-மேகலா இராமமூர்த்தி

தையல் இயந்திரத்தில் கண்ணும் கருத்துமாய்த் துணி தைக்கும் பெரியவரைப் படமெடுத்து வந்திருப்பவர் திரு. ஐயப்பன் கிருஷ்ணன். இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 289க்கு அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. படப்பதிவாளர், தெரிவாளர் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்!

”செய்யும் தொழிலதனைத் தெய்வமென் றெண்ணியே
தையல் இயந்திரத்தில் மையலொடு பணிசெய்ய
ஐயம் இன்றியே வாழ்க்கையது உயர்ந்திடும்
வையம் போற்றுகின்ற நன்னிலையும் வாய்த்திடும்” எனும் நம்பிக்கை மொழிகளை இத்தொழிலாளர்க்கு நல்கிவிட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைப் படித்துச் சுவைக்கப் புறப்படுவோம் வாரீர்!

*****

”தையல் எந்திரம் மிதித்துப் பாடுபட்டு வளர்த்த பிள்ளைகள் மதிக்காமல் சென்றதனால் வாடும் வயிற்றுக்கு உணவிட உழைக்கிறார் தனியாக!” என்றுரைத்து நம்மை நெகிழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

தனிமையில் தையல்…

பாடு பட்டுப் பகலிரவாய்ப்
பழைய எந்திரம் மிதித்தேதான்
நாடு போற்றப் பிள்ளைகளை
நன்றாய்ப் படிக்க வைத்தவர்தான்,
ஓடி விட்ட பிள்ளைகளால்
ஒருத்த ராக உழைக்கின்றார்
வாடும் வயிற்றுக் குணவிட்டு
வாழும் காலம் ஓட்டிடவே…!

*****

”சாதி மத நல்லிணக்கத்தை அனைத்து மத ஆடை அமைப்பில் நயமுடனே காட்டிடுவர் தையல் வேலை செய்வோர்” என உண்மை உரைக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

தையலுடையால் தையலை,
தையல் இமையால் காதலைப்
பரிமாற்றம் செய்து கொள்ள
இடையிடையே தையல் போட்டு
மிடுக்கு உடை தைப்பவரோ?

ஆண் உடையில் கம்பீரமோ
அழகு ஈதென மனக்கர்வமோ?
மிடுக்கு உடையில் நீ நேர்த்தியோ?
இல்லை மிதமான உன் நடையழகோ?

உம் பிழைப்போ கால் சக்கரம் ஓட்டி
உடையதனை நீ உருவாக்கிடும்
விந்தைதான் என் சொல்வேன்
வீதியோரத் தையல் மன்னவனே!

சாதிமத நல்லிணக்கம்
சாதிப்பதன் காரணத்தை
நம் தையல் இன மக்கள்
நயமுடனே கடைப்பிடிப்பர்
அனைத்து மத ஆடை அமைப்பில்

வகைவகையாய் ஆடைகளை
வடிவமைத்துக் கொடுக்கின்ற
விந்தைதான் என் சொல்வேன்
வியந்து நின்று ரசிக்கின்றேன்

ஆடை பாதி ஆள் பாதி
எழில் தோற்றமதைக் கொண்டுவர
விதவிதமாய் வடிவமைப்பீர்
வியத்தகு சாதனையாய் வாழ்வையே வெல்வீர்!!

*****

”துரித உணவைப் போல் கேட்டதும் கிட்டும் துரித ஆடைகளால் வசதியற்றோரின் வாழ்வாதாரம் கிழிந்துப்போனது நிறுவனப்படுத்தலால்!” என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

பிடிகொம்பு

வெட்டி ஒட்டிக் கச்சிதமாய் இணைத்துத்
தட்டிச் செதுக்கும் சிற்பியைப் போல்
கட்டி அழகு பார்க்க வைக்கும்
ஆடைகள் தைத்துக்கொள்ள யாருமில்லை…

பல்பொருள் அங்காடிகளால் படுத்துவிட்ட
பக்கத்து மளிகைக்கடை…
இணையவழி வணிகத்தால் அழிந்துவரும்
சிறுவணிகக் கூட்டம்…
துரித உணவைப் போல் கேட்டதும்
துரிதமாய்க் கிட்டும் தைத்த ஆடைகள்…
வசதியற்றோரின் வாழ்வாதாரம்
கிழிந்துபோனது நிறுவனப்படுத்தலால்…

சுகத்தைக் கெடுக்கும் நுண்ணுயிரி
முகத்தை மூடும் கவசம் தைத்துப்
பசியைத் தீர்க்க வழிசெய்த நிலைமை என
அடித்துச் செல்லும் காலச்சுழற்சி வெள்ளத்தில்
பிடிகொம்புகள் சில கிட்டும் அவ்வப்போது!!!

