கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 23

-மேகலா இராமமூர்த்தி
சீதையை அவள் தங்கியிருந்த பன்னசாலையோடு பெயர்த்தெடுத்துக்கொண்டு தன் தேரில் ஏறிய இராவணன், தேரை விரைந்து செலுத்து என்று தேர்ப்பாகனுக்குக் கட்டளையிட்டான். இந்த அசம்பாவிதங்களைச் சிறிதும் எதிர்பாராத சீதை, தீயில் வீழ்ந்து வெந்தழியும் கொடிபோல் துடித்து எழுந்தாள்; அழுதாள்; அரற்றினாள்; அறமே என்னை இத்துன்பத்திலிருந்து விரைந்து காத்திடு என்று முறையிட்டுக் கதறினாள்.
விடு தேர் என வெங் கனல்
வெந்து அழியும்
கொடிபோல் புரள்வாள்
குலைவாள் அயர்வாள்
துடியா எழுவாள்
துயரால் அழுவாள்
கடிதா அறனே இது
கா எனுமால். (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3492)
யாரும் தனக்குத் துணையில்லாத நிலையில் அறமே தன்னைக் காக்கும் என்றெண்ணிய சீதை என்னைக் காப்பாற்று என்று அறத்திடம் இறைஞ்சுகின்றாள். வழியில் தென்பட்ட மலையிடமும் மரத்திடமும் மயிலிடமும் குயிலிடமும் இவையொத்த இன்னபிற அஃறிணைப் பொருள்களிடமும் தன்னிலையை விளக்கி இராம இலக்குவரிடம் இதை உரைப்பீர் என்று புலம்பியவண்ணம் செல்கின்றாள்.
தலைவனைப் பிரிந்த தலைவி பல பொருள்களைத் தலைவனிடம் தூதனுப்புவதுபோல் இங்கே சீதையும் தன் பரிதாப நிலையை கண்ணில்படுகின்ற அஃறிணைப் பொருள்களிடத்துச் சொல்லித் தன் தலைவன் இராமனிடம் உரைக்கச் சொல்லுகிறாள் என்று கொள்ளலாம்.
சீதையின் புலம்பலைக் கேட்ட இராவணன் ”பெண்ணே! இராமன் என்னோடு போரிட்டு என்னைக் கொன்றபின் உன்னை மீட்டுச் செல்லட்டும்” என்று கூறிவிட்டு நகைத்தான். அதைக்கேட்டுச் சினமுற்ற சீதை, அவனோடு போரிட அஞ்சித்தானே என்னைத் திருட்டுத்தனமாய்க் கடத்திச் செல்கின்றாய்?” என்று சீறினாள்.
“வலியற்ற மானுடர்களோடு பொருதல் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த என் வீரத்தோளுக்கு இழுக்காகும்” என்று இராவணன் அதற்குச் சொன்ன மறுமொழி சீதையின் சினத்தீயில் மேலும் எண்ணெய் வார்த்தது.
”தம் குலப் பகைவரோடு போரிடப் போதல் குற்றம்; அவர்களோடு வாளேந்திப் பொருதல் நாணுதற்குரியது; ஆனால் கற்புடைய மகளிரை வஞ்சகமாகக் கவர்ந்துசெல்வது வலிமையைப் பறைசாற்றும் செயல்போலும்” என்று இராவணனின் ஈனச்செயலைப் பழித்துரைத்த சீதை, ”இரக்கமற்ற அரக்கர்க்கு பழிச்செயல் என்பதுதான் எதுவோ?” என்று கேட்டாள் எள்ளலோடு.
பாவையும் அதனைக் கேளா தம்
குலப் பகைஞர்தம்பால்
போவது குற்றம் வாளின் பொருவது
நாணம் போலாம்
ஆவது கற்பினாரை வஞ்சிக்கும்
ஆற்றலே ஆம்
ஏவம் என் பழிதான் என்னே
இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள். (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3502)
அவ்வேளையில் இராவணன் சீதையைத் தூக்கிச் செல்வதைக் கண்ணுற்றான் அப்பகுதியில் தங்கியிருந்த கழுகரசன் சடாயு. பொன்மலையொன்று வானில் பறந்துவருவதுபோல் வந்த அவன், ”அடே இராவணா! நீ உன் கிளையொடும் கெடுவாய்; அதிலிருந்து தப்ப வேண்டுமானால் சீதையை இப்போதே விடுவாய்!” என்று இராவணனைப் பார்த்துக் கர்ஜித்தான்.
