திருவெம்பாவை – 14 | காதார் குழையாட
திருவெம்பாவை – 14
மாணிக்கவாசகர்
பாடியவர் – ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
பொழிப்புரை:
காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.
உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://thevaaram.org)
படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
By Artist Genius Shri K.R.Venugopal Sharma
https://commons.wikimedia.org/wiki/File:KAMAKSHI_.jpg
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)