தஞ்சை வெ.கோபாலன்

பெண்கள் சிலர் திருமணமான பிறகு கணவனுடன் சுமுக உறவு இன்றி, பிணக்கு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். அப்படிச் செய்பவர்கள் நம் நாட்டில் மிகக் குறைவாக இருந்தாலும், இப்போதைய நாகரிக சமுதாயத்தில் இங்கும் அந்த மேற்கத்தியக் கலாச்சாரம் பரவி வருகிறது. ஒரு அமெரிக்க தகவல் அங்குள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இது போன்ற பிரச்சினைகளால் அவர்கள் தனித்திருக்க நேருகிறது என்கிறது. ஆனால் இந்தியாவில் என்ன நிலைமை, இங்கும் அதுபோன்றதொரு நிலைமை ஏற்படுவது இங்கு நிலவி வந்த சுமுகமான குடும்பச் சூழ்நிலையைச் சீரழித்துவிடும். இது போன்ற கணவன் மனைவி பிரிவுகளுக்கு என்ன காரணம்? உளவியல் ரீதியாக இது பற்றிய ஆய்வுகள் மேலை நாடுகளில் அதிகம் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட ஆய்வுகளில் கண்ட சில விடைகள் நம் சூழ்நிலைக்கும் ஏற்றதாக இருக்கும். அப்படியானால் அப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையை எப்படி சமாளிக்கலாம்?

பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் பல்வேறு காரணங்களில் சில:-

“நான் மனத்தளவில் அதிகம் புண்படுத்தப்படுகிறேன். அதன் விளைவாக என்னால் சுமுகமாக நடந்து கொள்ள முடியவில்லை, மற்றவர்கள் மனத்தை நோகடிக்கும்படி பேசியும் நடந்தும் கொள்ள நேர்கிறது.”

“என் கணவன் என்னிடம் இப்போதெல்லாம் அன்னியோன்யமாக, நட்புறவோடு நடந்து கொள்வதில்லை”

“இரவில் படுக்கையறையில் மட்டும்தான் என் நினைவு அவருக்கு இருக்கிறது, மற்ற நேரங்களில் என் மனநிலை உணர்வுகள், ஆசா பாசாங்கள் இவை பற்றி அவருக்கு அக்கறை இல்லை.”

“தாய் தந்தையர்களோடு வாழ்ந்துவிட்டு புதுவீடு வந்த பின்னர் உறுதுணையாக இருக்க வேண்டிய கணவன் எப்போதெல்லாம் உடுக்கை இழந்தவன் கைபோல வந்து பாதுகாத்து உதவ வேண்டுமோ அப்போது அப்படியெதையும் செய்வதில்லை. ஏனோதானோவென்ற நடவடிக்கை மனவேதனையை ஏற்படுத்துகிறது.”

“நாம் தவறு எதுவும் செய்துவிட்டால், மன்னிக்கவும் என்று சொல்வதைப் போல, அவர் செய்யும் தவறுகளுக்கு மனைவியிடம் வருத்தம் தெரிவிப்பதில்லை. தவறு செய்வது தன் உரிமை போலவும், பொறுத்துக் கொள்வது மனைவியின் கடமை போலவும் நடந்து கொள்வது.”

“திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தாரோ, அப்படியே திருமணத்துக்குப் பின்னரும் இருப்பது, மனைவியாக வந்திருப்பவரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பில்லாமல் போய் அலட்சியத்துக்கு ஆளாக நேர்ந்து விடுகிறது.”

“இருவருக்கும் சிந்தனை ஒற்றுமை இல்லை. கணவன் ஒரு திசையிலும், மனைவி எதிர்த்திசையிலும் அவரவர் மன நிலைமைக்கேற்ப பயணம் செய்வதால், மன ஒற்றுமையோ, சுமுக நிலைமையோ ஏற்பட வழியில்லாமல் போய்விடுகிறது.”

“பெற்றோர் வீட்டில் வளர்ந்தபோது சகோதரர்கள், சகோதரிகள் மற்ற உறவுகள் அவர்களோடு பழகிய முறை, இவை அனைத்தும் இங்கு காணப்படவில்லை. அவரவர் வருவதும், உண்பதும், உறங்குவதும் ஒரு சத்திரம் போல் இருக்கிறதே தவிர, ஒற்றுமையான ஒரு கூட்டுக் குடும்பமாக இல்லை.”

“வெளியே வேலைக்குப் போய்விட்டு வரும் கணவன், மனைவி என்ன செய்தாள், இன்றைய பொழுதை எப்படிக் கழித்தாள், அவளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா, உடல் நலம் எப்படி, பொழுது போக்குகள் என்ன என்பது எதையும் பற்றி கவலைப்படாமல், தானுண்டு தன் சுகங்கள் உண்டு என்று இருப்பது.”

ஆண்களிடம் கேட்டால் அவர்களும் இதுபோல பல நூறு காரணங்களைச் சொல்லி மனைவியைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் சில காரணங்கள்:-

“திருமணத்துக்கு முன்பு அவள் வேறொரு ஆணிடம் நெருக்கமாகப் பழகி வந்தது இப்போதுதான் தெரியவந்தது”

“கணவன் மீதும், கணவனுடைய பெற்றோர்கள் மீதும் ஒரு சிறிதும் அக்கறையோ, அன்போ கிடையாது. தன் பெற்றோர், தன் சகோதரர்கள் என்று தன் குடும்பத்தை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்து ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறாள்.”

“அவளுடைய விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் என்னுடையதோடு ஒத்துவரவில்லை. ஒரே அலைவரிசையில் எங்கள் மனவோட்டம் இல்லையென்பதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.”

இப்படி எத்தனையோ காரணங்கள் பெண்களுக்கும் ஏன் ஆண்களுக்கும்கூட திருமணமத்துக்குப் பிறகு ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற எண்ணங்கள் பொதுவாக வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்கே அதிகம் பாதிப்புகள் ஏற்படுகிறது. வேலைக்குப் போகும் பெண்களுக்கு வேறுவிதமான பிரச்சினைகள். ஆபீசில் அவனுடன் அதிகம் பேசுவாயாமே? உன்னுடன் சேர்ந்து பயணம் செய்தானே அவன் யார்? என்பது போன்ற சந்தேகக் கண்கொண்ட கேள்விகள் இவர்களை அதிகம் பாதிக்கச் செய்கின்றன.

ஒரு இளைஞன், இளைஞிக்குத் திருமணம் நிச்சயம் ஆகின்றபோது, திருமண வாழ்க்கையைப் பற்றி அதிகம் சிந்தித்து அந்த வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கும், தான் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், தன்னிடம் கணவனும் கணவன் வீட்டாரும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமென்றெல்லாம் பெண்கள்தான் அதிகம் கவலை கொள்கிறார்கள். அதற்காகப் பலரிடம் விசாரித்து நிலைமைகளைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஆண்களோ அதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அழகிய மனைவி வருவதும், அவளோடு ஊர் சுற்றுவது, அவள் வேலைக்குப் போனால் அவள் வருமானம் தங்களுடைய அதிகப்படி செலவுக்களுக்குப் பயன்படும் என்பது போன்ற சுயநல அடிப்படை எண்ணங்கள் மட்டுமே நிலவுமே தவிர, தான் பிறந்து வளர்ந்து உறவாடிய தங்கள் பெற்றோர்களை விட்டுவிட்டு நாமே கதி என்று வரப்போகிற ஒரு வயது வந்த, விவரங்கள் புரிந்த ஒரு பெண்ணைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

பெண் வீட்டில் பெண்ணின் தாய் தந்தையர் தன் மகளின் திருமண வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்பதில் அதிகக் கவலையும், பயமும் கொள்வது போல ஆணின் பெற்றோர் சிந்திப்பதில்லை. வருகின்ற பெண் தங்கள் குடும்பத்தைப் பிரித்துவிடாமல் இருக்க வேண்டும், பெரியவர்களிடம் மரியாதை வைத்திருக்க வேண்டும், நம் குடும்பத்தில் பிறருடன் அனுசரித்து இருக்க வேண்டும், இவை தவிர அவள் என்னென்ன கொண்டு வருவாள் என்பதில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்களே தவிர, பெண்ணின் பெற்றோர் போல கவலை கொள்ள வழியில்லை.

திருமணமான பின்னர் கணவன் மனைவிக்குள் ஏதேனும் மனவேற்றுமை உருவாகுமானால், பெண் தனக்கு நெருங்கிய தோழிகளிடமோ, தன் பெற்றோர்களிடமோதான் இதைப்பற்றி பேசுவாளே தவிர அக்கம் பக்கத்தாரிடமோ, தெரிந்த மற்ற உறவினர்களிடமோ பேசமாட்டார்கள். ஆனால் ஆண் பக்கத்தில் அந்தப் பெண் மீது குற்றம் சொல்வதில் முழுக் குடும்பமும் ஒன்றாகச் செயல்படும்.

பிரச்சினை முற்றி விவாகரத்து என்று வருகின்ற நிலையில் மேலை நாடுகளில் பெண்களை விட ஆண்களே அதிகமாக விவாக ரத்துக்குப் போகிறார்கள். இங்கு நிலைமை சமநிலையில் இருப்பதாகத்தான் தெரியவருகிறது. விவாகரத்து வரை போகும் தம்பதியரில் ஆண்களிடம் பேசும்போது அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள் பொதுவாக, பெண்கள் சொல்லும் காரணங்களிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறது. திருமணமாவதற்கு முன்பு தானும் தன் பெற்றோரும் தங்கள் நிதி நிலைமை, மற்ற வசதிகள் இவற்றைக் கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் குடும்பம் நடத்தி வந்திருப்பார்கள். திருமணம் ஆன பின்பு மனைவி தன் கணவனது வருமானம், செலவு செய்யக்கூடிய வசதி போன்றவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றவும், மனைவியின் சுற்றத்தார் அடிக்கடி விருந்தினராக வந்து இருக்கும்போது அவர்களை நல்ல முறையில் கவனிப்பதற்காக அதிகமாகச் செலவு செய்ய நேர்வதையும் சொல்லித் தாங்கள் கடன்காரர்களாக ஆக்கப்படுவதைச் சொல்லி வருத்தப்படுகிறார்கள். ஒரு ஆண் தன் சம்பளம் முழுவதும் மாமியார் வீட்டுக்காரர்களுக்கு காப்பிக்கே செலவழிக்க நேர்ந்ததைச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

திருமணமான புதிதில் மனைவி தன் கணவனின் வருமானம் என்ன, அதற்குத் தகுந்தபடி எப்படி குடித்தனம் செய்ய வேண்டுமென்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் அவளும் அவள் குடும்பத்தாரும் கணவன் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டு இஷ்டம் போல் செலவுகளைச் செய்து கணவனைக் கடன்காரனாக ஆக்கி விடுகிறார்கள். அது மட்டுமல்ல விரலுக்கேற்ப வீங்க வேண்டும் என்பதற்கு எதிராகத் தனக்குத் தெரிந்த தோழிகளைப் போல தானும் ஆடம்பர வாழ்க்கைக்கு விரும்பினால் நிச்சயம் கணவன் கடன்காரனாகத்தான் ஆவான்.

மனைவியின் விருப்பம் போல நடந்து கொள்ளவில்லையானால் தாம்பத்ய உறவில் விரிசல், கோப தாபங்கள், பிரிவு என்று விரும்பத்தகாத விளைவுகளைச் சந்திக்க நேர்கிறது. சில இடங்களில் ஈகோ பிரச்சினை. கணவனை விட சந்தர்ப்ப வசத்தால் மனைவிக்கு அதிக சம்பளமோ, பதவியோ கிடைத்துவிட்டால் போயிற்று, அப்படிப்பட்ட மனைவிகள் தங்கள் கணவன்மார்களை துச்சமாக, ஏளனமாக நடத்தத் தொடங்குகிறார்கள். வார்த்தைகளால் கொட்டுகிறார்கள். இது எல்லோருக்கும் பொதுவானது அல்ல, கூடியவரையில் இப்படி நடந்து கொள்வோர் அதிகம்.

மனைவி இப்படியெல்லாம் நடந்து கொள்வதால் கணவன் மனவேதனை அடைந்து மனச்சோர்வினால் கிட்டத்தட்ட பைத்தியக்காரனைப் போல அலையத் தொடங்குகிறான். மனைவிகளைப் பொறுத்த வரை அவர்கள் பொறுத்துக் கொண்டு பார்த்துவிட்டு, முடியாத நிலையில் வெடித்துச் சிதறி பிரிவினை நாடுகிறார்கள்.

நன்கு படித்த, நாகரிகம் தெரிந்த மனைவியர் கூட கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை இருந்தால் அதனைத் தங்கள் மனத்துக்குள் வைத்துக் கொள்வதோ, நம்பிக்கைக்குரிய தங்கள் பெற்றோர் அல்லது மிகவும் நெருங்கிய தோழிகளிடம் மட்டுமோ சொல்லாமல் பார்ப்பவர்கள் முன்னிலையில் எல்லாம் கணவனையோ, அல்லது கணவன் தன் மனைவியைப் பற்றி குறை கூறியோ அறையில் நடக்கவேண்டியவைகளை அம்பலத்துக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். பொதுவாகவே எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் கணவன் சாமர்த்தியமில்லாதவன் என்று மிக அதிகமான பெண்கள் எடுத்துக் கொண்டு அப்படியே பிறரிடம் சொல்லவும் செய்கிறார்கள். அவருக்கு என்ன தெரியும், நான் பார்த்து இந்தக் காரியங்களைச் செய்தேன் என்று சுய பெருமை பாராட்டுவதில் சிலருக்கு ஆர்வம். அதுபோன்ற இடங்களில் அந்த ஆண் நல்ல திறமைசாலியாகத்தான் இருப்பான். அவர்கள் வீடு சிதம்பரமாக இருக்கும். வேறு சில பெண்கள், என் வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம், அவர் வார்த்தையை நாங்கள் யாருமே மீற மாட்டோம் என்று தன்னை அப்பாவியாக சித்தரிப்பாள். அங்கு கணவன் மதுரையாகத்தான் இருப்பான்.

பொதுவாக பெண்கள் பிரிவுக்குச் சொல்லும் காரணம் கணவனுடனான திருமணம் மகிழ்ச்சி தருவதாக இல்லை. அவன் வேறு பெண்ணுடன் உறவு கொண்டிருக்கிறான். தன்னையும் குடும்பத்தையும் கவனிப்பதில்லை. அடித்துத் தொல்லை கொடுத்துத் துன்புறுத்துகிறான், மனத்தளவில் தன்னைத் துன்புறுத்தி கொடுமைப் படுத்துகிறான் இதுபோன்ற பல காரணங்கள்.

பொதுவாக ஆண்களுக்குத் தன் மனைவிக்குப் பிள்ளை பேறு இல்லையென்றால், அவன் நினைக்காவிட்டாலும், அவன் பெற்றோர் தொல்லை செய்து வேறு திருமணம் செய்து கொள்ள முதல் மனைவியை ரத்து செய்ய விரும்புகிறான். பெற்றோர் சொல்லாவிட்டாலும் மற்ற உறவினர், அக்கம்பக்கத்தார் தூண்டி விடுவார்கள். அவளுக்கும் பிள்ளை இல்லாமல் போனால் என்ன செய்வது என்ற எண்ணம் இருப்பதில்லை. இப்போதெல்லாம் இதற்கு மருத்துவர்களைக் கண்டு தேவையான சிகிச்சைகளோ அப்படியும் இல்லையென்றால் தத்து எடுத்துக் கொள்வதோ அதிகமாக ஆகிவருகிறது. பொதுவாக மனைவியை கவனித்து பேணி வராமையே பொதுவான பிரிவுக்குக் காரணமாக ஆகிவிடுகிறது.

இதுபோன்ற தடைகளையெல்லாம் மீறி கணவன் மனைவி ஒற்றுமையுடன் இருக்க முயற்சி செய்வது ஒன்றே வழி. முணுக்கென்றால் ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் காட்டி பிரிவது ஏற்றுக் கொள்ள முடியாது. திருமண பந்தத்தில் மட்டும்தான் கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் விவரம் புரிந்து, பருவம் வந்த பின் தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற உறவுகள் அவன் அல்லது அவள் பிறக்கும்போதே கிடைத்துவிடுகிறது. இதுபோன்ற ஏதாவதொரு காரணத்தைக் காட்டி பெற்றோர்களையோ, உடன் பிறந்தவர்களையோ ரத்து செய்யும் உரிமை இருந்தால் என்னென்ன விளைவுகள் இருக்குமோ. இந்திய நாட்டின் பண்பாட்டில் கணவன் மனைவி பிரிவு என்பது சர்வசாதாரணமாகப் போய்விடக் கூடாது. சட்டங்கள் இருக்கிறது என்பதற்காக அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டுமென்கிற சட்டம் எதுவும் இல்லை. எத்தனையோ குற்றங்களுக்கு சட்டங்கள் இருக்கின்றன. அதற்காக தண்டனைக் கொடுப்பது என்று ஆரம்பித்தால் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவருமே ஏதாவதொரு குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

நாம் வாழும் காலம் மிகக் குறைவு. அந்த குறைந்த காலத்தில் நமக்குக் கிடைத்த உறவுகளைப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். அதிலும் கணவன் மனைவி உறவு என்பது இறைவன் படைப்பில் உன்னதமான படைப்பு. வேறு எந்த உறவோடும் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும் கணவன் மனைவி மட்டும்தான் பகிர்ந்து கொள்ள முடியும். ஆகையால் இறைவன் போட்ட முடிச்சை அவிழ்க்கவோ, அறுக்கவோ முயற்சிக்காமல் பிரச்சினைகளை சமாளித்துத் தீர்ப்பதற்கு வழிபார்த்தலே மனித சமுதாயத்துக்கு நல்லது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *