Featuredஇலக்கியம்பத்திகள்

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 17

சுபாஷிணி ட்ரெம்மல்

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் –  லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (2), பாரிஸ், ப்ரான்ஸ்

 

நாம் இப்பொழுது லூவ்ரெ அருங்காட்சியகத்தில் 6ம் எண் அறைக்கு வந்திருக்கின்றோம்.  நேராக அங்கு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மோனா லிஸா படத்தைத் தான் இப்போது பார்க்கின்றோம். டாவின்சியின் மோனா லிஸா !

இரண்டு பக்கங்களும் கைப்பிடியுள்ள ஒரு மர நாற்காலியில் அமர்ந்து இடது பக்க கைப்பிடியில் தன் இரு கைகளையும் வைத்துக் கொண்டு இடது புறமாக தன் தலையைத் திருப்பி அதே சமயம் நேராகப் பார்க்கும் வகையில் இந்த உருவம் வரையப்பட்டிருக்கின்றது. மோனா லிஸாவிற்குப் பின்புறம் தெரிவதாக அமைந்துள்ள இயற்கை காட்சியில் இரண்டு வகையான காட்சிகளின் தன்மையைக் காண முடியும். முதலில் இயற்கை காட்சியாக சிறு குன்றுகள் பாதைகள் போன்றவை இயற்கையின் வர்ணங்களாகவும் அதன் பின்னே அடுத்து தெரியும் காட்சி கற்பனை உலகம் போல வெளிர் நீல நிறத்தில் விரிந்த பரந்த ஒரு பகுதியைக் காட்டுவது போலவும் அமைந்திருக்கின்றது.

 unnamed

மோனா லிஸாவின் உருவ அமைப்பையும் உடைகளையும் காணும் போது மிக எளிமையான தோற்றத்தை இப்படம் அளிப்பதை உணர முடியும். அரச குடும்பத்து பெண்மணியாகவோ பொருள் வசதி படைத்த ஒரு பெண்ணின் உருவமாகவோ காட்டாமல் ஒரு சாதாரண பெண், ஆளுமை நிறைந்த திடமான மனத்துடனான ஒரு பெண்ணாகவே மோனா லிஸா காட்டப்படுகின்றார். அவரது தெளிவான பார்வை இப்படைப்பின் தன்மையையும் நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. நகைகள் ஏதும் கழுத்திலோ கைகளிலோ காதிலோ காணப்படவில்லை. அகன்ற கழுத்துப்பகுதி தெரியும் வகையில் அதே வேளை நுணுக்கமாகத் தைக்கப்பட்ட ஒரு பழுப்பு நிற ஆடையுடனும் தலையில் முடியின் மேல் மெலிதான ஒரு துணியை அணிந்திருப்பதையும் காணலாம்.

பல அரிய கண்டுபிடிப்புகளையும் கலைச் சிற்பங்களையும் ஓவியங்களையும் உலகுக்கு அளித்த மாபெரும் சிற்பி லியோனார்டோ டாவின்சி. இவரைப் பற்றியும் இவரது அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சிந்தனைகளையும் பற்றி யோசிப்பதே எனக்கு பல வேளைகளில் மனத்தை மகிழ்விக்கும் ஒரு விஷயமாக அமைந்து விடும். டாவின்சியின் அறிவியல் கலைப்படைப்புகளைத் தனித்தனியாக எடுத்துப் பார்த்து அவற்றை அவரது பார்வையின் ஊடாக சிந்தனையின் பாதையில் சென்று விவரிக்க வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மனத்தில் இருக்கின்றது. அதனைப் பிரிதொரு முறை நேரமும் வேளையும் கூடி வரும் போது நிச்சயம் செய்ய நினைத்திருக்கின்றேன். இப்போது மோனா லிஸாவை மட்டும் பார்ப்போம்.

மோனா லிஸாவை யார் கேட்டு, எத்தகைய சூழலில், யாருக்காக டாவின்சி வரைந்தார் என்பது தெளிவாக அறியப்படாத ஒன்று. கிடைக்கின்ற  பழைய வஸாரியின் ஆட்டோ பயோக்ராஃபியிலிருந்து  இந்த  ஓவியத்தை Francesco del Giocondo என்ற வர்த்தகருக்காக அவரது மனைவியின் (Gherardini) உருவப்படத்தை 1502ல் அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் வரவை நினைத்து மகிழவும் புது மனைக்குச் சென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடவும் அவரது வேண்டுதல் படி டாவின்சி வரைந்த ஒரு ஓவியம் என்று தெரிகிறது.  ஜியோர்ஜியோ வஸாரி இந்தச் செய்தியை விவரிக்கும் வகையில் ஒரு பகுதியை தனது சிற்பக் குறிப்பு தொகுப்பு நூலில் பதிகின்றார். வஸாரி, டான் ப்ரவ்னின் புதிய நாவலான இன்பர்ஃனோவில் மிக முக்கிய பாத்திரம் என்பதையும் இவ்வேளையில் நாம் குறிப்பிட வேண்டும். வஸாரி இப்பதிவில் மோனா லிஸா உண்மையில் கெரார்டினியின் உருவம் எனக் குறிப்பிட்டிருந்தாலும் கூட இதுவே  மோனா லிஸா உருவான கதை என முழுதும் நம்பி விடவும் முடியாது என்றே தெரிகிறது.

மோனா லிஸா எனும் இப்படம் ஒரு சாதாரண ஓவியம் அன்று.  ஐரோப்பாவின் ரெனைஸான்ஸ் சிந்தனை மாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்த பல கலைப்படைப்புக்களில் பிரதான நிலையைப் பெறும் ஒரு ஓவியம் இது. இது மட்டுமன்றி தற்கால சூழலில் ஐரோப்பா மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் பிரபலமடைந்த ஒரு ஓவியம் இது என்பது யாரும் மறுக்கவும் முடியாது.

மோனா லிஸாவின் படங்களின் பிரதிகளை பலர் உருவாக்கினாலும் டாவின்சி இந்த  ஓவியத்தை வரைந்த வேளையில் அவருக்குப் பின்புறமாக அமர்ந்து டாவின்சியின் மாணவர் ஒருவர் அதே ஓவியத்தை வரைந்தார் என்பதுவும் அவ்வோவியம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தபோது அதனைப் பெற பலர் முயன்றாலும் இறுதியில் அவ்வோவியம் ஸ்பெயின் மட்ரிட்டின் மாபெரும் அருங்காட்சியகமான ப்ராடோவின் விலைமதிக்க முடியாத அரும்பொருட்களின் வரிசையில் இணைந்து கொண்டது என்பதுவும் உண்மை. இந்த ஓவியத்தையும் நான் நேரில் ப்ராடோ அருங்காட்சியகத்திலேயே பார்த்து புகைப்படங்களும் எடுத்துள்ளேன். டாவின்சியின் மோனா லிஸாவின் முகத்தில் தெரியும் சிறு முதிர்ச்சி இல்லாத சற்று இளமை தெரியும் முகச் சாயலோடு இந்த மோனா லிஸாவின் உருவப்படம் இருக்கும்.

unnamed (1)

டாவின்சி ஒரு சாதாரண மனிதரோ வெறும் கலைஞரோ அல்ல. புதிய உலகம் படைக்க வந்த சிற்பிகளில் சிறப்பிடம் பெறும் ஒருவர். ஒரு வகையில் டாவின்சி தனது மனத்தின் செய்தியை மறைமுகமாக வெளிப்படுத்த பயன்படுத்திய ஒரு கருவியே  மோனா லிஸா என்பது தற்கால குறியீடு வல்லுனர்கள் (Symbologists)  கூறும் தகவல்.

உற்று நோக்கும் போது மோனா லிஸாவின் முகத்தில் புருவம் இல்லாமையும், இமைகளில் உரோமம் இல்லாததையும் நாம் காண்போம். வலது கையை இடது கைமேல் வைத்திருக்கும் போதும் வெளியே தெரியும் கர்ப்பமான பெண்ணின் பெரிய வயிற்றுப் பகுதி மேரி மெக்டலின் ஏசு கிறிஸ்து இறந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்தார் என்ற வகையில் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த நிகழும் வாதங்களுக்கும் காரணமாக அமைகின்றது. கத்தோலிக்க கிறிஸ்துவ அடிப்படை நம்பிக்கைகளின் ஆதாரங்களை அசைக்க முயலும் ஒரு மாஸ்டர் பீஸ் மோனா லிஸா என்பது கடந்த சில ஆண்டுகளில் பரவி வரும் ஒரு தகவலாகவும் உள்ளது. இதனைச் சுற்றி அமைந்ததாக வருவதே டான் ப்ரவ்னின் டாவின்சி கோட் நாவலும் அதனை மையமாக வைத்து சோனி ப்ரொடக்‌ஷன்ஸ் எடுத்த அதே தலைப்பிலான திரைப்படமும். இந்த நூல்கள் மட்டுமன்றி குறிப்பிடத்தக்க பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  தொடர்ந்தும் வெளிவருகின்றன. உதாரணமாக, Fear Not, Buried by the Church, The truth and fiction in the DaVinci Code, Gospel Code, the DaVinci Hoax  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மோனா லிஸாவின் மந்திரப் புன்னகையின் பின்னணி ரகசியத்தை அறிவது நமக்கு எளிதல்ல. தொடரும் ஆய்வுகளுக்கு மேலும் பல ஆவணங்கள் கிடைத்தால் ஆய்வுலகம் மகிழ்ச்சியடையும்.

லூவ்ரெ அருங்காட்சியகத்தின் உள்ளே சுவரின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் மோனா லிஸா உருவப்படத்தை நேரில் காணும் அனுபவம் பெற இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள். பல கோணங்களில் இப்பக்கத்தில் மோனா லிசா பற்றிய தகவல்களைப் பெறலாம்.  http://musee.louvre.fr/oal/joconde/indexEN.html

தொடர்ந்து அடுத்த அறைகளுக்குச் செல்வோம். லூவ்ரே நமக்கு பல அதிசயங்களை வைத்திருக்கின்றது.

தொடரும்..!

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    மோனா லிஸாவை யார் கேட்டு, எத்தகைய சூழலில், யாருக்காக டாவின்சி வரைந்தார் என்பது தெளிவாக அறியப்படாத ஒன்று.,, ஆமஆம். மேலும்,மோனா லிஸாவின் மர்ம புன்னகை இன்றளவும் ஒரு புதிர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க