Category: காணொலி

  • திருப்பாவை – 17 | அம்பரமே தண்ணீரே

    திருப்பாவை – 17 | அம்பரமே தண்ணீரே

    திருப்பாவை – 17

    அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
    கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
    எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
    அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த
    உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
    செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 17 | அம்பரமே தண்ணீரே | ஸ்வேதா குரலில்

    கொழுந்து என்பது புத்தம் புதியது, இளையது, முகப்பில் உள்ளது, முதன்மையானது. புதுமையின், மரபின் தொடர்ச்சியாய், அடையாளமாய்த் திகழ்வது. கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி என ஆண்டாள், யசோதையைப் பாடும் அருள்மொழிகள் அனைத்தும் ஆண்டாளுக்கும் பொருந்தும். அம்பரம் ஆகிய வானை ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான், நம் இடர்களை எல்லாம் ஊடறுத்து, இன்பம் ஓங்கச் செய்ய வேண்டுவோம். தேமதுரத் திருப்பாவையின் 17ஆவது பாடல் அம்பரமே தண்ணீரே, இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில். கேட்டு மகிழுங்கள், இணைந்து பாடுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உண்மைச் சம்பவம் 1 – புறவழிச் சாலையிலே

    உண்மைச் சம்பவம் 1 – புறவழிச் சாலையிலே

    அண்ணாகண்ணன்

    சென்னைப் புறவழிச் சாலையில் எனக்கு நடந்த உண்மைச் சம்பவத்தை விவரித்துள்ளேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 16 | நாயகனாய் நின்ற

    திருப்பாவை – 16 | நாயகனாய் நின்ற

    திருப்பாவை – 16

    நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
    கோயில் காப்பானே கொடிதோன்றும் தோரண
    வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
    ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
    வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
    நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 16 | நாயகனாய் நின்ற | ஸ்வேதா குரலில்

    கதவு என்பதை இலக்கிய நடையில் கதவம் என எழுதுவர். கதவம் என்ற சொல், திருப்பாவையில் மூன்று இடங்களில் வருகிறது. 9ஆம் பாடலில், மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய் என்கிறார். 16ஆவது பாடலில் இரு இடங்களில் கதவம் வருகின்றது. வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் என்றும் நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய் என்றும் பேசுகின்றார். இதே கதவை வாசற்கடை என்றும் சொல்வதுண்டு. நின் வாசற் கடை பற்றி என்றும் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் என்றும் ஆண்டாள் பாடுகிறார்.

    2020ஆம் ஆண்டு முடிந்து, 2021ஆம் ஆண்டின் மணிக்கதவம் திறக்கும் தருணம், இது. புதியன பிறக்கட்டும், நல்லன நடக்கட்டும் என நாயகனை வேண்டுவோம். நாயகனாய் நின்ற நந்தகோபனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மார்கழிக் கோலம் – 2

    மார்கழிக் கோலம் – 2

    மார்கழிக் கோலம் – 2 | Margazhi Kolam – 2

    மார்கழியின் அடையாளமாகத் திகழும் வண்ண வண்ணக் கோலங்கள், நம் வீதிகளை அலங்கரிக்கும் கோலத்தைப் பாருங்கள்.

    மார்கழிக் கோலம் – 1 | Margazhi Kolam – 1

    மார்கழி என்றாலே இசை, நாட்டியத்திற்கு மட்டுமின்றி, கோலத்திற்கும் தனி இடம் உண்டு. வீதிகள் முழுவதும் வண்ண வண்ணக் கோலங்கள் அலங்கரிக்கும். எத்தனை எத்தனை கோலங்கள். அவற்றுள் எத்தனை எத்தனை வண்ணங்கள். இதோ, கோலங்களுள் ஒரு வகையான கம்பிக் கோலத்தை எப்படி இடுவது என்று நமக்கு வரைந்து காட்டுகிறார் திருமதி கெளரி. இதைப் பார்த்து, நீங்களும் முயன்று பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 14 | காதார் குழையாட

    திருவெம்பாவை – 14 | காதார் குழையாட

    திருவெம்பாவை – 14

    மாணிக்கவாசகர்

    பாடியவர் – ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
    கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
    சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
    வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
    சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
    ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
    பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
    பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.

     

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://thevaaram.org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
    By Artist Genius Shri K.R.Venugopal Sharma
    https://commons.wikimedia.org/wiki/File:KAMAKSHI_.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை

    திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை

    திருப்பாவை – 14

    உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
    செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
    செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
    நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
    சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை | ஸ்வேதா குரலில்

    ஆஹா, நாம் எப்பேர்ப்பட்ட காலத்தைக் கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வோர் வீட்டிலும் புழக்கடை (வீட்டின் பின்புறப் பகுதி) இருந்தது. அங்கே தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு குளம் (வாவி) இருந்தது. அதில் காலையில் செங்கழுனீர்ப் பூக்களும் இரவில் ஆம்பல் மலர்களும் மலர்ந்தன.

    இந்த இடத்திலிருந்து குறுகி, நாம் இன்றைய சதுர அடி வீடுகளுக்கு வந்திருக்கிறோம். இன்றும் மிகப் பெரிய மாளிகைகளில் வீட்டோடு இணைந்து நீச்சல் குளம் உண்டு. அதுவும் நீச்சல் குளம் தான். பூந்தடாகம் இல்லை. இன்றும் பலர் வீடுகளில் தோட்டம் உண்டு. ஆனால், அதில் செங்கழுனீர், ஆம்பல் மலர்கள் இல்லை. இன்றும் கிராமப்புற வீடுகளில் புழக்கடை உண்டு. ஆனால், வீட்டுக்கு வீடு குளம் இல்லை.

    வீட்டுக்கு வீடு தண்ணீர்த் தொட்டி வைத்து, வாளிகள் வைத்து, அதில் லாரியில் தண்ணீர் வாங்கி நிரப்பும் இந்தக் காலத்தில், வீட்டுக்கு வீடு ஒரு வாவி (குளம்) என்பது எப்பேர்ப்பட்ட கனவு. நாம் இழந்த பொற்காலத்தை நினைவூட்டுகிறது ஆண்டாளின் இந்தப் பாடல்.

    அதிலும் உன் வீட்டுத் தோட்டத்து வாவியில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்கின்றன. நீ இன்னும் உறங்குகிறாயே எனக் கேட்கிறார். அந்தப் பூக்களை மட்டுமில்லை, பூக்கள் மலரும்போதே விழிக்கின்ற வழக்கத்தையும் நாம் இழந்திருக்கிறோம் எனப் புரிகிறது. திருப்பாவையின் 14ஆவது பாடல் உங்கள் புழக்கடை, செல்வி ஸ்வேதாவின் குரலில் இதோ.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை

    திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை

    திருப்பாவை – 13

    புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
    பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
    வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
    புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
    பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
    கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை | ஸ்வேதா குரலில்

    நீரில் பாய்ந்து மூழ்கிக் குளிப்பதைக் குடைதல் (dive) என அக்காலத்தில் அழைத்தனர். சங்க இலக்கியத்தில் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய (பொரு. 241) எனப் பொருநராற்றுப்படையிலும் கயம்குடைந்து அன்ன இயம்தொட்டு இமிழ்இசை (மது 363) என மதுரைக் காஞ்சியில் காண்கிறோம்.

    திருப்பாவையின் 13ஆவது பாடலில் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ என ஆண்டாள் பாடுகிறார். திருவெம்பாவையின் 11ஆவது பாடலில், பொய்கை புக்கு முகேர் என்னக் கையாற் குடைந்து குடைந்து என்றும் 12ஆவது பாடலில் பூத்திகழும் பொய்கை குடைந்து என்றும் மாணிக்கவாசகர் பாடுகிறார். திருப்பாவையின் 13ஆவது பாடலை இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள். ஆண்டாளின் தமிழ்ப் பொய்கையில் குடைந்து நீராட வாருங்கள்.

     

    திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை | சேகர் முத்துராமன் குரலில்

    புள்ளும் சிலம்பினகாண் என்பது திருப்பாவையில் இரு இடங்களில் வருகின்றது. 6ஆவது பாடல், ‘புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்’ எனத் தொடங்குகின்றது. 13ஆவது பாடலில் ‘புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்’ என வருகின்றது. சிலம்புதல் என்றால் இரட்டிப்பொலி எழுப்புதல், மாறி மாறி ஒலித்தல் எனப் பொருள். புள் எனில் பறவை. பறவை விதவிதமாக இரட்டிப்பு ஒலி எழுப்புவதை நாம் கேட்டிருப்போம். ‘கீசுகீசு’ என ஆனைச்சாத்தன் பேசுவதை ஆண்டாளே பதிவு செய்துள்ளார். அரிய, அழகிய வாழ்வியற்கூறுகள் நிறைந்த திருப்பாவை, நாம் பெற்ற செல்வம். புள்ளின் வாய் கீண்டானை என்ற 13ஆவது பாடலைச் சேகர் முத்துராமன் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 12 | ஆர்த்த பிறவி

    திருவெம்பாவை – 12 | ஆர்த்த பிறவி

    திருவெம்பாவை 12

    மாணிக்கவாசகர்

    பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
    தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
    கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
    காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
    வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
    ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
    பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
    ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

     

    பொழிப்புரை

    நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.

    நன்றி – http://thevaaram.org/
    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 12 | கனைத்து இளம்

    திருப்பாவை 12

    கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    நினைத்து முலை வழியே நின்று பால்சோர
    நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
    பனித்தலை வீழ நின் வாசற் கடைபற்றிச்
    சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
    மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
    அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 12 | கனைத்து இளம் | ஸ்வேதா குரலில்

    11ஆவது பாடலில் ஆயர்கள், கறவைக் கணங்களிடம் தாங்களே பால்கறக்கிறார்கள். 12ஆவது பாடலில், கற்றெருமை கன்றை நினைத்து, நின்று பால்சொரிந்து, தான் நின்ற இடத்தையே நனைத்துச் சேறாக்குகிறது. நின்று பால்சோர என்றால், மாடு நிற்கிறது எனப் பொருள் இல்லை. மழை நின்று பெய்கிறது என்றால், நீடித்துப் பெய்கிறது எனப் பொருள் கொள்வோமே அப்படி இந்த எருமை நின்று பால்சொரிகிறது. கன்றை நினைத்த உடனே தாய்க்கு இப்படிப் பால் பெருகும். அப்படிப் பக்தர்களுக்காக அருள் சொரிகின்ற மனத்துக்கு இனியானைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    திருப்பாவை – 12 | கனைத்து இளம் | சேகர் முத்துராமன் குரலில்

    குளிர்ந்தேலோர் எம்பாவாய் என உள்ளம் குளிர்தலைப் பற்றி முன்னர் பார்த்தோம். மார்கழிக் குளிரையும் ஆண்டாள் பாடியுள்ளார். தலையில் பனி வீழ, நின் வாசற்கடை பற்றி நிற்கின்றோம். ஈதென்ன பேருறக்கம்? இப்போதாவது எழுந்திரு எனத் தோழியைக் கோதை எழுப்புகிறார். உள்ளம் குளிரச்செய்யும் திருப்பாவையின் 12ஆவது பாடலைச் சேகர் முத்துராமனின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சனிப்பெயர்ச்சி பலன்கள் | 2020 – 23 | வேதா கோபாலன்

    சனிப்பெயர்ச்சி பலன்கள் | 2020 – 23 | வேதா கோபாலன்

    ஞாயிறு (27.12.2020) அதிகாலை 5.22 மணிக்குச் சனிப்பெயர்ச்சி. தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்வு. வேதா கோபாலன் வழங்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே. உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

     

    12 ராசிகளுக்கும் தனித் தனிப் பலன்களுக்கு, பார்க்க ‘நல்ல யோகம்‘ – https://nallayogam.com

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 85 வயதில் திருப்பாவை பாடும் ஜெயலட்சுமி செல்லப்பா

    85 வயதில் திருப்பாவை பாடும் ஜெயலட்சுமி செல்லப்பா

    வயது ஓர் எண்ணிக்கை மட்டுமே. எந்த வயதிலும் நம் திறமைகளை, ஆற்றல்களை உற்சாகமாக வெளிப்படுத்த முடியும். சென்னையில் வசிக்கும் திருமதி ஜெயலட்சுமி செல்லப்பா, 85 வயதிலும் அருமையாகப் பாடுகிறார். இதோ, திருப்பாவையிலிருந்து நான்கு பாடல்களை நமக்காகப் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

