தலையங்கம்

மாசுக்கட்டுப்பாடு

பவள சங்கரி

தலையங்கம்

ஏழாவது நாளாக இன்றும் நம் இந்தியத் தலைநகர் தில்லியில் முன் எப்போதும் இல்லாததைவிட காற்று மாசுப்பட்டு, அடர்ந்த புகைமூட்டமாக சுவாசிப்பதற்கு ஏற்றதாக இல்லாத காரணத்தை முன்னிட்டு பள்ளிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தில்லியில் நடக்கவிருந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. திங்கள் முதல் 10 நாட்களுக்கு, மெட்ரோ தளங்கள் உள்பட, கட்டிட இடிப்பு நடவடிக்கைகள், கட்டுமானப் பணிகள், டீசல் இயந்திரங்கள் பயன்பாடு போன்றவைகள் அவசரகால பயன்பாடுகள் தவிர மற்றவைகளுக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது நலத்துறை மூலம் சாலைகள் முழுவதையும் பரவலாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதோடு, தெருவோர கட்டிடக் கழிவுகளையும் நீக்கம் செய்யவும் வழிநடத்தப்பட்டுள்ளது. செயற்கை மழை மூலம் சுத்தம் செய்யும் சாத்தியக்கூறுகளையும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மூலம் கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குப்பைக்கூளங்களை எரிப்பதை தடுத்து நிறுத்தி, மேற்கொண்டு மாசு ஏற்படுத்தாதவாறு கண்காணிக்க அதிகாரிகளை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பனி மூட்டம்போல் தலை நகர் எங்கும் புகை மூட்டம். சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வாங்கிக் குடிப்பது போன்று சுவாசிக்க காற்றையும் காசு கொடுத்து வாங்கவேண்டிய சூழல் ஏற்படும் அவல நிலை வந்துள்ளது. இன்று எவரையும் கைகாட்ட விரும்பவில்லை என்று கூறினாலும், உடனடியாக களையப்பட வேண்டிய பிரச்சனை என்று தில்லி முதல்வர் ஏற்கனவே பலமுறை எடுத்துக்கூறியும், இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.

தில்லி அரசு முன்பு டீசல் வாகனங்களை தில்லிக்குள் அனுமதியை இரத்து செய்திருந்தது. ஆனால் உச்ச நீதி மன்றம் மீண்டும் அனுமதி அளித்தது மூலம் மாசுக் கட்டுப்பாட்டிற்கு பங்கம் ஏற்படுத்திவிட்டது. அண்டை மாநிலங்களாகிய பஞ்சாப் , ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் மிக அதிகமாக புகை மண்டலம் தில்லியை சூழ்கின்றன. கரும்புச் சக்கையிலிருந்து காகிதம் தயாரிப்பதுபோல் விவசாயக் கழிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதன் மூலம் விவாசாயிகளின் வாழ்வாதாரங்களை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் பெருகும். தில்லியைச் சுற்றிலும் நொய்டா போன்ற பகுதிகளிலிருந்து வெளியேறும் நீரைச் சுத்தீகரித்து வெளியேற்றவேண்டும் என்று ஆணை இருப்பதுபோன்று, புகை மண்டலங்களை ஏற்படுத்தக்கூடிய ஆலைக் கழிவுகளையும் சுத்தீகரிப்பு செய்யும்வண்ணம் முறைப்படுத்தலாம். 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வாகனங்களை போக்குவரத்திற்கு தகுதியற்றதாகத் தடை செய்வதால் தொழில் வளமும் பெருகுவதோடு, மக்கள் ஆரோக்கியமாக வாழத் தகுதியுடைய நகராகவும் மாறலாம். ஆஸ்துமா, நுரையீரல் புற்று நோய், போன்ற நோய்களால் இந்தியாவில் மட்டும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பும் ஏற்படுவதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. தில்லியில் மட்டுமன்றி இந்நிலை ஏனைய பெரு நகரங்களாகிய மும்பாய், பெங்களூரு, கல்கத்தா போன்றவைகளையும் தாக்கக்கூடிய அபாயமும் வரலாம். பெரு நகரங்களைத் தவிர்த்து தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களிலும் இதே நிலைதான் உள்ளது என்பதும் வருத்தத்திற்குரிய விசயம்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க