காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்:  வியாபாரிகள் புதிய முயற்சியில் இறங்குமுன் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். பணியில் இருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் உடனிருப்பவர்களிடம் வன்மம் பாராட்டாமல் நடந்து கொள்ளுங்கள். உங்களின் கௌரவம் தானே உயரும். மாணவர்கள் எவரையும் எளிதில் நம்பி விடுவது சில சமயங்களில் சிரமத்தைத் தரலாம். எனவே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது அவசியம். சுய தொழில் புரிபவர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்தாலும், வீண் செலவினங்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் வேண்டிய பொருட்களை வாங்க இயலும்.
ரிஷபம்:சக ஊழியர்களால் தொல்லைகள் தோன்றி மறைந்தாலும், பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமையால் வேலைகளை முடித்து நல்ல பெயரைப் பெறுவர். பெண்கள் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பிரச்னைகளை கையாளுவார்கள். ஏனோ தானோ வென்று செயல்படும் ஊழியர்களை வியாபாரிகள் இதமாகக் கண்டிப்பது நல்ல பலனைத் தரும். வழக்கு சம்பந்தமான விவகாரங்களில் தகுந்த ஆலோசனையை பெற்று முடிவெடுத்தால், நஷ்டமிராது. கலைஞர்கள் தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயலுபவர்களை இனங்கண்டு ஒதுக்கி விட்டால், வாழ்க்கை மகிழ்வாக அமையும்.
மிதுனம்: உறவுகள் காட்டும் ஆதரவால், பெண்கள் தங்கள் ஆக்கப் பூர்வமான எண்ணங்களை செயலாய் மாற்றுவது எளிதாக இருக்கும். வியாபாரிகள் சரக்கு போக்குவரத்தில், கண் மூடித்தனமாக யாரையும் நம்பாமல் விழிப்புடன் இருந்தால், நல்ல வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த வாரம் வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்த புதிய ஒப்பந்தங்கள் உங்கள் வசமாவதால், கலைஞர்கள் சுறுசுறுப்புடன் இயங்குவர். சுய தொழில் புரிபவர்களைத் தேடி வரும் வாய்ப்புகளை கடின உழைப்பின் மூலம் தக்க வைத்துக் கொண்டால், வருமானத்தில் எந்தக் குறைவும் இராது.
கடகம்: கடன் தொல்லைகள் குறைவதால், பெண்கள் இல்ல த்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பார்கள். வாய்ப்புகள் உங்களை நாடி வரும் போது அதனைத் திறம்பட பயன்படுத்தினால் கலைஞர்களின் உயர்வும், வெற்றியும் உறுதி. வியாபார விருத்திக்காக மேற் கொள்ளும் முயற்சிகளுக்கேற்ப உங்கள் லாபமும், உங்கள் சேவையை நாடி வரும் வடிக்கையாள்ர்களின் எண்ணிக்கையும் கூடும். மேற்படிப்புக்கான வாய்ப்புகள் கனிந்து வருவதால், மாண வர்கள் விரும்பிய பாடத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்துவதுடன் மற்றவரின் பாராட்டையும் பெற்று மகிழ்வர்.
சிம்மம்: உடன்பிறந்தவர்கள் அனுசரணையாய் இருப்பதால், சொத்து விஷயங்களை லாபகரமாய் முடித்துக் கொள்வீர்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் கவனமாய் இருப்பது அவசி யமாகும். குடும்ப நலம் சிறக்க பெண்கள் காரசாரமான உரையாடல்களைத் தவிர்த்து விடவும். சோம்பலுக்கு விடை கொடுத்தால்தான் சிறப்பான மதிப்பெண் பெற முடியும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்வது நல்லது. கலைஞர்கள் சரளமான பணப்புழக்கம் இருந்தாலும் , தவறான பாதைக்கு மற்றவர் அழைத்துச்செல்லும் அளவிற்கு நெருங்கிப் பழக வேண்டாம். முதியவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
கன்னி:  இந்த வாரம் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு சரக்குகளை வாங்குதல் நலம். மாணவர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, கல்வியில் கவனமாக இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை இடைய இயலும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் சுமூகமாக நடந்து கொண்டால், குற்றங்குறை என்பது தேய்பிறையாக கரைந்துவிடும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவி வந்தாலும், உறவினர் வருகையால், சிறு சலசலப்பு தோன்றி மறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நிர்வாக விவகாரங்களில், தகுந்த ஆலோசனையின் பேரில் செயல்படவும்.
துலாம்: மாணவர்கள் எந்த சூழலிலும் பொறுமையைக் கடை பிடிப்பது நல்லது. வியாபாரிகள் வழக்கத்திற்கு மாறான வேலைப்பளுவால், தொல்லைப்பட நேரிடலாம். எனவே திட்டமிட்டப்படி வேலைகளை விரைந்து முடிப்பதில் கவனமாய் இருங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் நலனில் காட்டும் அக்கறைக்கேற்ப அவர்கள் பெறும் மதிப்பெண்ணும் கூடும். ஏறுக்கு மாறாக நடந்து கொள்ளும் பெண்கள் உறவுகளிடம் இதமான அணுகுமுறையை கையாண்டால், பிரச்னைகள் தானே அமுங்கி விடும். இந்த வாரம் வீண் செலவும், நெருக்கடியும் பொது வாழ்வில் இருப்பவர்களின் பொறுமையை சோதிக்கலாம்.
விருச்சிகம்: கலைஞர்கள் தங்கள் பேச்சில் சினம் கலவாமல் பார்த்துக் கொண்டால், சிறப்பான பெயரும், செயல்பாடும் உங்கள் வசமாகும். வியாபாரிகள் பணியாளர்களுக்கு பணம் கொடுப்பதில் கவனமாய் இருந்தால், வீண் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி விடலாம். பெண்கள் எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் உற்சாகத்தைக் குறைக்க இடம் தராதீர்கள். பயணங்கள், இனிமையான அனுபவம், என்று மாணவர்களுக்கு பொழுது கலகலப்பாகச் செல்லும். பிள்ளைகள் சளியால் அவதிப்படலாம். புதிய வீடு வாங்கும் முயற்சியில் நிதானமாகச் செயல்படுவது நல்லது
தனுசு: இந்த வாரம் வீண் செலவால், உங்கள் பணம் கரையும். மாணவர்கள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமலிருந்தால் சிந்தனை வளம் வற்றாமலிருக்கும். வியாபாரிகள் பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கமறிந்து செயல்பட்டால் பெரும் தொகை முடங்காமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் தொழில் வகையில் காலத்திற்கேற்ப மாறுதல்களை மேற் கொண்டால், போட்டிகளை முறியடிப்பது சிரமாய் இராது. கலைஞர்களுக்கு லாபம் நல்கும் பெரிய நிறுவனங்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை சற்று ஒத்திப் போடுவது நல்லது.
மகரம்: மாணவர்கள் முன் கோபத்தை வளர விடாமலிருந்தால் அதிக நன்மையும் லாபமும் கிடைக்கும்.கலைஞர்கள் பாடுபட்டு தேடிய நல்ல பெயரை பழுதாக்கும் விஷயங்களிலிருந்து விலகியிருப்பது நல்லது.பொது வாழ்வில் இருப்பவர்கள் திடமான மனதுடன் இருந்தால் நல்ல வழிகாட்டல் உங்களை மேலும் உயர்த்தும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தேவையான இடங்களில் அதிகாரம், அன்பு இரண்டையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், பிறரின் தலையீடின்றி பணிகளை செய்ய இயலும். வியாபாரிகள் நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றுபவர்களிடம் கவனமாக இல்லாவிட்டால், வீண் தொல்லை வாசலில் வந்து நிற்கும்.
கும்பம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல் நல்லது. மாணவர்கள் வகுப்பறைகளில் வீண் பேச்சு,கேலி ஆகியவற்றில் கலந்து கொள்ளாமலிருந்தால், ஆசிரியரின் அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்ளாலாம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது மூலம் தேவையற்ற நஷ்டத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கௌரவம் நிலைத்திருக்க நேர்வழியில் நடப்பது சிறந்ததாகும். கலைஞர்கள் தேடி வரும் வாய்ப்புகளை நழுவ விடாமல் புத்திசாலித்தனமாக செயல்படுவது மூலம் தங்கள் வளர்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம்.
மீனம்: குடும்பத்தில் உள்ளவர்கள் பெண்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் .தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். வியாபாரிகள் எடுக்கும் பணியில் நிதானத்துடன் செயல்பட்டால், சிக்கல்கள், வேண்டாத மனௗளைச்சல் ஆகிய இரண்டையும் தவிர்த்து விடலாம். கலைஞர்களுக்கு அவர்களின் தன்னம்பிக்கை முயற்சிக்குத் தக்க விதத்தில் துணை புரியும். பணியில் இருப்பவர்கள் வேலை விஷயத்தில் மெத்தனமாய் இராமல், கவனத்துடன் இருத்தல் அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *