திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம்

திருப்பாவை – 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலார் எம்பாவாய்.

திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம் | சேகர் முத்துராமன் குரலில்

பாடியவர்: சேகர் முத்துராமன்
விளக்கம்: பிரபா ஸ்ரீதர்

மனம் என்னென்னவோ விரும்புகிறது. வாயும் தயக்கமின்றி அதைச்சொல்லி விடுகிறது. ஆனாலும் வைராக்கியம் வர மறுக்கிறது. சொன்ன சொல் காப்பதில்லை. துயரம் வரும் போது பகவானை நாடுகிறோம். உனையன்றி வேறு யாரையும் நினையேன் என்றே சத்தியமும் செய்கிறோம். துயர் நீங்கி மகிழ்ச்சிப் பெருகும் போதோ, மகிழ்ச்சியிலே திளைத்துப் போகிறோம். உலக இன்பம் எனும் புதைகுழியில் விழுவது தெரிவதில்லை, மூழ்குவது உணர்வதில்லை. சொன்ன சொல்லையும் காப்பதில்லை.
.
இங்கேயும் ஒருத்தி, சொன்ன சொல் மறந்து துயில்கிறாள். நோன்பு நோற்றுப் பணி செய்திருப்பேன் என்றாள். அவனுக்காக இல்லாவிட்டாலும் தன் பொருட்டு நோன்பு நோற்று சுவர்க்கம் புகுவேன் என்றெல்லாம் அலங்காரச் சொற்கள் சொன்னாலும் உறக்கம் அவளை மீறி ஆட்கொண்டுவிட்டது.
.
நோன்பு நோற்பது நமக்காக. நாம் பக்தி செய்வதும் நம் நலனுக்காகவே. அவனைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும், அதனால் அவன் பாதிக்கப்படுவதேயில்லை. முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவனவன். நமது பிம்பத்தையே அவன் பிரதிபலிக்கிறான். நாம் பணிந்தால், அவன் செவி சாய்ப்பான். இவள் தூங்கிக் கொண்டிருப்பதால் தோழிகள் அழைப்பிற்கு பதில் பேசவில்லை. வாயிற்கதவைத் திறக்கவில்லை.
.
அளவிட முடியாத பெரும் தூக்கத்தை உடையவளே! அந்த நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்து, கும்பகர்ணனை ஆட்கொண்ட போது, கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம் விட்டுப் போனானோ என்று கரிசனத்துடன் கிண்டலும் செய்கிறார்கள் ஆயர்க்குலப் பெண்கள். அழகிய ஆபரணத்தைப் போன்று பக்தர் குழாமுக்கு எழில் சேர்ப்பவளே, உறக்கம் தெளிந்து வந்து கதவைத் தாள்திறவாய்!
.
கும்பகர்ணனை விஞ்சும் நம்முடைய தூக்கத்தை அந்த ஸ்ரீராமனே வீழ்த்தட்டும்.

 

திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம் | ஸ்வேதா குரலில்

திருப்பாவை, பல்சுவைப் பெட்டகம். ஒரு பாடலில் ஆண்டாள் சீறி எழுவார். மறு பாடலில் உருகிக் கரைவார். இன்னொரு பாடலில் செல்லமாய்க் கோபித்துக்கொள்வார். அடுத்த பாடலில் வாயாடி போல் பேசுவார். அவரது இந்தப் பத்தாவது பாடலில், நகைச்சுவை ஊற்றெடுக்கிறது. நோன்பு நோற்று சுவர்க்கம் செல்வேன் என்றெல்லாம் சொன்னாய். வாயிற்கதவைக் கூடத் திறக்கமாட்டேன் என்கிறாயே. கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம்தான் விட்டுச் சென்றானோ? அம்மாடி, கதவைத் திற என் ராசாத்தி என்கிறார்.

இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *