Category: தலையங்கம்

தலையங்கம்

  • நதிநீர்ப்பங்கீடு ஒன்றியங்களுக்கு ஆக்கப்பூர்வமான மாற்று

    பவள சங்கரி

    தலையங்கம்

    அரசு ஆணைப்படி தற்போது உள்ள தனித்தனி நதிநீர் பங்கீடுகளுக்குரிய ஆணையங்களைக் கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக நிரந்தர நதிநீர் பங்கீடு ஒன்றியத்தை நடுவண் அரசு அறிவித்துள்ளது. இதன்படி நதிநீர் சம்பந்தப்பட்ட அனைத்து பங்கீட்டு ஆணையங்களும் இனி செல்லத்தக்கதல்ல. மத்திய அமைச்சர் குழு அங்கீகரித்துள்ள இந்த அரசாணை, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுப் பின் சட்டமாகும். ஆயினும், இது பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது, காலந்தாழ்த்துகிற செயலாகவே இருக்கும் என்றும் பல வல்லுநர்கள் கருதுகின்றனர். நடைமுறைக்கேற்றதொரு சிறந்த செயல்பாடாகவே இதனைக் கருதுவதற்குத் தக்கவாறு இந்த நிரந்தர நீர்த்தீப்பாணையம், தேர்தல் ஆணையம், மத்திய ரிசர்வ் வங்கி, உச்சநீதி மன்றம் போன்று சுய தன்னதிகாரம் கொண்டதாக இருப்பது நலம். அப்படி இருக்கும்பட்சத்தில் இதன் செயல்பாடுகள் மற்றெந்த குறுக்கீடுகளுமின்றி சிறப்பாகச் செயல்பட வழிவகுக்கும் . மேலும் சில மாற்றங்கள் கொண்டுவருவதாகவும் அரசுக்குறிப்பீட்டில் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் இந்த நிரந்தர நீர்த்தீர்ப்பாணையம் தன்னாட்சிக் கொண்டதாக அறிவித்தால் வரவேற்கத்தக்கதாக அமையும். ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டவைகளை இது கட்டுப்படுத்தாமல் இருப்பது நலம். உதாரணமாக காவேரி நதிநீர் பங்கீட்டிற்காக கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கும் இடையேயான நதிநீர் பங்கீடு பற்றி அளித்த தீர்ப்பின் படியும், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படியும், காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் உடனடியாக அமைகப்படவேண்டும். இல்லையென்றால் இந்த நிலை வருவதற்கே இன்னும் பத்தாண்டுகள் ஆகிவிடக்கூடும். ஆகவே புதிய பிரச்சனைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் வகையில் நடுவண் அரசு இதை மேற்கொண்டால் இந்த ஆணையம் அனைவராலும் வரவேற்கத்தக்க வகையில் அமையும் வாய்ப்பு அதிகமாகலாம். பழைய தீர்ப்புகளை இது கட்டுப்படுத்தாது என்ற தெளிவான முன் வரைவு மசோதாக்களில் அரசு தாக்கல் செய்தால் நலம் பயக்கும் என்று விவசாயப் பெருங்குடி மக்கள் வானையும், நடுவண் அரசையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

    Share
  • அரசின் அதிரடியும், மக்களின் சிரமங்களும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    கருப்புப்பணத்தை வெளியில் கொண்டுவரும் நடவடிக்கையாக உயர் மதிப்புடைய உரூபாய் நோட்டுகள் 1000, 500, செல்லாது என அரசு அறிவித்து 38 நாட்கள் ஆன நிலையில், 500, 1000 உரூபாய் நோட்டுகள் உபயோகத்திற்குரிய கடைசி நாள் இன்று. அரசின் எந்தவொரு திட்டமும், அது எத்தகையதாயினும் மக்களின் முழுமையான ஆதரவில்லையென்றால் அது வெற்றியடைவதில் சாத்தியமில்லை. ஆயிரம் உரூபாய் நோட்டுகள் முற்றிலுமாக புழக்கத்தில் வருவதில்லை என்றாலும் ₹500 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. வங்கிகளின் அறிவிப்பின்படி இதுவரை ₹ 12.5 இலட்சம் கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டிருக்கிறது. ₹ 12.5 இலட்சம் கோடி புழக்கத்திலிருந்து நீக்கிய பிறகு அதே அளவுத் தொகையை அரசு இன்னும் புழக்கத்தில் விடவில்லை.

    மேலை நாடுகளில் உள்ளதுபோன்று பணம் இல்லாத பரிமாற்றங்களை அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் அன்றாட சிறு சிறு செலவுகளுக்குக்கூட வங்கி அட்டைகளைப் பயன்படுத்த முடியாது என்பது நம் இந்தியா போன்று பலதரப்பட்ட மக்களும், குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள பெரும்பாலான மக்கள் வாழும் நாட்டில் தவிர்க்க முடியாத நிலைப்பாடு ஆகும். பணப்பரிமாற்றத்திற்குப் பதிலாக வங்கி அட்டைகள் உபயோகப்படுத்துவதற்கு மக்கள் தானாகவே முன் வரக்கூடிய சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கோவையிலிருந்து சென்னைக்கு மகிழுந்தில் செல்லும் பயணச்செலவிற்கு வங்கி அட்டைகள் உபயோகப்படுத்தும்போது பரிவர்த்தனை கட்டணமாகவே சுமாராக ₹250 செலுத்தப்பட வேண்டியுள்ளது. இதுபோன்று அனைத்து விதமான அன்றாட செலவினங்களுக்கும் வங்கி அட்டையை உபயோகப்படுத்தினால் மாத இறுதியில் கணக்கு பார்க்கும்போது அதுவும் செலவுக் கணக்கில் கூடிவிடும். வங்கி அட்டையை பயன்படுத்துவோர் குறிப்பாக உயர் மத்திய வகுப்பினரும், மத்திய வகுப்பினருமே. அதாவது சுமாராக 60% மக்கள் மட்டுமே வங்கி அட்டையை சரளமாக பயன்படுத்தக் கூடியவர்கள். அரசு அறிவிப்பின்படி சேவை வரியை மட்டும் குறைப்பது பெரும் பயனளிக்காது. வங்கி அட்டையின் பரிமாற்றத்திற்குரிய கட்டணத்தை வெகுவாகக் குறைப்பதோ அல்லது கட்டணமில்லா சேவையை ஏற்படுத்துவதோ பயனளிக்கக் கூடும். ஒரு ஆயிரம் உரூபாயை வங்கி அட்டை மூலம் பயன்படுத்தும்போது அந்த நிறுவனங்களுக்கு சுமாராக 1 இலட்சம் உரூபாய் பெறப்படுவதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    ஒவ்வொரு பெரு நகரங்களிலும் அனைத்து வங்கி ஏடிஎம் களும் பணம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. ஸ்டேட் வங்கி ஏடிஎம் கள் மட்டும் செயல்படுகின்றன. அதுபோல ஸ்டேட் வங்கியில் மட்டும் அனைத்து நாட்களிலும் மக்களுக்கு சிறிய அளவேனும் பணம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கி வாசலிலும் நுற்றுக்கணக்கான மக்கள் பல மணி நேரம் இந்தத் தொகையைப் பெறுவதற்காக மழை, வெய்யில் பாராமல் காத்துக்கிடப்பது வேதனைக்குரிய விசயமாகும். இதைத் தவிர்க்க அனைத்து ஏடிஎம் களிலும் பணம் எடுக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தி அந்தப் பண அட்டைகளுக்கு பணம் எடுக்கக்கூடிய அளவையும் காலத்தையும் குறிப்பிட்டு பதிவு செய்துவிட்டால் இந்தப் பிரச்சனை குறையுமல்லவா. பொது மக்கள் வங்கியிலிருந்து பெற்ற ₹2000 நோட்டுகள் மறு சுழற்சிக்கே வந்துவிட்டன என்பதும் ஆறுதலான விசயம் . அனைத்து ஏடிஎம் களிலும் பணம் எடுக்கக்கூடிய சூழல் வந்துவிட்டால் வங்கிகளிலும், ஏடிஎம் களிலும் இருக்கக்கூடிய மிகப்பெரிய கூட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். இல்லாவிட்டால் அரசு மேலும் மக்களின் அதிருப்திக்கு உள்ளாவதோடு இத்திட்டத்தின் வெற்றியே கேள்விக்குறியாகிவிடும்.

    எந்த ஒரு திட்டமும் பிரதமராலோ, நிதி அமைச்சராலோ மட்டும் செயல்படுத்தப்படுவது இல்லை. வங்கிகளில் உள்ள உயர் அதிகாரிகள், அதிகாரிகள், ஊழியர்கள் போன்றோரால் செயல்படுத்தப்படுகிறது. இவர்கள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்பழுக்கற்றவர்களாக இருப்பதில்லை என்பதும் கண்கூடு. இவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கைகளும், அரசின் கடுமையான நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளுமே இன்றைய சூழலில் அத்தியாவசியமாகிறது.

    Share
  • 41% இந்துக்களுக்கு அடிப்படைக்கல்வி இல்லை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    உலகளவிலான அனைத்து மதங்களின் அடிப்படையில் கல்வி கற்றோரின் எண்ணிக்கையை பியூ ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான தகவலாக, உலகளவில் நம் இந்து மதமே அடிப்படைக் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. யூதர்களே கல்வியில் முதலாம் இடத்தில் உள்ளனர்.

    41% இந்துக்கள் அடிப்படை கல்வியே இல்லாமல் இருக்கின்றனர்.
    53% இந்துப்பெண்கள் / 29% இந்து ஆண்கள் சுத்தமாக கல்வி வாடையே இல்லாதவர்களாக உள்ளனர்!
    6.4 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெற்ற இந்து மதத்தின் ஆண்கள் மத்தியில் 4.2 ஆண்டுகள் மட்டுமே பெண்கள் அடிப்படைக் கல்வி பெறுகின்றனர்.
    இசுலாமியப்பெண்கள் 4.9 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெறுகின்றனர்.

    இதில் மேலும் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் சில பத்தாண்டுகளாக இந்துக்களின் அடிப்படைக் கல்வியில், 3.4 ஆண்டுகள் என்ற நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதினாலேயே இந்த முடிவாம். அப்படியானால் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்துக்களின் கல்வி நிலை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்தும் பார்க்க முடியவில்லை. இன்றும் இந்துக்களின் அடிப்படைக்கல்வியில் ஆண்/பெண் பாலியல் இடைவெளியால் பெண்களின் கல்வி நிலை மிகவும் பின் தங்கியே உள்ளதாகவே இந்த ஆய்வு தெரிவிக்கிறது .. 🙁

    நம் இந்தியர்களின் நிலைப்பாடு இன்று இரு வேறுபட்ட எல்லைகளைக் கடந்துகொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமாகிறது. வெளிநாடுகளில் உயர் பதவிகளில் நம் இந்தியர்கள் அதிகமாக சாதனை புரிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஒரு புறம் பெரும்பாலான இந்தியர்கள் அடிப்படைக் கல்வியே இல்லாமல் இருக்கின்றனர். கிராமங்களாலான நம் இந்திய நாட்டில் இன்றும் வடகிழக்கு மாநிலங்கள், பீகார், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசத்தின் பெரும் பகுதிகள், ஆந்திர, தெலுங்கானாவின் உட்பகுதிகள், கர்நாடகத்தின் வட பகுதிகள், தமிழ் நாட்டின், தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களின் உட்பகுதிகள், கொங்கு நாட்டின் தர்மபுரி, கிருட்டிணகிரி, அரூர், ஊத்தங்கரை, திருவண்ணாமலை போன்ற பகுதிகளும் மிகவும் பின் தங்கிய நிலையில், அடிப்படைக் கல்வி என்பதே கேள்விக்குறியாக உள்ளன. எல்லை மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு, காஷ்மீர் போன்ற மாநிலங்களின் அடிப்படைக் கல்வித் தகுதியை உயர்த்த வேண்டியதும் காலத்தின் கட்டாயம். பஞ்சாபிலும், ஜம்மு காஷ்மீரிலும் கல்வித்தரம் உயர உயர வன்முறையாளர்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள் வந்துவிடும் வாய்ப்புகளும் கூடும்.

    1991இல் அறிவொளி இயக்கம் என்ற ஒரு இயக்கம் தொடங்கப்பட்டபோது ஏழை, எளிய மாணவர்களை கல்வி நிலையம் கொண்டு சேர்ப்பதற்கு பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ச்சியாக தொடர்கல்வி இயக்கம், வளர்கல்வி இயக்கம், ஆரோக்கிய இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம், சிட்டுக்கள் மையம், துளிர் இல்லம் என இதன் செயல்பாடுகள் விரிவடைந்தன. இந்த அறிவொளி இயக்கம் சமீபத்தில் வெள்ளிவிழா ஆண்டும் (ஆகஸ்ட், 2016) கொண்டாடிவிட்டது. ஆனாலும் இது போன்ற இயக்கங்களின் செயல்பாடுகள் பரவலாக மக்களைச் சென்று அடையவில்லை. அறிவொளி இயக்கம், எழுத்தறிவு இயக்கம் போன்று பல இயக்கங்கள் உருவாக வேண்டும். இதுபோன்ற இயக்கங்களுக்கு பாரபட்சமின்றி மத்திய மாநில அரசுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சமூக நல ஆர்வலர்களும் பெருமளவில் பங்கு கொண்டு நம் இந்திய மக்கள் அனைவரும் அடிப்படைக் கல்வியும், தரமான கல்வியும் பெறும் வகையில் செயல்பட வேண்டும்.

