Category: Featured

Featured

  • ‘செம்மை, முழுமை, மகத்தான ஆளுமை’

    முனைவர் அண்ணாகண்ணன்

    ஆசிரியர், யாஹூ தமிழ்த் தளம்,

    பெங்களூரு

    annakannan@gmail.com

    ——————————————————————————————————-

    இதோ, சிறந்த முன்மாதிரி!

    புலத்துறை முற்றிய கற்றுத் துறைபோகிய தென்மராட்சி அறிஞர் என்ற அடிப்படையில், மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டிச் சிறப்பிக்கும் செய்தி அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

    உலகளாவிய பார்வை கொண்ட சச்சி அவர்களை உலகத் தமிழர் எனப் பல்லோர் உவந்து போற்றுவர். ஐ.நா. நிறுவனத்தில் பணியாற்றியவர். உலகம் முழுதும் ஆழமும் விரிவுமான நட்புக் கொண்டவர். 60க்கும் மேலான நாடுகளுக்குப் பயணித்தவர். 23 அரசுகளுக்கு ஆலோசகராகத் திகழ்ந்தவர். இத்தகையவருக்கு, சொந்த மண்ணில் பாராட்டு. நாட்டுக்கு அரசர் ஆனாலும் தாய்க்குப் பிள்ளை அன்றோ!

    சச்சி அய்யா, நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம் (http://www.tamilnool.com), தேவாரம்.ஆர்க் (http://thevaaram.org) தளங்களின் நிறுவனர்; உலகம் முழுவதும் சைவத் திருமுறைகளை எடுத்துச் செல்லும் தமிழ்த் தூதர்; தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர், அன்பிற் சிறந்த சான்றோர்;

    ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டபூர்வ – தனி நபர்ப் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர்; தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டுவதில் உறுதி கொண்டவர்.

    ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை….. ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார்.

    எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையிலான உடன்பாடு எப்படி இருக்க வேண்டும்? பதிப்பாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையிலான உடன்பாடு எவ்வாறு அமைய வேண்டும்? எனப் பலவற்றைத் தமிழில் நேர்த்தியாக எழுதியவர். பதிப்புத் தொழில் உலகம் என்ற மாத இதழில் சீரிய முறையில் பதிப்பக நெறிகளை வரைந்து காட்டியவர். எந்தச் செயலிலும் செம்மையும் முழுமையும் வெளிப்படுமாறு பணியாற்றுபவர்.

    சீசெல்சுத் தீவில் பிள்ளையார் கோவிலைக் கட்டியதில் தொடங்கி, மறவன்புலவில் பொங்கல் விழாவை முன்னெடுப்பது வரை, பல்வேறு சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களின் ஆசிரியர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவருடன் இணைந்து ‘சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை’ என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு, எனக்கு அமைந்தது. இவரது தூண்டுதலின் பேரில், ‘காந்தளகம் – 20 ஆண்டுகள்’, ‘தகத்தகாய தங்கம்மா’ ஆகிய நூல்களை இயற்றினேன். இவருடன் 1994 தொடக்கம் இன்று வரை நெருங்கிய நட்பும் உறவும் கொண்டிருப்பது, எனது பேறு.

    ஒருவரின் தகுதியை உணர்ந்து, அடையாளம் கண்டு பாராட்டுவது, உண்மையில் அவரை உற்சாகப்படுத்துவதற்காக இல்லை. அதனினும் அதிகமாக, அவரைப் போல நாமும் பணியாற்ற வேண்டும், முன்னேற வேண்டும் எனப் பிறரை ஊக்குவிப்பதற்கே. “தனி மனிதரின் ஆற்றலை முழுமையாக உணராமல், அதைச் சிறப்பாகப் பயன்படுத்தாமல் ஒரு சமுதாயம் இருக்குமானால், அதனால் ஏற்படும் இழப்பு, அந்தத் தனி மனிதருக்கு உரியதில்லை. அந்தச் சமுதாயத்திற்கே உரியது (அகமொழி 13)” என்ற எனது சிந்தனைத் துளியை இங்கே நினைவுகூர்கிறேன்.

    அறிஞர் சச்சிதானந்தன் அவர்களைப் பாராட்டுவதன் மூலம், தென்மராட்சி கல்விக் கழகம், தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுகிறது. இதற்காக இந்தக் கழகத்தினருக்கு எனது பாராட்டுகள். சச்சி அய்யாவின் பணியும் புகழும் மேன்மேலும் வளர்ந்திட, எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 22ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​​கோபாலன்

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேனோ
    பட்டநாள் பட்டாலும் பதமெனக்குக் கிட்டாதோ
    நற்பருவமாக்கும் அந்த நாளெனக்குக் கிட்டாதோ
    எப்பருவமுங் கழன்ற ஏகாந்தம் கிட்டாதோ
    வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ
    தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்கத்தி கிட்டாதோ
    வெந்துயரைத் தீர்கும் அந்த வெட்டவெளி கிட்டாதோ
    சிந்தையைத் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ
    அனாடியார்க் கடிமை கொளக் கிட்டாதோ
    ஊனமற என்னை உணர்ந்து வித்தல் கிட்டாதோ
    என்னென்று சொல்லுவண்டா என்குருவே கேளடா
    பின்னை யெனக்கு நீ அல்லாற் பிரிதிலையே. 1.

    மதுரையம்பதி வாழ் சோமசுந்தர சிவமே! நினது திருவருளைப் பெறாமல் நாட்கள் வீணாகிப் போனாலும், இனியாவது நின்றன் கருணையினைப் பெறாமல் இருப்பேனோ? அருள் கிடைக்காமல் நான் அவதியுற்றாலும் இனியொருநாள் நற்கதியை அடையாமல் போவேனோ? நற்பேறு பெருகின்ற நல்ல காலம் எனக்குக் கிட்டாதோ, அதனால் விளைகின்ற நன்மைகளை நான் அடையும் நாள் வந்து சேராதோ. சதாகாலமும் பேசிக் கொண்டிருக்கும் நிலைமை மாறி உன்னில் மனம் வைத்து வாய் மெளனம் கிட்டாதோ, மேலும் ஜீவராசிகளோடு கூடியிருக்கும் நிலை மாறி சுத்த சிவத்தில் லயிக்கும் ஏகாந்தம் கிட்டாதோ. பிறவியினால் பெற்ற துன்பங்கள் நீங்கி பரவெளியின் அமைதியில் நான் நிலைக்கும் நாள் வாராதோ, எண்ணங்களை அடக்கி ஒருமுகப்படுத்தி உன்னில் ஒன்றும் அந்தத் தேன்சுவையும் கிட்டாதோ. மெய்யடியார் கூட்டத்தில் நான் தொண்டுபுரியும் காலமும் வாராதோ, குற்றமே குணமாக்கொண்ட எனக்கு நின் திருவருளை ஓதுவித்தல் கூடாதோ. சற்குருநாதா, என் குருமணியே! என்னவென்று சொல்லுவேன், என்னவென்று சொல்லுவேன். நின்னையன்றி என்னை ஆதரிப்பார் இல்லையே.

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    அன்ன விசாரம் அது அற்ற இடம் கிட்டாதோ
    சொன்ன விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ
    உலக விசாரம் ஒழிந்தவிடம் கிட்டாதோ
    மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ
    ஒப்புவமை அற்றோடொழிந்த இடம் கிட்டாதோ
    செப்புதற்கும் எட்டாத் தெளிவிடமும் கிட்டாதோ
    வாக்கு நனாதீத வகோசரத்திற் செல்ல எனைத்
    தாக்கு மருட் குருவே நிந்தாளிணைக்கே யான்போற்றி. 2.

    கன்னிவனத்து நாதனே, சிவபெருமானே! சோற்றுக் கவலையே பெருங்கவலை, அந்தக் கவலை இல்லாத இடம் எனக்குக் கிடைக்காதா, தங்கம் தங்கம் என்று பொன்னின் நினைவாக இருக்கும் நினைவு அகன்று அது போன இடம் தெரியாத வெற்றிடம் எனக்குக் கிடைக்காதா. பூலோக வாழ்க்கையின் நிறை குறைகளில் ஈடுபட்ட இவ்வுலக விசாரம் தொலைந்து போன இடம் எனக்குக் கிடைக்காதா. இழிநிலையாம் மகளிரொடு கூடிவாழும் வாழ்க்கை நிலை இல்லாத வெற்றிடம் எனக்குக் கிடைக்காதா. பிறரது சுகவாழ்க்கை, நல்வாழ்க்கை இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து இரங்குகின்ற நிலை மாறி சமமான பார்வை எனக்குக் கிடைக்காதா. சொற்களால் வியந்து போற்ற முடியாத வெற்றிடமும் கிட்டாதோ. வாக்கு, மனம் இவற்றுக்கு அப்பாற்பட்ட இடத்துக்கு எனை செலுத்துவீர் ஐயனே! நினது திருத்தாள் இணையடி போற்றுகின்றேன்.

    (முதல்வன் முறையீடு நிறைவு பெற்றது)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…87

    சக்தி சக்திதாசன்

    mandela-cell-jpg_extra_big Nelson-Mandela-bw

     

     

     

     

     

     

     

     

     

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…87

     

    அன்பினியர்களே !

    இனிய வணக்கங்களுடன் உங்களின் முன்னே அடுத்த மடலில் சந்திப்பதில் மிக்க மகிழ்வுறுகிறேன்.

    உலகளாவிய ஊடகங்கள் அனைதிலும் இவ்வாரம் ஊடுருவி நிற்கும் விடயம் மறைந்த தென்னாபிரிக்க அரசியல் தலைவர் திரு நெல்சன் மண்டலா அவர்களின் மறைவைப் பற்றியதே !

    ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது அவன் வாழும் காலத்தில் அவனைப் பற்றி எழும் பேச்சுக்கள் அல்ல அவன் மறைந்த பின்னால் அவனைப் பற்றி மக்கள் மத்தியில் மிதக்கும் கருத்துக்களே என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு சமயம் கூறியிருந்தார்.

    அரசியல் கைதியாகச் சிறையிலே 27 வருடங்கள் அடைப்பட்டுக் கிடந்த ஒரு மனிதன் சிறையிலிருந்து வெளியே வந்து இரண்டு வருடங்களில் அந்நாட்டின் ஜனாதிபதியாக அரசியல் கதிரையை அலங்கரித்த சரித்திரம் படைத்தவர் நெல்சன் மண்டலா.

    சொந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வாக்குரிமை அற்று சிறுபான்மை இனத்தவரால் அரசியல் ரீதியாக சட்டம் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறு கொண்ட நிறவெறி அதிகார வர்க்கத்திற்கெதிராக போர்க்கொடி தூக்கிய ஒரு இளம் வீரரான நெல்சன் மண்டலா 27 வருடங்களின் பின்னால் அவரைப் பயங்கரவாதி என வருணித்த அரசியல் தலைவர்களாலேயே மாமனிதன் எனும் பெருமையோடு அரசியல் கோலோச்சும் வல்லமை கொண்ட ஒரு தலைவராக முடிந்தது என்பது ஒரு சாதாரண விடயமல்லவே !

    அப்படி அவர் எதைத்தான் சாதித்து விட்டார் ? மர்ரைய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களிடத்தில் காணப்படாத உயரிய அம்சம் இவரிடம் அப்படி என்னதான் இருந்தது ?

    கேள்விகள் எழத்தான் செய்யும் ?

    அவர் சிறையில் வாழ்ந்த அந்த 27 வருடங்களில் தன்னை அடக்கி ஒடுக்கிய அதைகார வர்க்கத்தினர் பேசும் அவ்ரிக்கானா மொழியைப் படித்தார் என்பதே அவருடைய சிறப்பம்சத்தின் அடிப்படையாகும்.

    அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டார். அந்தப்புரிதலின் அடிப்படையில் எப்படி தமது மக்களின் வாழ்விற்கு ஒரு விடியலைத் தேடிக் கொடுப்பது என்னும் வகையினை அறிந்து கொண்டார்.

    உலகளாவியரீதியில் தமது விடுதலைக்கான குரல் ஒலித்துக் கொண்டிருந்தது என்பதனை அவர் ஒருபோதும் மறக்கவில்லை.

    நெல்சன் மண்டலா தென்னாபிரிக்காவின் அரசியல் தலைவராக, நாட்டின் அதிபராக வருவதை விரும்பாத பல நாடுகளின் தலைவர்கள் அவர் பதவிக்கு வந்தால் தென்னாபிரிக்காவில் இரத்த ஆறு ஓடும். இனவெறிக் கலவரங்கள் தலைவிரித்தாடும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டியிருந்ததை தலைவர் மண்டலா உணர்ந்திருக்கத் தவறவில்லை.

    அவரது அரசியல் தானும் தான் சார்ந்திருந்த இயக்கமும் எனும் குறுகிய கண்ணோட்டத்திற்கு அப்பால் தனது நாடு, தனது மக்கள் அவர்களின் நல்வாழ்விற்கான உலக அரசியல் என்பனவற்ற தகுந்த வகையில் உள்வாங்கியிருந்தது.

    எதையும், ந்ப்படியும், எப்போதும் சாதிக்கலாம் எனும் மனநிலை கொண்டிராது இதை, இப்போது, இப்படித்தான் எனும் வகையில் அவரது கொள்கைகளை வகுத்துக் கொண்டார்.

    அதற்கேற்ப சிறையிலிருந்து வெளிவந்த அவரது வாயிலிருந்து பழிவாங்கும் வகையிலான ஆத்திர உணர்வுகளோடு கலந்த பேச்சை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கிடைத்ததோ மாபெரும் ஏமாற்றம்.

    அவரது பேச்சின் சாரமே “மறப்போம் மன்னிப்போம்” எனும் வகையில் அமைந்திருந்தது. மன்னிக்கத் தெரிந்த மனிதனின் மனது மாணிக்கக் கோவிலப்பா எனும் கவியரசரின் வரிகள் அவரது மாண்மைக்கு எடுத்துக்காட்டாகியது.

    தன்னை அடக்கி ஒடுக்கிய சிறுபான்மை அதிகார வர்க்கத்தினருக்கும் தனது அர்சியல் கட்டமைப்பில் இடம் உண்டு என்பதைத் துல்லியமாக தமது நடைமுறையில் எடுத்துக்காட்டினார்.

    இந்தியாவின் தந்தை மக்காத்மா காந்தியடிகள் ஆரம்பகால தென்னாபிரிக்க உரிமைக்குரலில் முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பதை மறைந்த தலைவர் நெல்சன் மண்டலா அவர்கள் எப்போதும் மறந்து விடவில்லை.

    அரசியல் தர்மத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததினால் தான் மறைந்த இத்தலைவரின் நினைவுப் பெருநாளில் 90 நாடுகளிக்கும் மேலான தலைவர்கள் கலந்து சரித்திர வரலாற்றில் இந்நிகழ்வை இடம்பெற வைத்தார்கள்.

    உலகநாடுகள் னைத்தும் வியந்து நோக்கிய ஒரு வித்தியாசமான நெல்சன் மண்டலாவைப் போன்ற தலைவர்கள் நூற்றுக்கணக்காக அனைத்து நாடுகளிலும் தோன்ற வேண்டும்.

    அது ஒன்றே அமைதியான, சமாதானமான, சமத்துவமான அன்பின் அடிப்படையில் ஒரு அகிலத்தைச் சமைக்கும் வல்லமை படைத்தது

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள்…

     காவிரிமைந்தன் 

    அன்றுதொட்டு இன்றுவரை அர்த்தமுள்ள பாடல்கள் மக்கள் மனதில் பசுமையாய் நிறைந்திருக்கின்றன.அப்பாடல் வரிகள் பசுமரத்தாணிபோல் பதிவாகியிருக்கின்றன.கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கும் கவிஞானி வாலி அவர்களுக்கும் தனித்தனியே நூல்வடிவம் தந்தபின்னர், ஏனைய பல கவிஞர்கள்-திரைப்பாடலாசிரியர்கள் நெஞ்சில் உலா வந்த வண்ணம் உள்ளனர்.

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை முதல் புலவர் புலமைப்பித்தன் என நெஞ்சில் குடிகொண்ட பாடல்களை வடித்தெடுத்த படைப்பாளர்களை – கால நிமித்தமாய் அவர்களின் மறக்கவொண்ணாப் பாடல்களைப் பற்றிய பகிர்வுகளை உங்களுடன் பரிமாற விழைகின்றேன்!

    இந்த நூலுக்கு பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்று பெயரிட்டுள்ளேன்.இதிலே விடுபட்டுப் போகாத வண்ணம்,தமிழ்கூறும் நல்லுலகம் தந்த சீர்மீகு பாடலாசிரியர்களை பட்டியலிட்டுத்தான் இப்படைப்பைத் துவங்குகிறேன்.  மேலும் இவர்களால் எழுதப்பெற்று மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பாடல்கள் நாளைய தலைமுறைக்கு சேர்த்தாக வேண்டம் என்கிற வேட்கையும் இந்நூல் வடிவம் பெறக் காரணமாகும்.

    உண்மையைச் சொல்வதென்றால், இப்பாடல்கள் எழுதப்பெற்ற திரைப்படங்களைத்தாண்டி, மக்கள் வாழ்வியலோடு கைகோர்த்து கால இடைவெளி வென்று வாழுகின்றன என்பதற்கு சத்திய சாட்சியாக மக்கள் பல்லாயிரம், பல இலட்சம், பல கோடி என பரப்பளவு விரியும்.

    சொல்லாட்சி, பொருள், கருத்து, உணர்ச்சி, வாழ்க்கை தத்துவம், என எண்ணிலாத் தளங்களில் இப்பாடல்கள் மேலோங்கி நிற்பதும் அதற்கேற்ற இசை வடிவம் நம்மை இன்னும் நெருங்கச்செய்யவும் பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்கிற பெயருக்கு கட்டியங்கூறும்!

    வார்த்தைப் பூக்களாகவும், சில நேரம் புரட்சிக்கு வித்திடவும், வார்த்துத் தந்த கவிஞர் பெருமக்களை ஒருசேரப் போற்றி பாராட்டவும் வணங்கிடவும் கடமைப்பட்டுள்ளேன்!  இந்நூல் கவிஞர் பெருமக்கள் பலரையும் உள்ளடக்கமாய் வடிவம் பெறுவதால், அனைத்துப்பாடல்களும் இடம்பெற வழிகளில்லை!

    எனினும் இடம்பெற்றுள்ள பாடல்கள் அக்கவிஞர்களின் மேன்மையினை பறைசாற்ற ஏதுவாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்குத் திடமாக உண்டு.  வெறும் கற்பனைகளைக் காற்றில்பிடித்து பட்டம் விடுபவர்களாக நில்லாமல், தங்கள் தமிழ் ஆற்றலை – இந்தச் சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் தந்துவிட வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியோடு ஆற்றிய பணிகளால் விளைந்த முத்துக்களிவை என்பதனை முன்மொழிவது என் கடமையாகிறது!

