கோல்கேட்டும் மறக்கப்பட்ட இதர ஊழல்களும்
பவள சங்கரி
தலையங்கம்
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டுக்காக தற்போது சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலக்கரித் துறையின் முன்னாள் செயலர் பி.சி. பரேக் ஆகியோரினால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலக்கரித்துறை செயலாளரோ தனக்கு எந்த அளவிற்கு இதில் பொறுப்பு உள்ளதோ அதே அளவிற்கு பிரதமருக்கும் பொறுப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். பிர்லா அவர்களோ நான் நிதியமைச்சரை சந்தித்துவிட்டேன், எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார். எப்பவும் போல நமது பிரதமர் மௌனமாக இருந்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்.
அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே பங்குகொள்ளத் தகுதி பெற்றவையான, ஒடிஸா மாநிலத்தின் தலபிரா நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில், தனியார் நிறுவனமான ஹிண்டாலும் ஒதுக்கீட்டு விண்ணப்பம் பெற்று சேர்க்கப்படுகிறது. அன்றைய செயலர் பி.சி. பரேக், நெய்வேலி நிலக்கரி கழகம் மற்றும் ஹிண்டால் நிறுவனம் என இரண்டும் சேர்ந்து அந்த நிலக்கரிச் சுரங்க வயலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் , பிரதமருக்குத் தெரிந்தே அரசின் கருத்துருவை தயாரித்ததாக பரேக் கூறுகிறார். இப்படி ஒரு மாற்றம் செய்ய வேண்டுமானல் அதனை அரசாணையில் குறிப்பிட வேண்டாமா?
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், அரசிதழில் வெளியிட்டு அதற்குப் பிறகு விண்ணப்பங்கள் பெற்றுத்தான் ஒதுக்கீடு செய்தார்களா என்பதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மற்ற தொழிலதிபர்கள் பிர்லாவின் பக்கம் இருந்து கொண்டு இப்படியிருந்தால் நாங்கள் எப்படி முதலீடு செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இதுபோல் அம்பானியால் இயற்கை எரிவாய்வு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி சில நாட்கள் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் பரபரப்பாக பேசின. இன்று அதனுடைய நிலை பற்றி ஒரு செய்தியும் தெளிவாக இல்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு கிணறுகளிலிருந்து சிலவற்றை மட்டும் தயாரித்துவிட்டு மற்றவைகளிலிருந்து எரிவாயு எடுப்பதில்லை. இதனால் உற்பத்தி இழப்பால் பல லட்சம் கோடி நட்டம் ஏற்படுகிறது. இதைத்தவிர அவர் உற்பத்தி செய்வதற்காக வழங்கக்கூடிய விலையும் மிக அதிகமாக உள்ளது. பெட்ரோலியத் துறை இதற்கான எந்த விதமான சரியான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய நிலை என்ன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. உறுதியான நேர்மையான தலைமை இல்லாததே இதற்கெல்லாம் காரணம். இனிமேலும் நேர்மையான ஆட்சியாக இல்லாவிட்டால் இது போன்று பல லட்சம் கோடிகள் போய், கோடி, கோடிகள் நட்டம் ஏற்பட்டு அரசு திவாலாகிவிடும் அபாயம் ஏற்படும். திறமையற்ற நிர்வாகமும் ஏமாறும் மக்களும் இருக்கும் வரை இந்த இந்திய ஜனநாயகம் பிழைக்கும். பிர்லாக்களும், அம்பானிகளும் வாழ்வார்கள். ஆனால் மக்கள் மட்டும் ஏழைகளாகவே இருப்பார்கள்.
ஜெய்ஹிந்த்!
இந்திய அரசியல் சட்டத்தின்படி இங்கு மக்கள் அனைவருக்கும் சட்டம் பொதுவானது, அரசனோ ஆண்டியோ செய்யும் குற்றத்துக்கு அவ்விருவருக்கும் ஒரே தண்டனை என்றெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள். ஒரு சாமானியன் குற்றச்சாட்டுக்கு ஆளான பின் அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சரை சென்று சந்திக்க முடியுமா? அந்த குற்றச்சாட்டு பற்றி விவாதிக்க முடியுமா? ஆனால் இங்கு முடியும். உயர் பதவி வகிப்போர் இதுபோன்ற விஷயங்களில் தலையிட முடியுமா, தலையிடலாமா? நம் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. சட்டமும், நியாயமும் ஒருவருக்கொருவர் மாறுபடுமானால் அரசியல் சட்டம்தான் எதற்கு?