திருப்பாவை – 11 | கற்றுக் கறவை

திருப்பாவை 11
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
திருப்பாவை – 11 | கற்றுக் கறவை | ஸ்வேதா குரலில்
ஆளன் – ஆட்டி என அழைப்பது தமிழ் மரபு. ஆளன் என்பவன் ஆளுகின்றவன். ஆட்டி என்பவள் ஆளுகின்றவள். வல்லாளன், பேராளன், சீராளன் என்றெல்லாம் ஆண்களை அழைப்பார்கள், சீமாட்டி, பெருமாட்டி, திருவாட்டி எனப் பலவாறாகப் பெண்களை அழைப்பார்கள். இந்த வரிசையில்தான் பெண்டாட்டியும் தோன்றியது. ஆட்சிமை உடைய பெண், ஆளும் பெண் என்பது பொருள். இக்காலத்தில் இது, குடும்பத்தை ஆளும் பெண் என்ற பொருளில் மனைவிமார்களுக்கு வழங்குகிறது. இந்தப் பாடலில் ஆண்டாள் தன் தோழியைச் செல்வப் பெண்டாட்டி எனச் செல்லமாக அழைக்கிறார். தமிழ்க் குலத்தின் பொற்கொடி ஆண்டாளின் அமுதத் தமிழில் திருப்பாவையின் 11ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.
திருப்பாவை – 11 | கற்றுக் கறவை | சேகர் முத்துராமன் குரலில்
தேவ கணங்கள், பூத கணங்கள், மிருக கணங்கள், பட்சி கணங்கள் எனப் பலவற்றை நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்தக் கணம் என்பதற்குக் கூட்டம் என்று பொருள். நொடியைக் குறிக்கும் கணம் என்பது, க்ஷணம் என்பதன் தமிழ் வடிவமாகும், திருப்பாவையின் 11ஆவது பாடலில் கற்றுக் கறவைக் கணங்கள் எனப் பசுக்கூட்டங்களை ஆண்டாள் குறிப்பிடுகிறார். இந்தக் கணத்தில் இதைச் சேகர் முத்துராமன் குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)