    புலவர் புலமைப்பித்தன்

    • ·         இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்..

    திரைப்பாடல் என்றாலும் எல்லோரையும் திரும்ப வைத்த பாடல்!  கருத்துப் பெட்டகத்தைத் தன் கவி வண்ணத்தால் புலவர் புலமைப்பித்தன் புனைந்து தந்த பாடல்!  மக்கள் திலகத்திற்காக மலர்ந்த பாடலிது – மக்கள் மனதிலெல்லாம் நிறைந்திருக்கும் பாடல்! மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த பாடல்! திரையில் இரு வேறு கட்டங்களில் இரு வேறு குரல்களில் இடம்பெற்ற பாடல்! மறைந்த எஸ்.வரலட்சுமி அவர்களின் கம்பீரக்குரலில் தவழ்ந்திடும் தாலாட்டாகவும் பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் குரலில் குழைந்திடும் அன்பின் நீலாம்பரியாய்  நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் பிறந்து இந்த பூமியில் என்றும் தவழும் பாட்டு!

    பாட்டுடைத்தலைவன் கதாநாயகனாக.. வளர்ந்த பின்னரும் அடம்பிடிப்பதும். அன்னைக் காட்டும் பரிவில்..  மலர்ந்த முகம் காட்டி..கண்ணுறங்கும் காட்சியில்.. புலவர் புலமைப்பித்தனின் கனிந்த வரிகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இனிய ஸ்வரங்களில் இறக்குமதியாக.. தங்கள் குரலால் அதைப் பரிமாறியிருக்கிறார்கள்.  இதில் கவி விருந்தும் உண்டு!  நல்லிசையால் செவி விருந்தும் உண்டு!

    தாய் பாடும் பாட்டல்லவா தாலாட்டு! தங்கக் கிண்ணம், வெள்ளித்தட்டு, இவைகளைக் காட்டிலும் மதிப்பிடமுடியாத தாயின் பாசம் பரிணமிக்க.. தன் பிள்ளையின் கொள்ளை அழகை.. கொட்டி அளக்கிறார் பாடலில்..

    “நின்றுநிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும்..

    எழில் நீந்தும் உடலினை காணும்பொழுதினில் சிற்பம் அதைக் கேட்கும்!”

    பொன்மனச் செம்மலுக்கு புகழாரமாய் அமைந்த பாட்டு!  பலகோடி தமிழ்மக்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் தலைவனுக்கு –தாயை முதல் கடவுள் என்று வாழ்ந்து காட்டிய தலைமகனுக்கு – அந்த தாயே பாடிய அன்பின் நீராட்டு!

    மற்றுமொரு முறை தன் தாய் பாடிய பல்லவியைக் கொண்டு, இந்தச் சமுதாயத்திற்கு நீதிகளையும் நெறிகளையும் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லிவந்த எம்.ஜி.ஆர். பாடும் பாடலாய்..

    • இந்தப்பச்சைக்கிளிக்கொருசெவ்வந்திப்பூவில்
      தொட்டிலைக்கட்டிவைத்தேன் அதில்
      பட்டுத்துகிலுடன்அன்னச்சிறகினை
      மெல்லெனஇட்டுவைத்தேன்
      நான்ஆராரோஎன்றுதாலாட்ட
      இன்னும்ஆராரோவந்துபாராட்டஎந்தக்குழந்தையும்நல்லக்குழந்தைதான்
      மண்ணில்பிறக்கையிலே
      எந்தக்குழந்தையும்நல்லக்குழந்தைதான்
      மண்ணில்பிறக்கையிலே
      பின்நல்லவராவதும்தீயவராவதும்
      அன்னைவளர்ப்பதிலேநான்ஆராரோஎன்றுதாலாட்ட
      இன்னும்ஆராரோவந்துபாராட்ட

      தூக்கமருந்தினைப்போன்றவை
      பெற்றவர்போற்றும்புகழுரைகள்
      நோய்தீர்க்கும்மருந்தினைப்போன்றவை
      கற்றவர்கூறும்அறிவுரைகள்
      கூறும்அறிவுரைகள்  (இந்தப்பச்சைக்கிளிக்கொரு)

    ஆறுகரையில்அடங்கிநடந்திடில்
    காடுவளம்பெறலாம்
    தினம்நல்லநெறிகண்டுபிள்ளைவளர்ந்திடில்
    நாடும்நலம்பெறலாம்

    நான்ஆராரோஎன்றுதாலாட்ட
    இன்னும்ஆராரோவந்துபாராட்ட

    பாதைத்தவறியகால்கள்விரும்பிய
    ஊர்சென்றுசேர்வதில்லை
    நல்லபண்புத்தவறியபிள்ளையைப்பெற்றவள்
    பேர்சொல்லிவாழ்வதில்லை

    இந்தப்பச்சைக்கிளிக்கொருசெவ்வந்திப்பூவில்
    தொட்டிலைக்கட்டிவைத்தேன்  அதில்
    பட்டுத்துகிலுடன்அன்னச்சிறகினை
    மெல்லெனஇட்டுவைத்தேன்
    நான்ஆராரோஎன்றுதாலாட்ட
    இன்னும்ஆராரோவந்துபாராட்ட ம்…ம்…ம்…ம்..

    பொதுவாக பெண்மைதான் தாலாட்டுப் பாடும்!  பொன்மனச் செம்மலின் இதயம் எவ்வளவு மென்மை வாய்ந்தது என்பதற்கு இந்தப் பாடலில் அவர் முகம் காட்டும் அத்தனை நளினங்களும்.. பாவங்களும்.. கதையின் நாயகியை மட்டும் கண்ணுறங்கச் செய்யவில்லை!  நம்மையும்தான்!!

    எத்தனையோ ஆசிரியர்கள் எத்தனையோ நாட்களாய் நடத்தினாலும்கூட இத்தனை அருமையாய்.. இத்தனை அழுத்தமாய் நம் இதயங்களில் இடம் பெற வைத்துவிட முடியுமா?

    வாழ்க்கைக்கு விளக்கம்!  பயணத்திற்கு பாதை!  உள்ளத்தில் ஏந்த வேண்டிய இலட்சியம்!  சராசரி மனிதர்களுக்காகவே சமைக்கப்பட்ட பாடல்!  சரித்திரம் படைக்கவும் நம்மை உசுப்பிவிடும் வரிகள்! எளிய சொற்களால் புரியும் விதத்தினில் கற்பனை கலக்காத கருத்துப் புதையலிது!

    கேட்கும் நேரம் கண்ணுறங்கலாம்!  கேட்கும்போதே உள்ளம் விழிக்கலாம்!   உலகம் முழுவதும் உயர்ந்த பாடல் வரிசயைிலே நிச்சயமாய் இடம் பெற்ற பாடல்!  இதன் படைப்பாளர்களை .. கூட்டணியை நாம் போற்றியே பாராட்டுவோம்!

    http://www.youtube.com/watch?v=ApWApnJisy0
    Intha pachai HD Song

     

    காவிரிமைந்தன்

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
     
     
    அன்புடன் 
    காவிரிமைந்தன் 

     

    Share
  • சக்தியை சேமிப்போம்!…

    விசாலம்

     

    டிசம்பர் 14 சக்தியைச் சேமிக்கும் நாள் energy conservation day.இந்த நாள் BEE என்ற {“Bereau of energy efficiency } என்ற அமைப்பு மக்களுக்கு விழிப்புணர்வைத் தர முழித்துக்கொள்கிறது. இந்த அமைப்பு 2001லிருந்து செயல்படுகிறது .பள்ளியில் இந்த நாள் வந்தால் ஆசிரியர்களுக்கு இரட்டிப்பு வேலை. மத்திய அரசின் வழியாக சில போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வைக்க வேண்டும் அதாவது எப்படி எனர்ஜியை மீத்து வருக்காலத்திற்கு சேமிக்க வேண்டும் என்ற கருத்தில் போட்டிகள் தொடங்கும். இதில் கட்டுரைப்போட்டியும் ,சித்திரப்போட்டியும் நிச்சியம் இருக்கும். இதில் ஜெயிப்பவர்களுக்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ரூ 33000 ஒதுக்கப்பட்டிருக்கும். பரிசுமுடிவுகள் வெளிவந்தவுடன் நேஷனல் எனர்ஜி கன்வெர்ஸேஷன் டே அன்று விழாப்போல் கொண்டாடுவார்கள்.விழாத்தலைவர் பரிசுகளை வழங்குவார்.

    இந்த நாளை நாம் மிக முக்கியமான நாளாகக்கொண்டு நம்மால் முடியும் வரை சக்தியைச் சேமிக்க வேண்டும் இந்த பூமியிலேயே நமக்குத் தேவையான சக்திகள் அனைத்தும் உள்ளன நீர்மின்சக்தி அணுமின்சக்தி என அனைத்தையும் உருவாக்கியது மனித ஆற்றல் என்ற சக்திதான், இதைச்சேமிக்க ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவரை முயல வேண்டும். இல்லத்தரசிகள் கேஸ் அடுப்பை தேவைக்கு அதிகமாக உபயோகிக்காமல் சேமிக்கலாம் சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு டிவி கீழ் அமர்ந்த விடுவார்கள் அது கொதித்து பாதி ஆனவுடன் பின் வந்து அணைப்பார்கள் சிலர் தோசை வார்க்கும் தவாவை பெரிய அளவில் வைத்து அதில் சிறிய தோசை வார்ப்பார்கள், சின்ன தவா வைத்தாலே தேவையான் சூடு பரவும் ,பெரிய குடும்பமானாலும் சிறிய குடும்பமானாலும் சாப்பாட்டிற்கு என்று ஒரு நேரம் ஒதுக்க ஒரே நேரத்தில் எல்லோருக்கும் சுடச்சுட பரிமாறமுடியும் அது இல்லாமல் நினைத்த நேரத்தில் தன் இஷ்டப்படி வந்து சாப்பிடும் பொருளை மறுபடியும் சுட வைக்க எனர்ஜி அங்கு வீணாகும். தவிர அதில் காய்களின் ஊட்டச்சக்தியும் குறையும்.

    இல்லறத் தலைவிகள் தன் காரியமே கண்ணாயினார் என்பதுக்கொப்ப வேலை செய்தால் எரி பொருள் வீணாவதைத் த்டுக்கலாம் அடுத்ததாக மொபைலில் பேசிக்கொண்டே இருக்க அடுப்பை அணைத்தோமா இல்லையா என்ற சந்தேகம் வந்து அங்கும் எரி பொருள் வீணாகும். பர்னரின் அளவு இருந்தால் நன்றாக இந்தச் சக்தியைச் சேமிக்கலாம்,இனி ஆண்கள் ராஜ்ஜியத்திற்கு வருவோம். சில ஆண்கள் ஷேவிங் செய்த்துக்கொள்ள குழாயைத் திறந்து விட்டபடி தங்கள் வேலையைத் தொடருவார்கள் ,அத்துடன் செல்லிலும் பேசுவார்கள். ஐயோ பரிதாபம் தண்ணீர் கீழே கொட்டியபடி இருக்கும் .இதே போல் பலதடவைகள் குழாய் திறந்து விட்டபடி வந்து செல்லில் பேச்சு தொடங்கி விடும் . பக்கெட் ரொம்பி வழிந்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று விழித்துக்கொள்வார்கள். “ஐயோ குழாயை மூடவேல்லையே .நல்ல வேளை இப்பவாவது ஞாபகம் வந்துதே .இல்லாவிட்டால் இந்த முசுடு வீட்டுக்காரன் என்னைப்பின்னி எடுத்துடுவான் “என்று தன் தவறை உணராமல் பேசுவதைக் கண்டிருக்கிறேன் சிலர் மேலே தண்ணீர் ஏற மோட்டார் போட்டு விட்டு பின் அந்த டேங்க் ரொம்பி வழிந்து கீழே கொட்ட பின் முழித்துக்கொள்வார்கள்.

    வீட்டுக்குழந்தைகளோ எல்லா அறையிலும் சுழலும் விசிறியைப் போட்டு விட்டு அதை அணைக்காமல் வெளியே சென்றுவிடுவார்கள் .ஒரு அறையை விட்டு வெளியே வரும்போது லைட் . ஏசி எல்லாம் அணைத்துவிட்டு வரும் வழக்கத்தை பெற்றோர்கள் தவறாமல் கற்றுக்கொடுக்க வேண்டும் .அதே போல் கணினியையும் அணைத்துவிட்டு வர பழக்கப்படுத்த வேண்டும் அரசை சார்ந்தவர்களும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை நான் கண்டிருக்கிறேன் .சில தெருல் பகலிலும் விளக்கு எரியும் ,,அதை அணைக்க மறந்து இருக்கலாம், இதே போல் ஆபீஸில் மனிதர்கள் இல்லாத அறையிலும் சுழல் காற்றாடி சுழன்றுக்கொண்டிருக்கும் ,கணினியோ கேட்கவே வேண்டாம் அதை சிலர் அணைப்பதே இல்லை. மைக்ரோஅவனில் தேவையான அளவுடன் கண்ணாடி பாத்திரம் வைக்க நிறைய சக்தி சேமிக்கலாம் , வீட்டு வாசலில் மரங்கள் இருந்தால் நல்ல காற்று வருவதால் மினசாரச் சக்தி சேமிக்கலாம்.

    தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் விதம் மிக வியப்பைத் தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும் மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம். உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி போட்டாற் போல் இருக்கிறது இது நல்ல வெயில் காலத்திலும் தான். எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி. இந்த வெளி சக்தியைச் சேமிக்கும் போது எனக்கொன்று தோன்றுகிறது .ஏன் நாம் நம்மிடம் இருக்கும் சக்தியையும் சேமிக்கக்கூடாது? படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை இழக்கிறோம் .அளவு கடந்த மோகத்திலும் அல்லது காமத்திலும் சக்தி விரயமாகிறது நம் உடலில் இருக்கும் சக்தியை விரயமாக்காமல் தக்க வைத்துக்கொள்ள அங்கு நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது, மௌனத்தில் தியானம் சீக்கரம் பலன் தருகிறது “.மௌனகுருவே நடராஜா நீலகண்டனே ” என்று அந்த ஞானகுரு தக்ஷிணாமூர்த்தியைத் தியானிப்போம்

    ஜே.வி செர்னே சொல்கிறார்

    ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற வார்த்தைகள்
    வாகனங்களாக உள்ளன . “செய்து முடிப்பேன்” என்ற வாகனத்தில்
    ஏறிக்கொண்டால் அடக்கமுடியாத ஆர்வத்துடன் கூர்ந்து செயல்
    வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம் வானத்தைத் தொட்டுவிடலாம்

    சக்தியைச்சேமிப்போம்!…

    Share
  • சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 2

    மேகலா இராமமூர்த்தி

    செல்லாச் செல்வன் 

    கருணை மறவனாக விளங்கி அந்தண முதியவர் ஒருவரை மதயானையிடமிருந்து காத்த கோவலன், இன்னொரு சந்தர்ப்பத்தில் ஓர் பார்ப்பனப் பெண்ணுக்கு நேர்ந்த மிகப் பெரிய கொலைப் பாவத்திலிருந்து அவளைக் காத்து, அவளிடம் கோபித்துச் சென்ற  கணவனை அவளோடு சேர்த்துவைத்த பெருந்தகையாளனாகத் திகழ்கின்றான். சுவையான அந்த வரலாற்றை இனிக் காண்போம்.

    புகார் நகரில் வசித்துவந்த ஓர் பார்ப்பனத் தம்பதிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறின்மையால் அவர்கள் (தம்மை அண்டி வந்த) ஓர் கீரிப்பிள்ளையைத் தம் பிள்ளையாகவே எண்ணி வளர்த்துவந்தனர். அந்தக் கீரி வந்த நல்ல நேரமோ என்னவோ..அவர்களின் பிள்ளையில்லாக் குறைக்கும் ஓர் விடிவு ஏற்பட்டது. அந்தப் பெண் அழகான ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள். அந்தக் கீரியும் அக் குழந்தையிடம் மிகுந்த அன்போடு பழகி வந்தது.

    Picture1

    ஒரு நாள் தண்ணீர் எடுப்பதற்காகக் குடத்தோடு வெளியே சென்றாள் அந்தப் பெண். தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் அவள் கண்ட காட்சி அவளைத் துணுக்குற வைத்தது. அவள் அன்போடு வளர்த்துவந்த அந்தக் கீரிப்பிள்ளை தன் வாயில் இரத்தம் வழிய அவளை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதனைக் கண்டவுடன் மிகவும் பதற்றமடைந்த பார்ப்பனி, சற்றும் சிந்தியாமல், என்ன நடந்தது என்பதனை நேரில் கண்டு தெரிந்துகொள்ளாமல் தன் குழந்தையைத்தான் அந்தக் கீரிப்பிள்ளைக் கொன்றுவிட்டு வாயில் இரத்தத்தோடு வந்துகொண்டிருக்கிறது என்று அவசரப்பட்டு முடிவுகட்டித் தன் கையில் இருந்த குடத்தால் அந்தக் கீரியைக் கொன்றுவிட்டு  அழுதவண்ணமே வீட்டை நோக்கி விரைந்து வந்தாள்.

    ஆனால் அங்கே அவள் கண்ட காட்சியோ அவளை வெட்கித் தலைகுனிய வைப்பதாகவும், மிகுந்த மனவேதனையில் ஆழ்த்துவதாகவும் இருந்தது. ஆம்..அங்கே அவளுடைய அருமைக் குழந்தை யாதொரு அபாயமும் இல்லாமல் தொட்டிலிலே தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அத்தொட்டிலின் கீழே ஓர் பாம்பு இறந்து கிடந்தது. அங்கே நடந்தது என்ன என்று இப்போது அவளுக்கு நன்றாகவே விளங்கிவிட்டது. ”தான் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த வேளையில் ஒரு பாம்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தீண்ட வந்திருக்கிறது, அதைக் கண்ட கீரிப்பிள்ளை அப்பாம்பினைக் கொன்றுக் குழந்தையைக் காத்திருக்கின்றது. அடடா! எப்பேர்ப்பட்ட மகத்தான செயலைச் செய்திருக்கின்றது அன்பே உருவான அந்தக் கீரிப்பிள்ளை! தன் குழந்தைக்கு மறுவாழ்வு அல்லவா கொடுத்திருக்கின்றது! இதனை அறியாமல் பூசிக்க வேண்டிய அந்தக் கீரியை ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிட்டல்லவா வந்திருக்கிறோம்!” என்று எண்ணி அவள் வருத்தம் மேலிட இருந்த வேளையில் வெளியில் சென்றிருந்த அவளுடைய கணவன் வீட்டிற்குத் திரும்பி வந்தான்.

    மனைவியின் முகவாட்டத்தைக் கண்டவன் அதன் காரணம் என்ன என்று வினவ, பார்ப்பனி நடந்தவற்றைக் கண்ணீரோடு அவனிடம் விவரிக்கின்றாள். அது கேட்டு வெகுண்டெழுந்த பார்ப்பனன், ”மிகப்பெரும் கொலைப் பாதகத்தைச் செய்த உன்னோடு இனி என்னால் வாழ இயலாது. உன் கையால் சமைத்த உணவை நான் இனி உண்ணவும் மாட்டேன்!” என்று கடுங்கோபத்தோடு கூறிவிட்டு வடமொழி வாசகம்1 எழுதிய ஏடு ஒன்றை அவள் கையில் திணித்துவிட்டு, ”இதன் பொருள் உணர்வாரிடம் இதனைக் கொடு” என்று சொல்லிவிட்டு வடதிசை நோக்கிப் புறப்பட்டுவிட்டான். (அப்பார்ப்பனி வடமொழி அறியாதவள் என்பது இதன் மூலம் தெரியவருகின்றது.)

    என்ன செய்வது என்று புரியாது திகைத்த அப்பெண், தன்னை மன்னிக்கும்படிக் கணவனிடம் கெஞ்சியபடியே அவன்பின்னே தொடர்ந்து செல்கின்றாள். ஆனால், அவள் கணவனோ அவள் செய்த பாவத்தை மன்னிக்க விரும்பாதவனாய் அவளைத் திரும்பியும் பாராமல் தனியே விட்டுவிட்டுக் கங்கைக்கு நீராடச் சென்றுவிடுகின்றான்.

    இவ்வாறு, கீரிப்பிள்ளை இறந்ததனால் கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரிவு ஏற்பட்டுவிடுகின்றது. இச்சம்பவத்தை இளங்கோவடிகள் பின்வரும் அடிகளில் காட்சிப்படுத்துகின்றார்.

    ”பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக
    எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
    வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
    கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
    வடமொழி வாசகம் செய்தநல் ஏடு
    கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கென…” (அடைக்கலக் காதை: 54-59)

    இப்பாடலில் ’பிள்ளை நகுலம்’ என்ற அழகான சொற்றொடர் கீரிப்பிள்ளையைக் குறிக்கின்றது.

    பின்பு அப்பார்ப்பனி அவ்வாசக ஏட்டைக் கையில் ஏந்தியவளாய் கடைவீதிகளிலும், வணிகர் வாழும் தெருக்களிலும் கண்ணீரோடு சுற்றித் திரிந்து ”இந்த வடமொழி வாசகத்தை யாரேனும் படித்துச் சொல்லுங்கள்; என் பாவத்தினைப் போக்கிப் புண்ணியப் பயனை அடையுங்கள்!” என்று கண்ணில்படுவோரிடமெல்லாம் இரந்து கேட்கின்றாள். ஆனால் அங்கே ஒருவருக்கும் அவள் கையில் உள்ள ஏட்டில் என்ன எழுதியிருக்கின்றது என்பதனை விளங்கிக்கொள்ள இயலவில்லை. இவ்வாறு அப்பார்ப்பனி துயருற்றுத் திரிவதை ஒருநாள் கோவலன் காண்கின்றான். அவளை அருகில் அழைத்து, “அம்மா! உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இவ்வாறு வருத்தத்தோடு போவோர் வருவோரிடமெல்லாம் ஏதோ கேட்டுக்கொண்டிருக்கிறாய்? கையில் வைத்திருக்கும் இந்த ஏடு யாது?” என இரக்கத்தோடு வினவுகின்றான்.

    அப்பெண் தன் நிலையைக் கோவலனிடம் மிகுந்த வருத்தத்தோடு விளக்கி, ”இந்த ஏட்டில் குறிப்பிட்டுள்ளதன் பொருளறிந்து என் துயரத்தையும், பாவத்தையும் போக்குங்கள்!” என்று கோவலனிடம் மன்றாடுகின்றாள். அதுகேட்டு அவள்பால் மிகுந்த பரிவு கொண்ட கோவலன், “கவலைப்படாதே அம்மா! தாளாமாட்டாத உன் துயரத்தை நான் போக்குகிறேன்” எனக்கூறி, அந்தணர்களின் வேதநூலில் கூறியுள்ளபடி அந்தப் பார்ப்பனியின் கொலைப் பாவம் நீங்குமாறு தானங்கள் பல செய்கின்றான். அத்தோடு நில்லாமல் அவளைப் பிரிந்து வடக்கே சென்ற அவள் கணவனையும் தேடிக் கண்டுபிடித்து அழைத்துவந்து அவளோடு சேர்த்து வைக்கிறான்.

    இவ்வாறு அவர்களை நன்னெறிப்படுத்தியதோடு, அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய செல்வங்களையும் வரையாது வழங்கிய செல்வந்தனாகக் கோவலன் விளங்குகின்றான். ’அப்பார்ப்பனியின் துயரத்தைக் கோவலன் போக்கினான்’ என்று இளங்கோ குறிப்பிடுவதால் அவ்வேட்டில் எழுதப்பட்டிருந்த வடமொழி வாசகத்தை அவன் படித்து அதன் பொருளை உணர்ந்தே அதில் குறிப்பிட்டிருந்தபடி கொலைப் பாவத்தைப் போக்குதற்குரிய பரிகாரத்தைச் செய்திருத்தல் வேண்டும் என்பதனை நாம் உய்த்துணர முடிகின்றது. கோவலனின் வடமொழிப் புலமையை ஆசிரியர் இந்நிகழ்வின்மூலம் குறிப்பாய் உணர்த்தியுள்ளார் என்று கொள்வதில் தவறில்லை.

    கோவலன் பார்ப்பனியின் துயர்தீர்த்த வரலாற்றை விளக்கும் சிலம்பின் வரிகள் இதோ…

    ”அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
    நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
    ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
    தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
    தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக்
    கானம் போன கணவனைக் கூட்டி
    ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
    நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ!” (அடைக்கலக் காதை: 68-75)

    இப்பாடல் வரிகளில் கோவலனைத் ’தொலையாத செல்வமுடையவனே’ என்ற பொருள்தரும் ”செல்லாச் செல்வ!” என்ற சொல்லால் உயர்வுபடுத்துகின்றார் அடிகள். மிகுந்த செல்வம் படைத்திருந்ததோடல்லாமல் அதனை மற்றவருக்கு வாரிக் கொடுக்கும் வள்ளலாகவும் அவன் திகழ்ந்திருக்கின்றான் என்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய உயர்பண்பு தானே?

    கோவலனின் பொன் மனத்தை வெளிச்சமிடும் மற்றொரு சம்பவம் அடுத்த பகுதியில்…

    (தொடரும்)

    *********************************************************************************************************************************

    1. வடமொழி வாசகமாகச் சிலப்பதிகார உரையாசிரியர் ‘அடியார்க்கு நல்லார்’ குறிப்பிடுவது “அபரீக்ஷ்ய நகர்த்தவ்யங் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம், பச் சாத்பவதி ஸந்தாபம்  ப்ராஹ்மணீ நகுலம்யதா“ என்பதாகும். இதன் பொருள்: “எந்த செயலையும் ஆராயாமல் செய்யக்கூடாது; நன்கு ஆராய்ந்த பின்பே செய்யவேண்டும்; இல்லையெனில் கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியைப் போல் பின்னால் வருந்த நேரிடும் என்பதாகும்.”

    கீரிப் பிள்ளையைக் கொன்ற பெண்ணின் கதை, குப்த அரசன் 2-ஆம் சந்திரகுப்தன் (also known as விக்கிரமாதித்தன்) காலத்தில் வாழ்ந்த ’விஷ்ணு சர்மா’ என்பவர் எழுதிய பஞ்சதந்திரக் கதைகளில் (a collection of fables) ஒன்றாகவும் பின்னாளில் சொல்லப்பட்டுப் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Share
  • திருமணங்கள் பிரிவதற்கா?

    தஞ்சை வெ.கோபாலன்

    பெண்கள் சிலர் திருமணமான பிறகு கணவனுடன் சுமுக உறவு இன்றி, பிணக்கு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். அப்படிச் செய்பவர்கள் நம் நாட்டில் மிகக் குறைவாக இருந்தாலும், இப்போதைய நாகரிக சமுதாயத்தில் இங்கும் அந்த மேற்கத்தியக் கலாச்சாரம் பரவி வருகிறது. ஒரு அமெரிக்க தகவல் அங்குள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இது போன்ற பிரச்சினைகளால் அவர்கள் தனித்திருக்க நேருகிறது என்கிறது. ஆனால் இந்தியாவில் என்ன நிலைமை, இங்கும் அதுபோன்றதொரு நிலைமை ஏற்படுவது இங்கு நிலவி வந்த சுமுகமான குடும்பச் சூழ்நிலையைச் சீரழித்துவிடும். இது போன்ற கணவன் மனைவி பிரிவுகளுக்கு என்ன காரணம்? உளவியல் ரீதியாக இது பற்றிய ஆய்வுகள் மேலை நாடுகளில் அதிகம் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட ஆய்வுகளில் கண்ட சில விடைகள் நம் சூழ்நிலைக்கும் ஏற்றதாக இருக்கும். அப்படியானால் அப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையை எப்படி சமாளிக்கலாம்?

    பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் பல்வேறு காரணங்களில் சில:-

    “நான் மனத்தளவில் அதிகம் புண்படுத்தப்படுகிறேன். அதன் விளைவாக என்னால் சுமுகமாக நடந்து கொள்ள முடியவில்லை, மற்றவர்கள் மனத்தை நோகடிக்கும்படி பேசியும் நடந்தும் கொள்ள நேர்கிறது.”

    “என் கணவன் என்னிடம் இப்போதெல்லாம் அன்னியோன்யமாக, நட்புறவோடு நடந்து கொள்வதில்லை”

    “இரவில் படுக்கையறையில் மட்டும்தான் என் நினைவு அவருக்கு இருக்கிறது, மற்ற நேரங்களில் என் மனநிலை உணர்வுகள், ஆசா பாசாங்கள் இவை பற்றி அவருக்கு அக்கறை இல்லை.”

    “தாய் தந்தையர்களோடு வாழ்ந்துவிட்டு புதுவீடு வந்த பின்னர் உறுதுணையாக இருக்க வேண்டிய கணவன் எப்போதெல்லாம் உடுக்கை இழந்தவன் கைபோல வந்து பாதுகாத்து உதவ வேண்டுமோ அப்போது அப்படியெதையும் செய்வதில்லை. ஏனோதானோவென்ற நடவடிக்கை மனவேதனையை ஏற்படுத்துகிறது.”

    “நாம் தவறு எதுவும் செய்துவிட்டால், மன்னிக்கவும் என்று சொல்வதைப் போல, அவர் செய்யும் தவறுகளுக்கு மனைவியிடம் வருத்தம் தெரிவிப்பதில்லை. தவறு செய்வது தன் உரிமை போலவும், பொறுத்துக் கொள்வது மனைவியின் கடமை போலவும் நடந்து கொள்வது.”

    “திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தாரோ, அப்படியே திருமணத்துக்குப் பின்னரும் இருப்பது, மனைவியாக வந்திருப்பவரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பில்லாமல் போய் அலட்சியத்துக்கு ஆளாக நேர்ந்து விடுகிறது.”

    “இருவருக்கும் சிந்தனை ஒற்றுமை இல்லை. கணவன் ஒரு திசையிலும், மனைவி எதிர்த்திசையிலும் அவரவர் மன நிலைமைக்கேற்ப பயணம் செய்வதால், மன ஒற்றுமையோ, சுமுக நிலைமையோ ஏற்பட வழியில்லாமல் போய்விடுகிறது.”

    “பெற்றோர் வீட்டில் வளர்ந்தபோது சகோதரர்கள், சகோதரிகள் மற்ற உறவுகள் அவர்களோடு பழகிய முறை, இவை அனைத்தும் இங்கு காணப்படவில்லை. அவரவர் வருவதும், உண்பதும், உறங்குவதும் ஒரு சத்திரம் போல் இருக்கிறதே தவிர, ஒற்றுமையான ஒரு கூட்டுக் குடும்பமாக இல்லை.”

    “வெளியே வேலைக்குப் போய்விட்டு வரும் கணவன், மனைவி என்ன செய்தாள், இன்றைய பொழுதை எப்படிக் கழித்தாள், அவளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா, உடல் நலம் எப்படி, பொழுது போக்குகள் என்ன என்பது எதையும் பற்றி கவலைப்படாமல், தானுண்டு தன் சுகங்கள் உண்டு என்று இருப்பது.”

    ஆண்களிடம் கேட்டால் அவர்களும் இதுபோல பல நூறு காரணங்களைச் சொல்லி மனைவியைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் சில காரணங்கள்:-

    “திருமணத்துக்கு முன்பு அவள் வேறொரு ஆணிடம் நெருக்கமாகப் பழகி வந்தது இப்போதுதான் தெரியவந்தது”

    “கணவன் மீதும், கணவனுடைய பெற்றோர்கள் மீதும் ஒரு சிறிதும் அக்கறையோ, அன்போ கிடையாது. தன் பெற்றோர், தன் சகோதரர்கள் என்று தன் குடும்பத்தை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்து ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறாள்.”

    “அவளுடைய விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் என்னுடையதோடு ஒத்துவரவில்லை. ஒரே அலைவரிசையில் எங்கள் மனவோட்டம் இல்லையென்பதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.”

    இப்படி எத்தனையோ காரணங்கள் பெண்களுக்கும் ஏன் ஆண்களுக்கும்கூட திருமணமத்துக்குப் பிறகு ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற எண்ணங்கள் பொதுவாக வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்கே அதிகம் பாதிப்புகள் ஏற்படுகிறது. வேலைக்குப் போகும் பெண்களுக்கு வேறுவிதமான பிரச்சினைகள். ஆபீசில் அவனுடன் அதிகம் பேசுவாயாமே? உன்னுடன் சேர்ந்து பயணம் செய்தானே அவன் யார்? என்பது போன்ற சந்தேகக் கண்கொண்ட கேள்விகள் இவர்களை அதிகம் பாதிக்கச் செய்கின்றன.

    ஒரு இளைஞன், இளைஞிக்குத் திருமணம் நிச்சயம் ஆகின்றபோது, திருமண வாழ்க்கையைப் பற்றி அதிகம் சிந்தித்து அந்த வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கும், தான் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், தன்னிடம் கணவனும் கணவன் வீட்டாரும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமென்றெல்லாம் பெண்கள்தான் அதிகம் கவலை கொள்கிறார்கள். அதற்காகப் பலரிடம் விசாரித்து நிலைமைகளைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஆண்களோ அதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அழகிய மனைவி வருவதும், அவளோடு ஊர் சுற்றுவது, அவள் வேலைக்குப் போனால் அவள் வருமானம் தங்களுடைய அதிகப்படி செலவுக்களுக்குப் பயன்படும் என்பது போன்ற சுயநல அடிப்படை எண்ணங்கள் மட்டுமே நிலவுமே தவிர, தான் பிறந்து வளர்ந்து உறவாடிய தங்கள் பெற்றோர்களை விட்டுவிட்டு நாமே கதி என்று வரப்போகிற ஒரு வயது வந்த, விவரங்கள் புரிந்த ஒரு பெண்ணைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

    பெண் வீட்டில் பெண்ணின் தாய் தந்தையர் தன் மகளின் திருமண வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்பதில் அதிகக் கவலையும், பயமும் கொள்வது போல ஆணின் பெற்றோர் சிந்திப்பதில்லை. வருகின்ற பெண் தங்கள் குடும்பத்தைப் பிரித்துவிடாமல் இருக்க வேண்டும், பெரியவர்களிடம் மரியாதை வைத்திருக்க வேண்டும், நம் குடும்பத்தில் பிறருடன் அனுசரித்து இருக்க வேண்டும், இவை தவிர அவள் என்னென்ன கொண்டு வருவாள் என்பதில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்களே தவிர, பெண்ணின் பெற்றோர் போல கவலை கொள்ள வழியில்லை.

    திருமணமான பின்னர் கணவன் மனைவிக்குள் ஏதேனும் மனவேற்றுமை உருவாகுமானால், பெண் தனக்கு நெருங்கிய தோழிகளிடமோ, தன் பெற்றோர்களிடமோதான் இதைப்பற்றி பேசுவாளே தவிர அக்கம் பக்கத்தாரிடமோ, தெரிந்த மற்ற உறவினர்களிடமோ பேசமாட்டார்கள். ஆனால் ஆண் பக்கத்தில் அந்தப் பெண் மீது குற்றம் சொல்வதில் முழுக் குடும்பமும் ஒன்றாகச் செயல்படும்.

    பிரச்சினை முற்றி விவாகரத்து என்று வருகின்ற நிலையில் மேலை நாடுகளில் பெண்களை விட ஆண்களே அதிகமாக விவாக ரத்துக்குப் போகிறார்கள். இங்கு நிலைமை சமநிலையில் இருப்பதாகத்தான் தெரியவருகிறது. விவாகரத்து வரை போகும் தம்பதியரில் ஆண்களிடம் பேசும்போது அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள் பொதுவாக, பெண்கள் சொல்லும் காரணங்களிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறது. திருமணமாவதற்கு முன்பு தானும் தன் பெற்றோரும் தங்கள் நிதி நிலைமை, மற்ற வசதிகள் இவற்றைக் கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் குடும்பம் நடத்தி வந்திருப்பார்கள். திருமணம் ஆன பின்பு மனைவி தன் கணவனது வருமானம், செலவு செய்யக்கூடிய வசதி போன்றவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றவும், மனைவியின் சுற்றத்தார் அடிக்கடி விருந்தினராக வந்து இருக்கும்போது அவர்களை நல்ல முறையில் கவனிப்பதற்காக அதிகமாகச் செலவு செய்ய நேர்வதையும் சொல்லித் தாங்கள் கடன்காரர்களாக ஆக்கப்படுவதைச் சொல்லி வருத்தப்படுகிறார்கள். ஒரு ஆண் தன் சம்பளம் முழுவதும் மாமியார் வீட்டுக்காரர்களுக்கு காப்பிக்கே செலவழிக்க நேர்ந்ததைச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

    திருமணமான புதிதில் மனைவி தன் கணவனின் வருமானம் என்ன, அதற்குத் தகுந்தபடி எப்படி குடித்தனம் செய்ய வேண்டுமென்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் அவளும் அவள் குடும்பத்தாரும் கணவன் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டு இஷ்டம் போல் செலவுகளைச் செய்து கணவனைக் கடன்காரனாக ஆக்கி விடுகிறார்கள். அது மட்டுமல்ல விரலுக்கேற்ப வீங்க வேண்டும் என்பதற்கு எதிராகத் தனக்குத் தெரிந்த தோழிகளைப் போல தானும் ஆடம்பர வாழ்க்கைக்கு விரும்பினால் நிச்சயம் கணவன் கடன்காரனாகத்தான் ஆவான்.

    மனைவியின் விருப்பம் போல நடந்து கொள்ளவில்லையானால் தாம்பத்ய உறவில் விரிசல், கோப தாபங்கள், பிரிவு என்று விரும்பத்தகாத விளைவுகளைச் சந்திக்க நேர்கிறது. சில இடங்களில் ஈகோ பிரச்சினை. கணவனை விட சந்தர்ப்ப வசத்தால் மனைவிக்கு அதிக சம்பளமோ, பதவியோ கிடைத்துவிட்டால் போயிற்று, அப்படிப்பட்ட மனைவிகள் தங்கள் கணவன்மார்களை துச்சமாக, ஏளனமாக நடத்தத் தொடங்குகிறார்கள். வார்த்தைகளால் கொட்டுகிறார்கள். இது எல்லோருக்கும் பொதுவானது அல்ல, கூடியவரையில் இப்படி நடந்து கொள்வோர் அதிகம்.

    மனைவி இப்படியெல்லாம் நடந்து கொள்வதால் கணவன் மனவேதனை அடைந்து மனச்சோர்வினால் கிட்டத்தட்ட பைத்தியக்காரனைப் போல அலையத் தொடங்குகிறான். மனைவிகளைப் பொறுத்த வரை அவர்கள் பொறுத்துக் கொண்டு பார்த்துவிட்டு, முடியாத நிலையில் வெடித்துச் சிதறி பிரிவினை நாடுகிறார்கள்.

    நன்கு படித்த, நாகரிகம் தெரிந்த மனைவியர் கூட கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை இருந்தால் அதனைத் தங்கள் மனத்துக்குள் வைத்துக் கொள்வதோ, நம்பிக்கைக்குரிய தங்கள் பெற்றோர் அல்லது மிகவும் நெருங்கிய தோழிகளிடம் மட்டுமோ சொல்லாமல் பார்ப்பவர்கள் முன்னிலையில் எல்லாம் கணவனையோ, அல்லது கணவன் தன் மனைவியைப் பற்றி குறை கூறியோ அறையில் நடக்கவேண்டியவைகளை அம்பலத்துக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். பொதுவாகவே எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் கணவன் சாமர்த்தியமில்லாதவன் என்று மிக அதிகமான பெண்கள் எடுத்துக் கொண்டு அப்படியே பிறரிடம் சொல்லவும் செய்கிறார்கள். அவருக்கு என்ன தெரியும், நான் பார்த்து இந்தக் காரியங்களைச் செய்தேன் என்று சுய பெருமை பாராட்டுவதில் சிலருக்கு ஆர்வம். அதுபோன்ற இடங்களில் அந்த ஆண் நல்ல திறமைசாலியாகத்தான் இருப்பான். அவர்கள் வீடு சிதம்பரமாக இருக்கும். வேறு சில பெண்கள், என் வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம், அவர் வார்த்தையை நாங்கள் யாருமே மீற மாட்டோம் என்று தன்னை அப்பாவியாக சித்தரிப்பாள். அங்கு கணவன் மதுரையாகத்தான் இருப்பான்.

    பொதுவாக பெண்கள் பிரிவுக்குச் சொல்லும் காரணம் கணவனுடனான திருமணம் மகிழ்ச்சி தருவதாக இல்லை. அவன் வேறு பெண்ணுடன் உறவு கொண்டிருக்கிறான். தன்னையும் குடும்பத்தையும் கவனிப்பதில்லை. அடித்துத் தொல்லை கொடுத்துத் துன்புறுத்துகிறான், மனத்தளவில் தன்னைத் துன்புறுத்தி கொடுமைப் படுத்துகிறான் இதுபோன்ற பல காரணங்கள்.

    பொதுவாக ஆண்களுக்குத் தன் மனைவிக்குப் பிள்ளை பேறு இல்லையென்றால், அவன் நினைக்காவிட்டாலும், அவன் பெற்றோர் தொல்லை செய்து வேறு திருமணம் செய்து கொள்ள முதல் மனைவியை ரத்து செய்ய விரும்புகிறான். பெற்றோர் சொல்லாவிட்டாலும் மற்ற உறவினர், அக்கம்பக்கத்தார் தூண்டி விடுவார்கள். அவளுக்கும் பிள்ளை இல்லாமல் போனால் என்ன செய்வது என்ற எண்ணம் இருப்பதில்லை. இப்போதெல்லாம் இதற்கு மருத்துவர்களைக் கண்டு தேவையான சிகிச்சைகளோ அப்படியும் இல்லையென்றால் தத்து எடுத்துக் கொள்வதோ அதிகமாக ஆகிவருகிறது. பொதுவாக மனைவியை கவனித்து பேணி வராமையே பொதுவான பிரிவுக்குக் காரணமாக ஆகிவிடுகிறது.

    இதுபோன்ற தடைகளையெல்லாம் மீறி கணவன் மனைவி ஒற்றுமையுடன் இருக்க முயற்சி செய்வது ஒன்றே வழி. முணுக்கென்றால் ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் காட்டி பிரிவது ஏற்றுக் கொள்ள முடியாது. திருமண பந்தத்தில் மட்டும்தான் கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் விவரம் புரிந்து, பருவம் வந்த பின் தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற உறவுகள் அவன் அல்லது அவள் பிறக்கும்போதே கிடைத்துவிடுகிறது. இதுபோன்ற ஏதாவதொரு காரணத்தைக் காட்டி பெற்றோர்களையோ, உடன் பிறந்தவர்களையோ ரத்து செய்யும் உரிமை இருந்தால் என்னென்ன விளைவுகள் இருக்குமோ. இந்திய நாட்டின் பண்பாட்டில் கணவன் மனைவி பிரிவு என்பது சர்வசாதாரணமாகப் போய்விடக் கூடாது. சட்டங்கள் இருக்கிறது என்பதற்காக அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டுமென்கிற சட்டம் எதுவும் இல்லை. எத்தனையோ குற்றங்களுக்கு சட்டங்கள் இருக்கின்றன. அதற்காக தண்டனைக் கொடுப்பது என்று ஆரம்பித்தால் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவருமே ஏதாவதொரு குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

    நாம் வாழும் காலம் மிகக் குறைவு. அந்த குறைந்த காலத்தில் நமக்குக் கிடைத்த உறவுகளைப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். அதிலும் கணவன் மனைவி உறவு என்பது இறைவன் படைப்பில் உன்னதமான படைப்பு. வேறு எந்த உறவோடும் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும் கணவன் மனைவி மட்டும்தான் பகிர்ந்து கொள்ள முடியும். ஆகையால் இறைவன் போட்ட முடிச்சை அவிழ்க்கவோ, அறுக்கவோ முயற்சிக்காமல் பிரச்சினைகளை சமாளித்துத் தீர்ப்பதற்கு வழிபார்த்தலே மனித சமுதாயத்துக்கு நல்லது.

    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. – கவியரசு

    கவிஞர். காவிரிமைந்தன்

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா

    காலம் எத்தனையோ கவிஞர்களை பிரசவித்திருக்கிறது! அவர்களும் தங்கள் திறமையால்.. தமிழ் மொழியில் அற்புதங்களைப் படைத்துச் சென்றிருக்கிறார்கள். கண்ணதாசன் அவர்களும் இந்தவழியில்தான் வந்து சென்றார்! ஆனால் சாதாரண ஜீவமரண கணக்குக்குள் அடங்கிவிடாத ஜீவநதியாய் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார் தன் படைப்புகளால்! அவரின் கவித்துவம் எளிமையில் பிறக்கிறது! நீங்களும் நானும் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளைத்தான் அவரும் கைப்பிடிக்கிறார். ஆனால் கவிஞரின் வசப்பட்டதும்.. அந்த வார்த்தைகள் பெருமையுறுகின்றன. நம்மை உடனே வியப்பில் தள்ளிவிடுகின்றன!

    இயற்கையாக நடக்கும் எதுவும்கூட கவிஞனின் கைவண்ணத்தால் இன்னும் மெருகேறுகிறது! இறைவனை .. இந்த உலகில் கண்ணதாசன் இழுத்துவந்ததைப் போல் இன்னொருவர் செய்ததுண்டா என்றால் சந்தேகமே!

    கடவுளை வணங்கிப் போற்றி வந்தனை செய்தவர்தான் என்றாலும் பாடல் வரிகளில் நியாயம் கேட்கத் தயங்காத எதார்த்தவாதியாக பரிணமிக்கிறார்! பாடலின் பல்லவி தவிர மூன்று சரணங்கள்.. திரைக்கதைக்காக எழுதப்பட்ட பாடல்தான் என்றாலும்.. இதில் உள்ள நியாயங்கள் திரைப்படத்தைத் தாண்டியும் உணரப்படுகிறதே!

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
    அம்மா அம்மா அம்மம்மா
    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
    அம்மா அம்மம்மா
    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

    திரைப்படக்காட்சியில் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் பண்பட்ட நடிப்பில் பார்ப்பவர்கள் கண்ணில் நீர்வரும்! இசையின் வடிவமோ திரையிசைத்திலகத்தின் கைவண்ணத்தில் உணர்வுகளை மீட்ட வருகிறது! ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில் சரஸ்வதி சபதம் திரையோவியம். இப்பாடலைக் கேட்கும் போது இதயத்தின் துடிப்பு ஏனோ இருமடங்காகிறது!!

    http://youtu.be/xjiRbHe-VG4

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
    அம்மா அம்மா அம்மம்மா
    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
    அம்மா அம்மம்மா
    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

     

    Song: தாய் தந்த பிச்சையிலே – thai thantha pichchaiyile
    Movie – திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    Singers: P. Suseela பாடியவர்: P. சுசீலா
    Lyrics: Poet Kanndasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    Music: K.V. Mahadevan, இசை: K.V. மஹாதேவன்

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
     
     
    அன்புடன் 
    காவிரிமைந்தன் 

     

    Share
  • நோட்டோலை

    இன்னம்பூரான்

    2

    சாக்கு சாக்கா காசு பணம் டோய்!

    கோக்கு மாக்கா சிக்கன் குருமா டோய்!

    நோக்கும் நேக்கும் நாக்குக் கேட்டாலும் டோய்!

    வாக்குக் கேக்கறான்னு மசியாதே டோய்!

    மகா கனம் பொருந்திய மகாஜனங்களே!

    விடுதலை வாங்கியது நன்நிமித்தமேயாயினும், வாக்களிப்பது ஜனநாயக உரிமையாயினும், குடிசை போட இடம் கேட்டு, அங்கு மனையொன்று அமைத்து, அடுத்த மனையை ‘லபக்கி’ மாடமாளிகை கட்டி, ஊரை வளைத்து கோட்டை கொத்தளம் எழுப்பி, உம்மை நடுத்தெருவில் விட்ட பிரதிநிதிகள் சிலரால் ஜனநாயகத்தின் நாயகம் எண்டேஞ்சர்ட் லிஸ்டில். களிம்போ! கட்டெறும்போ! வந்து குதித்தது நோட்டோலை ( NOTA). 2013 புள்ளி விவரம் கேளும். புள்ளி விவரம் ஒரு புதிய இலக்கிய தரவு! ஆமாம். புள்ளியில் விவரம் கொடுத்து சேதிக்குத் திரை போடலாம். விவரத்தில் புள்ளி போட்டு கதி கலங்க அடிக்கலாம். ஆட்டைத் தூக்கி மாட்டில் போடலாம். மாட்டைத் தூக்கி ஒட்டகத்தில் போடலாம். கயிறை மணலாக பிரிக்கலாம். யான் அந்த மாயாமாலங்கள் செய்ய தகுதியற்றவன். கொஞ்சம் உண்மையை கண்டு நடுங்குவோம்.

    மக்கள் மன்றத்தில், இந்த தேர்தல் கமிஷன் நோட்டோலை வாசிக்கிறது. ஷரத்து 158 படி(Representation of the People Act, 1951)இவை செல்லாத ‘நோ’ வாம்; நோவு தான்! இத்தனைக்கும் காத்த வீர்யனுக்கும், வீராயிக்கும் வாக்களித்தவர்கள் எந்த கவனத்தில் செய்திருக்கலாம் என்பது ஊகம். நோட்டோலை முத்திரை போட்டவர்கள் கவனம் செலுத்தித் தான் ‘ஒண்ணுமே உருப்படாது’ என்று தீவிரமாக சிந்தித்து இயங்கியவர்கள் எனலாம். நடக்கவேண்டியது, வேண்டாதது எல்லாம் நடந்து முடிந்த பின் இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், டிபாசிட் இழந்தவர்களின் முகத்திரை கிழியலாம்.

    ஒன்று மறக்கலாகாது. ஒரு வாக்குச்சாவடியிலாவது இந்த நோட்டாலை முத்திரையாளர்கள் இல்லாமல் இல்லை. அதாவது, மக்களுக்கு புரிந்து விட்டது, இந்த பாணத்தின் மகிமை. மத்திய பிரதேசத்தில் பான்செமால் தொகுதி பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு நோட்டோலை போட்டவர்களின் எண்ணிக்கை தோற்றவர், கெலித்தவருக்குள்ள வித்தியாசத்தை விட அதிகம். அதாவது அவர்களில் பெரும்பாலோர் தோற்றவருக்கு வாக்களித்திருந்தால், அவர் கெலித்திருப்பார்! சர்வ அசக்தி படைத்த வாக்காளர்களே! கவனிக்கவும். இது பழங்குடி தொகுதி. போட்டி இருவர் மட்டும். இருவருக்கும் உள்ளூரில் நல்ல பெயரோ, கெட்ட பெயரோ, இரண்டுமோ இருந்திருக்க வேண்டும். பழங்குடி மக்கள் சக்திக்கு சலாம்! கவார்தா, கைராகர், கல்லாரி, டோங்கர்காவ்ம் தொகுதிகளிலும் இதே கதி. நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பஸ்தார்-சர்குஜா பகுதிகளில் நோட்டோலை அலை, அலையாக: சித்ரகூட்: 10848; தந்தேவாடா-9677, கேஷ்கல்-8381, கொண்டகாவ்ம்-6773.ரஜிம்-5673, பாதால்காவ்ம் 5533. அரசு இதன் பின்னணியை நோக்கினால், பல உண்மைகள் கதவு திறக்கும்.

    வம்சாவளிக்கு ஆதரவு இல்லையோ? சர்ச்சைக்கு அப்பாற்படாத அஜீத் ஜோகியின் மகனுக்கும், மனைவிக்கு நோட்டோலை 7115, 1074. பின் தங்கிய பிராந்தியம் எனப்படும் சட்டீஸ்கரில் தான் நோட்டோலை அதிக. மெத்த படித்த டில்லியில் குறைவு. 460 வாக்காளர்களுக்கு ஷீலா தீக்ஷித் மேலும் நம்பிக்கையில்லை; அர்விந்த் கெஜ்ரிவால் மேலும் நம்பிக்கையில்லை. மத்ய பிரதேஷ் முதல்வர் சிவராஜ் செளஹான் மீது 4112 பேருக்கு நம்பிக்கையில்லை; ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மீது 3729 பேருக்கு நம்பிக்கையில்லை.

    போறப்போக்கைப் பார்த்தால் நான் தேர்தலுக்கு நின்றால், என் பெயரை NOTA என்று மாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    இப்படிக்கு,

    நோட்டா இன்னம்பூரான்

    09 12 2013

    உசாத்துணை:

    இன்றைய ஹிந்து இதழ்.
    இன்னம்பூரான்

    சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/-5XCyte3dQZ0/UnNMi2PIEHI/AAAAAAABcvc/p9F9u1CshuY/s1600/2.jpg

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 100

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    மூவரும் வழிக்கொள்ளல்

     

    குற்றமற்ற பிச்சைப் பாத்திரத்தையும்
    தோளில் இடுகின்ற உறியையும்
    மயிற்தோகையையும் எடுத்துக் கொண்டு
    ஐந்து எழுத்து மந்திரத்துக்குப்
    பொருளாக விளங்கும் தெய்வம்
    யாம் செல்லும் வழிக்கண்
    துணையாக நின்றிடட்டும்”
    என்று கூறிய கவுந்தியடிகள்
    பழியில்லாத சிறப்புடைய
    அந்தப் பயணத்தை மேற்கொண்டார்
    கண்ணகியுடனும் கோவலனுடனும்.

     

    காவிரி ஆற்றின் ஒலியும் பறவைகளின் ஓசையும்

     

    மழையது பொய்த்திடும்
    பஞ்ச காலத்தை விளக்கும் முகமாய்,
    சனி எனும் கோள் புகைந்தாலும்
    தூமகேது வானில் தோன்றினாலும்
    விரிந்த கதிரினையுடை சுக்கிரன்
    தென் திசைதான் சென்றிட்டாலும்

    அக்காலத்திலும் கூட
    காற்றுவந்து மோதும் குடகுமலை உச்சியில்
    கடுமையான இடிமுழக்கத்துடன்
    கருமுகில் மழையைப் பொய்க்காது பெய்திடும்.

     

    அதனால் பெருகிய வெள்ளத்துடன்
    பாய்ந்து வரும் காவிரியாறு
    குடகு மலையில் விளைந்திடும்
    அகில் சந்தனம் முதலியவற்றை
    அடித்துக் கொண்டுவந்து
    முத்து பவளம் முதலான
    கடலின் வளப்பொருட்களை எதிர்கொண்டு
    கரையைக் குத்திநின்று கடல்தனில் கலக்கும்.

     

    இங்ஙனம் சத்தத்துடன் பெருக்கெடுத்து
    காவிரிநீர் ஓடி வருகையில்
    மதகுகளின் மீதுள்ள
    நீர்ப்பலகைகளை அடித்துக் கடந்து பாய்ந்தது;
    அப்போது உண்டான பெருத்த ஒலி
    எங்கும் கேட்டபடி இருந்தது.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 98 – 109

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 17

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் –  லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (2), பாரிஸ், ப்ரான்ஸ்

     

    நாம் இப்பொழுது லூவ்ரெ அருங்காட்சியகத்தில் 6ம் எண் அறைக்கு வந்திருக்கின்றோம்.  நேராக அங்கு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மோனா லிஸா படத்தைத் தான் இப்போது பார்க்கின்றோம். டாவின்சியின் மோனா லிஸா !

    இரண்டு பக்கங்களும் கைப்பிடியுள்ள ஒரு மர நாற்காலியில் அமர்ந்து இடது பக்க கைப்பிடியில் தன் இரு கைகளையும் வைத்துக் கொண்டு இடது புறமாக தன் தலையைத் திருப்பி அதே சமயம் நேராகப் பார்க்கும் வகையில் இந்த உருவம் வரையப்பட்டிருக்கின்றது. மோனா லிஸாவிற்குப் பின்புறம் தெரிவதாக அமைந்துள்ள இயற்கை காட்சியில் இரண்டு வகையான காட்சிகளின் தன்மையைக் காண முடியும். முதலில் இயற்கை காட்சியாக சிறு குன்றுகள் பாதைகள் போன்றவை இயற்கையின் வர்ணங்களாகவும் அதன் பின்னே அடுத்து தெரியும் காட்சி கற்பனை உலகம் போல வெளிர் நீல நிறத்தில் விரிந்த பரந்த ஒரு பகுதியைக் காட்டுவது போலவும் அமைந்திருக்கின்றது.

     unnamed

    மோனா லிஸாவின் உருவ அமைப்பையும் உடைகளையும் காணும் போது மிக எளிமையான தோற்றத்தை இப்படம் அளிப்பதை உணர முடியும். அரச குடும்பத்து பெண்மணியாகவோ பொருள் வசதி படைத்த ஒரு பெண்ணின் உருவமாகவோ காட்டாமல் ஒரு சாதாரண பெண், ஆளுமை நிறைந்த திடமான மனத்துடனான ஒரு பெண்ணாகவே மோனா லிஸா காட்டப்படுகின்றார். அவரது தெளிவான பார்வை இப்படைப்பின் தன்மையையும் நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. நகைகள் ஏதும் கழுத்திலோ கைகளிலோ காதிலோ காணப்படவில்லை. அகன்ற கழுத்துப்பகுதி தெரியும் வகையில் அதே வேளை நுணுக்கமாகத் தைக்கப்பட்ட ஒரு பழுப்பு நிற ஆடையுடனும் தலையில் முடியின் மேல் மெலிதான ஒரு துணியை அணிந்திருப்பதையும் காணலாம்.

    பல அரிய கண்டுபிடிப்புகளையும் கலைச் சிற்பங்களையும் ஓவியங்களையும் உலகுக்கு அளித்த மாபெரும் சிற்பி லியோனார்டோ டாவின்சி. இவரைப் பற்றியும் இவரது அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சிந்தனைகளையும் பற்றி யோசிப்பதே எனக்கு பல வேளைகளில் மனத்தை மகிழ்விக்கும் ஒரு விஷயமாக அமைந்து விடும். டாவின்சியின் அறிவியல் கலைப்படைப்புகளைத் தனித்தனியாக எடுத்துப் பார்த்து அவற்றை அவரது பார்வையின் ஊடாக சிந்தனையின் பாதையில் சென்று விவரிக்க வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மனத்தில் இருக்கின்றது. அதனைப் பிரிதொரு முறை நேரமும் வேளையும் கூடி வரும் போது நிச்சயம் செய்ய நினைத்திருக்கின்றேன். இப்போது மோனா லிஸாவை மட்டும் பார்ப்போம்.

    மோனா லிஸாவை யார் கேட்டு, எத்தகைய சூழலில், யாருக்காக டாவின்சி வரைந்தார் என்பது தெளிவாக அறியப்படாத ஒன்று. கிடைக்கின்ற  பழைய வஸாரியின் ஆட்டோ பயோக்ராஃபியிலிருந்து  இந்த  ஓவியத்தை Francesco del Giocondo என்ற வர்த்தகருக்காக அவரது மனைவியின் (Gherardini) உருவப்படத்தை 1502ல் அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் வரவை நினைத்து மகிழவும் புது மனைக்குச் சென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடவும் அவரது வேண்டுதல் படி டாவின்சி வரைந்த ஒரு ஓவியம் என்று தெரிகிறது.  ஜியோர்ஜியோ வஸாரி இந்தச் செய்தியை விவரிக்கும் வகையில் ஒரு பகுதியை தனது சிற்பக் குறிப்பு தொகுப்பு நூலில் பதிகின்றார். வஸாரி, டான் ப்ரவ்னின் புதிய நாவலான இன்பர்ஃனோவில் மிக முக்கிய பாத்திரம் என்பதையும் இவ்வேளையில் நாம் குறிப்பிட வேண்டும். வஸாரி இப்பதிவில் மோனா லிஸா உண்மையில் கெரார்டினியின் உருவம் எனக் குறிப்பிட்டிருந்தாலும் கூட இதுவே  மோனா லிஸா உருவான கதை என முழுதும் நம்பி விடவும் முடியாது என்றே தெரிகிறது.

    மோனா லிஸா எனும் இப்படம் ஒரு சாதாரண ஓவியம் அன்று.  ஐரோப்பாவின் ரெனைஸான்ஸ் சிந்தனை மாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்த பல கலைப்படைப்புக்களில் பிரதான நிலையைப் பெறும் ஒரு ஓவியம் இது. இது மட்டுமன்றி தற்கால சூழலில் ஐரோப்பா மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் பிரபலமடைந்த ஒரு ஓவியம் இது என்பது யாரும் மறுக்கவும் முடியாது.

    மோனா லிஸாவின் படங்களின் பிரதிகளை பலர் உருவாக்கினாலும் டாவின்சி இந்த  ஓவியத்தை வரைந்த வேளையில் அவருக்குப் பின்புறமாக அமர்ந்து டாவின்சியின் மாணவர் ஒருவர் அதே ஓவியத்தை வரைந்தார் என்பதுவும் அவ்வோவியம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தபோது அதனைப் பெற பலர் முயன்றாலும் இறுதியில் அவ்வோவியம் ஸ்பெயின் மட்ரிட்டின் மாபெரும் அருங்காட்சியகமான ப்ராடோவின் விலைமதிக்க முடியாத அரும்பொருட்களின் வரிசையில் இணைந்து கொண்டது என்பதுவும் உண்மை. இந்த ஓவியத்தையும் நான் நேரில் ப்ராடோ அருங்காட்சியகத்திலேயே பார்த்து புகைப்படங்களும் எடுத்துள்ளேன். டாவின்சியின் மோனா லிஸாவின் முகத்தில் தெரியும் சிறு முதிர்ச்சி இல்லாத சற்று இளமை தெரியும் முகச் சாயலோடு இந்த மோனா லிஸாவின் உருவப்படம் இருக்கும்.

    unnamed (1)

    டாவின்சி ஒரு சாதாரண மனிதரோ வெறும் கலைஞரோ அல்ல. புதிய உலகம் படைக்க வந்த சிற்பிகளில் சிறப்பிடம் பெறும் ஒருவர். ஒரு வகையில் டாவின்சி தனது மனத்தின் செய்தியை மறைமுகமாக வெளிப்படுத்த பயன்படுத்திய ஒரு கருவியே  மோனா லிஸா என்பது தற்கால குறியீடு வல்லுனர்கள் (Symbologists)  கூறும் தகவல்.

    உற்று நோக்கும் போது மோனா லிஸாவின் முகத்தில் புருவம் இல்லாமையும், இமைகளில் உரோமம் இல்லாததையும் நாம் காண்போம். வலது கையை இடது கைமேல் வைத்திருக்கும் போதும் வெளியே தெரியும் கர்ப்பமான பெண்ணின் பெரிய வயிற்றுப் பகுதி மேரி மெக்டலின் ஏசு கிறிஸ்து இறந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்தார் என்ற வகையில் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த நிகழும் வாதங்களுக்கும் காரணமாக அமைகின்றது. கத்தோலிக்க கிறிஸ்துவ அடிப்படை நம்பிக்கைகளின் ஆதாரங்களை அசைக்க முயலும் ஒரு மாஸ்டர் பீஸ் மோனா லிஸா என்பது கடந்த சில ஆண்டுகளில் பரவி வரும் ஒரு தகவலாகவும் உள்ளது. இதனைச் சுற்றி அமைந்ததாக வருவதே டான் ப்ரவ்னின் டாவின்சி கோட் நாவலும் அதனை மையமாக வைத்து சோனி ப்ரொடக்‌ஷன்ஸ் எடுத்த அதே தலைப்பிலான திரைப்படமும். இந்த நூல்கள் மட்டுமன்றி குறிப்பிடத்தக்க பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  தொடர்ந்தும் வெளிவருகின்றன. உதாரணமாக, Fear Not, Buried by the Church, The truth and fiction in the DaVinci Code, Gospel Code, the DaVinci Hoax  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

    மோனா லிஸாவின் மந்திரப் புன்னகையின் பின்னணி ரகசியத்தை அறிவது நமக்கு எளிதல்ல. தொடரும் ஆய்வுகளுக்கு மேலும் பல ஆவணங்கள் கிடைத்தால் ஆய்வுலகம் மகிழ்ச்சியடையும்.

    லூவ்ரெ அருங்காட்சியகத்தின் உள்ளே சுவரின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் மோனா லிஸா உருவப்படத்தை நேரில் காணும் அனுபவம் பெற இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள். பல கோணங்களில் இப்பக்கத்தில் மோனா லிசா பற்றிய தகவல்களைப் பெறலாம்.  http://musee.louvre.fr/oal/joconde/indexEN.html

    தொடர்ந்து அடுத்த அறைகளுக்குச் செல்வோம். லூவ்ரே நமக்கு பல அதிசயங்களை வைத்திருக்கின்றது.

    தொடரும்..!

    Share
  • வாழும் தமிழே வாலி! (1)

    தமிழ்த்திரையுலகில் தமிழ் மொழியை தங்க சிம்மாசனத்தில்

    தம் பாடல் வரிகளால்  அமரவைத்த பெருமைக்குரியவர்களில் காவியக்கவிஞர் வாலி அவர்களும் முக்கிய இடம் வகிக்கிறார்.  ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தம் எண்ணங்கள், எழுத்துக்கள் – வண்ணத்தமிழ் உலாவாக மக்கள் மனதில் நடைபெற்றது  என்பதனை..

    காவியக் கவிஞர் வாலியின் புகழ்பாடி

    காவிரிமைந்தன் எழுதும்

    வாழும் தமிழே வாலி!

    தொடர் ஆரம்பம்!!

     

    போற்றுதலுக்குரிய இவர்தம் தமிழ்ப்பணி இவரை அங்குலம் அங்குலமாக உயர்வுபெறச் செய்திருக்கிறது.  மறக்க முடியாத மாணிக்க வரிகளுக்குச் சொந்தக்காரராகத் திகழும் கவிஞர் வாலி அவர்களின் பெயரில்  உள்ள அர்த்த புஷ்பங்கள் ஆச்சர்யம் தரவைக்கின்றன. புராணத்தில் வருகின்ற ‘வாலி’ எனும் பாத்திரப் படைப்பின்படி. எதிரே உள்ள பலசாலியின் பலத்தில் பாதியைப் பெற்றுவிடுவதாக உள்ளது.  அஃது உண்மையோ என்னவோ.. தமிழ்த்திரையுலகில்  தமிழ்மொழிக்கு அணிகலன்கள் பூட்டிய கவிஞர் பெருமக்கள் தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயண கவி, கவிஞர் மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன் முதலான ஜாம்பவான்கள் முன் – அவர்தம் திறமையெல்லாம் கலந்த கலவையாய்.. முத்தமிழில் இவர் இயற்றியுள்ள அரும்பெரும் பாடல்கள் – வார்த்தை வளம், அர்த்தச் செறிவுகள், மொழியின் ஆளுமை, இசையோடு இணைந்த அற்புதங்கள்,உள்ளடக்கம், பொருளடக்கம், மென்மை என எண்ணிலா இன்பங்களை படிக்க.. படிக்க.. ரசிக்க.. ரசிக்க.. கேட்க.. கேட்க.. இன்பம் தருகின்ற கற்பகத்தருவாய் நிலைத்து நிற்கின்றன.

    மேலும், வாலிபம் என்கிற சொல்லிலும் முன்பாதி ‘தான்’ என்பதை முழுக்க முழுக்க உண்மையாக்கிடும் இவர்தம் காதல் பாடல்கள் கனிரசம் சொட்டச் சொட்டத்  ததும்பி வழிவதை எவர் மறுக்க முடியும்?  அருமையான கவிஞர் இவரை தமிழ்த்திரையுலகம் சரியாகக் கண்டெடுத்து, ஆதரித்து, ஊக்குவித்து உயர்வுபெறச் செய்தது தமிழுக்கு கிடைத்த பெருமையென்றே சொல்லலாம்.  இவர்தம் பாட்டுமொழி கலந்த பல்சுவைகலந்த தேவாமிர்தம்! இவரின் தமிழாற்றல் நாடறிந்த ஒன்றுமட்டுமின்றி எந்த ஒரு தமிழனையும் தன் வசமிழுக்கும்! 

    இவரின் பாடல்களில் முகிழ்த்தல் என்பது ஒரு சுகானுபவம்! இவரின் கற்பனைச் சிறகுகள் எட்டியிருக்கும் உயரம் அளவிடற்கரியது!  எளிமையான சொற்களையே கையாண்ட போதும்.. அவை தக்க இடத்தில்.. இடம்பெறுவதால் வலிமை மிக்கவையாய் காட்சி தருகின்றன! காட்சியமைப்பு, கதையோட்டம், பாத்திரப் படைப்பு இவற்றின் தன்மைகளை ஒட்டுமொத்தமாய் வார்த்தைகளில் வடித்துக் காட்டும்போது கவிஞரின் கைவண்ணம் மிளிர்கிறது.  பட்டுத் தெறிக்கும் முத்துச் சரங்களாய்  வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் நம் உள்ளத்திரையிலும் நிழலாடுகின்றது.  இத்தகு கவிஞரை நேரிலே  கண்டு நெஞ்சம் நிறைய உரையாடி மகிழ்ந்திருக்கிறேன் என்பது மட்டிலா ஆனந்தம் கொள்ளச் செய்கிறது!  கட்டுக்கடங்காத காவிரிபோல்  சொற்களின் சுவையூட்டம், பேசுகின்ற போதிலும் வெட்டவெளிச்சமாய் தென்பட்டதை மறக்க முடியுமா?  உள்ளம் திறந்து பேசுகின்ற ஒரு உன்னத மனிதரை எண்ணியெண்ணி நெகிழ்கிறேன்.

    அவரின் கவியாற்றலை, எனது சிறுவயது முதற்கொண்டு பல்வகைகளில் கேட்டுச் சுவைத்த ஒரு ரசிகனாய்.. குறிப்பாக நான் கடவுளாக வணங்கும் என் கண்ணதாசனைக் காணுகின்ற பேற்றினை ஒருமுறைகூடப் பெறவில்லை என்கிற ஆதங்கம் தீர.. அவரோடு நேரில் பலமுறை சந்தித்து உரையாடுகின்ற அதிர்ஷ்டசாலியாய்.. என்ன ஓய்.. என்று ஓங்காரமாய் அழைக்கின்ற பாக்கியம் பெற்றவனாய் – அவர்தம் 108 பாடல்கள் பற்றி  நான் எழுதிய வாழும் தமிழே வாலி என்கிற நூலை அவரிடம் சமர்பித்து கவிஞரின் பரிபூரண ஆசிகளைப் பெற்றதோடு.. கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நீதான் பாலம் என்று அத்திருமகன் மொழிந்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்.

    அதில் ஒரு பங்களிப்பாக.. வாழும் தமிழே வாலி என்கிற இந்தத் தொடர் இன்றுமுதல் தொடங்குகிறது! உங்கள் பார்வைக்காக.. உங்கள் பின்னூட்டங்களுக்காக.. உங்கள் ரசனைக்காக!!

    இஃது திரைப்பாடல்கள் மக்கள் மனதில் எத்தனை தாக்கத்தை தந்திருக்கின்ற என்பதற்கான சாட்சியாகும்.  நன்றிப் பெருக்கோடு இனிமையான அந்த வார்த்தைப் பிரயோகங்களால் கட்டுண்டுபோன இதயங்களின் சார்பாக.. கவிஞர் வாலி அவர்களின் ஆகச்சிறந்த பாடல்களைப் பற்றிய என் கருத்துக்குவியல்களை உங்கள் முன் படைக்கிறேன்.  இதில் உள்ள சிறப்புகள் அனைத்தும் காவியக் கவிஞர் வாலி அவர்களுக்கே காணிக்கையாக்குகின்றேன்!

    காற்று வாங்கப் போனேன்..

    காலங்களை வென்று சில நூறு பாடல்களே சிரஞ்சீவிதம் பெற்றுத் திகழ்கின்றன எனில் அதற்கு காரணம் வார்த்தை வளம், கருத்துச் செறிவு, கற்பைன அழகு, பொருத்தமான இசையமைப்பு, பாடிய குரல் என்று இதற்கான கூட்டணி நம் கண்முன்னே நிழலாடுகிறது.

    பலமுறை கேட்ட பாடலிது என்றாலும்  மறுமுறை கேட்கத்தூண்டினால் அதுவே பிரசித்தி பெற்ற பாடலாகும். இதோ.. அவ்வரிசையில் காவியக் கவிஞர் வாலி அவர்களின் கற்பனை முகிழ்ப்பில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையருவியில் ஏழிசை மன்னர் டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் குரலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் திரையில்  தோன்றிடும் கலங்கரை விளக்கம் பாடலுக்கு இன்னும் சில விளக்கங்கள்.. அல்ல.. சுவையான சம்பவம் ஒன்று!!

    இப்பாடல் இயற்றப்பட்ட நாளில் நடந்த அந்த சுவையான சம்பவம் கவிதைபோலவே இனிமையானது! ரசிக்கத்தக்கது!! சரவணா பிலிம்ஸாரின் தயாரிப்பில் அமரர் கே.சங்கர் இயக்கத்தில் உருவான இப்பாடல் பதிவின்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் கவிஞர் வாலி அவர்களிடம் தான் அணிந்திருந்த விலைமதிப்பான தங்கச் சங்கலியைக் கழற்றி ஆர்மோனியத்தின்மீது வைத்து நான் பாராட்டும் அளவிற்கு ஒரு அருமையான பல்லவியைத் தந்து இந்தச் சங்கலியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றாராம். கவிஞரும் தனது கற்பனா வானத்தில் உலவி..

    காற்றுவாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..

    அதைக் கேட்டுவாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள்?

    என்கிற பல்லவியை எழுதிக்காட்டினாராம்.  மெல்லிசை மன்னர் அப் பல்லவியை மெச்சிப் பாராட்டி.. தனது தங்கச் சங்கலியை எடுத்து வாலி  அவர்களுக்கு வழங்க.. அதை மறுத்த வாலி அவர்கள்.. தான் இதைவிட மதிப்புமிக்க ஒன்றையே  பெற விரும்புவதாக தெரிவித்தாராம்!  திடுக்கிட்ட மெல்லிசை மன்னர் இதைவிடவா என்று திரும்பக் கேட்டார்.  ஆம்.. உங்கள் அன்பும் ஆசியும் என்றென்றும் வேண்டும் என்றார்  வாலி!  கவிஞரின் உள்ளம் கண்டு ஆனந்த லஹரியில் மூழ்கிய எம்.எஸ்.வி. இதயம் நிறைய வாழ்த்தியதோடு.. என்றும்  அவருடன் கைகோர்த்து தமிழ்த்திரைக்கு பல்லாயிரம் பாடல்கள் வழங்கியிருக்கிறார் என்பதே வெற்றிச் சரித்திரம்!

    பாடல் வரிகளில் ஒவ்வொரு சரணத்திலும் உள்ள கோடி சுகம் என்ன என்பதை நான் கொஞ்சம் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்..

    என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை..

    என் பார்வை நீந்துமிடவோ அவள் பருவமென்ற ஓடை..

    நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக் கொண்டு போகும்

    அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்!

    இதுபோல் பாடல் பிறந்த கதைகள் எத்தனையோ இருந்தாலும் செவிக்கு வந்து சேர்ந்தவை சிலதான் எனும்போது இதற்காக ஒருவரை ஒவ்வொரு கவிஞரும் நியமித்திருந்தாலும் நலமாகவே இருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது!!

    http://www.youtube.com/watch?v=8rL9RjU8A6U

    http://www.youtube.com/watch?v=8rL9RjU8A6U

     
    நான் காற்று வாங்கப் போனேன்

    நான் காற்று வாங்கப் போனேன்
    ஒரு கவிதை வாங்கி வந்தேன்
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    நடை பழகும்போது தென்றல்
    விடை சொல்லிக்கொண்டு போகும்
    நடை பழகும்போது தென்றல்
    விடை சொல்லிக்கொண்டு போகும்
    அந்த அழகு ஒன்று போதும்
    நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    நல்ல நிலவு தூங்கும் நேரம்
    அவள் நினைவு தூங்கவில்லை
    நல்ல நிலவு தூங்கும் நேரம்
    அவள் நினைவு தூங்கவில்லை
    கொஞ்சம் விலகி நின்ற போதும்
    என் இதயம் தாங்கவில்லை
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    என் உள்ள என்ற ஊஞ்சல் 
    அவள் உலவுகின்ற மேடை
    என் உள்ள என்ற ஊஞ்சல் 
    அவள் உலவுகின்ற மேடை
    என் பார்வை நீந்தும் இடமோ
    அவள் பருவம் என்ற ஓடை
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    படம்: கலங்கரை விளக்கம்
    பாடியவர்: TM சௌந்தர்ராஜன்

     

    காவிரிமைந்தன்

     
     
     
     
     
    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 21ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    பிறப்பைத் தவிர்த்தையிலை பின்னாகக் கொண்டையிலை
    இறப்பைத் தவிர்த்தையிலை என்னென்று கேட்டைய்லை
    பாசமெரித்தையிலை பரதவிப்பைத் தீர்த்தையிலை
    பூசியநீற்றைப் புனை என்று அளித்தையிலை
    அடிமையென்று சொன்னையிலை அக்குமணி தந்தையிலை
    விடுமுலகம் போக்கி உன்றன் வேடம் அளித்தையிலை
    உன்னிலழைத்தையிலை ஒன்றாகிக் கொண்டையிலை
    நின்னடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை
    ஓங்குபரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான்
    ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை
    நாமந்தரித்தையிலை நானொழிய நின்றையிலை
    சேவவருளி எனைச் சிந்தித்தழைத்தையிலை
    முத்தி அளித்தையிலை மோனங் கொடுத்தையிலை
    சித்தி அளித்தையிலை சீராட்டிக் கொண்டையிலை
    தவிர்ப்பைத் தவிர்த்தையிலை தானாக்கிக் கொண்டையிலை
    அவிப்பரிய தீயாய் என் ஆசை தவிர்த்தையிலை
    நின்ற நிலையில் நிறுத்தி எனைவைத்தையிலை
    துன்றும் கரணமொடு தொக்கழியப் பார்த்தையிலை
    கட்ட உலகக் காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை
    நிட்டையிலே நில்லென்று நீ நிறுத்திக் கொண்டையிலை. 1.

    கன்னிவன நாதனே கன்னிவன நாதனே, மீண்டும் மீண்டும் பிறப்பதைத் தவிர்த்தாயில்லை, பிறந்தபின் தடுத்து ஆட்கொண்டாயில்லை, இறப்பையும் தடுத்ததில்லை, ஏன், எதற்கு என்று எனை எதுவும் வினவவும் இல்லை. உறவையும் பாசத்தையும் நீக்கியபாடில்லை, பரிதவித்து ஏங்குவதையும் தீர்க்கவில்லை, நெற்றியில் இடும் திருநீற்றையும் அணியும்படி எனக்குத் தரவில்லை. நான் உனது அடிமை என்பதை ஏற்று அறிவித்தாயில்லை, அணிந்துகொள்ள ருத்திராக்ஷ மாலையும் தரவில்லை, சாச்வதமில்லாத இந்த உலகத்தை மாயம் என்பதை உணர்வித்து உன் காட்சியைக் கொடுத்தாயில்லை. உன்னிடம் என்னை அழைத்துக் கொள்ளவில்லை, உன்னோடு என்னையும் ஒன்றாக்கிக் கொண்டாயில்லை. கூடிநிற்கும் உன் அடியார் கூட்டத்தில் என்னையும் சேர்த்தாயில்லை. உன்னையே கதியென்று ஏற்றுக் கொண்ட அடியார் கூட்டத்தில் இவனும் ஒருவன் என்று என்னை அறிமுகம் செய்தாயில்லை. என்னை அடியவன் எனப் பெயர் சொல்லி அழைக்கவில்லை, ஆணவ மலத்தை அழித்தாயில்லை, உனது திருவருட் கருணையில் பிணைத்தாயில்லை. முக்தி தந்தாயில்லை, மோன நிலையை அளித்தாயில்லை, அட்டமா சித்திகளை அருளிச் செய்தாயில்லை. பரிதவிப்பை நீங்க்கினாய் இல்லை, என்னைச் சிவமாய்க் கொண்டாயில்லை. யோகத்தில் நிலைத்திட செய்தாயில்லை. யோகம் செய்யும் சாதனமான தீய அகக் கரணாதிகளை அடக்கினாயில்லை. சிரமம் தரும் உலக வாழ்விலிருந்து நீங்கி நிற்கும் மார்க்கத்தை அருளினாயில்லை, நிஷ்டையில் நிலைத்திரு என உபதேசம் செய்யவும் இல்லை.

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    கடைக்கண் அருள்தாடா கன்னிவனநாதா
    கெடுக்கும் மலமொறுக்கிக் கிட்டிவரப் பாரேடா
    காதல் தணியேனோ கண்டு மகிழேனோ
    சாதல் தவிரேனோ சங்கடந்தான் தீரேனோ
    உன்னைத் துதியேனோ ஊர்நாடி வாரேனோ
    பொன்னடியைப் பாரேனோ பூரித்து நில்லேனோ
    ஓங்காரப் பொற்சிலம்பின் உல்லாசம் பாரேனோ
    பாங்கான தண்டை பலபணியும் பாரேனோ
    வீரகண்டாமணியின் வெற்றிதனைப் பாரேனோ
    சூரர் கண்டு போற்றும் அந்தச் சுந்தரத்தைப் பாரேனோ
    இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ
    விடையில் எழுந்தருளும் வெற்றிதனைப் பாரேனோ
    ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ
    மானைப் பிடித்தேந்து மலர்க்கரத்தைப் பாரேனோ
    மாண்டார் தலைப்பூண்ட மார்பழகைப் பாரேனோ
    ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ
    கண்டங்கறுத்து நின்ற காரணத்தைப் பாரேனோ
    தொண்டர் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ
    அருள் பழுத்த மாமதியாம் அனனத்தைப் பாரேனோ
    திருநயனக் கடைஒளிரும் செழுங் கொழுமைப் பாரேனோ
    செங்குமிழின் துண்டம் வளர் சிங்காரம் பாரேனோ
    அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ
    முல்லை நிலவெறிக்கு மூரல் ஒளி பாரேனோ
    அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ
    மகரங்கிட்னதொளிரும் வண்மைதனைப் பாரேனோ
    சிகரமுடியழகும் செஞ்சடையும் பாரேனோ
    கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ
    பொங்கரவைத் தான் சடையில் பூண்டவிதம் பாரேனோ
    சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ
    எருக்கறுகு ஊமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ
    கொக்கிறகு சூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ
    அக்கினியை ஏந்திநின்ற ஆந்தம் பாரேனோ
    தூக்கிய காலும் துடியிடையும் பாரேனோ
    தாக்கு முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ
    வீசுகரமும் விகசிதமும் பாரேனோ
    ஆசையளிக்கும் அபயகரம் பாரேனோ
    அரிபிரமர் போற்ற அமரர் சயசய எனப்
    பெரியம்மை பாகம் வளர்பேரழகைப் பாரேனோ
    சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ
    சந்திரசேகரன் ஆய்ந்த் தயவுசெய்தல் பாரேனோ.

    மதுரைக்கரசே, கன்னிவனநாதா கடம்பவன ஈசா! கடைக்கண் பார்த்து கருணை புரிவாய், ஆணவ மலம் என் மனத்தை ஆட்டிப் படைக்காமல் அதை வீழ்த்தி என்னிடம் நெருங்கி வரப் பார்ப்பாயே! நின் அருட்பார்வையொன்றை என்னை வீழ்ச்சியிலினின்றும் தடுத்து நிறுத்தும். உன் அருட்பார்வை கிடைக்கப் பெற்றால் உலகத்துப் பற்றை ஒழிப்பேன்; உந்தன் மலர்த்திருப்பதம் கண்டு தரிசிப்பேன், மரணத்தை வெல்வேன், சங்கடங்கள் தீர்வேன். உன் அருள் கிட்டிவிட்டால் உன்னை எப்போதும் துதிப்பேன், நீ கோயில்கொண்ட தலங்கள் தோறும் சென்று தரிசித்து மகிழ்வேன், நினது திருமலரடிகளைத் தொழுது பூரித்து நிற்பேன். பிரணவத்தின் தோற்றமாய் அமைந்துள்ள நின்றன் சிலம்பின் அழகைக் கண்டு களிப்பேன், காலின் அசைவில் ஓசையெழுப்பும் நினது தண்டையொலியை பரிவோடு பார்ப்பேன். நடனமாடும் நின் திருப்பாதத்தில் அணிந்த வீரகண்டாமணியின் வெற்றிகளைக் காண்பேன், சூராதி சூரர்கள் உன் புகழை வாயாரப் பேசுவதைக் கேட்டு மகிழ்வேன். அரையில் அணிந்த புலித்தோலின் அழகைக் கண்டு களிப்பேன், ரிஷப வாகனம் ஏறி காட்சி தரும் இன்பத்தை நுகர்வேன். தாருகவனத்தில் மோதிய யானையைக் கொன்று மேலே போர்த்திய காட்சியக் கண்டு களிப்பேன், மானைப் பிடித்து கையில் வைத்த நின் தாமரைக் கரங்களைக் கண்டு மகிழ்வேன். கல்பகோடி ஆண்டுகள் வாழ்ந்த பிரம்மாக்களின் சிரங்களை மாலையாய் அணித்த அழகைக் காண்பேன், என்னுடைய இறைவன் இவன் என்று மகிழ்ந்து திரிவேன். நினது பொன்னிறத்து கண்டம் கருமை நிறம் ஆனதன் காரணத்தை அறிந்து கொள்வேன், மெய்யன்பர்களோடு உவந்து நிற்கும் காட்சியைக் காண்பேன். கனிவு ததும்பும் நின் நிலவொத்த முகத்தைக் காண்பேன், கடைவிழியின் அழகை மனம் களித்துப் பார்ப்பேன். சிவந்த குமிழ மலரையொத்த உன் நாசியழகைக் கண்டு மகிழ்வேன், கொவ்வைக் கனியினும் சிவந்த உன் உதட்டழகைப் பார்த்து மகிழ்வேன். முல்லை மலரைப் போன்ற உன் பல்வரிசை அழகைக் கண்டு மகிழ்வேன், கரிய நெற்றிப் புருவ அழகைக் கண்டு மகிழ்வேன். மகர குண்டலம் அணிந்த நின் காதின் அழகைக் காண்பேன், திருமுடியில் துலங்கும் சிவந்த சடையழகைக் காண்பேன். கங்கையும் நிலவையும் அணிந்த நின் தலைமுடியை எண்ணி மகிழ்வேன், சீறும் பாம்பை முடியில் அணிந்த அழகைக் காண்பேன். சரக்கொன்றை மலரணிந்த நின் கற்றைச் சடையழகைக் காண்பேன், எருக்கு, அறுகு, ஊமத்தை மலர்களை அணிந்த நின் அழகைப் பார்ப்பேன். கொக்கின் இறகைச் சூடிய அழகைக் காண்பேன், இடக்கரத்தில் அனலை ஏந்திய உன் அழகினை நன்கு பார்ப்பேன். நடனமாட தூக்கிய அந்த குஞ்சித பாதத்தின் அழகைக் கண்டு மகிழ்வேன், எதிர்த்து வந்த தீமைகளின் ஒருமுகப்பட்ட முயலகனை வலக்காலின் கீழிட்டு ஆடுகின்ற அழகைக் காண்பேன். ஆடலின் போது வீசுகின்ற கரத்தினையும், நேரே வந்து தோன்றும் அழகினையும் கண்டு களிப்பேன். ஆசிவழங்கும் வலக் கரத்தை வணங்கி மகிழ்வேன். பெருமாளும், பிரம்மனும் துதி செய்ய, தேவாதி தேவரெல்லாம் ஜெய ஜெய என்று கோஷமிட, உமையினை இடப்பக்கம் கொண்டு நீ நிற்கும் அழகைக் கண்டு களிப்பேன். நெற்றியில் பூசிய திருநீற்றின் அழகைப் பார்ப்பேன். சந்திரசேகரனாய் தோன்றி ஆருயிர்க்கெல்லாம் அருள்புரியும் காட்சியைக் கண்டு களிப்பேன்.

    (அடுத்தது “இந்தப் பாடலின் நிறைவுப் பகுதி”)

    Share
  • மல்லாரி!…

    விசாலம்

     

    கலி யுகத்தில் மிகவும் எளிதாக உள்ளொளியை அதாவது நமக்குள்ளே இருக்கும் கடவுளை உணர வைக்கும் சக்தி இசைக்கு இருக்கிறது. கோடிக்கோடியாக ஜபம் செய்யவேண்டியதில்லை. பல ஆயிரங்கள் சிலவு செய்து ஹோமம் வளர்த்து பூஜை செய்தால் எத்தனைப்பலன்கள் கிடைக்குமோ அவை நெஞ்சுருகி பாடி அந்த இறைவனுக்கே எல்லாம் சமர்ப்பித்தால் கிடைத்துவிடும் .தவிர இறைவனது தரிசனமும் கிடைத்து அவர் அருளுக்கும் பாத்திரமாகி விடுவீர்கள் இசையில் மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாகராஜர் . ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதர், ,திரு சியாமா சாஸ்திரி மூவருமே தங்கள் இசையினாலேயே தங்கள் இஷ்ட தெய்வங்களைத்தரிசித்தனர், இறைவனுக்கு அருளும் அறுபத்தினாலு உபசாரங்களில் இசையும் ஒன்று .இதனால் தான் இன்றும் கோயில் மண்டபங்களில் இசையும், நாட்டியமும் நடைப்பெறுகிறது.இறைவன்,இறைவிக்கென்று இது நடக்கும் போது டிக்கட் ஒன்றும் வைப்பதில்லை, எல்லோரும் போய் ஆனந்தம் பெறலாம் ஆகம சாஸ்திரத்தில் கோயிலில் இன்ன ராகம் இந்தந்த வேளையில் பாட வேண்டும் என்றும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது .கோயில் பிரகாரம் மிகப்பெரிதாக அமைந்துவிடுவதால் அங்கு வாய்ப்பாட்டைவிட நாதசுரம் தான் சோபிக்கும் .நாதசுரத்தின் ஒலி வெகு தூரம் போய் ரீங்காரம் செய்யும் தன்மை கொண்டிருப்பதால், கோயில்களில் நாதசுரத்தையே அதிகமாக நாம் பார்க்கிறோம் .அதற்கேத்தாற்போல் தவிலும் சத்தமும் அதற்கேத்த ஜோடிதான் கோயில்களில் காலை ஐந்திலிருந்து ஆறு வரை நாதசுரவித்துவான் பூபாள ராகம் .மலயமாருதம் அல்லது பௌளி ராகம் வாசிப்பார்கள்.

    இந்த ராகங்களில் சுத்த ரிஷபம், சுத்த தைவதம் இருப்பதால் மனதைக்கொள்ளைக்கொண்டுச்செல்லும் பாவம் இவைகளில் இருக்கும் .சுவாமி துயில் நீங்கி கண்விழிக்கும்போது “திருப்பள்ளி எழுச்சி” பாடும் வழக்கம் உண்டு .அவை அநேகமாக பூபாளத்தில் இருக்கும் காலை எட்டு மணியிலிருந்து ராகங்கள் தன்யாசி , சாவேரி .,அசாவேரி. வாசிக்கும் வழக்கம் இருக்கிறது .பத்து மணி சுமாருக்கு ராகங்கள் சுருட்டி. அல்லது மணிரங்கு ரொம்ப வியாபகமாக வெளிவரும். ஒவ்வொரு புகழப்பெற்ற ஸ்தலங்களிலும், கோயில்களிலும் நான் போகும் போது இவைகளை கவனிப்பேன் 12 மணிக்கு கோயில் மூடிவிடும். பின் மாலை ஐந்து மணிக்கு நாதசுர வித்துவான் காம்போஜியும். சங்கராபரணமும் பிச்சுதறுவார்கள். இரவு சயனாசனத்தின் போது ராகம் நிலாம்பரியோ அல்லது ஆனந்தபைரவியோ நம்மை மறக்கச்செய்யும் ,நம் முன்னோர்கள் காலையிலிருந்து இந்த ராகங்களைக்கேட்டு மணி சுமார் எவ்வளவு இருக்கும் என தீர்மானிப்பார்கள் என்று என் தந்தை என்னிடம் கூறியிருக்கிறார்.

    ஒவ்வொரு நாளும் ஒரு ராகம் கண்டிப்பாக மாறாமல் வந்து விடும். அதுதான் கம்பீர நாட்டை இந்த ராகத்தில் வாசிக்கும் தனிப்பட்ட நடை தான் “மல்லாரி ” மல்லாரி பலவிதமாக வரும் அவை தீர்த்தமல்லாரி, தளிகை மல்லாரி, கும்பமல்லாரி, புறப்பாடு மல்லாரி,தேர் மல்லாரி இவைகளின் பெயர்களிலிருந்தே இவைகள் எப்போது வாசிக்கபடும் என்று யோசிக்க முடிகிறது.

    இறைவன் அல்லது இறைவிக்கு அபிஷேகம் செய்ய குடத்துடன் ஒரு நதியோ அல்லது குளத்திற்கோ சென்று நீர் எடுத்து வருவார்கள் .அப்போது வாசிப்பது தீர்த்த மல்லாரி.

    சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் போது வாசிப்பது தளிகை மல்லாரி .சுவாமியை வரவேற்க பூர்ணகும்பத்துடன் வேதங்கள் ஓதி எதிர்க்கொண்டு அழைப்பார்கள் அந்த நேரம் வாசிப்பது கும்ப மல்லாரி. சுவாமி வீதி ஊர்வலம் வர கோயிலை விட்டுக்கிளம்புவார் அப்போது வாசிக்கும் மல்லாரி பறப்பாடு மல்லாரி.

    பிரம்மோத்ஸவ நாட்களில் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் விதவிதமான அலங்காரங்களுடன். விதவிதமான வாகனங்களில் வீதி வலம் வருவார் இறைவன் தேர் மிக பெரிதாக இருக்கும் ஆதலால் அது கோயில் வெளியிலே தான் நின்றுகொண்டிருக்கும், இறைவன், இறைவி தனக்கென்று அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்தபடி வெளிவந்து பின் அந்தத்தேரில் அமர்த்தப்படுவார்கள்.ஆஹா அப்போது கேட்கவேண்டுமே அந்த மல்லாரியை. முதல் காலத்தில் மெள்ள ஆரம்பித்து பின் மூன்று காலங்களிலும் ஜமாய்த்துவிடுவார்கள் நாதசுர வித்துவான்கள். மல்லாரி அதிகமாக துருவதாளம், திருபுடை தாளம் மட்யதாளமாக இருக்கும் .இதில் மூன்று காலங்கள் வாசித்து பின் திஸ்ர நடைக்கும் கொண்டுவருவார்கள்.ஆஹா அப்படியே குதிரை “டக் டக்கென்று ‘போவது போல் இருக்கும் .மல்லாரி எப்போதுமே வாத்தியங்களுக்குத்தான் எடுபடும் இந்த மல்லாரியில் பாட்டு அதிகமாக கிடையாது .ஒரே ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன், சரியாக ஞாபகமில்லை

    “ஆயாத்தி ராஜகோபாலா
    அகிலலோக பரிபாலா
    ராஜ ராஜாத்தி ராஜ வ்ரஜ ராஜ மது வ்ருஷ்ணி போஜ சூர குலராஜா
    ஸார ஸாயத விலோசனா பவபய நிரோத விலோசனா மந்த ஹாஸ {ஆயாதி}

    இது ஊத்துக்காடு இயற்றியது போல் தோன்றுகிறது.

    இந்த தேர் புறப்பாடும் மல்லாரி ராகமும் நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி அம்மன் கோயிலிலும், மன்னார்குடி ராஜகோபால சன்னதியிலும் நாதசுர சக்கரவர்த்தி திரு டி ஆர் ராஜரத்தினம் இரவு 11 வரை வாசித்ததை என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை என் காதிலிலேயே ஒலிக்கிறது

    Share
  • ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்

    GOCE Records Gravity

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    [ Earth’s Gravity Scars, made by Japan Earthquake in 2011 ]

     

    http://spaceinvideos.esa.int/Videos/2013/03/Earthquake_sensed_by_GOCE

    http://spaceinvideos.esa.int/Videos/2013/03/Earthquake_felt_in_Space

    http://spaceinvideos.esa.int/Videos/2004/07/GOCE

    http://spaceinvideos.esa.int/Videos/2011/03/GOCE_Geoid

    http://spaceinvideos.esa.int/Videos/2013/10/Goce_completes_his_mission

    http://spaceinvideos.esa.int/Videos/2013/10/Atmospheric_density_and_winds_from_GOCE

    http://spaceinvideos.esa.int/Videos/2013/10/GOCE_data_on_density_and_wind_compared_to_model

     

    குட்டை உயரத்தில் புவிசுற்றி வரும்
    வட்டப் பாதையில் ஈசாவின்
    கோசி விண்ணுளவி !
    துல்லியமாய்க் கணித்துப்
    புவியீர்ப்பு மாறுதல் களை எல்லாம்
    நவீன முறையில்
    படங்கள் மூலம் பதிவு செய்யும் !
    கடலின் நீரோட்டச் சுழற்சி
    கண்காணிக்கும் !
    பூமியின் மேடு பள்ளத்தைச்
    சேமிக்கும் தொடர்ந்து !
    இமயத்தின் உயரத்தை அளக்கும் !
    அரிசோனாவில்
    அதிசயக் ‘கானியன்’ மேடு பள்ளம்
    பதிவு செய்யும் !
    எரிமலைக் குழம்பின் போக்கு
    நிலநடுக்கத் தாக்கின்,
    புவியீர்ப்பு வடுக்களைப் பதியும்  !
    ஆர்டிக் பனிப் பாறைத்
    துண்டாவதும்
    அண்டார்க்டிக் பனிக் குன்று
    விண்டு போவதும்
    கண்டு பிடிக்கும் !
    பூரணப் புவியீர்ப்பு வரை படத்தைச்
    சீராகப் பதிந்து வருவது
    கோசி ஈர்ப்புளவி !

    ++++++++++++++

    ESA GOCE Gravity Mapper

    பூகம்ப நில அதிர்ச்சிகள் புவியீர்ப்பில் வடுக்களை உண்டாக்கும்.

    2013 டிசம்பர் 3 ஆம் தேதி தகவல்படி ஈசாவின் துணைக்கோள் “கோசி” [GOCE- Gravity Ocean Circulation Explorer] ஜப்பானில் 2011 மார்ச் 11 இல் நேர்ந்த 9.0 ரிக்டர் அளவிப் பூகம்பம் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகளை [Gravity Scars] தெளிவாய்ப் பதிவு செய்துள்ளது.   அது அனுப்பிய புதுத் தகவல் நாசா புவித்தள உளவி கோசியின் மகத்துவப் பணியை எதிர்பாராத விதமாக விரித்துள்ளது.  அத்துடன் கோசி துணைக்கோள் புவியீர்ப்பு வேறுபாடு வரைப் படத்தை வெகு நுணுக்கமாகவும் பதிவு செய்துள்ளது.   பூமியில் ஏற்படும் பெரிய பூகம்பங்கள் புவித்தள அடித்தட்டு [Tectonic Plates] அமைப்புகளைத் தாறுமாறாக மாற்றுவ தோடு, அப்பகுதியின் ஈர்ப்பியல் அளவையும் ஓரளவு பாதிக்கிறது.

    Gravity affeted by 2011 earthquake

    புவித்தள ஈர்ப்பு சக்தி பூமி எங்கும் ஒரே அளவில் இல்லாமல், இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது.   அந்த புவித்தள ஈர்ப்பு வேறுபாட்டையும், உண்டாகும் மாறுபாட்டையும் துல்லியமாகத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது நாசாவின் கோசி துணைக்கோள்.   புவித்தள ஈர்ப்பு வேறுபாட்டுக்குப் பல காரணங்கள் உள்ளன.   முதல் காரணம் உட்தளப் பூமியில் உள்ள கற்பாறைகள், கடல்நீர் ஆழம், அடித்தட்டு [Tectonic Plates] அடுக்கு அமைப்புகள் ஓவ்வோர் இடத்திலும் மாறுபடுகின்றன.  பூகம்பத்தின் போது பல்லாயிரம் கி.மீ. அடியில் உள்ள அடித்தட்டுகள் நகர்ச்சி அடைவதால்  புவிப்பளு அப்பகுதியில் மாறி, ஈர்ப்பு சக்தி பாதிக்கப் படுகிறது.   2011 இல் நேர்ந்த ஜப்பான் 9.0 ரிக்டர் அளவிப் பூகம்பத்தில் கடலுக்கு அடியில் நில நடுக்கம் ஏற்பட்டு, சுனாமி அலைகள் பொங்கி எழுந்து, 20,000 பேர்கள் உயிரிழந்தார்.   அப்போது கடல் அடித்தட்டு  அடுக்கு நிலமும், மேற்தட்டு நீரும் தடம் புரண்டு, புவியீர்ப்பு சக்தி அளவு பாதிப்பாகித் தழும்புகள் படிந்தன.

    கோசி துணைக்கோள் மூலம் கடலில் நேரும் நீர்ச்சுற்றுகளைக் கண்காணித்து எப்படி வெப்பம் கடத்தப் படுகிறது என்றும், நீர் மட்ட உயர்வு, தாழ்வுகளைத் தொடர்ந்து நோக்கவும் முடிகிறது.   தற்போது நில நடுக்கங்கள் உண்டாக்கும் புவியீர்ப்பு மாறுதல் வடுக்களைப் படம் வரையப் பூகம்ப ஓசை அலைகளைத்  துணைக்கோள் கோசி பதிந்து வருகிறது.   பூகம்பம் உட்தளப் பூமியில் நில நடுக்க அலைகளை [Seismic Waves] உண்டாக்குவதுடன், மேற்புறத்திலும் பரவி முரசம் போல் அதிர்கிறது.   அதனால் பூமியின் சூழ்மண்டலத்திலும் ஒலி அலைகள் எழுகின்றன.  அந்த ஒலி அலைகள் பூமிக்கு மேல் சில செ.மீ. முதல்  200-300 கி.மீ. [100 – 200 மைல்]  வரைப் பயணம் செய்கின்றன.   தணிவு அதிர்வு ஒலி அலைகள் [Low Frequency Infrasound Waves]  மட்டுமே இவ்வித உயரங்களுக்கு ஏற முடியும்.   இந்த தணிவு அலைகளே சூழ் மண்டல வாயுவில் செங்குத்து நகர்ச்சிகளை [Vertical Movements] நீட்டியோ, குறுக்கியோ  உண்டாக்கிக் காற்றுத் துகள்களை விரைவாக்கியோ, மெதுவாக்கியோ [Accelerate or Decelerate]  தள்ளுகின்றன.  அவையே ஈர்ப்பு சக்தி குறைவு, மிகைவுக் கறைகளை [Gravity Scars] ஆராய எடுத்தாளப் படுகின்றன.

    “இமய மலைப் பகுதிகள், மைய ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் ஆன்டிஸ் மலைத் தொடர், அண்டார்க்டிகா போன்ற இடங்களில் தோன்றும் புதிய வடிவ மாறுதல்களைக் கோசி விண்ணுளவி பதிவு செய்யும்.  இந்த இடங்கள் அடிக்கடி நெருங்கப் படாதவை..  அண்டார்க்டிகா பனித்தள ஈர்ப்பின் உயர் அதிர்வு தள மாறுபாடுகளை விமான மூலம் ஆய்வு செய்ய ஆங்கே விமானத் தளங்கள் இல்லை.”

    டாக்டர் ருனே ஃபிளோபர்கேகன், ஈசா கோசித் திட்ட மேலாளர்

    “புவிப் பூரணம் (Geoid) என்பது பூமி பூராவும் நோக்கும் ஒரு சமநிலைக் கட்டமைப்புக் கணிப்பு முறை.  அதன்படி பூகோளத்தின் மேல் ஏதேனும் இரண்டு புள்ளிகளை எடுத்துக் கொண்டு எது உயரத்தில் உள்ளது, எது தணிவாக உள்ளது என்று தீர்மானிக்க முடியும்.”

    பேராசிரியர் ரெய்னர் ரும்மல் (Reiner Rummel Chairman, GOCE Scientific Consortium & Munich University Researcher)


    “ஈர்ப்பியலைப் பற்றிய நமது தற்போதைய அறிவு முழுமை பெறாதது.  நாம் அனுதினமும் உணர்ந்து அனுபவித்து வருவது ஈர்ப்பியல் சக்தி !  நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்த சக்தி.  ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது.  அது மெய்யான கருத்தில்லை.  நாம் வட துருவத்துக்குச் சென்றால் நமது எடை பூமத்திய ரேகை அரங்கில் காணும் நமது எடையை விட மிகையாக இருக்கும்.”

    டானிலோ மூஸி (Danilo Muzi GOCE Program Manager) (Mar 16, 2009)

    “2002 இல் சூழ்வெளித் துணைக்கோள் (EnviSat Satellite) ஏவியதற்குப் பிறகு ஈசாவின் கோசி விஞ்ஞானத் துணைக்கோள் தான் (ESA’s GOCE) முதன்முதலில் பூகோளத்தை நுட்பமாய் நோக்க அர்ப்பணிக்கப் பட்டது !  வடிவளவு மாற்றப்பட்டது.  ஆனால் அதன் திட்டக் குறிப்பணிகள் மாறவில்லை.  உன்னத பொறியியல் நுட்பத்தைப் பயன்படுத்தி ஐரோப்பிய மற்றும் உலகச் சமூகங்கள் பலனடைய உயர்ந்த விஞ்ஞானத்தை படைக்க முற்படுகிறோம்.”

    ஜான் ஜேக்ஸ் டோர்டைன் (Jean-Jacques Dordain, ESA Director General) (March 17, 2009)


    இதுவரைக் காணாத பூமியின் அற்புத ஈர்ப்பு விசை அமைப்பு

    2009 மார்ச் 17 இல் ஈசா ஏவிய “கோசி விண்ணுளவி” புவியீர்ப்பின் புதிய வண்ணப் படத்தை வரைப்படமாய்ப் (Gravity Mapping GOCE Space Probe) பதிவு செய்து இரு மாதங்களுக்கு ஒருமுறை பூமிக்கு அனுப்பி வருகிறது.  பூமியின் தள மட்டத்தை உளவிப் புவியில் எங்கே மேடு பள்ளங்கள் உள்ளன வென்று தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.  அந்த முறைப்பாடு “புவிப் பூரணம்” (Geoid) என்று அழைக்கப் படுகிறது.  அவ்விதத் துல்லிய அளவில் உளவும் உன்னதக் கருவி ஈசாவின் கோசி என்னும் துணைக் கோளில் அமைக்கப் பட்டு உள்ளது.  கோசி விண்ணுளவி பூமியைத் தணிவாக (250 கி.மீ.) (90 மைல்) உயரத்தில் சுற்றி வருகிறது.  அதைச் செம்மையான பாதையில் சுற்றக் கட்டுப்பாடு செய்யும் ஸெனான் அயான் எஞ்சின் (Plasma Pulse Rocket) எரிசக்தி வாயு தீரும்வரை (2014 ஆண்டு வரை) பயணம் செய்து கொண்டிருக்கும்.  கோசி சேமித்து அனுப்பும் தகவல் விஞ்ஞானிகளுக்குப் பல்வேறு பூதளவியல் துறைகளில் பயன் அளிக்கும்.  முதலாவது மிக்க பயன் பெறுபவர் குறிப்பாகப் பருவக் காலநிலை ஆராய்ச்சிகளில் (Climatologists) பணி செய்து வருபவர்.  பேரளவில் சூழ்ந்துள்ள கடல் வெள்ளத்தின் நீரோட்டம் எவ்விதம் உலகத்தில் அங்குமிங்கும் வெப்பத்தை நகர்த்திச் செல்கிறது என்பதை அறிய உதவி செய்கிறது.  முக்கியமாக நார்வேயில் நடக்கும் ‘புவி நோக்குப் பேச்சவையில்’ (Earth Observation Symposium) கோசி விண்ணுளவியின் புதுத் தகவல் ஆராயப்படும்.

    Fig 3 Details of GOCE

    இந்தப் பத்தாண்டு (2010) முடிவுக்குள் ஐரோப்பா 8 பில்லியன் ஈரோ நிதிச் செலவில் (10 பில்லியன் டாலர்) இன்னும் 20 புவியியல் குறித் திட்டங்களை (20 Missions) நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஈசா ஏவிய கோசி விண்ணுளவி பூமியைக் கீழ் மட்ட உயரத்தில் (250 கி.மீ) துருவத்துக்கு துருவமாகச் சுற்றி வருகிறது.  கோசி தன்னோடு இணைந்துள்ள “சரிவு மானியில்” (Gradiometer) பிளாட்டினத்தால் செய்யப் பட்ட மூன்று இரட்டைக் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  அவை பூமியின் “ஈர்ப்பு விரைவாக்கத்தை” (Acceleration due to Gravity) (1 part in Trillion) துல்லிமத்தில் அளக்கும்.  புவியின் ஈர்ப்பு விரைவாக்கம் (Acceleration due to Gravity) பொதுவாக நிலையானது (9.8 meter/sec. squire) என்று அனுமானிக் கிறோம்.  உண்மையில் அது பூமியில் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.  பூமத்திய ரேகை பகுதியில் ஈர்ப்பு விரைவாக்கம் : (9.78 meter/sec. squire) மிகக் குறைவு.  துருவப் பகுதியில் ஈர்ப்பு விரைவாக்கம் : (9.83 meter/sec. squire) மிக உச்சம்.  மலைப் பகுதிகள் துருத்திக் கொண்டிருக்கின்றன. கடல் குழிகள் நீர் நிரம்பி திணிவு நிலை மாறியுள்ளன.  புவியின் மையப் புள்ளி நகர்வதால் மேடு பள்ளங்களாலும், கடல்நீர் ஏற்ற இறக்கத்தாலும், நீரோட்டத்தாலும் ஈர்ப்பு விரைவாக்கம் மாறுதல் அடைகிறது !

    Fig 2 Dynamic Earth Explorer


    கோசி விண்ணுளவி எவ்விதம் ஈர்ப்பு விரைவாக்கம் உளவுகிறது ?

    “புவிப் பூரணம் (Geoid) என்பது பூமி பூராவும் நோக்கும் ஒரு சமநிலைக் கட்டமைப்புக் கணிப்பு முறை.  அதன்படி பூகோளத்தின் மேல் ஏதேனும் இரண்டு புள்ளிகளை எடுத்துக் கொண்டு எது உயரத்தில் உள்ளது, எது தணிவாக உள்ளது என்று தீர்மானிக்க முடியும்.” என்று ஆராய்ச்சியாளர் ரெய்னர் ரும்மல் (Reiner Rummel Chairman, GOCE Scientific Consortium & Munich University Researcher) கூறுகிறார்.  அதாவது ஒரு தாளில் வரைபடம் தள மட்டமாகக் (Horizontal) கருதப்பட்டால் புவியீர்ப்பு இழுக்கும் திசை மட்டத் தாளுக்குச் செங்குத்தாகும் (Perpendicular).  இந்தக் கற்பனைத் தளத்தில் ஓர் உருண்டைப் பந்தை வைத்தால் தளம் சாய்வாகத் தெரிந்தாலும் (புவியின் மையம் ஈர்ப்பதால்) பந்து உருண்டு செல்லாது.  கோசி அனுப்பிய வரைப் படத்தில் வெவ்வேறு வண்ணத்தில் தெரியும் இந்தச் சரிவுகளைக் காணலாம்.  அந்தச் சரிவுகள் பூமியின் தள மட்டம் பொதுவாக நீள்வட்டக் கோளத்திலிருந்து (Ellipsoid) எவ்விதம் விரிவடையும் என்பதைக் காட்டும்.  வட அட்லாண்டிக் பகுதியில் ஐஸ்லாந்தைச் சுற்றிலும் தள மட்டம் நீள்வட்டக் கோளத்திலிருந்து 80 மீடர் (270 அடி) உயரத்தில் பீடம் போல் உயர்ந்துள்ளது.  இந்தியக் கடல் தள மட்டத்துக்குத் 100 மீடர் (330 அடி) அது தணிவாக உள்ளது.

    புவியீர்ப்பின் வெவ்வேறு விளைவுகளை வரைப்படம் பதியும் கோசி

    1.  பூமியானது சிறிதளவு மட்டமான நீட்சிக் கோள வடிவமாகக் (Slightly Flattened Ellipsoidal Shape) கோசி பதிவு செய்துள்ளது.

    2.  பூமியின் மீது இழுக்கப்படும் ஈர்ப்பு விசையில் ஏற்படும் மிகச் சிறிய மாறுதலையும் உளவுகிறது (1 in 10 Trillion Accuracy) கோசி.

    3.  கோசி அனுப்பிய தகவல் கணிப்புகள் (GOCE Data) முழுமையான “புவிப் பூரண” (Geoid) நிலையை அமைக்க உதவும்.

    4.  கோளங்கள் சரிவில் உருளாத சமநிலை ஈர்ப்பு விசை இருப்பிடங்களை (Gravity of Equal Potential) உளவுதல்.

    5.  நீரோட்டமும், புயலடிப்பும் இல்லாத சமநிலைக் கடலின் வடிவத்தைப் பதிவு செய்வது.

    6.  கடல் தள மட்டத்தையும் புவிப் பூரணக் கணிப்புகளையும் ஒப்பிட்டு கடலின் வெப்பப் போக்கை, நகர்ச்சியை அறிவது.

    7.  புவியீர்ப்பு மாறுதல் எழுந்திடும் எரிமலைக்குக் கீழே கனல் குழம்பின் (Magma Movements) நகர்ச்சியைத் தாறுமாறாக்குவது அறியப் படுகிறது.

    8.  பூமிக்குச் சீரான பொது உயர ஏற்பாட்டுக்குத் (Universal Height System) துல்லியப் புவிப் பூரணம் (Geoid) உதவி செய்கிறது.

    9.  ஒரிடத்து ஈர்ப்பு விசைக் கணிப்பு துருவத்தில் பனித்தட்டுகள் இழப்பான அளவைக் காட்டும்.

    புவிப் பூரணக் கணிப்பு (Geoid) கடல், காலநிலை ஆய்வுகளுக்குத் தேவை

    Fig 1F Ocean Circulation

    புவிப் பூரணக் கணிப்பு (Geoid) ‘கடலியல் ஆய்வாளருக்கு’ (Oceanographers) மிகவும் தேவைப்படுவது.  காரணம் புயலின்றி, நீரோட்டமின்றி, நீர்மட்ட எழுச்சி/இறக்கமின்றி (No Wind, No Water Currents, No Tides) கடல் வடிவம் எப்படி இருக்க வேண்டுமோ அந்த வடிவுக்கு வரைப்படம் கிடைக்கிறது.  ஆய்வாளர் இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கணித்தால் புறத் தூண்டல்களின் தீவிரத்தைத் (Wind, Water Currents, Tides) தெரிந்து கொள்ளலாம்.  மேலும் கடல் எப்படி வெப்பசக்தியை உலகம் பூராவும் நகர்த்துகிறது என்பதற்கு இந்த வரைப்படம் காலநிலை வடிவாளருக்கும் (Climate Modellers) தேவைப் படுகிறது.  ‘புவிப் பூரணக் கணிப்பால்’ இன்னும் புவியியல் விஞ்ஞானத்துக்குப் பற்பல பயன்கள் உண்டாகும்.  அகில உலகுக்கு ஓர் ‘ஏகமயக் கடல் மட்ட அமைப்பு’ (Universal Global Level System) உலகின் எப்பகுதிக் கடலின் உயரத்தை ஒப்பீடு செய்ய உதவும்.  கட்டடக் கட்டமைப்பில் எத்திசையில் நீரோட்டம் நிகழும் என்று பொறிநுணுக்கவாதிகளுக்கு வழிகாட்டுவது போலாகும்.

    Fig 1E Gravity Mapper Satellite GOCE

    புவிப் பௌதிகவியல் நிபுணருக்குப் பூகம்பம், எரிமலை தூண்டும் பூமிக்கடியில் என்ன நிகழ்கிறது என்றறிய ‘கோசியின் கணிப்புகள்’ (GOCE Data) உதவும்.  “இமய மலைப் பகுதிகள், மைய ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் ஆன்டிஸ் மலைத் தொடர், அண்டார்க்டிகா போன்ற இடங்களில் தோன்றும் புதிய வடிவ மாறுதல்களைக் கோசி விண்ணுளவி பதிவு செய்யும்.  இந்த இடங்கள் அடிக்கடி நெருங்கப் படாதவை..  அண்டார்க்டிகா பனித்தள ஈர்ப்பின் உயர் அதிர்வு தள மாறுபாடுகளை விமான மூலம் ஆய்வு செய்ய ஆங்கே விமானத் தளங்கள் இல்லை.” என்று ஈசா கோசித் திட்ட மேலாளர், டாக்டர் ருனே ·பிளோபர்கேகன் (Dr. Rune Floberghagen) கூறுகிறார்.  கோசி விண்ணுளவி மிகத் தணிவான உயரத்தில் (250 கி.மீ.) (90 மைல்) பூமியைச் சுற்றி வருவதால், ஈசா கோசி திட்டத்தை 2014 ஆண்டுவரை நீடிக்கப் போகிறது.  மேலும் கோசி சூரிய சக்தியைப் பயன்படுத்துவதால் அதன் ஸீனான் அயான் எஞ்சின் சிறிதளவு ஸீனான் எரிசக்தியைப் பயன்படுத்தி வருகிறது.  அனைத்து ஸீனான் எரிசக்தி தீர்ந்த பிறகு, கோசி விண்ணுளவி பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு வாயு மண்டலத்தில் விழுந்து எரிந்து சாம்பலாகும் !

    கோசி விண்ணுளவியின் இயக்கப்பாட்டு அமைப்புகள்

    1.  1100 கி.கிராம் எடையுள்ள கோசி விண்ணுளவி உறுதியான உலோகங்களில் கட்டுமானம் ஆனது.  நிலையாக அமைக்கப் பட்ட சூரிய சக்தி செல்களைச் சுமக்கிறது.  விண்ணுளவியின் அரவம் (Spacecraft Noise) தாண்டி ஈர்ப்பு விசைக் கணிப்புகள் அனுப்பப் பட வேண்டும்.

    2.  விண்ணுளவியின் 5 மீடர் X 1 மீடர் பரிமாணச் சட்டத்தில் வாயு உராய்வில் சமநிலைப் படுத்தத் “துருத்திகள்” (Stabilising Fins) பொருத்தப் பட்டுள்ளன.

    3.  கோசியின் விரைவாக்க மானிகள் () புவியீர்ப்பு விசை அளக்கக் கூடிய துல்லிமம் :
    புவியீர்ப்பில் 10 டிரில்லியனில் 1 பின்னம். ( 1 in 10^13 gravity of Earth).

    4. பிரிட்டன் தயாரித்த ஈசாவின் ஸெனான் எஞ்சின் ஒரு பிளாஸ்மா உந்து ராக்கெட். (Xenon Ion Pulse Rocket Engine).  அதன் வேகம் விநாடிக்கு 40 கி.மீ. (24 மைல்).  பிளாஸ்மா எஞ்சின் விண்ணுளவியைச் சீராக ஒரே தணிவு உயரத்தில் சுற்ற உந்து வேகத்தை ஏற்றி இறக்குகிறது.

    Fig 1A GOCE Lift off from Russian Cosmodrome

    பூகோளத்தின் துல்லிய ஈர்ப்பு விசை நுட்பம் வரையும் கோஸ் விண்ணுளவி

    2009 மார்ச் 17 ஆம் தேதி ஈரோப் விண்வெளித் தேடல் ஆணையகம் ஈசா பூகோளத்தின் நுட்ப ஈர்ப்பியலை இரண்டு வருடங்கள் வரைந்து பதிவு செய்ய தனது “கோசி” (ESA’s Satellite GOCE) துணைக்கோளை ரஷ்யாவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து (Plesetsk Cosmodrome in Russia) ஏவியது.  தூக்கிச் சென்ற ராக்கெட் உலகக் கண்டம் தாண்டும் கட்டுப்பாடு தாக்குகணை (Modified Intercontinental Ballistic Missile) ! “கோசி” துணைக் கோள் 90 நிமிடங்கள் பயணம் செய்து 280 கி.மீடர் (170 மைல்) உயரத்தில் பூமியை நெருங்கிய தணிவுச் சுற்றுவீதியில் (Earth’s Lower Orbit) பரிதியை எப்போதும் நோக்கிச் (Near-Sun-Synchronous) சுற்ற வந்தடைந்தது. “கோசி” விண்ணுளவி பூமியின் ஈர்ப்பியல் தளம், நிலைத்துவக் கடல் நீரோட்டம், எரிமலை, பூகம்பம் உண்டாக்கும் பூமியின் அடித்தட்டு நகர்ச்சி ஆகியவற்றைத் தேடிப் பதிவு செய்யும் (GOCE means Gravity Field & Steady-State Ocean Circulation Explorer).  துணைக்கோளின் எடை 1052 கி.கிராம்.  அதன் சுற்றுப் பாதை பூமத்திய ரேகைக்கு 96.7 டிகிரி கோணத்தில் அமையும் படி இயக்கப் பட்டது.  “கோசி” துணைக்கோள் சுற்று வீதியில் இடப்பட்ட பிறகு “கிரூனா” சுவீடன் தொடர்பு அரங்கிலிருந்து (Kiruna, Sweden Satellite Tracking Station) தொடர்பு கொள்ளப்பட்டது.  துணைக்கோளை சுற்று வீதியில் ஏற்றி இறக்கும் ஈசா கட்டுப்பாடு அரங்கம் டார்ம்ஸ்டாட், ஜெர்மனியில் (ESA Satellite Control Station, in Darmstadt, Germany) இருக்கிறது.

    Fig 1 Gravity Mapper GOCE Launch

    “கோசி” விண்ணுளவி பூகோளத்தின் ஈர்ப்பியல் கவர்ச்சியின் வேறுபாடுகளை நுட்பமாய்க் கண்டு பதிவு செய்யும்.  ஈர்ப்பியலைப் பற்றிய நமது தற்போதைய அறிவு முழுமை பெறாதது.  நாம் அனுதினமும் உணர்ந்து அனுபவித்து வருவது ஈர்ப்பியல் சக்தி !  நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்த சக்தி.  ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது.  அது மெய்யான கருத்தில்லை.  நாம் வட துருவத்துக்குச் சென்றால் நமது எடை பூமத்திய ரேகை அரங்கில் காணும் நமது எடையை விட மிகையாக இருக்கும்.  இந்த புதிரான போக்குக்குக் காரணம் நமது பூமியின் தாறுமாறான வடிவே !  பூமி நாம் படத்தில் காண்பது போல் ஒரு பூரணக் கோள மில்லை !  துருவப் பகுதிகளில் அது தட்டையாக உள்ளது !  பூமத்திய ரேகைப் பரப்பில் தடிப்பாகப் பெருத்திருக்கிறது.  பூமியின் உட்கருவும் சீராக ஓரினத்தன்மை உள்ள பாறைகளைக் கொண்ட தில்லை !  அதற்கு மேல் அடுக்கப் பட்டுள்ள பூதட்டுகள் சில பகுதிகளில் தடித்தும் சில பகுதிகளில் மென்மை யாகவும் அமைந்து விட்டன.  எல்லாவற்றும் மேலாக கடல் வெள்ளம் மூன்றில் இரண்டு பாகம் நிரம்பியுள்ளது.  கடலலைகள் நிலவு-பரிதியின் ஈர்ப்பியல் கவர்ச்சிகளால் பூமிக்கு இருபுறத்திலும் கொந்தளித்து ரப்பர் போல் நீண்டும் சுருங்கியும் பூமியின் ஈர்ப்பியலில் மாறுபாடுகளை ஏற்படுத்துகின்றன !

    “கோசி” விண்ணுளவி பூகோள விஞ்ஞானத்துக்குச் சேர்க்கும் புதிய கணிப்புகள்

    1 பூகோளக் காலநிலை முன்னறிவிப்பு :  கடல் வெள்ளத்தின் உள்ளோட்டம் உளவப் பட்டு “பளு நகர்ச்சி” & “வெப்பக் கடப்பு” (Mass Transfer & Heat Tranfer) போன்றவைப் பேரளவில் சூழ்வெளிக் கால நிலை மாற்றம் செய்வதைத் தொடர்ந்து கண்காணித்தல்.

    2. பூகோளத்தின் நிறை உட்புறத்தில் எப்படி நிலவிப் பரவி யுள்ளது என்று உளவி, பூகம்பம், எரிமலை போன்ற எதிர்பாராத புவியின் அபாயங்களை முன்னறிதல்.

    3. ஈர்ப்பியல் விதி பூமிக்கு மேலென்றும், கீழென்றும் விளக்கம் தருவதால் “கோசி” துணைக்கோள் பதிவு செய்யும் புதிய தகவல் ஒர் மெய்யான அகிலரூப ஏற்பாட்டை (Truly Universal System) உருவாக்க உதவி செய்யும்.

    4. ஈசா அனுப்பப் போகும் பல தொடர் துணைக்கோள் திட்டங்களில் ஒன்றான “கோசி” விண்ணுளவி சூழ்வெளி சூடேற்றப் பிரச்சனைகளுக்கு துரித விடைகளை அளிக்கும்.

    5. பூமியின் ஈரரங்குச் சுற்று வீதிகளில் (285 கி.மீ. & 263 கி.மீ உயரங்களில்) “கோசி” துணைக்கோள் சுற்றி வந்து விஞ்ஞானத் தகவல் சேமிக்கும்.  ஆறு மாதக் கால இடைவெளியில் அவை சேர்க்கப்படும்.

    ஈசா ஏவப் போகும் எதிர்காலப் பூகோளம் தேடும் விண்ணுளவிகள்

    1999 ஆம் ஆண்டில் முதன்முதல் ஈசா “கோசி” (GOCE) விண்ணுளவித் தயாரிக்க டிசைன் செய்து உயிரினக் கோள் ஒன்றுக்கு அனுப்பிச் சோதிக்கத் திட்டமிட்டது.  அது பூகோளத்தின் வாயுச் சூழ்வெளி (Atmosphere) உயிரியல் கோளம் (Biosphere) ஈரக்கோளம் (Hrdrosphere) குளிர்க்கோளம் & உட்கோளம் (Cryosphere) & Interior ஆகியவற்றில் ஆழ்ந்து ஆராய்ச்சிகள் புரிந்து இயற்கை நிகழ்ச்சிகள் மனித இனத்துக்கு விளை விக்கும் பாதிப்புகளை எடுத்துக் காட்டும்.  அடுத்து இரண்டு பெரு நிதித் திட்டங்கள் (ADM-Aeolus for Atmospheric Dynamics in 2011 & EarthCARE to investigate the Earth’s Radiative Balanace in 2013) விருத்தியாகி வருகின்றன.  மேலும் மூன்று சிறுநிதித் திட்டங்கள் (CryoSAT-2 in 2009), (SMOS in 2009) & (SWARM in 2011) தயாராகி வருகின்றன.  கிரையோஸாட்-2 (CryoSAT-2 in 2009) பனித்தட்டுகளின் தடிப்பை அளக்கும்.  சுமாஸ் (SMOS in 2009) விண்ணுளவி தள ஈரப்பாடு அளவை உளவும்.  மேலும் கடல் நீரின் உப்பளவைக் காணும். சுவார்ம் திட்டம் (SWARM in 2011) பூகாந்த மூலத்தை உளவி அறியும்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, ESA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Creates Gravitational Waves ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    6 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    7 The Geographical Atlas of the World, University of London (1993).
    8 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    9 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    10 http://jayabarathan.wordpress.com/2008/02/02/einsteins-universe-1/ [Einstein’s Theory on Gravity -1]
    11 http://jayabarathan.wordpress.com/2008/02/09/einsteins-universe-2/ [Einstein’s Theory on Gravity -2]
    12 http://jayabarathan.wordpress.com/2008/03/21/how-gravity-works/ [How Gravity Rules the Universe]
    13 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903191&format=html (EAS’s GOCE Space Probe)
    14 ESA Earth Observation Program : Advancing Earth Science Through New Sensing Technology By Puirluigi Silvestrin (Oct 29, 2007)
    15 ESA Gravity Mission GOCE (March 18, 2009)
    16 Science Daily : March Launch Planned for ESA’s Gravity Mission GOCE (Feb 5, 2009)
    17 BBC News : Supermodel Satellite Set to Fly By Jonathan Amos (March 16, 2009)
    18 ESA Launches First Earth Explorer Mission GOCE (March 17, 2009)
    19 Space Flight Now : Gravity Mapper Ascends to Space atop Rockot Booster By Stephen Clark (March 17, 2009)
    20 BBC News Gravity Satellite Leads New Wave By : Jonathan Amos (March 17, 2009)
    21 ESA Launches Earth Explorer Mission GOCE (March 17, 2009)
    22 BBC News Gravity Satellite Feels the Force By : Jonathan Amos (April 6, 2009)
    23 GOCE Delivering Data for Best Gravity Map Ever (September 30, 2009)
    24 BBC News ESA Satellite Senses Eath’s Pull By : Jonathan Amos (December 24, 2009)
    25 ESA Site Report – ESA Gravity Mission GOCE (Updated May 20, 2010)
    26 BBC News Earth’s Gravity Pictured in High Definition By : Jonathan Amos (June 28, 2010)
    27 ESA Site Report – GOCE First Global Gravity Model (June 29, 2010)
    28 Stop Watch – ESA GOCE Satellite Helps Create Map of Earth’s Gravity By Katen Sharma (June 30, 2010)

    29.  http://www.shahidulnews.com/news-archives

    30.  http://news.bbc.co.uk/2/hi/8767763.stm  [June 28, 2010]

    31.http://www.esa.int/Our_Activities/Observing_the_Earth/GOCE/GOCE_the_first_seismometer_in_orbit  [March 8, 2013]

    32.http://www.esa.int/Our_Activities/Observing_the_Earth/GOCE/Earth_s_gravity_scarred_by_earthquake/(print) [December 3, 2013]

    33.http://www.spacedaily.com/reports/Earths_gravity_scarred_by_earthquake_999.html  [December 6, 2013]

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (December  7, 2013)

    Share