    Share
  • மின்னஞ்சல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க அரசின் புதிய அறிவிப்புகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒன்றரை இலட்சம் கோடி வங்கிகளில் பணப்பரிமாற்றக் கட்டணங்களாக வசூலித்துவிட்டு, இந்தப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க கோடிக்கணக்காக பணம் பரிசளிப்பதாக அறிவிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இன்று அரசு மின்னஞ்சல் பணப்பரிமாற்றம் அதிக முறைகளில் பயன்படுத்துவோருக்கு கோடிக்கணக்கில் பணம் பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளனர். மின்னஞ்சல் பயன்படுத்துவோரை உற்சாகப்படுத்துவது நல்ல விசயம்தான் என்றாலும், வங்கிகளின் தேவையற்ற கட்டணங்களை விதிப்பது மூலம் பெரும்பாலானவர்களுக்கும் இது சுமைதான். பரிசு கிடைப்பதோ சிலருக்கு மட்டுமே..

    ₹3,300 பணப்பரிமாற்றம் செய்யும் ஒருவர் தன் வங்கிக்கு (இது ஸ்டேட் வங்கி கட்டண விகிதம் என்றாலும் ஏனைய அரசுடமை வங்கிகளின் கட்டணங்களிலும் பெரும் வேறுபாடு கிடையாது) ₹11.74 கட்டணமாகக் கட்டுகிறார். அந்தப் பணத்தைப் பெறக்கூடிய நபரும் தன் வங்கியில் அதே கட்டணமான ₹11.74 செலுத்தித்தான் அந்தப் பணத்தை பெறுகிறார். ஆக இருபுறமும் கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது. இது குறைவான தொகை என்றாலும் வருட இறுதியில் இலாப, நட்டக் கணக்குகளைப் பார்க்கும்போது மக்களுக்கு இது ஒரு பெருஞ்சுமையாகவே உணரப்படும். வங்கிகளுக்கோ மொத்தக்கணக்கில் பார்க்கும் பொழுது ஒவ்வொரு ஊரிலுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட வங்கிக்கும் தினசரி இலட்சக்கணக்கான உரூபாய்கள் வருமானமாகக் கிடைக்கின்றன. தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களும் இதில் அடங்கும். இப்படிப்பட்ட சூழலில் மக்கள் மின்னஞ்சல் பணப் பரிமாற்றத்தை எவ்வாறு வரவேற்க இயலும்?

    Share
  • பணமற்ற பரிவர்த்தனைகளா அல்லது பணமே இல்லாத ஏடிஎம்களா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    1000, 500 உரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு 30 நாட்களாகிவிட்டன. இன்னும் அனைத்து ஏடிஎம் களும் முறையாகச் செயல்படவில்லை. அனைத்து வங்கிகளிலும் புதிய 2000, 500, 100 உரூபாய் நோட்டுகளும், அவரவர் வங்கிக் கணக்கில் தொகை எவ்வளவு இருப்பினும் ரேசன் முறையில் மட்டுமே தரப்படுகிறது. சில வங்கிகளில் 20,000 உரூபாய், அல்லது 10,000 அல்லது 2000 மட்டுமே தரப்படுகிறது. இதற்கும் பல மணி நேரங்கள் வரிசையில் வங்கிக்கு வெளியே நிற்கவேண்டியுள்ளது. வங்கி வாசல்களில் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்திக்கொண்டு மிக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இதில் வருகிற சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை வேறு. ஏடிஎம்மிலும் பணம் கிடைக்காமல் மக்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிறது. பணமற்ற பரிவர்த்தனைத் திட்டம் இயல்பாகும் இடைக்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கவனம் கொள்ளவேண்டியது அவசியம். ஆண்டிற்கு சுமாராக 75 இலட்சம் கோடி பணமாகப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இவ்வளவு பெரியத்தொகை முழுவதும் பணமற்ற பரிவர்த்தனையாக மாறும்போது அதற்குரிய வங்கிகளுக்கோ அல்லது நிதி நிறுவனங்களுக்கோ (Paytm, geo finance, other wallets) கட்டணமாகச் செலுத்தவேண்டியத்தொகை ஒன்றரை இலட்சம் கோடி. மக்களின் இந்தச் சுமையைத்தான் அந்த நிறுவனங்கள் வருமானமாகப் பெறுகின்றன. அரசு சலுகைகள் மூலம் மக்களின் இதுபோன்ற சுமைகளைக் குறைக்கும்போது இது போன்ற நவீனத் திட்டங்களை ஏற்பதில் உள்ள சிக்கல்கள் பெருமளவில் குறையும் என்பதில் ஐயமில்லை. அன்றாடத் தேவைகளான வாகனங்களின் எரிபொருள் நிரப்புவதற்கும், சுங்கச் சாவடிகளில் பணப்பரிவர்த்தனை அட்டை பயன்படுத்துதற்கும், வங்கிகளிலும் மின்னஞ்சல் பணப்பரிமாற்றங்களுக்கும் வசூலிக்கப்படும் கட்டணம் பெருஞ்சுமையை ஏற்படுத்திவிடுகிறது. இந்தக் கட்டணங்களை முழுவதுமாக தள்ளுபடி செய்து கட்டணமில்லா பரிவர்த்தனையை அரசு ஊக்குவிக்க வேண்டியதும் அவசியமாகிறது. மேலும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளிளாவது (தலைமை வங்கியாகிய ஸ்டேட் வங்கி போன்றவை) தள்ளுபடியை ஊக்குவிக்கலாமே.

    உரூ 2000 புது நோட்டுகள் பெருந்தொகைகளாக கைப்பற்றப்படுகிறதே.. ஒரு சந்தேகம். இவையனைத்தும் புத்தம் புது நோட்டுகள்.. அதில் இருக்கும் சீரியல் எண்கள் குறிப்பிட்ட வங்கிகளுக்கு அனுப்பப்படும்போது நோட்டு எண்களை குறித்துக்கொண்டுதானே அனுப்புவார்கள். ஆக எந்த வங்கியிலிருந்து அந்த நோட்டுகள் வெளியே சென்றது என்பதை அறிய முடியும் அல்லவா? பின் ஏன் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை? ஒருவேளை அப்படி எண்கள் உரூபாய் நோட்டுகளிலிருந்து குறிக்கப்படுவதில்லை என்றால் அதற்கு ஏதும் காரணம் உள்ளதா?

    Share
  • யார் வந்தாலும், யார் போனாலும் …..

    பவள சங்கரி

    தலையங்கம்

    உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த எழுபத்தைந்து நாட்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்த நம் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அனைவராலும் அன்பாக அம்மா என்றழைக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தமிழக மக்களை விட்டுப்பிரிந்தது தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆணாதிக்கம் மிகுந்த இந்திய அரசியலில் அன்னை இந்திரா போன்று, ஜெயலலிதா அவர்கள் தனியொரு பெண்ணாக இருந்து, துணிவெனும் துணை கொண்டு, அனைவருக்கும் வழிகாட்டியாகவும், தன்னுடைய சமகாலத்தில் மற்றவரால் வெல்ல முடியாத ஒரு மாபெரும் சக்தியாகவும் வாழ்ந்து மறைந்துள்ளார். அவர்தம் மறைவு அரசியலில் ஒரு வெற்றிடத்தையே உருவாக்கியுள்ளது. இதுபோன்றதொரு பெண் ஆளுமை மீண்டும் தமிழகம் பெற முடியுமா என்பது ஐயமே. அன்னார் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்து மக்களின் பேராதரவைப் பெறும் வகையில் பணியாற்ற நமது புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

    For men may come and men may go,
    But I go on for ever. (The Brook – Poem by Alfred Lord Tennyson)

    யார் வந்தாலும், யார் போனாலும் காவிரி ஆறு குடகில் பிறந்து, மக்களுக்காக ஓடியோடி உழைத்து, பல இலட்சம் மக்களை பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்துக்கொண்டு இறுதியாகக் கடலில் சென்று கலக்கின்றது. அதுபோல புனித கங்கையானது இமயம் தோன்றி பல ஆயிரம் மைல்கள் கடந்து பல இலட்சம் மக்களைக்காத்து வளம் பெறச்செய்து இறுதியாகக் கடலில் கலக்கின்றது. இந்த இரண்டு ஜீவ நதிகளும் யார் வந்தார்கள், யார் சென்றார்கள் என்று பார்க்காமல் தங்கள் கடமைகளைத் தவறாது செய்கின்றன.

    இதற்கேற்ப, தமிழகத்தின் துக்கத்தின் உச்சமான தருணத்தில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், பாரதப்பிரதமர் மேன்மைமிகு மோதி அவர்களும், நமது குடியரசுத் தலைவர் , பல்வேறு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி போன்றவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாபெரும் மக்கள் வெள்ளத்தில் அம்மாவின் இறுதி அஞ்சலி எவ்வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக நடந்தது குறிப்பிடத்தக்கதாகும். கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவர்களும், கேரள ஆளுநர் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களும் ஒரே விமானம் மற்றும் ஒரே வாகனத்திலும் பயணம் செய்து அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளது, என அனைத்தையும் பார்க்கும்பொழுது மேலே குறிப்பிட்ட டெனிசன் பாடல் நினைவிற்கு வருகிறது. அந்த கவிஞர் குறிப்பிடுவதுபோல பெரும் தலைவர்கள் வருகிறார்கள், போகிறார்கள். இந்திய மக்களின் கலாச்சாரம் மட்டும் தெளிந்த நீரோடையாக குறிப்பிட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதும் நிதர்சனம்.

    மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்துவந்து திரும்பும்போது தன்னுடைய படைத்தளபதி, அமைச்சர்கள் என அனைவரையும் அழைத்து தான் பெற்ற வெற்றி, செல்வங்கள் அனைத்தையும், தம் உடல் செல்லும் பாதையில் இறைத்துக்கொண்டு வருமாறும் தன்னுடைய சவப்பெட்டியினை நான்கு தளபதிகள் தூக்கி வருமாறும், தம் கரங்களை வெளியே தெரியுமாறு வைக்கும்படியும் சொல்லிவிட்டு இறந்தான் . இதற்கான காரணத்தை தளபதிகள் கேட்டபோது, தாம் பெற்ற அத்தனை வெற்றிகள், செல்வங்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தம் என்பதோடு வெளியே தெரியும் தமது கைகள் தாம் கொண்டுசெல்வது ஏதுமில்லை என்பதை தெரிவிப்பதற்காகவும்தான் என்றாராம்.

    இதுபோன்று நற்சிந்தைகளை உளத்தில் நிறுத்தி மக்களுக்கு நல்லாட்சி வழங்கக்கூடியவர்கள் வந்து சேருவார்கள் என்று தமிழகம் காத்திருக்கிறது.

    Share
  • தடுமாறும் தமிழக மாணவர்களின் கல்வித் தரம்

    பவள சங்கரி

    தங்கத்திற்கு தரக்கட்டுப்பாடு இருப்பதுபோல கல்விக்கும் அகில இந்திய அளவில் தரக்கட்டுப்பாடு உள்ளது. சமீபத்திய வெளியீட்டின்படி அனைத்திந்திய மாணவர்களின் கல்வித்தர கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் பின் தங்கியுள்ளது. ஆங்கிலத்தில் 28வது இடம், கணிதத்தில் 23வது இடம், அறிவியலில் 25வது இடமும், மொழிப்பிரிவில் 21வது இடம் என மாணவர்கள் மிகவும் பின் தங்கியிருப்பது வேதனைக்குரிய விசயம். நாளைய சமுதாயத்தை வளப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசு கல்வி அமைச்சகத்துக்கு உண்டு. விரைந்து இதற்கான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும். இந்நிலையில் மருத்துவத் துறைக்கான பொதுத்தேர்வில் தமிழகம் கலந்து கொள்ளாது என்பது கேலிக்கூத்தாக உள்ளது. இதற்கு முன்பு முதல் ஐந்து நிலைகளில் இருந்த தமிழ் நாட்டு மாணவர்களின் நிலை இன்று இவ்வளவு பின் தங்கியுள்ளது. முன்பெல்லாம் தில்லியில் உள்ள முக்கியமான அரசு அமைச்சகங்கள் இயங்கக்கூடிய நார்த் பிளாக், சவுத் பிளாக் சென்றால் தமிழர்களை அதிகமாகக் காண முடிந்தது. இன்று நம் மாணவர்களின் தரம் குறைந்துகொண்டே போவதால் தமிழர்களை ஆட்சிப் பொறுப்புகளில் காண்பதே அரிதாகிவிடும். தமிழக அரசு நம் தமிழக மாணவர்களின் நிலை உயர என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? முன்பைவிட இன்று பல்வேறு விதமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அதை எப்படி செப்பனிட்டு நம் வருங்காலத் தூண்களை சிறந்த சிலையாக உருவாக்கப் போகிறார்கள் என்பதே கல்வியாளர்களின் கவலையாக உள்ளது.

    Share
  • தொடர்வலைகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பாரதப் பிரதமரின் அதிரடி அறிவிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்வுகள் பல திருப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. ‘விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்’ என்ற பாடலைப்போல தங்களிடமிருந்த 500, 1000 உரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், செல்லத்தக்கதாக ஆக்குவதற்கும் மக்கள் நகைக்கடைகளை முற்றுகையிட்டிருந்ததும், நகைக்கடைகள் விடிய விடிய சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்ததும், தங்கத்தின் விலை 40,000ற்கு மேலும் விற்றதும், இடைத்தரகர்கள் தரகுக்கு நோட்டுக்களை மாற்றியதும் பல இடங்களில் நடந்தேறியிருக்கிறது. அதாவது அரசு கொடுத்த 50 நாட்கள் வாய்ப்பை தவறாகப் பயன்படுத்தக்கூடிய காட்சிகள் பலவிதமாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. தங்களுடைய மேதாவிலாசங்கள் மூலமாக இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஏழை எளிய மக்களை வதைக்கக்கூடிய காட்சிகள் வேதனை அளிப்பதாக இருக்கின்றன.

    வங்கித் துறையினரின் சரியான செயல்பாடுகளும், தணிக்கைத் துறையினரின் தேவையான வழிகாட்டுதலும் இச்சூழலுக்கு வளம் சேர்த்துள்ளன. ஆயினும் எரிகிற வீட்டில் பிடுங்கும்வரை இலாபம் என்ற நோக்கில் செயல்படுபவர்களுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போது மட்டுமே ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கப்படும். பொது மக்களின் நல்ல எண்ணங்களும், நாட்டுப்பற்றும் பிரதமரின் கரத்தை வலிமையாக்கும்பட்சத்தில் இந்த அதிரடி நடவடிக்கைக்கான பலன் முழுமையாகக் கிடைக்கலாம். வ.உ.சி , சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் நாட்டிற்காக பட்ட வேதனையைவிடவா இந்த சில மணித்துளிகளின் வேதனை பெரிதாகி விடப்போகிறது. வங்கிகளின் பணி நேரங்களை அதிகரித்தும் பணப்பரிமாற்றங்களுக்கு அதிக அலுவலர்களை நியமித்தும் இனி வரக்கூடிய 4 நாட்களுக்கு இரவு எட்டு மணி வரை வங்கிகள் செயல்படும் போன்ற அறிவிப்புகளும் ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளன. திருப்பதி திருமலை நிர்வாகத்தினர் தங்கள் அலுவலகம் மூலமாக பக்தர்களுக்கு நோட்டுகளை மாற்றிக்கொடுத்ததும், தன்னார்வத்தொண்டுள்ளம் கொண்ட தனி மனிதர்கள் தாங்களாக முன்வந்து மற்றவர்களுக்கு உதவி செய்தது போன்ற மனிதாபிமானமிக்க செயல்களையும் காணமுடிந்தது. தொடரும் நிகழ்வுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Share
  • இந்தியப்பிரதமரின் அதிரடி நடவடிக்கை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மிகச்சரியான நேரத்தில் அதிரடியாக பொருளாதாரத்தில் ‘surgical strike’ என்று அனைவராலும் விமர்சிக்கப்படுகிற ஒரு அறுவை சிகிச்சை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பு இந்திய எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையைப்போன்று நேற்று இரவு பொருளாதாரத்தில் பாரதப் பிரதமர் மேதகு மோதி அவர்களால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை பாராட்டுக்குரியது. பதவியேற்ற இவ்வளவு நாட்களாக கறுப்புப் பணத்திற்கு எதிராக மோதி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்தவர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கியுள்ளார். சரியாகச் சொல்லவேண்டுமென்றால் மூன்று மாதத்திற்கு முன்பே இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கவேண்டும். பரிவர்த்தனையிலுள்ள வங்கியாளர்களுக்கோ நிதியமைச்சகத்தைச் சார்ந்த உயரதிகாரிகளைத் தவிர்த்து மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் இரகசியமாகவே இந்தப் பொருளாதார அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்த 10,000, 5000, 1000 உரூபாய் நோட்டுகள் வெகு காலம் முன்பு ஒழிக்கப்பட்டு 500 உரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டது. அளவில் பெரியதான 100 உரூபாய் நோட்டும் ஒழிக்கப்பட்டது. ஆனால் அவைகள் அனைத்தையும்விட இம்முறை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இரகசியமாக எதிர்பாராத நேரத்தில் அறிவிக்கப்பட்ட சரியான அறிவிப்பாக அமைந்துள்ளது. நாட்டு நலனில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டும் பெற்றுள்ளது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் இச்செய்தி நம் இந்தியாவில் சராசரியாக 2 முதல் 3 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடும். மலைவாழ் மக்கள், தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள், கல்வியறிவற்றவர்கள் அனைவருக்கும் பெரும் குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். இன்று உரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால் அனைவரின் கையிலும் 500, 1000 உரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் உள்ளன. வங்கிகளே 100 உரூபாய் நோட்டு கட்டுகளை வாங்க மறுக்கின்றன. இதிலிருந்து மக்கள் மீண்டு யதார்த்த நிலைக்கு வருவதற்கு 60 நாட்களாவது ஆகலாம். ஆனாலும் புறையோடிய நம்முடைய பொருளாதாரத்தை சீர்செய்வதற்கு இந்த அறுவைச் சிகிச்சை தேவையாகத்தான் உள்ளது.

    ரிசர்வ் வங்கி இது தொடர்பாக மும்பை, தில்லி ஆகிய நகரங்களில் இதற்கான தனிப்பட்ட அலுவலகங்களை அமைத்திருப்பதாகவும் அறியமுடிகிறது. இதுபோன்று நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகள் பணப்பரிமாற்றத்திற்கு காசாளர்களை அதிக நேரங்களுக்கு பணிபுரிய வைப்பதும் நலம் பயக்கும்.

    இதனுடைய பாதிப்பாக தங்கம், வெள்ளியின் சந்தை நிலவரங்கள் பாதிப்படையும். பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவினைச் சந்திக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம். உரூபாயின் மதிப்பு அதிகரிக்க வேண்டும். பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை சரியக்கூடும். சமீப காலங்களில் குறைந்துள்ள பணப்புழக்கம் இந்த நிலையில் மேலும் அதிகரிக்கலாம். அனைத்துத் துறைகளிலும் இதனுடைய பாதிப்பு வெளிப்படையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசு இந்நிலையில் மக்களை அனுசரித்து செயல்பட்டால் இந்த அறுவை சிகிச்சையின் பலன் பூரணமாகக் கிடைத்து, ஆரோக்கியமாகவும் அமையும் என்பது உறுதி!

    Share
  • மாசுக்கட்டுப்பாடு

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஏழாவது நாளாக இன்றும் நம் இந்தியத் தலைநகர் தில்லியில் முன் எப்போதும் இல்லாததைவிட காற்று மாசுப்பட்டு, அடர்ந்த புகைமூட்டமாக சுவாசிப்பதற்கு ஏற்றதாக இல்லாத காரணத்தை முன்னிட்டு பள்ளிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தில்லியில் நடக்கவிருந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. திங்கள் முதல் 10 நாட்களுக்கு, மெட்ரோ தளங்கள் உள்பட, கட்டிட இடிப்பு நடவடிக்கைகள், கட்டுமானப் பணிகள், டீசல் இயந்திரங்கள் பயன்பாடு போன்றவைகள் அவசரகால பயன்பாடுகள் தவிர மற்றவைகளுக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது நலத்துறை மூலம் சாலைகள் முழுவதையும் பரவலாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதோடு, தெருவோர கட்டிடக் கழிவுகளையும் நீக்கம் செய்யவும் வழிநடத்தப்பட்டுள்ளது. செயற்கை மழை மூலம் சுத்தம் செய்யும் சாத்தியக்கூறுகளையும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மூலம் கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குப்பைக்கூளங்களை எரிப்பதை தடுத்து நிறுத்தி, மேற்கொண்டு மாசு ஏற்படுத்தாதவாறு கண்காணிக்க அதிகாரிகளை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பனி மூட்டம்போல் தலை நகர் எங்கும் புகை மூட்டம். சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வாங்கிக் குடிப்பது போன்று சுவாசிக்க காற்றையும் காசு கொடுத்து வாங்கவேண்டிய சூழல் ஏற்படும் அவல நிலை வந்துள்ளது. இன்று எவரையும் கைகாட்ட விரும்பவில்லை என்று கூறினாலும், உடனடியாக களையப்பட வேண்டிய பிரச்சனை என்று தில்லி முதல்வர் ஏற்கனவே பலமுறை எடுத்துக்கூறியும், இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.

    தில்லி அரசு முன்பு டீசல் வாகனங்களை தில்லிக்குள் அனுமதியை இரத்து செய்திருந்தது. ஆனால் உச்ச நீதி மன்றம் மீண்டும் அனுமதி அளித்தது மூலம் மாசுக் கட்டுப்பாட்டிற்கு பங்கம் ஏற்படுத்திவிட்டது. அண்டை மாநிலங்களாகிய பஞ்சாப் , ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் மிக அதிகமாக புகை மண்டலம் தில்லியை சூழ்கின்றன. கரும்புச் சக்கையிலிருந்து காகிதம் தயாரிப்பதுபோல் விவசாயக் கழிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதன் மூலம் விவாசாயிகளின் வாழ்வாதாரங்களை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் பெருகும். தில்லியைச் சுற்றிலும் நொய்டா போன்ற பகுதிகளிலிருந்து வெளியேறும் நீரைச் சுத்தீகரித்து வெளியேற்றவேண்டும் என்று ஆணை இருப்பதுபோன்று, புகை மண்டலங்களை ஏற்படுத்தக்கூடிய ஆலைக் கழிவுகளையும் சுத்தீகரிப்பு செய்யும்வண்ணம் முறைப்படுத்தலாம். 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வாகனங்களை போக்குவரத்திற்கு தகுதியற்றதாகத் தடை செய்வதால் தொழில் வளமும் பெருகுவதோடு, மக்கள் ஆரோக்கியமாக வாழத் தகுதியுடைய நகராகவும் மாறலாம். ஆஸ்துமா, நுரையீரல் புற்று நோய், போன்ற நோய்களால் இந்தியாவில் மட்டும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பும் ஏற்படுவதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. தில்லியில் மட்டுமன்றி இந்நிலை ஏனைய பெரு நகரங்களாகிய மும்பாய், பெங்களூரு, கல்கத்தா போன்றவைகளையும் தாக்கக்கூடிய அபாயமும் வரலாம். பெரு நகரங்களைத் தவிர்த்து தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களிலும் இதே நிலைதான் உள்ளது என்பதும் வருத்தத்திற்குரிய விசயம்.

    Share
  • மேலாண்மை

    பவள சங்கரி

    தலையங்கம்

    images

    மத்திய அரசிற்கு உச்சநீதி மன்றம் நான்கு நாட்களுக்குள் காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. அப்போதைய அரசு வழக்கறிஞர் இதை ஏற்றுக்கொண்டு அரசிடம் கூறி ஆவண செய்வதாகக் கூறிவிட்டு வந்தார். ஆனால் நேற்று, அரசாங்க தலைமை வழக்கறிஞர் இதன் சார்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி பஞ்சாபையும், ஆந்திராவையும் மேற்கோள் காட்டி காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர். அதற்கு காரணங்கள் பலவற்றை சுட்டிக்காட்டுகின்றனர். காவேரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அதற்கு அவசர சட்டம் மூலமாக அங்கீகாரம் அளித்து அதை முன் தேதியிட்டு பாராளுமன்றங்களில் அங்கீகாரம் செய்ய முடியாதா. இதற்கு முன்னுதாரணங்களாக எத்தனையோ சட்டங்கள் அவசரச் சட்டமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லையா. மத்திய நீர்பாசன அமைச்சகம் இதுவரை என்ன செய்துகொண்டிருக்கிறது. அவர்கள் நீர்பிடிப்புப் பகுதி, பாசனப்பகுதி இருப்பது பற்றி அறியமாட்டார்களா ? கடந்த மூன்று மாதங்களாக பல ஆயிரம் கோடி விரயமாக்கப்பட்டுள்ளது அறியாத ஒன்றா. அரசியல் ஆதாயங்களுக்காக தமிழினம் வஞ்சிக்கப்படுகிறதா? தமிழக விவசாயிகள் மத்திய அரசால் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறதா?தமிழகத்தைச் சார்ந்த பாரத சனதா கட்சியின் தலைவர்களின் நிலைப்பாடுகள் என்ன? தமிழிசை தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுப்பாரா? மத்திய அரசை எதிர்த்து இரயில் மறியல் போராட்டமும், மின் பகிர்மானத்தை எதிர்த்து போராடவும் முனைவாரா என்று தமிழக மக்கள் அனைவரும் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

    Share
  • பாரத மக்களின் மகத்தான ஆதரவு!

    பவள சங்கரி

    தலையங்கம்

    பிரதமர் மோதி அவர்களின் நிதானமான உறுதியான, தீர்க்கமான முடிவுகளும், தெளிவான சிந்தனைகளும் நம் நாட்டை வல்லரசாக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமரின் சீரிய திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தில் இந்தியா தலை நிமிர்ந்துள்ளதும் கண்கூடு. வானியலிலும் விண்ணை நோக்கி நமது பெருமை செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்புத் துறை, வாணிகம், இந்தியாவின் பாதுகாப்பு என ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் பெருமைகொள்ளத்தக்க வகையில் நம் பிரதமரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருக்கும் இக்காலகட்டத்தில், இந்திய பொருளாதாரம் உறுதியான நிலையில் இருக்கும்வகையில் இறக்குமதிக்குரிய பொருட்களுக்கு பரிவர்த்தனையாக உரூபாயை கொடுப்பது என்று உறுதியான முடிவு எடுத்திருப்பதும், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள் போன்ற இராணுவ பயன்பாட்டிற்கானவைகள் இந்தியாவிலேயேதான் தயாரிக்கப்படவேண்டும் என்று கொள்கை முடிவெடுத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்திருப்பதும், தொழில் துறையில், சீனாவிற்கு அடுத்தபடியாக வளர்ச்சியடைந்திருப்பதற்கும் இதன் மூலம் பல இலட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதும் நமது பிரதமர் மோதி அவர்களின் ஆட்சியில் நிகழ்ந்திருக்கும் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள். இத்தனைக்கும் மேலாக இதுவரை ஊழல் தொடர்பான எந்தவிதமான செய்திகளும் வெளிவரவில்லையென்பதும் பாராட்டிற்குரிய செயல்.

    பாகிஸ்தான், காஷ்மீருக்குள் அத்துமீறி உள்நுழைந்து நமது 16 இராணுவ வீரர்களைக் கொன்ற மோசமானதொரு சூழலை நமது பிரதமர் எவ்விதமாகக் கையாளப்போகிறார் என்று ஒவ்வொரு குடிமகனும் கவலையுடன் இருந்தபோது, படிப்படியாக அண்டை நாடுகளின் ஆதரவைப்பெற்று பாகிஸ்தானை தனிமைப்படுத்தி பொருளாதாரம், நீர்வளம் அனைத்திலும் இந்தியக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குள் நமது இராணுவத்தை அனுப்பி அங்கிருந்த ஏழு தீவிரவாதிகளின் தளங்களைத் தகர்த்து, சுமாராக நாற்பது தீவிரவாதிகளை அழித்துள்ளனர். நமது பிரதமர் மோதி அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு 130 கோடி மக்களும் அவர்பின் உள்ளனர் என்பதே நிதர்சனம். இனி எடுக்கக்கூடிய இராணுவ நடவடிக்கைகளின் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பை முற்றிலுமாக அழித்து நமது நாட்டின் எல்லைப்பகுதிகள் முழுவதும் அமைதியாக இருக்கும் வகையில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதே மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

    வெல்க பாரதம்!

    Share
  • மக்களாட்சிதானா இது?

    பவள சங்கரி

    தலையங்கம்

    மக்களுக்காக ஆட்சி செய்கிறோம் என்பதையே நடுவண் அரசு மறந்துவிட்டது போலத்தோன்றுகிறது. மக்களுக்கு எந்தெந்த முறையில் சலுகைகளை ஏற்படுத்தி நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்துவது என்பது பற்றி சிந்திப்பதற்கு பதிலாக துக்ளக் ஆட்சியைப்போல் மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது சமீபகாலங்களில். திரையரங்குகளில் நுழைவுச்சீட்டை அதிக விலைக்கு விற்றால் தண்டனை என்று கூறி நியாய விலையில் அதை வாங்கி திரையரங்கு செல்வதற்கு வழிவகுத்திருந்த காலம் ஒன்றும் இருந்தது. மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் ஒருவருக்கு 120 உரூபாய் என்று முறைப்படுத்தி மக்களை கொள்ளையடிப்பதற்கு சட்டப்படி அனுமதியளித்தது நாம் அறிந்ததே. இதே போல இரயில்வே அமைச்சகமும்ச ட்டம் இயற்றியிருப்பது அல்லது ஆணை பிறப்பித்திருப்பது மிகவும் வேதனைக்குரிய செயல். இரயிலில் முன்பதிவு செய்யும் நுழைவுச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்றால் தண்டனை அல்லது அந்த நுழைவுச்சீட்டு செல்லாது என்று இருந்தது கனவாகிவிட்டது. பரீட்சார்த்த முறையில் அனுமதிக்கப்பட்ட Premium trains இன் வெற்றியே, இன்று அரசே Surging charges அல்லது Elasticity tickets, போன்ற புதிய முறையை அறிமுகப்படுத்த ஊக்கப்படுத்தியுள்ளது. சதாப்தி, ராஜஸ்தானி, துரந்தோ போன்ற இரயில்களில் 10 சதவிகிதம் மட்டுமே நியாயமான விலையாகவும், ஒவ்வொரு பத்து சதவிகிதம் நிறைவடைந்த பிறகு 10 சதவிகிதம் கட்டண அதிகரிப்பும், 50 சதவிகிதத்திற்குப் பிறகு மீதமுள்ள 50 சதவிகிதத்திற்கு ஒன்றரை மடங்கு கட்டணமாகவும் நிர்ணயித்துள்ளனர். அதாவது பணம் உள்ளவனுக்கே இனிய பயணம் என்னும் வகையில் உள்ளது இத்திட்டம்.

    இன்றைய அறிவிப்பாக, இரயில்வேத்துறைக்கு இரண்டு நாட்களில் மட்டும் 1.6 கோடி அதிகப்படியான வருமானம் கிடைத்திருப்பதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி அல்ல. நடுத்தர மக்களும் உயர் கீழ்வருவாய் மக்களும் இனி இந்த வகையான புகைவண்டிகளை பயன்படுத்தவே முடியாது என்பது வேதனையான விசயம். அரசியல் சாசனத்தின்படி அனைவரும் சமம் என்ற நிலை மாறி பணம் இருப்பவனுக்கு மட்டுமே அரசின் சலுகைகள், சுகமான பயணங்கள் என்றால் இது எப்படி மக்களாட்சி நடக்கும் நாடாக இருக்க முடியும் என்ற ஐயம் எழாமல் இல்லை.

    Share
  • ஆடுபுலி ஆட்டம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    துணை ஆளுநராக இருக்கும் உர்ஜித் பட்டேல் அவர்கள் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களைத் தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன் 10 உதவி ஆளுநர்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 52 வயதான பட்டேல் அவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். ஒருவருக்கு பதவிப் பொறுப்புகள் கொடுக்கும்போது அதிகப்படியான ஆண்டுகள் பொறுப்புகள் கொடுத்தால் அவர்களுடைய பணியை மேலும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பளிக்கும். குறுகிய காலங்களில் புதிய பொறுப்புகளில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு பொருளாதாரத்தை நிலைப்படுத்த போதிய காலஅவகாசம் இருக்காது. எனினும் இந்நிலையிலும் இவர்தம் ஆளுமையில் இந்தியப் பொருளாதாரமும் சிறப்புப் பெறும் என்று நம்புவோம்.

    மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் ஜி.எஸ்.டி மாற்றத்திற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இனி இந்த சட்டத்தை 11 மாநிலங்களில் உள்ள சட்ட மன்றங்கள் அங்கீகரித்தால் போதுமானது. இதற்கான பணிகள் துவக்கப்பட்டுவிட்டன. இனி இது சட்டமாகிவிடும். மத்திய மாநில அரசுகள் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயை பிரித்துக்கொள்ளவேண்டியது. இந்தப் புரிந்துணர்வுகளை தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாராளுமன்றத்திலும், மாநிலங்கள் அவையிலும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளன. மத்திய மாநில அரசுகள் இந்த ஜி.எஸ்.டி மூலம் கிடைக்கக்கூடிய வருவாயைப் பிரித்துக்கொள்வதில்தான் புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. ஆனால் இந்த சட்டத்தால் மக்களுக்கு என்ன பயன் என்று இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. மற்ற நாடுகளில் இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு 6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. ஆனால் நம் நாட்டில் 18 முதல் 25 சதவிகிதம் வரை வரிவிதிப்பு இருக்கும் என்று அறியமுடிகிறது.

    பெட்ரோலியப் பொருட்களுக்கு இந்த ஒருமுனை வரிவிதிப்பு பொருந்துமா? பொருந்தும் என்றால் அது எத்தனை சதவிகிதம் இருக்கும்? தங்கத்திற்கு 1 சதவிகிதம் வரிவிதிப்பிற்கு மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தினர். தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள், வெள்ளி மற்றும் அதன் ஆபரணங்கள், வைர ஆபரணங்கள் போன்றவற்றிற்கு தனித்தனியான வரிவிதிப்புகள் இருக்குமா? மருத்துவத்திற்குப் பயன்படுத்தக்கூடிய வெள்ளிக்கு வரிவிதிப்பு அளிக்கப்படுமா? மிக அதிகபட்ச வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய பருத்தி, நூல் மற்றும் ஆடை தயாரிப்பிற்கு எத்தனை சதவிகித வரிவிதிப்பு இருக்கும்? சிட்டா நூலுக்கு வரிவிலக்கு தொடருமா? போக்குவரத்துத் துறை இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு உட்படுத்தப்படுமா? நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிப்பினால் இவ்விரு துறைகளும் அழியும் அபாயத்தில் உள்ளன. ஆடுபுலி ஆட்டத்தில் உள்ளதுபோல் அரசு புலியாகவும், பொது மக்கள் ஆடுகளாகவும் உள்ளனர். தெளிவற்ற சிந்தனைகளே இருப்பதாகத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே இச்சட்டத்தைப் பற்றிய தெளிவானக் கருத்துகள் மக்கள் மன்றத்தில் ஏன் வைக்கப்படவில்லை? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதைப்பற்றிய விளக்கங்களைப் பெறமுடியுமா? இதுபோன்ற எண்ணற்ற வினாக்கள் மக்கள் மனதில் உள்ளன.

    Share
  • பாரத விழா!

    பவள சங்கரி

    1469807728-3159

    70 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை ‘பாரத விழா’ என்று மத்திய அரசு ஒரு வாரம் கொண்டாடுகிறார்கள். நம் இந்தியக் கலாச்சாரத்தைப் போற்றும்விதமாக, 12 ஆம் தேதி ஆரம்பித்து 18 ஆம் தேதி வரை நடக்கப்போகிற இந்த நிகழ்ச்சிக்காக தில்லியில் 100 அரங்குகள், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பல்வேறு விதமான கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி. பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரத்தின் பன்முகத்தன்மையை உணர்த்தும் வகையில் தில்லி ராஜபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களில் பாரம்பரிய நடனங்கள், விதவிதமான உணவு வகைகளும் அணிவகுத்துள்ளன. பாரதி பாடிய, ‘ஆடுவோமே, பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று’ என்பதற்கேற்ப ஆனந்தப்படுகிறோம்.

    ஆனால் இன்றைய நிலை என்ன? எந்தெந்தத் துறையில் நாம் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். எதில் வளர்ச்சியடைந்திருக்கிறோம்.. வரும் ஆண்டுகளில் நாம் எந்தெந்த நிலைப்பாடுகளை எடுக்கவேண்டும் என்று இந்த சுதந்திர தினத்தில் அரசு அறிவிப்புகள் வருமா. அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டபொழுது இட ஒதுக்கீடுகள் 10 ஆண்டுகளுக்கு மட்டும் இருக்கும். அதற்குப் பிறகு அனைவரும் சமம் என்று அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இன்று 69 ஆண்டுகள் கடந்து 70 வது ஆண்டில் கால் பதிக்க இருக்கிறோம். இன்னும் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. குஜராத்தில் பட்டேல் இனத்தவரும், ராஜஸ்தானத்தின் உத்திர பிரதேசத்தில் ஜெட் இனத்தவரும் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கக்கோரி அதன் மூலம் தங்கள் இனத்தவரையும், தங்களையும் நிலைநிறுத்திக்கொள்ள முயலுவதா சுதந்திரம்? கல்வித் துறையை எடுத்துக்கொண்டால் மருத்துவம் சார்ந்த கல்விக்கு ‘நிட்’ (NEET) தேசிய பொதுத் தேர்வுகள் மூலமாக கல்வியை உறுதி செய்யும் மத்திய அரசின் சட்டத்தை உச்ச நீதி மன்றம் உறுதி செய்த பிறகும் தமிழ்நாடு அதிலிருந்து பின்வாங்குவது ஏன்? அதில் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இணையாது என்று அறிவித்திருப்பது திறமையுடையவர்களை கேலிப்பொருளாக்குவதாக உள்ளது. மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பணத்திற்காக கல்வியை விற்கக்கூடிய போக்கை உற்சாகப்படுத்துவதாக அமைவதால், இது வேதனைக்குரியதாகவும் உள்ளது. மிகவும் பின் தங்கிய மாநிலங்களான பீகார், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இச்சட்டத்தை வரவேற்றிருப்பது பாராட்டிற்குரியது.

    69 ஆண்டுகள் நிறைவடைந்தும் வளர்ச்சியடையும் நாடுகள் பட்டியலிலேயே நமது நாட்டின் பொருளாதாரம் இருப்பதும், பல்வேறு சரிவுகளை பொருளாதாரம் கண்டபோதும் நம்முடைய இந்தியப் பொருளாதாரம் உறுதியான நிலையில் இருப்பதாகக் கூறுவதும் வரவேற்கத்தக்கதாக இல்லை. பொருளாதாரச் சரிவைச் சந்தித்த சீன தேசத்தின் நாணயம் வளர்ச்சிப்பாதையில் திரும்பியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதால் இங்கிலாந்தின் நாணயத்தின் மதிப்பு சரிந்தாலும் மீண்டும் அது வளர்ச்சிப்பாதையை நோக்கித் திரும்பிவிட்டது. இங்கிலாந்தின் பவுண்ட் நம் உரூபாய் மதிப்பில் 1 பவுண்டிற்கு 87 உரூபாயாகவும், சீனாவின் நாணயம் 10 உரூபாய் 16 காசுகளாகவும் உள்ளன. ஆனால் நமது உரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான உரூபாயின் மதிப்பு 68 உரூபாயாக உள்ளது. இத்தனைக்கும் அன்னியச் செலாவணியில் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்திருக்கும்போதே நம் உரூபாயின் நிலை இப்படி உள்ளது. இதில் சில பொருளாதார மேலாண்மையில் உள்ள அதிகாரிகள் குறைக்க முயற்சிப்பதும் மத்திய வங்கியின் ஆளுநரின் கடுமையான எதிர்ப்பால் தடைபட்டு இருப்பதும் இன்று நடக்கக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன. நம்முடைய பொருளாதாரம் சீர்பெற வேண்டுமென்றால் ஊழலில் ஏழாவது நாடாக இருக்கும் இந்நிலை மாறவேண்டும். நேற்றைய அறிவிப்பின்படி பண வீக்கம் இரண்டு மாதங்களாக எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து இருக்கும் நிலை மாறி நம்முடைய உரூபாயின் மதிப்பு உயரும் நாளே உண்மையான சுதந்திர நாளாகும். சரியான பொருளாதாரச் சிந்தனைகளும், ஆர் & டி (RESEARCH & DEVELOPMENT DEPT) துறையின் சரியான வழிகாட்டுதலும் இந்த 70வது சுதந்திரதின உரையின் அரசு அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம். இதுவே இன்றைய அத்தியாவசியமான தேவையுமாகும்.

    வாழ்க பாரதம்!

    வளர்க இந்தியத் திருநாடு!

    Share