விசாலம்

 

கலி யுகத்தில் மிகவும் எளிதாக உள்ளொளியை அதாவது நமக்குள்ளே இருக்கும் கடவுளை உணர வைக்கும் சக்தி இசைக்கு இருக்கிறது. கோடிக்கோடியாக ஜபம் செய்யவேண்டியதில்லை. பல ஆயிரங்கள் சிலவு செய்து ஹோமம் வளர்த்து பூஜை செய்தால் எத்தனைப்பலன்கள் கிடைக்குமோ அவை நெஞ்சுருகி பாடி அந்த இறைவனுக்கே எல்லாம் சமர்ப்பித்தால் கிடைத்துவிடும் .தவிர இறைவனது தரிசனமும் கிடைத்து அவர் அருளுக்கும் பாத்திரமாகி விடுவீர்கள் இசையில் மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாகராஜர் . ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதர், ,திரு சியாமா சாஸ்திரி மூவருமே தங்கள் இசையினாலேயே தங்கள் இஷ்ட தெய்வங்களைத்தரிசித்தனர், இறைவனுக்கு அருளும் அறுபத்தினாலு உபசாரங்களில் இசையும் ஒன்று .இதனால் தான் இன்றும் கோயில் மண்டபங்களில் இசையும், நாட்டியமும் நடைப்பெறுகிறது.இறைவன்,இறைவிக்கென்று இது நடக்கும் போது டிக்கட் ஒன்றும் வைப்பதில்லை, எல்லோரும் போய் ஆனந்தம் பெறலாம் ஆகம சாஸ்திரத்தில் கோயிலில் இன்ன ராகம் இந்தந்த வேளையில் பாட வேண்டும் என்றும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது .கோயில் பிரகாரம் மிகப்பெரிதாக அமைந்துவிடுவதால் அங்கு வாய்ப்பாட்டைவிட நாதசுரம் தான் சோபிக்கும் .நாதசுரத்தின் ஒலி வெகு தூரம் போய் ரீங்காரம் செய்யும் தன்மை கொண்டிருப்பதால், கோயில்களில் நாதசுரத்தையே அதிகமாக நாம் பார்க்கிறோம் .அதற்கேத்தாற்போல் தவிலும் சத்தமும் அதற்கேத்த ஜோடிதான் கோயில்களில் காலை ஐந்திலிருந்து ஆறு வரை நாதசுரவித்துவான் பூபாள ராகம் .மலயமாருதம் அல்லது பௌளி ராகம் வாசிப்பார்கள்.

இந்த ராகங்களில் சுத்த ரிஷபம், சுத்த தைவதம் இருப்பதால் மனதைக்கொள்ளைக்கொண்டுச்செல்லும் பாவம் இவைகளில் இருக்கும் .சுவாமி துயில் நீங்கி கண்விழிக்கும்போது “திருப்பள்ளி எழுச்சி” பாடும் வழக்கம் உண்டு .அவை அநேகமாக பூபாளத்தில் இருக்கும் காலை எட்டு மணியிலிருந்து ராகங்கள் தன்யாசி , சாவேரி .,அசாவேரி. வாசிக்கும் வழக்கம் இருக்கிறது .பத்து மணி சுமாருக்கு ராகங்கள் சுருட்டி. அல்லது மணிரங்கு ரொம்ப வியாபகமாக வெளிவரும். ஒவ்வொரு புகழப்பெற்ற ஸ்தலங்களிலும், கோயில்களிலும் நான் போகும் போது இவைகளை கவனிப்பேன் 12 மணிக்கு கோயில் மூடிவிடும். பின் மாலை ஐந்து மணிக்கு நாதசுர வித்துவான் காம்போஜியும். சங்கராபரணமும் பிச்சுதறுவார்கள். இரவு சயனாசனத்தின் போது ராகம் நிலாம்பரியோ அல்லது ஆனந்தபைரவியோ நம்மை மறக்கச்செய்யும் ,நம் முன்னோர்கள் காலையிலிருந்து இந்த ராகங்களைக்கேட்டு மணி சுமார் எவ்வளவு இருக்கும் என தீர்மானிப்பார்கள் என்று என் தந்தை என்னிடம் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஒரு ராகம் கண்டிப்பாக மாறாமல் வந்து விடும். அதுதான் கம்பீர நாட்டை இந்த ராகத்தில் வாசிக்கும் தனிப்பட்ட நடை தான் “மல்லாரி ” மல்லாரி பலவிதமாக வரும் அவை தீர்த்தமல்லாரி, தளிகை மல்லாரி, கும்பமல்லாரி, புறப்பாடு மல்லாரி,தேர் மல்லாரி இவைகளின் பெயர்களிலிருந்தே இவைகள் எப்போது வாசிக்கபடும் என்று யோசிக்க முடிகிறது.

