யார் வந்தாலும், யார் போனாலும் …..
பவள சங்கரி
தலையங்கம்
உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த எழுபத்தைந்து நாட்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்த நம் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அனைவராலும் அன்பாக அம்மா என்றழைக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தமிழக மக்களை விட்டுப்பிரிந்தது தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆணாதிக்கம் மிகுந்த இந்திய அரசியலில் அன்னை இந்திரா போன்று, ஜெயலலிதா அவர்கள் தனியொரு பெண்ணாக இருந்து, துணிவெனும் துணை கொண்டு, அனைவருக்கும் வழிகாட்டியாகவும், தன்னுடைய சமகாலத்தில் மற்றவரால் வெல்ல முடியாத ஒரு மாபெரும் சக்தியாகவும் வாழ்ந்து மறைந்துள்ளார். அவர்தம் மறைவு அரசியலில் ஒரு வெற்றிடத்தையே உருவாக்கியுள்ளது. இதுபோன்றதொரு பெண் ஆளுமை மீண்டும் தமிழகம் பெற முடியுமா என்பது ஐயமே. அன்னார் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்து மக்களின் பேராதரவைப் பெறும் வகையில் பணியாற்ற நமது புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.
For men may come and men may go,
But I go on for ever. (The Brook – Poem by Alfred Lord Tennyson)
யார் வந்தாலும், யார் போனாலும் காவிரி ஆறு குடகில் பிறந்து, மக்களுக்காக ஓடியோடி உழைத்து, பல இலட்சம் மக்களை பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்துக்கொண்டு இறுதியாகக் கடலில் சென்று கலக்கின்றது. அதுபோல புனித கங்கையானது இமயம் தோன்றி பல ஆயிரம் மைல்கள் கடந்து பல இலட்சம் மக்களைக்காத்து வளம் பெறச்செய்து இறுதியாகக் கடலில் கலக்கின்றது. இந்த இரண்டு ஜீவ நதிகளும் யார் வந்தார்கள், யார் சென்றார்கள் என்று பார்க்காமல் தங்கள் கடமைகளைத் தவறாது செய்கின்றன.
இதற்கேற்ப, தமிழகத்தின் துக்கத்தின் உச்சமான தருணத்தில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், பாரதப்பிரதமர் மேன்மைமிகு மோதி அவர்களும், நமது குடியரசுத் தலைவர் , பல்வேறு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி போன்றவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாபெரும் மக்கள் வெள்ளத்தில் அம்மாவின் இறுதி அஞ்சலி எவ்வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக நடந்தது குறிப்பிடத்தக்கதாகும். கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவர்களும், கேரள ஆளுநர் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களும் ஒரே விமானம் மற்றும் ஒரே வாகனத்திலும் பயணம் செய்து அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளது, என அனைத்தையும் பார்க்கும்பொழுது மேலே குறிப்பிட்ட டெனிசன் பாடல் நினைவிற்கு வருகிறது. அந்த கவிஞர் குறிப்பிடுவதுபோல பெரும் தலைவர்கள் வருகிறார்கள், போகிறார்கள். இந்திய மக்களின் கலாச்சாரம் மட்டும் தெளிந்த நீரோடையாக குறிப்பிட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதும் நிதர்சனம்.
மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்துவந்து திரும்பும்போது தன்னுடைய படைத்தளபதி, அமைச்சர்கள் என அனைவரையும் அழைத்து தான் பெற்ற வெற்றி, செல்வங்கள் அனைத்தையும், தம் உடல் செல்லும் பாதையில் இறைத்துக்கொண்டு வருமாறும் தன்னுடைய சவப்பெட்டியினை நான்கு தளபதிகள் தூக்கி வருமாறும், தம் கரங்களை வெளியே தெரியுமாறு வைக்கும்படியும் சொல்லிவிட்டு இறந்தான் . இதற்கான காரணத்தை தளபதிகள் கேட்டபோது, தாம் பெற்ற அத்தனை வெற்றிகள், செல்வங்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தம் என்பதோடு வெளியே தெரியும் தமது கைகள் தாம் கொண்டுசெல்வது ஏதுமில்லை என்பதை தெரிவிப்பதற்காகவும்தான் என்றாராம்.
இதுபோன்று நற்சிந்தைகளை உளத்தில் நிறுத்தி மக்களுக்கு நல்லாட்சி வழங்கக்கூடியவர்கள் வந்து சேருவார்கள் என்று தமிழகம் காத்திருக்கிறது.