ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசன் பாடல்களும் . . . . . . . (4)
சக்தி சக்திதாசன்
கடந்த மாதம் ஜூன் 24ம் தேதி சிறுகூடல்பட்டியில் 97 அகவைகளுக்கு முன்னால் மலையரசித் தாயின் மடியான மண்ணில் கலையரசி அருள் பெற்ற குழந்தையாகத் தவழ்ந்தவரே எம் கவியரசர்.
தமிழுலகின் முத்தாகத் திகழப் போகிறேன் என்பதை அறிவிக்கும் முகமாகவே முத்தையா எனும் பெயர் கொண்டு முகிழ்த்தவர் கவியரசர்.
நாத்திகம் எனும் ஆழியில் நீந்தி ஆத்திகம் எனும் கரையேறியவர் கண்ணதாசன்.
அரசியல் எனும் வனத்திலே வாசம் செய்ததினால் பெற்ற அனுபவங்களின் வழியேகி ஆன்மீகக் காற்றை சுவாசித்து மனதினில் வாசம் செய்தவரே கவியரசர்.
தன்னைத்தானே புடம் போட்டு தனக்குள் சத்திய யுத்தம் நடத்தித் தன் சுயதரிசனம் கண்டவர்.
ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வதற்கு வாழ்க்கையில் இருந்து அந்நியமாகி காட்டுக்குள் ஓடத்தேவையில்லை, லெளகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே பெளதீக வாழ்க்கையின் அங்கமாக ஆன்மீகத்தை எப்படி இணைத்துக் கொள்ளலாம் என்பதை எளிமையாக விளக்கியவர் கவியரசர்.
தான் ஒரு நல்ல இந்துவாக வாழ்வதற்கு மற்றைய மதங்களுடன் பேதமையை வளர்க்கத் தேவையில்லை என்று வாழ்ந்து காட்டியவர்.
ஆன்மீகம் என்றால் வெறும் இறைபக்திதான் ஆன்மீகமா ?
இல்லை
மதம் கடந்த தன்னிலை அறிதல் ஆன்மீகமா?
இரண்டையும் நன்கு அலசிப்பார்த்து இரண்டின் முக்கியவத்தினையும், வேறுபாட்டையும் எளிமையான தமிழில் விளக்கியவர் கவியரசர்.
இதோ இந்தப் பதிவில் ஆனந்தஜோதி எனும் திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுவதாக இடம்பெற்ற ஒரு காட்சியின் பாடல்.
அற்புதப் பாடகர் அமரர் டி.எம்.எஸ் அவர்களின் குரலில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ஐயா – இராமமூர்த்தி ஐயா அவர்களின் இசையில் கவியரசர் யாத்த வரிகளைப் பார்ப்போம் வாருங்கள்.
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
அருமையான ஒரு கேள்வியை எம்முன்னெ தூக்கி வீசுகிறார் கவியரசர்.
கவியரசரின் பாடல்களின் தனித்தன்மைகளில் ஒன்று கேள்வியாக வரிகளை வீசிவிட்டு அதை விளக்கும் விடையையும் தொடர்ந்து வீசுவதாகும்.
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?
திரும்பவும் கேள்வி வடிவில் பதிலையும் போடுகிறார்.
பதிலென்று குறிப்பிடும்போது வெளிப்படையாகச் சொல்லாமல் எமக்கு ஒரு கேள்வியைப் போட்டு அதனை எமக்குள் நாமே சுய அலசல் மூலம் அறியக்கூடியதாக அமைத்திருக்கின்றார்.
அறிவியல் ஆன்மீகத்தின் அடிப்படையே தன்னைத் தானே விசாரிப்பதே ! அதற்கு இங்கே அத்திவாரமிடுகிறார் இல்லையா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இசையை ரசிக்கின்றாய்
இசையின் உருவம் வருகின்றதா?
கேள்விகள் ! கேள்விகள் ! அவை ஒவ்வொன்றினுள்ளும் ஆன்மீக அறிவியல் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளன.
ஆமாம் இங்கேதான் இறைவன் என்பதன் ஆன்மீக விளக்கத்தை அறிவிக்க முயல்கிறாரோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
இருள் அது கருமையாகத்தானே இருக்கிறது.
இங்கேதான் கவியரசரின் அறிவியலின் ஆழம் புரிகிறது.
இருளில் “இருக்கின்றாய்” எதிரே இருப்பது தெரிகின்றதா ? என்றுகூட கூறியிருக்கலாம். ஆனால் அதிலென்ன பெரிய ஆன்மீகம் இருக்கிறது என்று எண்ணலாம்.