இறைவன் அல்லது இறைவிக்கு அபிஷேகம் செய்ய குடத்துடன் ஒரு நதியோ அல்லது குளத்திற்கோ சென்று நீர் எடுத்து வருவார்கள் .அப்போது வாசிப்பது தீர்த்த மல்லாரி.

சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் போது வாசிப்பது தளிகை மல்லாரி .சுவாமியை வரவேற்க பூர்ணகும்பத்துடன் வேதங்கள் ஓதி எதிர்க்கொண்டு அழைப்பார்கள் அந்த நேரம் வாசிப்பது கும்ப மல்லாரி. சுவாமி வீதி ஊர்வலம் வர கோயிலை விட்டுக்கிளம்புவார் அப்போது வாசிக்கும் மல்லாரி பறப்பாடு மல்லாரி.

பிரம்மோத்ஸவ நாட்களில் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் விதவிதமான அலங்காரங்களுடன். விதவிதமான வாகனங்களில் வீதி வலம் வருவார் இறைவன் தேர் மிக பெரிதாக இருக்கும் ஆதலால் அது கோயில் வெளியிலே தான் நின்றுகொண்டிருக்கும், இறைவன், இறைவி தனக்கென்று அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்தபடி வெளிவந்து பின் அந்தத்தேரில் அமர்த்தப்படுவார்கள்.ஆஹா அப்போது கேட்கவேண்டுமே அந்த மல்லாரியை. முதல் காலத்தில் மெள்ள ஆரம்பித்து பின் மூன்று காலங்களிலும் ஜமாய்த்துவிடுவார்கள் நாதசுர வித்துவான்கள். மல்லாரி அதிகமாக துருவதாளம், திருபுடை தாளம் மட்யதாளமாக இருக்கும் .இதில் மூன்று காலங்கள் வாசித்து பின் திஸ்ர நடைக்கும் கொண்டுவருவார்கள்.ஆஹா அப்படியே குதிரை “டக் டக்கென்று ‘போவது போல் இருக்கும் .மல்லாரி எப்போதுமே வாத்தியங்களுக்குத்தான் எடுபடும் இந்த மல்லாரியில் பாட்டு அதிகமாக கிடையாது .ஒரே ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன், சரியாக ஞாபகமில்லை

“ஆயாத்தி ராஜகோபாலா
அகிலலோக பரிபாலா
ராஜ ராஜாத்தி ராஜ வ்ரஜ ராஜ மது வ்ருஷ்ணி போஜ சூர குலராஜா
ஸார ஸாயத விலோசனா பவபய நிரோத விலோசனா மந்த ஹாஸ {ஆயாதி}

இது ஊத்துக்காடு இயற்றியது போல் தோன்றுகிறது.

இந்த தேர் புறப்பாடும் மல்லாரி ராகமும் நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி அம்மன் கோயிலிலும், மன்னார்குடி ராஜகோபால சன்னதியிலும் நாதசுர சக்கரவர்த்தி திரு டி ஆர் ராஜரத்தினம் இரவு 11 வரை வாசித்ததை என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை என் காதிலிலேயே ஒலிக்கிறது

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மல்லாரி!…

  1. இசையின் அழகை ஆராதிக்கும் கட்டுரை. இந்த மல்லாரி ராஜாதி ராஜ ராகம். ஆண்டவனுக்கே அர்ப்பணம். என்னுடைய ஒலித்தமிழ் தளம் இந்த ஒலியிடன் தான் தொடங்குகிறது. நினைவில் வருவது ‘சக்கனி ராஜ மார்கமு’.அந்தக் காலத்தில் மதுரை மணி அய்யரின் பேவரிட் உருப்படி. மணி அய்யர் “சக்கனி ராஜ’ பாடத் தொடங்கினால் காந்தத்தால் கவரப்பட்ட இரும்புத் துகள்கள் போல ரசிகர்கள் அங்கே இங்கே அசையாமல் ஒன்றிவிடுவார்கள் என்று தினமணியில் போன வருடம் வந்தது.

  2. ரொம்ப அருமையான பகிர்வு அம்மா!!..  திருக்கோயில்களில், திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி உள்ளிட்ட பூஜா காலங்கள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட சில ராகங்கள் வாசிக்க வேண்டும் என்கிற மரபு இருக்கிறது. மிக அழகாக கவனித்து எழுதியிருக்கிறீர்கள்!!..இசையின் மகத்துவம் விவரணைக்கு அப்பாற்பட்டது. மிக்க நன்றி அம்மா!!

  3. //மல்லாரி அதிகமாக துருவதாளம், திருபுடை தாளம் மட்யதாளமாக இருக்கும் .இதில் மூன்று காலங்கள் வாசித்து பின் திஸ்ர நடைக்கும் கொண்டுவருவார்கள்.ஆஹா அப்படியே குதிரை “டக் டக்கென்று ‘போவது போல் இருக்கும்//

    தங்களின் இந்த வர்ணனையைக் கேட்கும் பொழுதே, உடனே நாதசுர இசையைக் கேட்க வேண்டும் போலத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *