தமிழ்த்திரையுலகில் தமிழ் மொழியை தங்க சிம்மாசனத்தில்

தம் பாடல் வரிகளால்  அமரவைத்த பெருமைக்குரியவர்களில் காவியக்கவிஞர் வாலி அவர்களும் முக்கிய இடம் வகிக்கிறார்.  ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தம் எண்ணங்கள்எழுத்துக்கள் – வண்ணத்தமிழ் உலாவாக மக்கள் மனதில் நடைபெற்றது  என்பதனை..

காவியக் கவிஞர் வாலியின் புகழ்பாடி

காவிரிமைந்தன் எழுதும்

வாழும் தமிழே வாலி!

தொடர் ஆரம்பம்!!

 

போற்றுதலுக்குரிய இவர்தம் தமிழ்ப்பணி இவரை அங்குலம் அங்குலமாக உயர்வுபெறச் செய்திருக்கிறது.  மறக்க முடியாத மாணிக்க வரிகளுக்குச் சொந்தக்காரராகத் திகழும் கவிஞர் வாலி அவர்களின் பெயரில்  உள்ள அர்த்த புஷ்பங்கள் ஆச்சர்யம் தரவைக்கின்றன. புராணத்தில் வருகின்ற வாலி’ எனும் பாத்திரப் படைப்பின்படி. எதிரே உள்ள பலசாலியின் பலத்தில் பாதியைப் பெற்றுவிடுவதாக உள்ளது.  அஃது உண்மையோ என்னவோ.. தமிழ்த்திரையுலகில்  தமிழ்மொழிக்கு அணிகலன்கள் பூட்டிய கவிஞர் பெருமக்கள் தஞ்சை ராமையாதாஸ்உடுமலை நாராயண கவிகவிஞர் மருதகாசிபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்கவியரசு கண்ணதாசன் முதலான ஜாம்பவான்கள் முன் – அவர்தம் திறமையெல்லாம் கலந்த கலவையாய்.. முத்தமிழில் இவர் இயற்றியுள்ள அரும்பெரும் பாடல்கள் – வார்த்தை வளம்அர்த்தச் செறிவுகள்மொழியின் ஆளுமைஇசையோடு இணைந்த அற்புதங்கள்,உள்ளடக்கம்பொருளடக்கம்மென்மை என எண்ணிலா இன்பங்களை படிக்க.. படிக்க.. ரசிக்க.. ரசிக்க.. கேட்க.. கேட்க.. இன்பம் தருகின்ற கற்பகத்தருவாய் நிலைத்து நிற்கின்றன.

மேலும்வாலிபம் என்கிற சொல்லிலும் முன்பாதி தான்’ என்பதை முழுக்க முழுக்க உண்மையாக்கிடும் இவர்தம் காதல் பாடல்கள் கனிரசம் சொட்டச் சொட்டத்  ததும்பி வழிவதை எவர் மறுக்க முடியும்?  அருமையான கவிஞர் இவரை தமிழ்த்திரையுலகம் சரியாகக் கண்டெடுத்துஆதரித்துஊக்குவித்து உயர்வுபெறச் செய்தது தமிழுக்கு கிடைத்த பெருமையென்றே சொல்லலாம்.  இவர்தம் பாட்டுமொழி கலந்த பல்சுவைகலந்த தேவாமிர்தம்! இவரின் தமிழாற்றல் நாடறிந்த ஒன்றுமட்டுமின்றி எந்த ஒரு தமிழனையும் தன் வசமிழுக்கும்! 