     படப் பதிவு – சுதா மாதவன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 11 | மொய்யார் தடம்

    திருவெம்பாவை – 11 | மொய்யார் தடம்

    திருவெம்பாவை – 11

    மாணிக்கவாசகர்

    மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
    கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
    ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
    செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
    மையார் தடங்கண் மடந்தை மணவாளா
    ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
    உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
    எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

    நாம் குளத்தில் குதிக்கும்போது, குபீர், தொபீர், படீர், தொபுக்கடீர் என்றெல்லாம் ஒலியெழுவதைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். திருவெம்பாவையில் மாணிக்கவாசகர், வேறு ஓர் ஓசையைக் குறிப்பிடுகிறார். பாவை நோன்பு இருக்கும் பெண்கள், குளத்தில் குளிக்கச் செல்கிறார்கள். அது, வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட பொய்கை. அதில் முகேர் எனச் சப்தம் எழுமாறு குதித்துக் குளிக்கிறார்களாம். இந்த மாணிக்கப் பொய்கையில் நீங்களும் பாய்ந்து குளியுங்கள். டெக்சாஸ்வாழ் ஸ்ருதி நடராஜனின் மந்திரக் குரலில் இந்த இனிய பாடலைக் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 11 | கற்றுக் கறவை

    திருப்பாவை – 11 | கற்றுக் கறவை

    திருப்பாவை 11

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
    செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
    குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
    புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட
    சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
    எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 11 | கற்றுக் கறவை | ஸ்வேதா குரலில்

    ஆளன் – ஆட்டி என அழைப்பது தமிழ் மரபு. ஆளன் என்பவன் ஆளுகின்றவன். ஆட்டி என்பவள் ஆளுகின்றவள். வல்லாளன், பேராளன், சீராளன் என்றெல்லாம் ஆண்களை அழைப்பார்கள், சீமாட்டி, பெருமாட்டி, திருவாட்டி எனப் பலவாறாகப் பெண்களை அழைப்பார்கள். இந்த வரிசையில்தான் பெண்டாட்டியும் தோன்றியது. ஆட்சிமை உடைய பெண், ஆளும் பெண் என்பது பொருள். இக்காலத்தில் இது, குடும்பத்தை ஆளும் பெண் என்ற பொருளில் மனைவிமார்களுக்கு வழங்குகிறது. இந்தப் பாடலில் ஆண்டாள் தன் தோழியைச் செல்வப் பெண்டாட்டி எனச் செல்லமாக அழைக்கிறார். தமிழ்க் குலத்தின் பொற்கொடி ஆண்டாளின் அமுதத் தமிழில் திருப்பாவையின் 11ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    திருப்பாவை – 11 | கற்றுக் கறவை | சேகர் முத்துராமன் குரலில்

    தேவ கணங்கள், பூத கணங்கள், மிருக கணங்கள், பட்சி கணங்கள் எனப் பலவற்றை நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்தக் கணம் என்பதற்குக் கூட்டம் என்று பொருள். நொடியைக் குறிக்கும் கணம் என்பது, க்ஷணம் என்பதன் தமிழ் வடிவமாகும், திருப்பாவையின் 11ஆவது பாடலில் கற்றுக் கறவைக் கணங்கள் எனப் பசுக்கூட்டங்களை ஆண்டாள் குறிப்பிடுகிறார். இந்தக் கணத்தில் இதைச் சேகர் முத்துராமன் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 10 | பாதாளம் ஏழினும்

    திருவெம்பாவை – 10 | பாதாளம் ஏழினும்

    திருவெம்பாவை – 10

    மாணிக்கவாசகர்

    பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
    பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
    ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
    ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்.

    இறைவனுக்கு உருவம் கொடுத்தாலும் அது ஓர் அடையாளமே. அதுவே முழுமையான உருவம் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் அவனை எப்படி ஓர் எல்லைக்குள் சுருக்க முடியும்? அதனால்தான் மாணிக்கவாசகர், சிவபெருமானை ஓத உலவா ஒருதோழன் என்கிறார். அவன் ஊர் எது? பேர் எது? உற்றார் யார்? அயலார் யார்? இத்தகையவனை எவ்வாறு பாடுவது? எனக் கேட்கிறார். தன் திருமேனியில் பேதை ஒருபால் கொண்ட தோழனை டெக்சாஸிலிருந்து ஸ்ருதி நடராஜன் உளமாரப் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

     

    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா
    https://en.wikipedia.org/wiki/Shiva#/media/File:Shiva_as_the_Lord_of_Dance_LACMA_edit.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம்

    திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம்

    திருப்பாவை – 10

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
    மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
    நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
    போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
    தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
    ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
    தேற்றமாய் வந்து திறவேலார் எம்பாவாய்.

    திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம் | சேகர் முத்துராமன் குரலில்

    பாடியவர்: சேகர் முத்துராமன்
    விளக்கம்: பிரபா ஸ்ரீதர்

    மனம் என்னென்னவோ விரும்புகிறது. வாயும் தயக்கமின்றி அதைச்சொல்லி விடுகிறது. ஆனாலும் வைராக்கியம் வர மறுக்கிறது. சொன்ன சொல் காப்பதில்லை. துயரம் வரும் போது பகவானை நாடுகிறோம். உனையன்றி வேறு யாரையும் நினையேன் என்றே சத்தியமும் செய்கிறோம். துயர் நீங்கி மகிழ்ச்சிப் பெருகும் போதோ, மகிழ்ச்சியிலே திளைத்துப் போகிறோம். உலக இன்பம் எனும் புதைகுழியில் விழுவது தெரிவதில்லை, மூழ்குவது உணர்வதில்லை. சொன்ன சொல்லையும் காப்பதில்லை.
    .
    இங்கேயும் ஒருத்தி, சொன்ன சொல் மறந்து துயில்கிறாள். நோன்பு நோற்றுப் பணி செய்திருப்பேன் என்றாள். அவனுக்காக இல்லாவிட்டாலும் தன் பொருட்டு நோன்பு நோற்று சுவர்க்கம் புகுவேன் என்றெல்லாம் அலங்காரச் சொற்கள் சொன்னாலும் உறக்கம் அவளை மீறி ஆட்கொண்டுவிட்டது.
    .
    நோன்பு நோற்பது நமக்காக. நாம் பக்தி செய்வதும் நம் நலனுக்காகவே. அவனைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும், அதனால் அவன் பாதிக்கப்படுவதேயில்லை. முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவனவன். நமது பிம்பத்தையே அவன் பிரதிபலிக்கிறான். நாம் பணிந்தால், அவன் செவி சாய்ப்பான். இவள் தூங்கிக் கொண்டிருப்பதால் தோழிகள் அழைப்பிற்கு பதில் பேசவில்லை. வாயிற்கதவைத் திறக்கவில்லை.
    .
    அளவிட முடியாத பெரும் தூக்கத்தை உடையவளே! அந்த நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்து, கும்பகர்ணனை ஆட்கொண்ட போது, கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம் விட்டுப் போனானோ என்று கரிசனத்துடன் கிண்டலும் செய்கிறார்கள் ஆயர்க்குலப் பெண்கள். அழகிய ஆபரணத்தைப் போன்று பக்தர் குழாமுக்கு எழில் சேர்ப்பவளே, உறக்கம் தெளிந்து வந்து கதவைத் தாள்திறவாய்!
    .
    கும்பகர்ணனை விஞ்சும் நம்முடைய தூக்கத்தை அந்த ஸ்ரீராமனே வீழ்த்தட்டும்.

     

    திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம் | ஸ்வேதா குரலில்

    திருப்பாவை, பல்சுவைப் பெட்டகம். ஒரு பாடலில் ஆண்டாள் சீறி எழுவார். மறு பாடலில் உருகிக் கரைவார். இன்னொரு பாடலில் செல்லமாய்க் கோபித்துக்கொள்வார். அடுத்த பாடலில் வாயாடி போல் பேசுவார். அவரது இந்தப் பத்தாவது பாடலில், நகைச்சுவை ஊற்றெடுக்கிறது. நோன்பு நோற்று சுவர்க்கம் செல்வேன் என்றெல்லாம் சொன்னாய். வாயிற்கதவைக் கூடத் திறக்கமாட்டேன் என்கிறாயே. கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம்தான் விட்டுச் சென்றானோ? அம்மாடி, கதவைத் திற என் ராசாத்தி என்கிறார்.

    இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share