Category: திரை

  • போட்டோகிராப் – திரை விமர்சனம்

    போட்டோகிராப் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    போட்டோகிராப் (Photograph) என்ற இந்திப் படத்தைப் பார்த்தேன். இப்படி ஒரு கவித்துவமான படத்தை, அண்மையில் நான் பார்க்கவில்லை. மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சுற்றுலாப் பயணிகளைப் படமெடுத்துத் தரும் நிழற்படக் கலைஞர், நவாசுதீன் சித்திக். படமெடுத்து அங்கேயே அச்சிட்டுக் கொடுக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.30 வாங்குகிறார்.

    கேட் வே ஆப் இந்தியாவில் சான்யா மல்ஹோத்ரா நடக்கும்போது, அவரை உடனடிப் படம் எடுத்துத் தருகிறேன் என நவாசுதீன் சித்திக் பின்தொடர்ந்து கேட்கிறார். வேண்டாம் என்று சான்யா சொல்ல, இன்று நீங்கள் என்னிடம் படம் எடுத்தால், உங்கள் முகத்தில் விழும் சூரிய ஒளியையும் உங்கள் கூந்தலை இந்தக் காற்று கலைப்பதையும் பின்னொரு நாள் பார்க்கும்போது காண்பீர்கள் என்பார். இங்கே கேட்கும் அனைத்துக் குரல்களையும் அப்போது கேட்பீர்கள் என்பார். உடனே சான்யா சம்மதிக்கிறார். அவர் சி.ஏ. படிக்கும் மாணவி. சற்றே வசதியானவர். அவசரத்தில் நிழற்படத்துக்கு அந்த 30 ரூபாய் கொடுக்காமல் சென்றுவிடுகிறார்.

    நவாசுதீன் சித்திக்கின் பாட்டி, இவரைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி நச்சரிக்கிறார். மருந்து சாப்பிடவும் மறுக்கிறார். அவரைச் சமாதானம் செய்ய, பாட்டிக்கு இவர் ஒரு பொய்க் கடிதம் எழுதுகிறார். இங்கே நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். எனக்காக அவளை நீயே தேர்ந்தெடுத்தது போல் உணர்ந்தேன். அவள் கண்கள், கேள்விகளால் நிரம்பியிருந்தன. ஆனால், பதில்களாலும் நிரம்பியிருந்தன. அவள் புன்னகையைக் கண்டால், எல்லாத் துக்கமும் துயரமும் பறந்தோடிவிடும். நமது நிலத்தில் விழுந்த முதல் மழை, உனக்கு நினைவிருக்கிறதா? அதே போல் இருந்தது அவளது சிரிப்பு. அவளது பெயரும் அழகானது என எழுதுகிறார். அந்த நேரத்தில் தொலைவில் ஓ நூரி நூரி என ஒரு திரைப்படப் பாடல் ஒலிக்கிறது. எனவே, நூரி என்றே அவளுக்குப் பெயர் சூட்டிவிடுகிறார். பாட்டி, இவர்களைப் பார்க்க ஊரிலிருந்து வருகிறார்.

    பணம் கொடுக்காமல் சென்ற சான்யாவை நவாசுதீன் சித்திக் மீண்டும் சந்திக்கிறார். பாட்டிக்காக, தன் காதலியாக நடிக்க முடியுமா எனக் கேட்கிறார். சான்யா அதற்குச் சம்மதிக்கிறார். இவர்களை ஒருசேரப் படம் எடுக்குமாறு பாட்டி கேட்கிறார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒரே தட்டில் ரசகுல்லாவும் குலாப் ஜாமூனும் இருப்பது போல் இருக்கிறது எனச் சொல்வது ருசிகரம். பாட்டி ஊரிலிருந்து வரும்போது உடன் வரும் கர்ப்பிணிப் பெண், ரயிலில் குழந்தை பெறுகிறாள். அவளுக்கு ரயில் மலர் எனப் பெயர் சூட்டினார்களாம். பாட்டி இரவெல்லாம் கண்விழித்திருந்து கோமதி நதி வரும்போது அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வீசி எறிந்தாளாம். இதையெல்லாம் பாட்டியே சொல்கிறார்.

