தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 40

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
சமுதாயச் சிந்தனைகள் உவமங்களான கதை
முன்னுரை
அகப்பொருள் புலப்பாட்டுக் கருவியாகத் தன் பணியைத் தொடங்கிய உவமம், காலந்தோறும் தன் பணிக்களப் பரப்பை விரித்துக் கொண்டே வந்திருக்கிறது. புறப்பொருண்மைகளுக்கும் அழகியல் உணர்வை மிகுவித்துக் காட்டுதற்கும் பயன்பட்டிருக்கின்றன. தத்துவக் கோட்பாடுகளை விளக்குதற்கும் இறையுணர்ச்சியைத் துல்லியமாகச் சொல்லுவதற்கும் கூட அவை பயன்பட்டுள்ளன. அடியார் மனத்து இறைவன் நிலைபெற்றிருக்கும் நிலையைக் ‘கறந்த பால் கன்னலோடு நெய்கலந்தாற்போல’ என்னும் உவமத்தால் விளக்குகிறார் மணிவாசகப்பெருமான். இத்தகைய பக்திப் பரப்பிலிருந்து தனது சிறகை விரித்தெழுந்த உவமம் சமுதாயக் களத்திற்குத் தாவி வந்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ‘மானுடம் பாடுவது’ என்னும் கம்பனின் கோட்பாடு அவனுக்குப் பின்னாலே வந்த கவிஞர்கள் அனைவரையும் பாதித்து இன்றளவும் தொடர்கிறது. சமுதாயச் சிக்கல்களைப் பாடாத யாரையும் எவரும் கவிஞராக ஏற்றுக் கொள்வதில்லை. அல்லது ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். சமுதாயச் சிந்தனைகளைப் பாடுபொருளாக்குவதற்கும் அச்சிந்தனைகளையே உவமங்களாக அமைத்துக் கொள்வதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. சமுதாயக் கருத்துக்களைப் பிற உவமைகளைக் கொண்டு விளக்குவது எல்லாக் கவிதைகளிலும் காணக்கூடியதே. அச்சிந்தனைகளே பிற பொருள்களுக்கு உவமைகளாக அமைவது கவிஞனின் பட்டறிவைப் பொருத்ததாகும். பட்டினிக் கிடந்த பட்டறிவால் பசியைப் பற்றி எழுதுவதற்கும் பட்டினியால் துடிப்பவனைப் பார்த்து அப்பசியைப்பற்றி எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. இந்தப் பின்புலத்தில் சமுதாயத்தைப் பற்றிய கவிஞர்களின் அக்கறையும் கரிசனமும் அவர்கள் கவிதைகளில் உவமங்களாக அமைந்துள்ள பாங்கினைச் சுருக்கமாக ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.
கவிஞனும் சமுதாயச் சிந்தனைகளும்
சமுதாயத்தின் உள்கட்டமைப்புக்களான பொருளாதாரம், சமூக நிலை ஆகியவை எல்லாக் காலத்திலும் ஒரே தன்மையுடையனவாக இருப்பதில்லை. அவற்றின் சிக்கலுக்கேற்ப அவற்றின் தன்மைகளும் நிலைப்பாடுகளும் மாறுபடுகின்றன. இலக்கியம் சமுதாயத்திலிருந்து, அவற்றிலிருந்து கிடைக்கும் பட்டறிவிலிருந்து பிறப்பதாதலின், மேற்சுட்டிய பொருளாதாரச், சமூக மாறுபாடுகளும் அவற்றால் உண்டாகும் விளைவுகளும் படைப்பிலக்கியத்தில் எதிரொளிக்கவே செய்யும். ஒரு சமூகப் பிரச்சினை குறித்து ஊடகங்கள் பலவும் கருத்துத் தெரிவிக்கின்றன. அரசு, பொருளியல் அறிஞர்கள் அரசியல் கட்சிகள் கருத்துத் தெரிவிக்கின்றன. கவிஞனும் அச்சிக்கல் குறித்த தன் பார்வையைப் பதிவு செய்கிறான். பிற யாவற்றிலும் இருந்து கவிஞனின் பார்வை வேறுபட்டதாக இருக்குமென எதிர்பார்ப்பது தவறன்று. ஏனெனில் கவிஞன் வாழ்க்கைச் சிக்கல்களை அறிவுப்பூர்வமாக மட்டுமல்லாது உணர்வுப்பூர்வமாகவும் அணுகுகிறான்.
சமுதாயப் பார்வை கவிஞனுக்கு மேற்சட்டையன்று
இலக்கியத்தின் தலையாய நோக்கம் இன்புறுத்துவதே. அழகியல் குறையாமல், அது வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளை உணர்ந்து கொள்வது அதன் பயனாகும். இன்புறுத்துவது நோக்கம். ஏற்றம் பெறச் செய்வது பயன். “அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயன்” என்னும் தொடரின் சாரம் இதுவே. வாழ்க்கைச் சிக்கல்களையும் நெறிகளையும் கற்பனை கொண்டு வடிவமைக்க முடியாது. சமகாலச் சமுதாய நிகழ்வுகளிலிருந்தும் உண்மை நிலவரங்களிலிருந்துமே அவற்றை வடிவமைக்க வேண்டியதிருக்கிறது. முன்னரே சுட்டியது போல் சமுதாய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதும், கண்டிப்பதும், திருத்த முயல்வதும், தீர்வு காண்பதும் ஒரு கவிஞனுடைய வேலைதான். எனவே கவிஞனுக்குச் சமுதாயச் சிந்தனைகள் புறமன்று., அகம். அவன் சிந்தை, அணு ஒவ்வொன்றிலும் சமுதாயமே நிறைந்திருத்தல் வேண்டும். இலக்கியத்தில் சமுதாயத்தைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்வதும் சமுதாயச் சிந்தனைகளையே இலக்கியமாகப் படைத்துக்காட்டுவதும் தமிழுக்குப் புதியதல்ல.
“சமுதாயப் பார்வையினைச்
சட்டையைப் போல் மாட்டாதீர்!
அதை உங்கள்
உடம்பின் சதையாகவே
உருவாக்கிக் கொள்ளுங்கள்”
என்பர். சமுதாயத்திலிருந்து சமுதாயத்திற்காகச் சமுதாயத்தோடு கலந்த ஒருவனால் படைக்கப்படுவதே இலக்கியம் என்னும் ‘கவிதை மக்களாட்சித் தத்துவத்தைத்தான்’ சுருக்கமாக ‘இலக்கியம் என்பது ஒரு காலக்கண்ணாடி’ என்று அறிஞர்கள் வரையறை செய்திருக்கிறார்கள்.
சமுதாயக் கட்டமைப்பும் கவிஞனின் சிந்தனைகளும்
சமுதாயக் கட்டமைப்பு மாறுகிறபோது சமுதாயச் சிந்தனைகளும் மாறுவது இயல்பே. முடியாட்சிக் காலத்தில் கவிஞன் ஒருவனுக்கு இருந்த சமுதாயச் சிந்தனைகள் வேறு. குடியாட்சிக் காலத்தில் கவிஞன் ஒருவனுக்கு இருக்கின்ற சமுதாயச் சிந்தனைகள் வேறு. அரசமைப்பு மாற்றம் மட்டுமே இதற்குக் காரணம் எனக் கருதுவதைவிடச், சமுதாயக் கட்டமைப்புக்களுக்கேற்பச் சமுதாயச் சிக்கல்களின் தன்மைகள் மாறுபடுவதே காரணம் என்பது பொருத்தமாகலாம். ஆனால் தமிழ்க்கவிதைப் போக்கில் முற்றிலும் வியப்பான மாற்றத்தைக் காணமுடிகிறது. அதாவது சமுதாயக் கட்டமைப்பு மாறாதபோதே சிந்தனை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தெளிவாகச் சுட்டுவதானால், முடியாட்சிக் காலத்திலேயே குடியாட்சிச் சிந்தனைகளைத் தமிழ்க்கவிதை உலகம் பதிவு செய்திருக்கிறது. இது பற்றி விரிப்பின் பெருகும்.
தமிழ்க்கவிதை உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்
இதிகாசக் கதைப்பொருளாயினும், மன்னராட்சி ஓங்கியிருந்த சங்க காலப் பாடுபொருள்களாகிய அகம், புறமாயினும் அழகியலும் கற்பனை வளமும் தூக்கலாகத் துலங்கும் இடைக்கால இலக்கியப் படைப்புக்களாயினும் சமய இலக்கியங்களாயினும் தற்காலத் தமிழ்க்கவிதைகளாயினும் சமுதாயச் சிந்தனைகளை அடியொட்டிய உவமங்கள் ஆங்காங்கே பயிலப்பட்டு வந்துள்ளமையை அறியலாம். சமுதாயச் சிந்தனைகளைப் பாடுபொருளாக்குவதன்றி, அச்சிந்தனைகளையே உவமமாக அமைத்துக் காட்டுவது சங்க கால இலக்கியங்களிலிருந்தே தொடங்கிவிடுகிறது.
வறியவன் இளமையும் வாடிய சுரமும்
சங்க இலக்கியம் ‘ஓர் உவமத் தோரணம்’. சமுதாயச் சிந்தனைகள் என்பன பெரும்பாலும் வறுமை பற்றியனவே என்பது ஓர் எழுதாச் சட்டமாகத் தமிழ்க்கவிதைப் படைப்புலகத்திலும் திறனாய்வுலகத்திலும் நிலவிவருகிறது. ‘சமுதாயம்’ என்பது தனிமனிதர்களின் தொகுப்பு. தனிமனிதன் வறுமையுறுகிறபோது சமுதாயம் தன்னிலையில் தாழ்கிறது. கயமை மேலோங்குகிறபோது கடமையுணர்வு தவறுகிறது. பிறருக்குக் கேடு சூழ்வான் முடிவும் கேடாகவே அமைகிறது. சமுதாயம் தடுமாறுகிறபோது அரசும் தடுமாறுகிறது. தடுமாறும் அரசின்கீழ் உள்ள மக்களும் வாடி உலர்கிறார்கள். உதிர்கிறார்கள்.
“வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி
யார்கண்ணும் இகந்து செய்து இசைகெட்டான் இறுதிபோல்
வேரொடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின்
அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகிக்
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடி அவன் நிழல்
உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம்”
மேற்கண்ட பாடலின் பாடுபொருள் சமுதாயமன்று. பாலைத்திணையே. பாலையின் கருப்பொருள்களை வண்ணனைச் செய்யப் புகும் கவிஞருக்குச் சமுதாயம் பற்றி ஓடிய சிந்தனைகள் உவமைகளாக அமைந்துவிடுகின்றன. பாலையின் வாடலுக்கு, வறியவனின் இளமை உவமமாக அமைத்திருப்பதைப் போலவே தலைவியின் வாடலுக்கும் பொருளற்றவனின் இளமை உவமமாக்கப்பட்டுள்ளது.
“இருளிடை என்னாய் நீ இரவஞ்சாய் வந்தக்கால்
பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள் வைகறை
அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்”
மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களிலிருந்து மறைபொருளாகிய அகத்திணையைப் பாடுகிற நேர்வுகளிலும் புறப்பொருளாகிய சமுதாயச் சிந்தனைகள் தமிழ்க் கவிதைகளில் உவமமாக அமைந்துவிடும் பாங்கை அறியலாம். பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் வறியவன் ஒருவனுடைய இளமையையும் அருளாளன் ஒருவனுடைய ஆக்கத்தையும் உவமமாக அமைத்திருக்கிறார்கள்.
உவமங்களில் உலா வரும் ஊமன்
வறியவன் இளமை உவமமானது போலவே, வாயில்லா ஊமையும் உவமமாகியிருக்கிறான். வாயில்லாதவன் ஊமன். கவிஞர் ஒருவர் வாயில்லா அவனைக் கண்ணில்லா ஊமனாக்கி அவன்மேல் கழிவிரக்கத்தைப் பெருக்குகிறார்.
“மாரி இரவின் மரங்கவிழ் பொழுதில்
ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
கண்ணில் ஊமன் கடல்பட்டாங்கு”
தன்னைப் புரக்கும் வெளிமானின் மறைவைத் தாங்கிக் கொள்ள இயலாத பெருஞ்சித்திரனார் தன்னுடைய இரங்கத்தக்க நிலையை உவமத்தால் வெளிப்படுத்துங்கால் இந்த உவமத்தைப் பயன்படுத்துகிறார். ‘மாரி இரவு’ என்பதால் ஊமனைக் ‘கண்ணில்லா ஊமன்’ என, ‘இருபொறி இழந்தவன் இருட்டில் படும் வேதனையை’ உவமமாக்கிக் கூறுகிறார். இருட்டிலே தவிக்கும் கண்ணில்லா ஊமன் நிலை இதுவாயிருக்கக், கண்ணுடைய ஒருவனைக் கையில்லா ஊமனாக அகத்திணைப் பாடலொன்று உவமமாக்கிக் காட்டியிருக்கிறது.
“ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்”
தலைவியைப் பிரிந்த தலைவனைப் பாங்கன் தேற்றுகிறான். தேற்றுகிற பாங்கனுக்குத் தானுற்ற காமநோயை வெளிப்படுத்தும் தலைவன், மேற்கண்ட உவமத்தைப் பயன்படுத்துகிறான். ‘வெண்ணெய் உணங்கல்’ தலைவனின் மேனிக்கு உவமை. அதனை ‘ஞாயிறு காய்தல்’ நோய் பரவுதற்கு உவமை. கையில் ஊமன் தலைவனுக்கு உவமை. ‘கையில்லாமையால் உருகும் வெண்ணெயை எடுத்து நிழலிட்டு உருகாமற் காக்கவும், ஊமனாதலின் பிறர்க்கு அதனை உரைக்க இயலாமை பற்றிப் பிறராலே ஓம்பவும் இயலாதவன் ஆனாற்போலத், தானும் தன் அகத்தைத் தானேயாதல் பிறர் உதவியாலாதல் ஓம்ப முடியாதவன் ஆயினான்’ என்னும் தலைவன் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு இவ்வுவமை அமைந்துள்ளது. கண்ணில்லா ஊமன் புலவர். கையில்லா ஊமன் தலைவன். இவர் இருவருமன்றி இன்னொருவருக்கும் ஊமன் உவமமாகப் பயன்பட்டிருப்பதையும் அறியமுடிகிறது.
தலைவனைப் பிரிந்து வாடுகிறாள் தலைவி. அவள் வாட்டம் கண்டு மனம் வருந்துகிறாள் தோழி. அத்தோழியின் வருத்தம் தனக்கு எத்தகைய துன்பத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கூற வந்த தலைவி,
“……..கூவல்
குரால்ஆன் படுதுயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர்பொறுக் கல்லேன் தோழி!”
பாங்கனுக்குப் பதிலுரைத்த தலைவனைப் போலப் பாங்கியின் பாசம் கண்டு வருந்திய தலைவியும் இவ்வாறு ஓர் ஊமனை உவமையாக்கிக் காட்டுகிறாள். கிணற்றினுள் வீழ்ந்துவிட்ட குரால் நிற பசு படுகின்ற துன்பத்தை இரவிலே கண்ட மக்களினத்து ஊமன் போல் தோழிக்காகத் தலைவி வருந்துகிறாள் என்பது கருத்து. மேலே சுட்டிய எடுத்துக்காட்டுக்களில் ‘கண்ணில் ஊமன்’, ‘கையில் ஊமன், ‘உயர்திணை ஊமன்’ என்றவாறு பல நிலைகளில் ‘வாயில்லா ஊமை’ உவமிக்கப்பட்டிருப்பது கொண்டு, தமிழ்க்கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் உவமமாக்கப்படும் முயற்சி தொடக்கக் காலத்திலேயே கால் கொண்டுள்ளது என அனுமானிக்கலாம்.
ஊமையைத் தொடர்ந்த ஓர் ஏர் உழவன்
ஊமனைத் தொடர்ந்து உழவன் ஒருவனையும் உவமமாகத் தமிழ்க்கவிதை உலகம் கண்டிருக்கிறது. பிரிந்து சென்ற தலைமகன், மீண்டும் திரும்பி வருங்கால் தலைவியின் நிலையை எண்ணுகிறான். அவளைக் காண விரைந்து செல்ல வேண்டிய தன் நிலையையும் கருதுகிறான்.
“ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓரேர் உழவன் போலப்
பெருவிதுப் புற்ற”
அவன் நிலை உவமத்தின் வழிச் சுட்டப்படுகிறது. ஓர் ஏரை மட்டுமே உடைமையாகக் கொண்ட ஏழை உழவன், மழையினால் ஈரம் பட்ட காலம், அந்த ஈரம் உலர்வதற்குள் நிலத்தை உழுதுவிட வேண்டும் என்னும் நிலை, அதனால் அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல்’ என்னும் உவமப் பாங்கு ஒருபுறம். ‘தலைவன் செல்ல வேண்டிய இடைவழியோ தொலைவு., பருவம் கண்ட தலைவியின் ஆற்றாமை, ஆற்றாமை நீளின் அவள் இறந்துபடும் ஏதம், விரைந்து சென்று அவள் துயர் துடைக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் ஏற்படும் மன உளைச்சல்’ எனப் பொருண்மை நிலை மற்றொரு புறம். பொருள் புலப்பாடே உவமத்தின் தலையாய பணி என்பதை நன்குணர்ந்திருந்த இப்புலவர் தலைவனின் மனநிலைக்கு உழவனின் மனநிலையை உவமையாக்கித் தமது சமுதாயச் சிந்தனைக் கொள்கையை நிலைநிறுத்துகிறார். தலைவியின் பிரிவுத் துயரைப் போக்கவரும் தலைவனின் உள்ளத்தில் உழவனைப் பற்றிய சிந்தனையைப் பதியவைக்கும் சங்கச் சான்றோருடன் சமுதாயப் பார்வை பற்றிய கவிதைத் தொழில்நுட்பம் பெரிதும் வியக்கத்தக்கதாம்.
சமர்க்களத்திலும் சமுதாயச் சிந்தனைகள்
கற்பனை வளத்திலும் மொழி ஆளுமையிலும் தமக்கென தனித்த இடத்தைப் பெற்றுத் திகழ்வன இடைக்கால இலக்கியங்கள். அவற்றுள் ‘கலிங்கத்துப் பரணி’ என்பது தமிழின் கவிச்சக்கரவர்த்திகள் மூவருள் ஒருவரால் பாடப்பட்ட பெருமையினையுடையது. எள்ளின் முனையளவும் சமுதாய நோக்கு தேவைப்படாத பாடுகளத்தைத் தனக்கிடமாகக் கொண்டது. முடியாட்சியின் மாண்புகளை முழுமையாகக் காட்சிப்படுத்தும் இலக்கியம் அது. அத்தகைய இலக்கியத்தில்கூடச் சமுதாயச் சிந்தனைகள் உவமங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் அறியக் கிடக்கின்றது. போர்க்களத்தைப் பாடுகிற செயங்கொண்டார் சமுதாயம் பற்றிய தம்முடைய சிந்தனைகளை உவமங்களால் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
“சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்
சாருநர்போல் வீரர்உடல் தரிக்கும் ஆவி
போமளவும் அவரருகே இருந்து விட்டுப்
போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்”
வறுமையைப் போக்குதற்கான மக்களாட்சி நெறிமுறைகளில் ஒப்புரவும் ஒன்று. அதுபற்றித் திருவள்ளுவர் தனி அதிகாரமே செயதிருக்கிறார். அவர் காலத்தில் அத்தகைய கருத்தாக்கமே பெரும் புரட்சிக் கருவாகும். ‘போராட்டத்தின் மூலமே வறுமையை ஒழிக்க முடியும்’ என்னும் கருத்தாக்கம் நிலைகொண்ட இருபதாம் நூற்றாண்டுப் பாரதிதாசனே இந்த ஒப்புரவைக், ‘கடுகுள்ளம், துவரையுள்ளம், தென்னையுள்ளம், மாம்பிஞ்சு உள்ளம்’ எனப் படிநிலை வளர்ச்சி காட்டிப் பாடியிருப்பதொன்றே இதன் சிறப்பைக் காட்டப் போதுமானதாகும். அலந்தார்க்கு உதவுதலாகிய இச்சிந்தனையைக் கவிஞர் ‘நரியின் ஏமாற்றத்திற்கு’ உவமமாக அமைத்துக் காட்டியிருக்கிறார். ‘உதவுவார்’ என எதிர்பார்த்து ‘உதவவே மாட்டார்’ என்னும் முடிவையும் அறியாமல் ஏங்கி நிற்கும் நரிக்குலத்திற்குக் கவிஞர் காட்டும் உவமம், சமுதாயச் சிந்தனைகளில் அவருடைய உள்ளம் தோய்ந்த பாங்கை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
பாரதிதாசன் உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்
பாரதிதாசன் கவிதைகளில் இடம்பிடிக்காத உவமங்களே இல்லை எனலாம். அவருடைய கவிதைகளில் ‘தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படும்’ உவமங்களில் சமுதாயச் சிந்தனைகளைத் தாங்கிய உவமங்கள் தனிச்சிறப்புக்குரியன. தான் பெற்ற மழலையைத் தாயைப் போலத் தந்தை தூக்க முடியாது. வளர்ந்த நிலையில் குழந்தைகளை எவரும் தூக்கலாம். இந்தப் பட்டறிவைத் தம்முடைய நுனித்த நோக்கினால் கண்ட பாரதிதாசன் உவமங்களால் வெளிப்படுத்துவதை அறியமுடிகிறது.
