கங்கைகொண்ட சோழபுரம் – ஒரு பார்வை

0

-மேகலா இராமமூர்த்தி

விசயாலயச் சோழன் தொடங்கி மூன்றாம் இராசேந்திரன் ஈறாக விளங்கிய பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலம் தமிழ்நிலத்தின் நாகரிக வளர்ச்சிக்கும் பண்பாட்டு எழுச்சிக்கும் பல்வேறு கலைகளின் மலர்ச்சிக்கும் பேருதவி புரிந்த காலமாகும். மாமன்னன் முதலாம் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோயில், அவன் மைந்தனான முதலாம் இராசேந்திரன் எழுப்பிய கங்கைகொண்ட சோழீச்சரம், இரண்டாம் இராசராசனால் தாராசுரத்தில் எழுப்பப்பட்ட ஐராவதீசுவரர் கோயில் ஆகிய மூன்றும் சோழர்காலக் கோயிற்கலையின் உச்சங்களாக இன்றும் மிளிர்கின்றன எனில் மிகையில்லை.

இம்மூவருள் இராசராசனைத் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலேறிய முதலாம் இராசேந்திர சோழன், சோழப்பேரரசைக் கடல்கடந்தும் விரிவடையச் செய்து தமிழரின் வீரத்தை, பெருமையைத் தரணிக்கெல்லாம் பரப்பிய சிறப்புக்குரியவன்.

சோழரின் புலிக்கொடியை அயல்நாடுகளிலும் பறக்கவிட்ட முதலாம் இராசேந்திர சோழன் குறித்தும் அவனால் உருவாக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தின் சிறப்பைக் குறித்தும் சிறிது அறிந்துகொள்வோம்.

முதலாம் இராசேந்திர சோழன்:

விசயாலயன் காலத்தில் தலையெடுத்த பிற்காலச் சோழர்களின் ஆட்சி, முதலாம் இராசேந்திரன் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது. வானவன் மாதேவியாரான திரிபுவன மாதேவியார்க்கும் முதலாம் இராசராசனுக்கும் மகனாய்ப் பிறந்தவன் முதலாம் இராசேந்திரன். இவன் பிறந்தது மார்கழித் திருவாதிரை என்கின்றனர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி முதலான வரலாற்றறிஞர்கள்; ஆடித் திருவாதிரை என்கின்றார் தொல்பொருள், கல்வெட்டுத்துறை அறிஞர், குடவாயில் பாலசுப்பிரமணியன் (காமரசவல்லியில் உள்ள ராஜேந்திர சோழனின் கல்வெட்டைச் சான்றுகாட்டி). இவனுடைய இயற்பெயர் மதுராந்தகன் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. இராசராசன் ஆட்சியின்போதே படைகளை நடாத்திப் போர்கள் பலவற்றில் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்றிருந்தான் இராசேந்திரன். இலங்கை மன்னனான ஐந்தாம் மகிந்தனையழித்து ஈழநாட்டை முற்றாகச் சோழரின் ஆளுமையின்கீழ்க் கொண்டுவந்தான்.

இராசேந்திரன் வடநாட்டிற்குப் படையெடுத்துச் சென்று மத்தியப் பிரதேசத்திலுள்ள சித்திரகோடா, கோசலதேசம், ஒட்டரநாடு, வங்காளத்திலுள்ள லாடதேசம் உள்ளிட்ட பல பகுதிகளைக் கைப்பற்றிக் கங்கைக்கரையை அடைந்தான். எனினும், தான்வென்ற நாடுகளை அவன் ஆள விரும்பவில்லை; படையெடுப்பை அதற்காக அவன் நடத்தவும் இல்லை. தான் புதிதாக உருவாக்க விரும்பிய நகரையும் ஏரியையும் கங்கைநீராற் தூய்மைப்படுத்த விரும்பியே படைகளை வடக்கே அனுப்பினான்; தன் படைகளைத் தடுத்த அரசர்களுடனேயே அவன் போர் புரிந்தான் என்கிறார் வரலாற்றறிஞர் மா. இராசமாணிக்கனார் தம்முடைய ’சோழர் வரலாறு’ எனும் நூலில்.

கங்கையைக் கொண்டதோடு மட்டுமல்லாது கடல்கடந்து சென்று கடாரம்/காழகம் (மலேசியாவிலுள்ள கெடா), சுமத்ரா தீவிலுள்ள ஸ்ரீவிஜயம், இலாமுரி தேசம், மாநக்கவாரம் (நிக்கோபார் தீவுகள்) ஆகியவற்றையும் கைப்பற்றினான் இராசேந்திரன்.

