Category: சிறுகதைகள்

கதைகள்

  • ஐம்பதாண்டுக்கால இலக்கியப் பயணம்!

    அன்பினிய நண்பர்களுக்கு,

    anas
    வணக்கம். இலக்கியப் பயணத்தில் அரை சதம் (50 ஆண்டுகள்) கடந்து வந்து எழுத்துலகில் பெரும் சாதனை புரிந்து, எண்ணற்றோருக்கு வழிகாட்டியாகவும் இருப்பவர் திரு. நரசய்யா அவர்கள். எளிமையும், தன்னடக்கமும் தன்னகத்தேக் கொண்ட இவரது அனுபவம் வாய்ந்த எழுத்துகளும், தெளிந்த ஆய்வுக் கட்டுரைகளும், நூல் விமர்சனங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும், வருங்கால எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது என்றால் அது மிகையாகாது. இவருடைய முதல் தமிழ் சிறுகதை, தாம் தமிழ் மொழியை முழுமையாக அறியாத காலத்தில் எழுதிய கதையே, 1964ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஆனந்த விகடன் முத்திரைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று ஒன்பது கதைகள் முத்திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    narasiah-11-289x300

    1955ம் ஆண்டில் ஐ. என். எஸ். பெங்கால் என்ற கப்பலில் மாலுமியாகப் பணியாற்றியபோது, தனக்கேற்பட்ட பயங்கரமான ஒரு அனுபவத்தை சுவைபட அவர் விளக்குவதை இங்கே – அங்கிங்கெனாதபடி! காணலாம்.

    ஐயா அவர்களின் ஆன்மீக நாட்டமும், நூல் திறனாய்வுக் கலையும் அறிய இதோ இராம கதை – ஒரு சிறு விமர்சனம். இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து தம் இலக்கியப் பணியைத் தொடர திரு. நரசய்யா அவர்களை வாழ்த்திப் பணிகிறோம்.

    அன்புடன்

    பவள சங்கரி

    அவள் வீட்டு வாசல் மண்

    நரசய்யா

    ‘வேஷ்யத்வார் மிருத்திகா’ அல்லது வங்காளியில் சாதாரணமாக அறியப்படும் புண்ணிமட்டி என்பது புண்ணியமான மண் – மிருத்திகா மட்டி என்றறியப்படுகிறது. வேஷ்யத்வார் என்பது வேசியின் வீட்டு வாசல் என்பதாகும். காளியின் உருவத்தைத் துர்கா பூஜையின் போது செய்ய முற்படுகையில், முதல் முதலாக ஒரு வேசியின் வீட்டு வாசல் மண் சிறிதளவாவது எடுத்துக் கொள்ளப்படும். ஏனெனில் துர்கா பூஜை சமூகத்தினால் நடத்தப்படும் பூஜை. இதற்குச் செய்யப்படும் சிலைக்கு வேண்டிய மண்ணில் ஒரு பங்கில் எல்லோர் காலும் பட்டிருக்கவேண்டும் என்பது ஒரு ஐதீகம்.! ஆகையால் இந்த மண் தேவை என எண்ணப்படுகிறது. ஜாதி மத வேறுபாடின்றி எல்லோராலும் மிதிக்கப்படும் வாசல் ஒரு பாலியல் வேலையாளரின் வீட்டு வாசல்தான் என்பதும் ஒரு நம்பிக்கை! வட கொல்கத்தா பகுதியில் இருக்கும் குமார்த்துலி என்னும் இடத்தில்தான் இப்பொம்மைகளைச் செய்யும் இனத்தவரான குயவர்கள் வசிக்கிறார்கள்.அவர்கள் தான் இம்மண்ணை எடுத்துவந்து ஏப்ரல் மாதத்திலேயே விநாயகபூஜையுடன் தமது வேலையை ஆரம்பிக்கிறார்கள். இதில் அவர்கள் தமது முழுக்கவனத்தையும் செலுத்திச் செய்கிறார்கள். பால் என்ற கடைசிப்பெயரைக் கொண்ட இவர்கள் வேலை செய்வதைக் காண்பதே ஒரு பெரிய மகிழ்வைத்தரும் விஷயம். குமார்த்துலியின் குறுகிய சந்துகளில் சென்று புகைப்படங்கள் எடுத்து இவ்விடத்திற்கு அமரத்துவம் அளித்தவர்களில் உலகின் சிறந்த புகைப்படமேதைகளான ரகுராயும் ஹென்றி கார்ட்டியர் பிரசென்னும் அடங்குவர்.

    கொல்கத்தா நகரத்தைப் பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து.

    திபின்பால் வைக்கோலையும் மூங்கில் குச்சிகளையும் வைத்து மற்றொரு முறை என்ன செய்வதென்று அறியாமல் துர்க்கா மாதாவின் உருவத்தைச் சீர் செய்ய ஆரம்பித்தவுடன் அவனுக்கு நேற்றைய சண்டைதான் நினைவுக்கு வருகிறது. அவன் மனைவி சுருசி அவனை வறுத்து எடுத்து விட்டாள். “வேலையும் கிடையாது. ஒரு இடத்துக்குப் போய் சம்பாதிக்கவும் வக்கு கிடையாது குடிக்கிறதுக்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது? வெக்கமா இல்லையா?”
    அவளுக்குத் தெரியாது அவன் அங்கு பட்ட அவஸ்தை.. இந்தப் பொம்மையைச் செய்யவேண்டிய முதற்பொருளை அவன் கொண்டுவர முடியாதது அவனுக்கு அச்சத்தை அளித்தது.

    அவன் வேலை செய்ய வேண்டுமென்றுதான் நினைக்கிறான். எவ்வளவோ நம்பிக்கையுடன்தான் அவன் குழுவின் தலைவன் சொன்ன படி ஒரு பிடி மண் எடுத்து வர வேண்டி, கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதியான சோனாகச்சி சென்றிருந்தான். அவனுக்குத் தெரியுமா இப்படி விரட்டியடிக்கப்படுவானென்று? ஏதோ புதிய இயக்கமாம் . தர்பார் மகிள சமானாய் சமிதி என்று பெயராம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் சொல்லியிருக்கிறார்களாம். “ஒங்களெ ஏமாத்தி வர்ற இந்தக் கேடுகெட்ட சமுதாயத்துக்கு ஒரு அடி கொடுக்கணும். அவர்கள் பூஜைக்குப் பொம்மை செய்ய ஒங்களெத்தேடித்தான் வருவார்கள். ஒரு சின்னப் பிடி கூட கொடுக்கவேண்டாம்.. . .”

    அதிகமாகத்திட்டியவள் சம்பா.! அவள் அழகுக்காக அறியப்பட்டவள்.

    திபின் பாலுக்குப் புரியவில்லை. அதற்கும் இதற்கும் என சம்பந்தம்? மா (துர்க்காதேவி அப்படித்தான் அறியப்படுகிறாள்) பொம்மை செய்வதில் யாருக்கு எவ்வாறு அபிப்ராயப் பேதம் வரலாம்? இந்த மண் கொண்டு வரவில்லையென்றால் பணம் கிடையாது. யோசனையில் ஆழ்ந்திருந்த அவனுக்குச் சக தொழிலாளி தான் சொன்னான், “மோஷாய் வா. . .ஒரு பாட்டில் அடிச்சிட்டுப் போயிடலாம். அப்பறம் ஐடியா ஏதாவ்து வரும்.”

    அப்படிக் குடித்துவிட்டு வந்தவனைத்தான் மனைவி ‘வறுத்து’ எடுத்தாள்.! அவனுக்கு இந்த உலகத்தின் போக்கே புரியவில்லை. எப்போதாவது ஓரிரு தடவை நாடிய சம்பாவின் நினைவு திரும்பியும் அவனுக்கு வந்தது
    சோனாகச்சியின் இருண்ட சந்துகளில் வசிக்கும் ‘அவர்கள்’ இன்று நேற்றல்ல; நாகரீகம் தோன்றிய நாளிலிருந்து தமது தொழிலை நடத்தி வருகிறார்கள். வாழ்வின் விளிம்பில் வாழ்ந்துவரும் அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பும் கிடையாது. வறுமையால் விரட்டப்பட்டு, நோயும் புறக்கணிப்பும் உடன் வர, இரவின் போர்வையில் (போர்வை தமக்கு மட்டுமல்ல தம்மைத் தேடி வரும் வக்கிர புத்தி கொண்டவர்களுக்கும்தான்) ஒதுக்கப்பட்ட இடமான கொல்கத்தாவின் சோனாகச்சியில் சொந்தபந்தங்களுக்கு அப்பாற்பட்டு தாயின் அரவணைப்பும் தந்தையின் பாசமும் எப்போதோ மறுக்கப்ப்ட்டுவிட்ட அவர்களும் இந்த மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள் தாம் என்பதையே சமூகம் மறந்து விட்ட நிலையில் உயிருடன் நடமாடுகிறார்கள். . . வாழ்கிறார்கள் என்று சொன்னால் அது பொய்யெனவே தோன்றுகிறது.

    இந்தச் சமூகமோ அவர்கள் தேவைகளை, தமது கோரமான வக்கிரங்களுக்கு அப்பாற்பட்டு, துர்கா பூஜையின் போது வேண்டுகிறது. இதை என்னவென்று சொல்ல? சமூகத்தின் வஞ்சப்புகழ்ச்சியா அல்லது தனது தவறுகளைத் துடைத்தெறிய முற்படும் பிராயச்சித்த ஏற்பாடா? ஒதுக்கப்பட்டு, தாழ்வாகப் பேசப்பட்டு, ஓரத்துக்குத் தள்ளப்பட்டவர்களின் வீட்டுவாசல் மண் பூஜையின் போது வேண்டப்படுவது எதனால்? ஆண்டவன் சமூகத்திற்கு இட்ட ஒருவகைத் தண்டனையா?

    வடமேற்கு நிலத்திலிருந்து சொந்தக்காரர்களின் சதியுடன் கொல்கத்தாவின் இருண்ட பகுதியான சோனாகச்சிக்குத் தள்ளப்பட்டவள் சம்பா!

    சம்பா தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். “இந்தத் தடவை வரட்டும் பார்க்கிறேன் . . . ஒரு சிட்டிகை கூட த்ர மாட்டேன்.” அப்படிச் சொன்னவள் முன்னால் வந்து நின்ற முதல் துரதிருஷ்டசாலியான தபின் பாலுக்குக் கிடைத்த திட்டுகளில் பெரும்பகுதி இவளிடமிருந்துதான் வந்தது.

