Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • கங்கைகொண்ட சோழபுரம் – ஒரு பார்வை

    -மேகலா இராமமூர்த்தி

    விசயாலயச் சோழன் தொடங்கி மூன்றாம் இராசேந்திரன் ஈறாக விளங்கிய பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலம் தமிழ்நிலத்தின் நாகரிக வளர்ச்சிக்கும் பண்பாட்டு எழுச்சிக்கும் பல்வேறு கலைகளின் மலர்ச்சிக்கும் பேருதவி புரிந்த காலமாகும். மாமன்னன் முதலாம் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோயில், அவன் மைந்தனான முதலாம் இராசேந்திரன் எழுப்பிய கங்கைகொண்ட சோழீச்சரம், இரண்டாம் இராசராசனால் தாராசுரத்தில் எழுப்பப்பட்ட ஐராவதீசுவரர் கோயில் ஆகிய மூன்றும் சோழர்காலக் கோயிற்கலையின் உச்சங்களாக இன்றும் மிளிர்கின்றன எனில் மிகையில்லை.

    இம்மூவருள் இராசராசனைத் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலேறிய முதலாம் இராசேந்திர சோழன், சோழப்பேரரசைக் கடல்கடந்தும் விரிவடையச் செய்து தமிழரின் வீரத்தை, பெருமையைத் தரணிக்கெல்லாம் பரப்பிய சிறப்புக்குரியவன்.

    சோழரின் புலிக்கொடியை அயல்நாடுகளிலும் பறக்கவிட்ட முதலாம் இராசேந்திர சோழன் குறித்தும் அவனால் உருவாக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தின் சிறப்பைக் குறித்தும் சிறிது அறிந்துகொள்வோம்.

    முதலாம் இராசேந்திர சோழன்:

    விசயாலயன் காலத்தில் தலையெடுத்த பிற்காலச் சோழர்களின் ஆட்சி, முதலாம் இராசேந்திரன் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது. வானவன் மாதேவியாரான திரிபுவன மாதேவியார்க்கும் முதலாம் இராசராசனுக்கும் மகனாய்ப் பிறந்தவன் முதலாம் இராசேந்திரன். இவன் பிறந்தது மார்கழித் திருவாதிரை என்கின்றனர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி முதலான வரலாற்றறிஞர்கள்; ஆடித் திருவாதிரை என்கின்றார் தொல்பொருள், கல்வெட்டுத்துறை அறிஞர், குடவாயில் பாலசுப்பிரமணியன் (காமரசவல்லியில் உள்ள ராஜேந்திர சோழனின் கல்வெட்டைச் சான்றுகாட்டி). இவனுடைய இயற்பெயர் மதுராந்தகன் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. இராசராசன் ஆட்சியின்போதே படைகளை நடாத்திப் போர்கள் பலவற்றில் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்றிருந்தான் இராசேந்திரன். இலங்கை மன்னனான ஐந்தாம் மகிந்தனையழித்து ஈழநாட்டை முற்றாகச் சோழரின் ஆளுமையின்கீழ்க் கொண்டுவந்தான்.

    இராசேந்திரன் வடநாட்டிற்குப் படையெடுத்துச் சென்று மத்தியப் பிரதேசத்திலுள்ள சித்திரகோடா, கோசலதேசம், ஒட்டரநாடு, வங்காளத்திலுள்ள லாடதேசம் உள்ளிட்ட பல பகுதிகளைக் கைப்பற்றிக் கங்கைக்கரையை அடைந்தான். எனினும், தான்வென்ற நாடுகளை அவன் ஆள விரும்பவில்லை; படையெடுப்பை அதற்காக அவன் நடத்தவும் இல்லை. தான் புதிதாக உருவாக்க விரும்பிய நகரையும் ஏரியையும் கங்கைநீராற் தூய்மைப்படுத்த விரும்பியே படைகளை வடக்கே அனுப்பினான்; தன் படைகளைத் தடுத்த அரசர்களுடனேயே அவன் போர் புரிந்தான் என்கிறார் வரலாற்றறிஞர் மா. இராசமாணிக்கனார் தம்முடைய ’சோழர் வரலாறு’ எனும் நூலில்.

    கங்கையைக் கொண்டதோடு மட்டுமல்லாது கடல்கடந்து சென்று கடாரம்/காழகம் (மலேசியாவிலுள்ள கெடா), சுமத்ரா தீவிலுள்ள ஸ்ரீவிஜயம், இலாமுரி தேசம், மாநக்கவாரம் (நிக்கோபார் தீவுகள்) ஆகியவற்றையும் கைப்பற்றினான் இராசேந்திரன்.

    ’காழகம்’ என்ற சொல் (ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட்டினப்பாலை: 191)) பத்துப்பாட்டில் காணப்படுதலால் சங்கத்தமிழர் நெடுங்காலமாகக் கடாரத்துடன் கடல் வாணிகம் செய்துவந்தமையை அறியலாம்.

    கங்கைகொண்ட சோழபுரம்: முதலாம் இராசராசன் காலம்வரை தஞ்சையே பிற்காலச் சோழர்களின் தலைநகராய்த் திகழ்ந்தது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் அது மாறியது; கங்கை வரையில் படையெடுத்துச் சென்று அப்பகுதிகளைத் தன் குடைநிழலில் கொண்டுவந்ததன் அடையாளமாய்க் கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய நகரத்தை உருவாக்கி அதனையே சோழநாட்டின் தலைநகராக்கினான் ’பரகேசரி’யாகிய இராசேந்திரன்.

    இராசேந்திரனைத் தொடர்ந்து அரசாண்டவர்களும் இந்நகரத்தையே தம் தலைநகராகக் கொண்டமையால் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராய் விளங்கிய பெருமை இந்நகரத்துக்கு உண்டு. இப்போது இந்நகரம் தன் பழம்பெருமையை இழந்து ஒரு சிற்றூராய்க் காட்சியளிப்பது வருத்தமளிக்கின்றது.

    கங்கைகொண்ட சோழீச்சரம்: புதிய தலைநகரத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து, அந்நகரத்தில் அற்புதமானதொரு கோயிலைச் சிவனார்க்கு எடுப்பித்தான் இராசேந்திரன். கங்கைகொண்ட சோழனால் கட்டப்பெற்ற கோயிலாகையால் இது கங்கைகொண்ட சோழீச்சரம் எனும் பெயர்பெற்றது. இந்தியத் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற இக்கோயிலானது ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலைப் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவால் உலகின் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

    அளவில் தஞ்சைப் பெரியகோயிலைவிடச் சிறியதாயினும் சிற்ப வேலைப்பாடுகளில் தஞ்சைக் கோயிலை விஞ்சிய தரத்தோடும் எழிலோடும் திகழ்கின்றது இத்திருக்கோயில். தஞ்சைப் பெரியகோயில் இலிங்கத் திருமேனியைப் போலவே இங்குள்ள இலிங்கத் திருமேனியும் அளவிற் பெரியது; ஒரே கல்லால் ஆனது.

    எழில்மிகு சிற்பங்கள்: கங்கைகொண்ட சோழீச்சரத்தின் கிழக்கு வாயிலில் கோயிலின் எதிரே சுதையாலான பிரம்மாண்டமான நந்தி காணப்படுகின்றது.

    விமானத்தில் அமைந்துள்ள சிற்பங்களும் கோயிலின் வெளிப்புறத்தில் காணப்படுகின்ற சிற்ப உருவங்களும் பெருவனப்புடையவை. தென்மேற்கில் சபாபதியும், மேற்கில் இலிங்கோற்பவரும், தெற்கில் விநாயகரும் அழகாய்க் காட்சிதருகின்றார்கள்.

    வடக்கில் திருவாயிலுக்கருகில் சண்டேச அனுக்கிரகமூர்த்தி சிற்பம் எழிலோடு திகழ்கின்றது. இச்சிற்பத்தில் சிவபெருமான் உமையோடு அமர்ந்திருக்கின்றார். அவரது காலடியில் கைதொழுத நிலையில் அமர்ந்துள்ளார் சண்டேசுவரர். சிவனார் மகிழ்வோடு சண்டேசுவரருக்குக் கொன்றை மாலையொன்றைச் சூட்டுகின்றார்; உமையம்மை அதனைப் பெருமிதத்தோடு கண்டுகளிக்கின்றார். இச்சிற்பத்தை நோக்குகையில் ஒரு நாடகக் காட்சியையே சிற்பமாக வடித்துவிட்டனரோ என வியக்கத் தோன்றுகின்றது.

    இச்சிற்பத்தின் எதிரே காணப்படும் ஞானசரசுவதியின் சிற்பமும் கவினார் வனப்புடையது.

    இச்சிற்பங்களுக்கு மாமல்லபுரச் சிற்பங்களே அடிப்படையானவை என்றாலும் அவற்றினும் மேம்பட்ட சிற்பத்திறனை இவற்றில் காணமுடிகின்றது.

    கங்கைகொண்ட சோழீச்சரத்தைப் புகழ்ந்து கருவூர்த்தேவர் பாடிய பதிகங்கள் ஒன்பதாம் திருமுறையிலுள்ள திருவிசைப்பாவில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று:

    அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
    அங்ஙனே பெரியநீ சிறிய
    என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
    எளிமையை யென்றும்நான் மறக்கேன்
    முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
    முக்கணா நாற்பெருந் தடந்தோட்
    கன்னலே தேனே அமுதமே கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே.
     (திருவிசைப்பா: 1)

    சோழகங்கம்: பஞ்சமில்லா நீர்ப்பாசனத்திற்கு வித்திடும் வகையில் தலைநகராம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இராசேந்திரனின் விருப்பப்படி வெட்டப்பட்டதே சோழகங்கம் எனும் ஏரி. கொள்ளிடத்திலிருந்து அறுபது மைல் தொலைவுக்குக் கால்வாய் வெட்டிச் சோழகங்கத்துக்கு நீர்வழித்தடத்தை உருவாக்கியதாய்த் தெரிகின்றது. கங்கையிலிருந்து பொற்குடங்களில் கொண்டுவரப்பட்ட நீரை இவ்வேரியில் சேர்த்துக் கங்கையையும் காவிரியையும் (காவிரியின் வெள்ளப்பெருக்கைக் கொள்ளுமிடமே கொள்ளிடம்) அப்போதே ஒன்றிணைத்தவன் இராசேந்திரன்.

    ”பகீரதன் ஆகாயகங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததுபோல் கங்கைநீரைச் சோழநாட்டுக்குக் கொண்டுவந்து கங்கைகொண்ட சோழப் பேரேரியை முதலாம் இராசேந்திர சோழன் உருவாக்கினான்” என எசாலம் செப்பேடு கூறுகின்றது.

    சோழகங்கம் இப்போது ’பொன்னேரி’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. விசயநகரத்தார் காலத்தில் இப்பெயர் மாற்றம் ஏற்பட்டதாய்த் தெரிகின்றது. இதில் நீரைவிடவும் இப்போது மணலே அதிகம் நிறைந்திருப்பதைக் காண்கையில் மனம் கனக்கவே செய்கின்றது.

    மாளிகைமேடு: அரண்மனை இருந்த இடமிது. இராசேந்திரனும் அவனைத் தொடர்ந்துவந்த சோழமன்னர்கள் பலரும் கங்கைகொண்ட சோழபுர மாளிகையில் இருந்துகொண்டு ஆட்சிசெய்திருக்கின்றனர். இம்மாளிகை குறித்துக் கல்வெட்டுகளால் அறியமுடிகின்றது.

    ”வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து
    மண்குளிரும் சாயல் வளர்க்குமாம் – தண்கவிகைக்
    கொங்காரலங்கல் குலதீபன் கொய்பொழில்சூழ்
    கங்கா புரமாளி கை.”
    என்று காங்கைகொண்ட சோழபுர மாளிகையைச் சிறப்பிக்கின்றது தண்டியலங்காரப் பாடல்.

    இப்போதிங்கு அரண்மனை இல்லை; அஃது இருந்ததற்கான அடையாளமாய்க் காரைக் கலப்புண்ட செங்கற் சிதைவுகளே மிகுதியாய்க் காணப்படுகின்றன. இங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடங்கள் பல்வேறு காலக்கட்டங்களைக் காட்டுவதால் இம்மாளிகை பிற்காலத்தில் மாற்றிக் கட்டப்பட்டமை புலப்படுகின்றது.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகள்: வரலாற்றுச் சிறப்புடைய கங்கைகொண்ட சோழபுரத்தில் 1980, 1981, 1985, 1987, 1991 ஆகிய ஆண்டுகளில் மாளிகைமேடு, மண்மலை, கல்குளம், குருவாலப்பர் கோயில், பொன்னேரி ஆகிய வெவ்வேறு இடங்களில் மொத்தம் 31 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இவ் அகழாய்வின் பயனாய்ப் பல தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. இவற்றின்மூலம் சோழர்கால அரண்மனை எவ்வாறிருந்தது என்பதையும் அக்காலக் கலை, நாகரிகச் சிறப்பினையும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

    கூரை ஓடுகள்: கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் அதிக அளவில் கிடைத்தவை கூரை ஓடுகளும் இரும்பு ஆணிகளுமேயாகும். இக்கூரை ஓடுகளின் தலைப்பகுதி மரச்சட்டத்தில் பொருத்துவதற்கேற்ப அரைவட்ட வடிவில் காணப்படுகின்றன.

    இரும்பு ஆணிகள்: இரும்பு ஆணிகளும் பிடிப்பாணிகளும் அகழாய்வில் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை 3 செ.மீ முதல் 24 செ.மீ. வரை நீளமுள்ளவை. இவற்றின் தலைப்பகுதி சதுர வடிவிலுள்ளது. ஆணிகளின் தலைப்பகுதியை மரத்துடன் இணைக்குமிடத்தில் நான்கிதழ்கள் கொண்ட பூ வடிவ இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்பட்டு அழகூட்டப்பெற்றுள்ளது.

    வண்ணங்களுடன் கூடிய காரைத்துண்டுகள்: பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கொண்ட சுண்ணாம்புக் காரைத்துண்டுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. கட்டடங்களின் சுவர்ப்பகுதிகளிலும் விதானத்திலும் இவ்வண்ணங்களால் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன என்று இவற்றைக்கொண்டு நாம் ஊகித்தறியலாம்.

    தந்தப் பொருள்கள்: தந்தத்தினாலான ஆளி, யானை ஆகிய உருவங்கள் கிடைத்துள்ளன. அரண்மனையை அணிசெய்யத் தந்தத்தினாலான பொருள்கள் பயன்படுத்தப்பட்டமையை இவை உணர்த்துகின்றன.

    வளையல் துண்டுகள்: சங்கினாலான வளையல் துண்டுகளும், கருப்பு, மஞ்சள், பச்சை, நீல நிறங்களினால் ஆன கண்ணாடி வளையல் துண்டுகளும் இங்குக் கிடைத்துள்ளன. சங்கினாலான வளையல்களைப் பெண்கள் அணியும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது. ஏன்… சிந்துவெளி அகழாய்விலேயே சங்கு வளையல்கள் செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டமை ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சோழர் காலத்தில் சங்கு வளையல்களோடு ’கலகலக்கும்’ கண்ணாடி வளையல்களையும் மகளிர் அணிந்திருந்தமைக்கான சான்றுகள் இவை.

    இவையல்லாமல் மட்பாண்டங்கள், சீனநாட்டுப் பானையோடுகள், காசுகள் செய்யப் பயன்படும் மண்ணாலான வார்ப்புகள், பளிங்குக் கற்களாலான மணிகள், குறுவாளின் கைப்பிடி போன்றவையும் அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன.

    இவ்வாறு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களெல்லாம் கங்கைகொண்ட சோழீச்சரத்திற்கு அருகிலுள்ள அகழ்வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    முடிவுரை: இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாட்டின் தலைநகராகவும் கலைக்கூடமாகவும் திகழ்ந்த கங்கைகண்ட சோழபுரத் திருநகர் இன்று பொலிவிழந்து நலிவடைந்து சிற்றூராய் மாறியிருப்பது காலத்தின் கோலமே. சராசரி மாந்தர்களுக்கும் சாம்ராஜ்ஜியம் ஆளும் வேந்தர்களுக்கும் மட்டுமல்லாது ஊர்களுக்கும்கூட வாழ்வும் தாழ்வும் உண்டென்பதனை இது தெற்றெனக் காட்டுகின்றது.

    இப்பகுதியில் நிகழ்ந்த அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்களும் கல்வெட்டுகளும் இந்நகரின் பண்டைய சீரையும் சிறப்பையும் வியனுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன. சோழர்களின் மங்காத புகழைத் தன்னகத்தே தாங்கியிருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தைப் பழையபடி பொலிவுறச் செய்யும் நன்முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவேண்டும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1.https://ariyalur.nic.in/tourist-place/gangaikonda-cholapuram/

    2. சோழர் வரலாறு – டாக்டர் மா. இராசமாணிக்கனார், பூரம் பதிப்பகம், சென்னை – 600 033.

    3. கங்கைகொண்ட சோழபுரம் இராசேந்திர சோழன் அகழ்வைப்பகம் – பதிப்பாசிரியர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப., சிறப்பு ஆணையர், தொல்லியல் துறை.

    4. https://www.dinamani.com/tamilnadu/ராஜேந்திர-சோழன்-வெட்டிய-சோழகங்கம்-ஏரி-மீண்டும்-உயிர்பெற-வாய்ப்பு-3253462.html

     

    Share
  • ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா ஏவிய லூனா-25 நிலவுத் தளவுளவி

    ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா ஏவிய லூனா-25 நிலவுத் தளவுளவி

    சி. ஜெயபாரதன், கனடா

    ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுத் தட வைப்பு தென்துருவப் போட்டியில் சந்திரயான் -3 இந்திய விண்சிமிழை முந்திச் செல்ல, ரஷ்யா லூனா -25 [LUNA -25] நிலவுத் தளவுளவியை 2023 ஆகஸ்டு 8 ஆம் ஏவியுள்ளது. நிலவு நோக்கிப் பயணம் செய்யும் ரஷ்யாவின் நிலாத் தளவுளவி ஆகஸ்டு 23 ஆம் தேதி நிலவை நெருங்கும் என்று ஏவப்பட்டுள்ளது. வேகமாய் இயங்கும் ரஷ்ய விண்சிமிழ் ஏவுகணை நிலவை 5 அல்லது 6 நாட்களில் நெருங்கும். அடுத்து அது 3 அல்லது 7 நாட்களில் 100 கி.மீ [60 மைல்] உயரத்தில் நிலவைச் சுற்றி, தரையில் இறங்கும். இதுவரை நிலவில் இறங்கித் தளவூர்தி தவழ்ந்த முப்பெரும் வல்லரசுகள் அமெரிக்கா, ரஷ்யா, சைனா ஆகியவையே. ஆனால் எந்த நாடும் துணிந்து நிலவின் தென்துருவத்தில், இதுவரை இறங்கிய தில்லை. தென் துருவத்தின் இருண்ட குழிப் பிரதேசத்தில் நீர்ப்பனி இருப்பு பலவித உலோகங்கள் இருப்பு இந்த நாடுகளை ஈர்த்துள்ளன. பனிக் குன்றுகளின் நீரிலிருந்து எரிசக்தி ஹைடிரஜன், ஆக்சிஜென் வாயுக்கள் பிரித்தெடுத்து பிற்காலத்தில் ராக்கெட் ஏவு எரிசக்தி தயாரிக்கலாம். இந்த தொழில் நுணுக்கப் பந்தயத்தில், வெற்றி பெறுவது ரஷ்யாவா அல்லது இந்தியாவா என்று காணப்போவது ஒரு வரலாற்று சாதனை யாகக் கருதப்படும்.

    https://www.thespacereview.com/article/2228/1

    https://www.russianspaceweb.com/luna_resurs.html

    edition.cnn.com/2023/08/10/world/russia-luna-25-launch-scn/index.html

    Share
  • இந்தியா ஏவிய சந்திரயான் -3 விண்சிமிழ் தற்போது எங்கே பயணம் செய்கிறது?

    இந்தியா ஏவிய சந்திரயான் -3 விண்சிமிழ் தற்போது எங்கே பயணம் செய்கிறது?

    Chandrayaan -3 Lander Module with Rover during Trans Lunar Injection

    சி. ஜெயபாரதன், கனடா

    Chandrayaan-3 Update: ISRO Successfully Completes Translunar Injection of the Lunar Spacecraft

    2023 ஜூலை 14 இல் நிலவை நோக்கி ஏவிய  இந்திய விண்சிமிழ் சந்திரயான் – 3 ஆகஸ்டு 5 ஆம் நாள் எங்கே பயணம் செய்கிறது ?  என்ன நிகழ்கிறது ?  விண்சிமிழ் பூமியை ஐந்து முறை நீள்வட்டப் பாதையில் சுற்றி, ஒவ்வொரு முறையும் பூமியின் சுழல்வீச்சு உந்துவிசையால் வேகம் மிகுந்து, நீள்வட்டப் பாதை நீண்டு, நீண்டு நிலவை நெருங்கியது.  ஆகஸ்டு முதல் தேதி, சிறு தள்ளுவிசை ஏவு கணைகள் அரை மணி நேரம் இயங்கி, விண்சிமிழ் நிலவு ஈர்ப்பு மண்டலத்தில் தாவி [Trans Lunar Orbit] உள்ளது.

    Chandrayaan -2 Orbiter has been used in Chandrayaan -3 to trasmit the message.

    இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் இஸ்ரோ [ISRO] ஆகஸ்டு 23-24 தேதி நாட்களில் சந்திரயான் தளவுளவி நிலவில் மெதுவாய் இறங்கும், அடுத்து அதிலிருந்து, தளவூர்தி வெளியேறி நிலவில் நகரும் என்று எதிர்நோக்கி இருக்கிறது.  அவ்விதம் நிகழும் அந்த வரலாற்று மைல்கல் நிகழ்ச்சியைப் பதிவு செய்யும் ஓர் அற்புதக் கருவி ஆல்ஃபா துகள் எக்ஸ்ரே ஒளிப்பட்டை மானி [Alpha Particle X-Ray Spectrometer] விண்சிமிழ் தளவுளவி, தளவூர்தி யில் இணைக்கப் பட்டுள்ள மற்ற கருவிகள் நிலவின் புழுதி இரசாயனக் கலவைகளை அறிந்து பூமிக்கு அனுப்பும்.  சந்திராயன் -2  2019 இல் ஏவிய விண்சுற்றி [Orbiter] இன்னும் நிலவைச் சுற்றி இயங்கி வருவதால், அடுத்து சந்திராயன் -3 திட்டத்தில் விண்சுற்றி ஒன்று இணைக்கப் படவில்லை.

    2019 இல் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பழுதுகள் ஏற்பட்டு நிலவில் விழுந்து முறிந்து போனது.  இம்முறை அவ்விதத் தவறுகள் நிகழா என்று இஸ்ரோ எதிர்பார்க்கிறது.


    Chandrayaan -3 Trans Lunar Injection on August 1, 2023

    https://weather.com/en-IN/india/space/news/2023-08-01-isro-completes-translunar-injection-of-chandrayaan-3

    Share
  • கனடாவில் புதிதாக 4800 மெகா வாட் ஆற்றல் உடைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைப்பு

    கனடாவில் புதிதாக 4800 மெகா வாட் ஆற்றல் உடைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைப்பு

    சி. ஜெயபாரதன், B. E. (Hons) P.Eng [Nuclear] கனடா

    கனடாவின் அண்டாரியோ மாநிலத்தில் இன்னும் பத்தாண்டுக்குள் 4800 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள் புதிதாக நிறுவகம் ஆகப் போகின்றன என்று  அரச ஆட்சி மன்றத்தில் மாநில முதல் மந்திரி டக்லஸ் ஃபோர்டு 2023 ஜூலை 5 ஆம் தேதி அறிவித்தார். 2050 ஆண்டு நீண்ட காலத் திட்டமாக, அண்டாரியா மாநில அரசு தீர்மானித்தது.  கடந்த 30 வருடங்களாக இத்தகைய பெரிய அணு மின்சாரத் திட்டங்கள் எவையும் எடுத்துக்கொள்ளப் படவில்லை.  இப்பெரும் அணுமின் நிலையத் திட்டங்கள் சுமார் 4.8 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் பரிமாறும்.   மேலும் அணுமின்சாரக் கட்டுமான வேலைகள், சாதனங்கள் உற்பத்தி & இயக்க வேலைகள் பல்லாயிரம் பேருக்கு ஊழியம், ஊதியம் தொடர்ந்து அளிக்கும்.

    கிரீன்ஹௌஸ் வாயுக்கள் வெளியேற்றாத, பேரளவு மின்சக்தி, உற்பத்தி அணுக்கரு விலிருந்து கிடைக்கிறது.  உலக யுரேனிய உலோக இருப்பு தற்போது ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆஃபிரிக்கா, ரஷ்யா, யுக்ரேயின், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது. கனடாவில் சஸ்காட்சுவன் மாநிலத்தில் பேரளவு யுரேனியச் சுரங்கம் உள்ளது.

    கனடாவின் அண்டாரியோ மாநிலத்தில் பேரளவு சுவைநீர்  உள்ள ஐம்பெரும் ஏரிகளில் ஒன்றான ஹூரன் ஏரிக்கரையில் புரூஸ் பவர் நிறுவனம் இயக்கி வரும் புரூஸ் A & B 6000 மெகாவாட் நிலையங்கள் அருகில் புருஸ் C 4800  மெகாவாட் ஆற்றல் மிக்க புது நிலையம் கட்டப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  தற்போது அண்டாரியோ மாநிலத்தில் 30% மின்சாரப் பரிமாற்றம் அணுமின்சக்தியால் நிகழ்ந்து வருகிறது.  கரித்தூள் உற்பத்தியாகாத தூய எரிசக்தி மின்சார உற்பத்தி யுரேனியம் பயன்படும் அணுமின் நிலையங்கள் எதிர்கால 2030-2040 ஆண்டு தொழிற்துறை வளர்ச்சிக்குக் கட்டப்படும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.

    கனடாவில் சிறிய கட்டமைப்பு அணுமின்சக்தி நிலையங்கள்

    அகில தேச அணுசக்தி ஆணையகத்தின் [IAEA, INTERNATIONAL ATOMIC ENERGY AGENCY, VIENNA ] மேற்பார்வையில் காண்டு டிசைனில் [Natural Uranium, Heavy Water Reactors] சிறிய பயன்பாட்டுக்கு 10 மெகாவாட் முதல் 300 மெகாவாட் திறமுள்ளவை [மொத்தம் 700 மெகாவாட்] அமைக்கப் படப் போகின்றன.  உலகளாவிய முறையில் சுமார் 100 [SMR SMALL MODULAR REACTORS] IAEA ஆணையகத்தின் கீழ் கட்டப் படும்.

    World Nuclear Association (2021)

    Rank Country/Region Uranium production (2021) (tonnes U)[1] Percentage of World Production (2021)
    20  Malawi 0 < 0.01%
    19  Germany 0 < 0.01%
    18  France 0 < 0.01%
    17  Romania 0 < 0.01%
    16  Czech Republic 0 < 0.01%
    15  United States 8 0.02%
    14  Brazil 29 0.06%
    13  Pakistan 45 (est.) 0.09%
    12  Iran 71 (est.) 0.15%
    11  South Africa 385 (est.) 0.80%
    10  Ukraine 455 0.94%
    9  India 615 (est.) 1.27%
    8  China 1,885 (est.) 3.90%
    7  Niger 2,248 4.65%
    6  Russia 2,635 5.45%
    5  Uzbekistan 3,500 (est.) 7.24%
    4  Australia 4,192 8.67%
    3  Canada 4,693 9.1%
    2  Namibia 5,753 11.90%
    1  Kazakhstan 21,819 45.14%
    World 48,332 100.00%

    Share
  • முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 5

    முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 5

    சி. ஜெயபாரதன், கனடா

    கலில் கிப்ரான் நூல் தொகுப்பு
    மேரியின் மேப்பிள் சிரப்பு
    காப்பக மகளிர் அணைப்பு

    முதியோர் விழைவது, இதழ்
    முத்தம் அல்ல
    முதியோர்க்கு தேவை , உடல்
    முயக்கம் அல்ல.
    தாம்பத்திய ஆத்ம உறவு !
    பூமியில் மூப்புற்றோர் பூரணம் எய்திட
    தாம்பத்ய சேர்க்கை அளி.

    ********************

    அன்றொரு நாள் காலை 6:30 மணிக்கு மருந்து வில்லைகள் தர ஆஷா அறைக்கு வந்தாள்.  முதியோர் தனிமையில் தவித்துள்ளது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பணிப் பெண்டிரும் இராப் பகலாய், யந்திரம் போல் பணி புரிந்து இயங்கி,எரிந்து போவது தெளிவாய்த் தெரிந்தது.

    காலை எத்தனை மணிக்கு எழுவாய் என்று ஆஷாவைக் கேட்டேன்.  ஆறு மணி ஷிஃப்டுக்கு 4.45 மணிக்கு அலாரம் அடிக்கும், எழுந்து விடுவேன்.

    எத்தனை மணிக்குத் தூங்கப் போவாய் ?

    இரவு 8 மணிக்கு.

    திருமணம் பற்றி விசாரித்தேன்.

    உன் திருமண நாள் குறித்தாகி விட்டதா? என்று கேட்டேன்.

    இல்லை. என்றாள்.  அடுத்த வருசம் நடக்கும், எப்போது என்று தெரியாது.

    விரைவில் மணக்கச் சொல், உன் வருங்காலப் பதியை. தாமதமாயின் உன்னை நான் மணந்து கொள்வேன் என்று  அவனிடம் சொல் என்று சொன்னேன்.  அவள் கொல்லெனச் சிரித்தாள்.

    டின்னர் மேஜையில் அமர்ந்து அவளைப் பார்த்துக்கொண்டே, மிளகைத் தேநீரிலும், சர்க்கரையை முட்டையிலும் தூவினேன்.

    என்ன செய்கிறீங்க இஞ்சினியர் ஸார்? மிளகு டீயா?  நான் வேறு தேநீர் தருகிறேன்  என்று சிரித்தாள்.

    லட்டு கொடுத்தேன். ஒரு காகிதத்தில் சுருட்டி எடுத்துக்கொண்டு போனாள்.

    அடுத்தொரு நாள் வந்த ஆஷாவிடம் கேட்டேன்.

    ஒரு கேள்வி.  தனித்துள்ள ஒரு பெண் மீது கவர்ச்சி ஏற்பட்டு, ஆடவன் ஒருவன் நேசிப்பது சரியா? தவறா?  சொல்.

    தப்பில்லை, சரிதான் என்றாள்.

    உதாரணமாக உன்னைப் போல் தனித்திருக்கும் ஒரு மாதை  ஒருவன் நேசிப்பது தப்பா?

    சற்று சிந்தித்தாள்.

    அது தப்பு  தான் என்றாள்.

    ஏன் என்றேன். தன் எங்கேஜ்மெண்ட் மோதிரத்தைக் காட்டி, அவரை நான் மணப்பதாக உறுதி செய்துள்ளேன்.

    ஆனால் இப்போது நீ தனித்துள்ளவள் தானே!

    உன்னை ஏன் நேசிக்கக்கூடாது  நேசித்தால் என்ன?

    சொன்ன வாக்கு தவறலாமா?

    அவர் ஒருவேளை மனம் மாறி உன்னை மணக்காது போனால் ?

    அவள் சிந்தித்தாள், சிரித்தாள்.  பதில் கூறாது ஓடிவிட்டாள்.

    அடுத்த நாள் சோர்வாக, தளர்ச்சியுடன் இருந்தேன். பார்க்கின்சன் நோய் பாதத்தையும், கால்களையும் கசக்கி ஒடித்தது.

    அவசர மணி அடித்து ஆஷா வந்தாள்.  என்ன ஆயிருச்சி?   என்ன வேணும்  உங்களுக்கு?  என்று கேட்டாள்.

    சிந்திக்கவே இல்லை நான்.

    வலி தாங்காது, என்னை மணந்து கொள், என்றேன்.

    கொல்லெனச் சிரித்தாள்.  சிட்டெனப் பறந்தாள். திரும்பிப் பார்த்தாள்.

    மோதிரக் காதலன் மனம் மாறினால், வரிசையில் நிற்கிறான் ஒருவன், மணம் புரிய ! மோதிரம் தராத காதலன்.

    ஒரு வருடத்தில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்து விடுகின்றன!

    சிறிது நாட்கள் விடுமுறை எடுத்து, ஆஷா முதியோர் காப்பகதுக்கு வரவில்லை.

    **************

    மேப்பிள் சிரப்பு  மூதாட்டி மேரி

    மேரி என் டின்னர் மேஜையில் வலது புறம், கூட அமர்ந்துள்ள மாது.. ஒரு மேஜையில் அமர்வது நால்வர்.  எண்பது வயது மூதாட்டி. கணவன் இறந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டன.  தனித்துப் போன மேரி தனியா கவோ, கூடியோ வாழ வழி தெரியாது தவிப்பில்  கிடந்தாள்.  கணவன் புற்று நோயில் வாடிய போது, முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, அவள் நாட்களை எண்ணிக்கொண்டும், கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டும் கழித்து வந்தாள்.

    ஒரு நாள் என் அறைக்கு வந்து தன் கதையைச் சொன்னாள்.  விழுந்து கால்கள் இரண்டிலும் அறுவை சிகிச்சை.  இடுப்பு பெல்விக் அறுவை வேறு.  தடுமாற்ற நடை.  நாலு சக்கர நடை வண்டி இல்லாது நடக்க முடியாது.  தினமும் என் அறைக்கு வந்து தான் பட்ட சிரமங்களைச் சொல்லிச் செல்வாள்.  கணவன் ஒரு முசுடு.   உதவி செய்யும் மேரியைத் திட்டுவது அடிக்கடி.

    ஒரு சமயம் காப்பகத்தில் பகல் வேளைக்கு பான்கேக் தயார் செய்து, மேப்பிள் சிரப்பு ஊற்றிச் சாப்பிட்டோம்.  அப்போது தனது மகன் வனத்தில் மகன் தயாரித்த மேப்பில் சிரப்பை மேரி கொண்டு வந்தாள். மேஜை நபர் நால்வரும் ஊற்றி உண்டு களித்தோம். ஒரு லிட்டர் குவளை மேப்பிள் சிரப்பை அனைவரும் பகிர்ந்துகொண்ட பிறகு. எஞ்சிய அரை லிட்டரை, என்னிடம் கொடுத்து விட்டாள் மேரி. மற்ற மேஜை நபர் அதைக் கண்டு விழித்தனர்.

    மேரி குடும்ப வாழ்வில் கணவன் வன்சொற்களில் மிகவும் நொந்த போனவள்.  நோயில் துன்புற்ற கணவர் சொல்லடி வாங்கி, வெந்து போனவள்.  எனது ஆறுதல் மொழிகள் கேட்டு, மேரிக்கு என் மீது ஈர்ப்பு உண்டானது.  என் தடுமாறும் குரல், மொழி பலருக்குப் புரிவதில்லை. உண்ணும் போது எனக்கு தேவையான வகைகளை கேட்டு வாங்கி விடுவாள் மேரி. சில சமயம் தள்ளாடி நடந்து போய், அவளே கிரான்பெரி ஜூஸ் எடுத்து வருவாள்.

    மேப்பிள் மேரி எனக்குக்கண்காணிப்பு மூதாட்டி ஆனாள். அறையில் உள்ள  டிவியில் திரைப்படங்கள் சேர்ந்தே பார்த்தோம்.  இந்தியச் சந்திரயான் -3 விண்ணுளவி நிலவுக்கு ஏவியதை டிவியில் கண்டு ரசித்தோம்.  விடுமுறை யில் வந்த என் மகள் மேரிக்கு நிறைய காஜூ, லட்டு வாங்கி வந்தாள்.  சந்தித்துப் பேசினாள்.

    படிப்பினை : 4  உணவை விட முதியோர்க்குக் காப்பகத்தில் தனிமையைப் போக்க உறவே முதன்மை ஆகிறது.

    Share
  • கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (5)

    கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (5)

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    ஆன்மீகம் என்றால் என்ன ?

    மதங்களைக் கடந்த ஆன்மாவை உணர்தல் எனும் பொருளைக் கொள்ளலாம். ஆன்மீக அறிவியலாளர்கள் மனிதனின் மரணம் என்பது உடலுக்குத்தான் உரித்தானது ஆன்மாவுக்கு அழிவில்லை என்று கூறுகிறார்கள்.

    கவியரசர் தனது பதிவினில் மதம் என்பது மனிதனுக்கு அணிகலனே ஒழிய அது ஆடையல்ல என்கிறார். அது எதைக் குறிக்கிறது ?

    ஒரு மனிதனுக்கு ஆடை அவனது மானத்தைக் காக்கும் அளவுக்கு முக்கியமானது ஆனால் அணிகலனோ அவனது அந்தஸ்தைக் காட்டும் அடையாளமாகத்தான் கனிக்கப்படுக்கிறது என்கிறார்.

    மறைமுகமாக மனிதர்க்கு மதம் என்பது அத்தியாவசியமானதொன்றல்ல என்று குறிப்பிடும்போது அவர் மதவெறியை ஒதுக்கி மனிதாபிமானத்தோடு கூடிய ஆன்மீக அறிவியலை நாடும்படி கூறுகிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கர்ணன் எனும் திரைப்படத்துக்காகக் கவியரசர் யாத்த பாடலில்,

    மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
    மரணத்தின் தன்மை சொல்வேன்
    மானிடர் ஆன்மா மரணம் எய்தாது
    மறுபடிப் பிறந்திருக்கும்
    மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்
    வீரத்தில் அதுவும் ஒன்று நீ
    விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி
    வெந்துதான் தீரும் ஓர்நாள் ..

    என்று எழுதியிருந்தார். அழகாக, அற்புதமாக ஆன்மாவின் தன்மையை அதனை அழகாக உள்வாங்கியிருக்காமல் கவியரசரால் இத்தனை அருமையான வரிகளை, எளிமையான வரிகளைத் தந்திருக்க முடியுமா?

    பூஜ்ஜியம் தான் உலகின் அனைத்தின் ஆரம்பமாகும் அந்தப் பூஜ்ஜியத்துக்குள்ளேதா இறை எனும் ஒரு சக்தி தன்னைப் புரிந்து கொள்ளமுடியாத வகையில் புதைத்து வைத்துள்ளது என்பதைப் பூடகமாக கவியரசர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆன்மா உலகில் மறுபடி, மறுபடி பிறந்திருக்கிறது அதன் பிறப்பின் நோக்கமே அனுபவங்களை அடைவதே. அடைந்த அனுபவங்களின் மூலம் தேவையான ஆன்மீகப் புரிதல்களைக் கற்றுக் கொள்வதே ஆன்மாவின் தேவையாகிறது.

    அந்த அனுபவங்களின் அவசியத்தை, அனுபவத்தின் ஆழத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கவியரசர் மதங்கடந்த ஆன்மீக அறிவியல் அடிப்படையில் பல படைப்புகளை ஈந்துள்ளார்.

    அந்த வகையில் இந்தப் பதிவில் அவரது கவிதையொன்றைப் பார்க்க விழைகிறேன்.

    யதார்த்த வாழ்வினில் நாம் காணும் விடயங்களை அப்படியே எளிமையாக ஆண்௶டவன் எனும் ஒரு சக்தியை நோக்கித் தூக்கிப் போட்டு அதற்கு அவ்வாண்டவனும் யதார்த்தமான பதிலைக் கூறி வாழ்வின் உண்மைகளை விளக்குவதாய் அக்கவிதை அமைந்திருக்கும்.

    ஆன்மீக அறிவியலின் படி ஆன்மீக உலகிலிருந்து மறுபிறவி எடுக்கையில் அனுபவங்களின் அடிப்படையில் நாமே எமது வாழ்வினைத் தெரிவு செய்கிறோம் என்கிறார்கள்.

    குழந்தையாய்ப் பூமியில் பிறந்ததும் எமது வாழ்வின் நோக்கத்தை மறந்து போய் விடுகிறோம். எமது பிறப்பின் நோக்கத்தையும், நான் யார் எனும் கேௐள்விக்கு விடை காணூம் முகமாகவும் அதற்கான மார்க்கமாகவே தியானப் பாதையில் பயணிக்கும்படி ரமண மகரிஷி முதற்கொண்௶டு அனைத்து யோகிகளும், மகான்களும் போதிக்கிறார்கள்.

    ஆன்மீகக் கடலில் நீந்திய கவியரசர் என்ன கூறுகிறார் பார்ப்போமே ,

    நான் யார்?

    நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?

    நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.அது எனக்குப் புரியவில்லை. தவிர,ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்துக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே!

    தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

    அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?

    • கவியரசு கண்ணதாசன்

    சரி இனி கவியரசரின் கவிதையினைப் பார்ப்போம். இக்கவிதைக்கு விளக்கம் தேவையில்லை என்பதுவே இக்கவிதையின் சிறப்பாகும்.

    கவிதைகளில் கவியரசர் கையாளும் எளிமையினையும் அப்படியே இக்கவிதை எடுத்துக் காட்டுகிறது.

    வரிக்கு வரி அவரது யதார்த்த வினாக்களும் அதற்கான விளக்கங்களும் அலாதியானவை. ஆன்மீகத் தத்துவத்தின் அடிப்படையை அப்படியே எடுத்தியம்புபவை.

    சாதாரண சராசரி வாழ்வினை மேற்கோள்வோரின் உள்ளக்கிடக்கையை அப்படியே வெளிக்கொணரும் கவிதை என்றே சொல்ல வேண்டும்

    பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
    பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
    படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
    படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
    அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
    அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
    அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
    அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
    பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
    பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
    மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
    மணந்து பாரென இறைவன் பணித்தான்!
    பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
    பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
    முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
    முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
    வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
    வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
    இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
    இறந்து பாரென இறைவன் பணித்தான்!
    ‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
    ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
    ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
    ‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

    – கண்ணதாசன்

    ஒரு ஆன்மாவின் அடையாளம் அதன் அனுபவங்கள். ஆண்டவனின் அருகாமையை உண்ர வைப்பதும், அந்த ஆண்டவன் வெளியே எங்கும் இல்லை எமக்குள்ளேயே இருக்கிறான் என்பதையும் அறிவுறுத்தும் வகையில் கவியரசியரின் ஆன்மீக அறிவியலின் அடையாளமாகத் திகழ்கிறது இக்கவிதை,

    (மீண்டும் வரும்வரை)

    Share
  • ஒரு ஆசிய ஆளுமையின் குரல் ஓய்ந்தது

    ஒரு ஆசிய ஆளுமையின் குரல் ஓய்ந்தது

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    ஜார்ஜ் அழகையா (George Alagiah) எனும் பெயர் இங்கிலாந்து உத்தியோகபூர்வமான தொலைக்காட்சியான பி.பி.ஸி நிறுவனத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெயராகும்.

    1955ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி சிறீலங்கா அப்போதைய இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஒரு கிறீத்துவர்களான டொனால்ட் அழகையா எனும் பொறியியளாலருக்கும், திரேசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகள் உண்டு.

    இவர் தனது பெற்றோர்களுடன் ஐந்தாவது வயதில் மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார்.

    கானா நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்த ஜார்ஜ் அழகையா தனது ஆரம்பக்கல்வியை சென்.ஜோன்ஸ் எனும் போர்ட்ஸ்மவுத் இடத்திலமைந்த உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.

    கல்லூரி வாழ்க்கையைத் தொடர்ந்து ஜார்ஜ் அழகையா அவர்கள் டர்காம் (Durham) யூனிவர்சிட்டியில் அரசியல் துறையில் பட்டம் பெற்றார்.

    பட்டாதாரியாகிய பின்னால் 1980ம் ஆண்டு சவுத் எனும் இதழின் ஆபிரிக்க ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

    சுமார் எட்டு வருடங்கள் இங்கு பணி புரிந்த பின்னால் 1989ம் ஆண்டில் இங்கிலாந்தின் முன்னனி ஊடகமான பி.பி.ஸியில் பணியில் அமர்ந்தார்.

    முதலில் உலக விடயங்களின் நிருபராகவும், பின்னர் ஆபிரிக்க நாடுகளின் நிருபராகவும் பணியாற்றினார். அதன் பின்னால் தென்னாபிரிக்க நிருபராக ஜொகனஸ்பேர்க் இல் நியமிக்கப்பட்டார்.

    ஆபிரிக்க நாட்டு விவகாரங்களில் நன்கு தேர்ச்சியடைந்த இவர் பல ஆபிரிக்க நாடுகளில் பாரிய பிரச்சனைகள் நடைபெற்ற வேளைகளில் மிகவும் துணிகரமாக செய்திகளை வெளியுலகிற்கு கொண்டு வந்திருந்தார்.

    ருவாண்ட நாட்டு இனப்படுகொலைகள், தெற்கு ஈராக் சதுப்புநில ஆரபியர்களின் அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதில் முன்னின்று உழைத்தவர் ஜார்ஜ் அழகையா அவர்கள் .

    ஆப்கானிஸ்தான், லைபிரியா, சிரியா லியோன், சொமாலியா போன்ற நாடுகளின் உள்நாட்டு யுத்தங்களின் போது போர் உக்கிரமாக நடந்த பகுதிகளில் துணிச்சலாக முன்னின்று செய்திகளைச் சேகரித்தார்.

    1999ம் ஆண்டு பி.பி.ஸி மதிய ஒருமணிச் செய்தித்தொகுப்பின் உதவித் தொகுப்பாளராகக் கடைமயாற்றினார்.

    2002ம் ஆண்டு பி.பி.ஸி 4வது அலைவரிசையில் பிரதான செய்தி வாசிப்பாளராகப் பதவியேற்றார்.

    2003ம் ஆண்டு பி.பி.ஸியின் முக்கிய செய்தியான மாலை ஆறு மணிச் செய்தியை மற்றொரு பிரபல்யமான செய்தியாளர் சோபி ரேவேத் (Sophie Raeworth) உடன் 2005 வரையும், பின்னர் மற்றொரு புகழ் பெற்ற செய்தியாளர் நட்டாஷா கப்பிளின்ஸ்கி (Natasaha Kaplinski) உடன் 2007ம் ஆன்டு வரையும் இணைச் செய்தியாளராகவும் பணியாற்றினார்.

    2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 மணிச் செய்திச் சேவையின் பிரதான தொகுப்பாளரானார். அத்தோடு 2006 ம் ஆண்டிலிருந்து பி.பி.ஸி உலகசேவையின், இன்றைய உலகச் செய்திகள் எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் கடமையாற்றினார்.

    அத்தோடு பி.பி.ஸி தொலைக்காட்சியின் பிரதான இரவு 10 மணிச் செய்திகளின் தொகுப்பாளர்கள் இல்லாத ல் அந்தன் செய்தித் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

    ஆபிரிக்க நாட்டு அரசியல் விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்ட இவர் பிரபலமான ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களான நெல்சன் மண்டலே , முன்னால் ஐக்கிய நாடுகள் சபை காரியதரிசி கோவி ஆனன், மதகுரு டெஸ்மண்ட் டூடூ , முன்னால் சிம்பாவெ அதிபர் ரோபேர்ட் முகாபே ஆகியோருடன் நேர்காணல்களை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

    அற்புதமான குரல்வளமும் ஆங்கில மொழியின் ஆளுமையும் கொண்டவர் அமரர் ஜார்ஜ் அழகையா என்பதும் இவர் எமது பின்புல நாடான ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும் பெருமைக்குரியதே .

    பிரான்ஸிஸ் ரோபாதன் (Frances Robathan) எனும் தனது சர்வகலாசாலைத் தோழியான வெள்ளை இனப் பெண்மணியைத் திருமணம் செய்த இவருக்கு இரண்டு ஆண் குழைந்தைகள் உண்டு.

    2000ம் ஆண்டு பாவ்டா (BAFTA) எனும் பிரித்தானிய தொலைக்காட்சிச் சேவைகளுக்கான பரிசினைப் பெற்ற குழுவில் இவரும் அடங்குவர்.

    ரோயல் டெலிவிஷன் சொசைடி எனும் அமைப்பினால் சிறந்த சர்வதேச நிருபர் எனும் பரிசையும் , அமெனெஸ்டி இன்டர்நஷனல் யூகே அமைப்பினால் சிறந்த ஊடகவியலாளர் எனும் பரிசுகளையும் பெற்றவர்.

    2008ம் ஆண்டு இங்கிலாந்து அரசினால் ஆர்டர் ஆவ் பிரிட்டிஷ் எம்பயர் – OBE எனும் விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

    உலக வியாபார அரங்கில் பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு தகுந்த ஊதியம் அளிக்கும் நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யும் அங்காடிகளிலேயே மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் எனும் கருத்தை முன்வைக்கும் Fair trade Foundation எனும் அமைப்பின் நிர்வாகக்குழுவில் கெளரவ அங்கத்தினராக இருந்த இவரை அதிலிருந்து இராஜினாமாச் செய்யும்படி பி.பி.ஸி நிர்வாகம் கேட்டதை அடுத்து இராஜினாமாச் செய்தார். இதற்கு பொதுமக்களிடமிருந்து பி.பி.ஸிக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தது. அதற்கு விளக்கமாக பி.பி.ஸி தமது நடுநிலை வகிக்கும் கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையாகவே அவரை இராஜினாமாச் செய்யச் சொல்லி கேட்டதாக கூறப்பட்டது.

    2003 டிசம்பர் சுனாமி பேரலை அழிவுக்குப் பின்னர் 2004ம் ஆண்டு ஜார்ஜ் அழகையா அவர்கள் தன் தாய்மண்ணான ஈழத்தின் மட்டக்களப்பு பகுதிக்கு விஜயம் செய்து பேரலையால் அழிந்த தனது பூர்வீக இல்லத்தைப் பார்வையிட்டார். அங்கு தானும், தனது சகோதரிகளும் விளையாடிய கிணற்றுப் பகுதியை டையாளம் கன்ட இவர் அதை மகிழ்வுடன் குறிப்பிடிருந்தார்.

    இவரது பிரித்தானிய தொலைக்காட்சிப் பங்களிப்பு 2014ம் ஆண்டு வயிற்றுப் பௐகுதியில் ஏற்பட்ட புற்று நோயினால் தடைப்பட்டது.

    2015ம் ஆண்டு இறுதியில் தனது நோய்க்கான வைத்தியம் நிறைவுற்றதாகவும் உடல்நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் கூறியிருந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி மீண்டும் தொலைக்காட்சிச் செய்திச் சேவையில் இணைந்தார்.

    மீன்டும் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புற்றுநோய் மருவியுள்ளாதாகக் கூறி தொலைக்காட்சிப் பணியை இடைநிறுத்திக் கொண்டார்.

    2020ம் ஆண்டு புற்றுநோய் தனது நுரையீரலுக்கு பரவியுள்ளதாகவும் இனித் தன்னைக் காப்பாற்ற முடியாது என்றும் அறிவித்திருந்தார்.

    37 வருடங்கள் மணவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த இவர் தன் மனைவியையும், குழந்தைகளையும் ஆழமாக நேசித்தார்.

    தனது கடைசி விருப்பமாக தனது உயிர் பிரியும் வரை தனது காதல் மனைவியின் கைகளைப் பற்றியபடி இருக்கவேண்டும் என்பதைக் கொண்டிருந்தார், அவரது ஆசைப்படியே அவரது மனையின் கைகளைப் பற்றியபடியே கடந்த 24ம் தேதி தனது 67வது வயதில் இவ்வுலக வாழ்வை விட்டுப் பிரிந்தார்.

    தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் அமரர் ஜார்ஜ் அழகையா. இத்தகைய ஒருவர் தான் புலம் பெயர்ந்த நாட்டிலே அனைத்து மக்களின் இல்லங்களிலும் ஒரு ஆசிய ஆளூமையாக ஒலித்துக் கொண்டிருந்ததே அவரது தமிழ்ப் பூர்வீகத்தினை உயர்த்திப் பிடிப்பதாகும்.

    தமிழர்களாகிய நாமனைவரும் அவரது ஆத்மசாந்திக்காய் பிரார்த்திப்போம்.

    Share
  • ஆடிப்பூரம்

    ஆடிப்பூரம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    “மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் கண்ணன் கூறுகிறார். திருவெம்பாவையினைத் தந்து சிவனை முன்னுறுத்துகிறார் மணிவாசகப் பெருமான் மார்கழியில். ஆண்டாள் நாச்சியாரும் வந்து திருவாய் மொழியினை வழங்கித் திருமால் பெருமையைப் பேசுகின்றார். சைவமும் வைணவமும் சங்க மிக்கும் சமய நிகழ்வாய், சமய விழாவாய் “மார்கழியில் திருவெம்பாவையும் திருப்பாவையும்” அமைகிறது அல்லவா! ஆனால் மார்கழியில் மங்கல நிகழ்ச்சிகளுக்கு இடங் கொடுக்காமல் விட்டு விட்டோம். இந்த வகையில் இணைவதாய் ஆடியும் வந்து நிற்கிறது. ஆனால் ஆடியும்  – மார்கழி போல் மகத்தான மாதமேயாகும். மார்கழியில் சைவமும் வைணமும் சங்கமிப்பது போல – ஆடியிலும் சங்கமிக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    ஆடியில் வருகின்ற பூரம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். ஆடிப்பூரம் சைவ ஆலயங்களிலும். வைணவ ஆலயங்களிலும் மிகவும் முக்கியத்துவம் மிக்க சமய நிகழ்வாய், சமய விழாவாய் இடம் பெறுவதை நாம் காணக்கூடியதாகவே இருக்கிறது. ஆடிப்பூரம் அம்மனின் அற்புதத் திருவிழாவாகும். மக்களையும், உலகினையும் காப்பதற்கு அம்பாள் சக்தியின் உருவாய் அவதரித்த தினமாய் ஆடிப்பூரம் கொள்ளப்படுகிறது. அதே வேளை வைணவம் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாகவும் கொள்ளப்படுகிறது. உமாதேவி அவதாரம் செய்ததாய் சிவபுராணம் சொல்லுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரில் துளசிச் செடிக்கு அருகில் குழந்தையாய் ஆண்டாள் நாச்சியார் அவதாரம் செய்ததாக வைணவவர்கள் நம்புகின்றார்கள். சக்தியின் அவதாரமாகவே ஆண்டாளின் அவதாரம் கொள்ளப்படுகிறது என்பதும் நோக்கத்தக்கது. இந்த ஆடிப்பூர தினத்தில்த்தான்; சித்தர்களும், யோகிகளும், தவத்தைத் தொடங்குவார்கள் என்று புராணங்கள் புகலுவதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    உலகத்தின் நன்மைக்காகவே அவதாரங்கள் நிகழ்கின்றன. இராமராய், கிருஷ்ணராய், பகவான் விஷ்ணு அவதாரம் செய்தார் என்பதைப் புராணங்கள் எடுத்துரைத்து நிற்கின்றன. அந்த அவதாரங்களுக்குத் துணையாக லக்ஷ்சுமி தேவி – சீதையாய், ருக்மணியாய் பூமியில் அவதாரம் செய்கிறார்கள். ஆனால் ஆண்டாள் நாச்சியார் அவதாரம் இம்மண்ணில் நிகழ்ந்த வேளை அவளுக்குதுணையாக, இணையாக பகவான் விஷ்ணு எந்தவித அவதாரமும் மேற் கொள்ளவே இல்லை என்பதுதான் மிகவும் முக்கியமாகும். ஆனால் சிலையாய் இருந்த கண்ணனையே மனத்தில் உறுதியாய் இருத்தி அவனையே மணப்பேன் என்னும் வைராக்கியத்தை உலகுக்கே காட்டிய பெண்ணாய் வைணவத்தின் மாமலர் ஆண்டாள் நாச்சியார் போற்றப்படுகிறார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். அப்படியான அந்த ஆண்டாள் நாச்சியாரைக் கொண்டாடும் அற்புத நாளாகவும் ஆடிப்பூரம் அமைகிறது என்பதும் சிறப்பல்லவா! பெரியாழ்வார் என்பவர் வைணவத்தில் மதிப்பக்கப்படுகின்ற மிகச்சிறந்த அடியார் ஆவார். அவரின் வளர்ப்பு மகளாய் ஆண்டாள் நாச்சியார் ஆவது ஆண்டவனின் திருவருளே.

    சைவமும், வைணமும், பெயரளவில் இரண்டாக இருந்தாலும் – இறைவனை உறவாய் ஆக்கிக் கொள்ளுவதில் ஒன்றுபட்டே நிற்கின்றன. தாயாய், தந்தையாய், சகதோழனாய், காதலனாய், காதலியாய், என்றெல்லாம் எண்ணி கசிந்து உருகிப் பின்னிப் பிணைந்து நிற்பதை யாவரும் மனங்கொள்ளுதல் வேண்டும். இந்த வகையில் உலகினைக் காத்து நிற்கும் பெருஞ்சக்கியான அம்பாளை பல நிலைகளில் கண்டும், அந்தச் சக்திக்கு தங்களின் விருப்பங்கள் எது எது இருக்கிறதோ அத்தனையையும் நிறைவேற்றிப் பார்ப்பதில் பேரானந்தம் அடைகிறார்கள். அப்படிப் பேரானந்தம் அடையும் பாங்கினை ஆடிப் பூரம்காட்டி நிற்கிறது என்பதே முக்கிய நிலையாகும். இங்கே செய்யப்படும் செயல்களுக்கு முக்கிய காரணம் – பக்தியின் பரவசம் என்றுதான் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

    ஆண்டாள் நாச்சியார் கண்ணனையே கணவனாக்குவேன் என்று ஒரே பிடிவாதமாய் இருக்கிறார். கடவுளை மானிட உருவில் இருக்கும் ஒரு பெண் கணவனாய் கொள்ளுதல் பொருந்துமா என்று விமர்சனம் செய்வது பொருத்தமற்றதாகும். இங்கு பக்தியின் உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. மணிவாசகப் பெருமான் எந்தளவுக்கு சைவத்தில் முக்கியத்துவத்துவப்படுத்தப் படுகிறாரோ அவ்வாறே ஆண்டாளும் அமைகிறார். ஆண்டாள் தன்னுடைய பதினைந்தாம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலந்ததாய் சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும், தந்திருக்கிறார். ஆண்டாளின் இவ்விரு படைப்புக்களுமே, தத்துவத்தையும், பக்தியையும், தேனாய் இனிக்கச் செழுந்தமிழில் பொக்கிஷமாய் அமைந்திருகிறது. இப்படிப் பெருமைக்குரிய ஆண்டாள் நாச்சியாரை அகத்தினில் அமர்த்திட ஆடிப்பூரம் அமைகிறது என்பது மனங்கொள்ளத்தக்கது. வைணவ ஆலயங்களில் ஆடிப்பூரம் மிகவும் பக்திபூர்வமாய் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சைவ ஆலயங்களில் அம்பாளை முன்னிறுத்தி ஆடிப்பூரம் பெருவிழாவாய் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்கு பத்து நாட்கள் திருவிழாவாய் ஆடிப்பூரம் அமைவதையும் காணலாம். உலகத்தின் இயக்கத்துக்குக் காரணமான சக்தியே அம்பாளாய் இருப்பதாய் எண்ணும் அடியார்கள் தங்கள் விருப்பத்துக்கு அமைய – அம்பாளுக்குப் பலவித அலங்காரங்களைச் செய்து தங்கள் ஆராத பக்தியைக் காட்டி நிற்பதைக் காணக்கூடியதாக ஆடிப்பூரம் காணப்படும். அம்பாளுக்கு வளையல்களால் அலங்காரம் செய்வது, அம்பாள் பூப்படைந்து விட்டாள் என்று பலவித சடங்குகளை ஆற்றுவது, என்று ஆடிப்பூரத்தை ஆனந்த விழாவாக ஆக்கியேவிடுவார்கள்.

    அம்பாளையும் தங்கள் குடும்பத்தில் ஒரு உறவாகவே எண்ணி – தங்கள் குடும்பப் பெண்கள் எப்படி யெல்லாம் அலங்கரிப்பார்களோ அப்படியே அலங்கரித்து பேருவகையும், பேரானந்தமும் பெறுவதை ஆடிப்பூரத்தில் கண்டிடலாம். மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு என்றெல்லாம் நடத்தி, வளைகாப்பும் நடத்துவார்கள்.

    அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படும் வளையல்கள் பலவகையாய் அமையும். அந்த வளையல்கள் நிறைவில் அனைவருக்கும் அருட் பிரசாதமாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    திருமணம் ஆகாதவர்க்குத் திருமணம் விரைவாய் திருமணம் ஆவதற்கும், மனக்கசப்பினால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும், ஆடிப்பூரத்தின் வழிபாட்டால் நல்ல பலன் கிடைக்கிறது என்னும் நம்பிக்கை யாவரிடமும் நிறைந்தே இருக்கிறது. தோஷங்கள் கொண்ட தம்பதியர்களுக்குத் தோஷங்கள் நீங்கிவிடும் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது.

    சைவமும்.  வைணவமும் சங்கமிக்கும் சயயப் பெருவிழா ஆலயங்கள் தோறும் நடக்கும்  ஆடிப்பூரம் அமைந்த ஆடி மாதத்தை எப்படி ஒதுக்கிட முடியும்? ஆடிப்பூரம் அம்மனுக்கு உரிய பக்குவமான நாளாகும். பக்தர்கள் மனக்குறைகளைக் களையும் பாங்கான நாளாகும். அமங்கலமே ஆடியென எண்ணும் எண்ணத்தை அகத்தைவிட்டே அகற்றிடுவோம். ஆடியும் ஆடியில் வருகின்ற அத்தனை நாட்களுமே அம்மனுக்குரிய மங்கல நாட்களேயாகும். ஆடிப்பூரம் வாழ்வில் மனமகிழ்ச்சியையும், மனவமைதியையும், மன எண்ணங்களையும் நிறைவேற்றித் தரும் உன்னத நாளாகும். அது மட்டுமல்ல சைவமும் வைணவமும் சக்தியை முன்னிறுத்திச் சங்கமித்து ஒரே நிலையில் பயணப்படும் பக்தி நிறை நாளுமாகும் என்பதை மனமிருத்துதல் வேண்டும்

    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெலாம்
    பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்
    காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்புமங்கை
    சேர்த்தாளை முக்கண்ணியைய  தொழுவார்க்கு    ஒருதீங்கில்லையே

    இன்றே திருவாடிப்பூரம் எமக்காக
    அன்றே ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத
    வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
    ஆழ்வார் திருமகளாராய்

    திருவாடிப்பூரத்துச்  செகத்துதித்தாள் வாழியயே
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியவே
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியவே

    பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
    வேதம் அனைத்திற்கும் வித்தாகும் – கோதைதமிழ்
    ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
    வையம் சுமம்பதும் வம்பு .

    Share
  • முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 4

    முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 4

    சி. ஜெயபாரதன், கனடா

    கலில் கிப்ரான் நூல் தொகுப்பு
    மேரியின் மேப்பிள் சிரப்பு
    காப்பு மகளிர் அணைப்பு

    ***************************

    முதியோர்க்குக் காப்பகத்தில் தாம்பத்திய நெருக்கத்தை அனுமதி.

    மோசஸின் 11ஆம் நெறிக் கட்டளை முதியோர்க்கு

    ********************

    ஆஷாவின் போட்டோ படங்களை உடனே அழித்துவிட்டேன்.  முகமூடி இல்லாது முதியோர் வசிப்பு இல்லத்தில் காப்பு மகளிர் உலவுவது தெரிந்தால் வேலையிலிருந்து நீக்கப்படுவார்.  எனக்குக் குளிப்பு, துடைப்பு, ஆடை அணிவிப்பு, முடக்கு வாதப் பாத வலி சிகிச்சை செய்யும் எல்லா வித மகளிர்க்கும் காஜூ, லட்டு இனிப்புத் தின்பண்டம் அளித்தேன். இராப் பொழுது, ஒரு கதவைத் தட்டி ஆண்குரல் கேட்ட பொற்கைப் பாண்டியன் பக்கத்து வீட்டுக் கதவுகளை எல்லாம் தட்டிய கதை போன்றதுதான்.  ஆஷாவுக்கு மட்டும் இனிப்பு தினம் கொடுப்பது, அவளை நேசித்துக்கொண்டது, எப்படியோ முதியோர் காப்பக மேலாளர் மேடம் ஹாமில்டனுக்குத் தெரிந்துவிட்டது.

    அடுத்து நாள் ஓடி வந்த மேடம், ஒழுக்க நெறிச் சட்ட விதிகளை யாவரது முன்னிலையில் ஒப்பித்தாள். அனைவரும் விழித்தார்.  குசுகுசுப்பு, முணுமுணுப்புகள் செவிக்கு அருகில் எழுந்தன.

    “இனிப்பு தருவது தவறு, பரிசு தருவது கூடாது, மகளிரை அணைப்பது நிறுத்தப்பட வேண்டும். ஆண்-பெண் கைகுலுக்கல் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    முதியோர் காப்பகத்தில் அணைப்பு கூடாது, இனிப்பு கூடாது, காதலிப்பு கூடாது.

    கண்காணிப்பு மகளிர் யாருக்கும் முதியோர் காஜூ, லட்டு கொடுக்கக் கூடாது.  கொடுத்தால் காப்பக மகளிர் வாங்கக் கூடாது.  மறுக்க வேண்டும்.  புதிய ஆணைகள் இவை.

    வந்த சில நாட்களில், முதியோர் காப்பக மகளிர் சுறுசுறுப்பாக, யந்திரம் போல் பணிபுரிவது கண்டு அவரைப் “பாதுகாக்கும் அணங்குகள்” என்று பாராட்டினேன்.

    நோக்குமிடம் எல்லாம் நொந்த மகளிர் மௌன முகத்தில் ஒளிவீசியது.  பலரது முகத்தில் புன்னகை மின்னியது. இப்போது இனிப்புத் தின்பண்டம் கொடுத்தால், யாரும், வாங்குவது கிடையாது.

    ஆனால் ஒரே ஒரு நர்ஸ் மட்டும் விதியை மீறினாள்.  என்  அறைக்கு வரும் போது, பணி முடிந்த பின், இனிப்புத் தின்பண்டம்  எடுத்துக் கொள் என்று வேண்டினால், சிரித்துக்கொண்டு, ஒரு காஜூவோ, லட்டோ எடுத்துக்கொள்வாள்.

    அவள் யார் ?  ஆஷாதான் !

    Share
  • இந்திய விண்னுளவி சந்திரயான் – 3 நிலவை நோக்கி வெற்றிகரமாய் ஏவப்பட்டது

    இந்திய விண்னுளவி சந்திரயான் – 3 நிலவை நோக்கி வெற்றிகரமாய் ஏவப்பட்டது

    https://www.bbc.com/news/world-asia-india-66185565

    சி. ஜெயபாரதன், கனடா

    image.png
    நிலாவில் இறங்கும் தளவுளவி & நகரும் தளவூர்தி

    Chandrayaan-3: India’s historic Moon mission lifts off successfully

    image.png

    image.png
    சந்திரயான் -3 ராக்கெட், விண்ணுளவி, தளவுளவி, தளவூர்தி
    image.png
    நிலவு நோக்கி ராக்கெட் போக்கு
    image.png
    சந்திரயான் -3 தளவுளவி
    image.png

    விண்ணுளவி நிலவுப் பயணப் பாதை

    2023 ஆண்டில் இந்தியா சந்திரயான் – 3  விண்சுற்றி அனுப்பி  நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.

    2023 ஜூலை 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆணையகம் சந்திரயான் -3 விண்ணுளவியை நிலவை நோக்கி வெற்றிகரமாக ஏவியுள்ளது. அத்திட்டத்தின் குறிப்பணி, விண்ணுளவி நிலவை நெருங்கிச் சுற்றி, தென்துருவத்தில் ஒரு தளவுளவியை மெதுவாக இறக்கிய பின்பு, அதிலிருந்து ஒரு தளவூர்தி வெளிவரும்.  அந்த விண்வெளி நிகழ்ச்சி 2023 ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி நிகழும்.  வெற்றிகரமாக அது நிகழ்ந்தால் இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சைனா நாடுகளோடு நான்காவது இடத்தைப் பெறும்.

    இதே குறிப்பணியில் ஏவப்பட்ட சந்திரயான் -2 முழு வெற்றி அடையாது, தளவுளவி நிலவின் தரையில் மோதி முறிந்து தோல்வியுற்றது.  சந்திரயான் -3  விண்ணுளவியின் எடை 3900 கி கிராம்.  விக்ரம் என்னும் பெயருடைய தளவுளவியின் எடை 1500 கி.கிராம்.  பிரஞ்யான் என்னும் பெயருடைய தளவூர்தி  சந்திரயான் -3 திட்டச் செலவு 75 மில்லியன் டாலர் [சுமார்  ரூபாய். 6 பில்லியன்] [2023 நாணய மதிப்பு].

    இதுவரை இறங்கித் தேடாத நிலவின் தென்துருவத்தில், விக்ரம் இறங்கி, தளவூர்தி ஆய்வுகள் புரிந்து பூமிக்குத் தவவல் அனுப்பும். பூமியின் 15 நாட்கள், நிலவின் ஒருநாள் ஆகும். அதாவது சூரிய வெளிச்சம் 15 நாள் நிலவில் தெரியும். 15 நாட்கள் இருள் மயம்.  சூரிய சக்தியில் இயங்கும் தளவுளவியும், தளவூர்தியும் 15 நாட்கள் இயங்கும்.  15 நாட்கள் முடங்கும்.. சந்திரயான் -3 குறிப்பணி வெற்றி அடைந்தால், அடுத்து விமானிகள் ஓட்டும் விண்வெளிச் சுற்றுப் பயணத்தை முயலும்.

    1. Chandrayaan-3: India’s historic Moon mission lifts off successfully – BBC News

    2. India launches historic Chandrayaan-3 mission to land spacecraft on the moon (yahoo.com)

    Share
  • முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 3

    முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 3

    சி. ஜெயபாரதன், கனடா

    கண்காணிப்பு  மகளிர் காப்பு வேலிக்குள்  அடைப்பு
    முதுமை ஊசல் ஆடுது இரவில் !
    புதுமைச் சிறையில், புதிய உறவில் !

    When will it be Dawn to fly ?
    I will see the Swan in the sky.

    இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் கணவனும் மனைவியும் ஒரு குடும்பத்தில் சம்பாதித்து வாழ நேர்கிறது.  அதனால் பெற்ற பிள்ளைகள் வளர்ப்பில் தாய் தந்தையர் நேரடிக் கண்காணிப்பு குறைகிறது.  நோயில் போராடும் வயதான முதியோரை வீட்டில் வைத்து மருத்துவப் பணி செய்ய நேரமும், வசதியுமின்றித் தம்பதிகளைப் புறக்கணிக்கவோ, முதியோர் இல்லத்தில் தள்ளவோ நேரிடுகிறது. இது சரியா, தவறா என்னும் தர்க்க வாதம் செய்வது இக்கட்டுரையின் நோக்கமில்லை.   முதியோரைக் காப்பு இல்லங்களில் சேர்க்க வேண்டிய தருணம் வந்து, அவருக்கு என்னென்ன வசதிகள் பெற ஏற்பாடு செய்வது என்பதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    முதியோரில் மாதருக்கு என்ன வசதிகள்  தேவை, ஆடவருக்கு என்ன தேவை, தம்பதியர் இருவரும் ஒரே இல்லத்தில் வசிக்க அறைகள் அமைக்கத் திட்டமிட வேண்டும்.  முதியோர் இல்லத்தில் உணவு, மருத்துவம்,  குளிப்பு, உடுப்பு, களிப்பு, பயிற்சி, படுக்கை, காற்றோட்டம், மூன்று சமையல், அழுக்கணி துவைப்பு, அபாய நிலை சிகிச்சை, மருத்துவர், உதவி, பணி மாதர், கனிவு மகளிர் 24/7 கண்காணிப்பு வசதிகள் அமைக்க வேண்டும்.

    ரிப்லி முதியோர் காப்பகத்தில் 20 அல்லது 25 எண்ணிக்கையில் சிஃப்டு முறையில் நால்வகைப் பெண்டிர் வேலை செய்து வருகிறார்கள்.  அனுதினம் மருத்துவப் பணிக்கு, குளிப்பு, உடுப்பு, துணி துவைப்பு, தரை சுத்திகரிப்பு, சமையல், பாத்திரம் கழுவல், காய்கறி, கோதுமை, அரிசி, பருப்பு வாங்கல், அஞ்சல் அனுப்பல், எடுத்தல் போன்ற வேலைக்கு ஆடவர், பெண்டிர்,  ஷிஃட் முறையில் வேலை செய்து வருகிறார். பகல் வேளையில் பணி புரியும் மகளிர் பலர். இரவில் பணி புரியும் பெண்டிர் ஒருவர் அல்லது இருவரே.

    ஐம்பது முதியோர் வசிக்கும் ரிவில்லா ரிப்லி இல்லத்தில் ஆடவர் எட்டு, மாதர் எண்ணிக்கை அதிகம்.  ஐம்பது பேரைக் கண்காணிக்கும் மகளிர், குளிப்பு, துடைப்பு, ஆடை அணிவிப்பு சமயங்களில் ஆடவர், பெண்டிருடன் நெருக்கமாகப் பழகவோ, பணி செய்யவோ நேர்கிறது.  அப்போது இரு பாலாருக்கும் கவர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க  இயலாது.

    ஆஷா மேல் ஏற்பட்ட கவர்ச்சி

    நடாஷா என்பது அவள் பெயர்.  பதிவுப் பணி மாது. [Registered Nurse]  கனேடிய மாது. புன்னகையுடன் காலை ஏழு மணிக்கு எனக்கு மருந்து கொண்டு வருவாள்.  நடுத்தர வயது.  முகம் முழுவதும் தெரியாது, முகமூடி போட்டிருப்பதால். கண்கள் மட்டும் தெரியும்.  காலை உணவு, பகல் உணவு எனக்கு மேஜையில் மற்றவருடன் பரிமாறுவாள்.  நல்ல உயரம்.  அவள் ஒரு சமயம் அறைக்கு மருந்து தர வந்த போது,

    “நான் உன்னை ஆஷா என்று அழைக்கலாமா,” என்று கேட்டேன்.

    “அழைக்கலாம்” என்று சொல்லிச் சிரித்தாள்

    “நடாஷா, என்ற பெயர் நீளமாய் இருக்கு !  இந்தியாவில் ஆஷா என்பது பழக்கமான பெயர்.   சுருக்கமான பேர்.  கூப்பிட  நல்லா இருக்கு.

    “ உனக்குப் பிள்ளைகள் இருக்கா ? “ என்று கேட்டேன்.

    “எனக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை” என்று சிரித்தாள்.

    “ கைவிரலில் வைர மோதிரம் மினுக்குதே.”

    “எங்கேஜ்மெட் மோதிரம் அது. அடுத்த வருடம் திருமணம்.”

    “எங்கே வேலை காதலர்க்கு ?

    “ எஞ்சினியர். அணுப் பவர் கம்பெனியில். ஜூனியர் எஞ்சினியர்.

    “உன்னை காமிராவில் படம் எடுக்கலாமா ?

    “ ஓ எடுக்கலாமே” ஆடையைச் சரிப்படுத்திக்கொண்டாள்.

    “முகமூடியை எடுக்க வேண்டுமே”

    முகமூடியை நீக்கினாள். நாலைந்து படங்கள் ஐபோனில் எடுத்தேன்.  சிரித்த முகத்தில் அழகு பொங்கியது.

    “டீனேஜர் போல் இருக்கிறாய்”  என்றேன்.  கொல்லெனச் சிரித்தாள்.

    “அப்படியா ?  நன்றி.  எனக்கு வயது 28.” என்று புன்னகை புரிந்தாள்.

    என்னிடம் இருந்த லட்டு காஜூ தின்பண்டங்களைக் காட்டி, எது வேணுமோ அதை எடுத்துக்கொள்.  காஜூ ஒன்றை எடுத்து,  அதன் பெயர் என்ன?  காஜூ என்றேன்.   முந்திரிப் பருப்பில் செய்தது.

    “நல்லா இருக்கு.   இன்னொன்று எடுத்துக்கொள்”

    அடுத்தொன்று எடுத்துக்கொண்டு பை, பை சொல்லிப் போனாள்.

    மறுநாள் காலை 7:30 மணிக்கு சீரியஸ் முகத்துடன் வந்தாள் ஆஷா.

    “எடுத்த  என்  படங்களை அழித்து விடுங்கள்.  நான் மாட்டிக்கொள்வேன்.  உடனே எல்லா படத்தையும் நீக்கிவிடுங்கள்.  என் படம் ஒன்று கூட உங்கள் ஐபோனில் இருக்கக் கூடாது.  என் வேலை போய்விடும்.”

    Share
  • ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசன் பாடல்களும் . . . . . . . (4)

    ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசன் பாடல்களும் . . . . . . . (4)

    சக்தி சக்திதாசன்

    கடந்த மாதம் ஜூன் 24ம் தேதி சிறுகூடல்பட்டியில் 97 அகவைகளுக்கு முன்னால் மலையரசித் தாயின் மடியான மண்ணில் கலையரசி அருள் பெற்ற குழந்தையாகத் தவழ்ந்தவரே எம் கவியரசர்.

    தமிழுலகின் முத்தாகத் திகழப் போகிறேன் என்பதை அறிவிக்கும் முகமாகவே முத்தையா எனும் பெயர் கொண்டு முகிழ்த்தவர் கவியரசர்.

    நாத்திகம் எனும் ஆழியில் நீந்தி ஆத்திகம் எனும் கரையேறியவர் கண்ணதாசன்.

    அரசியல் எனும் வனத்திலே வாசம் செய்ததினால் பெற்ற அனுபவங்களின் வழியேகி ஆன்மீகக் காற்றை சுவாசித்து மனதினில் வாசம் செய்தவரே கவியரசர்.

    தன்னைத்தானே புடம் போட்டு தனக்குள் சத்திய யுத்தம் நடத்தித் தன் சுயதரிசனம் கண்டவர்.

    ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வதற்கு வாழ்க்கையில் இருந்து அந்நியமாகி காட்டுக்குள் ஓடத்தேவையில்லை, லெளகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே பெளதீக வாழ்க்கையின் அங்கமாக ஆன்மீகத்தை எப்படி இணைத்துக் கொள்ளலாம் என்பதை எளிமையாக விளக்கியவர் கவியரசர்.

    தான் ஒரு நல்ல இந்துவாக வாழ்வதற்கு மற்றைய மதங்களுடன் பேதமையை வளர்க்கத் தேவையில்லை என்று வாழ்ந்து காட்டியவர்.

    ஆன்மீகம் என்றால் வெறும் இறைபக்திதான் ஆன்மீகமா ?

    இல்லை

    மதம் கடந்த தன்னிலை அறிதல் ஆன்மீகமா?

    இரண்டையும் நன்கு அலசிப்பார்த்து இரண்டின் முக்கியவத்தினையும், வேறுபாட்டையும் எளிமையான தமிழில் விளக்கியவர் கவியரசர்.

    இதோ இந்தப் பதிவில் ஆனந்தஜோதி எனும் திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுவதாக இடம்பெற்ற ஒரு காட்சியின் பாடல்.

    அற்புதப் பாடகர் அமரர் டி.எம்.எஸ் அவர்களின் குரலில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ஐயா – இராமமூர்த்தி ஐயா அவர்களின் இசையில் கவியரசர் யாத்த வரிகளைப் பார்ப்போம் வாருங்கள்.

    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

    அருமையான ஒரு கேள்வியை எம்முன்னெ தூக்கி வீசுகிறார் கவியரசர்.

    கவியரசரின் பாடல்களின் தனித்தன்மைகளில் ஒன்று கேள்வியாக வரிகளை வீசிவிட்டு அதை விளக்கும் விடையையும் தொடர்ந்து வீசுவதாகும்.

    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?

    திரும்பவும் கேள்வி வடிவில் பதிலையும் போடுகிறார்.

    பதிலென்று குறிப்பிடும்போது வெளிப்படையாகச் சொல்லாமல் எமக்கு ஒரு கேள்வியைப் போட்டு அதனை எமக்குள் நாமே சுய அலசல் மூலம் அறியக்கூடியதாக அமைத்திருக்கின்றார்.

    அறிவியல் ஆன்மீகத்தின் அடிப்படையே தன்னைத் தானே விசாரிப்பதே ! அதற்கு இங்கே அத்திவாரமிடுகிறார் இல்லையா ?

    இருளில் விழிக்கின்றாய்
    எதிரே இருப்பது புரிகின்றதா ?
    இருளில் விழிக்கின்றாய்
    எதிரே இருப்பது புரிகின்றதா ?
    இசையை ரசிக்கின்றாய்
    இசையின் உருவம் வருகின்றதா?

    கேள்விகள் ! கேள்விகள் ! அவை ஒவ்வொன்றினுள்ளும் ஆன்மீக அறிவியல் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளன.

    ஆமாம் இங்கேதான் இறைவன் என்பதன் ஆன்மீக விளக்கத்தை அறிவிக்க முயல்கிறாரோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

    இருள் அது கருமையாகத்தானே இருக்கிறது.

    இங்கேதான் கவியரசரின் அறிவியலின் ஆழம் புரிகிறது.

    இருளில் “இருக்கின்றாய்” எதிரே இருப்பது தெரிகின்றதா ? என்றுகூட கூறியிருக்கலாம். ஆனால் அதிலென்ன பெரிய ஆன்மீகம் இருக்கிறது என்று எண்ணலாம்.

    இரவில் ” விழிக்கின்றாய் ” என்று கூறுகிறார். தூங்குபவர் இரவில் விழித்தால் எதிரே இருப்பது தெரியாமல் இருப்பது அனைவருக்கும் நிகழக்கூடிய ஒன்றே !

    அதையே மனதை தூக்கத்தில் வைத்திருப்பவர் உள்ளத்துக்குள் இறைவன் இருப்பதை அவர்களால் உணர முடியாது அவர்களின் மனம் இருளில் இருப்பது போலத்தானே என்கிறாரோ ?

    அடுத்துப் பார்த்தால்

    இசையை ரசிக்கின்றாய்
    இசையின் உருவம் வருகின்றதா? என்கிறார் . இறைவனின் வடிவில் ஆன்மாவைல் காண்கிறோம் அதற்கு உருவம் இல்லை ,இசையை ரசிக்கிறோம் அதற்கும் உருவம் இல்லை ஆனால் அதைக் கேள்விக்குள்ளாக்குகிறோமா?

    இங்கேயும் எம்மை ஆன்மீக வழியில் சிந்திக்கத் தூண்டுகிறார் இல்லையா ?

    மீண்டும் ஒரு கேள்வி பாருங்களேன் ,

    உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்
    வெளியே தெரிகின்றதா ?

    உண்மை பேசு என்கிறோம் அந்த உண்மையைக் கண்களால் உருவமாகப் பார்க்கிறோமா ?

    ஆனால் அதே உண்மையை இறைவனாகக் கருதும்போது அதற்கு மட்டும் ஏன் சாட்சி தேடுகிறாய் என்கிறார் கவியரசர் என்பது எனது பார்வை.

    புத்தன் மறைந்து விட்டான்
    அவன் தன் போதனை மறைகின்றதா?
    சத்தியம் தோற்றதுண்டா
    உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
    இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
    சஞ்சலம் வருகின்றதா?

    புத்த பகவானைக் குறிப்பிட்டதுமே கவியரசரின்  ஆன்மீக அறிவியலின் ஆழம் புரிந்து விடுகிறது.

    உள்ளத்தில் எழும் எண்ணங்களின் வடிவே எமது வாழ்க்கையாகிறது என்று போதித்த புத்த பகவானின் போதனைகளின் வீரியத்தை குறிப்பிட்டதின் மூலம் ஆன்மீக அறிவியலின் அடிப்படையையே அலசி விடுகிறார் எம்முடைய கவியரசர்.

    சத்தியத்தின் பாதையே தர்மத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்கிறது இதுவே கீதை, பைபிள், குர்ஆன் ஆகிய மாத நூல்களின் அடிப்படையகிறது.

    இத்தோடு மத நல்லிணக்கத்தினையும் அவையனைத்தும் அறிவியல் ஆன்மீகத்தை முதன்மைப்படுத்துகின்றன என்பதையும் எளிமையாகவும், தெளிவாகாவும் யாராலும் விளக்கிடக் கூடுமா ?

    காலத்தால் அழிக்க முடியாத சரித்திரங்களில் கூறப்பட்டுள்ள உண்மை. அவைகளை பொருளுணர்ந்து படிப்பவர்களுக்கு சஞ்சலம் வருவதற்கு வாய்ப்பே இல்லையென்கிறார் கவியரசர்.

    இதோ அடுத்து கொண்டு வருகிறார் பாருங்களேன் !

    தேடியும் கிடைக்காது
    நீதி தெருவினில் இருக்காது!
    தேடியும் கிடைக்காது
    நீதி தெருவினில் இருக்காது!
    சாட்டைக்கு அடங்காது
    நீதி சட்டத்தில் மயங்காது!
    காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
    காக்கவும் தயங்காது!
    காக்கவும் தயங்காது!

    நீதிதேவன் என்கிறோம். அப்படியானால் நீதி கூட இறைத்தன்மை பெற்று விடுகிறது  இல்லையா ?

    அத்தகைய நீதியை சாட்டை கொண்டு வளைத்திட முடியுமா ?

    சிலவேளைகளில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து நீதியை மழுங்கடிக்கலாம். ஆனால் நீதி நிச்சயம் விழித்துக் கொள்ளும் மாயத்திரையை விலக்கிக் கொண்டு வெளிவரும் என்கிறார்.

    அதேபோலத்தான் மனமெனும் மேடையை மறைத்திருக்கும் மாயத்திரையை அறிவியல் ஆன்மீகத்தின் மூலம் விலக்கினால் நம்முள் உறையும் ஆன்மாவே இறைவன் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாரோ கவியரசர்?

    என் எழுத்துகளின் மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளினுள் இலைமறைகாயாக ஒளிந்திருக்கும் ஆன்மீகத்தை அறிவியல் அடிப்படையில் அலசிப் பார்த்து ஆனந்திக்கிறேன்.

    பாடலைப் பார்த்து ரசிப்பதற்கு:https://youtu.be/jiFxjK4BAv8

    மீண்டும் வருகிறேன்

    Share
  • பிரபஞ்சத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது?

    பிரபஞ்சத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    காலமே கடவுளின் கடிவாளக்
    குதிரை !
    கண்ணுக்குத் தெரியாத
    புதிர்க் குதிரை !
    முடிவும் முதலு மில்லாத
    வடிவிலாக் குதிரை !
    ஓயாது ! சாயாது ! ஓடாமல்
    நிற்காது !
    முற்காலம், பிற்காலம், தற்காலம்
    கொண்ட
    பொற்கால் குதிரை !
    முன்னே பாயும் ! பின்னே தாவாது !
    நேராகச் செல்லும் !
    பாதை மாறாது ! பயணம் கோணாது !
    வேகம் மாறாது !
    விந்தைகள் தீராது ! புதிர்கள் குன்றாது !
    திசைகள் மாறிப் போயினும்
    விசைகள் மாறாது !
    விண்வெளியில்
    ஒளிமந்தைகளை இழுத்துச் செல்லும்
    கருங்குதிரை !
    காலத்தை நிறுத்தி வைக்கக்
    கடிவாள மில்லை
    கடவுளுக்கும் !
    காலத்தின் கர்ப்பக் கருவா
    ஞாலம் ?
    ஆதி அந்த மில்லாமல்
    ஊதி உப்பிடும்
    கால வெளிப் பலூனே
    கடவுளா ?

     

    “டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்!  அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன!  நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்!  அது இரு நூறாண்டுகள் நீடித்தன!  இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்!  அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!”

    ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856-1950)

    “ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஒரு மாபெரும் சித்தாந்தச் சாதனை.”

    பெர்ட்ராண்டு ரஸ்ஸல் (1872-1970)

    “எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும்.  பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும்.  நியதி பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும்!  ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும்!”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    “நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம்.  அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஒரு மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவியிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    மாபெரும் பளுக் கொண்ட பூதக் கருந்துளை கண்டுபிடிப்பு !

    2008 மார்ச் 18 ஆம் தேதி பிரபஞ்ச வெளியில் 3.5 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் பூதகரமான மிகப் பெரிய ஒரு கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது !  அதன் நிறை மாபெரும் காலாக்ஸி வடிவமாக 18 பில்லியன் சூரியன்களின் பளுவாக ஊகிக்கப்பட்டது !  அது ஓர் இரட்டைக் கருந்துளை !  பெரிய கருந்துளை சிறியதை விட ஆறு மடங்கு நிறை மிகுந்தது !  அப்பெரும் கருந்துளை குவஸார் ஒன்றின் (Quasar OJ-287) உட்கருவை உருவாக்கிக் கொண்டிருந்தது.  பேரளவுக் கதிர்வீச்சைப் பொழிந்து பிண்டத் துண்டங்களைச் சுழற்றி விழுங்கும் கருந்துளை கொண்ட குவஸார் என்பது பேரொளி வீசும் போலி விண்மீன் அண்டங்கள் (Quasi Steller Objects) கொண்டது. விண்வெளி விஞ்ஞானிகள் சிறிய கருந்துளையின் சுற்றுவீதியைக் கண்காணித்து முன்னைவிட வலுவான ஈர்ப்பியல் சக்தியோடு (Stronger Gravitational Field) ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதியைச் சோதிக்க முடிந்தது !

    பிரபஞ்சத்தின் மாபெரும் மர்மம் ஈர்ப்பியல் காலவெளி ! 

    17 ஆம் நூற்றாண்டில் கலிலியோ காலத்தில் எழுந்து, ஐஸக் நியூட்டன் விளக்கி, ஐன்ஸ்டைன் விருத்தி செய்த அகில ஈர்ப்பியல் சக்தி 21 ஆம் நூற்றாண்டிலும் சற்று புதிராகவே நிலவி வருகிறது.  நியூட்டன் முதலில் விளக்கிய ஈரளவுப் பரிமாண, தட்டையான ஈர்ப்பியல் உந்துவிசையை, ஐன்ஸ்டைன் நாற்பரிமாண காலவெளி வளைவாக நிரூபித்துக் காட்டினார்.  இப்போது நாமறிந்த ஈர்ப்பியலுக்கு “எதிர் ஈர்ப்பியல்” (Anti-Gravity) இருக்கிறது என்று நிரூபிக்க ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன !  ஐன்ஸ்டைன் ஈர்ப்பியலே தெளிவாகப் புரியாத போது, புதிதாக உளவப்படும் எதிர் ஈர்ப்பியலை என்ன வென்று விளக்குவது ?

    fig-1b-gravity-space-probe.jpg

    1687 இல் ஐஸக் நியூட்டன் (1642-1727) தனது மகத்தான விஞ்ஞானப் படைப்பு “பிரின்ஸ்பியாவில்” (Principia) முதன்முதலில் அறிவித்தார்.  கெப்ளர் விதிகளின்படி (Kepler’s Planetary Laws) அண்டக் கோள்களைச் சீராக நீள்வட்டத்தில் சுற்ற வைக்க வேண்டுமானால், ஒருவித உந்துசக்தி (Force) இருக்க வேண்டும் என்று அதில் விளக்கினார்.  நியூட்டன் ஆராய்ந்து நிலைநிறுத்திய “ஈர்ப்பியல் உந்துவிசைகள்” (Gravitational Forces) அண்டக் கோள்களின் பௌதிகத்தைப் பூமியில் விழும் பொருட்கள், எறிவாணங்கள் (Objects & Projectiles) ஆகியவற்றுடன் பிணைத்தன ! நியூட்டனின் மூன்று நகர்ச்சி நியதிகளும் (Newton’s Laws of Motion) அவரது கால்குலஸ் கணிதமும் பிரபஞ்சத்தின் படைப்பு முறைகளைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவின.

    நியூட்டனின் பௌதிக விஞ்ஞானம் பிரபஞ்சத்தின் இயல்புப் பண்பான “திணிவுநிறை” (Mass) பல்வேறு தொடர்பற்ற முறைகளில் இருப்பதைக் காட்டுகிறது !  திணிவுநிறை எனப்படுவது “முடத்துவம்” (Inertia) உண்டாக்குவது !  நியூட்டன் “இயக்கவியலில்” (Newton’s Dynamics) உந்துவிசை = திணிவுநிறை X விரைவாக்கம் [F= Mass x Acceleration (F=ma)].  நியூட்டனின் “ஈர்ப்பியல் விதி” (Newton’s Gravitational Law) கூறுகிறது : [F= G Mass-1 X Mass-2/distance Square (F=Gm1m2/dxd)] அதாவது இரண்டு அண்டங்களுக்குள் உண்டாகும் கவர்ச்சி உந்துவிசை அவற்றின் நிறைக்கு ஏற்ப நேர் விகிதத்திலும், இடைவெளித் தூர ஈரடுக்கின் எதிர் விகிதத்திலும் உள்ளது என்றும் கூறுகிறது !

    மர்மமான ஈர்ப்பியல் ஆற்றல் எப்படி ஆள்கிறது ?

    கற்களை மேலே எறிந்தால் கீழே விழுகின்றன.  அலைகள் கடலில் பொங்கி எழுந்து அடிக்கின்றன.  அண்டக் கோள்கள் பரிதியைச் சுற்றி வருகின்றன.  காலாக்ஸியில் ஒளிமந்தைகள் கோள்கள் போலச் சுற்றி வருகின்றன.  இவற்றை எல்லாம் அகிலவெளியில் சீரான ஓரியக்கப் பண்பாட்டில் பில்லியன் ஆண்டுகளாக எது கட்டுப்படுத்தி ஆளுகிறது என்ற வினா எழுகிறது !  நியூட்டன் ஈர்ப்பியல் உந்துசக்தி என்றார்.  ஆனால் அவர் கூற்று அகில ரீதியாகப் படியவில்லை. ஐன்ஸ்டைன் அதை வேறுவிதமாகக் கற்பனித்துத் தன் ஒப்பியல் நியதியில் ஈர்ப்பியலைக் காலவெளியாகக் காட்டிப் பிரபஞ்சப் புதிர்களுக்குத் தீர்வு கண்டார்.

    ஐன்ஸ்டைனின் ஈர்ப்பியல் நியூட்டன் கூறியது போல் ஈரண்டங்கள் கவர்ந்து கொள்ளும் ஓர் உந்துசக்தி யில்லை.  நான்கு பரிமாண அங்களவு உடைய அகிலவெளிப் பண்பாடுதான் (Property of Space) ஐன்ஸ்டைன் விளக்கும் ஈர்ப்பியல் !  அண்டமோ, பிண்டமோ (Matter), அல்லது ஒளிமந்தையோ அவை அகில வெளியை வளைக்கின்றன ! அந்த காலவெளி வளைவே ஐன்ஸ்டைன் ஈர்ப்பியல்.  அதை எளிமையாக இப்படி விளக்கலாம்.  கால வெளியைத் தட்டையான ஈரங்கப் பரிமாண ஒரு ரப்பர் தாளாக வைத்துக் கொண்டால் கனத்த பண்டங்கள் ரப்பர் தாளில் குழி உண்டாக்கும்.  அந்த மாதிரி வளைவே ஐன்ஸ்டைன் கூறும் ஈர்ப்பியலாகக் கருதப்படுகிறது.

    ஈர்ப்பியல் சக்தியை மனிதன் பிற சக்திகளைக் கட்டுப்படுத்துபோல் மாற்ற முடியாது !  சில சக்திகளைக் கூட்டலாம்; குறைக்கலாம், திசை மாற்றலாம்.  ஆனால் அண்டத்தின் ஈர்ப்பியலை அப்படிச் செய்ய இயலாது.  ஈர்ப்பியலை எதிரொலிக்கச் செய்ய முடியாது.  மெதுவாக்க முடியாது.  விரைவாக்க இயலாது.  திசைமாற்ற முடியாது.  நிறுத்த முடியாது.  அது ஒன்றை ஒன்று கவரும். ஆனால் விலக்காது.

    ஐன்ஸ்டைன் மாற்றி விளக்கிய ஈர்ப்பியல் நியதி !

    1915 இல் ஐன்ஸ்டைன் நியூட்டனின் ஈர்ப்பியல் விசையை வேறு கோணத்தில் நோக்கி அதை “வளைந்த வெளி” (Curved Space) என்று கூறினார்.  அதாவது ஈர்ப்பியல் என்பது ஒருவித உந்துவிசை இல்லை.  அண்டத்தின் திணிவுநிறை விண்வெளியை வளைக்கிறது என்று முதன்முதல் ஒரு புரியாத புதிரை அறிவித்தார்.  மேலும் இரண்டு அண்டங்களின் இடைத்தூரம் குறுகிய நேர் கோட்டில் இல்லாது பாதையில் உள்ள வேறோர் அண்டத்தின் ஈர்ப்பியல் குழியால் உள்நோக்கி வளைகிறது.  சூரியனுக்குப் பின்னால் உள்ள ஒரு விண்மீனின் ஒளியைப் பூமியிலிருந்து ஒருவர் நோக்கினால், ஒளிக்கோடு சூரியனின் ஈர்ப்பியல் தளத்தால் வளைந்து காணப்படுகிறது.  அதாவது ஒளியானது ஒரு கண்ணாடி லென்ஸை ஊடுருவி வளைவது போல் சூரியனின் ஈர்ப்பு மண்டலம் ஒளியை வளைக்கிறது.  அதாவது ஒளியைத் தன்னருகில் கடத்தும் போது சூரியனின் ஈர்ப்பியல் ஒரு “குவியாடி லென்ஸாக” (Convex Lens or Gravitational Lens) நடந்து கொள்கிறது.  ஹப்பிள் தொலைநோக்கி காட்டிய அனைத்து காலாக்ஸி மந்தைகளும் ஈர்ப்பியல் வளைவால் குவியப்பட்டு ஒளி மிகையாகி பிரமிக்க வைத்தன !  அகில ஈர்ப்பியல் குவியாடி வளைவால் விளைந்த காலாக்ஸிகளின் ஒளிமய உருப்பெருக்கம் பொதுவாக 25 மடங்கு (Magnification of Brightness due to Natural Cosmic Gravitational Lens Amplification) !

     

    விரிந்து கொண்டே போகும் விண்வெளி வளைவு !

    விண்வெளியை ஒரு மாளிகை வடிவாகவோ, கோள உருவாகவோ முப்புற அங்களவுகளால் [Three Dimensional] கற்பனை செய்ய முடியாது.  ஐன்ஸ்டைன் கூற்றுப்படி அது நாற்புற அங்களவு [Four Dimensional] கொண்டது.  அண்ட வெளியின் நான்காம் அங்களவு [Fourth Dimension], காலம் [Time]. கோடான கோடி அண்ட கோளங்களையும், ஒளிமயப் பரிதிகளையும் [Galaxies] பிரம்மாண்டமான பிரபஞ்சம் தன் வயிற்றுக்குள்ளே வைத்துள்ளதால், விண்வெளி வளைந்து வளைந்து, கோணிப் போய் [Curved & Distorted] விரிந்து கொண்டே போகிறது!  விண்வெளியில் நகரும் அண்டக் கோள்களின் ஈர்ப்பியலால் ஒளியின் பாதை பாதிக்கப் படுகிறது. நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் ஒளி, அண்டத்தின் அருகே அதன் ஈர்ப்பு மண்டலத்தில் நுழையும் போது, நேர் கோட்டில் செல்லாது வளைந்தே செல்கிறது.  தொலைவிலிருந்து வரும் விண்மீனின் ஒளி சூரிய ஈர்ப்பு மண்டலத்தின் அருகே சென்றால், அது உட்புறமாக சூரிய மையத்தை நோக்கி, நேர்வளைவு அல்லது குவிவளைவில் [Positive Curve] வளைகிறது.  ஒளியானது சூரிய ஈர்ப்பு மண்டலத்தை நெருங்கும் போது, மையத்திற்கு எதிராக வெளிப்புறத்தை நோக்கி, எதிர்வளைவு அல்லது விரிவளைவில் [Negative Curve] திரிபாவ தில்லை!

    ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி

    2004 ஏப்ரல் 20 ஆம் தேதி நாசா 700 மில்லியன் டாலர் [Gravity Probe-B] விண்ணுளவியை போயிங் டெல்டா-2 ராக்கெட் மூலமாகப் பூமியை 400 மைல் உயரத்தில் சுற்றிவர அனுப்பியது.  அந்த விண்ணுளவி ஓராண்டுகள் பூமியைச் சுற்றி ஐன்ஸ்டைன் புவியீர்ப்புக் கோட்பாட்டை நிரூபிக்க ஆய்வுகள் புரியும்.  உளவி-B ஐன்ஸ்டைன் புதிய விளக்கம் தந்த வெளி, காலம் [Space, Time] ஆகியவற்றைச் சோதிப்பதுடன், அவற்றைப் புவியீர்ப்பு ஆற்றல் எவ்விதம் திரிபு செய்கிறது என்றும் உளவு செய்யும்.  ஐன்ஸ்டைன் கோட்பாடுகளின் இரண்டு பரிமாணங்களை உறுதிப்பாடு செய்ய நான்கு உருண்டைகள் கொண்டு சுற்றும் ஓர் ஆழி மிதப்பி [Gyroscope] விண்ணுளவியில் இயங்கி வருகிறது!  உளவி யானது ஒரு வழிகாட்டி விண்மீனை [Guide Star IM Pegasi] நோக்கித் தன்னை நேர்ப்படுத்திக் கொண்டு, காலம் வெளித் திரிபுகளைப் பதிவு செய்யும்.  ஓராண்டுகளாக ஆழிக் குண்டுகளின் சுற்றச்சுகள் [Spin Axes] எவ்விதம் நகர்ச்சி ஆகியுள்ளன வென்று பதிவு செய்யப்படும்.

    ஈர்ப்பியல் பி-உளவி [Gravity Probe-B] என்பது என்ன?  அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் [Stanford University] பௌதிக விஞ்ஞானிகளும், பொறிநுணுக்காளரும் சேர்ந்து பூமியைச் சுற்றிவரும் ஒரு விண்ணுளவி மூலமாக நுணுக்க முறையில், ஐன்ஸ்டைன் வெளியிட்ட கால, வெளிப் பரிமாணத்தைச் சார்ந்திருக்கும் ஈர்ப்பியல் தத்துவத்தை நிரூபிக்க சுமார் ஈராண்டுகளாகப் பெரு முயற்சி செய்து வருகிறார்கள்.  அதைச் செய்து கொண்டிருக்கும் அண்டவெளிக் கருவிதான், ஈர்ப்பியல் விண்ணுளவி-பி. அக்கருவி 2004 ஆண்டு முதல் பூமியைச் சுற்றிவந்து அப்பணியைச் செய்து வருகிறது!

    விண்ணுளவி-பி என்பது ஈர்ப்பியல் பண்பின் பரிமாணங்களான காலம், வெளி ஆகியவற்றைப் பதிவு செய்யும் சார்பு நிலை சுற்றாழி மிதப்பி [Relativity Gyroscope]. அக்கருவியின் உபகரணங்களைப் படைத்தவர் நாசா, ஸ்டான்·போர்டு நிபுணர்கள்.  பூகோளத்தை 400 மைல் உயரத்தில், துருவங்களுக்கு நேர் மேலே வட்டவீதியில் சுற்றிவரும் ஒரு விண்சிமிழில் அமைக்கப் பட்டுள்ள நான்கு கோள மிதப்பிகளின் மிக நுண்ணிய கோணத் திரிபுகளை உளவித் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும்.  நான்கு கோளங்கள் ஆடும் அந்த மிதப்பி எந்த விதத் தடையும் இன்றி இயங்குவதால், ஏறக்குறைய பரிபூரணமாக கால வெளி மாறுதல்களை நுகர்ந்து அளந்து விடும் தகுதி பெற்றது.  உருளும் அந்த நான்கு கோளங்கள் எவ்விதம் காலமும் வெளியும் பூமியின் இருக்கையால் வளைவு படுகின்றன என்பதைத் துல்லியமாக அளக்கும்.  மேலும் பூமியின் சுழற்சியால் அதன் அருகே காலமும், வெளியும் எப்படி அழுத்தமாகப் பாதிக்கப் படுகின்றன வென்றும் அவை கண்டுபிடித்துப் பதிவு செய்யும்.  பூமியின் ஈர்ப்பியலால் ஏற்படும் இந்த கால, வெளி மாறுபாடுகள் மிகவும் சிறிதானாலும், அவற்றின் பாதிப்புகள் பிரபஞ்ச அமைப்பிலும், பிண்டத்தின் இருக்கையிலும் பெருத்த மாற்றங்களை உண்டாக்க வல்லவை.  நாசா எடுத்துக் கொண்ட ஆய்வுத் திட்டங்களில் விண்ணுளவி-பி ஆராய்ச்சியே மிக்க ஆழமாக உளவும், ஒரு நுணுக்கமான விஞ்ஞானத் தேடலாகக் கருதப் படுகிறது!

    விண்வெளியில் ஈர்ப்பியலின் வேகம் (The Speed of Gravity)

    2003 ஜனவரியில் முதன்முதலாக விஞ்ஞானிகள் ஈர்ப்பியலின் வேகம் மெய்யாக ஒளிவேகம் என்று அளந்து ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியை மற்றுமோர் சோதனை மூலம் நிரூபித்தார்கள் ! அந்த மகத்தான அளவை மெய்ப்பித்தவர்கள்:  அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள தேசீய ரேடியோ வானியல் நோக்ககத்தைச் சேர்ந்த [National Radio Astronomy Observatory (NRAO)] எட்வேர்டு ·பெமலான்டும் (Edward Famalont) மிஸ்ஸொரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த செர்கை கோபைகின் (Sergei Kopeikin) என்பவரும்தான்.  அவர்கள்தான் முதன்முதலில் இயற்கையின் அடிப்படை நிலைத்துவமான ஈர்ப்பியல் வேகத்தைக் கண்டுபிடித்த இருவர் என்று நியூ சையன்டிஸ்ட் மாத இதழில் அறிவித்துப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள் !  ஐஸக் நியூட்டன் ஈர்ப்புக் கவர்ச்சி உடனே அண்டங்களைப் பற்றுவது என்று நம்பினார்.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தன் ஒப்பியல் நியதியில் அது ஒளிவேகத்தில் தாக்குவது என்று அனுமானம் செய்தார்.  அமெரிக்க விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைனின் அனுமானம் மெய்யானது என்று அழுத்தமாக நிரூபித்தனர் !

    பூமியைப் போன்ற அண்டக் கோள்கள், சூரியனைப் போன்ற ஒளிவீசும் சுயவொளி விண்மீன்கள் ஆகியவற்றின் ஈர்ப்பாற்றல் சக்தி ஒளிச்சக்தி போல் ஒளிவேகத்தில் ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு சுற்றி வருகின்றன !  உதாரணமாக விண்வெளியில் சூரியன் திடீரென்று மறைந்து போனால், பூமி தனது சுற்றுவீதியில் எட்டரை நிமிடங்கள் ஒழுங்காகச் சுற்றி வரும் !  அதாவது சூரிய ஒளி பூமியை அடையும் நேரம் வரை பூமி சுற்றுவீதியில் செல்லும்.  சூரிய ஈர்ப்புச் சக்தி நீங்கினால் எட்டரை நிமிடங்கள் கழித்து, நியூட்டன் நியதிப்படிப் பூமி சுற்றாது நேர் கோட்டில் செல்லும் !

    அண்டக் கோளின் விந்தையான ஈர்ப்பியல் பண்பு

    கலிலியோ சாய்ந்துள்ள பைஸா கோபுரத்திலிருந்து கனமான இரும்பு குண்டுகளையும், பளுவில்லாப் பண்டங்களையும் கீழே போட்டு இரண்டும் ஒரே விரைவாக்கத்தில் (Acceleration due to Gravity) விழுந்து ஒரே சமயத்தில் தரையைத் தொட்டதைக் காட்டினார்.  1970 ஆண்டுகளில் பயணம் செய்த விண்வெளி விமானிகள் சூனியமான சந்திர மண்டலத்தில் இரும்பையும், பறவையின் இறகையும் கீழே போட்டு இரண்டும் ஒரே சமயத்தில் தரையைத் தொட்டதைக் காட்டி காலிலியோ சோதனையை மெய்ப்பித்தார்கள் !

    ஐன்ஸ்டைனுடைய ஈர்ப்பியல் வெறும் இழுப்பு விசை மட்டுமில்லை !  அது பிரபஞ்சத்தைப் பின்னிக் கட்டுமானம் செய்த பிணைப்புச் செங்கல் சுண்ணம் !  பிரபஞ்சத்தில் பூதகரமான பயங்கரமான கருங்குழிகளை ஆக்குவதும் ஈர்ப்பியலே ! பிரபஞ்சமானது விரிக்கப்பட்ட ஒரு மாபெரும் ஈர்ப்பியல் படுக்கையில் கிடக்கும் ஒரு கூண்டு !  பிண்டங்கள் இல்லாத பிரபஞ்சத்தில் ஈர்ப்பியல் சக்தி இருக்க முடியாது !  அதாவது ஈர்ப்பியல் என்பது கால வெளியில் இயங்கும் ஒரு பொதுவான நடப்பாடு !  பிரபஞ்சமானது ஈர்ப்பியல் எரிசக்தியாக இயக்கும் ஓர் யந்திரம் !

    ஈர்ப்பியல் ஏறக்குறைய எல்லாவற்றையும் பிரபஞ்சத்தில் ஆட்டிப் படைக்கிறது !  பூமியில் உள்ள யந்திர சாதனங்கள் எல்லாம் அதனால் பாதிக்கப்பட்டு இயங்குகின்றன !  கடிகாரம் முதல் அணை, பாலம், ராக்கெட், விண்கப்பல், துணைக்கோள் அனைத்தும் ஈர்ப்பியலால்தான் இயங்குகின்றன.  ஈர்ப்பியல் நமது உயரம், வடிவம், உணவு செரிப்பு, இரத்த ஓட்டம், மூளைப் பணி, மூச்சிழுப்பு, மூச்சு விடுப்பு அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது !  பூமத்திய ரேகையில் மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமியான ஓர் ஈர்ப்பியல் பம்பரத்தில் மனிதர் வாழ முடியும் என்று அறிய முடிகிறது !

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Searching for the Secrets of Gravity By: John Boslough (May 1989)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 NASA Announces Discovery of Evidence of Water in Mars By Andrew Bridged (Jan 20, 2000)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13. ABC of Relativity By : Bertrand Russell (1985)
    14 Hyperspace By : Michio Kaku (1994)
    15 Einstein’s Gravity – Warping Space & Lensing Star Light
    16 Einstein Proved to be Right on Gravity -BBS News (January 8, 2003)
    17 Physics of the Impossible – New Views of Time Travel, New Book By : Michio Kaku (2008)
    18 The Daily Galaxy – 18 Billion Suns – Biggest Black Hole in Universe Discovered (March 18, 2008)

    Share
  • முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 2

    முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 2

    சி. ஜெயபாரதன், கனடா

    படிப்பினை-2 முதியோர் இல்லப் புலப்பெயர்ச்சி – தவிர்க்க முடியாத ஒரு சிறை அடைப்பு

    ரிவெல்லா முதியோர் இல்லத்தில் 50 பேர் தனித்தனி அறைகளில் ஐந்தாறு மாதங்களோ, ஓரிரு வருடங்களோ வசித்து வருகிறார். தம்பதிகள் ஒரு பெரும் அறையிலே தங்கி இருக்கிறார்.  சேர்ந்த முதல் நாள் காலை  உணவு தின்னக் கூடியிருந்த குழுவுக்கு ஹாலில் நான் அறிமுகம் செய்யப்பட்டேன். சேர்ந்த சில தினங்கள் யாரும் என்னைப் பாராதவர் போல் நடந்துகொண்டார். நான் செவ்வாய்க் கோளில் முதன்முதல் தடம் வைத்தது போல் ரிவெல்லா இல்லத்தில் உணர்ந்தேன்.  சில நாட்களில் சில மாதர், வயோதிகர் என்னைப் பேர் சொல்லி அழைத்தார்கள்.

    உணவு, உறவு, ஓய்வு இம்மூன்றும் முதியோர் இல்லத்தில் ஒருவர் வசிக்க முணுமுணுக்கும் தாரக மந்திரம். இம்மூன்றில் எது ஒன்று முதியோர் இல்லத்தில் ஒருவருக்கு நீண்ட காலம் குன்றி விடுகிறதோ அப்போது  அவரது மனம் மீளாதபடி  உடைகிறது! படாத பாடு படுகிறது.  பழமொழி: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. எந்த உணவு?   ஒருவருக்குப் பிடித்த உணவு.  தினமும்  மூன்று வேளை காலை 8 மணி, பகல் 12 மணி, மாலை 5 மணிக்கு உணவு தயாராகி அனைத்து முதியோரும் ஒருங்கே அமர்ந்து ஹாலில் உண்கிறார்.

    வட அமெரிக்க மாமிச உணவுகள் பலவகை, இந்தியருக்குப் பிடிப்பதில்லை. யாராவது வீட்டில் இந்திய உணவு [அரிசி சாதம், சாம்பார் சப்பாத்தி, குருமா] சமைத்து ஒரு சில தினங்கள் உண்ணலாம். ஆனால் அந்த வசதி நீடிப்பதில்லை. இட்லி, தோசை, உப்புமா, அரிசி சாதம், சாம்பார், புலாவ், தயிர் சாதம் சுவையாக உண்ட தமிழருக்கு உணவு ஒன்றே தீராத முதல் பிரச்சினையாகி விடுகிறது.

    அடுத்தது உறவு. அதாவது ஆண்-பெண் நெருக்க உறவு. [intimate mates] ரிவெல்லா முதியோர் இல்லத்தில் சேர்ந்தது முதல் என்னைக் கொல்லாமல் கொன்றது தனிமை உணர்வு.  மனைவி இறந்த பிறகு, மூன்று தனிப்பட்ட மாதரை அணுகி உடன்வாழ நேராகவே கேட்டேன், துணையாக வாழ்வதற்கு.  அவரை மணந்து கொள்ளவும் தயார் என்றும் சொன்னேன்.. ஒரு மாது, கணவனை இழந்தவர், மும்பையில் வாழ்ந்த [1959-2009] போது நன்கு பழக்கமான தமிழ் மாது. 65 அல்லது 70 வயது இருக்கலாம். அந்த வயதிலும் அழகிய கவர்ச்சி மாது. இனிய குரல். கணவர் சகோதரன் போல் என்னை நடத்திய நண்பர்.  கனடாவில் வாழ்பவர். ஆனால் நான்  எவ்வளவோ முயன்றும் என்னை மணக்க மறுத்துவிட்டார். ஒருத்திக்கு ஒரு கணவன் தான் ஒரு திருமணம் தான், என்ற கொள்கை உடையவர்.

    அடுத்த மாது, பஞ்சாபிப் பெண் 60 அல்லது 65 வயதிருக்கலாம்.  மிகவும் பழக்கமான பஞ்சாபி நண்பர் மனைவியின் தங்கை. திருமணம் ஆகாத மாது.  கனடாவில் தமையனுடன் வசிப்பவர்.  நேராக நான் மணந்துகொள்ள முயன்றும் நண்பரின் மனைவி அதற்கு உடன்படவில்லை.

    எழுபது, எண்பது வயதில ஆணுக்குப் பெண்ணுறவு, பெண்ணுக்கு ஆண் உறவு, மிகவும் தேவைப்படுகிறது.  Reach out & love someone, touch someone. Body heat, intimate relations.  உடல் உறவல்ல, உடல் நெருக்கம் முதியோர் இருபாலாருக்கும் அவசியம் கிடைக்க வாய்ப்புகள் அமைய வேண்டும்.  வயிற்றுப் பசி, அடுத்தது உடற்பசி இந்த இரண்டு மனித இச்சைகள் முதியோருக்குப் பூர்த்தியாக வேண்டும்.  தனிமையில் தவித்து இறக்கும் முதியவர் அநேகம். மகாத்மா காந்தி, ஈவேரா பெரியார், டாக்டர் அம்பேத்கார், போன்றோர் ஒருசில உதாரணங்கள்.

    [தொடரும்]   

    Share
  • முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 1

    முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 1

    RVilla Senior Home

    விக்கலோ கக்கலோ வேதனைச் சிக்கலோ
    பொக்கெனப் போகும் உயிர்.

    சி. ஜெயபாரதன், கனடா

    ரிப்லி முதியோர் காப்பில்லத்தில் என்னைச் சேர்த்து நாலு வாரம் ஆகிறது. சொல்லப் போனால் அது ஒரு முதுமைச் சிறை வாசம் தான்.  அங்குப் போக மாட்டேன் என்று சின்னப் பிள்ளை போல் மகளிடம் பன்முறை தர்க்கம் புரிந்தேன்.  மனைவி இறந்த பின் என் இல்லத்தில் இதுவரை தனியாக, சுதந்திரமாக, இனிதாக வாழ்ந்த நாட்கள், இனிமேல் திரும்பி வருமோ?  பார்க்கின்சன் முடக்குவாத நோய் பத்து ஆண்டுக்கு மேல்  என்னை ஆக்கிரமித்துக்கொண்டு வேதனை தாங்க முடியாமல் தவித்து வருகிறேன்.  அத்துடன் அடுத்து மாரடைப்பு வேறு என்னை எதிர்பாராத நேரத்தில் தாக்கிவிட்டது.  எனக்கு 911 எண்ணை அடித்து அவசர வாகன ஆம்புலன்சைக் கூப்பிட கையில் வலுவில்லை.  தடுமாறி எப்படியோ எதிர்த்த வீட்டு நண்பரை போனில் அழைத்ததும், அவர் பக்கத்து வீட்டு நண்பருடன் ஓடிவந்தார். இருவரும் என் நிலையை நன்கு அறிந்தவர்கள்.  ஒருவர் 911 எண்ணை அடித்து  டெலிபோன் மாதுக்கு என் நிலையை விளக்கினார். ஐந்து நிமிடத்தில், ஒரு வாகனம் வந்து நின்றது. நான் மூச்செடுப்பு குன்றி பேஸ்ட், பிரஸ், சேவர், மெடிகல் கார்டு, மருந்து பில்ஸ் லிஸ்ட் மற்றும் தேவையான உடைகளை மெதுவாய் பையில் எடுத்துக்கொண்டு ஆம்புலன்சில் நானே ஏறினேன்.  மீண்டும் இந்த வீட்டுக்கு வருவேனா என்பது கேள்விக்குறியானதால்,  திரும்பவும் ஒருமுறை என்னில்லத்தைப் பார்த்துக்கொண்டேன்.  எனக்கு மாரடைப்பு வந்துள்ளதை அப்போது நான்  அறியவில்லை.

    படிப்பினை – 1: முதுமையில் நலமாக உள்ள போதே அவசர உடல் நிலைக்குத் தயாராக இரு

    மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் பறந்தது. நண்பர் என் சின்ன மகளுக்குத் தகவல் கொடுத்தார் போனில். சுதந்திர வீட்டு வாழ்வு தடையாகி, மருத்துவமனைச் சிறையில் ஒரு வாரமோ பல வாரமோ, சிக்கிக்கொள்ள இடர்களை இடையூறுகளை தாங்கிக்கொண்டேன்.  தினமும் இரத்த சோதனை. 15 பவுண்டு எடை எப்படியோ போய், எடுக்க இரத்தமில்லை. கைகளில் குத்த இடமில்லை. 24 மணி நேரம் நிரந்தர இரத்தம் திணிவு குறைய,  மருந்து வீல் கம்பத்தை இழுத்துக் கொண்டு கழிப்பறை, குளிப்பறை, நடைபாதையில் போவது கண்கொள்ளாக் காட்சி. இருதய மென் தகடு பம்புக்கு இரத்தம் அனுப்பும் குழலில் அடைப்பு.

    அருகில் காற்றுப் பைகள் பழுதாகி, ஆக்சிஜன் சிலிண்டரை இழுத்துக்கொண்டு ஒருவரைப் படுக்கையில் கிடத்தினார்கள். அவர் போட்ட இருமலில் காங்கிரீட் மனையே ஆடியது.  அவரை வேறு பெரிய மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றார்கள், ஒரு வாரத்தில் அவர் இறந்து போனார்.

    ஆராவாரம், அலறல், இருமல் சத்தங்கள் உள்ள மருத்துவ மனையில் 21 நாட்கள் இரவு சரிவரத் தூங்காமல் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்து எப்போது விடியும் என்று விழித்திருந்தேன். அங்கிருந்து ஓரளவு சுகமாகி, ரிப்லி முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது.  புது சுற்றுப்புறம்.  45 முதியோர் [ஆடவர், மாதர்]-தங்கி வருகிறார். நான்தான் முதல் தங்கும் தமிழன்.  ஆனாலும்  முதல் சில நாட்கள் தனிமை உணர்ச்சி கொன்றது. பார்க்கின்சன் நோயில் துன்புற்று வரும் நான் இப்போது மாரடைப்பு வந்து, வலுவில்லாமல், கைத்தடி ஊன்றி பெங்குயின் போல் ஊர்ந்து வருகிறேன்.  மருத்துவமனைச் சிறையிலிருந்து இப்போது முதியோர் காப்பு இல்லத்தில் சிக்கிக்கொண்டு உண்டு, உறங்கி, எழுந்து ஊர்ந்து வருகிறேன்.  அது பெரிய சிறை.  நிமிர்ந்து நாலு சக்கர நடப்பு சாதனத்துடன் ஊர்ந்திடும் மனிதன் நான் ஒருவன் தான்  பலர் முதுகு வளைந்து தள்ளாடும் வயோதிகர். அவர்கள் நிலை என்னை விட இரங்கத் தக்கது.

    [தொடரும்]

    Share