பரிமேலழகர் உரைத்திறன் – 24
புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
பரிமேலழகரும் புறநானூறும்
முன்னுரை
பரிமேலழகர் தாம் எழுதிய திருக்குறள் உரையில் தாம் கற்றறிந்த பல நூல்களைப் பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார். அறிந்த எல்லா நூல்களையும் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பயன்படுத்திய நூல்களிலிருந்தும் ஒரே எண்ணிக்கையில் எடுத்துக்காட்டுக்களைத் தரவில்லை. தந்த எடுத்துக்காட்டுக்களையும் ஒரே தன்மையை விளக்குவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. குறட்பாவுக்குத் தாம் சரியென்று கருதிய கருத்தியலை முன்வைத்து உரையெழுதும் பரிமேலழகர், எந்த விளக்கத்திற்கு எந்த எடுத்துக்காட்டைத் தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். சொற்பொருள் விளக்கம், பொருளமைதி, இலக்கணக் கொள்கை, வரலாற்றுப் பதிவு, பண்பாட்டுப் பதிவு எனப் பல நோக்கங்களுக்காகப் பல இலக்கியங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இத்தகைய பயன்பாட்டிற்கு முதலில் திருக்குறளையே பயன்படுத்திக் கொள்வது பற்றிய கருத்துக்கள் முந்தைய கட்டுரை ஒன்றில் விளக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய நூல்களில் அதிகமான எடுத்துக்காட்டுக்களுக்காகப் பயன்பட்ட நூல் ‘புறநானூறு’. அந்நூலிலிருந்து அவர் தரும் எடுத்துக்காட்டுக்களையும் அவை தரும் விளக்கங்களையும் சுருக்கமாக ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.
அறமா? பொருளா? இன்பமா? (அதிகார விளக்கம்)
கல்வியா? செல்வமா? வீரமா? எனத் தொடங்கும் திரையிசைப்பாடலைப் பலரும் கேட்டிருக்கக்கூடும். அது இணையான பொருட்களை எடைபோடுகின்ற பாடல். எது சிறப்பு என்று வினவுகிற பாடல். அறம் பொருள் இன்பம் என்னும் தொடர் தம்முள் மாறுபட்டும் வழங்கப்படுகிறது. ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என்பது தொல்காப்பியம் கண்ட தலைகீழ் பாடம். ‘வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும்’ என்பது நாலடியார். இத்தகைய சிந்தனைகளையெல்லாம் உள்வாங்கிய திருவள்ளுவர் ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் அதிகாரத்தைப் பாயிரத்துள் அமைத்திருக்கிறார். அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளைப் பாடியிருக்கும் திருவள்ளுவர் அறன் வலியுறுத்தல் என்றால் அறத்தினை மட்டுமே வலியுறுத்துகிறாரா என்னும் ஐயம் தோன்றக் கூடும். நம்முள் பலருக்கும் வராத இந்த ஐயம் பரிமேலழகருக்கும் வந்திருக்கிறது. ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் தொடருக்கு,
“அம்முனிவரால் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனை பொருளும் இன்பமும் போலாது அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான் அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல்” (பாயிரம் — அறன் வலியுறுத்தல் – அதிகாரப் பொருண்மை விளக்கம்)
என்று தொடர் விளக்கம் தந்திருக்கிறார். வழக்கில் வலியுறுத்தல் என்பதை ஒரு சொல்லாகவே நோக்கிய நம்மில் பலரும் வலி என்பது வலியறிதல் என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் வலிமையை உணர்த்தும் என்பதை அறிவதில்லை. அறம் பொருளைவிட வலிமையானது, இன்பத்தைவிட வலிமையானது என்று கூறுவதோடு அதற்கான காரணத்தையும் தொடர்ந்து கூறுகிறார். அறம் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் தரும். மற்ற இரண்டும் தராது.
அறத்தை அறத்துப்பாலில் கூறிய வள்ளுவர் பொருளைப் பொருட்பாலில் கூறுகிறார். அதற்கு விளக்கமளித்த பரிமேலழகர் ‘பொருள் இன்பங்களுள் இருமையும் பயப்பதாய பொருள்’ (பொருட்பால் முன்னுரை) என்று தெளிவாக்குகிறார். இன்பத்தைப் பற்றிச் சொல்ல வருமிடத்து ‘இம்மையே பயப்பதாய இன்பம்’ (இன்பத்துப்பால் முன்னுரை) என்று பொருள் வரையறை செய்கிறார். எனவே அறம் மூன்றுவகையான பயனைத் தரும். அறமே மற்ற இரண்டினும் வலியுடையது என்னும் கருத்தினை அவர் புறநானூற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்கிறார்.
“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்து வழிப் படூஉம் தோற்றம் போல” (புறம். 31)
என்னும் எடுத்துக்காட்டால் விளக்குகிறார். அதிகாரத்தின் தொடக்கத்திலேயே அது பற்றிய பொருள் வரையறை தெளிவானால் ஏனைய அதிகாரக் கருத்துக்களும் தெளிவாகும் என்பது அவர் கருத்து. அதற்கே புறநானூற்றைத் துணை கொள்கிறார்.
இலக்கணம் இலக்கியத்திற்காகவே
‘ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்’ என்பன மூன்றாம் வேற்றுமைக்குரிய உருபுகள் ஆகும். இந்த ஐந்து உருபுகளுள் ‘ஆல் ஆன்’ என்னும் இரண்டும் கருவிப் பொருளிலும் கருத்தாப் பொருளிலும் வரும், ‘மழையினால் குளம் நிறைந்தது’, ‘கோலால் எழுதினான்’, ‘இதனான் முடிக்கும்’, ‘கலைஞரால் கட்டப்பட்டது’, ‘சாமிநாத அய்யரால் பதிப்பிக்கப்பட்டவை’ என்பன போல. ‘ஆன்’ உருபு தற்போது வழக்கில் இல்லை. ‘ஒடு, ‘ஓடு’, ‘உடன்’ என்னும் மூன்றும் உடன்நிகழ்ச்சிப் பொருளில் வரும். ‘அமைச்சரோடு உதவியாளர் சென்றார்’, ‘அமைச்சருடன் ஒப்பந்தக்காரர் சென்றார்’ என்பன போல. இவற்றால் ஐந்து உருபுகள் கொண்ட மூன்றாம் வேற்றுமை மூன்று பொருண்மைகளில் வரும் என்பது தெரியவரும். வந்தாலும் இவ்வைந்து உருபுகளும் மூன்றாம் வேற்றுமைக்குரியனவே என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
“அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழு மில” (39)
என்ற குறட்பாவிற்கு,
‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினும் துன்பத்தினிடத்த., அதுவுமேயன்றிப் புகழுடைய அல்ல”
என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,
“ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது ‘தூங்கு கையால் ஓங்கு நடை’ என்புழிப்போல” (புறம் 22)
என்று விளக்கவுரை எழுதியிருக்கிறார். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்னும் தொடரில் பயின்று வரும் ‘ஆன்’ என்னும் வேற்றுமை உருபு அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப் பாட்டில் சொல்லப்படுவது காம இன்பத்தினை. அது இல்லறத்தோடு இணைந்திருக்க வேண்டிய ஒன்று. ‘பிறன்மனை விழைதல்’ காம இன்பம் தருமெனினும் அது துன்பத்தைத் தரும் புகழைத் தராது. இருக்கின்ற புகழை அழிக்கும். இழிவைத்தரும். அந்த வேற்றுமை உருபிற்கு இலக்கண அடிப்படையில் கருவிப்பொருளைக் கொண்டால் ‘இல்லறத்தால் வருவது இன்பம்’ எனப் பொருள் மயக்கம் உண்டாகும். ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே காம இன்பம்’ என்னும் பொருள் கிட்டாது. எனவே பரிமேலழகர் ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு உடன்நிகழ்ச்சிப் பொருள் தந்ததாகக் கருதி எழுதுகிறார். சரி! பரிமேலழகருக்காக வேற்றுமை இலக்கணம் மாறுபடுமா? என்றால் அவர் தான் கொண்ட அதே பொருளை மற்றொருவரும் கொண்டிருக்கிறார் என்பதற்கான இலக்கியச் சான்றினைப் புறநானூற்றிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். அந்த எடுத்துக்காட்டில், யானையின் வரவு கூறப்பட்டுள்ளது. ஆடிவரும் அதன் துதிக்கையும் அசைநடையும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆனால் பாட்டு எப்படி அமைந்திருக்கிறது? ‘தூங்கு கையான் ஓங்கு நடைய’ என்றிருக்கிறது. ‘தூங்கு’ என்றால் ‘தொங்கு’ என்பது பொருள். ‘தொங்குகின்ற கையால் ஓங்கிய நடை’ என்று வராது. நடைக்குக் கை காரணமல்ல. கையொடு நடையாம். ‘கையான் நடை’ என்பதைக் ‘கையொடு நடை’ என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். கொள்ளவே ‘தூங்கு கையொடு ஓங்கு நடைய’ என்பது பெறப்படும். இங்கே ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு, உடன்நிகழ்ச்சிப் பொருளில் வந்தது. இவ்விரண்டு உருபுகளும் மூன்றனுக்குரியன வெனினும் இலக்கியப் பொருள் நுட்பத்திற்காக மாறிய பொருள் தந்து அமைந்திருக்கிறது என்பதைப் பரிமேலழகர் புறநானூறு கொண்டு உணர்த்தியிருக்கிறார்.
கோட்டுப் பூ என்றால் கிளைப்பூ அல்ல
இலக்கணப் பொருண்மை விளக்கத்திற்காகப் புறநானூற்று வரிகளைப் பயன்படுத்திக் கொண்ட பரிமேலழகர் தான் கொண்ட பொருளுக்குத் துணையாகவும் புறநானூற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார். நீர்ப்பூ, நிலப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ எனப் பூ நால்வகைப்படும். அவற்றுள் கோட்டுப்பூ என்பது கிளையில் மலரும் பூ. அது இலைகளுக்கு நடுவே மலராது. திருக்குறள் இன்பத்துப்பாலில் தலைவன் தலைவிக்கு இடையே நிலவிய ஊடல் பற்றி உசாவிய தோழிக்குத் தலைவன் சொல்கிறான்,
“கோட்டுப்பூச் சூடினும் காயும், ‘ஒருத்தியை
காட்டிய சூடினீர்’ என்று” (1313)
“கோடுதலைச் செய்யும் மாலையைச் சூடினேன் ஆயினும், நும்மால் காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்ட வேண்டிச் சூடினீர் என்று வெகுளா நிற்கும்”
அக்காலத்தில் (தற்காலத்தில் அருகிய பழக்கம் இது) ஆண்களும் குஞ்சி வளர்த்துப் பூச்சூடுவர். ‘குஞ்சி’ என்பது ஆண்பாலுக்குரியது. ‘குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்’ என்பது நாலடியார் (131). ‘கூந்தல்’ என்பது பெண்பாலுக்குரியது. அந்தக் குஞ்சியில் தலைவன் சூடியது கோட்டுப்பூ. ஊடலுக்கு உரிய திணை மருதம். அத்திணைக்குரிய பூ கோட்டுப்பூ அல்ல. நீர்ப்பூ! மருதம் வயலாகிய நீர்ப்பகுதி! தலைவன் மருத நிலத்துப் பூவைச் சூடாமல் பிறிதொரு நிலத்துப் பூவைச் சூடியதே தலைவியின் ஊடலுக்குக் காரணம் என்று பிற உரையாசிரியர்கள் கருதினார்கள். ஆனால் பரிமேலழகரோ ‘கோட்டுப்பூ’ என்பதைத் தொழில் அடிப்படையில் வந்த பெயராகக் கருதி உரையெழுதுகிறார். எப்படி?
‘கோடுதலைச் செய்யும் மாலை’
‘கோடு’ என்பதைக் கிளையென்னும் பெயர்ச்சொல்லாகக் கொள்ளாமல் முதனிலைத் தொழிற்பெயராக் கொள்கிறார். கொண்டு, ‘பூ’ என்பதைப் பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலைக்கு ஆகுபெயராக்குகிறார்.
பூ – ஆகுபெயர்
என்று எழுதுகிறார். சரி. இப்படி கோட்டுப்பூ என்பதற்கு அவர் ஏன் ‘வளைந்த மாலை’ என்று பொருள் கொண்டார். தலைவன் உண்மையில் பிற நிலத்துப் பூவை அணியவில்லை. அணிந்திருந்தால் ஊடல் உண்மையாகிவிடும். ஊடல் என்பது கூடலை மிகுவிக்கும் பொய்யாக வருவித்துக் கொண்ட காரணியன்றி உண்மையன்று. அதற்கான காரணம் பொய். எனவேதான் ‘வளைந்த மாலை’ என்று பொருள் கொள்கிறார். மேலும் அதிகாரம் ‘புலவி நுணுக்கம்’. இவ்வாறு ‘வளைந்த மாலை எனத் தன்னிச்சையாகப் பொருள் கொள்ள இயலுமா? என்னும் வினாவை அவரே எழுப்பிக் கொண்டு அதற்கான சான்றினைக்,
“கோட்டம் கண்ணியும் கொடுந்திரை காடையும்’ (புறம். 275)
என்றார் பிறரும்”
எனப் புறநானூற்று வரிகளை எடுத்தாள்கிறார். இந்தப் புறநானூற்றுப் பாடலுக்குரிய சிறப்பு இதன் ஆசிரியர் ஒரூஉத்தனர் என்பார் பாடிய ஒரே பாடல் இது மட்டுமே. இந்தப் பாடலின் தொடக்க அடியில் போர்க்களத்து வீரனின் தோற்றப் பொலிவைக் குறிப்பிடும் ஆசிரியர் ‘கோட்டம் கண்ணி’ என்ற தொடரை ‘வளைந்த மாலை’ என்னும் பொருளில் பயன்படுத்தியிருக்கிறார். இதனைத் தம் நினைவுப் பேழையிலிருந்து பரிமேலழகர் காட்டி ஒரு நூல் தொடருக்கோ சொல்லுக்கோ சொல்லப்படுவது புத்துரையேயானாலும் அதற்கான சான்றுகளைத் தருவதையும் தமது உரைக்கொள்கையாகக் கொள்கிறார் என்பதை அறிய முடிகிறது.
ஒன்றில் இரண்டும் இரண்டில் ஒன்றும்
பரிமேலழகர், புறநானூற்றில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை அவருடைய உரையால் அறிந்து கொள்ளலாம். இக்காலத்தில் உரையெழுதும் அறிஞர் பெருமக்கள் உலகப் பெருநூலைக் கையடக்கப் பதிப்பாகக் கொண்டுவருவதில்தான் கவனமாயிருக்கிறார்களே தவிர, நூல் நுவலும் பொருளாழத்தை உணர்ந்து புத்துரை கண்டார் இலர். அளவையியல் நுட்பத்தோடு தமது உரையை எழுதும் அழகர், ஒரு நூலை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் முறையறிந்தவர். ஒரே திருக்குறளுக்கு இரண்டு புறநானூற்று எடுத்துக்காட்டுக்களைத் தருகிறார். அதே நேரம் ஒரே புறநானூற்று வரியை இரண்டு குறட்பாக்களுக்கும் பொருத்திக் காட்டுகிறார்.
