மக்கள் கேட்கும் கேள்விகள் (2)
பவள சங்கரி
தலையங்கம்
உயர்திரு மோதி மற்றும் உயர்திரு ராகுல் காந்தி அவர்களே,
எவ்வளவு உயரிய பதவிகளில் இருந்தாலும் அவர்கள் தவறு செய்யும் போது பொது மக்கள் தட்டிக் கேட்கக் கூடிய லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்த ஆளும் கட்சியும் , அதற்கு ஆதரவு தெரிவித்து உறுதுணையாக இருந்த எதிர்கட்சிகளும் இன்று போட்டி போட்டுக்கொண்டு ஊழல் அரசியல்வாதிகளையே தங்களுடைய கட்சி வேட்பாளர்களாக அறிவித்துள்ளீர்களே இது சரியா. உங்கள் பதில் என்ன?
திரு மோதி அவர்களே,
நேற்றைய உங்கள் விளம்பரம் ஆச்சரியப்படுத்தியது. “டாலர் கொடுத்தாலும் வாங்க மாட்டேன், ரூபாயாகக் கொடுத்தாலும் வாங்க மாட்டேன். நியாயமாகத்தான் நடந்து கொள்ளுவேன், ஆகவே எனக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று எடியூரப்பாவையும், ஸ்ரீராமுலு அவர்களையும் தங்களுடைய கட்சி வேட்பாளராக அறிவித்துவிட்டு எவ்வாறு நீங்கள் சொன்ன வகையில் செயல்படப்போகிறீர்கள்?
வாக்களிப்போம்!
ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!
விலை போகாமல் வாக்களிப்போம்!!!

அரசியல் தலைவர்களுக்குச் சரியான கேள்விகள்தான். ஆனால் மகாத்மா காந்தி காலத்து அரசியல் வாதிகள் இன்று நிலைத்து நிற்க முடியாது. கொள்கையால் நேர்மையாளனாக இருந்தாலும், சுற்றியிருக்கும் சூழ்நிலை அரசியல் வாதிகளை நேர்மையாக நடந்து கொள்ள அனுமதிக்காது. அடியாள் இல்லாத அரசியல்வாதி உண்டா? கோடி கோடியாய் கருப்புப் பணமில்லாமல் எவராவது இன்று தேர்தலில் நிற்க முடியுமா? சத்தியசந்தனாக இருக்க மனமிருந்தாலும் “அரசியல்” எனும் சேற்றில் கால் வைத்துவிட்டால் யாரும் சத்தியசந்தனாக இருக்க முடியாது என்பதே யதார்த்தம். ஆகையால் இன்றைய நிலையில் இருப்பவருள் யார் யோக்கியன் என்றால், கூரையின் மேல் கொள்ளி வைப்பவனே நேர்மையாளன் என்றுதான் சொல்ல முடியும். ராஜாஜியோ, காமராஜரோ இன்று இருந்தால் கூட பணம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. ஒரேயொரு நிகழ்ச்சி! சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்று தியாகங்கள் புரிந்தவர் ஒருவர், பெயர் ஜமதக்னி நாயக்கர். சிறையில் காரல் மார்க்சின் மூலதனம் நூலை தமிழாக்கியவர். 1952இல் காங்கிரஸ் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. அவர் முதல் பொதுத் தேர்தலில் சுயேச்சையாக நின்றார், டெபாசிட் இழந்தார். அதுகூட முக்கியமல்ல. அவரை எதிர்த்து நின்றவர் காலமெல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்காரர், அவர் வென்றார், துணை சபாநாயகர் ஆனார். அதே போல காரைக்குடியில் தியாகம் செய்து சட்டைகூட போடாமல் இருப்பேன் என்று சபதம் செய்த கம்பன் அடிப்பொடி சா.கணேசனுக்கு காங்கிரசில் வாய்ப்பு அளிக்கவில்லை. காங்கிரஸை எதிர்த்த செட்டிநாட்டு ராஜா குடும்பத்துக்குக் கொடுத்தனர். கேட்டால் இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்பார்கள்.
நாம் எத்தனையோ சட்டங்கள் கொண்டு வருகிறோம். அவைகளெல்லாம் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? இல்லையே. அவைகளெல்லாம் அரசாணைகளில் மட்டும் உயிர் வாழ்ந்துகொண்டிருப்பதில்லையா? அதுபோலத்தான் இந்த லோக்பால் மசோதாவும். இது வெறும் சட்டம் மட்டுமே. மேஜிக் நம்பர் என்று சொல்லக்கூடிய 272 ஐ அடைய வேண்டியதற்காக நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். கொள்ளையரைக்கூட தேர்தல் களத்தில் நிறுத்துவோம். கவர்ச்சி நடிகைகளையும் நிறுத்துவோம். நாம் ஓட்டுப் போட்டேத்தீர வேண்டும். தேர்தல் முடிந்து வெற்றி பெற்றாலும் அவர்கள் தவறுகள் செய்வார்கள். ஏனென்றால் இது ஜனநாயகம்.