ஜெய் பீம் – ஒரு பாமரனின் பார்வையில்

பாஸ்கர்
சினிமா ஒரு விஷூவல் மீடியா என்ற விஷயம் மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த முறை இதைச் செய்தது ஜெய் பீம்.
ஒரு திரைப்படத்தை எப்படி வடிவம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உத்தி இந்தப் படத்தில் அழகாக வெளிப்பட்டு இருக்கிறது. நலிந்தவர், ஏழை, படிப்பு இல்லை என்ற வேறுபாடுகள் ஒரு பக்கம். ஜாதி, வகுப்பு என்று இன்னொரு பக்கம். எல்லாவற்றிலும் சிக்கிச் சின்னாபின்னமாகி போன ஒரு வகுப்பினரின் கதை இது. எல்லாவற்றிற்கும் அடிப்படை, கோலோச்சும் அதிகார வர்க்கம், அரசு ஊழியர்கள், காவல் துறை, வன்மம் ஊறிப் போன மக்களின் வாழ்க்கைத் தரம் எனப் பட்டியல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் காணாமல் போன நகைகளைக் கண்டுபிடிக்க முடியாமல், நலிந்த இருளர் மக்கள் மீது பொய் வழக்குப் போட்டு காவல் துறை ஒரு குடும்பத்தைச் சிதைய வைப்பது மூலக்கதை இதன் பின்னணி, அரசியல். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தும் விஷயம் இல்லை. காவல் துறை, ஏவல் துறை எனக் காலம் காலமாய் நடக்கும் ஒரு விஷயம் எனக் கடந்து போக முடியாது. அதன் வீர்யம், வன்மம் பல தலைமுறைகளுக்கு வலியைக் கொடுக்கும். இது உண்மைக் கதையா இல்லையா என்பது ஒரு பக்கம். ஆனால் நம் நாட்டில் இன்னும் நடந்துகொண்டு இருக்கிறது. அலங்காரமான காவல் நிலையத்தின் பின்னால் நடக்கும் பல அவலங்கள் நமக்குத் தெரியாது.
விரைப்பான உடை அணிந்து ஒரு சல்யூட் அடிக்கும் அழகுக் காவலரின் முகம்தான் நமக்குத் தெரியும். ஆனால் அந்த விரைப்புக்குப் பின் இருப்பது ஒரு பெரும் வெறுப்பு/வன்மச் சிந்தனை. இதைத்தான் ஜெய் பீம் சொல்கிறது.
தனி மனித ஒழுக்கம், பிசகிவிட்ட வாழ்க்கை தான் இன்றைய நிலை என்றாகிவிட்டது. இது கலியுகம் எனச் சாக்குபோக்குச் சொல்லி நகர்ந்து போகலாம். அந்தச் சிந்தனையே சுயம் சார்ந்த ஒன்று தான். வழக்கறிஞராக வரும் சந்துரு அப்படி யோசிக்காமல், மக்கள் நலன், நீதி முக்கியம் என இறங்கிப் போராடுவதுதான் இந்த ஜெய் பீம்.
சத்தியம் வெல்லும் என்று உரக்கச் சொல்லி இருக்கும் படம்.
ஒவ்வொருவரின் நடிப்பும் மஹா அற்புதம் . அந்தக் கதாநாயகி, அவனது குடும்பத்தினர், சூர்யா, பிரகாஷ் ராஜ் என்ற பட்டாளம் இந்தப் படத்தை உச்சத்திற்குக் கொண்டு போய் உள்ளது.
தவறுக்கு எதிராய்ப் போராடும் குணம், நேர்மை, இரக்க உணர்வு, அடுத்தவர்க்கு உதவி செய்யும் குணம், தட்டிக் கேட்கும் தைரியத்தை எல்லோருக்கும் இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.
என்ன தான் பொய் சொல்லி, பித்தலாட்டம் செய்து உண்மைக்கு மாறாய் இருந்தால் கூட சத்தியம் முன் எதுவும் செல்லாது என்ற நீதி அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது .
வசனம், ஒளிப்பதிவு, அந்த லைட்டிங் எப்பெக்ட். எடிட்டிங் உத்தி எனப் பல பரிமாணத்தில் இந்தப் படம் மிளிர்கிறது.
இது தான் சினிமா. இப்படித்தான் எடுக்கப்பட வேண்டும் என்று உலகத்திற்குச் சொல்லி இருக்கிறது ஜெய் பீம்.
சிங்கம் ஒன்னு, இரண்டு போன்ற சமாச்சாரங்களைத் தவிர்த்து இது போன்ற விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். அவருக்குச் சமூக அக்கறை உள்ளது. நிறைய தான தர்மங்களைச் செய்பவர்.
இந்தப் படத்தில் பாடல்களை அகற்றி, கருப்பு வெள்ளையில் சர்வதேச அளவில் திரை இடப்பட்டால் தமிழ் சினிமா பெரும் உச்சம் தொடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, பாதிக்கப்பட்டோருக்குக் கடைசிப் பாதுகாப்பு நீதி மன்றங்கள் தான் எனச் சொல்லி இருப்பது மிக்க இதமான விஷயம். இந்த நம்பிக்கை மக்களுக்கு இருந்தால் அதுவே ஒரு வெற்றி தான்.
இந்தத் திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். எல்லாக் காவலர்களும், நீதிமான்களும் இதனைப் பார்க்க வேண்டும். இந்தத் திரைப்படம் நேர்மை, ஒழுக்கம், நியாயம் என்ற நல்ல சிந்தனை உள்ள வாழ்க்கை முறைமையைத் தொட்டு இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்ட எல்லோருக்கும் நாற்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவை ரசித்துக்கொண்டு இருக்கும் ஒரு பாமரனின் பாராட்டு. வாழக ஜெய் பீம்.
வணக்கம்!
“தனி மனித ஒழுக்கம், பிசகிவிட்ட வாழ்க்கை தான் இன்றைய நிலை என்றாகிவிட்டது” இன்றைய சமுதாயத்தின் அவலநிலையை இதனைவிட யாரும் சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது. ஒட்டுமொத்த சமுதாயமே இவ்வாறுதான் கருதுகிறது அலலது இதனை நோக்கித்தான் போகிறது பதிவாளர் நான் உட்பட. காரணம் நாம் அனைவருமே சமுதாயத்தின் அங்கம்! எல்லாத் தவறுகளுக்கும் நியாயம் சொன்னதன் விளைவு! அனுபவிப்பது மட்டுமன்று. அடுத்த தலைமுறைக்கும் இதனையே விடடுச் செல்கிறோம் என்பதுதான் பெரிய பாரம்! சுருக்கமான தெளிவான கட்டுக் கோப்பான திறனாய்வு. நன்றி