41% இந்துக்களுக்கு அடிப்படைக்கல்வி இல்லை!

0

பவள சங்கரி

தலையங்கம்

உலகளவிலான அனைத்து மதங்களின் அடிப்படையில் கல்வி கற்றோரின் எண்ணிக்கையை பியூ ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான தகவலாக, உலகளவில் நம் இந்து மதமே அடிப்படைக் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. யூதர்களே கல்வியில் முதலாம் இடத்தில் உள்ளனர்.

41% இந்துக்கள் அடிப்படை கல்வியே இல்லாமல் இருக்கின்றனர்.
53% இந்துப்பெண்கள் / 29% இந்து ஆண்கள் சுத்தமாக கல்வி வாடையே இல்லாதவர்களாக உள்ளனர்!
6.4 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெற்ற இந்து மதத்தின் ஆண்கள் மத்தியில் 4.2 ஆண்டுகள் மட்டுமே பெண்கள் அடிப்படைக் கல்வி பெறுகின்றனர்.
இசுலாமியப்பெண்கள் 4.9 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெறுகின்றனர்.

இதில் மேலும் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் சில பத்தாண்டுகளாக இந்துக்களின் அடிப்படைக் கல்வியில், 3.4 ஆண்டுகள் என்ற நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதினாலேயே இந்த முடிவாம். அப்படியானால் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்துக்களின் கல்வி நிலை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்தும் பார்க்க முடியவில்லை. இன்றும் இந்துக்களின் அடிப்படைக்கல்வியில் ஆண்/பெண் பாலியல் இடைவெளியால் பெண்களின் கல்வி நிலை மிகவும் பின் தங்கியே உள்ளதாகவே இந்த ஆய்வு தெரிவிக்கிறது .. 🙁

நம் இந்தியர்களின் நிலைப்பாடு இன்று இரு வேறுபட்ட எல்லைகளைக் கடந்துகொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமாகிறது. வெளிநாடுகளில் உயர் பதவிகளில் நம் இந்தியர்கள் அதிகமாக சாதனை புரிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஒரு புறம் பெரும்பாலான இந்தியர்கள் அடிப்படைக் கல்வியே இல்லாமல் இருக்கின்றனர். கிராமங்களாலான நம் இந்திய நாட்டில் இன்றும் வடகிழக்கு மாநிலங்கள், பீகார், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசத்தின் பெரும் பகுதிகள், ஆந்திர, தெலுங்கானாவின் உட்பகுதிகள், கர்நாடகத்தின் வட பகுதிகள், தமிழ் நாட்டின், தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களின் உட்பகுதிகள், கொங்கு நாட்டின் தர்மபுரி, கிருட்டிணகிரி, அரூர், ஊத்தங்கரை, திருவண்ணாமலை போன்ற பகுதிகளும் மிகவும் பின் தங்கிய நிலையில், அடிப்படைக் கல்வி என்பதே கேள்விக்குறியாக உள்ளன. எல்லை மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு, காஷ்மீர் போன்ற மாநிலங்களின் அடிப்படைக் கல்வித் தகுதியை உயர்த்த வேண்டியதும் காலத்தின் கட்டாயம். பஞ்சாபிலும், ஜம்மு காஷ்மீரிலும் கல்வித்தரம் உயர உயர வன்முறையாளர்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள் வந்துவிடும் வாய்ப்புகளும் கூடும்.

1991இல் அறிவொளி இயக்கம் என்ற ஒரு இயக்கம் தொடங்கப்பட்டபோது ஏழை, எளிய மாணவர்களை கல்வி நிலையம் கொண்டு சேர்ப்பதற்கு பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ச்சியாக தொடர்கல்வி இயக்கம், வளர்கல்வி இயக்கம், ஆரோக்கிய இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம், சிட்டுக்கள் மையம், துளிர் இல்லம் என இதன் செயல்பாடுகள் விரிவடைந்தன. இந்த அறிவொளி இயக்கம் சமீபத்தில் வெள்ளிவிழா ஆண்டும் (ஆகஸ்ட், 2016) கொண்டாடிவிட்டது. ஆனாலும் இது போன்ற இயக்கங்களின் செயல்பாடுகள் பரவலாக மக்களைச் சென்று அடையவில்லை. அறிவொளி இயக்கம், எழுத்தறிவு இயக்கம் போன்று பல இயக்கங்கள் உருவாக வேண்டும். இதுபோன்ற இயக்கங்களுக்கு பாரபட்சமின்றி மத்திய மாநில அரசுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சமூக நல ஆர்வலர்களும் பெருமளவில் பங்கு கொண்டு நம் இந்திய மக்கள் அனைவரும் அடிப்படைக் கல்வியும், தரமான கல்வியும் பெறும் வகையில் செயல்பட வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.