சமூக நீதியும், மருத்துவமும்!

2

பவள சங்கரி

தலையங்கம்

மூதறிஞர் ராஜாஜி அவர்களின் குலக்கல்வித் திட்டத்தினால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் தாங்கள் இருக்கும் அதே நிலையில் நிரந்தரமாக, இருந்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்றும், அவர்களும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே, அதனை எதிர்த்து ஒரு தந்தை பெரியாரும், ஒரு பேரறிஞர் அண்ணாத்துரை போன்றவர்களும் போராடிக் கொண்டுவந்த இந்த சமூக நீதியால் மட்டுமே பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட , மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயமும், மலைவாழ் மக்களும், இன்று நம்முடைய தமிழகத்தில் தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. இல்லாவிட்டால் நம்முடைய தமிழகமும், இன்று பீகாரைப் போலவோ, உத்திரப் பிரதேசம் போலவோ அல்லது மத்தியப் பிரதேசம் போலவோ அல்லவா இருந்திருக்கும்.. ஒரு குழந்தை ஏணியில் ஏறுவதற்கு நான்கு படிகள் வழி காட்டினால் போதும் . ஒவ்வொரு முறையும் ஏணி முழுவதும் ஏற்றிவிட வேண்டியதில்லை. அந்தக் குழந்தையும்கூட அதை விரும்பாது. ஒரு எல்லைக்கப்பால் கையைத் தட்டிவிட்டு, சுயமாக நின்று தன் வல்லமையை நிரூபிக்கவே விரும்பும். ஒரு மாணவர் தடையற கல்வி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்த சமூக நீதியைக் கொண்டு வர வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கலாம். அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு உயர்ந்த நிலைக்கு வர வேண்டியது அந்த மாணவனின் கடமையல்லவா? பதவி உயர்வு என்று வரும் வேளைகளிலேனும் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் சில சலுகைகளை வழங்குவதில் பிரச்சனை எழாமல் இருக்கலாம். ஆனால் தன் வல்லமையை நிரூபித்து சில முக்கியமான பொறுப்புகளைப் பெற வேண்டிய தருணத்தில் இது போன்று இலவசமாக வரும் பதவிகள் பயன் தராது. திறமையற்றவர்கள், இது போன்ற வாய்ப்புகளின் மூலம் முக்கியமான பொறுப்புகளில் போட்டியிடும்போது, திறமையுள்ள ஒருவரின் சேவையை இழக்க வேண்டி வரும் என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. இதனால் நம் நாட்டின் முன்னேற்றப் பாதையில் தொய்வு ஏற்படவும் வாய்ப்பு உண்டாகலாம். சமீப காலங்களில் மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும் பெரும்பாலான மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றே கல்லூரியில் நுழைகிறார்கள். இன்று அரசு அறிவித்திருக்கக்கூடிய மருத்துவத் துறையின் பணியிடங்களை நிரப்பும் ஆணை தவிர்க்க முடியாததொன்று. உயிர் காக்கும் உயரிய பொறுப்புகளுக்கும், இந்த சமூக நீதி என்ற ஒரு கருத்தை முன்வைப்பது உடன்பாடானது அல்ல. திறமை இருப்பவர்களுக்கு மட்டுமே அந்தந்தப் பொறுப்புகள் வழங்கப்படுதல் முறையாகும். அவசரமாக மருத்துவம் பார்க்க வேண்டிய நேரத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றெல்லாம் பார்த்துக்கொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட முடியாது. திறமை இருப்பவர்களிடம் மட்டுமே நம்பி அந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியும் என்பதே யதார்த்தம். மருத்துவர்களுக்காகவும், மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்களுக்காகவும் அரசு நிர்ணயித்துள்ள ஊதியங்களைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை சிகிச்சைக்காக தனியார் மருத்துவரிடம் செல்லும் போது நாம் கொடுக்கும் கட்டணம் எவ்வளவு அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்களுக்கான ஊதியங்கள் நிர்ணயிக்கப்படுமேயானால் தங்களுடைய அதிகப்படியான வருமானத்திற்காக அவர்கள் பகுதி நேர மருத்துவமனையை நாட வேண்டிய கட்டாயம் இருக்காது. ஆகவே இதைத் தவிர்த்து மக்கள் உயிர் காக்கும் பொறுப்புகளில் வர இருப்பவர்களுக்கு ஒரு நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். எந்தத் துறையாக இருந்தாலும், குறிப்பாக மருத்துவத் துறையில் ஆண், பெண் தாழ்ந்தவன், உயர்ந்தவன், பிற்படுத்தப்பட்டவன் என்ற பாகுபாடுகளைக் களைந்து திறமை உள்ளவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அத்துறையின் முன்னேற்றத்திற்கு வழிகோலுவதாக அமையும்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சமூக நீதியும், மருத்துவமும்!

  1. //மூதறிஞர் ராஜாஜி அவர்களின் குலக்கல்வித் திட்டத்தினால்,//

    you should read lot of articles before conclude anything. Jeyamohan site you can find lot of into and he proved that this is wrong news speeded by DMK. don’t spread wrong news

  2. ஒரு துறையில் ஏற்படும் இழப்பைப்பற்றி பேசும் நீங்கள் ஒருசமூகத்துக்கு ஏற்பட்ட பலமான அநீதியை யோசிக்க தயங்குகிறீர்கள் . வகுப்புவாரி வரலாற்றை அருள்கூர்ந்து திரும்பிப்பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.இடொதுக்கீட்டு முறையை விரும்பவில்லையெனினும் இந்த்தேசத்தின் பெருந்தலைவர் எவரும் வெளிப்படையாக எதிப்பதில்லை.என்பதை கவனிக்கவேண்டும்.
    வில்லவன்கோதை
    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *