திருப்பாவை – 14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை | ஸ்வேதா குரலில்

ஆஹா, நாம் எப்பேர்ப்பட்ட காலத்தைக் கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வோர் வீட்டிலும் புழக்கடை (வீட்டின் பின்புறப் பகுதி) இருந்தது. அங்கே தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு குளம் (வாவி) இருந்தது. அதில் காலையில் செங்கழுனீர்ப் பூக்களும் இரவில் ஆம்பல் மலர்களும் மலர்ந்தன.

இந்த இடத்திலிருந்து குறுகி, நாம் இன்றைய சதுர அடி வீடுகளுக்கு வந்திருக்கிறோம். இன்றும் மிகப் பெரிய மாளிகைகளில் வீட்டோடு இணைந்து நீச்சல் குளம் உண்டு. அதுவும் நீச்சல் குளம் தான். பூந்தடாகம் இல்லை. இன்றும் பலர் வீடுகளில் தோட்டம் உண்டு. ஆனால், அதில் செங்கழுனீர், ஆம்பல் மலர்கள் இல்லை. இன்றும் கிராமப்புற வீடுகளில் புழக்கடை உண்டு. ஆனால், வீட்டுக்கு வீடு குளம் இல்லை.

வீட்டுக்கு வீடு தண்ணீர்த் தொட்டி வைத்து, வாளிகள் வைத்து, அதில் லாரியில் தண்ணீர் வாங்கி நிரப்பும் இந்தக் காலத்தில், வீட்டுக்கு வீடு ஒரு வாவி (குளம்) என்பது எப்பேர்ப்பட்ட கனவு. நாம் இழந்த பொற்காலத்தை நினைவூட்டுகிறது ஆண்டாளின் இந்தப் பாடல்.

அதிலும் உன் வீட்டுத் தோட்டத்து வாவியில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்கின்றன. நீ இன்னும் உறங்குகிறாயே எனக் கேட்கிறார். அந்தப் பூக்களை மட்டுமில்லை, பூக்கள் மலரும்போதே விழிக்கின்ற வழக்கத்தையும் நாம் இழந்திருக்கிறோம் எனப் புரிகிறது. திருப்பாவையின் 14ஆவது பாடல் உங்கள் புழக்கடை, செல்வி ஸ்வேதாவின் குரலில் இதோ.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.