கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (5)

0

சக்தி சக்திதாசன்
லண்டன்

ஆன்மீகம் என்றால் என்ன ?

மதங்களைக் கடந்த ஆன்மாவை உணர்தல் எனும் பொருளைக் கொள்ளலாம். ஆன்மீக அறிவியலாளர்கள் மனிதனின் மரணம் என்பது உடலுக்குத்தான் உரித்தானது ஆன்மாவுக்கு அழிவில்லை என்று கூறுகிறார்கள்.

கவியரசர் தனது பதிவினில் மதம் என்பது மனிதனுக்கு அணிகலனே ஒழிய அது ஆடையல்ல என்கிறார். அது எதைக் குறிக்கிறது ?

ஒரு மனிதனுக்கு ஆடை அவனது மானத்தைக் காக்கும் அளவுக்கு முக்கியமானது ஆனால் அணிகலனோ அவனது அந்தஸ்தைக் காட்டும் அடையாளமாகத்தான் கனிக்கப்படுக்கிறது என்கிறார்.

மறைமுகமாக மனிதர்க்கு மதம் என்பது அத்தியாவசியமானதொன்றல்ல என்று குறிப்பிடும்போது அவர் மதவெறியை ஒதுக்கி மனிதாபிமானத்தோடு கூடிய ஆன்மீக அறிவியலை நாடும்படி கூறுகிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ணன் எனும் திரைப்படத்துக்காகக் கவியரசர் யாத்த பாடலில்,

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணம் எய்தாது
மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று நீ
விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர்நாள் ..

என்று எழுதியிருந்தார். அழகாக, அற்புதமாக ஆன்மாவின் தன்மையை அதனை அழகாக உள்வாங்கியிருக்காமல் கவியரசரால் இத்தனை அருமையான வரிகளை, எளிமையான வரிகளைத் தந்திருக்க முடியுமா?

பூஜ்ஜியம் தான் உலகின் அனைத்தின் ஆரம்பமாகும் அந்தப் பூஜ்ஜியத்துக்குள்ளேதா இறை எனும் ஒரு சக்தி தன்னைப் புரிந்து கொள்ளமுடியாத வகையில் புதைத்து வைத்துள்ளது என்பதைப் பூடகமாக கவியரசர் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மா உலகில் மறுபடி, மறுபடி பிறந்திருக்கிறது அதன் பிறப்பின் நோக்கமே அனுபவங்களை அடைவதே. அடைந்த அனுபவங்களின் மூலம் தேவையான ஆன்மீகப் புரிதல்களைக் கற்றுக் கொள்வதே ஆன்மாவின் தேவையாகிறது.

அந்த அனுபவங்களின் அவசியத்தை, அனுபவத்தின் ஆழத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கவியரசர் மதங்கடந்த ஆன்மீக அறிவியல் அடிப்படையில் பல படைப்புகளை ஈந்துள்ளார்.

அந்த வகையில் இந்தப் பதிவில் அவரது கவிதையொன்றைப் பார்க்க விழைகிறேன்.

யதார்த்த வாழ்வினில் நாம் காணும் விடயங்களை அப்படியே எளிமையாக ஆண்௶டவன் எனும் ஒரு சக்தியை நோக்கித் தூக்கிப் போட்டு அதற்கு அவ்வாண்டவனும் யதார்த்தமான பதிலைக் கூறி வாழ்வின் உண்மைகளை விளக்குவதாய் அக்கவிதை அமைந்திருக்கும்.

ஆன்மீக அறிவியலின் படி ஆன்மீக உலகிலிருந்து மறுபிறவி எடுக்கையில் அனுபவங்களின் அடிப்படையில் நாமே எமது வாழ்வினைத் தெரிவு செய்கிறோம் என்கிறார்கள்.

குழந்தையாய்ப் பூமியில் பிறந்ததும் எமது வாழ்வின் நோக்கத்தை மறந்து போய் விடுகிறோம். எமது பிறப்பின் நோக்கத்தையும், நான் யார் எனும் கேௐள்விக்கு விடை காணூம் முகமாகவும் அதற்கான மார்க்கமாகவே தியானப் பாதையில் பயணிக்கும்படி ரமண மகரிஷி முதற்கொண்௶டு அனைத்து யோகிகளும், மகான்களும் போதிக்கிறார்கள்.

ஆன்மீகக் கடலில் நீந்திய கவியரசர் என்ன கூறுகிறார் பார்ப்போமே ,

நான் யார்?

நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?

நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.அது எனக்குப் புரியவில்லை. தவிர,ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்துக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே!

தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?

  • கவியரசு கண்ணதாசன்

சரி இனி கவியரசரின் கவிதையினைப் பார்ப்போம். இக்கவிதைக்கு விளக்கம் தேவையில்லை என்பதுவே இக்கவிதையின் சிறப்பாகும்.

கவிதைகளில் கவியரசர் கையாளும் எளிமையினையும் அப்படியே இக்கவிதை எடுத்துக் காட்டுகிறது.

வரிக்கு வரி அவரது யதார்த்த வினாக்களும் அதற்கான விளக்கங்களும் அலாதியானவை. ஆன்மீகத் தத்துவத்தின் அடிப்படையை அப்படியே எடுத்தியம்புபவை.

சாதாரண சராசரி வாழ்வினை மேற்கோள்வோரின் உள்ளக்கிடக்கையை அப்படியே வெளிக்கொணரும் கவிதை என்றே சொல்ல வேண்டும்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

– கண்ணதாசன்

ஒரு ஆன்மாவின் அடையாளம் அதன் அனுபவங்கள். ஆண்டவனின் அருகாமையை உண்ர வைப்பதும், அந்த ஆண்டவன் வெளியே எங்கும் இல்லை எமக்குள்ளேயே இருக்கிறான் என்பதையும் அறிவுறுத்தும் வகையில் கவியரசியரின் ஆன்மீக அறிவியலின் அடையாளமாகத் திகழ்கிறது இக்கவிதை,

(மீண்டும் வரும்வரை)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *