நான் அறிந்த சிலம்பு – 205
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி
மக்கள் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் கண்ணகிக்குக் காட்டுதல்
மக்களில் சிலர்,
கண்ணகிக்குக் கோவலன் இறந்து கிடந்த
இடத்தைக் காட்ட முன்வந்தனர்.
அவனைக் கண்ட செம்பொன்னால்
செய்யப்பட்ட கொடி போன்ற கண்ணகியைக்
காண்பதற்கும் பொறுக்காமல்
கதிரவன் தன் சிவந்த கதிர்களைச்
சுருக்கிக் கொண்டு
மேற்கில் விரைந்து மறைந்தான்.
அக்காட்சியைக் கண்ட
மாலைப்பொழுதில் பூத்து உதிர்ந்த
பூங்கொடி போன்ற கண்ணகி
தன் கணவன் அருகில்சென்று
அழுது புலம்பினாள்.
அவளுடன் சேர்ந்து மக்களும் அழுததால்
மதுரை முழுதும் அவல ஒலி நிறைந்தது.
கண்ணகி சோகமுற்று அரற்றி அழுதல்
அன்றைய காலையில் ஆயர்குடியில்
தன் கணவனைத் தழுவி
அவன் கரிய முடியில் சூடியிருந்த
பூமாலையைத் தன் நீண்ட கூந்தலில்
சூடிக் கொண்டாள்.
ஆனால் அந்நாளின் மாலைப்பொழுதில்
அவன் உடலில் இருந்து வழிகின்ற குருதி
தன் உடலை நனைக்க
அக்கோவலன் தன்னைக் காண முடியாமல் கிடக்கும்
பெருந்துயர் அடைந்தாள்.
என்னுடைய பெரிய துன்பத்தைக் கண்டும்
இவள் எங்ஙனம் துன்புறுவாள் என்று
நீங்கள் எண்ணாமல் போனீரே…
மணம் மிக்க சந்தனம் முதலிய
வாசனைப் பொருட்கள்
பூசப்பட வேண்டிய உம் மேனி
புழுதியில் விழுந்து கிடப்பது தகுமோ…?
முன்னம் மாபெரும் துன்பம்
இங்ஙனம் செய்ததன் காரணம்
என்ன தீவினை என்றறியாத எனக்கு,
உம் தீவினை காரணமாக
இங்ஙனம் நிகழ்ந்துவிட்டது என்று
ஊரார் ஒருவரேனும் சொல்லாரோ…?
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html—
படத்துக்கு நன்றி: கூகுள்