குறளின் கதிர்களாய்…(464)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(464)
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.
– திருக்குறள் – 930 (கள்ளுண்ணாமை)
புதுக் கவிதையில்…
கள்ளுண்பவன்
தான்
கள்ளுண்ணாத போதில்
கள்ளுண்டு ஒருவன்
தள்ளாடுவதைப் பார்த்து,
கள்ளுண்கையில் தனக்கும்
இந்நிலை வருமென
எண்ணிப்பார்க்க மாட்டானோ…!
குறும்பாவில்…
கள்ளுண்டு தள்ளாடுபவனைக் கண்டொருவன்
கள்ளுண்கையில் தனக்கும் இந்நிலைதான் வருமென
கள்ளுணாபோது எண்ணிப் பாரானோ…!
மரபுக் கவிதையில்…
கள்ளை யதிகம் உண்டொருவன்
கருத்த தழிந்தே யுலகோரும்
எள்ளும் வகையில் சோர்ந்துவிழும்
இழிந்த நிலையைக் கள்ளுண்போன்
கள்ளை யுண்ணா வேளையிலே
காணும் போதில் எண்ணானோ
கள்ள துண்டால் தனக்கும்தான்
காண முடியும் இழிவென்றே…!
லிமரைக்கூ…
கள்ளை யுண்டோன்படும் பாட்டை
காணும் கள்ளுண்போன் உணாதபோது உணரானோ
தனக்கும் வரவிருக்கும் கேட்டை…!
கிராமிய பாணியில்…
குடிக்காத குடிக்காத
கள்ளு குடிக்காத,
குடியக் கெடுக்கிற
கள்ளு குடிக்காத..
கள்ளு குடிக்கறவன்
தானும்
குடிக்காத நேரத்தில
வேற ஒருத்தன்
குடிச்சிக்கிட்டு
போதயில படுற பாட்டப்
பாக்கும்போது,
தனக்கும் இப்புடி ஒரு
கேவலமான
நெலம வருமுண்ணு
நெனச்சிப்பாக்க மாட்டானா..
அதால
குடிக்காத குடிக்காத
கள்ளு குடிக்காத,
குடியக் கெடுக்கிற
கள்ளு குடிக்காத…!