இவரின் பாடல்களில் முகிழ்த்தல் என்பது ஒரு சுகானுபவம்! இவரின் கற்பனைச் சிறகுகள் எட்டியிருக்கும் உயரம் அளவிடற்கரியது!  எளிமையான சொற்களையே கையாண்ட போதும்.. அவை தக்க இடத்தில்.. இடம்பெறுவதால் வலிமை மிக்கவையாய் காட்சி தருகின்றன! காட்சியமைப்புகதையோட்டம்பாத்திரப் படைப்பு இவற்றின் தன்மைகளை ஒட்டுமொத்தமாய் வார்த்தைகளில் வடித்துக் காட்டும்போது கவிஞரின் கைவண்ணம் மிளிர்கிறது.  பட்டுத் தெறிக்கும் முத்துச் சரங்களாய்  வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் நம் உள்ளத்திரையிலும் நிழலாடுகின்றது.  இத்தகு கவிஞரை நேரிலே  கண்டு நெஞ்சம் நிறைய உரையாடி மகிழ்ந்திருக்கிறேன் என்பது மட்டிலா ஆனந்தம் கொள்ளச் செய்கிறது!  கட்டுக்கடங்காத காவிரிபோல்  சொற்களின் சுவையூட்டம்பேசுகின்ற போதிலும் வெட்டவெளிச்சமாய் தென்பட்டதை மறக்க முடியுமா?  உள்ளம் திறந்து பேசுகின்ற ஒரு உன்னத மனிதரை எண்ணியெண்ணி நெகிழ்கிறேன்.

அவரின் கவியாற்றலைஎனது சிறுவயது முதற்கொண்டு பல்வகைகளில் கேட்டுச் சுவைத்த ஒரு ரசிகனாய்.. குறிப்பாக நான் கடவுளாக வணங்கும் என் கண்ணதாசனைக் காணுகின்ற பேற்றினை ஒருமுறைகூடப் பெறவில்லை என்கிற ஆதங்கம் தீர.. அவரோடு நேரில் பலமுறை சந்தித்து உரையாடுகின்ற அதிர்ஷ்டசாலியாய்.. என்ன ஓய்.. என்று ஓங்காரமாய் அழைக்கின்ற பாக்கியம் பெற்றவனாய் – அவர்தம் 108 பாடல்கள் பற்றி  நான் எழுதிய வாழும் தமிழே வாலி என்கிற நூலை அவரிடம் சமர்பித்து கவிஞரின் பரிபூரண ஆசிகளைப் பெற்றதோடு.. கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நீதான் பாலம் என்று அத்திருமகன் மொழிந்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்.

அதில் ஒரு பங்களிப்பாக.. வாழும் தமிழே வாலி என்கிற இந்தத் தொடர் இன்றுமுதல் தொடங்குகிறது! உங்கள் பார்வைக்காக.. உங்கள் பின்னூட்டங்களுக்காக.. உங்கள் ரசனைக்காக!!

இஃது திரைப்பாடல்கள் மக்கள் மனதில் எத்தனை தாக்கத்தை தந்திருக்கின்ற என்பதற்கான சாட்சியாகும்.  நன்றிப் பெருக்கோடு இனிமையான அந்த வார்த்தைப் பிரயோகங்களால் கட்டுண்டுபோன இதயங்களின் சார்பாக.. கவிஞர் வாலி அவர்களின் ஆகச்சிறந்த பாடல்களைப் பற்றிய என் கருத்துக்குவியல்களை உங்கள் முன் படைக்கிறேன்.  இதில் உள்ள சிறப்புகள் அனைத்தும் காவியக் கவிஞர் வாலி அவர்களுக்கே காணிக்கையாக்குகின்றேன்!

காற்று வாங்கப் போனேன்..

காலங்களை வென்று சில நூறு பாடல்களே சிரஞ்சீவிதம் பெற்றுத் திகழ்கின்றன எனில் அதற்கு காரணம் வார்த்தை வளம், கருத்துச் செறிவு, கற்பைன அழகு, பொருத்தமான இசையமைப்பு, பாடிய குரல் என்று இதற்கான கூட்டணி நம் கண்முன்னே நிழலாடுகிறது.

பலமுறை கேட்ட பாடலிது என்றாலும்  மறுமுறை கேட்கத்தூண்டினால் அதுவே பிரசித்தி பெற்ற பாடலாகும். இதோ.. அவ்வரிசையில் காவியக் கவிஞர் வாலி அவர்களின் கற்பனை முகிழ்ப்பில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையருவியில் ஏழிசை மன்னர் டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் குரலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் திரையில்  தோன்றிடும் கலங்கரை விளக்கம் பாடலுக்கு இன்னும் சில விளக்கங்கள்.. அல்ல.. சுவையான சம்பவம் ஒன்று!!

இப்பாடல் இயற்றப்பட்ட நாளில் நடந்த அந்த சுவையான சம்பவம் கவிதைபோலவே இனிமையானது! ரசிக்கத்தக்கது!! சரவணா பிலிம்ஸாரின் தயாரிப்பில் அமரர் கே.சங்கர் இயக்கத்தில் உருவான இப்பாடல் பதிவின்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் கவிஞர் வாலி அவர்களிடம் தான் அணிந்திருந்த விலைமதிப்பான தங்கச் சங்கலியைக் கழற்றி ஆர்மோனியத்தின்மீது வைத்து நான் பாராட்டும் அளவிற்கு ஒரு அருமையான பல்லவியைத் தந்து இந்தச் சங்கலியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றாராம். கவிஞரும் தனது கற்பனா வானத்தில் உலவி..

காற்றுவாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..

அதைக் கேட்டுவாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள்?

என்கிற பல்லவியை எழுதிக்காட்டினாராம்.  மெல்லிசை மன்னர் அப் பல்லவியை மெச்சிப் பாராட்டி.. தனது தங்கச் சங்கலியை எடுத்து வாலி  அவர்களுக்கு வழங்க.. அதை மறுத்த வாலி அவர்கள்.. தான் இதைவிட மதிப்புமிக்க ஒன்றையே  பெற விரும்புவதாக தெரிவித்தாராம்!  திடுக்கிட்ட மெல்லிசை மன்னர் இதைவிடவா என்று திரும்பக் கேட்டார்.  ஆம்.. உங்கள் அன்பும் ஆசியும் என்றென்றும் வேண்டும் என்றார்  வாலி!  கவிஞரின் உள்ளம் கண்டு ஆனந்த லஹரியில் மூழ்கிய எம்.எஸ்.வி. இதயம் நிறைய வாழ்த்தியதோடு.. என்றும்  அவருடன் கைகோர்த்து தமிழ்த்திரைக்கு பல்லாயிரம் பாடல்கள் வழங்கியிருக்கிறார் என்பதே வெற்றிச் சரித்திரம்!

பாடல் வரிகளில் ஒவ்வொரு சரணத்திலும் உள்ள கோடி சுகம் என்ன என்பதை நான் கொஞ்சம் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்..

என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை..

என் பார்வை நீந்துமிடவோ அவள் பருவமென்ற ஓடை..

நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக் கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்!

இதுபோல் பாடல் பிறந்த கதைகள் எத்தனையோ இருந்தாலும் செவிக்கு வந்து சேர்ந்தவை சிலதான் எனும்போது இதற்காக ஒருவரை ஒவ்வொரு கவிஞரும் நியமித்திருந்தாலும் நலமாகவே இருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது!!

http://www.youtube.com/watch?v=8rL9RjU8A6U

http://www.youtube.com/watch?v=8rL9RjU8A6U

 
நான் காற்று வாங்கப் போனேன்

நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)

நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)

நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)

என் உள்ள என்ற ஊஞ்சல் 
அவள் உலவுகின்ற மேடை
என் உள்ள என்ற ஊஞ்சல் 
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)

படம்: கலங்கரை விளக்கம்
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்

 

காவிரிமைந்தன்

 
 
 
 
 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வாழும் தமிழே வாலி! (1)

  1. காவிரி மைந்தனின் ‘வாழும் தமிழே வாலி’
    நல்ல பயனுள்ள படைப்பு..
    தொடரட்டும்..
    வாழ்த்துக்கள்…!

  2. அருமையானதொரு தொடர். கவிஞர் வாலி அவர்களின் சிந்தனையில் உதித்த சீர்மிகு வரிகளுக்குப் பின் உள்ள சுவையான சம்பவங்களை மேலும் அறிந்து கொள்ளும் ஆவலுடன் தொடர்ந்து படிக்கக் காத்து இருக்கிறேன். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.