“ஆழியில் உள்ள அழகு மட்கலத்தை
இயற்றி யோர்க்கே எடுப்பதுமுடியும்
சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்”
“உலைஅமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல் போல்
தவறாது தூக்குவது தலையாகிய கடன்”
தான் வனையும் மட்பாண்டங்களைச் சக்கரத்தில் இருந்து எடுக்க குயவனால் மட்டுமே இயலும். அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் அழகு மட்கலத்தை யார் வேண்டுமானாலும் தூக்கித் தட்டிப் பார்க்கலாம். பச்சைப் பானையைத் தூக்குவது குயவனால்தான் இயலும். பச்சைக் குழந்தையைத் தூக்குவது தாய்க்கு மட்டுமே கூடும். குழந்தையைப் ‘பச்சைமண்’ என்னும் வழக்கு ஒப்பு நோக்கத்தக்கது. குழந்தையைத் தூக்குதற்குரிய புறச்செயலுக்குக் குயவனை ஒப்புமை கூறியிருக்கும் பாங்கு இதுவாக, அப்பொழுதில் இருக்க வேண்டிய எச்சரிக்கையுணர்வை வறுமையில் உழன்ற ஒருத்தி, தான் வடித்த உலைச்சோற்றுப் பானையை நழுவ விடாது பொறுப்புடன் தூக்கி இறக்கிவைப்பதுடன் ஒப்பிட்டுக் காட்டியிருக்கும் பொருத்தப்பாடு நேர்த்தி நிறைந்தது. அதனால் நெஞ்சு கவர்ந்தது.
“உலக நிகழ்ச்சிகளை எத்துணைக் கூர்ந்து நோக்கியுள்ளான் என்பதைப் புலப்படுத்தும் முகத்தால் உவமை அவனது புலமையையும் காட்டுகிறது”
ஒப்புமை அடிப்படையில் பொருள் புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டிருப்பதோடு கவிஞனின் நுண்ணோக்கினை வெளிப்படுத்தும் கருவியாகவும் செயல்படுகிறது என்னும் அறிஞர் கைலாசபதியின் மேற்கண்ட கருத்து ஈண்டு ஒப்பு நோக்கிற்காகச் சுட்டப்படுகிறது.
புதுக்கவிதை உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்
காலமாறுதல், சமுதாயச் சிக்கல்கள், அறிவியல் வளர்ச்சி, நாகரிகம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் கலப்புக்கள், உலகச் சிந்தனைப் போக்கின் மாறுதல்கள் எனப் பெருகி வளரும் காரணிகளின் அடிப்படையில் புதிதாகத் தோன்றிய ஓர் இலக்கிய வடிவமே ‘புதுக்கவிதை’ ஆகும். பெரும்பாலும் பொருண்மை நிலையினாலும் வெளிப்பாட்டு உத்தியாலும் அவைகள் அப்பெயர் பெற்றன என்பது பொருந்தும். மரபுக் கவிதைகளைவிடப் பன்மடங்கு சமுதாயச் சிந்தனைகளைத் தமக்கு உள்ளடக்கமாகக் கொண்டு விளங்குவன புதுக்கவிதைகள் ஆகும். அவற்றுள் பொருள் புலப்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் உவமைகளில் பல சமுதாயச் சிந்தனைகளைத் தாங்கி நிற்பதை அறியமுடிகிறது.
முடி திருத்திய முத்தும் மீராவின் உவமமும்
கவிஞர் மீரா குறிப்பிட்ட ஒருவரிடமே முடி திருத்திக் கொள்வார். ஒரு நாள் அவர் கடைக்குச் செல்லும் போது முடி திருத்தும் முத்து என்பார் மறைந்த சேதியைக் கேட்டு அவருக்குக் கையறுநிலை பாடுகிறார். அக்கையறுநிலைக் கவிதையில் முத்து கடையில் எப்பொழுதும் குழுமியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் உவமை சொல்கிறார்.
“ஒரு கிராமத்துத்
திருமணப் பத்திரிகையில் வரும்
தாய் மாமன்களின்
பெயர்களைப் போல”
அக்கடையில் குழுமியிருப்பார்களாம். பாடுபொருளாக்கப் பட்டிருப்பவர் முடி திருத்தும் தொழிலாளி என்பது புதுக்கவிதையின் சமுதாயப் பாடுபொருள். அக்கடையில் குழுமியுள்ளவர்களுக்குத் திருமண அழைப்பிதழில் அச்சடித்து அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் தாய்மாமன்கள் குழு உவமம். அழைப்பிதழில் செலுத்திய மீராவின் ஆழ்ந்த நோக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது இந்த உவமம்.
காதலை அளக்கும் கண்ணீரும் வியர்வையும்
‘உள்ளங்களின் இடப்பெயர்ச்சியே காதல்’ என்பது தமிழ்க்கவிதைகளின் காதல் பற்றிய ஒருவரிக் கருதுகோளாகலாம். ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்’ என்பது கம்பன் பார்வை. அந்தக் கருதுகோளின் பன்முகப் பரிமாணங்களே தமிழ்க்கவிதைகளின் பெரும் பரப்பை ஆதிக்கம் செய்து கொண்டிருக்கின்றன. மரபிலக்கியங்களில் காணப்படாத ‘தலைவன் புலம்பல்’ என்பது தற்காலக் கவிதைகளில் பெருவழக்கு. காதலியை நோக்கி அவள் காதலைப் பெருமைப்படுத்தும் காதலன்,
“நீ எனக்குக் காதலைத் தந்தாய்
அது
உழைப்பாளிகளின் வியர்வையைப் போல்
உயர்வானது”
என உழைப்பாளியின் வியர்வையைத் தலைவியின் காதலுக்கு உவமையாக்குவதைக் காணமுடிகிறது. தலைவியின் காதலுக்கு மாற்றாகத் தான் தரும் காதல் காவியத்தை ஏழையின் கண்ணீரோடு ஒப்பிட்டு உரைப்பதையும் காணமுடிகிறது.
“நான் உனக்கு இந்த
வசன காவியத்தைத் தருகிறேன்.
இது
ஏழையின் கண்ணீரைப் போல்
உண்மையானதா என்று பார்!”
காதலியின் காதல் உயர்வுக்கு உழைப்பாளியின் வியர்வைத் துளிகளை உவமிக்கும் மீரா, தன்னுடைய காவியத்தின் உண்மைக்கு ஏழையின் கண்ணீரை உவமித்துக் காட்டியிருக்கும் திறன் சுட்டத்தகுந்தது.
ஊசியில் காதும் உள்ளத்துக்கு வழியும்
தமிழ்க்கவிதைகளின் தலைமைப் பாடுபொருள் காதல். இருப்பினும் தற்காலக் கவிதைப் படைப்புக்களில் சமுதாயச் சிந்தனைகளே மேலோங்கியிருக்கின்றன என்பது அக்கவிதைகளை ஆராய்ந்தோர் கண்ட முடிபு. காதலியின் உள்ளத்தில் காதலன் இடம் பிடிப்பதைப் பாரதிதாசன்,
“கண்படைத்த குற்றத்தால் அழகி யோன்என்
கருத்தேறி உயிரேறிக் கலந்து கொண்டான்”
எனத் தலைவி கூற்றாக அமைத்துக் காட்டுவார். இந்தச் சிந்தனையை உள்வாங்கிக் கொண்ட வைரமுத்து,
“விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே”
என வழிமொழிவார். உயிரேறிக் கலந்து கொண்டதற்கும், உயிரில் கலப்பதற்கும் உவமம் ஏதும் மேற்கண்ட கவிதைகளில் சுட்டப்படவில்லை. ஆனால் கவிஞர் அப்துல் ரகுமான், தலைவி கூற்றாக இருக்கும் மேற்கண்ட உள்ளடக்கத்தைத் தலைவனுக்கு மாற்றுவதோடு அதற்குச் சமுதாயம் சார்ந்த உவமையையும் கூறுகிறார். காதலியின் உள்ளத்துக்குள் செல்லும் வழியறியாமல் தடுமாறும் காதலனின் தடுமாற்றத்தைக், கண் தெரியாத முதுமையடைந்த தையல்காரன் ஒருவன், ஊசியில் காது தேடும் தடுமாற்றத்துடன் ஒப்பிடுவதைக் காணமுடிகிறது.
“உன் இதயத்திற்குள் நுழைய
வழி பார்க்கிறேன்,
ஊசியின் காதைத் தேடும்
பார்வை மங்கிய
கிழட்டுத் தையல்காரனைப் போல”
பாவேந்தர் கண்ட காதலியும் வைரமுத்து கண்ட காதலியும் தத்தம் காதலர்களுக்குத் தம் உள்ளத்துள் நுழைய அனுமதித்த நிலையில் அப்துல் ரகுமான் கண்ட காதலன் தன் காதலியின் உள்ளம் நுழைய வழிதேடும் அழகியலும் அவ்வழகியலைச் சிந்திக்க வைக்கும் உவமமும் கவிதையின் அகப்புற அழகை மேம்படுத்துவதைக் காணலாம்.
காதலன் துடிப்புக்குக் கவிஞனின் உவமைகள்
சங்க இலக்கியத் தலைவன் தலைவியைக் காண இடர்ப்படுவான். ‘அல்லகுறிபட்டு அலமறுதல்’ அவனுக்கு இயல்பு. தற்காலக் காதலன் காதலியைக் காணப் பதற்றமடைவான். இந்தப் பதற்றத்திற்குக் கவிஞர் மீரா காட்டும் உவமைகள் சுய பட்டறிவையும் கண்ணெதிரில் நிகழும் சமுதாய நிகழ்வுகளையும் ஒருசேரப் படம்பிடித்துக் காட்டுவதாய் அமைந்துள்ளன.
“முதல் தடவையாய்
நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்
ஒரு வேலையில்லாப்
பட்டதாரியைப் போல்”
“எதிர்பாரா விதமாய்
மணமேடையில் அமரும்
ஒரு ஏழைப் பெண்ணைப் போல்”
நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் பட்டதாரியின் படபடப்பும், எதிர்பாரா வகையில் மணமகளான ஏழைப் பெண்ணின் பதற்றமும் முறையே ஐயத்திற்கிடையே தோன்றும் அச்சத்திற்கும், எதிர்பாராதது கிட்டியதனால் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும் உவமைகளாய் அமைந்து அவ்விருவர்தம் சமுதாய நிலைப்பாடுகளில் கவிஞருடைய பார்வையை உணர்த்துவதாக உள்ளன. மேற்கண்ட சில சான்றுகளால் பொருள் புலப்பாட்டுக்காக அமைகின்ற உவமங்களில் படைப்பாளனின் சமுதாயப் பார்வையும் பொருத்தமான உவமங்களாய் அமைகின்ற பாங்கு ஓரளவு புலப்படுத்தப்பட்டுள்ளது.
நிறைவுரை
‘உவமம் என்பது செய்யுளுக்குப் புறத்தே நிற்பதன்று, அகத்தோடு கலந்து நிற்பது’ என்பதையும், அதனை வெறுமனே ‘அழகியல் வெளிப்பாட்டு உத்தி’ எனக் கருதுவதினும் பொருள் புலப்பாட்டுக் கருவி எனக் கருதியதே பழந்தமிழ்க் கவிதைகளின் உவமக் கோட்பாடு என்பதையும் எப்பொருளைப் பற்றிப் பாடும் கவிஞன் எவராயினும் அவன் மானுடத்தைச் சேர்ந்தவன் ஆகையால் அவனால் சமுதாயத்தைவிட்டு விலகி நிற்க முடியாது என்பதையும் இந்தக் கட்டுரைத்தொடர் தொடர்ந்து வலிமையான தரவுகளால் நிறுவி வருகிறது. அவற்றோடு கவிதைக்கு அழகு, அடர்த்தி கூட்டும் உவமம் கவிஞனின் சமுதாயச் சிந்தனைகளாக அமைகிறபோது படைப்பாளனின் அகப்புற முகவரியாகவே மாறிவிடுகிறது என்பதை இந்தக் கட்டுரை ஓரளவு சொல்ல முயன்றிருக்கிறது.
(தொடரும்…)