தொடர்ந்து பேசிய சடாயு, “விடையானிடம் நீ பெற்ற வரங்கள் யாவும் இராமன் உன் எதிரில் வந்து கணைதொடுக்கும் போழ்தில் விடைபெற்றுப் போய்விடும்; ஆதலால் அன்னை அனைய சீதையை விட்டுவிட்டு இங்கிருந்து ஓடிப் போய்விடு; இவளை நானே முன்பிருந்த இடத்தில் கொண்டு சேர்ப்பேன்!” என்றான்.
அவன் கருத்தை ஏற்கமறுத்த இராவணன், ”உன் மார்பில் என் அம்பு ஊடுருவி அதனைப் பெரும்புண் ஆக்குதற்கு முன்பு நீ இங்கிருந்து அகன்றிடு! காய்ச்சிய இரும்பிலிட்ட நீர் மீண்டாலும் கரும்பனைய மொழியாள் சீதை என்னிடமிருந்து மீண்டிலள்” என்றுரைத்தான் தீர்மானமாக.
வரும் புண்டரம் வாளி
உன்மார்பு உருவிப்
பெரும் புண் திறவாவகை
பேருதி நீ
இரும்பு உண்ட நீர்
மீளினும் என்னுழையின்
கரும்பு உண்ட சொல்
மீள்கிலள் காணுதியால் (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3520)
”இரும்பு உண்ட நீர் மீளினும்” என்ற இச்சொற்றொடர் ஐயூர் மூலங்கிழாரின் பின்வரும் புறப்பாடல் அடிகளை நினைவூட்டுகின்றன.
…கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டி
இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிதென
வேங்கை மார்பன் இரங்க… (புறம்: 21)
பாண்டியன் உக்கிரப் பெருவழுதிக்கும் கானப்பேரெயில் (இப்போதைய காளையார் கோயில்) எனும் ஊரையாண்ட குறுநில மன்னன் வேங்கை மார்பனுக்கும் நிகழ்ந்த போரில் கானப்பேரெயிலைக் கைப்பற்றினான் உக்கிரப் பெருவழுதி. அதுகண்ட வேங்கை மார்பன், கொல்லனின் செந்தீயில் மாட்டப்பட்ட இரும்பு உண்ட நீர் மீளுவதைவிட அரிதான செயல் என் கானப்பேரெயிலை வழுதியிடமிருந்து மீட்பது என்றெண்ணி இரங்கினான் என்கின்றார் புலவர்.
”கனலிரும்புண்ட நீரின் விடாது” (பெருங். 3.25.71) என்று பெருங்கதையில் கொங்குவேளிரும் இவ் உவமையைப் பயன்படுத்தியிருக்கக் காண்கின்றோம்.
சான்றோர் பலராலும் எடுத்தாளப்பட்ட இவ் உவமை கல்விவல்லாரான கம்பரையும் கவர்ந்ததில் வியப்பில்லை.
சடாயுவுக்கும் இராவணனுக்கும் கடும்போர் தொடங்கிற்று. சடாயு தன் அலகால் கொத்தியும் நகங்களால் பிறாண்டியும் இராவணனின் முத்தார மார்பில் இருந்த கவசங்களை நெகிழச் செய்தான். பதிலுக்கு இராவணனும் கணைகளால் சடாயுவின் மார்பைத் துளைத்தான். சடாயுவும் சளைக்காது இராவணனின் கையிலிருந்த வில்லைத் தன் பல்லால் பிடுங்கி எறிந்தான். சிச்சிலிப் பறவைபோல் இராவணனைப் பாய்ந்து தாக்கினான்.
சடாயுவால் தன் படைக்கலங்கள் அனைத்தையும் இழந்த இராவணன் பொறுமையும் இழந்தவனாய்க் கயிலையைப் பெயர்த்தெடுக்க முனைந்த காலத்துச் சங்கரன் கொடுத்த தெய்வ வாளான சந்திரகாசத்தை எடுத்துச் சடாயுவை நோக்கி வீசவே சிறகுகளற்ற மலைபோல் மண்ணில் துவண்டு வீழ்ந்தான் புள்ளின் வேந்தன் சடாயு.
தன்னைக் காக்கப் போராடிய ஒரே உயிரும் தோற்று மண்ணில் வீழ்ந்ததைக் கண்ட சீதை, ”அல்லலுற்ற என்னை அஞ்சேல் என்று காத்துநின்ற இந்த நல்லவன் தோற்பதேன்? நரகன் வெல்வதேன்? அறமென்ற ஒன்று இல்லையோ?” என்றெண்ணிக் குமைந்தாள்.
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல்என்ற இந்
நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே
வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ
இல்லையோ அறமென இரங்கி ஏங்கினாள். (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3549)
தடுப்பதற்கு வேறாரும் இன்மையால் சீதையோடு விரைந்து விண்ணில் ஏகிய இராவணன், அவளை அசோகவனம் எனுமிடத்தில் அரக்கியர் நடுவில் சிறைவைத்தான்.
சீதையின் நிலை இவ்வாறிருக்க, இராமனைத் தேடிச்சென்ற இலக்குவன் அவனை வழியிலேயே சந்தித்தான். இலக்குவனை அங்கே எதிர்பாராத இராமன், ”சீதைக்குக் காவலாய் இரு என்ற என் சொல்லையும் மீறி இலக்குவன் இங்கு வந்த காரணமென்ன? ஒருவேளை அரக்கன் எழுப்பிய குரலை என் குரல் என்றெண்ணிச் சீதை இவனை அனுப்பியிருப்பாளோ?” என்று சிந்தித்தான். தன்னருகில் வந்த இலக்குவனை அன்போடு தழுவிய இராமன், இங்கு நீ வந்த காரணம் யாது என்று வினவ,
“அண்ணா! உம் அபயக் குரலைக் கேட்ட சீதை, நீர் அபாயத்தில் சிக்கியிருக்கின்றீர் என்றெண்ணி உம்மைக் காக்க என்னைப் போகச் சொன்னாள்; நான் மறுத்தால் தீயில் வீழ்ந்து இறப்பேன் என்றாள். அதனால்தான் வேறு வழியின்றி நான் இவ்விடம் வந்தேன்” என்று தன் சங்கடமான சூழலை இராமனுக்கு விளக்கினான் இளவல்.
அதனை ஏற்ற இராமன், “நீ மாய மான் என்று தடுத்தும் கேளாமல் அதன் பின்னால் நான் போனதால் நேர்ந்த சங்கடங்களே இவை” என்று வருந்தினான். பின்னர் இருவரும் சீதைக்கு ஏதேனும் தீங்கு நேராதிருக்க வேண்டுமே எனும் பதைபதைப்புடன் பன்னசாலை நோக்கி விரைந்தனர்.
அங்கே கனங்குழையாள் சீதையைக் காணவில்லை! தான் பயன்படுத்திக் கொள்வதற்காக மண்ணில் புதைத்துவைத்த மாநிதியை வஞ்சனையார் கொள்ளையிட்டுச் சென்றதுபோன்ற வேதனையையும் ஏமாற்றத்தையும் அடைந்து நைந்தான் இராமன்.
இராமன் நிலைகண்ட இலக்குவன், ”அண்ணா! தேர்ச்சக்கரங்களின் சுவடுகள் இங்கே தெரிகின்றன; சீதையைத் தீண்டுதற்கு அஞ்சி யாரோ பன்னசாலையோடு அவளைக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். எனவே இங்கேயே இருந்து வேதனைப்படுவதை விடுத்துச் சீதையைக் கொண்டுசென்றவர்கள் நெடுந்தூரம் செல்வதற்குமுன் நாம் அவர்களைத் தொடர்ந்துசென்று பிடிப்போம்” என்று சொன்னதை இராமன் ஏற்றுக்கொண்டான். இருவரும் தேர்ச்சக்கரச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லலானார்கள்.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
- கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
- கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
- கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
- கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.