நம் கல்வித் துறையின் போதாமைகள்
அண்ணாகண்ணன்
கண்டுமூட்டே (Gantumoote) என்ற கன்னடப் படத்தைப் பார்த்து முடித்தேன் (Amazon Prime). இயல்பான, அழகான, உணர்வுப்பூர்வமான காதல் கதை. நாயகியாக நடித்த தேஜூ பெலவாடி, இதில் வாழ்ந்திருக்கிறார்.
இதில் ஒரு வசனம் வருகிறது. பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். ‘தேர்வில் நீங்கள் பர்ஸ்ட் கிளாஸ் மார்க் எடுத்தால், உங்கள் வாழ்க்கை பர்ஸ்ட் கிளாஸாக இருக்கும். நீங்கள் செகண்ட் கிளாஸ் மார்க் எடுத்தால், உங்கள் வாழ்க்கை செகண்ட் கிளாஸாக இருக்கும்’ என்று. இந்த மாணவன், ‘நான் பெயில் ஆகிவிட்டேன். வாழ்க்கையிலும் இனி நான் பெயில் தான்’ என்று தவறான முடிவு எடுத்துவிடுகிறான்.
ஆசிரியர்களோ, பெற்றோர்களோ, மதிப்பெண்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கவே கூடாது. அவர்கள் போகிற போக்கில் சொல்லும் ஒரு சொல் கூட, மாணவர்களிடம் மிக அழுத்தமான பாதிப்பை / தாக்கத்தை ஏற்படுத்திவிடும். மேலும், நிஜ வாழ்க்கையில் மதிப்பெண்கள் பெரிய முக்கியத்துவம் பெறுவதில்லை.
ஒருவர், 60 சதம் எடுத்தாலே முதல் வகுப்பில் தேர்ச்சி பெறலாம். இப்படி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் வாழ்க்கையில் முதல் நிலையிலும் இல்லை. குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் அனைவரும், வாழ்க்கையில் கீழ் நிலையிலும் இல்லை. எனவே, இந்தக் கண்ணோட்டத்தை எந்த இடத்திலும், நிலையிலும் விதைக்கக் கூடாது.
இதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை வேடிக்கையாக ஒப்பிடுவதோ, பொதுமைப்படுத்துவதோ கூடாது. மதிப்பெண் பெற்றால் தான் இதைச் செய்வேன் எனப் பேரம் பேசக் கூடாது. மேலும், அடிக்கடி தேர்வுகள் வைத்து மன அழுத்தத்தை உருவாக்குவதும் மதிப்பெண்களை வைத்து மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வை வளர்ப்பதும் மதிப்பெண்களைச் சாதனை எனக் கொண்டாடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர் மனம் என்பது பச்சை மண். அதில் எதை விதைத்தாலும் அழுத்தமாகப் பதிந்துவிடும். எனவே, ஆரோக்கியமான செய்திகளை மட்டுமே சிந்திக்க வேண்டும். சில பாடங்களை மட்டும் முன்வைத்து, அதில் இவர் இன்ன மதிப்பெண் என அறிவிக்கும் முறையை மாற்ற வேண்டும். ஒவ்வொருவரிடமும் என்ன திறமை இருக்கிறதோ, அதைக் கண்டறிந்து வளர்த்து, இன்னார் இன்ன திறமை கொண்டிருக்கிறார் எனச் சான்றிதழ் அளிக்க வேண்டும். இவரிடம் இன்ன திறமை இல்லை எனச் சான்றிதழ் அளிப்பதைக் கைவிட வேண்டும். கல்வித் துறையில் அடிப்படை மாற்றங்களை உருவாக்குவதே இத்தகைய சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
#gantumoote #amazonprime #education