’காழகம்’ என்ற சொல் (ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட்டினப்பாலை: 191)) பத்துப்பாட்டில் காணப்படுதலால் சங்கத்தமிழர் நெடுங்காலமாகக் கடாரத்துடன் கடல் வாணிகம் செய்துவந்தமையை அறியலாம்.

கங்கைகொண்ட சோழபுரம்: முதலாம் இராசராசன் காலம்வரை தஞ்சையே பிற்காலச் சோழர்களின் தலைநகராய்த் திகழ்ந்தது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் அது மாறியது; கங்கை வரையில் படையெடுத்துச் சென்று அப்பகுதிகளைத் தன் குடைநிழலில் கொண்டுவந்ததன் அடையாளமாய்க் கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய நகரத்தை உருவாக்கி அதனையே சோழநாட்டின் தலைநகராக்கினான் ’பரகேசரி’யாகிய இராசேந்திரன்.

இராசேந்திரனைத் தொடர்ந்து அரசாண்டவர்களும் இந்நகரத்தையே தம் தலைநகராகக் கொண்டமையால் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராய் விளங்கிய பெருமை இந்நகரத்துக்கு உண்டு. இப்போது இந்நகரம் தன் பழம்பெருமையை இழந்து ஒரு சிற்றூராய்க் காட்சியளிப்பது வருத்தமளிக்கின்றது.

கங்கைகொண்ட சோழீச்சரம்: புதிய தலைநகரத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து, அந்நகரத்தில் அற்புதமானதொரு கோயிலைச் சிவனார்க்கு எடுப்பித்தான் இராசேந்திரன். கங்கைகொண்ட சோழனால் கட்டப்பெற்ற கோயிலாகையால் இது கங்கைகொண்ட சோழீச்சரம் எனும் பெயர்பெற்றது. இந்தியத் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற இக்கோயிலானது ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலைப் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவால் உலகின் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அளவில் தஞ்சைப் பெரியகோயிலைவிடச் சிறியதாயினும் சிற்ப வேலைப்பாடுகளில் தஞ்சைக் கோயிலை விஞ்சிய தரத்தோடும் எழிலோடும் திகழ்கின்றது இத்திருக்கோயில். தஞ்சைப் பெரியகோயில் இலிங்கத் திருமேனியைப் போலவே இங்குள்ள இலிங்கத் திருமேனியும் அளவிற் பெரியது; ஒரே கல்லால் ஆனது.

எழில்மிகு சிற்பங்கள்: கங்கைகொண்ட சோழீச்சரத்தின் கிழக்கு வாயிலில் கோயிலின் எதிரே சுதையாலான பிரம்மாண்டமான நந்தி காணப்படுகின்றது.

விமானத்தில் அமைந்துள்ள சிற்பங்களும் கோயிலின் வெளிப்புறத்தில் காணப்படுகின்ற சிற்ப உருவங்களும் பெருவனப்புடையவை. தென்மேற்கில் சபாபதியும், மேற்கில் இலிங்கோற்பவரும், தெற்கில் விநாயகரும் அழகாய்க் காட்சிதருகின்றார்கள்.

வடக்கில் திருவாயிலுக்கருகில் சண்டேச அனுக்கிரகமூர்த்தி சிற்பம் எழிலோடு திகழ்கின்றது. இச்சிற்பத்தில் சிவபெருமான் உமையோடு அமர்ந்திருக்கின்றார். அவரது காலடியில் கைதொழுத நிலையில் அமர்ந்துள்ளார் சண்டேசுவரர். சிவனார் மகிழ்வோடு சண்டேசுவரருக்குக் கொன்றை மாலையொன்றைச் சூட்டுகின்றார்; உமையம்மை அதனைப் பெருமிதத்தோடு கண்டுகளிக்கின்றார். இச்சிற்பத்தை நோக்குகையில் ஒரு நாடகக் காட்சியையே சிற்பமாக வடித்துவிட்டனரோ என வியக்கத் தோன்றுகின்றது.

இச்சிற்பத்தின் எதிரே காணப்படும் ஞானசரசுவதியின் சிற்பமும் கவினார் வனப்புடையது.

இச்சிற்பங்களுக்கு மாமல்லபுரச் சிற்பங்களே அடிப்படையானவை என்றாலும் அவற்றினும் மேம்பட்ட சிற்பத்திறனை இவற்றில் காணமுடிகின்றது.

கங்கைகொண்ட சோழீச்சரத்தைப் புகழ்ந்து கருவூர்த்தேவர் பாடிய பதிகங்கள் ஒன்பதாம் திருமுறையிலுள்ள திருவிசைப்பாவில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று:

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை யென்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோட்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
 (திருவிசைப்பா: 1)

சோழகங்கம்: பஞ்சமில்லா நீர்ப்பாசனத்திற்கு வித்திடும் வகையில் தலைநகராம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இராசேந்திரனின் விருப்பப்படி வெட்டப்பட்டதே சோழகங்கம் எனும் ஏரி. கொள்ளிடத்திலிருந்து அறுபது மைல் தொலைவுக்குக் கால்வாய் வெட்டிச் சோழகங்கத்துக்கு நீர்வழித்தடத்தை உருவாக்கியதாய்த் தெரிகின்றது. கங்கையிலிருந்து பொற்குடங்களில் கொண்டுவரப்பட்ட நீரை இவ்வேரியில் சேர்த்துக் கங்கையையும் காவிரியையும் (காவிரியின் வெள்ளப்பெருக்கைக் கொள்ளுமிடமே கொள்ளிடம்) அப்போதே ஒன்றிணைத்தவன் இராசேந்திரன்.

”பகீரதன் ஆகாயகங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததுபோல் கங்கைநீரைச் சோழநாட்டுக்குக் கொண்டுவந்து கங்கைகொண்ட சோழப் பேரேரியை முதலாம் இராசேந்திர சோழன் உருவாக்கினான்” என எசாலம் செப்பேடு கூறுகின்றது.

சோழகங்கம் இப்போது ’பொன்னேரி’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. விசயநகரத்தார் காலத்தில் இப்பெயர் மாற்றம் ஏற்பட்டதாய்த் தெரிகின்றது. இதில் நீரைவிடவும் இப்போது மணலே அதிகம் நிறைந்திருப்பதைக் காண்கையில் மனம் கனக்கவே செய்கின்றது.

மாளிகைமேடு: அரண்மனை இருந்த இடமிது. இராசேந்திரனும் அவனைத் தொடர்ந்துவந்த சோழமன்னர்கள் பலரும் கங்கைகொண்ட சோழபுர மாளிகையில் இருந்துகொண்டு ஆட்சிசெய்திருக்கின்றனர். இம்மாளிகை குறித்துக் கல்வெட்டுகளால் அறியமுடிகின்றது.

”வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து
மண்குளிரும் சாயல் வளர்க்குமாம் – தண்கவிகைக்
கொங்காரலங்கல் குலதீபன் கொய்பொழில்சூழ்
கங்கா புரமாளி கை.”
என்று காங்கைகொண்ட சோழபுர மாளிகையைச் சிறப்பிக்கின்றது தண்டியலங்காரப் பாடல்.

இப்போதிங்கு அரண்மனை இல்லை; அஃது இருந்ததற்கான அடையாளமாய்க் காரைக் கலப்புண்ட செங்கற் சிதைவுகளே மிகுதியாய்க் காணப்படுகின்றன. இங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடங்கள் பல்வேறு காலக்கட்டங்களைக் காட்டுவதால் இம்மாளிகை பிற்காலத்தில் மாற்றிக் கட்டப்பட்டமை புலப்படுகின்றது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகள்: வரலாற்றுச் சிறப்புடைய கங்கைகொண்ட சோழபுரத்தில் 1980, 1981, 1985, 1987, 1991 ஆகிய ஆண்டுகளில் மாளிகைமேடு, மண்மலை, கல்குளம், குருவாலப்பர் கோயில், பொன்னேரி ஆகிய வெவ்வேறு இடங்களில் மொத்தம் 31 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இவ் அகழாய்வின் பயனாய்ப் பல தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. இவற்றின்மூலம் சோழர்கால அரண்மனை எவ்வாறிருந்தது என்பதையும் அக்காலக் கலை, நாகரிகச் சிறப்பினையும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

கூரை ஓடுகள்: கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் அதிக அளவில் கிடைத்தவை கூரை ஓடுகளும் இரும்பு ஆணிகளுமேயாகும். இக்கூரை ஓடுகளின் தலைப்பகுதி மரச்சட்டத்தில் பொருத்துவதற்கேற்ப அரைவட்ட வடிவில் காணப்படுகின்றன.

