அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

புகைப்படக் கலைஞர் ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தில் இருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (27.12.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 290

 1. எதனால்…

  வெட்ட வெளியில்
  கட்டுப்பாடின்றி
  ஓடி விளையாடிய பிள்ளை,
  வீட்டுக்குள் அடைந்துகிடந்து
  வெளியே பார்க்கிறது
  பரிதாபமாய்..

  நோய்த் தொற்றால்
  வந்த உள்ளிருப்பு
  காரணமா,
  கைப்பேசி நோண்டும்
  பெரியவர்கள்
  கண்டுகொள்ளாமல் விட்டதாலா..

  பல வீட்டுச்
  சன்னல்களில்
  பார்க்கிறோமே இப்படி…!

  செண்பக ஜெகதீசன்…

 2. அழகிய முகமதில் கூரிய பார்வை
  ஆழப்பதியும் எண்ணக் கோர்வை
  வடிவழகிய உதட்டதில் தடுப்பு பாதை
  வெண்பற்களின் அழகும் தெரியாவண்ணம்

  மஞ்சள் வெயில் முகத்தில் விழ
  கன்னமது பளப்பளக்க
  உன் மனவோட்டம் யாமறியோம்
  சுட்டிப் பயலே கட்டிக் கரும்பே
  சொல்லடா கனிமொழியில் சொல்லடா

  சுதா மாதவன்

 3. புதுப்பாதை

  துள்ளிக் குதித்து
  புத்தகப் பையைத் தூக்கி
  பள்ளிக்குச் செல்ல முடியவில்லை
  அள்ளித் தெளித்துப் போட்டு வைத்தக் கோலம் அழித்து ஓடி
  விஷமம் செய்ய முடியவில்லை
  வெயிலில் புழுதியில்
  உடைகள் அழுக்காக்கி
  ஆட்டம் போட முடியவில்லை
  கையில் காலில் சிறுகாயம் கொள்ள
  தாய்தந்தைத் தேற்றும்
  விளையாடல் இருக்கவில்லை….

  முகமறியா நபர்களிடம் பழகத்
  தடை விதித்தார்கள்; இப்போது
  முகம்மூடா நபர்களைக் காணமுடிவதில்லை….

  வீட்டை விட்டு வெளியே வந்து
  ஆட்டம் போடமுடியவில்ல
  கூட்டில் அடைபட்ட மழலைப் பறவைகள்
  சிறகை விறித்து உலகம் காணவில்லை…

  ஜன்னல் காட்சியே உலகம் ஆனது
  பின்னல் பிணைப்பெலாம் காணாமல் போனது
  எத்தனைக் காலம் சும்மா இருபது
  புத்தாண்டே புதுப்பாதை வகுக்க வா!!

 4. பட்டு விழிப் பாவைகள் வண்ண
  பட்டாம்பூச்சியாய் படபடக்க- பார்வை
  பட்ட இடமெல்லாம் பட்டொளி பூக்க
  பட்டென்று தொட்டுவிட்டாய் நெஞ்சை

  சின்ன சாளரம் வழியே விழி பாய்ச்சும்
  சின்னக் கண்ணா என்ன எண்ணமடா- உன்
  சிந்தை அதனுள்ளே பொங்கி எழுந்து
  சிந்தனை கதிர்களை சீறிப்பாய்ச்சுகிறது

  ஒளிபடைத்த கண்ணினாய்
  விழி மொழியால் உலகாளலாம்
  வெளி பெரிது வெளியே வா
  வழி விரியும் வாழ்வு புரியும்

  தலைமகனே தளையறு
  தடை உனக்கு யார் இட்டாலும்
  தலை வணங்கும் தரணி
  தலை எடு தலைவனாக

Leave a Reply

Your email address will not be published.