    சான்யா இளம் வயதில் கெம்ப கோலா குடித்தது பிடிக்கும் என்கிறார். இப்போது உற்பத்தியை அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது என்றாலும் நவாசுதீன் சித்திக், அந்த உற்பத்தியாளரைத் தேடிச் செல்கிறார். உன்னைப் போல் முன்னர் ஒருவர் தேடி வந்தார். அவருக்கு இந்த பார்முலாவை நான் கொடுத்தேன். அவர் வீட்டில் அதை இன்றும் தயாரிக்கிறார் என நினைக்கிறேன் என்கிறார். அந்த இன்னொருவரைத் தேடிச் சென்று ஒரு புட்டி கெம்ப கோலாவை வாங்கி வருகிறார். இது உன் சிறப்பு நண்பருக்காக எனச் சொல்லிக் கொடுக்கிறார்.

    நடிக்க வந்த சான்யா, உண்மையிலேயே நவாசுதீன் மீது காதல் வயப்படுகிறார். தன் வீட்டில் பார்க்கும் அமெரிக்க மாப்பிள்ளையை மறுத்துவிட்டு, இவருடன் பழகுகிறார். படத்தின் முடிவை வெளிப்படையாகச் சொல்லாமல், பார்ப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். பாட்டியாக நடித்திருக்கும் பரூக் ஜாபர் கலக்கியிருக்கிறார்.

    படத்தில் ஆங்காங்கே கவித்துவமான காட்சிகள் வருகின்றன. ஆனால், இது கலைப்படம் போன்று மெதுவாக நகர்கிறது. உரையாடல், ஒளிப்பதிவு, பின்னணி ஒலிகள், நடிப்பு அனைத்தும் இயல்பாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. ஆனால், நிறையப் படங்களைப் பரபரப்பாகவே பார்த்துப் பழகிவிட்டதால், இயல்பாகச் செல்லும் இந்தப் படம், மெதுவாக நகர்வது போல் தெரிகிறது.

    இயக்குநர் ரிதேஷ் பாத்ராவின் திரைமொழி, மேம்பட்ட ரசனை உள்ளவர்களுக்கானது. வணிகத் திரைப்படமாக எடுத்து வருவாயை வாரிக் குவிக்க நினைக்காமல், தரமான படத்தினை அளித்துள்ளார். இயல்பான திரைப்படங்களை விரும்புவோர், இதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள்.

    Share
  • விசேஷம் – திரை விமர்சனம்

    விசேஷம் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    விசேஷம் (Vishesham) என்ற மலையாளப் படத்தைப் பார்த்தேன். இரண்டாம் திருமணத்தில் இணையும் இருவர், ஒரு குழந்தைக்காகக் காத்திருப்பதும் அந்தக் கருவுறுதலுக்கான போராட்டங்களுமே கரு. படம் நெடுக எதார்த்தமான நகைச்சுவை மிளிர்கிறது. சிரிப்புடன் சேர்த்துச் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

    நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் மதுசூதனன், அப்பாவியாக, வழுக்கைத் தலையுடன், ரகளை செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அடிபொலியாக ஈர்க்கிறார். கழுகு சிறகடிப்பது போல் கைவீசி, இன்னும் இன்னும் உயரப் பற எனத் தன்முனைப்பு வகுப்பு நடத்துகிறார். இயற்கை விவசாயியாகக் களத்திலும் உழைக்கிறார். இவரது முதல் திருமணத்தில், தாலி கட்டிய அடுத்த நிமிடம், இவர் கண்ணெதிரே மனைவி தன் காதலனுடன் ஓடிப் போகிறார். மனம் தளராமல் ஆனந்த், அடுத்த திருமணத்திற்குத் தயாராகிறார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, போராட்டக்காரர்கள் மீது விழ வேண்டிய அடி, ஒதுங்கி, ஒளிந்து நின்ற இவருக்கும் விழுகிறது. அடித்து விளாசிய காவல் துறை அம்மணியே இவருக்கு இரண்டாவது மனைவியாக வருகிறார்.

    ஆனந்தின் இரண்டாவது மனைவியாக வரும் சின்னு சாந்தினி நாயர், படத்தின் மிகப் பெரிய சுவாரசியம். பெண் காவலராக லத்தியைச் சுழற்றுவது ஆகட்டும், ஏதும் விசேஷம் உண்டா என நச்சரிக்கும் பாட்டியிடம் சிங்கமெனச் சிலிர்த்துச் சண்டைக்குப் போவது ஆகட்டும், காதல் காட்சிகளில் குழைவது ஆகட்டும், குழந்தைக்காக ஏங்கிச் சோகத்தில் ஆழ்வது ஆகட்டும்… நவரசங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். காவல் உடுப்பில் நீ செக்சியாக இருக்கிறாய் என ஆனந்த் உணர்ந்து சொல்கிறார். இப்படி புஷ்டியாக இருப்பதும் சிலருக்கு அழகைத் தருகிறது. நடிப்பிலும் மிரட்டுகின்ற சின்னு சாந்தினி நாயருக்கு விருதுகள் காத்திருக்கின்றன.

    கருவாக்க மருத்துவமனைகளின் வேறு முகத்தைப் படத்தில் காட்டுகிறார்கள். பணமே குறியாக இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் குறித்துப் படம் விழிப்புணர்வு ஊட்டுகிறது. தன்னைக் கொடுமைப்படுத்திய முதல் கணவரைப் பழிதீர்க்கவே காவல் துறையில் இணைந்ததாக, சின்னு சாந்தினி நாயர் கூறுகிறார். ஆனால், காவலர் ஆன பிறகும் தானாகவே அவர் மீது புகார் கொடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. ஏதோ ஒரு வழக்கில் அந்த முதல் கணவர் சிக்கி, இவரது காவல் நிலையத்துக்கு வரும் வரைக்கும் காத்திருக்கிறார். இது சற்றே இடிக்கிறது. மற்றபடி, சிறப்பான படம். அத்புதமே அத்புதமே என்ற பாட்டு, மிக அருமை (ஆனந்த் மதுசூதனன், இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் கூட).

    புதுமணத் தம்பதிகளிடம் ஏதும் விசேஷம் உண்டா என்றும் தம்பதிகளிடம் உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் கேட்பதைத் தடுத்து நிறுத்துவதே இந்தப் படத்தின் விசேஷம்.

    Share
  • ஜமா – திரை விமர்சனம்

    ஜமா – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஜமா திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். பாரி இளவழகன், சேத்தன், ஸ்ரீகிருஷ்ண தயாள், அம்மு அபிராமி ஆகியோரின் நடிப்பு நன்று. நீயிருக்கும் உசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா என்ற பாடல், மிக அருமை.

    இந்தப் படம், கூத்துக் கலையை உயர்த்திப் பிடிப்பதாக, அந்தக் கலைக்கு வலிமை சேர்ப்பதாகப் பலரும் எழுதியிருந்ததைப் பார்த்தேன். கூத்துக் கலையை விட, அந்தக் கலைக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே இந்தப் படத்தில் அதிகம் வெளிப்படுகிறது. கூத்துக் கலையை முழுமையாக நேசிப்பதை விட, அதில் அர்ஜுனன் வேடம் கட்டுவதையே இலக்காக நாயகனும் எதிர் நாயகனும் நினைக்கிறார்கள். தாங்கள் ராஜாவாக, கதாநாயகனாக மக்கள் முன் நிற்க வேண்டும் என்ற வேட்கையே இதன் முக்கிய நடிகர்களுக்கு இருக்கிறது. அந்த வேடத்தைக் கட்டிய பிறகு அதைத் தக்க வைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். வாத்தியார் ஆக வேண்டும், ஜமா நடத்த வேண்டும் என்ற விருப்பங்கள் அனைத்தும் அதிகார மையம் என்ற புள்ளியை நோக்கியே செல்கின்றன.

    இதற்காக, எந்தத் தியாகத்தையும் செய்யக் கல்யாணம் என்ற நாயகன் தயார் ஆகிவிடுகிறான். தன்னை நாடி வந்து காதலிக்கும், அரவணைக்கும் பெண்ணை உதறுகிறான். அம்மாவிடம் இருக்கும் ஒரே நிலத்தை அவளிடம் பொய்சொல்லி அவள் கையொப்பத்தைப் பெற்று விற்று, ஜமாவில் பங்கேற்பவர்களுக்கு முன்பணம் கொடுக்கிறான். அப்படிப் பணம் பெற்றவர்கள் வராமல் போய்விடுகிறார்கள். ஒரே ஆதாரமான நிலத்தை இழந்தது அறிந்த அம்மாவும் இறந்துவிடுகிறார். முட்டாள்தனமாகக் கல்யாணம் அலைகிறான்.

    நிலத்தையும் அம்மாவையும் அடுத்தடுத்து இழந்த கல்யாணத்தின் மீது எனக்குக் கோபமே ஏற்பட்டது. அப்பாவைப் போல ஜமா நடத்த வேண்டும், அப்பாவைப் போல அர்ஜுனன் வேடம் கட்ட வேண்டும் என நினைப்பவன், அப்பாவைப் போன்ற தோற்றப் பொலிவையும் கம்பீரத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. பணிந்து, வளைந்து நிற்கிறானே தவிர நிமிர்ந்து நிற்கவில்லை. பெண்வேடம் போடுவதை ஒரு காரணமாகக் கூறினாலும் உள்ளுக்குள் ஒரு தழல் எரியவில்லை. அதற்காகக் கடுமையாக உழைக்கவில்லை. இலக்கிற்கு ஏற்ப, தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாதவனுக்கு அந்த வாய்ப்பு எப்படி அமையும்?

    கடைசிக் காட்சியில் குந்திதேவியின் வேடத்தில் கல்யாணத்தின் நடிப்பு, தாண்டம் என்ற எதிர்நாயகன் காலில் விழுந்து சாகும் அளவுக்கு எல்லாம் இல்லை. குந்தியே வந்து அந்த இடத்தில் இறங்கியிருக்க வேண்டாமா? கல்யாணமே அங்கே நின்றுகொண்டிருந்தான். அதன் பிறகு அர்ஜுனன் வேடத்திற்காக, தீப்பந்தங்களுக்கு நடுவில் ஆடுவது நன்று. ஆனால், இங்கும் அர்ஜுனனின் தரிசனம் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.

    எனவே, இதை கூத்துக் கலை பற்றிய படம் எனச் சொல்வது பொருத்தமற்றது. வளரும் கலைஞனின் மனோரதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    Share
  • காதல் சுகுமார் நகைச்சுவை உரை

    காதல் சுகுமார் நகைச்சுவை உரை

    திரைப்பட நடிகர், இயக்குநர் காதல் சுகுமார், அம்பத்தூர் சிரிப்பரங்கத்தின் 2023 ஜூலை மாதக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தன் சொந்த வாழ்விலும் திரைத் துறையிலும் நிகழ்ந்த நகைச்சுவை அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்க வழங்கினார். உலக நாயகன் கமல்ஹாசன் தனக்கு வழங்கிய முக்கிய அறிவுரையைத் தெரிவித்தார். கலகலப்பும் விறுவிறுப்பும் மிக்க காதல் சுகுமாரின் சிறப்புரை, சிரிப்புரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மயக்கமா கலக்கமா | கண்ணதாசன்

    மயக்கமா கலக்கமா | கண்ணதாசன்

    ‘மயக்கமா கலக்கமா’, காலத்தை வென்ற பாடல். எத்தனையோ பேருக்கு நம்பிக்கை அளித்த பாடல்; இன்றும் நம்பிக்கை அளிக்கும் பாடல். கண்ணதாசன் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், சுமைதாங்கி படத்தில் வெளியான இந்தப் பாடலை அமிர்தராஜ் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விண்ணோடும் முகிலோடும்

    விண்ணோடும் முகிலோடும்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த ‘விண்ணோடும் முகிலோடும்’ என்ற புகழ்பெற்ற பாடலை, அமிர்தராஜ் பாடக் கேளுங்கள். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் பொழிந்த இன்னிசை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 94 வயது மிமிக்ரி கலைஞர் உடையார்பாளையம் சீனிவாசன்

    94 வயது மிமிக்ரி கலைஞர் உடையார்பாளையம் சீனிவாசன்

    கமல்ஹாசன் நடிப்பில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலில் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ பாடல், மிகுபுகழ் பெற்றது. இந்தப் பாடலுக்கு மிமிக்ரி செய்தவர், உடையார்பாளையம் சீனிவாசன். இப்போது 94 வயதிலும் துடிப்புடன் மிமிக்ரி செய்கிறார். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் இவர் வழங்கிய பலகுரல் நிகழ்ச்சி, அவையோரைப் பெரிதும் கவர்ந்தது. இவர் தம் மகன் லயன் சேகர் உடன் இணைந்து நிகழ்த்திய இந்துஸ்தானி மிமிக்ரி, பலத்த கரவொலியைப் பெற்றது. இந்த அபாரமான, அசத்தல் நிகழ்ச்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே

    மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தாமரையின் வரிகளில், வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே’ என்ற பாடல், பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது. அதில் இடம்பெற்ற ‘எப்போ வரப்போற? மச்சான், எப்போ வரப்போற? பத்துதல பாம்பா வந்து முத்தம் தரப்போற’ என்ற புதுமையான வரிகள், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘பத்து தல’ என்ற தலைப்பிலேயே ஒரு திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலைச் சென்னை, தாம்பரத்தில் நடைபெற்ற சிறுதானியப் பெருவிழாவில், விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர்ஸ் பாடகியர் அனு, சவுண்டு சவுந்தர்யா ஆகியோர் பாடினர். மனம் வருடும் இந்தப் பாடலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மா.கா.பா. ஆனந்த் குரலில் ‘வளையோசை கலகலகலவென’

    மா.கா.பா. ஆனந்த் குரலில் ‘வளையோசை கலகலகலவென’

    விஜய் தொலைக்காட்சியில் தோன்றிப் புகழ்பெற்றவர், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் திரைப்பட நடிகருமான மா.கா.பா. ஆனந்த். சென்னை, தாம்பரத்தில் நடைபெற்ற சிறுதானியப் பெருவிழாவில் சூப்பர் சிங்கர்ஸ் பாடகியுடன் இணைந்து ‘வளையோசை கலகலகலவென’ என்ற புகழ்பெற்ற பாடலை அவர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து

    ‘சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து’ என்ற இனிய பாடல் இதோ. கண்ணதாசன் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த பாடல். 1964இல் வெளியான ‘புதிய பறவை’ திரைப்படத்தில் இடம்பெற்றது. காலத்தை வென்ற இந்தப் பாடலை, மெல்லிசைப் பாடகி ஜானகி பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ராக்கெட்ரி நம்பி விளைவு – சில கேள்விகள்

    ராக்கெட்ரி நம்பி விளைவு – சில கேள்விகள்

    நடிகர் மாதவன், முதன்முதலாக இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படத்தைப் பார்த்தேன். இந்தக் கேள்விகளை, உறுத்தல்களைத் தவிர்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்து என்ன?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விக்ரம் திரை விமர்சனம் | இயக்குநர் செய்த ஒரு தவறு

    விக்ரம் திரை விமர்சனம் | இயக்குநர் செய்த ஒரு தவறு

    கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளியாகியுள்ள விக்ரம் படம் எப்படி? இதில் இயக்குநர் ஒரு முக்கியத் தவறு செய்துள்ளார். அது என்ன? இதோ எனது திரை விமர்சனம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அவமானமே வெகுமானம் – தாடி பாலாஜி பேச்சு

    அவமானமே வெகுமானம் – தாடி பாலாஜி பேச்சு

    ‘அவமானமே வெகுமானம். நீங்கள் பெறும் ஒவ்வோர் அவமானமும் உங்களை உயர்த்தும்’ என்கிறார் தாடி பாலாஜி. கோவையில் நடைபெற்ற பிரெஞ்சு கார்னிவல் நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சிப் புகழ், நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியின் ருசிகரப் பேச்சு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ராமன் எத்தனை  ராமனடி

    ராமன் எத்தனை ராமனடி

    பாஸ்கர்

    அந்தக் காலத்தில் லாயிட்ஸ் சாலையில் வக்கீல் வீ பீ ராமன், பெரும்புகழ் பெற்றவர். எல்லா அரசியல் மற்றும் திரையுலகப் புள்ளிகள் அவரைச் சந்திக்க வருவார்கள். பெரும்பாலும் வழக்கு அல்லது அரசியல் அபிப்ராயம் பகிர்ந்துகொள்ள இந்தக் கூட்டம் சேரும். அந்தக் குடும்பமே சட்டத்தைக் கரைத்துக் குடித்த குடும்பம். எல்லாப் பெயரும் ஒரு ராமனில் முடியும். கல்யாணராமன் முதல் கிட்டத்தட்ட ஜானகிராமன் வரை.

    கண்ணதாசன் மேல் அப்போது பலர், பல வழக்குகளைத் தொடுத்த நேரம். கவிஞர் வந்து வீ பீ ஆரைப் பார்த்த பின் வெளியே வந்த வீட்டு வாசலில் உள்ள பெயர்ப் பலகைகளைப் படித்து, என்ன படித்த குடும்பம் எனச் சொல்லி, காரில் ஏறிக் கிளம்பிவிட்டார்.

    போன இடம் ஏ எல் எஸ் புரோடக்க்ஷன் அலுவலகம். அங்கிருந்து பாடல் இயற்றும் தளத்திற்குச் சென்றவர் (சாரதா படப்படிப்புத் தளம்) விசுவைப் பார்த்து என்ன சிச்சுவேஷன் என வினவ அவர், கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் படலம் என்றார். நிர்மலா பாடற சீன் அது என்றார்.

    கணேசு வராரா ஸீன்ல என வினவினார். அவர் தான் அண்ணன் என்றார் விசு.

    கவிஞர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட பாடல், ராமன் எத்தனை ராமனடி. படம். லக்ஷ்மி கல்யாணம். வெளி வந்த ஆண்டு 1968.

    Share
  • ஜெய் பீம் – ஒரு பாமரனின் பார்வையில்

    ஜெய் பீம் – ஒரு பாமரனின் பார்வையில்

    பாஸ்கர்

    சினிமா ஒரு விஷூவல் மீடியா என்ற விஷயம் மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த முறை இதைச் செய்தது ஜெய் பீம்.

    ஒரு திரைப்படத்தை எப்படி வடிவம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உத்தி இந்தப் படத்தில் அழகாக வெளிப்பட்டு இருக்கிறது. நலிந்தவர், ஏழை, படிப்பு இல்லை என்ற வேறுபாடுகள் ஒரு பக்கம். ஜாதி, வகுப்பு என்று இன்னொரு பக்கம். எல்லாவற்றிலும் சிக்கிச் சின்னாபின்னமாகி போன ஒரு வகுப்பினரின் கதை இது. எல்லாவற்றிற்கும் அடிப்படை, கோலோச்சும் அதிகார வர்க்கம், அரசு ஊழியர்கள், காவல் துறை, வன்மம் ஊறிப் போன மக்களின் வாழ்க்கைத் தரம் எனப் பட்டியல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் காணாமல் போன நகைகளைக் கண்டுபிடிக்க முடியாமல், நலிந்த இருளர் மக்கள் மீது பொய் வழக்குப் போட்டு காவல் துறை ஒரு குடும்பத்தைச் சிதைய வைப்பது மூலக்கதை இதன் பின்னணி, அரசியல். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தும் விஷயம் இல்லை. காவல் துறை, ஏவல் துறை எனக் காலம் காலமாய் நடக்கும் ஒரு விஷயம் எனக் கடந்து போக முடியாது. அதன் வீர்யம், வன்மம் பல தலைமுறைகளுக்கு வலியைக் கொடுக்கும். இது உண்மைக் கதையா இல்லையா என்பது ஒரு பக்கம். ஆனால் நம் நாட்டில் இன்னும் நடந்துகொண்டு இருக்கிறது. அலங்காரமான காவல் நிலையத்தின் பின்னால் நடக்கும் பல அவலங்கள் நமக்குத் தெரியாது.