இரும்பு ஆணிகள்: இரும்பு ஆணிகளும் பிடிப்பாணிகளும் அகழாய்வில் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை 3 செ.மீ முதல் 24 செ.மீ. வரை நீளமுள்ளவை. இவற்றின் தலைப்பகுதி சதுர வடிவிலுள்ளது. ஆணிகளின் தலைப்பகுதியை மரத்துடன் இணைக்குமிடத்தில் நான்கிதழ்கள் கொண்ட பூ வடிவ இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்பட்டு அழகூட்டப்பெற்றுள்ளது.

வண்ணங்களுடன் கூடிய காரைத்துண்டுகள்: பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கொண்ட சுண்ணாம்புக் காரைத்துண்டுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. கட்டடங்களின் சுவர்ப்பகுதிகளிலும் விதானத்திலும் இவ்வண்ணங்களால் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன என்று இவற்றைக்கொண்டு நாம் ஊகித்தறியலாம்.

தந்தப் பொருள்கள்: தந்தத்தினாலான ஆளி, யானை ஆகிய உருவங்கள் கிடைத்துள்ளன. அரண்மனையை அணிசெய்யத் தந்தத்தினாலான பொருள்கள் பயன்படுத்தப்பட்டமையை இவை உணர்த்துகின்றன.

வளையல் துண்டுகள்: சங்கினாலான வளையல் துண்டுகளும், கருப்பு, மஞ்சள், பச்சை, நீல நிறங்களினால் ஆன கண்ணாடி வளையல் துண்டுகளும் இங்குக் கிடைத்துள்ளன. சங்கினாலான வளையல்களைப் பெண்கள் அணியும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது. ஏன்… சிந்துவெளி அகழாய்விலேயே சங்கு வளையல்கள் செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டமை ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சோழர் காலத்தில் சங்கு வளையல்களோடு ’கலகலக்கும்’ கண்ணாடி வளையல்களையும் மகளிர் அணிந்திருந்தமைக்கான சான்றுகள் இவை.

இவையல்லாமல் மட்பாண்டங்கள், சீனநாட்டுப் பானையோடுகள், காசுகள் செய்யப் பயன்படும் மண்ணாலான வார்ப்புகள், பளிங்குக் கற்களாலான மணிகள், குறுவாளின் கைப்பிடி போன்றவையும் அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களெல்லாம் கங்கைகொண்ட சோழீச்சரத்திற்கு அருகிலுள்ள அகழ்வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

முடிவுரை: இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாட்டின் தலைநகராகவும் கலைக்கூடமாகவும் திகழ்ந்த கங்கைகண்ட சோழபுரத் திருநகர் இன்று பொலிவிழந்து நலிவடைந்து சிற்றூராய் மாறியிருப்பது காலத்தின் கோலமே. சராசரி மாந்தர்களுக்கும் சாம்ராஜ்ஜியம் ஆளும் வேந்தர்களுக்கும் மட்டுமல்லாது ஊர்களுக்கும்கூட வாழ்வும் தாழ்வும் உண்டென்பதனை இது தெற்றெனக் காட்டுகின்றது.

இப்பகுதியில் நிகழ்ந்த அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்களும் கல்வெட்டுகளும் இந்நகரின் பண்டைய சீரையும் சிறப்பையும் வியனுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன. சோழர்களின் மங்காத புகழைத் தன்னகத்தே தாங்கியிருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தைப் பழையபடி பொலிவுறச் செய்யும் நன்முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவேண்டும்.

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1.https://ariyalur.nic.in/tourist-place/gangaikonda-cholapuram/

2. சோழர் வரலாறு – டாக்டர் மா. இராசமாணிக்கனார், பூரம் பதிப்பகம், சென்னை – 600 033.

3. கங்கைகொண்ட சோழபுரம் இராசேந்திர சோழன் அகழ்வைப்பகம் – பதிப்பாசிரியர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப., சிறப்பு ஆணையர், தொல்லியல் துறை.

4. https://www.dinamani.com/tamilnadu/ராஜேந்திர-சோழன்-வெட்டிய-சோழகங்கம்-ஏரி-மீண்டும்-உயிர்பெற-வாய்ப்பு-3253462.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *