பட்டினத்தடிகளின் பாடல்கள் – 21ம் பகுதி
தஞ்சை வெ. கோபாலன்
கன்னிவனநாதா கன்னிவனநாதா
பிறப்பைத் தவிர்த்தையிலை பின்னாகக் கொண்டையிலை
இறப்பைத் தவிர்த்தையிலை என்னென்று கேட்டைய்லை
பாசமெரித்தையிலை பரதவிப்பைத் தீர்த்தையிலை
பூசியநீற்றைப் புனை என்று அளித்தையிலை
அடிமையென்று சொன்னையிலை அக்குமணி தந்தையிலை
விடுமுலகம் போக்கி உன்றன் வேடம் அளித்தையிலை
உன்னிலழைத்தையிலை ஒன்றாகிக் கொண்டையிலை
நின்னடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை
ஓங்குபரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான்
ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை
நாமந்தரித்தையிலை நானொழிய நின்றையிலை
சேவவருளி எனைச் சிந்தித்தழைத்தையிலை
முத்தி அளித்தையிலை மோனங் கொடுத்தையிலை
சித்தி அளித்தையிலை சீராட்டிக் கொண்டையிலை
தவிர்ப்பைத் தவிர்த்தையிலை தானாக்கிக் கொண்டையிலை
அவிப்பரிய தீயாய் என் ஆசை தவிர்த்தையிலை
நின்ற நிலையில் நிறுத்தி எனைவைத்தையிலை
துன்றும் கரணமொடு தொக்கழியப் பார்த்தையிலை
கட்ட உலகக் காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை
நிட்டையிலே நில்லென்று நீ நிறுத்திக் கொண்டையிலை. 1.
கன்னிவன நாதனே கன்னிவன நாதனே, மீண்டும் மீண்டும் பிறப்பதைத் தவிர்த்தாயில்லை, பிறந்தபின் தடுத்து ஆட்கொண்டாயில்லை, இறப்பையும் தடுத்ததில்லை, ஏன், எதற்கு என்று எனை எதுவும் வினவவும் இல்லை. உறவையும் பாசத்தையும் நீக்கியபாடில்லை, பரிதவித்து ஏங்குவதையும் தீர்க்கவில்லை, நெற்றியில் இடும் திருநீற்றையும் அணியும்படி எனக்குத் தரவில்லை. நான் உனது அடிமை என்பதை ஏற்று அறிவித்தாயில்லை, அணிந்துகொள்ள ருத்திராக்ஷ மாலையும் தரவில்லை, சாச்வதமில்லாத இந்த உலகத்தை மாயம் என்பதை உணர்வித்து உன் காட்சியைக் கொடுத்தாயில்லை. உன்னிடம் என்னை அழைத்துக் கொள்ளவில்லை, உன்னோடு என்னையும் ஒன்றாக்கிக் கொண்டாயில்லை. கூடிநிற்கும் உன் அடியார் கூட்டத்தில் என்னையும் சேர்த்தாயில்லை. உன்னையே கதியென்று ஏற்றுக் கொண்ட அடியார் கூட்டத்தில் இவனும் ஒருவன் என்று என்னை அறிமுகம் செய்தாயில்லை. என்னை அடியவன் எனப் பெயர் சொல்லி அழைக்கவில்லை, ஆணவ மலத்தை அழித்தாயில்லை, உனது திருவருட் கருணையில் பிணைத்தாயில்லை. முக்தி தந்தாயில்லை, மோன நிலையை அளித்தாயில்லை, அட்டமா சித்திகளை அருளிச் செய்தாயில்லை. பரிதவிப்பை நீங்க்கினாய் இல்லை, என்னைச் சிவமாய்க் கொண்டாயில்லை. யோகத்தில் நிலைத்திட செய்தாயில்லை. யோகம் செய்யும் சாதனமான தீய அகக் கரணாதிகளை அடக்கினாயில்லை. சிரமம் தரும் உலக வாழ்விலிருந்து நீங்கி நிற்கும் மார்க்கத்தை அருளினாயில்லை, நிஷ்டையில் நிலைத்திரு என உபதேசம் செய்யவும் இல்லை.
கன்னிவனநாதா கன்னிவனநாதா
கடைக்கண் அருள்தாடா கன்னிவனநாதா
கெடுக்கும் மலமொறுக்கிக் கிட்டிவரப் பாரேடா
காதல் தணியேனோ கண்டு மகிழேனோ
சாதல் தவிரேனோ சங்கடந்தான் தீரேனோ
உன்னைத் துதியேனோ ஊர்நாடி வாரேனோ
பொன்னடியைப் பாரேனோ பூரித்து நில்லேனோ
ஓங்காரப் பொற்சிலம்பின் உல்லாசம் பாரேனோ
பாங்கான தண்டை பலபணியும் பாரேனோ
வீரகண்டாமணியின் வெற்றிதனைப் பாரேனோ
சூரர் கண்டு போற்றும் அந்தச் சுந்தரத்தைப் பாரேனோ
இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ
விடையில் எழுந்தருளும் வெற்றிதனைப் பாரேனோ
ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ
மானைப் பிடித்தேந்து மலர்க்கரத்தைப் பாரேனோ
மாண்டார் தலைப்பூண்ட மார்பழகைப் பாரேனோ
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ
கண்டங்கறுத்து நின்ற காரணத்தைப் பாரேனோ
தொண்டர் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ
அருள் பழுத்த மாமதியாம் அனனத்தைப் பாரேனோ
திருநயனக் கடைஒளிரும் செழுங் கொழுமைப் பாரேனோ
செங்குமிழின் துண்டம் வளர் சிங்காரம் பாரேனோ
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ
முல்லை நிலவெறிக்கு மூரல் ஒளி பாரேனோ
அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ
மகரங்கிட்னதொளிரும் வண்மைதனைப் பாரேனோ
சிகரமுடியழகும் செஞ்சடையும் பாரேனோ
கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ
பொங்கரவைத் தான் சடையில் பூண்டவிதம் பாரேனோ
சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ
எருக்கறுகு ஊமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ
கொக்கிறகு சூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ
அக்கினியை ஏந்திநின்ற ஆந்தம் பாரேனோ
தூக்கிய காலும் துடியிடையும் பாரேனோ
தாக்கு முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ
வீசுகரமும் விகசிதமும் பாரேனோ
ஆசையளிக்கும் அபயகரம் பாரேனோ
அரிபிரமர் போற்ற அமரர் சயசய எனப்
பெரியம்மை பாகம் வளர்பேரழகைப் பாரேனோ
சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ
சந்திரசேகரன் ஆய்ந்த் தயவுசெய்தல் பாரேனோ.
மதுரைக்கரசே, கன்னிவனநாதா கடம்பவன ஈசா! கடைக்கண் பார்த்து கருணை புரிவாய், ஆணவ மலம் என் மனத்தை ஆட்டிப் படைக்காமல் அதை வீழ்த்தி என்னிடம் நெருங்கி வரப் பார்ப்பாயே! நின் அருட்பார்வையொன்றை என்னை வீழ்ச்சியிலினின்றும் தடுத்து நிறுத்தும். உன் அருட்பார்வை கிடைக்கப் பெற்றால் உலகத்துப் பற்றை ஒழிப்பேன்; உந்தன் மலர்த்திருப்பதம் கண்டு தரிசிப்பேன், மரணத்தை வெல்வேன், சங்கடங்கள் தீர்வேன். உன் அருள் கிட்டிவிட்டால் உன்னை எப்போதும் துதிப்பேன், நீ கோயில்கொண்ட தலங்கள் தோறும் சென்று தரிசித்து மகிழ்வேன், நினது திருமலரடிகளைத் தொழுது பூரித்து நிற்பேன். பிரணவத்தின் தோற்றமாய் அமைந்துள்ள நின்றன் சிலம்பின் அழகைக் கண்டு களிப்பேன், காலின் அசைவில் ஓசையெழுப்பும் நினது தண்டையொலியை பரிவோடு பார்ப்பேன். நடனமாடும் நின் திருப்பாதத்தில் அணிந்த வீரகண்டாமணியின் வெற்றிகளைக் காண்பேன், சூராதி சூரர்கள் உன் புகழை வாயாரப் பேசுவதைக் கேட்டு மகிழ்வேன். அரையில் அணிந்த புலித்தோலின் அழகைக் கண்டு களிப்பேன், ரிஷப வாகனம் ஏறி காட்சி தரும் இன்பத்தை நுகர்வேன். தாருகவனத்தில் மோதிய யானையைக் கொன்று மேலே போர்த்திய காட்சியக் கண்டு களிப்பேன், மானைப் பிடித்து கையில் வைத்த நின் தாமரைக் கரங்களைக் கண்டு மகிழ்வேன். கல்பகோடி ஆண்டுகள் வாழ்ந்த பிரம்மாக்களின் சிரங்களை மாலையாய் அணித்த அழகைக் காண்பேன், என்னுடைய இறைவன் இவன் என்று மகிழ்ந்து திரிவேன். நினது பொன்னிறத்து கண்டம் கருமை நிறம் ஆனதன் காரணத்தை அறிந்து கொள்வேன், மெய்யன்பர்களோடு உவந்து நிற்கும் காட்சியைக் காண்பேன். கனிவு ததும்பும் நின் நிலவொத்த முகத்தைக் காண்பேன், கடைவிழியின் அழகை மனம் களித்துப் பார்ப்பேன். சிவந்த குமிழ மலரையொத்த உன் நாசியழகைக் கண்டு மகிழ்வேன், கொவ்வைக் கனியினும் சிவந்த உன் உதட்டழகைப் பார்த்து மகிழ்வேன். முல்லை மலரைப் போன்ற உன் பல்வரிசை அழகைக் கண்டு மகிழ்வேன், கரிய நெற்றிப் புருவ அழகைக் கண்டு மகிழ்வேன். மகர குண்டலம் அணிந்த நின் காதின் அழகைக் காண்பேன், திருமுடியில் துலங்கும் சிவந்த சடையழகைக் காண்பேன். கங்கையும் நிலவையும் அணிந்த நின் தலைமுடியை எண்ணி மகிழ்வேன், சீறும் பாம்பை முடியில் அணிந்த அழகைக் காண்பேன். சரக்கொன்றை மலரணிந்த நின் கற்றைச் சடையழகைக் காண்பேன், எருக்கு, அறுகு, ஊமத்தை மலர்களை அணிந்த நின் அழகைப் பார்ப்பேன். கொக்கின் இறகைச் சூடிய அழகைக் காண்பேன், இடக்கரத்தில் அனலை ஏந்திய உன் அழகினை நன்கு பார்ப்பேன். நடனமாட தூக்கிய அந்த குஞ்சித பாதத்தின் அழகைக் கண்டு மகிழ்வேன், எதிர்த்து வந்த தீமைகளின் ஒருமுகப்பட்ட முயலகனை வலக்காலின் கீழிட்டு ஆடுகின்ற அழகைக் காண்பேன். ஆடலின் போது வீசுகின்ற கரத்தினையும், நேரே வந்து தோன்றும் அழகினையும் கண்டு களிப்பேன். ஆசிவழங்கும் வலக் கரத்தை வணங்கி மகிழ்வேன். பெருமாளும், பிரம்மனும் துதி செய்ய, தேவாதி தேவரெல்லாம் ஜெய ஜெய என்று கோஷமிட, உமையினை இடப்பக்கம் கொண்டு நீ நிற்கும் அழகைக் கண்டு களிப்பேன். நெற்றியில் பூசிய திருநீற்றின் அழகைப் பார்ப்பேன். சந்திரசேகரனாய் தோன்றி ஆருயிர்க்கெல்லாம் அருள்புரியும் காட்சியைக் கண்டு களிப்பேன்.
(அடுத்தது “இந்தப் பாடலின் நிறைவுப் பகுதி”)