நதிநீர்ப்பங்கீடு ஒன்றியங்களுக்கு ஆக்கப்பூர்வமான மாற்று

பவள சங்கரி

தலையங்கம்

அரசு ஆணைப்படி தற்போது உள்ள தனித்தனி நதிநீர் பங்கீடுகளுக்குரிய ஆணையங்களைக் கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக நிரந்தர நதிநீர் பங்கீடு ஒன்றியத்தை நடுவண் அரசு அறிவித்துள்ளது. இதன்படி நதிநீர் சம்பந்தப்பட்ட அனைத்து பங்கீட்டு ஆணையங்களும் இனி செல்லத்தக்கதல்ல. மத்திய அமைச்சர் குழு அங்கீகரித்துள்ள இந்த அரசாணை, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுப் பின் சட்டமாகும். ஆயினும், இது பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது, காலந்தாழ்த்துகிற செயலாகவே இருக்கும் என்றும் பல வல்லுநர்கள் கருதுகின்றனர். நடைமுறைக்கேற்றதொரு சிறந்த செயல்பாடாகவே இதனைக் கருதுவதற்குத் தக்கவாறு இந்த நிரந்தர நீர்த்தீப்பாணையம், தேர்தல் ஆணையம், மத்திய ரிசர்வ் வங்கி, உச்சநீதி மன்றம் போன்று சுய தன்னதிகாரம் கொண்டதாக இருப்பது நலம். அப்படி இருக்கும்பட்சத்தில் இதன் செயல்பாடுகள் மற்றெந்த குறுக்கீடுகளுமின்றி சிறப்பாகச் செயல்பட வழிவகுக்கும் . மேலும் சில மாற்றங்கள் கொண்டுவருவதாகவும் அரசுக்குறிப்பீட்டில் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் இந்த நிரந்தர நீர்த்தீர்ப்பாணையம் தன்னாட்சிக் கொண்டதாக அறிவித்தால் வரவேற்கத்தக்கதாக அமையும். ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டவைகளை இது கட்டுப்படுத்தாமல் இருப்பது நலம். உதாரணமாக காவேரி நதிநீர் பங்கீட்டிற்காக கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கும் இடையேயான நதிநீர் பங்கீடு பற்றி அளித்த தீர்ப்பின் படியும், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படியும், காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் உடனடியாக அமைகப்படவேண்டும். இல்லையென்றால் இந்த நிலை வருவதற்கே இன்னும் பத்தாண்டுகள் ஆகிவிடக்கூடும். ஆகவே புதிய பிரச்சனைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் வகையில் நடுவண் அரசு இதை மேற்கொண்டால் இந்த ஆணையம் அனைவராலும் வரவேற்கத்தக்க வகையில் அமையும் வாய்ப்பு அதிகமாகலாம். பழைய தீர்ப்புகளை இது கட்டுப்படுத்தாது என்ற தெளிவான முன் வரைவு மசோதாக்களில் அரசு தாக்கல் செய்தால் நலம் பயக்கும் என்று விவசாயப் பெருங்குடி மக்கள் வானையும், நடுவண் அரசையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க