*****

”சக்கரம் சுழற்றுவதில் சக்கரவர்த்தி நீ தான்! சக்தி கொண்ட கால்கள்
சத்தியமாய் உனை வாழ்விக்கும்!” என்று நம்பிக்கை மொழி நவில்கின்றார் திரு. யாழ். பாஸ்கரன்.

துண்டு துணிகளைத் துல்லியமாய்த் தைத்து
தொண்டு செய்யும் தோழா – நீ உழைத்துக் கூலி
கொண்டு சென்றால் தான் உன் வீட்டினர்
உண்டு வாழ உலை கொதிக்கும்!

கால் வலிக்கக் கவனமாய்
கால் மிதியை நீ மீதித்தால் தான்
காலாடை மேலாடை எல்லாம்
கலை ஆடையாக உருமாறும்!

மூக்குக் கண்ணாடி வழி
நோக்கும் விழிப் பார்வையால் நீ
கோக்கும் நூல் இழைகளின்
சேர்க்கையால் பலர் மானம் காத்தாய்!

சக்கரம் சுழற்றுவதில்
சக்கரவர்த்தி நீ தான்
சக்தி கொண்ட கால்கள்
சத்தியமாய் உனை வாழ்விக்கும்!

கத்திமேல் நடக்கும் வாழ்க்கைப் பயணத்தில்
கத்தரிக்கோலும் காது ஊசியுமே உனை
கத்தரி வெய்யிலாய்த் தாக்கும் வறுமையிலிருந்து
காத்தருளும் கடவுளின் தூதுவர்கள்!

வண்ணப் பொடிகளின் குவியல் போல்
எண்ணம் பொங்கட்டும் – சின்னச் சின்ன உழைப்பால்
விண்ணையும் தொடலாம் – உழைப்பே உயர்வின் வழி என
எண்ணித் துணிக கருமம் இனி எல்லாம் இன்பமே!

*****

அருமையான வாழ்வியல் தத்துவங்களை இந்தத் தையற்காரரை மையமாய் வைத்துத் திறம்பட உரைத்திருக்கின்றனர் நம் கவிஞர் பெருமக்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

வண்ண வண்ணத் துணிகள்
வகை வகையான வடிவத்தில்
வருட முழுக்கத் தைத்தாலும்
ஒட்டுப் போட்ட சட்டைதான் இவனுக்கு!

ஓயாமல் உருளும்
தையல் இயந்திரம் போல
உருளுகிறது இவனது வாழ்வும்
இயந்திரமாய்….

ஊரார் உடுப்பைத் தைத்தால் தான்
உலை பொங்கும் இவன் வீட்டில்
தைத்து முடித்த கவுனில்
தெரியும் சின்ன மகளின் முகம்!

தீபாவளி கிறிஸ்துமஸ் பொங்கல்
குறைவில்லை பண்டிகைகளுக்கு
ஊருக்கு வரும் பண்டிகை
இவன் வீட்டுக்கு வருவது எப்போதோ?

தைத்து விட்டான் மனதின் வாயை
அடக்கி விட்டான் ஆசாபாசத்தை!
இவனைப் போல எத்தனை பேரோ
கண்ணன் வழி நிற்கும் கர்மயோகிகள்!

”ஊரார் உடுப்பைத் தைத்தால்தான் இந்தத் தையற் தொழிலாளி வீட்டில் உலைபொங்கும்; ஊருக்கு வரும் பண்டிகைகள் இவர் வீட்டுக்கு வருவது எப்போதோ? ஆசாபாசத்தை அடக்கிய இவரும் கண்ணன் வழிநிற்கும் கர்மயோகியே!” என்று ஏழைத் தொழிலாளியின் வாழ்க்கைநிலையை உள்ளபடி உரைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. ராதாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.