நான் அறிந்த சிலம்பு – 201
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 08. துன்ப மாலை
ஆய்மகள் உண்மை உரைத்தல்
முதுமகள் கூறியது:
அரசன் வாசம் செய்யும்
அரண்மனையில் இருந்த
அழகான சிலம்பினைக்
கவர்ந்த கள்வன் இவனே என்று,
சத்தமாய் ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த காவலர்
கோவலனைக் கொலை செய்ய எண்ணினர்.
கண்ணகியின் துயர நிலை
முதுமகளின் மொழிகேட்ட கண்ணகி
சீறிப் பொங்கி எழுந்தாள்; விழுந்தாள்;
கதிர்கள் பொழியும் திங்கள்,
கரிய பெரிய மேகங்களுடன்
தரையில் வீழ்வது போல வீழ்ந்தாள்.
சிவந்த கண்கள் மேலும் சிவக்கும்படி அழுதாள்;
தன் காதலன் எங்கே எங்கே எனக்கேட்டு
ஏக்கமுற்று புலம்பி வருந்தி மயங்கி விழுந்தாள்.
தம்மோடு கூடி இன்பமுற்ற கணவன்மார்
மடிந்து தீயில் மூழ்க,
அவர்களோடு தீயில் மூழ்காது
கைம்மை நோன்பு நோற்றுத்
துயரப்படும் பெண்கள் போல,
உலகத்து மக்கள் அனைவரும்
தூற்றிப் பழிகூறும் வண்ணம்
பாண்டிய மன்னன் செய்த தவற்றினால்,
காதல் கணவனை இழந்த நானும்
துயரம் கொண்டு மடிவேனோ?
இங்ஙனம் புலம்பினாள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html
படத்துக்கு நன்றி: கூகுள்

