-மேகலா இராமமூர்த்தி

தமிழர் பண்பாடு தரணியிலேயே தலைசிறந்தது என்று பெருமைபேசிப் பூரிப்படைவோர் நாம். உண்மை…வெறும் புகழ்ச்சியில்லை! அத்தகைய பீடும் பெருமையும் உடையதுதான் நம் பண்பாடு. எனினும், அவ்வுயரிய பண்பாட்டைப் பேணுவதிலும், அழியாது கட்டிக்காப்பதிலும் எவ்வளவுதூரம் நாமின்று முனைப்பாயிருக்கிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டிய தருணமிது!

பகுத்தறிவுப் பகலவன் ஒளிவீசிய தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் இனவாதச் சிந்தனைகளும், சாதிப் படுகொலைகளும், இந்த அநியாயங்களையெல்லாம் வோட்டுக்காகவும் பதவிக்காகவும் கைகட்டி வேடிக்கைபார்க்கும் அரசியல்கட்சிகளின் கையாலாகாத்தனமும், ’பண்பாடு’ என்ற ஒன்று நம் தமிழரிடம் இன்னமும் மிச்சமிருக்கின்றதா? எனும் கேள்விக்கணையை நம் நெஞ்சில் கூர்மையாய்ப் பாய்ச்சுகின்றது.

நாட்டையாளும் அரசனாயினும் சரி, காட்டில் திரியும் மனிதனாயினும் சரி, இருவரும் உண்பது நாழியளவே; உடுப்பவை இரண்டே; பிற அடிப்படைத் தேவைகளும் அவ்வாறே சாமானிய மாந்தர்க்கும், நாடாளும் வேந்தர்க்கும் பொதுவானவை என்பது சங்கப் பெரும்புலவர் நக்கீரர் கண்டறிந்த உண்மை.

தெண்கடல் வளாகம் பொதுமையின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்
கும்மே….(புறம் – 189 – நக்கீரனார்)

வாழ்வின் இயல்பு இவ்வாறிருக்க, தங்களை ’ஆண்ட பரம்பரை’ என்று சிலர் கூறிக்கொண்டு தருக்கித் திரிவதும், வேறுசிலரை தீண்டத்தகாத அடிமைகளாய்க் காலிலிட்டு மிதிப்பதும், நாம் மக்களா இல்லை விலங்குநிலையிலிருந்து சற்றும் விலகாத மாக்களா எனும் ஐயத்தையும், சீற்றத்தையும் தோற்றுவிக்கின்றது.

இவ்விடத்தில் ஆயுதங்களின் பயன்பாடு குறித்தும் நாம் ஆராயவேண்டும். நம் முன்னோர் அரிவாளைக் கண்டுபிடித்தது கதிரறுக்கத்தானே ஒழிய (நமக்கு வேண்டாதோரின்) கழுத்தை அறுக்க அன்று! ஆனால் இப்போதைய நடைமுறைகள் இதனை முற்றிலும் பொய்யாக்கிவருகின்றன. களைவெட்டிய அரிவாள் இன்று மனிதரின் தலைவெட்டிச் சாய்க்கின்ற அவலத்தை என்னென்பது? சாதிப்பூசல்களும் இனக்கலவரங்களும் அரிவாளின் துணையுடனேயே இற்றைநாளில் அனுதினமும் அரங்கேற்றம் காண்கின்றன!

ஓர்ஆண்மகன் வேற்றுசாதிப் பெண்ணைத் தன் ’பெண்சாதி’ (மனைவி) ஆக்கிக்கொள்ளத்தான் நம் சமூகத்தில் எத்தனைத் தடைகள்!? அதிலும் அந்த ஆடவன், வக்கிரபுத்தி படைத்த, (so-called) மேட்டுக்குடியினரால் ’தாழ்த்தப்பட்டோன்’ என்று முத்திரை குத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாயிருந்தால்….? அவன் செத்தான்!

காதலுக்குச் சாதியில்லை மதமுமில்லையே என்று முழங்கினார் கவியரசர். ஆனால் சாதிவெறிகொண்ட கூட்டமோ, “மதமும் இனமும் பாராது வருகின்ற காதலில் எமக்குத் துளியும் சம்மதமில்லை” என்று கொக்கரிக்கின்றது. மனம் பார்த்து வருகின்ற காதல், இனி இனம்பார்த்து வந்தால்தான் காதலும் காதலித்தோரும் தப்பிப்பிழைப்பர் போலிருக்கின்றது!

அதற்குச் சமீபத்திய சான்று 19 வயதே நிரம்பிய இளம்பெண் கௌசல்யா!

காதல்ஒருவனைக் கைப்பிடித்துத் தன் இல்லற வாழ்வைத் தொடங்கிய கௌசல்யா, தன் சொந்தக் குடும்பத்தினராலேயே எங்கே தன் கணவனுக்கும் தனக்கும் முடிவு நெருங்கிவிடுமோ என ஒவ்வொருநாளும் அஞ்சியஞ்சிச் செத்தவண்ணமே வாழ்ந்துவந்திருக்கின்றார்!! அவர் நினைத்ததுபோலவே இதயமற்ற சாதிவெறி இருசக்கரவண்டியில்வந்து அந்த இளஞ்சோடியைச் சரமாரியாய் வெட்டியிருக்கின்றது. கண்ணெதிரிலேயே தன் காதற்கணவன் கோரமாய் மாண்டுபோவதைக் கண்ட அந்த இளம்பெண்ணின் உள்ளம் எப்படிப் பரிதவித்திருக்கும்? பதறித் துடித்திருக்கும்?

தங்கள் சாதியின் கவுரவத்தைத் (!) தக்கவைத்துக்கொள்வதற்குத்தான் பெண்ணின் குடும்பம் இந்தக் கொலையில் இறங்கியது என்று இந்த காட்டுமிராண்டித்தனமான வெறிச்செயலுக்கு நியாயம் கற்பிக்கப்படுகின்றது கயவர்களால்! ஐயகோ! கொலையா ஒரு சமூகத்தின் கவுரவத்தைக் காத்துநிற்கப் போகிறது??!! நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
என்றார் வள்ளுவர். பிற உயிர்களுக்குக் கொடுந்தீங்கு இழைக்கும் இத்தகைய அறிவற்ற கொலைபாதகரைக் கண்டால் அந்த தெய்வப்புலவரும் கண்ணீர்விட்டன்றோ கதறுவார்!

இளம் உள்ளங்களில் இயல்பாய்த் தோன்றும் மலரினும் மெல்லிய காதலைச் சிதைத்துவிட்டுச் சாதி எனும் நச்சரவை அங்கே குடியேற்றுவதால் தேவையற்ற சச்சரவும் சண்டையும், இனப்பகையுந்தான் வளருமேயன்றி மனிதநேயம் மலராது.

சங்கக் கவிஞன் பூங்குன்றனைப்போல் ‘யாவரும் கேளிர்’ எனும் அளவிற்கு நாம் பரந்தமனம் கொள்ளாவிடினும் பரவாயில்லை; ”என் இனத்தைத் தவிர அனைவரும் என் பகைஞர்!” என்று ஆவேச முழக்கமிட்டு ஆயுதமேந்தாமல் இருந்தாலே போதுமானது என்று சொல்லுமளவுக்கு அல்லவா தமிழனின் தரம் இன்று தாழ்ந்து போய்விட்டது! நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்ணும் நனிநாகரிகம் கொண்டிருந்த தமிழன், இன்றோ தமிழினத்தைச் சேர்ந்தவனையே பகைத்து, அவன் வாயில் வலியச்சென்று நச்சை ஊட்டவும் துணிந்துவிட்டான்!

’என் சாதி உயர்ந்த சாதி’ எனும் பொருளற்ற அகந்தை கொண்டு, அருள் கொன்று, விலைமதிப்பில்லா மனித உயிர்களை ’ஆணவக் கொலை’ செய்வதற்குப் பதிலாய், நம்மிடம் குடியிருக்கும் ’நான்’ எனும் ஆணவத்தைக் கொலை செய்வோம்! அதுதான் உண்மையான ஆணவக் கொலை!

மாந்தர்காள்! கிடைத்தற்கரியது இம்மானுடப் பிறவி. இப்பிறவி வாய்த்தோர், ஒருவரோடு ஒருவர் அன்புபாராட்டியும், இனியவை கூறியும், இன்னா செய்யாது, இன்முகத்தோடும், இரக்கத்தோடும் கூடிவாழ்ந்தால் கோடியின்பம் நம்மை நாடி வாராதோ?

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஆணவக் கொலை!

  1. அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்!!

    //கிடைத்தற்கரியது இம்மானுடப் பிறவி. இப்பிறவி வாய்த்தோர்,
    ஒருவரோடு ஒருவர் அன்புபாராட்டியும், இனியவை கூறியும்,
    இன்னா செய்யாது, இன்முகத்தோடும், இரக்கத்தோடும் கூடிவாழ்ந்தால்
    கோடியின்பம் நம்மை நாடி வாராதோ?//

     

  2. பாராட்டுக்கு மிக்க நன்றி செல்வக்குமார் ஐயா.

    அன்புடன்,
    மேகலா

  3. உண்மை சுடும். நடுநிலை பிறழாத உணர்ச்சி பிரவாகம். அதன் அடித்தளம், சுடும் உண்மை. ஒரு மாற்றுக்கருத்து: அரசியல்கட்சிகளின் கையாலாகாத்தனமும்: இல்லை. இன்று நடக்கும் அசம்ப்பாவிதங்களையும், அரசியல் சாதி வெறி பேத்துமாத்துக்களையும் நோக்குங்கால், பகலவனின் வெளிச்சத்தை, அவரது சீடர்கள் என்று சொல்பவர்கள், அவரை இழித்து பயணிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *