ஜமா – திரை விமர்சனம்
அண்ணாகண்ணன்
ஜமா திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். பாரி இளவழகன், சேத்தன், ஸ்ரீகிருஷ்ண தயாள், அம்மு அபிராமி ஆகியோரின் நடிப்பு நன்று. நீயிருக்கும் உசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா என்ற பாடல், மிக அருமை.
இந்தப் படம், கூத்துக் கலையை உயர்த்திப் பிடிப்பதாக, அந்தக் கலைக்கு வலிமை சேர்ப்பதாகப் பலரும் எழுதியிருந்ததைப் பார்த்தேன். கூத்துக் கலையை விட, அந்தக் கலைக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே இந்தப் படத்தில் அதிகம் வெளிப்படுகிறது. கூத்துக் கலையை முழுமையாக நேசிப்பதை விட, அதில் அர்ஜுனன் வேடம் கட்டுவதையே இலக்காக நாயகனும் எதிர் நாயகனும் நினைக்கிறார்கள். தாங்கள் ராஜாவாக, கதாநாயகனாக மக்கள் முன் நிற்க வேண்டும் என்ற வேட்கையே இதன் முக்கிய நடிகர்களுக்கு இருக்கிறது. அந்த வேடத்தைக் கட்டிய பிறகு அதைத் தக்க வைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். வாத்தியார் ஆக வேண்டும், ஜமா நடத்த வேண்டும் என்ற விருப்பங்கள் அனைத்தும் அதிகார மையம் என்ற புள்ளியை நோக்கியே செல்கின்றன.
இதற்காக, எந்தத் தியாகத்தையும் செய்யக் கல்யாணம் என்ற நாயகன் தயார் ஆகிவிடுகிறான். தன்னை நாடி வந்து காதலிக்கும், அரவணைக்கும் பெண்ணை உதறுகிறான். அம்மாவிடம் இருக்கும் ஒரே நிலத்தை அவளிடம் பொய்சொல்லி அவள் கையொப்பத்தைப் பெற்று விற்று, ஜமாவில் பங்கேற்பவர்களுக்கு முன்பணம் கொடுக்கிறான். அப்படிப் பணம் பெற்றவர்கள் வராமல் போய்விடுகிறார்கள். ஒரே ஆதாரமான நிலத்தை இழந்தது அறிந்த அம்மாவும் இறந்துவிடுகிறார். முட்டாள்தனமாகக் கல்யாணம் அலைகிறான்.
நிலத்தையும் அம்மாவையும் அடுத்தடுத்து இழந்த கல்யாணத்தின் மீது எனக்குக் கோபமே ஏற்பட்டது. அப்பாவைப் போல ஜமா நடத்த வேண்டும், அப்பாவைப் போல அர்ஜுனன் வேடம் கட்ட வேண்டும் என நினைப்பவன், அப்பாவைப் போன்ற தோற்றப் பொலிவையும் கம்பீரத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. பணிந்து, வளைந்து நிற்கிறானே தவிர நிமிர்ந்து நிற்கவில்லை. பெண்வேடம் போடுவதை ஒரு காரணமாகக் கூறினாலும் உள்ளுக்குள் ஒரு தழல் எரியவில்லை. அதற்காகக் கடுமையாக உழைக்கவில்லை. இலக்கிற்கு ஏற்ப, தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாதவனுக்கு அந்த வாய்ப்பு எப்படி அமையும்?
கடைசிக் காட்சியில் குந்திதேவியின் வேடத்தில் கல்யாணத்தின் நடிப்பு, தாண்டம் என்ற எதிர்நாயகன் காலில் விழுந்து சாகும் அளவுக்கு எல்லாம் இல்லை. குந்தியே வந்து அந்த இடத்தில் இறங்கியிருக்க வேண்டாமா? கல்யாணமே அங்கே நின்றுகொண்டிருந்தான். அதன் பிறகு அர்ஜுனன் வேடத்திற்காக, தீப்பந்தங்களுக்கு நடுவில் ஆடுவது நன்று. ஆனால், இங்கும் அர்ஜுனனின் தரிசனம் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.
எனவே, இதை கூத்துக் கலை பற்றிய படம் எனச் சொல்வது பொருத்தமற்றது. வளரும் கலைஞனின் மனோரதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.