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்” (765)
என்று ஒரு குறட்பா. இது உண்மையான நட்பிற்கு மெய்ப்புணச்சியும் சொல்லாடலும் வேண்டுவதில்லை. உணர்ச்சி ஒத்திருப்பதே அதன் அடையாளமாகும் என்னும் கருத்தில் அமைந்திருக்கிறது.
“ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் ஒத்த உணர்ச்சிதானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும்”
புணர்ச்சி ஒரு தேயத்தராதல். “இன்றே போல்க நும் புணர்ச்சி என்றதும் அதனை. ‘பழகுதல்’ பலகாற் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி ஒப்பின் அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்.
என்று பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதியிருக்கும் பரிமேலழகர், விளக்கவுரையில் நட்பாகிய பொருண்மையை விளக்க இரண்டு முறை புறநானூற்று வரிகளை இரண்டுவகையான பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.
- சோழன் குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. புணர்ச்சியென்பது அவர்களைப் போல ஓரிடத்திருந்தது என்பதை விளக்குதற்கு ‘இன்றே போல்க நும் புணர்ச்சி’ என்ற தொடரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
- பழகுதலாகிய சொல்லாடுதலைப் பற்றிய விளக்கம் தருகிறார். அதனைத் தொடர்ந்து புணர்ச்சியும் பழகுதலும் இல்லாததோர் உயரிய நட்பினை விளக்குவதற்காகக் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையர் நட்பினைப் புறநானூற்றுப் பதிவிலிருந்து எடுத்து விளக்குகிறார்.
புறநானூறு ஒரு இலக்கியம். அதனைத் தமிழினத்தின் வரலாற்று ஆவணம் எனக் கருதும் வரலாற்றறிஞரும் உளர். ஆனால் இலக்கியத்தை வரலாற்று ஆவணமாகக் கருதுவது குறைந்த விழுக்காட்டுப் பயனையே தரும் என்பர் சிலர். ஆனால் பரிமேலழகர் புறுநானூற்றுப் பதிவுகளை வரலாற்று நிகழ்வுகளாகவே கருதியிருக்கிறார் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு சான்றாகலாம்.
இது ஒரு குறட்பாவிற்கு இரண்டு புறநானூற்றுப் பதிவுகள் என்றால் மற்றொரு குறட்பாவில் ஒரே புறநானூற்று வரிகளை இரண்டு வகையான விளக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.
‘நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு” (234)
“ஒருவன் நில எல்லைக்கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச், செய்யுமாயின், புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது”
“புகழுடம்பான் இவ்வுலகும் புத்தேள் உடம்பால் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின் ‘புலவரைப் போற்றாது’ என்றார். அவை இரண்டும் உலகும் ஒருங்கு எய்துதல்”
என்று பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதிப்,
‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி,
எய்துப என்ப தம் செயலினை முடித்தெனக் கேட்டல்”
(சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடல் (27)) என்னும் பாடலை எடுத்துக்காட்டாக்கியிருக்கிறார்.
ஞானிகளைப் பேணாது என்றது, “இம்மையிற் புகழையீட்டாமல் அறிவை மாத்திரம் பெற்று யோக முயற்சியால் மறுமையில் தேவ உடம்பைப் பெற்றவர்களினும், இம்மையிற் புகழையும் ஈட்டித் தானம் முதலியவற்றின் பயனால் மறுமையில் தேவ உடம்பையும் பெற்றவர்களுக்குத் தேவலோகத்தில் மிக்க சிறப்பு கிட்டும் என்பது கருத்து.
இம்மையில் பூத உடம்பு, புகழுடம்பு என உடம்பு இருவகைப்படும். பூதவுடம்பாவது மண், நீர், நெருப்பு, காற்று, விண் என்னும் ஐம்பூதங்களால் ஆன உடம்பு. புகழுடம்பாவது கீர்த்தியாலும் சீர்த்தியாலும் பெறுவது. முன்னதற்கு அழிவுண்டு. பின்னதற்கு அழிவில்லை. தேவ உடம்பு என்பது ஞானிகள் மறுமையில் பெறுவது.
இம்மூவகை உடம்பினுள் பூத உடம்பு மட்டும் பெற்றுநின்ற மண்ணுலகத்தாரினும் தேவ உடம்பு மட்டும் பெற்றுநின்ற விண்ணுலகத்தாரினும் இவ்விரு உடம்புகளையும் ஒரே நேரத்தில் பெற்றவர்களின் பெருமை சிறந்து நிற்றல் காண்க. அதனால்தான் புத்தேள் உலகம் தேவ உடம்பு மட்டும் பெற்ற ஞானியரைப் போற்றாதாம்.
இந்தக் கருத்தியலைத் தாம் புறநானூற்றிலிருந்து பெற்றதாகக் கூறுகிறார். அதாவது புகழைப் பற்றிய கருத்தியல் புறநானூற்றுக் காலத்திலேயே நிலவிவந்த வரலாற்று உண்மையை இந்த எடுத்துக்காட்டின் மூலம் அவர் உறுதி செய்கிறார்.
புகழைச் செய்கின்ற உடல் நிலையற்றது. நிலையற்ற அதனால் ஈட்டப்படும் புகழ் நிலையானது. இது அறிவின் உச்சம். இதற்கு ‘வித்தகம்’ என்று பெயர். இதனை உடையவர் ‘வித்தகர்’. அடுத்த பாட்டில் (235) ‘வித்தகர்க்கல்லால் அரிது’ என்னுந் தொடருக்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும் விளக்கம் இதனை இன்னும் தெளிவாக்கும்.
மேற்கண்ட புறநானூற்றுப் பதிவினை மற்றொரு பாடலுக்கும் மேற்கோளாகக் காட்டுகிறார் அழகர்.
“இளிவரின் வாழாத மானமுடையார்
ஔிதொழுதேத்தும் உலகு” (970)
“தமக்கோர் இழிவு வந்துழிப் பொறுத்து உயிர்வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ்வடிவினை எஞ்ஞான்றும் தொழுது துதியா நிற்பர் உலகத்தார்” என்று பொருளைத் தருவது அது. புகழின்றேல் புத்தேள் நாட்டு உய்யாதால் (பாடல் எண். 966) என்பது மேலே சொல்லப்பட்டது. இந்தப் பாட்டில் ‘உலகு மானமுடையார் ஒளியை ஏத்தும்’ (970) என்று இருக்கிறது. இருக்கவே, ‘புத்தேள் நாடு உய்த்தல்’ பாட்டில் சொல்லப்படவில்லையே, அதாவது இளிவரின் வாழாத மானமுடையவரது புகழால் தேவலோகம் செல்லுதற்பற்றி யாதும் கூறப்படவில்லையே என்பாரின் ஐயம் களைவதற்காகப்,
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துவராகலின்” துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று”
எனப் புறநானூற்றின் அதே பாடலை ஈண்டும் எடுத்துக்காட்டாக்குகிறார்.
மரணத்திற்கு மருந்தில்லை
எமனுக்கு ‘எமதர்மன்’ என்றும் பெயர். ‘கூற்றுவன்’ என்றும் பெயர். உயிர் வௌவுதலாகிய தன்னுடைய கடமையை வினைப்பயனுக்கு ஏற்பத் தவறாது செய்தலின் எமனுடைய செயல் அறஞ்சார்ந்து நிற்பது. அதனால் அவன் எமதர்மன். உயிரையும் உடலையும் இரண்டாகக் கூறுபடுத்தலின் கூற்றுவன் என்றும் பெயர். இவையெல்லாம் அறிஞர்களுக்குத் தோன்றிய விளக்கங்கள். எனினும் கூற்றுவன் வந்து உயிரைப் பறித்துவிடின் அம்மரணத்தை மாற்றுதற்கு மருந்து கிடையாது. பரிகாரம் கிடையாது. மரணம் வந்தால் இறப்பைத் தவிர வேறு வழியில்லை.
“கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.” (765)
வீரனின் வீரம் பற்றிக் கூறும் இந்தக் குறட்பாவிற்குக்,
“கூற்றுவன்தானே வெகுண்டு மேல்வந்தாலும் நெஞ்சொத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலுடையதே படையாவது”
என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் ‘மேல்வரினும்’ என்னும் தொடரிலுள்ள உம்மைக்கு விளக்கம் தர எண்ணுகிறார். அது சிறப்பும்மை என்பது அவர் கருத்து. அது சிறப்பும்மையாக வேண்டுமானால் கூற்றத்தைச் சிறப்பிக்க வேண்டும். எப்படிச் சிறப்பிப்பது? அந்தக் கூற்றுவனுடைய தொழிலுக்கு மாற்றாகப் பிறதொழில் இல்லையாம். அதுதான் சிறப்பாம். அதாவது கூற்றுவனுடைய தொழிலாகிய மரணத்தைத் தடுக்கும் அல்லது நீக்கும் மருந்து இல்லையாம். எனவே அது ‘மருந்து இல் கூற்று’ இந்தக் கருத்துக்குரிய பதிவினைப் புறநானூற்றிலிருந்து எடுத்துக்கொள்ளும் பரிமேலழகர், அதனால் உம்மை சிறப்பும்மை என்கிறார்.
“மருந்தில் கூற்றமாகலின் உம்மை சிறப்பும்மை”
இந்தத் தொடர் அமைந்த புறநானூற்று வரிகள்,
“பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி” (புறம். 3)
“மாற்றரும் கூற்றம்” (1026) என்பது தொல்காப்பியம். கூற்றத்துக்கு மருந்தில் என்றும் அவன் செயலுக்கு அருந்தொழில் என்றும் அடைபுணர்த்திய பாங்குணர்ந்த பரிமேலழகர் ‘மருந்தில் கூற்றமாகலின்’ என்பதைத் தமது உரையில் ஆசிரிய வசனமாகவே (முன்னோர் மொழியை அப்படியே எடுத்துத் தம் உரையில் ஆளுதல்) எடுத்தாண்டுள்ளார்.
நிறைவுரை
ஏறத்தாழ முப்பது இடங்களில் ‘புறநானூறு’ என்னும் ஒரு நூலை மட்டும் திருக்குறள் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார் பரிமேலழகர். இது ஒரு பன்முகப் பயன்பாடு. ஒரு நூலைக் கற்கிறபோது உண்டாகும் பயன்களையும் அவற்றின் கூறுகளையும் மனத்துள் பதிவு செய்வார்க்கே இத்தகைய வல்லாண்மை கைகூடும். சொற்பொருள் விளக்கம், பொருள் விளக்க அமைதி, இலக்கண அமைதி, இலக்கண விளக்கம், இலக்கியத்தை வரலாறாகக் கொள்ளுதல் என்னும் இத்தகைய பன்முகப் பயன்பாட்டுக்கான கருவியாகப் புறநானூறு அவரால் நோக்கப்பட்டிருக்கிறது. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து காட்டப்பட்டிருக்கும் மேற்கோள்களால் திருக்குறள் ஆழம் தெளிவாகிறது. ஒரு நூலை எப்படிக் கற்க வேண்டும் என்னும் கற்றல் கொள்கையும் புலப்படுகிறது. திருக்குறளை இப்படி நோக்கி உரையெழுதியோர் இவரன்றி யாரும் உளரோ? என்னும் ஐயம் ஐயமாகவே நிற்கிறது!
(அடுத்த கட்டுரையோடு நிறைவுறும்…)