திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை

0

திருப்பாவை – 13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை | ஸ்வேதா குரலில்

நீரில் பாய்ந்து மூழ்கிக் குளிப்பதைக் குடைதல் (dive) என அக்காலத்தில் அழைத்தனர். சங்க இலக்கியத்தில் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய (பொரு. 241) எனப் பொருநராற்றுப்படையிலும் கயம்குடைந்து அன்ன இயம்தொட்டு இமிழ்இசை (மது 363) என மதுரைக் காஞ்சியில் காண்கிறோம்.

திருப்பாவையின் 13ஆவது பாடலில் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ என ஆண்டாள் பாடுகிறார். திருவெம்பாவையின் 11ஆவது பாடலில், பொய்கை புக்கு முகேர் என்னக் கையாற் குடைந்து குடைந்து என்றும் 12ஆவது பாடலில் பூத்திகழும் பொய்கை குடைந்து என்றும் மாணிக்கவாசகர் பாடுகிறார். திருப்பாவையின் 13ஆவது பாடலை இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள். ஆண்டாளின் தமிழ்ப் பொய்கையில் குடைந்து நீராட வாருங்கள்.

 

திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை | சேகர் முத்துராமன் குரலில்

புள்ளும் சிலம்பினகாண் என்பது திருப்பாவையில் இரு இடங்களில் வருகின்றது. 6ஆவது பாடல், ‘புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்’ எனத் தொடங்குகின்றது. 13ஆவது பாடலில் ‘புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்’ என வருகின்றது. சிலம்புதல் என்றால் இரட்டிப்பொலி எழுப்புதல், மாறி மாறி ஒலித்தல் எனப் பொருள். புள் எனில் பறவை. பறவை விதவிதமாக இரட்டிப்பு ஒலி எழுப்புவதை நாம் கேட்டிருப்போம். ‘கீசுகீசு’ என ஆனைச்சாத்தன் பேசுவதை ஆண்டாளே பதிவு செய்துள்ளார். அரிய, அழகிய வாழ்வியற்கூறுகள் நிறைந்த திருப்பாவை, நாம் பெற்ற செல்வம். புள்ளின் வாய் கீண்டானை என்ற 13ஆவது பாடலைச் சேகர் முத்துராமன் குரலில் கேளுங்கள்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *