பாரத விழா!
பவள சங்கரி
70 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை ‘பாரத விழா’ என்று மத்திய அரசு ஒரு வாரம் கொண்டாடுகிறார்கள். நம் இந்தியக் கலாச்சாரத்தைப் போற்றும்விதமாக, 12 ஆம் தேதி ஆரம்பித்து 18 ஆம் தேதி வரை நடக்கப்போகிற இந்த நிகழ்ச்சிக்காக தில்லியில் 100 அரங்குகள், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பல்வேறு விதமான கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி. பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரத்தின் பன்முகத்தன்மையை உணர்த்தும் வகையில் தில்லி ராஜபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களில் பாரம்பரிய நடனங்கள், விதவிதமான உணவு வகைகளும் அணிவகுத்துள்ளன. பாரதி பாடிய, ‘ஆடுவோமே, பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று’ என்பதற்கேற்ப ஆனந்தப்படுகிறோம்.
ஆனால் இன்றைய நிலை என்ன? எந்தெந்தத் துறையில் நாம் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். எதில் வளர்ச்சியடைந்திருக்கிறோம்.. வரும் ஆண்டுகளில் நாம் எந்தெந்த நிலைப்பாடுகளை எடுக்கவேண்டும் என்று இந்த சுதந்திர தினத்தில் அரசு அறிவிப்புகள் வருமா. அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டபொழுது இட ஒதுக்கீடுகள் 10 ஆண்டுகளுக்கு மட்டும் இருக்கும். அதற்குப் பிறகு அனைவரும் சமம் என்று அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இன்று 69 ஆண்டுகள் கடந்து 70 வது ஆண்டில் கால் பதிக்க இருக்கிறோம். இன்னும் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. குஜராத்தில் பட்டேல் இனத்தவரும், ராஜஸ்தானத்தின் உத்திர பிரதேசத்தில் ஜெட் இனத்தவரும் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கக்கோரி அதன் மூலம் தங்கள் இனத்தவரையும், தங்களையும் நிலைநிறுத்திக்கொள்ள முயலுவதா சுதந்திரம்? கல்வித் துறையை எடுத்துக்கொண்டால் மருத்துவம் சார்ந்த கல்விக்கு ‘நிட்’ (NEET) தேசிய பொதுத் தேர்வுகள் மூலமாக கல்வியை உறுதி செய்யும் மத்திய அரசின் சட்டத்தை உச்ச நீதி மன்றம் உறுதி செய்த பிறகும் தமிழ்நாடு அதிலிருந்து பின்வாங்குவது ஏன்? அதில் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இணையாது என்று அறிவித்திருப்பது திறமையுடையவர்களை கேலிப்பொருளாக்குவதாக உள்ளது. மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பணத்திற்காக கல்வியை விற்கக்கூடிய போக்கை உற்சாகப்படுத்துவதாக அமைவதால், இது வேதனைக்குரியதாகவும் உள்ளது. மிகவும் பின் தங்கிய மாநிலங்களான பீகார், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இச்சட்டத்தை வரவேற்றிருப்பது பாராட்டிற்குரியது.
69 ஆண்டுகள் நிறைவடைந்தும் வளர்ச்சியடையும் நாடுகள் பட்டியலிலேயே நமது நாட்டின் பொருளாதாரம் இருப்பதும், பல்வேறு சரிவுகளை பொருளாதாரம் கண்டபோதும் நம்முடைய இந்தியப் பொருளாதாரம் உறுதியான நிலையில் இருப்பதாகக் கூறுவதும் வரவேற்கத்தக்கதாக இல்லை. பொருளாதாரச் சரிவைச் சந்தித்த சீன தேசத்தின் நாணயம் வளர்ச்சிப்பாதையில் திரும்பியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதால் இங்கிலாந்தின் நாணயத்தின் மதிப்பு சரிந்தாலும் மீண்டும் அது வளர்ச்சிப்பாதையை நோக்கித் திரும்பிவிட்டது. இங்கிலாந்தின் பவுண்ட் நம் உரூபாய் மதிப்பில் 1 பவுண்டிற்கு 87 உரூபாயாகவும், சீனாவின் நாணயம் 10 உரூபாய் 16 காசுகளாகவும் உள்ளன. ஆனால் நமது உரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான உரூபாயின் மதிப்பு 68 உரூபாயாக உள்ளது. இத்தனைக்கும் அன்னியச் செலாவணியில் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்திருக்கும்போதே நம் உரூபாயின் நிலை இப்படி உள்ளது. இதில் சில பொருளாதார மேலாண்மையில் உள்ள அதிகாரிகள் குறைக்க முயற்சிப்பதும் மத்திய வங்கியின் ஆளுநரின் கடுமையான எதிர்ப்பால் தடைபட்டு இருப்பதும் இன்று நடக்கக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன. நம்முடைய பொருளாதாரம் சீர்பெற வேண்டுமென்றால் ஊழலில் ஏழாவது நாடாக இருக்கும் இந்நிலை மாறவேண்டும். நேற்றைய அறிவிப்பின்படி பண வீக்கம் இரண்டு மாதங்களாக எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து இருக்கும் நிலை மாறி நம்முடைய உரூபாயின் மதிப்பு உயரும் நாளே உண்மையான சுதந்திர நாளாகும். சரியான பொருளாதாரச் சிந்தனைகளும், ஆர் & டி (RESEARCH & DEVELOPMENT DEPT) துறையின் சரியான வழிகாட்டுதலும் இந்த 70வது சுதந்திரதின உரையின் அரசு அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம். இதுவே இன்றைய அத்தியாவசியமான தேவையுமாகும்.
வாழ்க பாரதம்!
வளர்க இந்தியத் திருநாடு!