    விரைப்பான உடை அணிந்து ஒரு சல்யூட் அடிக்கும் அழகுக் காவலரின் முகம்தான் நமக்குத் தெரியும். ஆனால் அந்த விரைப்புக்குப் பின் இருப்பது ஒரு பெரும் வெறுப்பு/வன்மச் சிந்தனை. இதைத்தான் ஜெய் பீம் சொல்கிறது.

    தனி மனித ஒழுக்கம், பிசகிவிட்ட வாழ்க்கை தான் இன்றைய நிலை என்றாகிவிட்டது. இது கலியுகம் எனச் சாக்குபோக்குச் சொல்லி நகர்ந்து போகலாம். அந்தச் சிந்தனையே சுயம் சார்ந்த ஒன்று தான். வழக்கறிஞராக வரும் சந்துரு அப்படி யோசிக்காமல், மக்கள் நலன், நீதி முக்கியம் என இறங்கிப் போராடுவதுதான் இந்த ஜெய் பீம்.

    சத்தியம் வெல்லும் என்று உரக்கச் சொல்லி இருக்கும் படம்.

    ஒவ்வொருவரின் நடிப்பும் மஹா அற்புதம் . அந்தக் கதாநாயகி, அவனது குடும்பத்தினர், சூர்யா, பிரகாஷ் ராஜ் என்ற பட்டாளம் இந்தப் படத்தை உச்சத்திற்குக் கொண்டு போய் உள்ளது.

    தவறுக்கு எதிராய்ப் போராடும் குணம், நேர்மை, இரக்க உணர்வு, அடுத்தவர்க்கு உதவி செய்யும் குணம், தட்டிக் கேட்கும் தைரியத்தை எல்லோருக்கும் இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

    என்ன தான் பொய் சொல்லி, பித்தலாட்டம் செய்து உண்மைக்கு மாறாய் இருந்தால் கூட சத்தியம் முன் எதுவும் செல்லாது என்ற நீதி அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது .

    வசனம், ஒளிப்பதிவு, அந்த லைட்டிங் எப்பெக்ட். எடிட்டிங் உத்தி எனப் பல பரிமாணத்தில் இந்தப் படம் மிளிர்கிறது.

    இது தான் சினிமா. இப்படித்தான் எடுக்கப்பட வேண்டும் என்று உலகத்திற்குச் சொல்லி இருக்கிறது ஜெய் பீம்.

    சிங்கம் ஒன்னு, இரண்டு போன்ற சமாச்சாரங்களைத் தவிர்த்து இது போன்ற விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். அவருக்குச் சமூக அக்கறை உள்ளது. நிறைய தான தர்மங்களைச் செய்பவர்.

    இந்தப் படத்தில் பாடல்களை அகற்றி, கருப்பு வெள்ளையில் சர்வதேச அளவில் திரை இடப்பட்டால் தமிழ் சினிமா பெரும் உச்சம் தொடும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, பாதிக்கப்பட்டோருக்குக் கடைசிப் பாதுகாப்பு நீதி மன்றங்கள் தான் எனச் சொல்லி இருப்பது மிக்க இதமான விஷயம். இந்த நம்பிக்கை மக்களுக்கு இருந்தால் அதுவே ஒரு வெற்றி தான்.

    இந்தத் திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். எல்லாக் காவலர்களும், நீதிமான்களும் இதனைப் பார்க்க வேண்டும். இந்தத் திரைப்படம் நேர்மை, ஒழுக்கம், நியாயம் என்ற நல்ல சிந்தனை உள்ள வாழ்க்கை முறைமையைத் தொட்டு இருக்கிறது.

    இந்தத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்ட எல்லோருக்கும் நாற்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவை ரசித்துக்கொண்டு இருக்கும் ஒரு பாமரனின் பாராட்டு. வாழக ஜெய் பீம்.

    Share