இரவில் ” விழிக்கின்றாய் ” என்று கூறுகிறார். தூங்குபவர் இரவில் விழித்தால் எதிரே இருப்பது தெரியாமல் இருப்பது அனைவருக்கும் நிகழக்கூடிய ஒன்றே !
அதையே மனதை தூக்கத்தில் வைத்திருப்பவர் உள்ளத்துக்குள் இறைவன் இருப்பதை அவர்களால் உணர முடியாது அவர்களின் மனம் இருளில் இருப்பது போலத்தானே என்கிறாரோ ?
அடுத்துப் பார்த்தால்
இசையை ரசிக்கின்றாய்
இசையின் உருவம் வருகின்றதா? என்கிறார் . இறைவனின் வடிவில் ஆன்மாவைல் காண்கிறோம் அதற்கு உருவம் இல்லை ,இசையை ரசிக்கிறோம் அதற்கும் உருவம் இல்லை ஆனால் அதைக் கேள்விக்குள்ளாக்குகிறோமா?
இங்கேயும் எம்மை ஆன்மீக வழியில் சிந்திக்கத் தூண்டுகிறார் இல்லையா ?
மீண்டும் ஒரு கேள்வி பாருங்களேன் ,
உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா ?
உண்மை பேசு என்கிறோம் அந்த உண்மையைக் கண்களால் உருவமாகப் பார்க்கிறோமா ?
ஆனால் அதே உண்மையை இறைவனாகக் கருதும்போது அதற்கு மட்டும் ஏன் சாட்சி தேடுகிறாய் என்கிறார் கவியரசர் என்பது எனது பார்வை.
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா
உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா?
புத்த பகவானைக் குறிப்பிட்டதுமே கவியரசரின் ஆன்மீக அறிவியலின் ஆழம் புரிந்து விடுகிறது.
உள்ளத்தில் எழும் எண்ணங்களின் வடிவே எமது வாழ்க்கையாகிறது என்று போதித்த புத்த பகவானின் போதனைகளின் வீரியத்தை குறிப்பிட்டதின் மூலம் ஆன்மீக அறிவியலின் அடிப்படையையே அலசி விடுகிறார் எம்முடைய கவியரசர்.
சத்தியத்தின் பாதையே தர்மத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்கிறது இதுவே கீதை, பைபிள், குர்ஆன் ஆகிய மாத நூல்களின் அடிப்படையகிறது.
இத்தோடு மத நல்லிணக்கத்தினையும் அவையனைத்தும் அறிவியல் ஆன்மீகத்தை முதன்மைப்படுத்துகின்றன என்பதையும் எளிமையாகவும், தெளிவாகாவும் யாராலும் விளக்கிடக் கூடுமா ?
காலத்தால் அழிக்க முடியாத சரித்திரங்களில் கூறப்பட்டுள்ள உண்மை. அவைகளை பொருளுணர்ந்து படிப்பவர்களுக்கு சஞ்சலம் வருவதற்கு வாய்ப்பே இல்லையென்கிறார் கவியரசர்.
இதோ அடுத்து கொண்டு வருகிறார் பாருங்களேன் !
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது
நீதி சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!
காக்கவும் தயங்காது!
நீதிதேவன் என்கிறோம். அப்படியானால் நீதி கூட இறைத்தன்மை பெற்று விடுகிறது இல்லையா ?
அத்தகைய நீதியை சாட்டை கொண்டு வளைத்திட முடியுமா ?
சிலவேளைகளில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து நீதியை மழுங்கடிக்கலாம். ஆனால் நீதி நிச்சயம் விழித்துக் கொள்ளும் மாயத்திரையை விலக்கிக் கொண்டு வெளிவரும் என்கிறார்.
அதேபோலத்தான் மனமெனும் மேடையை மறைத்திருக்கும் மாயத்திரையை அறிவியல் ஆன்மீகத்தின் மூலம் விலக்கினால் நம்முள் உறையும் ஆன்மாவே இறைவன் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாரோ கவியரசர்?
என் எழுத்துகளின் மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளினுள் இலைமறைகாயாக ஒளிந்திருக்கும் ஆன்மீகத்தை அறிவியல் அடிப்படையில் அலசிப் பார்த்து ஆனந்திக்கிறேன்.
பாடலைப் பார்த்து ரசிப்பதற்கு:https://youtu.be/jiFxjK4BAv8
மீண்டும் வருகிறேன்