நான் அறிந்த சிலம்பு – 100
மலர் சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
மூவரும் வழிக்கொள்ளல்
குற்றமற்ற பிச்சைப் பாத்திரத்தையும்
தோளில் இடுகின்ற உறியையும்
மயிற்தோகையையும் எடுத்துக் கொண்டு
ஐந்து எழுத்து மந்திரத்துக்குப்
பொருளாக விளங்கும் தெய்வம்
யாம் செல்லும் வழிக்கண்
துணையாக நின்றிடட்டும்”
என்று கூறிய கவுந்தியடிகள்
பழியில்லாத சிறப்புடைய
அந்தப் பயணத்தை மேற்கொண்டார்
கண்ணகியுடனும் கோவலனுடனும்.
காவிரி ஆற்றின் ஒலியும் பறவைகளின் ஓசையும்
மழையது பொய்த்திடும்
பஞ்ச காலத்தை விளக்கும் முகமாய்,
சனி எனும் கோள் புகைந்தாலும்
தூமகேது வானில் தோன்றினாலும்
விரிந்த கதிரினையுடை சுக்கிரன்
தென் திசைதான் சென்றிட்டாலும்
அக்காலத்திலும் கூட
காற்றுவந்து மோதும் குடகுமலை உச்சியில்
கடுமையான இடிமுழக்கத்துடன்
கருமுகில் மழையைப் பொய்க்காது பெய்திடும்.
அதனால் பெருகிய வெள்ளத்துடன்
பாய்ந்து வரும் காவிரியாறு
குடகு மலையில் விளைந்திடும்
அகில் சந்தனம் முதலியவற்றை
அடித்துக் கொண்டுவந்து
முத்து பவளம் முதலான
கடலின் வளப்பொருட்களை எதிர்கொண்டு
கரையைக் குத்திநின்று கடல்தனில் கலக்கும்.
இங்ஙனம் சத்தத்துடன் பெருக்கெடுத்து
காவிரிநீர் ஓடி வருகையில்
மதகுகளின் மீதுள்ள
நீர்ப்பலகைகளை அடித்துக் கடந்து பாய்ந்தது;
அப்போது உண்டான பெருத்த ஒலி
எங்கும் கேட்டபடி இருந்தது.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 98 – 109
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html