரக் கண்டுபிடிப்புகள் அமெரிக்காவுக்குக் கொள்கை வகுக்கப் பயன்படுமென அறிஞர்கள் கருதுகின்றார்கள். அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பராக்கு ஒபாமா அவர்கள் தன்னுடைய நாட்டுநிலவரத்தைப்பற்றி நிகழ்த்தும் பேருரையில் “State of the Union Address” பேராசிரியர் இராசு செட்டியின் கொள்கைகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

இராசு செட்டி அவர்கள் அமெரிக்காவுக்கு 9 வயதில் தன் பெற்றோர்களுடன் சிறுவனாக வந்தார். தனக்கு அகவை 23 நிறையும்பொழுது உலகப்புகழ்பெற்ற ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் (Harvard University) பொருளாதாரத் துறையில் முனைவர்ப் பட்டம் பெற்றார். கி.பி. 1636 ஆம் ஆண்டு தொடங்கிய ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் 380 ஆண்டு வரலாற்றிலேயே மிக இளவயதில் நிலைபெற்றப் பேராசிரியர்களுள் (tenured professor) ஒருவராக இவர் தன் 29 ஆவது அகவையில் உயர்ந்தார்.

பேராசிரியர் இராசு செட்டி (Professor Raj Chetty) [1]

இவர் தற்பொழுது இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் பேராசிரியாக இருக்கின்றார். 2012 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மெக்கார்தர் நிறுவனத்தின் சிறப்பாளர் (MacArthur Fellow) ஆனார். இவருடைய ஆய்வுக்காக கட்டுப்பாடுகளற்ற விதமாக $500,000 அமெரிக்க வெள்ளி வழங்கியது [5]. 2013 ஆம் ஆண்டு சான் பே’ட்சு கிளார்க்குப் பதக்கம் (John Bates Clark Medal) இவருக்கு வழங்கப்பட்டது. இதனைக் குட்டி நோபல்பரிசு (Baby Nobel) என்பார்கள். இப்பதக்கத்தை வென்ற பலர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். நியூயார்க்கு தைம்சு நாளிதழ், இப்பதக்கம் பெற்றதைப்பற்றிக் கீழ்க்காணுமாறு குறித்தது [6]:

“The medal is given by the American Economic Association for achievement by an economist under the age of 40. At 33, Mr. Chetty is one of the youngest winners of the prize. (Paul Samuelson, who went on to win a Nobel, received the award when he was 31 or 32.) Past recipients also include the former Treasury secretary Lawrence Summers, Milton Friedman, and Robert Solow.”

வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கம் (FeTNA) 2014 இல் தமிழ் அமெரிக்க முன்னோடிகள் (Tamil American Pioneer Award, TAP award) விருதை அளித்துப் பெருமைப்படுத்தியது. அதனைப் பெற்றுக்கொண்டு, தன் வாழ்க்கையைப்பற்றியும் தன் ஆய்வைப்பற்றியும் உரைநிகழ்த்தினார் [7].

ஆகத்து 4, 1979 இல் பிறந்து பெரும்புகழ் ஈட்டியிருக்கும் இளம் பேராசிரியர் இராசு செட்டி (Raj Chetty) அவர்களை இந்தவார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

அடிக்குறிப்புகள்:
[1] படம்- விக்கிப்பீடியா (https://commons.wikimedia.org/wiki/File:Chetty_2012_hi-res-download_2.jpg)
[2] http://news.stanford.edu/news/2016/april/poverty-chetty-siepr-041116.html
[3] http://jama.jamanetwork.com/article.aspx?articleid=2513561
[4] http://www.citylab.com/housing/2016/04/when-youre-poor-where-you-live-determines-how-long-youll-live/477687/
[5] https://www.macfound.org/search/?q=raj+chetty
[6] http://economix.blogs.nytimes.com/2013/04/12/raj-chetty-wins-the-john-bates-clark-medal/
[7] https://www.youtube.com/watch?v=bJvC0Rwwai4 (இராசு செட்டி பேசுவது மணித்துளி 11:52 இல் இருந்து தொடர்கின்றது. அதற்கு முன்பு அவரை அறிமுகப்படுத்துவதை கேட்கலாம்)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. வல்லமைக்குப் பெருமை; செல்வாவுக்குப் பெருமை. பேராசிரியர்  இராசு செட்டிக்கு பெருமை. நான் இவரது படைப்புகளைப் படித்து வருகிறேன். பயன் அடைகிறேன்.
    இன்னம்பூரான்

