முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 5

0

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் நூல் தொகுப்பு
மேரியின் மேப்பிள் சிரப்பு
காப்பக மகளிர் அணைப்பு

முதியோர் விழைவது, இதழ்
முத்தம் அல்ல
முதியோர்க்கு தேவை , உடல்
முயக்கம் அல்ல.
தாம்பத்திய ஆத்ம உறவு !
பூமியில் மூப்புற்றோர் பூரணம் எய்திட
தாம்பத்ய சேர்க்கை அளி.

********************

அன்றொரு நாள் காலை 6:30 மணிக்கு மருந்து வில்லைகள் தர ஆஷா அறைக்கு வந்தாள்.  முதியோர் தனிமையில் தவித்துள்ளது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பணிப் பெண்டிரும் இராப் பகலாய், யந்திரம் போல் பணி புரிந்து இயங்கி,எரிந்து போவது தெளிவாய்த் தெரிந்தது.

காலை எத்தனை மணிக்கு எழுவாய் என்று ஆஷாவைக் கேட்டேன்.  ஆறு மணி ஷிஃப்டுக்கு 4.45 மணிக்கு அலாரம் அடிக்கும், எழுந்து விடுவேன்.

எத்தனை மணிக்குத் தூங்கப் போவாய் ?

இரவு 8 மணிக்கு.

திருமணம் பற்றி விசாரித்தேன்.

உன் திருமண நாள் குறித்தாகி விட்டதா? என்று கேட்டேன்.

இல்லை. என்றாள்.  அடுத்த வருசம் நடக்கும், எப்போது என்று தெரியாது.

விரைவில் மணக்கச் சொல், உன் வருங்காலப் பதியை. தாமதமாயின் உன்னை நான் மணந்து கொள்வேன் என்று  அவனிடம் சொல் என்று சொன்னேன்.  அவள் கொல்லெனச் சிரித்தாள்.

டின்னர் மேஜையில் அமர்ந்து அவளைப் பார்த்துக்கொண்டே, மிளகைத் தேநீரிலும், சர்க்கரையை முட்டையிலும் தூவினேன்.

என்ன செய்கிறீங்க இஞ்சினியர் ஸார்? மிளகு டீயா?  நான் வேறு தேநீர் தருகிறேன்  என்று சிரித்தாள்.

லட்டு கொடுத்தேன். ஒரு காகிதத்தில் சுருட்டி எடுத்துக்கொண்டு போனாள்.

அடுத்தொரு நாள் வந்த ஆஷாவிடம் கேட்டேன்.

ஒரு கேள்வி.  தனித்துள்ள ஒரு பெண் மீது கவர்ச்சி ஏற்பட்டு, ஆடவன் ஒருவன் நேசிப்பது சரியா? தவறா?  சொல்.

தப்பில்லை, சரிதான் என்றாள்.

உதாரணமாக உன்னைப் போல் தனித்திருக்கும் ஒரு மாதை  ஒருவன் நேசிப்பது தப்பா?

சற்று சிந்தித்தாள்.

அது தப்பு  தான் என்றாள்.

ஏன் என்றேன். தன் எங்கேஜ்மெண்ட் மோதிரத்தைக் காட்டி, அவரை நான் மணப்பதாக உறுதி செய்துள்ளேன்.

ஆனால் இப்போது நீ தனித்துள்ளவள் தானே!

உன்னை ஏன் நேசிக்கக்கூடாது  நேசித்தால் என்ன?

சொன்ன வாக்கு தவறலாமா?

அவர் ஒருவேளை மனம் மாறி உன்னை மணக்காது போனால் ?

அவள் சிந்தித்தாள், சிரித்தாள்.  பதில் கூறாது ஓடிவிட்டாள்.

அடுத்த நாள் சோர்வாக, தளர்ச்சியுடன் இருந்தேன். பார்க்கின்சன் நோய் பாதத்தையும், கால்களையும் கசக்கி ஒடித்தது.

அவசர மணி அடித்து ஆஷா வந்தாள்.  என்ன ஆயிருச்சி?   என்ன வேணும்  உங்களுக்கு?  என்று கேட்டாள்.

சிந்திக்கவே இல்லை நான்.

வலி தாங்காது, என்னை மணந்து கொள், என்றேன்.

கொல்லெனச் சிரித்தாள்.  சிட்டெனப் பறந்தாள். திரும்பிப் பார்த்தாள்.

மோதிரக் காதலன் மனம் மாறினால், வரிசையில் நிற்கிறான் ஒருவன், மணம் புரிய ! மோதிரம் தராத காதலன்.

ஒரு வருடத்தில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்து விடுகின்றன!

சிறிது நாட்கள் விடுமுறை எடுத்து, ஆஷா முதியோர் காப்பகதுக்கு வரவில்லை.

**************

மேப்பிள் சிரப்பு  மூதாட்டி மேரி

மேரி என் டின்னர் மேஜையில் வலது புறம், கூட அமர்ந்துள்ள மாது.. ஒரு மேஜையில் அமர்வது நால்வர்.  எண்பது வயது மூதாட்டி. கணவன் இறந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டன.  தனித்துப் போன மேரி தனியா கவோ, கூடியோ வாழ வழி தெரியாது தவிப்பில்  கிடந்தாள்.  கணவன் புற்று நோயில் வாடிய போது, முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, அவள் நாட்களை எண்ணிக்கொண்டும், கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டும் கழித்து வந்தாள்.

ஒரு நாள் என் அறைக்கு வந்து தன் கதையைச் சொன்னாள்.  விழுந்து கால்கள் இரண்டிலும் அறுவை சிகிச்சை.  இடுப்பு பெல்விக் அறுவை வேறு.  தடுமாற்ற நடை.  நாலு சக்கர நடை வண்டி இல்லாது நடக்க முடியாது.  தினமும் என் அறைக்கு வந்து தான் பட்ட சிரமங்களைச் சொல்லிச் செல்வாள்.  கணவன் ஒரு முசுடு.   உதவி செய்யும் மேரியைத் திட்டுவது அடிக்கடி.

ஒரு சமயம் காப்பகத்தில் பகல் வேளைக்கு பான்கேக் தயார் செய்து, மேப்பிள் சிரப்பு ஊற்றிச் சாப்பிட்டோம்.  அப்போது தனது மகன் வனத்தில் மகன் தயாரித்த மேப்பில் சிரப்பை மேரி கொண்டு வந்தாள். மேஜை நபர் நால்வரும் ஊற்றி உண்டு களித்தோம். ஒரு லிட்டர் குவளை மேப்பிள் சிரப்பை அனைவரும் பகிர்ந்துகொண்ட பிறகு. எஞ்சிய அரை லிட்டரை, என்னிடம் கொடுத்து விட்டாள் மேரி. மற்ற மேஜை நபர் அதைக் கண்டு விழித்தனர்.

மேரி குடும்ப வாழ்வில் கணவன் வன்சொற்களில் மிகவும் நொந்த போனவள்.  நோயில் துன்புற்ற கணவர் சொல்லடி வாங்கி, வெந்து போனவள்.  எனது ஆறுதல் மொழிகள் கேட்டு, மேரிக்கு என் மீது ஈர்ப்பு உண்டானது.  என் தடுமாறும் குரல், மொழி பலருக்குப் புரிவதில்லை. உண்ணும் போது எனக்கு தேவையான வகைகளை கேட்டு வாங்கி விடுவாள் மேரி. சில சமயம் தள்ளாடி நடந்து போய், அவளே கிரான்பெரி ஜூஸ் எடுத்து வருவாள்.

மேப்பிள் மேரி எனக்குக்கண்காணிப்பு மூதாட்டி ஆனாள். அறையில் உள்ள  டிவியில் திரைப்படங்கள் சேர்ந்தே பார்த்தோம்.  இந்தியச் சந்திரயான் -3 விண்ணுளவி நிலவுக்கு ஏவியதை டிவியில் கண்டு ரசித்தோம்.  விடுமுறை யில் வந்த என் மகள் மேரிக்கு நிறைய காஜூ, லட்டு வாங்கி வந்தாள்.  சந்தித்துப் பேசினாள்.

படிப்பினை : 4  உணவை விட முதியோர்க்குக் காப்பகத்தில் தனிமையைப் போக்க உறவே முதன்மை ஆகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *