Category: தலையங்கம்

தலையங்கம்

  • மக்கள் கேட்கும் கேள்விகள் (4)

    பவள சங்கரி

    தலையங்கம்

    மேன்மைதங்கிய பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு,

    தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசியபோது எங்களுடைய அடுத்த ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் இந்த ஐந்தாண்டு கால ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இல்லை என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?

    உயர்திரு ராகுல் காந்தி அவர்களே,

    தாங்களும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசியபோது மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும் ஏற்படும் என்று கூறியிருக்கிறீர்கள். ஊழலுக்காகத் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவ் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டும், திரு அசோக் சவானை உங்களுடைய கட்சி வேட்பாளராக அறிவித்துவிட்டும், நீங்கள் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் எவ்வாறு ஏற்படுத்தப் போகிறீர்கள்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (3)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு ஸ்ரீனிவாசன் அவர்களே,

    உங்கள் மருமகன் மெய்யப்பன் செய்த தவறுகளனைத்தும் தாங்கள் அறியாமலே நடந்துள்ளது. இதனால் பல கோடி பணம் கைமாறியதும் தலைவராகிய தங்களுக்கேத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியவில்லையென்றால் நீங்கள் எப்படி பி.சி.சி.ஐ. இன் தலைவராகவும், இந்தியா சிமெண்ட்ஸ் குழுமத்தின் தலைவராகவும் இருந்து மிகச் சிறந்த நிர்வாகத்தை உங்களால் எப்படித்தர முடியும்? ஆனால் உச்சநீதி மன்றத்திற்கு இவையனைத்தும் மிகத் தெளிவாகப் புரிந்து உங்களை உடனடியாகப் பதவி விலகும்படிக் கூறியுள்ளார்கள். நீங்கள் பதவி விலகி அந்தப் பொறுப்பிற்குரிய கௌரவத்தையும், அந்த விளையாட்டிற்குரிய பெருந்தன்மையையும் காக்கப் போகிறீர்களா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (2)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு மோதி மற்றும் உயர்திரு ராகுல் காந்தி அவர்களே,

    எவ்வளவு உயரிய பதவிகளில் இருந்தாலும் அவர்கள் தவறு செய்யும் போது பொது மக்கள் தட்டிக் கேட்கக் கூடிய லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்த ஆளும் கட்சியும் , அதற்கு ஆதரவு தெரிவித்து உறுதுணையாக இருந்த எதிர்கட்சிகளும் இன்று போட்டி போட்டுக்கொண்டு ஊழல் அரசியல்வாதிகளையே தங்களுடைய கட்சி வேட்பாளர்களாக அறிவித்துள்ளீர்களே இது சரியா. உங்கள் பதில் என்ன?

    திரு மோதி அவர்களே,

    நேற்றைய உங்கள் விளம்பரம் ஆச்சரியப்படுத்தியது. “டாலர் கொடுத்தாலும் வாங்க மாட்டேன், ரூபாயாகக் கொடுத்தாலும் வாங்க மாட்டேன். நியாயமாகத்தான் நடந்து கொள்ளுவேன், ஆகவே எனக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று எடியூரப்பாவையும், ஸ்ரீராமுலு அவர்களையும் தங்களுடைய கட்சி வேட்பாளராக அறிவித்துவிட்டு எவ்வாறு நீங்கள் சொன்ன வகையில் செயல்படப்போகிறீர்கள்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (1)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு அன்னா ஹசாரே அவர்களே,

    ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக அதாவது அவர்களின் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி சமீபத்தில் தலைநகரில் நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள். ஊழலுக்கு எதிரான சட்ட முன் வடிவம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதை நிறைவேற்றிய ஆளும் கட்சியினரும் இதற்குத் துணை நின்ற எதிர் கட்சியினரும் ஊழலை ஒழிப்பதில் உண்மையாக அக்கறை உடையவராக இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? தேர்தல் சமயமான இந்த நேரத்தில் அனைத்துக் கட்சியினரும் ஊழலில் திளைத்தவர்களை தங்களுடைய வேட்பாளராக அறிவித்துள்ளனரே, நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் அண்ணல் காந்தியடிகள் போல் போராடாமல் அமைதி காப்பதற்கு என்ன காரணம். நீங்கள் போராட வேண்டிய இத்தகைய நேரத்தில் அலட்சியப் போக்குக் காட்டுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

    இன்னும் கேட்க வேண்டிய கேள்விகளும், பதில் சொல்ல வேண்டிய தலைவர்களும் நிறையவே இருக்கிறார்கள்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • சுவடுகள் பதித்த சுடரொளிகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மகளிர் தின வாழ்த்துகள்!

    இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும், பேச்சுரிமை, தனி மனித சுதந்திரம், பாதுகாப்பான வாழ்க்கை என அனைத்தும் அனைவரும் பெறும் உரிமை உள்ளது. ஆனால் இவையனைத்திற்குமாக நாம் நிர்ணயிக்கும் அளவுகோல் மட்டுமே நம் இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கிறது.

    பண்டைக்கால மகளிரின் ஒழுக்க நெறியினை நம் வேதங்கள் அழகாக எடுத்துரைக்கின்றன. வேத காலத்தில் ஒரு ஆண் மட்டுமே குடும்பத் தலைவனாக இருந்திருக்கிறார். ஒரு குடும்பத்தில் ஆண் மகவு பிறப்பதையே பெரிதும் மகிழ்ந்து கொண்டாடியதோடு, அதற்கான பிரார்த்தனைகளையும் மேற்கொண்டனர். வேத காலத்தில் கல்வி என்று எடுத்துக்கொண்டால் பெண்களைப் பொறுத்த வரையில் ஆணுக்கு நிகரான கல்வி வழங்கப்படவில்லை. ஆனாலும் சமூக வாழ்க்கையில் ஆண், பெண் என இரு பாலரும் சம நிலையிலேயே இருந்திருக்கின்றனர். அதாவது ஆண்களைப் போன்றே பெண்களும் அனைத்து விதமான சுதந்திரமும் பெற்றிருக்கின்றனர். மெல்ல மெல்ல அவளே தெய்வ நிலைக்கும் உயர்த்தப்பட்டிருக்கிறாள். ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று அந்தக் காலத்தில் பெண்களின் திருமண வாழ்க்கையில் கட்டுப்பாடும், ஒழுக்க நெறியும் கடைபிடிக்கப்பட்டு வந்ததோடு, விவாகரத்து என்ற ஒரு கோட்பாடே இல்லாமலிருந்திருக்கிறது.

    ஆனால் ரிக் வேத காலத்தின் இறுதியில், பெண்களின் மீது சில கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டதோடு, அவர்களுடைய சுதந்திரமும் மெல்ல மெல்ல பறிக்கப்பட ஆரம்பித்தது. ஆரம்ப காலத்தில் பிரகாசமாக ஒளி வீசிய மகளிரின் வாழ்க்கையில் மெல்ல மெல்ல இருள் தோன்ற ஆரம்பித்துள்ளது. ஆனால் அந்த இருளிலும், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்றளவிலும் பிரகாசமாக மின்னிக் கொண்டிருக்கும், கார்கி, மைத்ரேயி, லோபமுத்ரா, காத்யாயினி, கோஷா, சஸ்வதி, அபலா, இந்திராணி போன்றோரை நாம் மறக்க இயலாது.

    தர்ம சாத்திரங்களின் அடிப்படையில் திருமணம் அக்னி சாட்சியாக நடைபெற்றபின், கணவனும், மனைவியும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இறுதியில் உயிர் பிரிந்தவுடன் அந்தத் தீயிற்கே உடலை ஆகுதியாக அளிப்பது புனிதமாகக் கருதப்பட்டது. இந்தத் திருமணத்தில் ஒரு பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பதன் மூலம் அவள் தன் கணவனுக்கு முழுமையாக உரிமையானவளாக ஆகிவிடுகிறாள். கணவனுக்கு அடங்கியவளாகவும், குடும்பத்தில் கணவனைச் சார்ந்து இருப்பவளாக, குழந்தை பெற்று வளர்ப்பது மற்றும் குடும்பத்தின் கடமைகளை நிறைவேற்றுவது போன்றவை மட்டுமே அவளுடைய தலையாயப் பணியாக இருந்தது. பிறன்மனை நாடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு எந்த விதமான சட்டப் பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை. கலப்புத் திருமணங்கள் ஆதரிக்கப்பட்டன. கைம்பெண்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விஷ்ணு மற்றும் பிரஹஸ்பதி ஆகியோர் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை புனிதமானதாக அங்கீகரித்ததால், அதைப் பெண்களுக்கு அளித்த சிறப்பாக கருதப்பட்டது.

    உன்னதமான தர்மங்களைப் போதிக்கும் மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்பட்டது. ராஜ தர்மம், அபதர்மம், மோக்‌ஷதர்மம் மற்றும் தான தர்மம் போன்ற அனைத்தும் மகாபாரதத்தில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தலை சிறந்த தத்துவங்கள் மற்றும் உபனிசங்கள், கீதோபதேசம் போன்றவைகளை போதிப்பதால் மகாபாரதம் தலைசிறந்த காவியமாகக் கருதப்பட்டது. பாரத தேசத்தின் மிகச் சிறந்த காவியங்களான, இராமாயணம் மற்றும் மகாபாரதம் சீதா, கைகேயி, குந்தி, திரௌபதி, சாவித்திரி, கௌசல்யா போன்ற ஒழுக்க நெறி தவறாத உன்னதமானப் பெண்களை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது. கணவனை இழந்த பெண்கள் மகனின் பாதுகாப்பில் வாழ்ந்தனர். உடன்கட்டை ஏறும் வழக்கமும் மெல்ல வலுவிழந்தது.

    மனுதர்மம், கணவன், மனைவி உறவின் புனிதத்தைக் காக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளை வரையறுத்தது. ஒரு மனைவி கணவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று மனைவி, கணவன் மற்றும் சந்ததிகளின் நலனைப் பேணுகிறவளாக இருக்க வேண்டும். கணவன் இறந்த பிறகும் அவன் நினைவில் மட்டுமே அவள் வாழவேண்டும். அப்படி வாழ்ந்த பெண்களை மிகவும் மதிப்பாக நடத்தினார்கள்.

    அடுத்து வந்த முகலாய ஆட்சியில் பர்தா போடும் வழக்கம் கட்டாயப்படுத்தப்பட்டது. விபச்சாரம் பிரபலமானது. ராஜபுத்திர வீரர்களால் அபகரிக்கப்படுவதைக் காட்டிலும் கணவன் இறந்தவுடன், அவனுடனேயே உடன்கட்டை ஏறுவதே சிறந்தது என்ற முடிவிற்கும் தள்ளப்பட்டார்கள் பெண்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் முகலாய ஆட்சி முடிவுற்றபின் உடன்கட்டை ஏறும் வழக்கமும் சிதறுண்டது. அடுத்து வந்த ஆங்கிலேயர் ஆட்சியில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டது. 1829ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி, ஆங்கில அரசு மனிதாபிமான அடிப்படையில் ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடை செய்ததோடு அதை மீறுபவர்களுக்கு அபராதமும் சிறை தண்டனையும் வழங்கியது. ஆச்சாரமான இந்துக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தாலும் ராஜாராம் மோகன் ராய் அவர்களின் பெரும் முயற்சியால் அது நிறைவேற்றப்பட்டது.

    அடுத்ததாக ஈரோடு பெரியார் அவர்கள், மறுமணம் என்கின்ற விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய மிகப் பெரிய தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தினார். வெறும் உபதேசமாக மட்டும் இல்லாமல் தானே முன்னோடியாக இருந்து, தம் சிறு வயதிலேயே, தம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிற்கு மறுமணம் செய்துவைத்து வழிகாட்டினார். திருமணத்திற்குப் பிறகும் அப்பெண்னிற்கு பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கும் வகையில், ஈரோடு தங்கவேலனார் போன்றோரின் முயற்சியால் கன்னிகாதான முறையும் ஒழிக்கப்பட்டது. அதன்பின் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியால், இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த கேப்டன் இலட்சுமி எனப்படும், இலட்சுமி சேகல் போன்ற ஒரு சிலர் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்களுடைய பங்களிப்பைக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியவைகள் என சிலவற்றை சிந்திக்க வேண்டியுள்ளது. ‘ இனி ஒரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்’ என்கிறபடி, நம் வீட்டில் பிறக்கும் பெண் குழந்தையை இனி பொத்திப்பொத்தி வளர்ப்பதைக் காட்டிலும், அவர்களுக்குத் தாய்ப்பாலுடன் தைரியம், துணிச்சல், கல்வி, தற்காப்பு போன்ற அனைத்தையும் சேர்த்தே போதித்து வளர்ப்போம். சங்க இலக்கியத்தில் கூறியது போல முறத்தால் புலியை விரட்டிய பெண்ணின் கதையையும், இரும்புப் பெண் என்று போற்றப்பட்ட மார்கரேட் தாட்சர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறியும், ஜெர்மன் நாட்டை ஆண்ட கோல்டா மேயர் பற்றியும், வீரப்பெண் அன்னை இந்திராவின் சரித்திரத்தையும், ஸ்ரீலங்காவை ஆட்சி செய்த ஸ்ரீமாவோ பண்டாரநாயகா பற்றியும், வான்வெளியில் புரட்சி செய்த கல்பனா சாவ்லா பற்றியும் எடுத்துரைத்து , அச்சமின்றி, சவால்களை எதிர்கொண்டு, சாதனைப் படைக்கும் தலை சிறந்த ஒரு பெண் சமுதாயத்தை உருவாக்க உறுதி கொள்வோம். பெண்ணே ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்குத் தடை என்ற கருத்தை முறியடிப்போம். ஒன்றிணைந்து செயல்பட்டு சமுதாயத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்க உறுதி கொள்வோம்.

    எந்த ஒரு சக்தியும் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க வேண்டிய தேவையில்லை என்பதில் தெளிவாக இருப்போம். நம்முடைய பணிகளை நாமே செய்ய முனைவோம். அடுத்தவரை சார்ந்திருப்பதைத் தவிர்ப்போம். தேவையற்ற எதிர்பார்ப்புகளையும், அளவிற்கு அதிகமான பாராட்டுதல்களில் நாட்டம் கொள்வதையும் முற்றிலும் தவிர்ப்போம். ஆண்களுக்குச் சமமாக நம்மாலும் சாதிக்க முடியும் என்பதை நம் உழைப்பைக்கொண்டு உறுதி செய்வோம். நம்மை உற்று நோக்கி துவண்டு விழச் செய்பவரை, திரும்பி நின்று நேர் கொண்ட பார்வையால் வீழ்த்துவோம்! நம் பெண் குழந்தைகள் முதலில் தம்மைத்தாமே மதித்துக் கொள்ளவும், சுய கௌரவத்தை எந்த நிலையிலும் இழக்காமல் இருப்பதற்கும் நாம் முதலில் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்போம். நம் இளைய சமுதாயத்தை, தம்முடைய உரிமைகளை எந்த நிலையிலும் இழக்காமல் இருக்க உறுதி பூண வழிநடத்துவோம். எவருடைய தலையீடும் இன்றி நம்முடைய உரிமைகளை சரியான முறையில் பயன்படுத்த உறுதி கொள்வோம்.

    Share
  • மதிய உணவின் முன்னோடி!

    பவள சங்கரி

    தலையங்கம்

    singaravelar 01‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலனாரின் பிறந்த நாள் இன்று. பொதுவுடமைவாதியும், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தொழிற்சங்கவாதியுமான இவர், வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளர்களுக்கென்று ஒரு சிறப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற நல்ல சிந்தையை முன்னெடுத்தவர். அத்தோடு கர்மவீரர் காமராசர் வெற்றிகரமாக செயல்படுத்தி இலட்சக் கணக்கான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியமைத்துக் கொடுத்த மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியாக இருந்தவரும் திரு சிங்காரவேலனார் அவர்களே. நூற்றுக்கணக்கான இவருடைய நூல்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் மேற்கொண்ட ஒரு கருத்துக் கணிப்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில், 8ம் வகுப்பு பயிலும் 74 சதவிகித மாணவர்களுக்கு சாதாரண கூட்டல், கழித்தல் கணக்கு கூட தெரியவில்லை என்றும், 40 சதவிகித சிறார்களுக்கு வகுத்தல் என்பதும் புரியவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அளிக்கின்றனர். அப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரோ அல்லது கழிவறை வசதிகளோ கூட இல்லை என்ற தகவலும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. 2011இல் உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படி அனைத்துப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கென்று தனி கழிவறை இருக்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டும், சென்ற வாரம் ஆசர் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, 54 சதவிகித பள்ளிகளில் மட்டுமே பெண் குழந்தைகளுக்கான தனி கழிவறை இருப்பதாகத் தெரிகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக் காட்டிலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் பின்தங்கியிருப்பதைக் காண முடிகிறது. கிராமப் புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆயினும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் இல்லை என்பதும் வேதனைக்குரிய விசயம்.

    பாராளுமன்றத் தேர்தல் திருவிழா வருகிறது. செலவழிக்க பணமூட்டைகள் தயார். எந்தப் பெயரில் கொடுத்தாலும் வாங்குவதற்குத் தயாராகவும் ஒரு கூட்டம். தொலைக்காட்சிப் பெட்டியா, மாவரைக்கும் இயந்திரமா, குளுகுளு மின்விசிறியா, மடிக் கணினியா, இல்லை காந்திப்படம் போட்ட நோட்டா.. எதைக் கொடுத்தாலும் வாங்கத் தயார். வாக்களிக்க சத்தியங்களும் அள்ளி வழங்கப்படும்!

    இந்திய ஜனநாயகமும், வாக்குச் சுதந்திரமும் படும்பாடுதான் இது. மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டியது ஆட்சியாளரின் கடமை . இவ்வளவு நாள் ஆட்சியில் இருந்துவிட்டு நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பட்டியல் போட்டு பல ஆயிரம் கோடி செலவு செய்து விளம்பரம் செய்து மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய நிலையிலேயே இன்றைய ஆட்சியாளர்கள் இருப்பது கண்கூடு. ஒன்றுபட்ட இந்தியாவிற்குரிய இரும்பு மனிதர் என்று பேசப்பட்ட வல்லபபாய் பட்டேலுக்கு இரண்டு கட்சியினரும் போட்டியிடும் கேலிக்கூத்தும் அரங்கேறுகிறது. அவர் செய்த செயல்கள் மற்றும் அவருடைய கொள்கைகளை மட்டுமே நாங்கள் பின்பற்றுகிறோம் என்று கூற ஏதேனும் உதாரணம் காட்டியோ அல்லது நல்ல செயல்களைச் செய்து அதன் மூலம் அவருடைய பெயரை நிலைநாட்ட முனைந்தாலோ அவர்களுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு தயக்கம் இல்லாமல் போகலாம். தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுவது போல டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு, உழைப்பவர்களின் வருமானங்களை உறிஞ்சிய பிறகு அவர்களின் இல்லங்களுக்கு எதற்கு இலவசங்கள். அப்பனிடமிருந்து பணத்தை பிடுங்கிக்கொண்டு பிள்ளைகளுக்கு விலையில்லா மடிக்கணினி எதற்கு? ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினர் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவருக்குமே இந்தத் தேர்தல் திருவிழாவின்போது மட்டும்தான் மக்களைச் சந்திக்க முடிகிறது. மாறி வரும் இளைய சமுதாயம் இதையெல்லாம் கவனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சரியான வழிகாட்டும் விதமாக வல்லபபாய் பட்டேலாகவும், லோக மானிய திலகராகவும், ஜெயப்பிரகாஷ் நாராயணனாகவும் மாறி வழி நடத்தினால் பின்வருபவருக்குத் தயக்கம் ஏது என்பதையும் உணர எவரும் முனைவதாகவும் இல்லை.

    டாஸ்மாக் கடைகளையும், மணல் குத்தகையையும் அரசு எடுத்துக் கொண்டு வருமானம் பார்ப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அனைத்துப் பள்ளிகளையும் தேசியமயமாக்கி, குழந்தைகளுக்கு விலையில்லா கல்வியைக் கொடுக்கும்பட்சத்தில்! விலையில்லா இலவசங்களை விடுத்து விலையில்லாத கல்வியை மட்டும் கொடுத்து இளைய சமுதாயத்தை வளரவிட்டால் போதும். பாடத்திட்டம் எதுவாக இருப்பினும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுங்கள் விலையில்லாக் கல்வியை!

    Share
  • தங்கமும் தங்கமாக மின்னும் விளம்பரங்களும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒரு நகைக்கடை தங்களுடைய விளம்பரம் மூலமாக மக்களைப் பெரிதும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்று கிராமுக்கு 2014 ரூபாய் கட்டினால் ஐந்தாண்டு கழித்து எத்தனை கிராமுக்கு நாம் பணம் கட்டியிருக்கிறோமோ அத்தனை கிராம் தங்கத்தை அவர்கள் கொடுத்து விடுவார்களாம். 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2810. அந்த விளம்பரத்தில் நடிக்கக்கூடிய பெண்மணி நான்கு நாட்கள் தான் இருக்கிறது. இந்த வைப்பத் திட்டம் முடிவடையப் போகிறது. அதனால் விரைந்து சென்று பணத்தைக் கட்டுங்கள் என்று கூறுகிறார். இன்றைக்கு தங்கத்தின் விலை இருப்பது போன்று ஐந்தாண்டுகள் கழித்தும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்பொழுது நம்முடைய ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சியடையாமல் அப்படியே இருப்பதாக வைத்துக்கொண்டாலும் இன்றைக்கு இருக்கக்கூடிய சந்தை விலைக்கு இவர்களால் தர முடியுமா என்பது சந்தேகம்தான். இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து. தங்கத்தின் விலை ஏறினாலும், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அதிகமானாலும் நட்டத்தின் மடங்கு அதிகமாகவே அல்லவா ஆகும். இந்த கவர்ச்சிகரமான விளம்பரத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றிருந்தால் அதற்கான அரசாணையும் தேதியும் அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதையும் அவர்கள் செய்திருப்பதாகத் தெரியவில்லை. இதற்காக அரசாங்கத்தின் கருவூலத்தில் வைப்புநிதியாக எத்தனை கோடி வைத்திருக்கிறார்கள் என்பதையும் வெளியிட்டிருக்க வேண்டும் அதையும் செய்யவில்லை. இதனால் நாளை மக்களுக்கு இழப்பு ஏற்படாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

    சென்ற வருடம் இதுபோல் ஈமு கோழி வளர்ப்புத் திட்டம் என்று கவர்ச்சிகரமான திட்டங்களையெல்லாம் விளம்பரம் செய்து மக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி வசூல் செய்ததால் மக்கள் அவதிப்பட்டதோடு அந்த கோழிகளும் இன்றுவரை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தேக்கு மரத் திட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து மிக அருமையாக விளம்பரம் செய்து அதன் மூலம் மக்கள் பல ஆயிரம் கோடிகளை இழந்ததும் நினைவிருக்கலாம். இப்படி ஒரு தனி நிறுவனம் வெட்ட வெளிச்சமாக விளம்பரம் செய்து மக்களைக் கவர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் போல இதிலும் கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா? நாம்தான் விழித்துக்கொள்ள வேண்டும்! கடின உழைப்பால் சம்பாதித்த நம் செல்வத்தை இது போன்ற விளம்பரங்களை நம்பி மோசம் போகாமல் நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

    Share
  • உலக புற்று நோய் தினம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ”புற்று நோய் என்பது வெறும் ஒரு வார்த்தைதான். வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல” – ஜான் டைமண்ட்

    இன்று உலக புற்று நோய் தினம். புற்று நோய்களில், இரத்தப்புற்று நோய் (லுக்கிமியா) சிறுநீரகப் புற்று நோய், மார்பகப் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கருப்பை புற்று நோய், தோல் புற்று நோய் போன்ற பல வகைப்பட்ட புற்று நோய்கள் உள்ளன. உடலின் செயல்பாடுகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் செல்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியே புற்று நோயாகும்.

    உலக அளவில் முதல் இடத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்று நோயாக இருப்பது மார்பகப் புற்றுநோய். அடுத்து புகையிலைப் பொருட்களால் ஏற்பட்க்கூடிய புற்று நோய் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பது, பான் மசாலா, புகையிலை மெல்லுவது போன்ற காரணங்களால் 10ல் நான்கு பேருக்கு வாய்ப்புற்று நோய் ஏற்படுவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதனால் 42 சதவிகித ஆண்களும், பெண்களும் உயிரிழக்க நேரிடுகிறது. மனித வாழ்விற்கு பெரும் சவாலாக இருந்துவரும் நோய்களில் புற்று நோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் ஏழு இலட்சம் பேருக்கும் மேலாக புற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். உலகளவில் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.முறையான சிகிச்சையும், சரியான விழிப்புணர்வும் இல்லாத காரணத்தினால் நாளொன்றுக்கு 3,50,000 பேருக்கு மேல் இறப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது. மேலும், சமீபத்திய ஆய்வுப்படி இந்தியாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோய்க்கும், ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் இறப்பதாகவும் தெரிகிறது. இன்று பிப்ரவரி 4ந்தேதி உலக கேன்சர் தினம். புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டியது அவசியம் என்பதை உணரவேண்டிய நாள். இந்த நோய்க்கான காரணங்களை அறிந்து அதனைக் கட்டுப்படுத்தும் வகைகளை அறிந்து கொண்டு நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.

    புற்று நோயாளிகளிடம் அவர்களுடைய வியாதி பற்றி நேரடியாகக் கூறாமல் மறைத்து வைப்பதைக் காட்டிலும், அவரிடம், இருக்கும் நிலையை விளக்கி பிரச்சனையை அவர்கள் தைரியமாக எதிர்கொள்ள நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதே முக்கியம். இல்லாவிட்டால் தாம் சீக்கிரமே சாகப் போகிறோம், அதனால்தான் தம்மிடம் எதுவும் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதனால் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதிலும் சிரமப்படுவார்கள்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  முதல் சிகிச்சை நோயாளிகளுக்கு மனஉறுதி அளிப்பது தான். புற்றுநோய் சிகிச்சைகளை, ஏற்றுக்கொள்ளும் வகையில் பாதிக்கப்பட்டவர் உடலளவிலும், மனதளவிலும் தயாராக அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையும் தரும் வகையில் மிக இயல்பாக இருத்தல் அவசியம்.

    ஆன்கோ பிளாஸ்டிக் மார்பக அறுவை சிகிச்சை நிபுணரான, மருத்துவர் திருமதி செல்வி ராதாகிருஷ்ணா, FRCS., அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “இன்றைய மருத்துவக் கல்வித்துறையில் பட்டப்படிப்பிலும், டிப்ளமோவிலும் மேமோகிராமிற்கான கதிர்வீச்சுப் பயிற்சிகள் போதிய அளவிற்கு இல்லை எனவே பெரும்பாலான பரிசோதனை மையங்களில் செய்ய்ப்படும் பரிசோதனைகளின் தரம் இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இந்த விஷயத்தை ஒரு அர்ப்பண உணர்வுடன் கவனிக்க வேண்டியது மிக அவசியம். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் குறைந்த செலவில், தரமான சிகிச்சைகள்  கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறியது பெரிதும் சிந்திக்கச் செய்கிறது. வெறும் இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கவர நினைக்கும் அரசாங்கம், இது போன்ற நற்காரியங்களுக்காகவது கொஞ்சம் பணத்தை செலவு செய்தால் புண்ணியமாவது கிட்டும் அல்லவா?

    Share
  • குடியரசு தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    republic
    நம் நாடு முழுவதும் இன்று 65 வது குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்த நம் இந்தியாவை தம் குருதி மட்டுமல்லாமல் இன்னுயிரையும் ஈந்து, நம்மையெல்லாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்த தன்னலமற்ற தலைவர்களை நினைவுகூர்ந்து வணங்க வேண்டிய நாள் இது. வியாபாரம் செய்ய உள்ளே வந்து நம் நாட்டையே பிடித்துக் கொண்டவர்களிடமிருந்து அகிம்சை முறையில் போராடி 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுத் தந்தனர் நம் தேசத் தலைவர்கள். விடுதலைக்குப் பிறகு, நம் நாட்டின் சிறப்பான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மக்களாட்சியை மலரச் செய்ய முயன்றனர். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நம் இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, குடியரசு தின, கொண்டாட்டத்தைத் துவக்கி வைத்தார்கள்.  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு இராஜேந்திரப் பிரசாத் அவர்கள். இவர் 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர்தான். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 26 ஆம் நாள் தம் தாய்த் திருநாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்நந்நாளில் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தத்தோடு சில வற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமக்குப் பின்னால் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் நாடு பொருளாதாரத்தில் வளமிக்க நாடாக உயர்ந்துள்ளது. அங்கு தனி மனித வருமானமும் அதிகரித்துள்ளது. சிங்கப்பூரின் டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாயில் அதிகமாகி உள்ளது. இரண்டாம் உலகப் போரால் முற்றிலும் சிதைந்துபோன ஜப்பான் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் நம் நாட்டின் நிலையை எண்ணும்போது அந்த மகிழ்ச்சிக்கான முகாந்திரமே இல்லை. பாரதி கூறிய, ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற நிலை வேண்டுமானால் மாறியுள்ளதே தவிர, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இன்னும் நம்மால் வர இயலவில்லை. இன்னும் எவ்வளவு காலம்தான் வளரும் நாடுகள் பட்டியலிலேயே நாம் இருந்து கொண்டிருப்போம்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யும் இந்த குடியரசு ஆட்சி, மக்களுக்காகத்தான் ஆட்சி செய்கிறதா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. எங்கும், எதிலும் ஊழல். என்ற இன்றைய நிலையைத் தவிர்த்தாலே நம் நாடு வெகு விரைவில் வல்லரசு ஆவது உறுதி. நமது நாட்டில் அறிவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கும்கூட பஞ்சமில்லை என்பது சந்திரனுக்கு அடுத்ததாக செவ்வாய்க் கிரகத்திற்கும் ஆய்வுக்காக விண்கலத்தை அனுப்பியதன் மூலமாக நிரூபித்துவிட்டோம். பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்கள் பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். உலகிலேயே, பொருளாதார அடிப்படையில் வலிமை மிக்க நாடான அமெரிக்காவின் வளர்ச்சியில் நம்முடைய இந்தியர்களின் பங்கு மிக அதிகம். ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களை இனம் கண்டு பயன்படுத்தத் தவறி விடுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்றாலும், ஆட்சியில் இருப்பவர்கள் பொது மக்களுக்காக அன்றி தனிப்பட்ட முறையில் வெகு சிலருக்காகவே சேவை செய்கிறார்கள். இந்த நிலை மாறி மக்கள் இவர்களைத் தட்டிக்கேட்கும் உரிமையைப் பெற வேண்டுமானால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் வாக்கைச் செலுத்துவதற்காக, பணமாகவோ அல்லது , பொருளாகவோ எந்த வகையிலும் இலவசங்களைப் பெறாமல் இருக்க வேண்டியது அவசியம். அப்படிப் பெற்றால் அதுவும் ஒரு வகையில் லஞ்சம்தான். இதனால் நாம் நம் கண் முன்னால் நடக்கும் தவறைத் தட்டிக்கேட்டும் உரிமையை இழந்துவிடுகிறோம். இந்த குடியரசு தினத்தில், மக்களுக்காக யார் தங்கள் தன்னலமற்ற சேவையை வழங்குகிறார்களோ, அவர்களைத்தான் வெற்றி பெறச் செய்வோம் என்று சூளுரைப்போம். மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம், முழுமையான அமைதி ஆகியவைகள் தொடர்ந்து நிலவிட, தேசபக்தி உணர்வோடு இந்த குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம் .

    வாழ்க குடியரசு! வெல்க ஜனநாயகம்! ஜெய்ஹிந்த்!

    Share
  • சமூக நீதியும், மருத்துவமும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மூதறிஞர் ராஜாஜி அவர்களின் குலக்கல்வித் திட்டத்தினால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் தாங்கள் இருக்கும் அதே நிலையில் நிரந்தரமாக, இருந்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்றும், அவர்களும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே, அதனை எதிர்த்து ஒரு தந்தை பெரியாரும், ஒரு பேரறிஞர் அண்ணாத்துரை போன்றவர்களும் போராடிக் கொண்டுவந்த இந்த சமூக நீதியால் மட்டுமே பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட , மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயமும், மலைவாழ் மக்களும், இன்று நம்முடைய தமிழகத்தில் தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. இல்லாவிட்டால் நம்முடைய தமிழகமும், இன்று பீகாரைப் போலவோ, உத்திரப் பிரதேசம் போலவோ அல்லது மத்தியப் பிரதேசம் போலவோ அல்லவா இருந்திருக்கும்.. ஒரு குழந்தை ஏணியில் ஏறுவதற்கு நான்கு படிகள் வழி காட்டினால் போதும் . ஒவ்வொரு முறையும் ஏணி முழுவதும் ஏற்றிவிட வேண்டியதில்லை. அந்தக் குழந்தையும்கூட அதை விரும்பாது. ஒரு எல்லைக்கப்பால் கையைத் தட்டிவிட்டு, சுயமாக நின்று தன் வல்லமையை நிரூபிக்கவே விரும்பும். ஒரு மாணவர் தடையற கல்வி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்த சமூக நீதியைக் கொண்டு வர வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கலாம். அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு உயர்ந்த நிலைக்கு வர வேண்டியது அந்த மாணவனின் கடமையல்லவா? பதவி உயர்வு என்று வரும் வேளைகளிலேனும் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் சில சலுகைகளை வழங்குவதில் பிரச்சனை எழாமல் இருக்கலாம். ஆனால் தன் வல்லமையை நிரூபித்து சில முக்கியமான பொறுப்புகளைப் பெற வேண்டிய தருணத்தில் இது போன்று இலவசமாக வரும் பதவிகள் பயன் தராது. திறமையற்றவர்கள், இது போன்ற வாய்ப்புகளின் மூலம் முக்கியமான பொறுப்புகளில் போட்டியிடும்போது, திறமையுள்ள ஒருவரின் சேவையை இழக்க வேண்டி வரும் என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. இதனால் நம் நாட்டின் முன்னேற்றப் பாதையில் தொய்வு ஏற்படவும் வாய்ப்பு உண்டாகலாம். சமீப காலங்களில் மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும் பெரும்பாலான மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றே கல்லூரியில் நுழைகிறார்கள். இன்று அரசு அறிவித்திருக்கக்கூடிய மருத்துவத் துறையின் பணியிடங்களை நிரப்பும் ஆணை தவிர்க்க முடியாததொன்று. உயிர் காக்கும் உயரிய பொறுப்புகளுக்கும், இந்த சமூக நீதி என்ற ஒரு கருத்தை முன்வைப்பது உடன்பாடானது அல்ல. திறமை இருப்பவர்களுக்கு மட்டுமே அந்தந்தப் பொறுப்புகள் வழங்கப்படுதல் முறையாகும். அவசரமாக மருத்துவம் பார்க்க வேண்டிய நேரத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றெல்லாம் பார்த்துக்கொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட முடியாது. திறமை இருப்பவர்களிடம் மட்டுமே நம்பி அந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியும் என்பதே யதார்த்தம். மருத்துவர்களுக்காகவும், மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்களுக்காகவும் அரசு நிர்ணயித்துள்ள ஊதியங்களைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை சிகிச்சைக்காக தனியார் மருத்துவரிடம் செல்லும் போது நாம் கொடுக்கும் கட்டணம் எவ்வளவு அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்களுக்கான ஊதியங்கள் நிர்ணயிக்கப்படுமேயானால் தங்களுடைய அதிகப்படியான வருமானத்திற்காக அவர்கள் பகுதி நேர மருத்துவமனையை நாட வேண்டிய கட்டாயம் இருக்காது. ஆகவே இதைத் தவிர்த்து மக்கள் உயிர் காக்கும் பொறுப்புகளில் வர இருப்பவர்களுக்கு ஒரு நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். எந்தத் துறையாக இருந்தாலும், குறிப்பாக மருத்துவத் துறையில் ஆண், பெண் தாழ்ந்தவன், உயர்ந்தவன், பிற்படுத்தப்பட்டவன் என்ற பாகுபாடுகளைக் களைந்து திறமை உள்ளவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அத்துறையின் முன்னேற்றத்திற்கு வழிகோலுவதாக அமையும்.

    Share
  • பாரதி கண்ட கனவும் மக்கள் தீர்ப்பும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    5-color bharathiமகாகவி பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு சுதந்திரம் பெறும் முன்னரே ஆனந்தமாக சுதந்திரப்பள்ளு பாடி கனவுலகில் குளிர்ந்தவன் பாரதி!! சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று பாரதி கண்ட கனவும் அந்த ஆசையை அவர் பலவிதங்களில் வடிவமைத்துக் காட்டிய விதமும் ஒவ்வொரு இந்தியனின் உணர்விலும் ஊடுறுவிக் கிடக்கும் ஒன்றுதான் என்றாலும் அவைகள் அனைத்தும் இன்று செயல்படாமல் ஏட்டளவிலேயே நின்று போய்க்கிடப்பதற்கான ஆதாரங்களும் பல. பாரதி கண்ட கனவுகளில் பல இன்றும் கனவுகளாகவே உள்ளதுதான் வேதனைக்குரிய விசயம். பாரதி கண்ட யுகப் புரட்சியும், உருசியப்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி பற்றி பாடிவைத்துப்போன அனைத்தும் இன்றும் நினைவுகூரத்தக்கது!

    மாகாளி பராசக்தி உருசியநாட்
    டினிற்கடைக்கண் வைத்தாள். அங்கே
    ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
    கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்;
    வாகான தோள்புடைத்தார் வானமரர்;
    பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர்
    போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
    வையகத்தீர், புதுமை காணீர்!

     

    உருசிய நாட்டில் கடைக்கண் பார்வை வைத்த மாகாளி நம் நாட்டிலும் வைக்க வேண்டும் என்ற பாரதியின் கனவு நனவாகும் காலம், மக்கள் நல்லாட்சி பெறும் காலம். இன்று ஐந்து மாநிலங்களின் தேர்தல் நடந்து முடிந்து வெற்றி தோல்விகளைப் பற்றி அறிவித்து யார் பதவிக்கு வரப்போகிறார்கள் என்பதை அறியும் சூழலில் இருக்கிறோம். இதில் நம் கவனத்தை ஈர்ப்பது, எங்கெல்லாம் நல்ல ஆட்சி நடந்திருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் தங்கள் வாக்குகள் என்னும் புரட்சிகள் மூலம் அவர்களுக்கு மீண்டும் பதவியைக் கொடுத்து புரட்சி ஏற்படுத்தியுள்ளார்கள். ஐந்து மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் மிஜோரம் மாநில முதல்வர் லால் தன்ஹாவ்லா ஐந்தாவது முறையாக அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது வெற்றிக்கான காரணமாக அவர் குறிப்பிடுவது கடந்த 5 ஆண்டுகளாக தாம் வழங்கிய ஊழலற்ற ஆட்சி என்பதுதான். அது போலவே டெல்லி சட்ட சபைக்கு நடைபெற்ற தேர்தலிலும் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிர்ப்பாக பிரச்சாரம் செய்த கட்சியான, ஆம் ஆத்மி என்ற கட்சி அறிமுக நிலையிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் 27 இடங்கள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது! ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை ஆண்ட ஆளும் கட்சி மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நல்ல ஆட்சியை வழங்கியதாலேயே அவரை மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான விழிப்புணர்வு பெறும் காலமாகவே உள்ளது இது.

    பாரதி கண்ட மற்றொரு கனவு பெண் விடுதலை!

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

    இன்று நிமிர்ந்த நன்னடையால் அமில வீச்சும், பாலியல் வன்கொடுமைகளும் பரிசாகக் கிடைக்குமோ என்று அஞ்சி, அஞ்சி முக்காடிட்டு குனிந்த தளர்நடை நடக்க வேண்டிய சூழலுக்குப் பல பெண்கள் தள்ளப்பட்டிருக்கும் கொடுமையை அந்த பாரதி ஒருவேளை கண்டிருந்தால் இன்னும் என்னவெல்லாம் பாடிவைத்திருப்பானோ?

    “காலனி ஆதிக்கத்திலிருந்து புதிதாக விடுதலைப் பெற்ற நாடுகள் தன் சொந்த காலில் நிற்க வேண்டும், பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டுமென்றால் அந்த நாடு மின்சாரத்திலேயும், இரும்புக் கனி வளத்திலேயும், பெட்ரோலியத்திலும் தன்னிறைவுப் பெற்றிருந்தால்தான் ஒரு நாடு வேற்று நாடுகளுக்கு அடிமையாகாமல் தம் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்” என்று லெனின் சொன்ன இந்த வார்த்தைகள் இன்று இந்தியாவிற்கு எப்படிப் பொருந்துகிறது என்று சிந்திக்க வேண்டிய தருணம் இது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், பெட்ரோல், மின்சாரம் போன்றவற்றிற்காக அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய மோசமான சூழலில் நாடு இருப்பது வேதனையான விசயம்.

    பெண் அடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்த கவிஞன் பாரதி, தமிழுக்கும் தமிழினத்திற்கும் செய்த தொண்டு பாராட்டிற்குரியது. புலவர்கள் மத்தியில் முடங்கிக் கிடந்த தமிழை பாரதி தன் எளிய நடை மூலம் அதனைக் கையைப் பிடித்துப் பொதுமக்களிடம் கூட்டி வந்து சேர்த்துள்ளான் என்றால் அது மிகையல்ல. தமிழ் மொழியின் இனிமையை முழுமையாக உணர விரும்புபவர்களுக்கு இன்றும் அவன் பாடல்களுக்கே முதல் வாய்ப்பு . வெளிநாடுகளில் அடியுதைபட்ட தமிழச் சாதிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குரல் கொடுத்தவன் பாரதி.

    சாத்திரங்கள் பல தேடினேன் – அங்கு
    சங்கையில்லாதன சங்கையாம் – பழங்
    கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் பொய்மைக்
    கூடையில் உண்மை கிடைக்குமோ?

    என்று பாடிய மனிதாபிமானி!

    புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
    தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
    கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
    வசையென்னாற் கழிந்த தன்றே!

    என்ற பாரதியின் வரிகள் சத்தியமானவைகள். வெறும் புகழ்ச்சி இல்லை. பாரதியின் கவிதை வீச்சை வெல்லத்தக்க கவிஞர் வேறு எவரும் இன்னும் பிறக்கவில்லை என்பதே உண்மை.பாரதிதாசன் பாரதியை உச்சி மீது வைத்து மெச்சுவதொன்றே போதும் அவன் புகழுக்கு. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய’ இந்த மண்ணில் சாதி மத வேறுபாடு அகன்றிட, அறியாமை இருள் நீங்கிட ,சமுதாயம் சீர் பெற்றிட, வறுமையை வெளியேற்ற ‘எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் ஓர் நிறை’ ஆகவேண்டும் என்று கனவு கண்ட பாரதியின் கவிதையில் ஷெல்லியின் கற்பனை, பிரௌனிங்கின் வாழ்வு நோக்கு, வோர்ட்ஸ்வொர்த்தின் கடவுள் கொள்கை, , டென்னிசனின் கவிதையின் எளிமை போன்றவற்றைக் காணலாம். மகாகவிஞன் பாரதி, புதிய சுதந்திரப் போர்ப் படையைப் படைத்திட்ட கவித்தளபதி என்றால் அது மிகையாகாது. பெரும் கவிப்பரம்பரையையே படைத்திட்ட படைப்பாளி என்பதே உண்மை. உன்னதமான சிந்தனையாளன். பாரதியின் பாடல்களால் விழிப்புணர்வு பெறுவோர் எண்ணிக்கை இன்றும் குறைந்தபாடில்லை என்பதே நிதர்சனம்! வாழ்க பாரதி புகழ்!

    Share
  • வீழ்ச்சியை மாற்றி எழுச்சியுறும் திறனாளிகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளையோ, அல்லது இடையில் விபத்தினால் ஏற்படும் குறைபாடுகளையோ எண்ணிக்கொண்டு காலம் முழுவதும் முடங்கிக் கிடப்பவரின் எண்ணிக்கை இன்று கனிசமாகக் குறைந்துவிட்டது என்பதே உண்மை. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 மில்லியன் மக்கள் மாற்றுத் திறனாளிகளாக இருப்பதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. பத்தில் ஒரு குழந்தையோ அல்லது மொத்த குழந்தைகள் மக்கள் தொகையில் 3% குழந்தைகளோ மாற்றுத் திறனாளிகளாக இருக்கிறார்கள். இதில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாகவும், வேலையில் இருப்பவர்களாகவும் இருக்கின்றனர். அரசு நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக குறிப்பிட்ட அளவு வேலை வாய்ப்புகள் ஒதுக்கீடு இருப்பது போல தனியார் நிறுவனங்களும் அதை கட்டாயமாகக் கடைபிடித்தால் இந்தப் பிரச்சனை பெருமளவில் தீர்க்கப்பட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றப்படும். மாற்றுத் திறனாளிகளின் நிலை மாறி வர வேண்டும் என்பதற்காக நம் அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டியே ஆக வேண்டும். வேலை வாய்ப்புகள், பேருந்து, தொடர் வண்டிகளில் அவர்களுக்காக தனிப்பட்ட இட ஒதுக்கீடும், முன்னுரிமையும் அளிப்பது பாராட்டிற்குரியது. ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் சிறப்பு மாதாந்திர நிதியுதவியை ரூ. 500-லிருந்து ரூ.1,000-ம் ஆக உயர்த்தவும். மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் தனி பல்கலைக்கழகம் நிறுவுவது, தொழில் வரி, சொத்து வரியில் விதிவிலக்கு அளிப்பது போன்ற சில முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, இவர்களுடைய போராட்டங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளதும் வேதனைக்குரிய விசயம். இன்று பொது கழிப்பிடங்கள், பொது அரசு கட்டிடங்கள், மற்றும் சில தனியார் நிறுவனங்கள் போன்றவைகள் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட கட்டிட அமைப்பை மாற்றி வருவதும் வரவேற்பிற்குரிய செயலாகும். நம் சக மனிதர்களை ஏதோ ஒரு சில குறைபாடுகளுக்காக அவர்கள் மீது தேவையற்ற பரிதாபத்தையோ அல்லது புறக்கணிப்பையோ செய்து அவர்களை ஒதுக்குவதைவிட, அவர்களும் நம்மில் ஒருவர் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்து, அவர்கள் முன்னேற அவரவர்களால் முடிந்த உதவியை மனமுவந்து செய்வதே மனிதாபிமானமாகும். பெரும்பாலும் கிராமப் புறங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான எந்த ஒரு தனிப்பட்ட வசதி வாய்ப்பும் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்பதே நம் இந்தியாவின் இன்றைய நிலை.

    மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவரிடமும், ஏதோ ஒரு தனித்திறன் மறைந்திருப்பது கண்கூடு. கண் பார்வையற்ற பலர் மிக இனிமையான குரல் வளம் உடையவர்களாக இருக்கக் காண்கிறோம். பெத்தோவன் (Ludwig Van Beethoven) தன் 32 வயதில் அரைகுறை காது கேட்காதவராக இருந்த இவர், தன்னுடைய 46ஆவது வயதில் முழுவதுமாக காது கேட்காத நிலையை அடைந்தும், சங்கீதத்தில் அவர் படைத்த இசைக் காவியங்கள் அனைத்தும், தம் 46ஆவது வயதிற்குப் பிறகு இவர் படைத்தவையே. உலகம் போற்றும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், வின்செண்ட் வேன்கோவ், சர்.ஐசக் நியூட்டன், நெப்போலியன், அகதா கிரிஸ்டி, ஸ்டீபன் ஹாகிங், அலெக்ஸாண்டர், சார்லஸ் டிக்கன்ஸ், ஜூலியஸ் சீசர், அரிஸ்டாட்டில் போன்ற பல மேதைகள் ஏதோ ஒரு பாதிப்புடன் போராடிக்கொண்டுதான் சாதனை படைத்துள்ளார்கள் என்பது நம் வரலாறு சொல்லும் உண்மை. இப்படி ஊனத்தை வென்று சாதனைப் படைத்தவர் பட்டியல் மிக, மிக  நீளம்.

    இன்றும், குண்டு எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும், போலியோவினால் பாதிக்கப்பட்ட காலுடன் இருக்கும் விருதுநகர் ஜெயக்கொடியும், ஒரு விபத்தில் வலது கால் துண்டானபோதும், சாதனை படைக்க வேண்டும் என்ற வெறியுடன், இமயமலையின், எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உலக சாதனை புரிந்துள்ள, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த அருணிமா சின்கா, தர்மபுரியைச் சேர்ந்த இரு கைகளையும் இழந்தும், தம் தன்னம்பிக்கையை இழக்காமல், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் நான்கு பதக்கங்களையும், இந்திய அளவில் தனி நபர் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை புரிந்துள்ள வெங்கடேசன் என்று இவர்களைப் போன்ற பலர் முன்னுதாரணங்களாக வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஊக்கமும், உற்சாகமும், மற்றும் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்து செயல்படுவதும்தான் சரியான செயலாக இருக்குமேயன்றி, இவர்கள் மீது தேவையில்லாமல் காட்டப்படும் பரிதாப உணர்ச்சியும், இரக்கமும் அல்ல. ஊனம் ஒரு பலவீனம் இல்லை. அதையும் தாண்டி மனிதன் வெளிபடுத்தக் கூடிய ஆற்றல் பல இருக்கிறது என்பதை உணராதவர்கள் இல்லை. ஊனமில்லாதவர்களுக்கு ஒரு திறன் இருந்தால் ஊனமுற்றவர்களுக்கு வேறு ஒரு மாற்றுத் திறன் இருப்பதாலேயே இவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கிறோம்.

    –

    Share
  • மாறி வரும் சமுதாயத்தில் பொருளாதார மாற்றங்கள்

    பவள சங்கரி

    தலையங்கம்

    நம்முடைய பொருளாதாரத்தை பெரிதாகப் பாதிப்பு ஏற்படுத்துவதில் முக்கியமானது அந்நிய முதலீடுகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள். அந்நிய முதலீடுகள், ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலும் முதலீட்டாளர்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே, ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னாட்களில் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வல்லுநர்களின் எச்சரிக்கையையும் மீறி முதலீடுகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ரூபாயின் மதிப்பை ஏற்றுவதும் , இறக்குவதும் அந்த முதலீட்டாளர்களின் கையில் போய்விடுகிறது. இதைத் தடுப்பதற்கு நமது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் போன்ற அனைத்துப் பொருள்களும் இன்று விலையுயர்ந்து இருப்பதால், பணவீக்கமும் அதிகரித்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக, நமது நாட்டில் 40 சதவீதத்துக்கும் மேல் உள்ள நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்கள் தங்களது வருமானத்திற்குள் அத்தியாவசிய செலவுகளுக்காகக்கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதால், நுகர்வோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பிற்கு ஈடாக அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று ரூபாய் 62.57 ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    பெட்ரோலியப் பொருட்கள் உபயோகிப்பதை இதுவரை வரைமுறைப்படுத்தப்படவில்லை. ஒரு ஆண்டிற்கு மிகச் சாதாரணமாக குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஊர்திகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பை அதிகம் கரைப்பது இந்த பெட்ரோலியப் பொருட்கள்தான் அல்லவா? வாகன உபயோகிப்பின் பெருக்கத்திற்கு ஏற்ப மாற்று பெட்ரோலியப் பொருட்களை உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டியது தற்போதைய அவசரத் தேவை. இயற்கை எரிவாயுவின் விலை பெட்ரோலைவிட பாதிக்குப் பாதி குறைகிறது. பிரச்சனை இல்லாத வகையில் அந்த இயற்கை எரிவாயுவை உபயோகிப்பதற்கு அதிகமாக ஊக்குவிக்க வேண்டியது அவசியம். நம் இந்தியாவில் கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவையும் கூட சரியான முறையில் பயன்படுத்தாமல் இருக்கிறோம் நாம். பெட்ரோல் எரிவாயு நகர்ப்புறம் அல்லாத பல இடங்களில் கிடைப்பதில்லை. முதலில் அனைத்துப் பெட்ரோலிய நிலையங்களிலும் இந்த பெட்ரோலிய எரிவாயு கிடைப்பதை நடைமுறைப்படுத்த வேண்டியதும் அவசியம். இரண்டாவதாக 1000 சி.சி வரை உல்லாச உந்துகளிலும், இரு சக்கர வாகனங்களில் 125 சிசி வரையிலும் இந்த பெட்ரோலிய வாயு உபயோகிப்பதை ஊக்கப்படுத்தலாம். வாகன தயாரிப்புகளிலும் இதை நடைமுறைப்படுத்துவது நலம். இதற்கான ஆய்வரங்கங்களை அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். அந்த ஆய்வரங்கங்கள் பெட்ரோலிய எரிவாயுவை உபயோகப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், அதன் பலனும் முழுமையாக மக்களை சென்று அடையும். இந்த இரு விசயங்களிலும் நம் நிதியமைச்சகமும், பெட்ரோலிய அமைச்சகமும் இணைந்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் உபயோகிப்பாளருக்கும் அரசாங்கத்திற்கும் மிக மிக பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    Share
  • உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்த சாதனை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    INDIA-SCIENCE-SPACE

    நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ரூ. 450 கோடி செலவில் தயாரித்துள்ள மங்கள்யான் செயற்கைக் கோள், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சென்ற 3ம் தேதி (நவம்பர், 2013) காலை 6.08 மணிக்கு இதற்கான கவுண்டவுன் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தை நெருங்க இந்த செயற்கைக் கோள் 78 கோடி கி.மீ தூரம், அதாவது 15 மாதங்கள் வினாடிக்கு 137 கி.மீ வேகத்தில் பயணம் செய்கிறது. சென்ற செவ்வாய்க்கிழமை, 5-11-2013 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு ,விண்வெளி ஆராய்ச்சியின் பெரும் சாதனையாக அனைத்துலக நாடுகளும் கருதும் இப்பயணம் , ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவு தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. 25 ராக்கெட் மூலம் கிளம்பியுள்ளது. இது பதினேழாயிரத்து நானூற்றி பதினைந்து கிலோமீட்டரை 44 நிமிடங்களில் கடந்து, பூமியின் நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும். சந்திராயன் 1 திட்டத்தின் மூலம், சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை ஏற்கனவே இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழுவதற்குத் தேவையான தண்ணீர் மற்றும் மீத்தேன் என்ற இராசயணப் பொருள் உள்ளதா மற்றும் அதற்கான தட்பவெப்ப நிலை சரியாக உள்ளதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்வதே இந்த மங்கள்யான் விண்கலத்தின் முக்கியப் பணி. பூமியைச் சுற்றி வலம் வரும் வகையில் மங்கள்யான் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு பின், செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்குள் சென்று, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அங்கிருந்தபடியே அதன் மேற்பரப்பு முழுவதையும் உளவு பார்த்து தகவல்களை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருக்கும். 300 நாட்கள் இப்பயணம் தொடர்ந்து, 2014 செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கிரகத்திற்கான சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை ஏவியிருக்கும், ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் பட்டியலில் இன்று நம் இந்தியாவும் சேர்ந்திருப்பதும் ஆசியாவிலேயே முதல் நாடு என்ற வகையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருப்பதும் ஒரு இந்தியராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விசயம். எந்த நாட்டின் உதவியும் இன்றி, முற்றிலும் நம் தொழில்நுட்பத்தைக்கொண்டே இவ்வரிய சாதனையை விஞ்ஞானி, கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான நம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் செய்திருக்கிறது. இவ்வரிய சாதனையில், அல்லும், பகலும் அயராது உழைத்து வெற்றி கண்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் நம் வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்! இதுவரை 19 விண்கலன்கள் நம் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    INDIA-SCIENCE-SPACE

    நம் தமிழ் நாட்டின், நெல்லை மாவட்டத்தின், நாங்குனேரி வட்டம், கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு. சுப்பையா அருணன் மங்கள்யான் செயற்கைகோளின் திட்ட இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் . கோவையில் பி.இ, இயந்திர பொறியியல் வல்லுநர் பட்டம் பெற்ற இவர், 1984ம் ஆண்டு இஸ்ரோ மையத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது பெங்களூருவில் பணியாற்றுகிறார். இவருடைய தந்தை சுப்பையா அவர்கள் கூடங்குளம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரால் நம் தமிழகமே இன்று பெருமை கொள்கிறது. அவருக்கு வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்.

    நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி – 1 ஏவுகணையும் இன்று காலை வெற்றிகரமாக சோதித்துப்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதத்தைச் சுமந்து சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை ஒடிஷா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியான பாலாசோர் அருகேயுள்ள வீலர் தீவில் காலை 9.30 மணியளவில், வங்கக் கடலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று அதன் இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதற்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்!

    படங்களுக்கு நன்றி :

    http://news.sky.com/story/1164028/india-mars-probe-mangalyaan-blasts-off

    Share
  • கோல்கேட்டும் மறக்கப்பட்ட இதர ஊழல்களும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டுக்காக தற்போது சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலக்கரித் துறையின் முன்னாள் செயலர் பி.சி. பரேக் ஆகியோரினால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலக்கரித்துறை செயலாளரோ தனக்கு எந்த அளவிற்கு இதில் பொறுப்பு உள்ளதோ அதே அளவிற்கு பிரதமருக்கும் பொறுப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். பிர்லா அவர்களோ நான் நிதியமைச்சரை சந்தித்துவிட்டேன், எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார். எப்பவும் போல நமது பிரதமர் மௌனமாக இருந்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

    அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே பங்குகொள்ளத் தகுதி பெற்றவையான, ஒடிஸா மாநிலத்தின் தலபிரா நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில், தனியார் நிறுவனமான ஹிண்டாலும் ஒதுக்கீட்டு விண்ணப்பம் பெற்று சேர்க்கப்படுகிறது. அன்றைய செயலர் பி.சி. பரேக், நெய்வேலி நிலக்கரி கழகம் மற்றும் ஹிண்டால் நிறுவனம் என இரண்டும் சேர்ந்து அந்த நிலக்கரிச் சுரங்க வயலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் , பிரதமருக்குத் தெரிந்தே அரசின் கருத்துருவை தயாரித்ததாக பரேக் கூறுகிறார். இப்படி ஒரு மாற்றம் செய்ய வேண்டுமானல் அதனை அரசாணையில் குறிப்பிட வேண்டாமா?
    மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், அரசிதழில் வெளியிட்டு அதற்குப் பிறகு விண்ணப்பங்கள் பெற்றுத்தான் ஒதுக்கீடு செய்தார்களா என்பதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    மற்ற தொழிலதிபர்கள் பிர்லாவின் பக்கம் இருந்து கொண்டு இப்படியிருந்தால் நாங்கள் எப்படி முதலீடு செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இதுபோல் அம்பானியால் இயற்கை எரிவாய்வு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி சில நாட்கள் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் பரபரப்பாக பேசின. இன்று அதனுடைய நிலை பற்றி ஒரு செய்தியும் தெளிவாக இல்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு கிணறுகளிலிருந்து சிலவற்றை மட்டும் தயாரித்துவிட்டு மற்றவைகளிலிருந்து எரிவாயு எடுப்பதில்லை. இதனால் உற்பத்தி இழப்பால் பல லட்சம் கோடி நட்டம் ஏற்படுகிறது. இதைத்தவிர அவர் உற்பத்தி செய்வதற்காக வழங்கக்கூடிய விலையும் மிக அதிகமாக உள்ளது. பெட்ரோலியத் துறை இதற்கான எந்த விதமான சரியான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

    சில நாட்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய நிலை என்ன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. உறுதியான நேர்மையான தலைமை இல்லாததே இதற்கெல்லாம் காரணம். இனிமேலும் நேர்மையான ஆட்சியாக இல்லாவிட்டால் இது போன்று பல லட்சம் கோடிகள் போய், கோடி, கோடிகள் நட்டம் ஏற்பட்டு அரசு திவாலாகிவிடும் அபாயம் ஏற்படும். திறமையற்ற நிர்வாகமும் ஏமாறும் மக்களும் இருக்கும் வரை இந்த இந்திய ஜனநாயகம் பிழைக்கும். பிர்லாக்களும், அம்பானிகளும் வாழ்வார்கள். ஆனால் மக்கள் மட்டும் ஏழைகளாகவே இருப்பார்கள்.

    ஜெய்ஹிந்த்!

    Share