  2. பேராசிரியர் இராசு செட்டி அவர்களின் ஆராய்ச்சி, பெரும் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. வாழிடத்துக்கும் ஆயுளுக்கும் இடையே உள்ள தொடர்பை அப்படியே இந்தியாவுக்குப் பொருத்தினால், பட்டணத்தில் 100 ரூபாய் உள்ள ஒருவர், அதையே கிராமத்தில் வைத்திருக்கும்போது, அவரது வாங்கும் சக்தி அதிகமாக உள்ளது. பட்டணத்திலேயே  நியூயார்க்கில் வாழ்வதற்கும் மும்பையில் வாழ்வதற்கும் சென்னையில் வாழ்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. பட்டணத்தின் வளங்களைப் பகிர்ந்துகொள்வதில் உள்ள போட்டி, கிராமத்திலும் இடைநிலை நகரங்களிலும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும். இதையே கால்நடைகள் உள்ளிட்ட இதர உயிரினங்களுக்குப் பொருத்தினாலும் வளங்களைப் பகிரும் வாய்ப்பில் பெருத்த வேறுபாடு தெரிகிறது. மெச்சத் தகுந்த ஆராய்ச்சியை முன்னெடுத்துள்ள வல்லமையாளர், பேராசிரியர் இராசு செட்டி அவர்களின் திறமும் புகழும் தொண்டும் பயனும் நாளும் பொழுதும் நொடியும் இமையும் வளர்க.

  3. நன்மொழிகளுக்கு மிக்க நன்றி இன்னபூரான் ஐயா. 
    அண்ணாகண்ணன், அருமையான மொழிகள். இந்தியாவிலும், குறைந்தது ஒரு மாநிலத்திலாவது இப்படிச் செய்துபார்த்தால் பயனுடையதாக இருக்கும். இராசு செட்டி அவர்கள் செய்ததை அடியொற்றியே முதலில் செய்யலாம். பிறகு தேவைக்கேற்ப புதிய கோணத்திலும் அணுகலாம். பேரா. இராசு செட்டி அவர்கள்  இதற்கு முன்னர் செய்த தொடர்புடைய ஆய்வு இன்னும் அருமையானது. அமெரிக்காவானது கனவுகள் நனவாகும் பொன்னிலம் என்பார்களே, அது எந்த அளவுக்கு உண்மை, அவ்வாய்ப்பு எல்லாப்பகுதி அமெரிகக்ர்களுக்கும் உண்டா, வாய்ப்பின் அளவு மாறுபடுகின்றதா என மிக அருமையான ஆய்வைச் செய்தார்.வாழ்வின் கீழ்மட்டத்திலிருந்து மேல்பட்டத்துக்கு உயரும் வாய்ப்பை மதிப்பீடு செய்திருந்தார். அதுவும் இடம்சார்ந்ததாக இருந்தது. இது அவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபொழுது. பொது அலைபரப்பு நிறுவனம் எனப்படும் PBS போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பரவலாகவும் பேசப்பட்டது.  தாமசு பிக்கெட்டி (Thomas Picketty0 என்பாருடைய நூலும் கருத்துகளும், பேரா. இராசு செட்டி அவர்களின் கருத்துகளும் ஆய்வுகளும் பெரிய அளவிலே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *