பெற்றுவிட்ட சுதந்திரத்தைப் பேணிவிடல் முக்கியமே !

0
Presentation1

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண், ஆஸ்திரேலியா 

இன்னுயிரைப் பலர் ஈந்தார்
ஈன்ற மண்ணை மீட்பதற்கு
பல் கொடுமை அனுபவித்தார்
பாரதத்தாய் துயர் களைய
காந்தியெனும் மகான் வந்தார்
கைப்பிடித்தார் அனைவரையும்
சாந்தி சாந்தி என்று
சத்தியத்தைத் தூக்கி நின்றார்  !

கொள்ளை கொண்ட வெள்ளையர்
குமுறிக்  கனல் கொப்பளித்தார்
வெள்ளமாய்க் குருதி மண்ணில்
பெருகிவிட வழி சமைத்தார்
ஈரமின்றி உயிர் பறித்தார்
இரக்கமதை மறந்து நின்றார்
பாரத்தாய் துயர் அறியா
பாதகராய் மாறி நின்றார்

படைபலத்தைக் கொண்டு நின்றார்
பணபலத்தைப் பெருக்கி நின்றார்
பாதகர்கள் பல பேரைப்
பக்கபலம் ஆக்கி நின்றார்
பாரதத்தாய் படு துயரைப்
பரிகாசம் செய்து நின்றார்
கயவர் பலர் கைகோத்துக்
கண்ணியத்தை மறந்து நின்றார்

அடிமை கொண்ட வெள்ளையர்
ஆணவத்தில் அமிழ்ந்து நின்றார்
அசுரராய் உரு மாறி
அழித்தொழித்து மகிழ்ந்தார்
அவர் முன்னே வந்தார்
அகிம்சையைக் கை எடுத்தார்
ஆள வந்த வெள்ளையரை
ஆட அவர் செய்திட்டார்

ஆண்டவனின் அருள் பெற்ற
அவரே நம்மண்ணல் காந்தி
ஊதிவிட்டால் பறந்திடுவார்
உலர்ந்த உடல் கொண்டவவர்
ஆன்மீக பலம் மிக்கார்
அகிம்சையினைத் துணை கொண்டார்
பலங் கொண்ட வெள்ளையரைப்
பாரதம் விட்டோடச் செய்தார்

ஏறி நின்ற வெள்ளையரை
ஏற்றிவிட்டார் கப்பலிலே
மாறி அவர் மனமாற
வைத்திட்டார் காந்தி மகான்
ஆகஸ்டு பதின் ஐந்தில்
அனைவருமே வியப்படைந்தார்
அகிம்சையால் பாரதத் தாய்
அடைந்திட்டாள் சுதந்திரத்தை

பாடினார் ஆடினார் பரவசமாயினார்
கூடினார் கொடி ஏற்றினார்
கொண்டாடி மகிழ் வெய்தினார்
அடிமை இருள் அகன்றது
ஆதவன் ஒளி பரப்பினான்
காந்தி எனும் சக்தியால்
கண்டு விட்டார் சுதந்திரத்தை

பெற்று விட்ட சுதந்திரத்தைப்
பேணி விடல் முக்கியமே
காந்தி கண்ட சமுதாயம்
குலைந்து விடச் செய்யாதீர்
கிடைத்திட்ட சுதந்திரத்தை
மதித்துமே போற்ற வேண்டும்
ஆணவத்தில் ஏறி நின்று
அதை மதிக்க மறக்காதீர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.