    “அப்படியானால் பூஜை நடக்கக்கூடாது என்கிறாயா?” அவன் விரட்டப்பட்டவுடன் மாசி கேட்டாள். மாசி எனறறியப்பட்ட அவள் இவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி. “அது அம்மாவைக் கோபமடையச் செய்யாதா?”

    “கோபம் வரட்டும். மா என்ன செய்வாள்? இதுவரை என்ன செய்திருக்கிறாள்?” மாசி பயந்து விட்டாள். “மாவைப்பற்றி அப்படியெல்லாம் பேசாதே..” இவளுக்குப் புத்தி தா தாயே என்று மாசி வேண்டிக் கொள்வதைப் பார்த்த சம்பாவுக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. ’இந்த மாசியும் ஒருகாலத்தில் என்னைக் கொடுமைப் படுத்தியவள் தானே! ஆனால் இன்றோ எனக்கு ஆறுதலாகவும்துணையாகவும் உள்ளாள்’ மனதில் நினைத்துக் கொண்டாள்.

    மாசி தொடர்ந்தாள். “ஒனக்குத்தெரியுமா இந்த மண் இல்லாமே குமார்த்துலிக்காரர்களால் ஒண்ணும் செய்யவே முடியாதுன்னு? மா பொம்மை செஞ்சாதான் அவங்களுக்குச் சோறு கிடைக்கும்! நாம் நல்லவங்களோ கெட்டவங்களோன்னு எனக்குத் தெரியாது. ஒங்களையெல்லாம் கூட நான்தான் இந்தத் தொழில்லே சேத்தேன் அப்பவே எத்தனையோ பாவம் செஞ்சுட்டேன். ஆனா நான் என்ன செய்வேன்? எனக்குத்தெரிஞ்ச தொழில் இது ஒண்ணுதான்.. ஒன்னோடே நெலமையும் அதேதான். ஏதோ எந்த ஜென்மத்திலேயோ செஞ்ச பாவத்துக்கு இப்போ அனுபவிச்சிக்கிட்டிருக்கோம்.”

    மூச்சு விடாது பேசி முடித்த மாசியைப் பார்த்தாள் சம்பா. “நான் என்ன பாவம் செஞ்சேன்? பத்து வயசிலே கொண்டுவந்தாங்க. அதுக்கப்பறம் ஒங்கிட்டே பட்டது போதாதா? இப்போ ஒன்னே விட்டா எனக்கும் யாரும் இல்லே. இதிலே பாவமும் புண்ணியமும் எங்கேயிருந்து வந்தது? என் வயசு பொண்கள் போல இருக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா என்ன?”

    “ஆசை எனக்கும்தான் சம்பா இருக்கு. கொழந்தெகளைக் கொஞ்சணும். ஒரு மனிதனோடே வாழணும்கற ஆசை எனக்கு இல்லேங்க்றேயா? ஆனா முடியுமான்னு நெனச்சுப் பாரு”

    “அது நீயாதானே செஞ்சுக்கிட்டது? ஒன்னையும் கெடுத்துக்கிட்டு எங்களையும் இந்தப் பாழும் குழியிலே தள்ளினது நீதானே” கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள் சம்பா. பல வருடங்களுக்குப் பிறகு அவள் அழுகிறாள். சிலை போல அமர்ந்திருந்த மாசி பேசவே யில்ல. சின்னவளாக பேரே தெரியாத இவள் இங்கு தள்ளப்பட்ட போது கொள்ளைபோகிற அழகு! இவளை வைத்து எவ்வள்வு சம்பாதிக்கலாம் என்ற ஒரே எண்ணம்தான் மாசிக்கு இருந்தது. இணங்காத இவளை எவ்வள்வோ கொடுமைப் படுத்தியதும் இவளே தான். சம்பா என்ற பெயரும் இவள் வைத்தது தான். மாசிக்கும் கண்கள் குளமாயின.

    சம்பா, நீ சொல்றது எல்லாம் சரிதாம்மா. ஆனா இப்போ என்ன செய்ய முடியும்? ஒன்னாலே போய் அந்த ஜனச்முத்திரத்திலே சேர்ந்து வாழமுடியுமா? அந்தக் கும்பல் ஒன்னை ஏத்துக்குமா? நான் ஒருதடவை காளிகட் (கொல்கத்தாவின் காளி கோவில்) போநிருந்தப்போ அங்கே பூஜை செய்யற பட்டசார்யாவைக் கேட்டேன். . . எங்களுக்கு விமோசனமே கிடையாதான்னு . ‘ஒங்கமேலே பழி போடற சமூகத்துக்குத் தெரியணுங்க்றத்துக்காகத்தான் ஒங்க வீட்டு வாசல் மண்ணைக் கொண்டுதான் மா பொம்மையைச் செய்யணும்னு மா ஒரு கண்டிஷன் போட்டிருக்கா! அப்படிக் கொடுக்கற மண்ணுலே ஆரம்பிச்சு செய்யற மா பொம்மையைத் தான் எல்லோரும் பூஜை பண்றோம். அந்த மண்ணிலே ஆரம்பிக்கப்பட்ட பொம்மையைப் பாத்துத்தான் நமஸ்காரம் பண்றாங்க. கன்னத்துலே போட்டுக்கறாங்க இல்லையா? இந்த மாதிரி செய்யறப்போ ஒங்க பாவம் கொறையத்தான் செய்யும்’” என்று அவர் சொன்னார். அதே நான் நம்பறேன். . .”

    கோபத்துடன் திரும்பினாள் சம்பா. ‘எல்லாம் கட்டுக்கதை! யாருக்கு வேணும் பாவம் கொறைய சமாசாரம்? நானா பாவம் செஞ்சேன்? என்னைக் கொண்டுவந்து இங்கே தள்ளிவிட்டு இப்போ நான் பாவம் செஞ்சதா சொல்றது மகா மடத்தனம்” ஆவேசத்துடன் அவள் பெசியதைக்கேஏட்டு பயந்து விட்டாள் மாசி. சுற்றி நின்ற பெண்களுக்கும் மாசிக்கும் அவளே ஒரு மாதாவாகக் காணப்பட்டாள். ”நம்பமாட்டேன்.! இந்த மண்ணைக் கொண்டு போகவும் விடமாட்டேன் பூஜையே இல்லாமல் போனாலும் பரவாயில்லை”

    மாசியின் பயம் உச்சக்கட்டத்தை அடைந்தது. “அப்படிச் சொல்லாதே அம்மா . . பூஜை நடக்கல்லேன்னா ஒலகமே அழிஞ்சுடும்”

    “அழியட்டுமே!” முற்றுப்புள்ளி வைத்து விட்டாள் சம்பா.

    ஓடிப்போன மாசி திருமபவும் பட்டாச்சார்யாரைச் சந்தித்தாள். நடந்ததைச் சொன்னாள். எண்பது வயதைத் தாண்டிய அவர் நிதானமாகப் பேசினார். ”அவள் சொல்றதிலே தப்பு இல்லையே! பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாள். மா ஏதாவது வ்ழி வைத்திருப்பாள். . .பயப்படாதே.”

    கோபத்துடன் நடந்தாள் சம்பா. சோனாகச்சியினின்றும் வந்து நகரத்துக்குள் போகும் சாலைக்கு அவள் வந்தபோது இருட்டிவிட்டிருந்தது. எவ்வளவோ திட்டியிருந்தும் தன்னை நோக்கி வருவது திபின்பால் என்பதைத் தெரிந்து கொண்ட சம்பா அவனை ஆச்சரியத்துடன் நோக்கினாள். திடீரெனத் தனது காலில் விழ வந்த அவனைத் தடுத்தாள் சம்பா. “நான் யார்னு தெரிஞ்சும் என் காலில் விழ வர்ரியே ஒனக்குப் புத்தி இருக்கா.”

    “சம்பா நீதான் ஏதாவது சொல்லணும். எனக்கு மூணு பொண்கொழந்தைங்க. வீட்லே ஒரு மீன் கொழம்பாவது எம்பொஞ்சாதி வெக்கணும்னா, இவங்கெல்லாம் பட்டினியாலே சாகக் கூடாதுன்னா இங்கேருந்து நான் மண் கொண்டு போனாத்தான் உண்டு. தயவு செஞ்சு பாரும்மா”

    பெண் குழந்தைகளா?
    பெண் குழந்தைகள். தான்! உதவி செய்யாவிடில் என்னாகும்? பணம் இல்லையென்றதால் தன்னையே விற்ற தனது மாமாவின் நினைவு வந்தது அவளுக்கு. முடியாது. இது நடக்கவிடக் கூடாது. “நீ வீட்டுக்குப் போ . .நான் பாத்துக்கறேன். காலையிலே பாத்துக்கலாம்.” என்று சொன்னவளின் உறுதியான் பேச்சைக் கேட்டு ஏதோ ஒரு வகையில் திருப்தி அடைந்தவனாக திபின் தாயை வேண்டிக்கொண்டு வீட்டைநோக்கி நடந்தான்.

    அதிகாலையில் வீட்டு வாசலில் சம்பா நிற்பதைக் கண்ட சுருசிக்குக் கோபம் எல்லையைத் தாண்டியது. “கேடு கெட்டவளே இங்கேயே வர்ற தைர்யம் ஒனக்கு வந்துடுச்சா? மண்ணு கொடுக்க மாட்டேன்னியாமே? என்ன கொழுப்பு? விளக்குமாறாலே தான் அடிக்கணும்!” அவள் சொல்லி முடிக்குமுன்பு அவளையும் தள்ளிக்கொண்டு வந்து நின்றான் திபின் பால். “மன்னிச்சுடு தாயே” என்றவன் கையில் ஒரு பெரிய பொட்டலத்தைத் திணித்துவிட்டுத் திரும்பிப் பாராமல் சென்று விட்டாள் சம்பா.

    அந்தப் பொட்டலம் அவள் வீட்டு வாசல் மண் எனத்தெரிந்து அப்படியே கண்களில் ஒற்றிக் கொண்டவனின் காலில் விழுந்தாள் சுருசி!.

    (ஆனந்தவிகடன் பவள விழாவின் போது முத்திரைக் கதையாக 20-10-2002 அன்று வெளியிடப்பட்டது. திருப்பூர் தமிழ் சங்கத்தின் பரிசு பெற்ற தீர்க்கரேகைகள் என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து.. விகடனுக்கு நன்றிகளுடன் வெளியிடப்படுகிறது)

    Share
  • பொறி

    -கே.எஸ்.சுதாகர்

    என்னுடைய வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதமளவில் ஒரு எலி தவறாமல் வந்து போகும். யூன் மாதம் இங்கே குளிர் காலம்.

    எலியைப் பற்றி பல எழுத்தாளர்கள் கவிதை கதைகளைப் படைத்திருந்தாலும், சிறுவயதில் படித்த ‘The Pied Piper’ என்ற கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. சங்ககால இலக்கியங்களில் எலியைப்பற்றி யாரும் எழுதியிருக்கின்றார்களோ தெரியவில்லை.

    குட்டி எலி. அதன் உடம்பு நடுவிரல் நீளம் இருக்கும். அவருக்கு எங்கள் வீடு மிகவும் பிடித்திருக்கவேண்டும். நாங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் அவர் சுறுசுறுப்பாகிவிடுவார். வீடு முழுவதும் ஓடித் திரிந்து இம்சை செய்வதுடன் குறுணிக்குறுனிப் புளுக்கைகளை எங்குமே வீசிவிடுவார். அதன் தொல்லையோ தாங்க முடிவதில்லை.

    குளிர் காலம் அதன் இனப்பெருக்க காலம் என்றாலும்கூட – ’ஒரு’ எலி என்ற கணக்கு எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. கடந்த மூன்று வருடங்களாக வந்து போகும் எலி, போன வருஷத்துடன் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. இந்த வருடமும் வந்துவிட்டது.

    நேற்று நள்ளிரவு ஒரு சத்தம். மெதுவாக நித்திரையில் இருந்து எழுந்து பார்த்தபோது, ஹோலிற்குள் ஒரு ‘சிப்ஸ் பைக்கற்’ நகர்ந்து கொண்டிருந்தது. ஆளரவம் கேட்டு பாய்ந்து ஓடினார் எலிப்பிள்ளையார்.

    |உங்களுக்கு எப்படித் தெரியும் ஒரு எலிதான் வந்து போகின்றது?| என்று நீங்கள் கேட்கக்கூடும்.

    நான் ஒருபோதும் ஒன்றுக்கு மேற்பட்ட எலிகளை ஒன்றாகக் காணவில்லை என்பதைத் தவிர வேறெந்தச் சான்றுகளையும் என்னால் தரமுடியாது.

    எப்ப கலைத்தாலும் அங்கு இங்கு என்று எங்களைச் சூக்காட்டி கடைசியில் ஹோலிற்குள் இருக்கும் காஸ் ஹீற்றருக்குள் (Heater) போய் ஒளிந்து கொள்ளும். பின்பு அந்தப் பாதையினூடாகத் திரும்பி வருவதில்லை. ஹீற்றருக்குள்ளால் ஏதாவது கள்ளப்பாதை வைத்திருக்க வேண்டும்.

    போன வருடம் ஒருநாள் – தொல்லை தாளாமல் ’அது’ வருவதற்கு சற்று முன்னதாக ஹீற்றரைப் போட்டு நன்றாகச் சூடாக்கிவிட்டுக் காத்திருந்தேன். வெளியே வந்தது. சொல்லி வைத்தால் போல நாங்கள் எல்லாரும் சத்தமிட்டபடியே கதகளி குச்சுப்புடி ஆடினோம். அவர் எமது நிகழ்ச்சியைப் பார்த்து மிரண்டு போகாமல், தான் வகுத்த வழியே ஓடி ஹீற்றருக்குள் நுழைந்தார். பின்னர் தன்னுடைய பாஷையில் ‘ஐயோ’ எனக் கத்தியபடி அங்கேயே சங்கமமாகினார். ஹீற்றர் எலியைச் சரிவர உள்வாங்கியிருந்தால் இந்தமுறை அது வந்திருக்க முடியாது. ஆனால் கரட்டாக யூன் மாதம் வந்து காட்சி தந்தது எமக்கு ஆச்சரியமாக இருந்தது.

    இந்தத் தடவை எலி வந்தால் அயலவருடன் கதைப்பது என்று முடிவு செய்திருந்தேன். வெள்ளை இனத்தவரான டேவிட் வீடு சென்று எனது எலி பற்றிய சந்தேகத்தைக் கேட்டேன். அவர் நாடியில் கை வைத்து, எலி ஒன்று பதுங்கி நிற்பதுபோல நின்றார். தீவிர தேடுதலின் பின்னர், “யெஸ்… கரெக்ட்…. என்னுடைய வீட்டிற்கும் ஒவ்வொரு வருஷமும் எலி ஒன்று தவறாது வந்து போகின்றது” என்ற தனது கண்டுபிடிப்பையும் வெளியிட்டார்.

    அடுத்து வந்த சனி ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு இரண்டு விஷயங்கள் செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

    ஒன்று : ஒரு எலியைப் பிடிப்பதற்காக நிறைய எலிப்பொறிகள் வாங்கி வீடு முழுவதும் வைத்துவிட வேண்டும்.

    இரண்டு : செக்யூரிட்டிக் கமராவைப் பார்ப்பது.

    எலிப்பொறி வாங்க பணிங்ஸ் (Bunnings) என்ற கடைக்குச் சென்றேன். குட்டிக் குட்டி எலிப்பொறிகளாக பத்துப்பொறிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது என் கைகளிற்கு மேலால் எலி ஒன்று பறந்தோடியது.

    வீட்டிற்கு வந்து பொறிகளில் சீஸ் வைத்து வரிசையாக அடுக்கி வைத்தேன். செக்யூரிட்டிக் கமராவை ஒருவாரம் பின்னோக்கி நகர்த்திவிட்டு ஒவ்வொரு நிமிடமாகப் பார்க்கத் தொடங்கினேன். வெள்ளிக்கிழமை இரவு மூன்று மணி இருக்கும். ஒரு மனிதர் கையில் ஒரு தூக்குப்பெட்டியுடன் வருகின்றார். வீட்டிற்கு முன்னால் நின்று பெட்டியைத் திறப்பதும் மூடுவதுமாக இருக்கின்றார். அப்படியே ஒவ்வொரு வீடாகச் சென்று எலி விநியோகம் செய்கின்றார். எனது கமராவில் மூன்று வீடுகள் பதிவாகி இருந்தன.

    அப்போது ஏதோவொன்று என் மூளைக்குள் மின்னலென அடித்தது. கடந்த வாரம் என் தபால்பெட்டிக்கு வந்த துண்டுப்பிரசுரங்களை எடுத்து அலசி ஆராய்ந்தேன். ஒரு கவர்ச்சிகரமான விளம்பரம் என் கண்ணில் பட்டது.

    || Be “SPIDER FREE” this winter, 23 areas of your property treated, be 100% delighted or the job is FREE.

         As s “SPECIAL BONUS” we will treat a second pest at a heavily reduced price and a third pest (Mice &

           Rodents) for “FREE”

       Call now Mark (Your Local Pest Control Experts ||

    விளம்பரம் சொன்னது இதுதான். மேலும் விளம்பரதாரரின் ரெலிபோன், முகவரியும் அதில் அடங்கியிருந்தது. அவர்களின் முகவரி எமது வீட்டிற்கு அடுத்த தெருவில் இருந்தது.

    எலி இலவசமா? அதற்கான மருந்து இலவசமா?

    விளம்பரத்தை எடுத்துக் கொண்டு டேவிட் வீடு சென்றேன். வீட்டை விட்டுப் புறம்படும்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். அடுக்கி வைத்த பத்துப் பொறிகளில் ஒன்றினைக் காணவில்லை. இருவரும் அந்த முகவரி தேடிப் போனோம். அவரின் வீடு பொலிசாரினால் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது.

    வீட்டின் முன்னால் ‘Mark – Pest Control Expert’ என்று ஒரு பலகையில் எழுதி இருந்தது. அதற்குக் கீழே ‘யாரும் உள்ளே போக வேண்டாம்’ என்று ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி இருந்தது. நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் எங்களை நோக்கி வந்தார்.

    Iஇந்த வீட்டு மனிதர் சில பிராணிகளை தந்திரமாக றெயினிங் எல்லாம் குடுத்து வளர்த்து வருகின்றார். இரவில் அவற்றைக் கொண்டு போய் வீடுகளில் விட்டு விடுகின்றார். பகலில் அவற்றிற்கான மருந்துகளை விற்கின்றார். இப்ப சரியான றிச்சன் பீரியட் (Recession period) எண்டதாலை இந்த வேலைகளைச் செய்கின்றார்| என்றார் அந்த மனிதர்.

    Share
  • நாடோடியும், நான்-ரெசிடண்ட் இந்தியனும்

    மாதவன் இளங்கோ

    என்னைப் பற்றிச் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. இந்தியாவின் ஏதோவொரு கிராமத்தில் பிறந்து,  நகரத்திற்கு இடம்பெயர்ந்து, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, உலகின் ஒரு கால்பகுதியேனும் சுற்றிவிட்டு தற்போது ஐரோப்பாவின் ஹாலந்து நாட்டின் மாஸ்ட்ரிக்ட் எனும் நகரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஒரு என்.ஆர்.ஐ ஆசாமி.

    விடிந்தால் தீபாவளி. ஆனால், மறுநாள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால், முந்தைய நாள் மாலையே நகரிலும், நகருக்கு வெளியிலும் இருக்கும் இந்திய  நண்பர்கள் சிலரின் வீடுகளுக்கு மனைவி, மகன்கள் சகிதம் சென்று, வாழ்த்துக்களையும் இனிப்பு பதார்த்தங்களையும் வழங்கி, ஒவ்வொரு வீட்டிலும் சிறிது நேரம் அளவளாவிவிட்டு, மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த போது மணி பத்து.

    பால்கனிக்கு சென்று நின்றேன். அங்கே பல வண்ண வானவேடிக்கைகளில்லை. கண்கவர் மத்தாப்பூக்கள் உண்டாக்கும் வளையங்களைக் காண முடியவில்லை. வெடிச்சத்தம் சிறிதும் இல்லை. அமைதி, எங்கும் அமைதி. காதைச் செவிடாக்கும் அமைதி!  தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடக் கூட்டம் இல்லை. அந்த விறுவிறுப்பும், பரபரப்பும் இல்லை. ஆர்பாட்டங்கள் இல்லவே இல்லை! அட, இது இந்தியாவே இல்லை!

    ஒருவித ஏக்கத்தோடும், வெறுமையோடும் எனது அறைக்குச் சென்று, ஹீட்டரை பொருத்திவிட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினேன். பக்கத்து அறையில் என் மனைவி யூட்யூபில் சரவெடி காணொளிகளைக் காட்டி, தீபாவளி பற்றி என் பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. அவ்வளவுதான், என் மனம் கிட்டத்தட்ட ஒரு இருபது தீபாவளிகள் பின்னோக்கி, மின்னல் வேகத்தில் பாய்ந்து பயணித்தது.

    அப்போதெல்லாம் நாங்கள் தீபாவளி கொண்டாடியதில்லை. இப்போதும்  அப்படித்தான் – என் ஊருக்குச் சென்றால் தீபாவளி கொண்டாடுவதில்லை.

    என் தந்தை ஒரு தீபாவளியன்றுதான் அவருடைய தாயாரையும், சகோதரர்களையும், அந்த சமயத்தில் பரவிய ஒரு வகையான விஷக்காய்ச்சலுக்குப்  பறிகொடுத்துவிட்டார் என்றும், அன்றிலிருந்து அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை என்றும் என் தாயார் சொல்லிக் கேட்டிருக்கிறோம் நானும் என் தம்பியும். ஆகையால் அந்த நாளில், பெரும்பாலும் அவர் மௌனமாகவோ அல்லது தியான நிலையிலோ தான் இருப்பார்.

    இது எங்களுக்குத் தெரிந்த நாளிலிருந்து, அவரது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் நாங்களும் தீபாவளி கொண்டாட விரும்பியதில்லை – கொண்டாடியதில்லை. “பட்டாசு வேண்டும்! புத்தாடை வேண்டும்!” என்று நானோ, என் தம்பியோ கேட்டதே இல்லை. இந்தியாவில் பண்டிகைகளுக்கா பஞ்சம்? தீபாவளிக்குப் பதிலாக வேறு எதையாவது கொண்டாடிவிட வேண்டியதுதான்.

    இருந்தாலும், நாங்கள் சிறுவர்களாதலால், மற்ற சிறுவர்கள் சரவெடிகள் வெடிப்பதையும், மத்தாப்பூக்கள் கொளுத்துவதையும் பார்க்கும்போது மனம் “நமக்கும் கிடைக்காதா?” என்று ஏங்குவதை தவிர்க்க முடிந்ததில்லை. “பரவாயில்லை, மத்தாப்பூ மட்டுமாவது வாங்கலாமே? என்ன ஆகிவிடப்போகிறது?” என்று எனக்கு மனது மாறினாலும், “வேண்டாம்!,” என்று மறுத்துவிடுவான் என் தம்பி. அந்தச் சிறுவயதிலேயே அவன் கொண்டிருந்த  நேர்மையும், பெருந்தன்மையும், புரிதலும் ஆச்சர்யமானவை தான். ‘குழந்தைகள் பாவம் விளையாடிவிட்டுப் போகட்டும்’ என்கிற பெருந்தன்மை பெரிய மனிதர்களுக்கே இல்லாதபோது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நினைக்கும் மழலையின் பெருந்தன்மை போற்றுதலுக்குரியதல்லவா?

    தீபாவளி நாளன்று நாங்கள் நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது வழக்கம். எங்கள் எதிர் வீட்டு நண்பன் வாசு வண்ண வண்ண வெடிகளாய் வெடித்து மகிழ்வதை நாங்கள் இருவரும் மாடிப்படியில் அமர்ந்து பார்த்து ரசிப்போம்.

    அதற்கு பின்னால் நாங்கள் செய்ததை இன்று நினைத்தால் இன்றுகூட எனக்கு சிரிப்பு வருகிறது.

    என் பக்கத்து வீட்டு நண்பன் சரவணன், “நீங்க வெடிக்கலையா….? ஏ…ன்? எதற்கு…?” என்று ராகத்தோடு கேட்டுப் பாடாய்ப் படுத்தி எடுத்துவிடுவான். அதனால், அவன் எழுவதற்கு முன்னரே, எதிர்வீட்டு வாசலில் இருக்கும் வெடித்த காகிதக் குவியல்களையெல்லாம் அள்ளி எடுத்து வந்து எங்கள் வீட்டு வாசலில் போட்டு விடுவோம்.

    பட்டாசு வெடிப்பதை  விட, இந்த விளையாட்டு தான் எங்களுக்கு சுவாரஸ்யமாகவும், பேரானந்தம் தருவதாகவும் இருந்தது.

    விடிந்ததும் நம் பக்கத்து வீட்டு நண்பர் சரவெடி கிளப்புவார். வழக்கம் போல வந்து கேள்விக்கணைகளை தொடுப்பார். “அதெல்லாம் நாலு மணிக்கே ஆயிடுத்து!” என்று ஒரு கதையை அள்ளி விட்டுவிடுவோம். அவனும் அதை நம்பி சரவெடியில் மீண்டும் மும்முரமாக இறங்கி விடுவான்.

    அப்போது என் மனதை மிகவும் கவர்ந்த இன்னொரு விஷயம் ஒன்று உண்டு. தெருவில் சரவெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தால் போதும், குறவர் இனச் சிறுவர் கூட்டம் ஒன்று எங்கிருந்தாலும் ஓடி வந்து, சரவெடியை கண்டுகளித்து ஆர்ப்பாட்டம் போடும். ஒரு நீண்ட சரவெடியை கொளுத்தும் போது, எல்லா வெடிகளும் வெடிக்காது, ஒன்றிரண்டு வெடிகள் தப்பிப் போயிருக்கும். சரவெடி ஓய்ந்ததும், அந்தச் சிறுவர்கள் தப்பியவற்றையெல்லாம் தேடியலைந்து பொறுக்கியெடுத்து வெடித்து மகிழ்வார்கள். அதிலும் பார்த்தீர்களேயானால், அவர்கள் பொறுக்கியெடுத்த வெடிகள் பலவற்றில் திரிகளே இருக்காது. இருந்தாலும் விடாமல் அவற்றையெல்லாம் பிய்த்தெடுத்து, உள்ளிருக்கும் மருந்தையெல்லாம் சேகரம் செய்து கொண்டு போய் மொத்தமாகக்  கொளுத்தி விட்டு ஆட்டம் போடுவார்கள்.

    அவர்கள் என்னவோ இதையெல்லாம் குதூகலத்தோடு செய்து கொண்டிருந்தாலும், அவ்வாறு அவர்கள் தேடித்திரிவதைப் பார்க்கப் பரிதாபமாகவும், சிறிது விந்தையாகவும் கூட இருக்கும். எனக்கும் அவர்களைப்போலவே பட்டாசு கிடையாது தான். ஆனால், அது போதாமையினாலோ, இல்லாமையினாலோ அல்ல என்கிற புரிதல் எனக்கு இருந்தது. அவர்களுக்குத் தருவதற்காகவாவது கொஞ்சம் பட்டாசு வாங்கினால் நன்றாக இருக்குமே என்று மட்டும் நினைத்துக் கொள்வேன்.

    அந்தக் கூட்டத்திலிருந்து நான் கண்டெடுத்த ஒரு நண்பன் தான் – ‘குகன்’. அவனை இன்று நினைத்தாலும் என் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொள்கிறது. மேமாத சென்னையில் நான்கு மணிநேரம் பைக்கில் அலைந்துவிட்டு, திடீரென குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தால் எதிர்கொள்ளும் குளிர்ச்சியை என்னால் உணரமுடிகிறது. மகிழ்ச்சி என் மனதை நிறைக்கிறது.

    அவர்களுடைய வாழ்க்கைமுறை எவ்வளவு  வித்தியாசமானது என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. பேச்சுவழக்கில் அவர்களை நாம் “குருவிக்காரங்க” என்று அழைப்போம். அது குகனுக்குப் பொருத்தமான ஒரு பெயர்தான். அவன் ஒரு பறவை; எந்தக் கவலையும் இன்றி, சிட்டுக்குருவியைப்போல் எப்போதும் ஆனந்தமாக  சிறகடித்துப் பறக்கும் ஒரு ‘சுதந்திரப் பறவை’.

    என்னுடைய வாழ்க்கையும்  ‘கொஞ்சம்’ சுதந்திரமானது தான். மாலை நான்கு மணிக்கு பள்ளி விட்டால், நான்கு பதினைந்திற்குள் வீட்டில் இருக்க வேண்டும். என் சுதந்திரம் அந்த அளவில் இருந்தது.

    அவன் எனக்கு நண்பனான பின், நான் நிறையவே மாறிவிட்டிருந்தேன். அவனோடு வேட்டையாடச் சென்றேன், தெருவில் கில்லி, கோலி எல்லாம் விளையாட ஆரம்பித்தேன். அவன் கூடாரத்திலெல்லாம் (அதுதான் வீடே!) பலமுறை அவனுடன் அமர்ந்து  உணவருந்தி மகிழ்ந்திருக்கிறேன். கூடாரத்தைப் பற்றி அங்கு யாருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்போது சென்றாலும் அங்கே ஆனந்தம், ஆர்ப்பாட்டம் தான். எங்கள் வீட்டில் அதற்கு நேர்மாறாக எப்போதும் ஒரு ‘பின் டிராப் சைலன்ஸ்’ இருந்தாக வேண்டும்.

    அந்தக் கூடாரத்தைப் பற்றியும், அந்த வாழ்க்கை முறையைப் பற்றியும் எழுதினால் நிச்சயமாக இந்தக் கதை ஒரு குறுநாவலாகிவிடும். அவன் செய்வதையெல்லாம் அப்படி ரசித்திருக்கிறேன்.

    அவனை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆரம்பத்தில் ஏனோ என் தாயார் அதை விரும்பவில்லை. அவனையும் எங்களுக்குச் சமமாக  நடத்தவேண்டும் என்று அவனது அங்கீகாரத்திற்காக வீட்டில் ஒரு பெரிய யுத்தமே நடத்தினேன். அது வேலைக்கு ஆகாததால் பிறகு, காந்திய வழியில் உண்ணாவிரதமெல்லாம் இருந்ததுண்டு. வெகு விரைவில் அவன் கிட்டத்தட்ட எங்கள் வீட்டில் ஒருவனாகவே மாறிவிட்டிருந்தான். எல்லோருக்கும் அவனைப் பிடித்துப்போய் விட்டது.

    அவனோடு சேர்ந்து நான் கோலி விளையாடியது மாறி, அவன் எங்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். அவ்வளவு ஏன்? அந்த சமயத்தில் பிரபலமான பாக்மான், பாராட்ரூப்பர், பிரின்ஸ் ஆப் பெர்ஷியா போன்ற விளையாட்டுகளெல்லாம் கூட, எங்கள் வீட்டு கணிப்பொறியில் விளையாட ஆரம்பித்தான்.

    பள்ளிப்படிப்பை நிறுத்தியிருந்த அவன், என் தந்தையின் உதவியோடு ஒரு பள்ளியில் சேர்ந்து படிக்கவும் ஆரம்பித்தான். அந்த வயதிலேயே எனக்கு தெரிந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். எதைச் சொன்னாலும் அப்படியே ‘பற்றிக்கொள்ளும் அவனது திறம்’ என்னை வியக்க வைக்கும்.

    அந்தப் பறவை மெதுவாக எங்கள் கூண்டுக்குள் அது அறியாமலேயே சிக்கிக் கொள்ள ஆரம்பித்தாலும், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

    ஒரு சமயத்தில் அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளால், அவர்களின் கூடாரங்களெல்லாம் அகற்றப்பட்டன. சிறகடித்து பறக்கும் சுதந்திரப் பறவைகளின் வாழ்க்கை என்று நான் கருதிய அந்த நாடோடிகளின் வாழ்க்கையில் இருந்த சிரமங்களும், சிக்கல்களும், அப்போது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.

    நாமெல்லாம் இன்று வைபை (Wi-fi) சமிக்ஞைகள் சில நொடிகள் வரவில்லையென்றால் கூட பொறுமையிழந்துவிடுகிறோம். ஆனால்,  படுக்கைகளையும், பொருட்களையும், மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு இடம்பெயர்ந்து போய்க்கொண்டிருந்த அந்த நாடோடிக் கூட்டத்தின் வாழ்க்கையை நினைத்து அன்றிரவு அழுதது இன்றும் நினைவிலிருக்கிறது.

    தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு, தலையில் இருந்த மூட்டையை ஒரு கையில் பிடித்துகொண்டு, மறுகையை என்னை நோக்கி அசைத்தவாறு, ‘வெளிநாட்டுக்குச் செல்வது’ போன்று மகிழ்ச்சியோடு  சிரித்துக்கொண்டே அவன் சென்ற அந்தக் காட்சி உண்மையில் என்னுள் உறைந்து போயிருக்கிறது.

    அதன் பிறகு, அவனைச் சந்திக்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை. இடம்பெயர்ந்து போனது என்னவோ என் நண்பன் தானே ஒழிய, எங்கள் நட்போ அல்லது அந்த நட்பின் மூலம் கிடைத்த அனுபவமோ அல்ல.

    என் மனவெளியில் அடிக்கடி உலவிக்கொண்டிருக்கும் அத்தினங்களின் நினைவுகளைப் பதிவுசெய்து, உங்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், இந்த நட்பும், அனுபவமும் சாஸ்வதம் பெற்றுவிடும் என்று நம்புகிறேன். அதேபோல, இரைச்சல் நிறைந்த இன்றைய வாழ்க்கை சூழலில், இதுபோன்ற குளிர்ச்சியான நினைவுகள் மனதிற்கு சிறிதளவேனும் இதமும், இனிமையும் தரும் என்றும் நம்புகிறேன். இன்றைக்கு அது போன்ற ஒரு நட்போ அல்லது எனக்கு அப்போதிருந்த மனநிலையோ கோடி கொடுத்தாலும் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

    அவன் நிச்சயம் எங்கோ இருக்கிறான். ஆனால் அவனை மீண்டும் சந்திப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். ஒருவேளை நீங்கள் அவனை சந்திக்க நேர்ந்தாலும், அது சாத்தியம்!

    இருப்பினும், உங்களுக்கு ஒரு கோரிக்கை!

    ஒருவேளை நீங்கள் அவனை சந்திக்க நேர்ந்தால்.. சந்திக்க நேர்ந்தால்..

    ‘என்னைப் பற்றி அவனிடம் தயவுசெய்து எதுவும் கூறி விடாதீர்கள்!’

    அதுவும் இந்த பாழாய்ப் போன உலகத்தில், ‘கார் எப்போ வாங்குற? கார் எப்போ வாங்குற’ என்று திரும்பத் திரும்ப கேட்டு உயிரெடுத்த உடன்பணிபுரிபவர்களின் வாயடைக்க கடனுக்கு கார் வாங்கி, ‘நீ வீடு இல்லாமல் இருப்பது எனக்கு அவமானம்’ என்று கூறிய தந்தையின் கௌரவத்திற்காக கடனுக்கு வீடு வாங்கி, மேலும் காதணி, நிச்சயதார்த்தம், திருமணம் என்று பல விழாக்களில் சொந்தங்கள் முகத்தைத் தூக்கி மும்பையில் வைப்பதை காணச் சகிக்காமல், அவர்களோடு பெருமையுடனும் புன்னைகையுடனும் மேடையில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, கடன் அட்டை உபயோகித்து தங்க நகைகள், துணிமணிகளெல்லாம் வாங்கி, பொறுப்போடு நான்காம் தேதிக்குள் அத்தனை தவணைகளையும் கட்டி, எஞ்சியிருந்த காசில் வீட்டுக்கு மளிகைப்பொருட்கள் வாங்கி, பிள்ளைகளுக்கு பொம்மைகள், எனக்குப் புத்தகங்கள் வாங்கி மாத கடைசியில் கையில் காசில்லாமல் கஷ்டப்பட்டு, நண்பர்களிடமும் கடன் வாங்கி, கடன் பட்டியல் கூட்டுத்தொடராகவும், கடன் பணம் பெருக்குத்தொடராகவும் வளர்ந்து, மன அழுத்தத்துக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி, வெறுத்துப்போய் ஒரு நாடோடி போல் மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு வெளிநாடு ஓடிவந்து, ‘எங்கள் வேலையைப்  பறித்துக்கொள்ள வந்த களவாணிகளே!’ என்பது போன்ற பார்வையை வீசிய அந்நியர்களின் (உண்மையில் நாங்கள் தான் இங்கு அந்நியர்கள்!) எதிர்ப்பைச் சுமந்து, கடின உழைப்பாலும், தாய்நாடு தந்த அறிவாலும் அவர்களின் நம்பகத்தன்மையைப் பெற்று, சிறிது சிறிதாக அவர்களில் ஒருவனாகி,

    (மூச்சு வாங்குகிறது… இரண்டு நிமிடங்கள் பொறுத்துக்கொள்ளவும்..)

    சரி. இப்படி ஆறு வருடமாக கைகட்டி, வாய்கட்டி, செலவு பண்ணாமல் சேர்த்து வைத்து, இந்திய ரூபாய் வீழ்ச்சியடைகிற நாளை எதிர்நோக்கிக் காத்திருந்து, இந்தியாவிற்கு சிறிது சிறிதாக பணத்தை அனுப்பி, அங்கு வந்து வீட்டுக்கடனை அடைத்து, நிம்மதியாக தெருவோர தேநீர் கடையில் ஒரு சனிக்கிழமை தேநீர் பருகும்போது, ‘வீட்டு விலையெல்லாம் இந்த என்.ஆர்.ஐ நாய்களால ஏறி போயிடுச்சு’ என்று தேநீர் கடையில் தினசரி படிக்கும் மேதைகளிடம் பட்டம் பெற்று, வீட்டுக்கடனை முழுவதுமாக அடைத்து எஞ்சிய தொகையில் நிலம் வாங்க விரும்பி, என் பெற்றோர் ‘திஸ் இஸ் மை சன் ப்ரம் அப்ராட்’ என்று வீண்பெருமையடித்துக்கொண்டு அறிமுகப்படுத்தியதால், இருபது கோடி மதிப்புள்ள நிலத்தை ஏஜெண்ட் காட்ட, ‘நான் அந்த மாதிரி என்.ஆர்.ஐ இல்லைங்க, வேற மாதிரி. இந்தியாவில் இருக்கற எல்லாரும் எப்படி அனில் அம்பானி இல்லையோ, அதேபோல் வெளிநாட்டுல இருக்கற எல்லா இந்தியனும் லக்ஷ்மி மிட்டலும் இல்லை. நான் ஒரு நார்மல் மிடில் கிளாஸ் என்.ஆர்.ஐ!’ என்று எடுத்துச் சொல்லி அவரது மேலும் கீழும் பார்வையை தர்மசங்கடத்துடன் வாங்கி,

    உதவி என்று வந்த உறவுகாரனுக்கு ஆயிரம் ரூபாய் தந்து, ‘வெளிநாட்டுல கோடிக்கணக்குல சம்பாதிக்கிறான், பிச்ச காச தர்றான் பாரு பரதேசி’ என்கிற பட்டத்தையும் பெற்று, இன்னும் ‘திமிர் புடிச்சவன்’, ‘கஞ்சன்’, ‘கர்வி’, அதிமேதாவி, ‘நாட்டுப்பற்று இல்லாதவன்’ என்று எனக்கு முற்றிலும் பொருந்தாத அத்தனை அடைமொழிகளையும் தாங்கி,

    இறுதியாக இன்றைக்கு பழைய வாழ்க்கையை நினைத்து, உண்மையான அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி தயவு செய்து குகனிடம் கூறி விடாதீர்கள்.

    அவன் என் நிலைமையை நினைத்து மிகவும் வருத்தப்படுவான். இன்னும் சொல்லப்போனால், இதெல்லாம் அவனுக்குப் புரியவும் புரியாது.

    அவன் ஒரு பறவை.

    யாரையும் வேதனைக்கும் உட்படுத்தாமல், எந்தக் கவலையும் இன்றி, யாருக்காகவும் இல்லாமல், அவனுக்காகவே வாழ்ந்து, எப்போதும் ஆனந்தமாக சிட்டுக்குருவியைப் போல் சிறகடித்துப் பறக்கும் ஒரு சுதந்திரப் பறவை.

    Share
  • கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்

    மாதவன் இளங்கோ 

    லூவன் நகர உள்வட்ட சாலையில் அமைந்த கபூசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் நான் பிடித்திருக்கவேண்டிய பேருந்து அப்போதுதான் கிளம்பியது.

    நிறுத்தத்தை ஒட்டி இருக்கும் பத்து அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள பல பெட்டிகளில், ஒரு சிறு பெட்டி தான் என் வீடு. டச்சு மொழி தெரியாதவர்கள், இந்த இடத்தின் பெயரை கபுசிஜ்னென்வோர் என்று உச்சரித்து இந்த ஊர் மக்களின் ஏளனச் சிரிப்பைப் பரிசாகப் பெற்றுக்கொள்வார்கள். ஆரம்பகாலத்தில் நானும் நிறைய முறை இப்படிப்பட்ட பரிசுகளை வென்றிருக்கிறேன்.

    பேருந்து நிறுத்தங்களால் சூழப்பட்ட எங்கள் குடியிருப்பின் மறுபுறம் இருக்கும் ரெடிங்கனாப் நிறுத்தத்தில் என்னுடைய அலுவலகத்திற்கு செல்லும் 7, 8, 9 எண் பேருந்துகளில் ஒன்றைப் பிடிப்பது வழக்கம். ஆனால் அன்றைக்கு இரயில் நிலையத்திற்கு வெகு அருகாமையிலேயே இருக்கும் லூவன் நகராட்சி மன்றத்துக்கு செல்லவேண்டி இருந்ததால் உள்வட்ட சாலைப் பேருந்தான 601-ஐப் பிடிக்க நினைத்தேன். வீட்டை விட்டு வெளியே வந்தவுடனேயே 601-இன் பின்புறம் தெரிந்தது. ஓடிச் சென்று ஏறுவதற்குள் கிளம்பிவிட்டது. இந்த ஊர் ஓட்டுநர்கள் வேறு கடமை தவறாத கனவான்கள் ஆயிற்றே. கதவை மூடிவிட்டு கிளம்பிவிட்டால், மீண்டும் நிறுத்தமாட்டார்கள்.

    அடுத்த பேருந்து வருவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் காத்திருக்கவேண்டும். உலகத்திலேயே எனக்கு பிடிக்காத விஷயம் காத்திருப்பது, குறிப்பாக இந்த பேருந்து நிலையத்திலும், இரயில் நிலையத்திலும்  காத்திருப்பது. ஏழு, எட்டு, ஒன்பதுகளும் இரயில் நிலையம் செல்லும். ஆனால் அவை நகருக்குள்ளே உள்ள சந்து பொந்துகளில் ஆடி அசைந்து சென்று இரயில் நிலையத்தை அடைவதற்குள் தலை கிறுகிறுத்து விடும்.

    வீட்டிற்கு திரும்பப் போய்விட்டு வரலாமா என்று கூடத் தோன்றியது. இன்னும் சில நிமிடங்கள் இங்கு தான் நிற்கவேண்டும். கைபேசியை எடுத்து முகநூலில் மேலும் கீழாகத் தள்ளி நிலைத்தகவல்களைப் பார்ப்பதற்கு அலுப்பாக இருந்தது.

    நிறுத்தத்தில் எனக்கெதிரே உல்லாசப் பேருந்தான ஓஸ்டண்டுரேய்க் நின்றுகொண்டிருந்தது. வழக்கமாக இதுபோன்ற பேருந்துகள் வெளிவட்ட சாலைக்கு மறுபுறமுள்ள சதுக்கத்தில் தான் நிற்கும். அன்றைக்கு மட்டும் ஏன் அங்கு நிற்கிறது என்று தெரியவில்லை. அதுவும் வெகுநேரமாக. பேருந்துக்குள் ‘உலகத்தின் பாதி’ பல நிறங்களில் அமர்ந்திருந்தது.

    நிறுத்தத்திற்கு எதிரே, உள்வட்ட சாலைக்கும் வெளிவட்ட சாலைக்கும் இடையே ஒரு பெரிய பாலமும், அதன் கீழே ஒரு பதினைந்து கார்கள் மட்டுமே நிற்கக்கூடிய தரிப்பிடமும் இருக்கும். ஓஸ்டண்டுரேய்க்கிற்குள் இருந்த சில பயணிகள் மட்டும் நின்றுகொண்டு கண்ணாடி ஜன்னலினூடே அந்தத் தரிப்பிடத்தைப் சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கே நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு பின்னாலிருந்து யாரோ ஒரு மனிதர் உரக்கக் கத்திக்கொண்டு இருப்பது கேட்டது. ஒரு கறுத்த  மொட்டைத் தலை இங்குமங்கும் நகர்ந்து கொண்டிருப்பது மட்டுமே எனக்குத்  தெரிந்தது. சொகுசுப் பேருந்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒருவேளை அங்கு நடக்கும் விந்தையும் அந்த மனிதரும் தெளிவாகத் தெரியக்கூடும். எனக்கு சரியாகத் தெரியவில்லை.

    அங்கே இரண்டு மனிதர்கள் சண்டைப் போட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்று நினைத்த வேளையில், கார் மறைவிலிருந்து வெளியே வந்து என் கண்களுக்குத் தென்பட்ட அந்த மனிதர் ஆக்ரோஷமாக கைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அவரது உடலின் அத்தனை அங்கங்களும் பேசிக்கொண்டிருந்தன என்று சொல்லுமளவிற்கு அவருடைய உடல்மொழி பயமுறுத்தக்கூடிய விதத்தில் இருந்தது. அருகிலிருந்த காரை காலால் எட்டி உதைத்தார். பாலத்தின் பக்கம் ஓடிச்சென்று அதன் சுவரைக் குத்தினார். வானத்தைப் பார்த்துக் கத்தினார். இது உறுமலா, ஓலமா, கதறலா அல்லது அனைத்தும் கலந்த ஒன்றா?

    திடீரென்று திரும்பியவர் சடாரென குனிந்து சாலையை குத்துசண்டையில் குத்துவது போல் அவரது இடது கை முஷ்டியால் குத்தினார். அப்படிக் குத்தும்போதும் அவர்போட்ட சத்தம் இருக்கிறதே! நான் மட்டும் அவ்வாறு கத்தியிருந்தால், ஒன்று என் தொண்டையிலிருந்து குருதி கிளம்பியிருக்கும் அல்லது நான் சற்றுமுன் தின்ற இட்லி வாந்தி வடிவம் பெற்றிருக்கும்.

    அவர் ஒவ்வொருமுறை கத்தும் போதும், குத்தும் போதும், குதிக்கும் போதும் எனக்கெதிரே இருந்த சொகுசுப் பேருந்து பயணிகளின் சிரிப்பை பார்த்திருக்கவேண்டும். ஏதோ ஒரு தெரியாத காரணத்திற்காக நின்று கொண்டிருக்கும் அந்த பேருந்துவாசிகளுக்கு கிட்டத்தட்ட அவர் ஒரு வித்தைக்காரராகவே தெரிந்திருக்க வேண்டும்.

    சில பயணிகள் இது எவற்றையுமே கண்டுகொண்டதாய் தெரியவில்லை. வேறு சிலர் சலனமின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள், என்னைப்போலவே.  எனக்கருகே பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த ஒரு கனவான் அந்த மனிதரைப் பார்த்தார். ஒரு மெல்லிய புன்னகையுடன் என்னைத் திரும்பிப் பார்த்தார், நான் அவரைப் பார்க்கும் போது, நெற்றியைத் தேய்த்துக்கொண்டார், பிறகு மேலே பார்த்தார். ஏனோ இதையே திரும்பத் திரும்ப செய்துகொண்டிருந்தார். மேலே உப்பரிகையிலிருந்து வேறு ஒரு கூட்டம் நடப்பதனைத்தையும்  சலசலப்புடன்  பார்த்துக்கொண்டிருந்தது.

    நடுத்தெருவில் எதற்காக இந்த மனிதர்  இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார், என்ன நடக்கிறது என்றெல்லாம் புரிந்துகொள்ள முடியாததாலோ என்னவோ எனக்கு அவர் மீது பரிதாபமே வரவில்லை. அதே சமயம் அதில் சிரிப்பதற்கும் எதுவும் இல்லை என்றும் தோன்றியது.

    யாரிடம் இப்படி அடித்தொண்டையிலிருந்து ஓலமிட்டு திட்டியபடி பேசிக்கொண்டிருக்கிறார்? பிரஞ்சு மொழி தான். ஆனால், எனக்கு என் காதருகே வந்து, சாத்வீகமாக பிரஞ்சு மொழியில் யாராவது ஏதாவது பேசினாலே அதில் பாதிகூட விளங்காது. இருபதடி தூரத்தில் நின்றுகொன்று இந்த வேகத்திலும், கோபத்திலும், கொந்தளிப்பிலும் கத்திக்கொண்டிருந்தால் எனக்கு என்ன புரியப்போகிறது, அது பிரஞ்சு மொழியில் எழுப்பப்படும் சத்தம் என்பதைத் தவிர.

    எதிர்முனையில் இருப்பது ஆணாக இருக்குமா? பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால், இதுபோன்று ஒரு மனிதர் கத்திக்கொண்டிருப்பதை யார் இவ்வளவு நேரம்  பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருக்கக்கூடும்? இவர் மீது அதீத அன்பு கொண்டவர்களுக்கு மட்டுமே இத்தனை பொறுமை சாத்தியம்.  ஒருவேளை, எதிர்முனையில் இருப்பவனும் இதே போல் கத்திக்கொண்டிருக்கிறானோ என்னவோ? அல்லது கத்திவிட்டு போகட்டும் என்று சாமர்த்தியமாக கைபேசியை  மேஜை மீது வைத்துவிட்டு வெளியே சென்று விட்டார்களா? இப்படி இருக்குமோ? இந்த மனிதர் நிச்சயம் screaming_manநடித்துக்கொண்டிருக்கிறார். இல்லை. அதற்கும் வாய்ப்பே இல்லை. அந்த மனிதரின் கத்தலில் ஒரு உண்மை தெரிகிறது.

    அந்த ஓலம் எனக்குப் பழக்கப்பட்டதுதான். அடிபட்ட தெருநாய்கள் வலியில் இப்படி ஓலமிடுவதைப் பலமுறை பார்த்திருக்கேன். மிகவும் பரிதாபமாக இருக்கும். இந்த மனிதரும் அப்படி ஏதோவொரு பொறுக்கமுடியாத வலியை நிச்சயம் அநுபவித்துக் கொண்டிருக்கவேண்டும். தலை வலிக்கும், கால் வலிக்கும்  மருந்திருக்கிறது.ஆனால் மனவலிக்கு? அதற்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஏனோ அந்த வலி இருப்பவர்கள் மருத்துவத்தை நாடவும் ஏற்கவும் மறுக்கிறார்கள். அப்படி அவர்களே ஏற்றுக்கொண்டாலும், சுற்றி இருப்பவர்கள் அவ்வளவு எளிதாக அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. இப்போது எனக்கு அந்த மனிதர் மீது பரிதாபம் பிறந்திருப்பதை உணரமுடிந்தது.

    இவருக்கென்ன காதல் தோல்வியா? மணமுறிவா? பண அழுத்தம் தந்த மன அழுத்தமா? ஒருவேளை வியாபாரத் தோல்வியா? எதிர்முனையிலிருப்பவன் வியாபாரக் கூட்டாளியாக இருப்பானோ? ஏமாற்றிவிட்டானா? அப்படி இருக்க வாய்ப்பு குறைவு. இங்கெல்லாம் ஒப்பந்தம் இல்லாமல் திருமணம் கூட செய்து கொள்ளமாட்டார்களே. மேலும் இவரைப் பார்த்தால் வியாபாரியாகவும் தெரியவில்லை.

    ஏனோ எனக்கு இது நிச்சயம் தோல்வி சார்ந்த வலியாக இருக்கமுடியாது என்று தோன்றுகிறது. துரோகம் சார்ந்த வலியாக இருக்கலாம். ஆம். அதுவாகத்தான் இருக்க வேண்டும். அந்தக் கதறல், உடல்மொழி அத்தனையிலும் துரோகத்தின் வலி வெளிப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அது எந்த வகை துரோகம் என்பது அவசியமில்லை. துரோகத்தில் என்ன வகை வேண்டிக்கிடக்கிறது. ஒருவேளை  எதிர்முனையில் இருப்பவர் தெரியாமல் துரோகமிழைத்துவிட்டாரோ? அதனால் தான் பொறுமையோடு இவர் கத்துவதைக் கேட்டுக்கொண்டு அழுதுகொண்டு இருக்கிறாரோ என்னவோ. ஆனால், துரோகத்தைக் கூட தெரியாமல் செய்ய முடியுமா?

    நான்கூட துரோகம் செய்திருக்கிறேன். நினைவறிந்து ஒரே முறை. அதுவும் ஒரு உற்ற நண்பருக்கு. சந்தர்ப்ப வசத்தால் செய்த துரோகம். ஆனால் அதற்கு பதிலாய் அத்தனையும் அனுபவித்தாகிவிட்டது. இதே போன்று ஒருமுறை எதிர்முனையில் நின்றுகொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் இதுபோலெல்லாம் கத்தவில்லை. நிதானமான மனிதர். இல்லை, அவரை மனிதர்கள் வகையில் சேர்க்கக்கூடாது. தெய்வம். துரோகத்துக்கு பிராயச்சித்தம் செய்யவும் வழி செய்து கொடுத்தவர். ஆனால், இங்கே இந்த முனையில் இப்படிப்பட்ட மனிதர் இருப்பதால், அங்கே அந்த முனையில் அப்படிப்பட்டவர் இருப்பதாகவெல்லாம் என்னால் அநுமானிக்க முடியவில்லை.

    ஓஸ்டண்டுரேய்க் கிளம்ப ஆயத்தமானது. பயணிகளின் முகத்தில் கேளிக்கை முடியப்போகும் சோகமும், அதேசமயம் அவரைக் கடப்பதற்குள் என்ன நடக்கும் என்கிற ஆர்வமும் தெரிந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அவர்களுக்கான உச்சக்கட்ட விருந்தாக அந்த மனிதர் கைபேசியை பாலத்தின் சுவர்மீது வேகமாக வீசி எறிந்தார். எறிந்த வேகத்தில் அது சுக்கு நூறாகப் போயிருக்கும். ஐபோனோ, சாம்சங்கோ என்னவென்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அது இனிமேல் நிச்சயம் பயன்பட வாய்ப்பேயில்லை.

    ஒரு நல்ல விஷயம். இப்படி வீசி எறிந்ததில் அவருடைய ஆத்திரத்தில் ஒரு மூன்று சதவீதம் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.

    எஞ்சியுள்ள ஆத்திரத்தை ஏந்திக்கொண்டு அருகே இருந்த காரில் ஏறி அமர்ந்தார். அடுத்த சில நொடிகளில் அந்தக் கார் க்ரீச்சென்ற சத்தத்தோடு திரும்பி, உள்வட்ட சாலையில் சீறிப் பாய்ந்து சென்றது.

    அதுவரை சலனமற்று இருந்த என் உள்ளமும் உடலும் அப்போது நடுங்க ஆரம்பித்தது.

     

    oOo

    Share
  • மீனாம்பா பாட்டி போயிட்டா…

    -ஒரு அரிசோனன்

    “மீனாம்பா பாட்டி காலம் ஆகிவிட்டது. அவ போய்ச் சேந்துட்டா. நீ ஒரு முழுக்குப் போட்டுடு.” என்ற என் அம்மாவின் கார்டைப் பார்த்ததும் என் கண்கள் பனித்தன. மேலே எழுதிய எழுத்துக்கள் தெரியாமல் மறைந்தன. மீனாம்பா பாட்டிதான் எவ்வளவு அதிர்ஷ்டம் கெட்டவள்! உறவுக்குச் செய்து செய்தே ஓய்ந்து உருக்குலைந்து போனவள் அவள்! என் தொண்டை அடைத்தது. என் நினைவு பின்னோக்கிச் சென்றது…

    எனக்கு நினைவு தெரிந்து பார்த்ததில் இருந்து, கடைசித் தடவை பார்த்துவிட்டு வந்ததுவரை மீனாம்பா பாட்டி மாறவே இல்லை. அதே மழித்த மொட்டைத் தலை, உடம்பைச் சுற்றிய அழுக்கேறிய, ஆனால், தண்ணீரில் நனைத்துத் துவைத்துக் கட்டிய பழுப்பேறிய வெள்ளைப் புடவை. பறக்கப் பறக்கப் பார்க்கும் பார்வை. நடக்கும்போது இங்குமங்குமாக உதறும் கைகள். இருபது ஆண்டுகளாக மாறாத வடிவம்…

    “கண்ணா, இதுதான் என் அக்கா. உன் பெரியபாட்டி. நமஸ்காரம் பண்ணிக்கோ.” என்று என் தாய்வழிப்பாட்டி ஆறு வயதில் மீனாம்பா பாட்டியை அறிமுகப் படுத்தியது நன்றாக நினைவில் இருக்கிறது. அவர்களை வணங்கி எழுந்ததும் என் கண்ணில் பட்டது அவர்களுடைய மழித்த தலைதான்.

    meenapatti1முதன்முதலாக ஒரு அந்தணக் கைம்பெண்ணைப் பார்க்கிறேன் நான். அவர்கள் கைம்பெண் என்று அறியும் அறிவு கூட எனக்கு இல்லை. எனக்குள் தோன்றியது இதுதான். ஏன் இவர்கள் மொட்டை அடித்து இருக்கிறார்கள்?

    “பெரியபாட்டி, நீ எந்த கோவில்லே மொட்டை போட்டே? என்ன வேண்டுதல்?” என்று கேட்டதும், என் பாட்டி, “பெரியவாளை இப்படியெல்லாம் கேட்கக்கூடாது!” என்று கண்டித்ததும் நினைவுக்கு வருகிறது.

    “ஒரு அல்பாயுசுல போன பாவிக்காகத்தான்..” என்று மீனாம்பா பாட்டி அலுத்துக்கொண்டதும் என் காதில் ஒலிக்கிறது.

    “அல்பாயுசுல போன பாவி யாரு?” என்று நான் குழந்தைத்தனமாகக் கேட்டததற்கு, “என் ஆம்படையான் பாவிதான். நான் பெரியவள் ஆகறதுக்குள்ளையே குளத்துலே விழுந்து போய்ச் சேந்துட்டான். என் மஞ்சள் குங்குமம், தலை மயிர் எல்லாத்தையும் எடுத்துண்டு, மொட்டச்சியா விட்டுட்டுப் போயிட்டான்.” என்று மீனாம்பா பாட்டி வரட்டுச் சிரிப்புடன் கூறியதும், என் பாட்டி, “அக்கா. ஒரு சின்னக் குழந்தை கிட்ட என்னத்தைதான் சொல்றதுன்னு இல்லையா?” என்று கடிந்துகொண்டதும் கேட்கிறது.

    அப்பொழுது அதற்குப் பொருள் எனக்குப் புரியவில்லை. புரியும் வயது வந்தவுடன் நான் திடுக்கிட்டுப் போனேன். அறியா வயதில் திருமணம். ஒரே ஆண்டில் குளத்தில் நீந்திக்குளிக்கச் சென்ற கணவன் மூழ்கி இறந்துபோனான். பருவம் வந்ததும், சுமங்கலிகளை அழைத்து, மஞ்சள் நீராட்டி, பட்டுப் புத்தாடை உடுத்தச் செய்து சீராட்டவில்லை. மகிழ்ச்சியாகச் சிரித்து, பாட்டுப் பாடி, நல்வாழ்த்துக்கூறி, வாழ்த்திப் புகழவில்லை.

    மாறாக, நாவிதரை வீட்டுக்கு அழைத்து, தலைமயிரை மழிக்கச் செய்து, அமங்கலிகளைக் கொண்டு, வெள்ளை ஆடை உடுத்திவிட்டு, ஓவென்று அழுதார்கள். “பாவி மகளே, இப்படி ஆய் விட்டியே! இனி யாராத்தில் இடிசொறு திங்கப்போறியோ!” என்று சுமங்கலியான அவளது அம்மா கதறினார்களாம்.

    தன் மகளை விதவைக்கோலத்தில் பார்த்து நெஞ்சு உடைந்த என் பாட்டியின் அப்பா ஒரே ஆண்டில் போய்ச் சேர்ந்தாராம். தாயும் மகளும் ஒரே மாதிரி மழித்த தலையுடனும், வெள்ளை உடையுடனும் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பார்களாம்.

    கைம்பெண்களான தாயும், மகளும், என் பாட்டியின் அண்ணா வீட்டில் காலத்தைக் கழிப்பார்களாம்.

    எந்த உறவினர் வீட்டில் நல்ல நாள்களில் என்ன வேலை என்றாலும், தாயும் மகளும் சேர்ந்து செல்வார்களாம். வேலையைச் செய்துவிட்டு, யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருப்பார்களாம்.

    என் தாத்தா வாங்கிய ஒரு வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு வேலை செய்வதற்காக வந்தபோதுதான் மீனாம்பா பாட்டியை முதன்முதலாகப் பார்த்தேன்.

    மங்குமங்கென்று வேலை பார்த்த மீனாம்பா பாட்டியிடம் ஒரு கெட்ட குணம்meenapatti2 உண்டு. மடி விழுப்பு ரொம்பப் பார்ப்பாள். என் பாட்டி, பிரம்மச்சாரிக்கு விழுப்புக் கிடையாது என்று எப்போதோ சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே மீனாம்பா பாட்டியைத் தொடுவேன்.

    “பழிகாரா, ஏண்டா விழுப்போட என்மேல விழறே! என் மடி போச்சேடா!” என்று கத்துவாள். அதுகூட எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

    “பெரியபாட்டி! உன் மடி உன்கிட்டதான் இருக்கு. அது எங்கேயும் போகலை.” என்று சீண்டுவேன்.

    என்னை அடிக்கவென்று ஒரு சின்னக் குச்சியை வைத்திருப்பாள். அதை எடுத்து ஒளித்து வைத்து விடுவேன். குச்சியைத் தேடுவாள்.

    “என்ன பெரியபாட்டி தேடறே?” என்று கேட்டால், “முதுகைச் சொறிஞ்சுக்க ஒரு குச்சி வச்சிருந்தேன். அதக் காணம். “ என்று இழுப்பாள்.

    “இதுதானா அது?” என்று ஒன்றும் தெரியாதவன் போல அந்தக் குச்சியை எடுத்துக் காட்டுவேன்.

    “ஆமாம். கொடு.” என்பாள்.

    “வெவ்வெவ்வே! என்னை அடிக்கத்தானே வச்சிருக்கே! தரமாட்டேன். வேணும்னா உன் கையாலே அடி.” என்று கிண்டல் செய்வேன் – மடி, விழுப்பு பார்க்கும் மீனாம்பா பாட்டி என்மேல் கை வைக்கமாட்டாள் என்ற தைரியம்.

    “அநியாய சாமர்த்தியம்டா நோக்கு. என் ராஜாவாச்சே! நெஜமாவே முதுகை அரிக்கறதுடா. கொடுத்துடுடா கண்ணா!” என்று தாஜா செய்வாள்.

    “நான் வேணும்னா சொறிஞ்சு விடறேன். பாட்டிக்கும் நான்தான் சொறிஞ்சு விடுவேன்.” என்று மிஞ்சுவேன்.

    “பரவாயில்லே. நான் ஸ்நானம் பண்ணத்தான் போறேன். சொறிஞ்சுவிடு.” என்று முதுகைக் காட்டுவாள்.

    “பெரியபாட்டி, ஏன் நீ ரவிக்கையே போடறதில்லை?” என்று என் சந்தேகத்தை மெல்ல அவளிடம் கேட்டேன்.

    “சின்ன வயசிலேயே என் தலையைச் செரைச்சாச்சு. ரவிக்கை ஒண்ணுதான் பாக்கி. இனிமே என் அழகிலே மயங்கி, எந்த ராஜகுமாரன் வரப்போறான்!” என்று வரட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்ப்பாள்.

    “பெரியபாட்டி, நீ சின்ன வயசிலே எப்படி இருப்பே? அழகா இருப்பியா? எல்லோர் போட்டோவும் இருக்கே, உன் போட்டோ மட்டும் எங்கேயும் காணோமே?” என்று கேட்டேன்.

    “ஆமா, ஆமா, இனிமே என்னைப் போட்டோ எடுத்து, பெண்பாக்கக் கொடுத்தனுப்பணுமா? மொட்டச்சிக்கு அழகு ஒண்ணுதான் கொறையாக்கும்?” என்று அலுத்துக் கொள்வாள். எனக்கு மீனாம்பா பாட்டி ஏன் எப்படிப் பேசுகிறாள் என்றே புரியாது.

    என் பாட்டியிடம் கேட்டால், “உனக்கு வாய் ரொம்பப் பெருகிப் போச்சு. பெரியவாகிட்ட என்ன பேசறதுன்னே தெரியலை.” என்று என்னையே திட்டுவாள்.

    நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து ஊரில் இருந்த என் மாமாத்தாத்தா, அதாவது மீனாம்பா பாட்டியின் தம்பியின் வீட்டுக்கு ஒரு தடவை விசெஷத்திற்காகச் சென்றிருந்தேன்.

    பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றபோது என் மாமாத்தாத்தா இரைந்துகொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

    “இப்படியா ஈரம் சொட்டச் சொட்டத் துணியை உணத்தறது? நீ ஒரு தரித்திரம் வந்து சேர்ந்தது போறாதா? இன்னும் வேற வரணுமா?” என்று மீனாம்பா பாட்டியை வைது கொண்டிருந்தார்.

    “வயசாச்சுடா. கையிலே தெம்பு இல்லே. நன்னா இறுக்கிப் பிழியா முடியலேடா. எனக்கு என்ன பிள்ளையா, குட்டியா? இல்லே நாட்டுப்பொண்ணுதான் இருக்காளா, கொஞ்சம் பிழிஞ்சு உணத்துடின்னு சொல்லறதுக்கு. கட்டை வேகறவரைக்கும் நானேதானே செய்துக்கணும்.” மீனாம்பா பாட்டியின் குரல் தழுதழுப்பது எனக்குக் கேட்டது. அது என் மனதையே அறுத்தது.

    “வாடா கண்ணா! எப்படா வந்தே? ஆத்துலே அம்மா, அப்பா, பாட்டி தாத்தா எல்லோரும் சௌக்யமா?” என்று என் மாமாத்தாத்தா கேட்டதற்கு பதிலே சொல்லாமல், கூடத்தில் ஈரம் சொட்டச் சொட்டத் தொங்கிக் கொண்டிருந்த மீனாம்பா பாட்டியின் வெள்ளைப் புடவையை எடுத்து, புழக்கடையில் நன்றாகப் பிழிந்து விட்டு கொடியில் உலர்த்தினேன். என் பையைத் திறந்து, என் துண்டை எடுத்து, கீழே சிந்தியிருந்த தண்ணீரைத் துடைத்தேன்.

    “இப்படி அதிகப்பிரங்கம் பண்ணி, அவ மனசை என் கெடுக்கறே! பாப்பா (என் அம்மா) உனக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து, கெடுத்துத் தொலைச்சுட்டா!” என்று அலுத்துக் கொண்டார், என் மாமாத்தாத்தா. முரடன் என்று எனக்குப் பெயர் இருந்ததால் மேலே ஒன்றும் பேசாமல் விட்டுவிட்டார்.

    யாரோ கேவும் குரல் கேட்டது. சென்று பார்த்தால் மூலையில் அமர்ந்துகொண்டு வாயைப் பொத்திக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள் மீனாம்பா பாட்டி.

    என்னைக்கண்டதும் புடவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழ முயற்சித்தாள்.

    “வேண்டாம் பெரியபாட்டி. மாமாத்தாத்தாவுக்கு ஏதோ கோபம். அதை உன்மேல காட்டிட்டா. நீ ஏன் அதுக்கு அழறே?” என்று சமாதானம் சொன்னேன்.

    “இல்லேடா கண்ணா. சாமி என் தம்பிதானே. அவன் திட்டினா எனக்கு காச்சா தொங்கப்போறது? அது இல்லேடா?” என்று விம்மினாள்.

    “பின்னே!”

    “எனக்குப் பிள்ளை இல்லையே. அவன் இருந்திருந்தா இப்படி இடிசோறு திங்கவேண்டி இருக்காதேன்னு நிறைய தடவை நெனப்பேன். சாமி கத்தினபோது நீ ஒண்ணுமே பேசாம, என் பொடவையப் பிழிஞ்சு ஒணத்தினியே, எனக்கு மனசு நெறஞ்சு போச்சுடா. அதுதான் தன்னையும் அறியாம அழுகை வந்துடுத்து. பிள்ளை இல்லேன்னு இனி மனசு வருத்தப்பட மாட்டேண்டா. பகவானாப் பாத்து நான் பிள்ளையா குட்டியான்னபோது, உன்னை அனுப்பிவச்சு என் மனசுல இருந்த அந்தக் கொறையை நீக்கினானே, அதுவே போறும். நீ தீர்க்காயுசா இருப்பே.” கையை என் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தாள்.

    அன்று மாலை நான் நான்கு பார் சோப்புகளைத் துண்டம் செய்து, அவளிடம் கொடுத்தபோது, “ஏன்?” என்பதுபோல என்னைப் பார்த்தாள்.

    “பெரியபாட்டி. உன் புடவைலே அழுக்கு ஒட்டிண்டு இல்லே. அழுக்குலேதான் உன் புடவை ஒட்டிண்டு இருக்கு.   அதுக்குத்தான் இந்த சோப்புக் கட்டிங்க. வெறுன்ன தண்ணீல நனைச்சு நனைச்சு ஒணத்தவேண்டாம். சோப்புப் போட்டே துவை.”

    மீனாம்பா பாட்டி ஒன்றுமே பேசவில்லை. நன்றியுடன் சோப்புக் கட்டிகளை வாங்கி வைத்துக்கொண்டாள்.

    நானும் வேறூரில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. இதற்குள் மீனாம்பா பாட்டியை பத்துப் பன்னிரண்டு தடவை பார்த்திருப்பேன். சில சமயம் சோப்பு வாங்கித்தா, தலைவலித் தைலம் வாங்கித்தா என்று கேட்பாள். வாங்கிக் கொடுப்பேன்.

    ஒருதடவை விடுமுறையில் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

    “மாமா குடும்பத்துடன் மெட்ராஸ் போய்ட்டா!” என்றாள் என் அம்மா.

    “என்ன விஷயமாம்?”

    “எவ்வளவு நாள்தான் உழைச்சுக்கொட்ட முடியும்? வயசாயிடுத்து இல்லையா? மெட்ராஸ்ல இருக்கற மூத்த பிள்ளை கூப்பிட்டான். அதுதான் போயிட்டா!”

    “பெரிய பாட்டியையும் மெட்ராசுக்குக் கூட்டிண்டு போயிட்டாரா?”

    “நன்னாயிருக்கே, நீ சொல்றது! கண்ணும் தெரியலை, கடையும் தெரியலை. மொசைக் தரைன்னு தெரியாம ஏதோ கொட்டி இருக்குன்னு பொறுக்க ஆரம்பிச்சுடுவா. அவ ஆசாரம் மெட்ராசுக்கு லாயக்குப் படுமா? அதுதான்…” இழுத்தாள் அம்மா.

    புருவங்களை உயர்த்தினேன்.

    “என்னடா அப்படிப் பாக்கறே?”

    “மீனாம்பா பாட்டி எங்கேதான் இருக்கா?”

    “அதுதான் வயசானவாளுக்கு, பிள்ளை குட்டி இல்லாதவாளுக்கு மாசம் முப்பது ரூபா கவர்மின்ட்டுலே கொடுக்கறாளாமே, அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டுத்தான் மாமா போயிருக்கா. பக்கத்துக் கிராமத்திலே, உன் சின்னப்பாட்டி இருக்காளே, அங்கேதான் இருக்கா.”

    “சின்னப்பாட்டியா மீனாம்பா பாட்டியை வச்சுண்டு இருக்கா?”

    “இல்லேடா. மீனாம்பா பாட்டி தனியாத்தான் இருக்கா.”

    “எப்படிம்மா இது? உடம்புல தெம்பு இருக்கறவரைக்கும் உங்க எல்லோருக்கும்தானே உழைச்சுக்கொட்டினா! இப்ப ஒங்க யாராலையும் அவளைப் பார்த்துக்க முடியலையா?” பொருமினேன் நான்.

    “உனக்கு ஒண்ணும் தெரியாது. தெம்பு இருக்கவரைக்கும் மாமா குடும்பத்துக்குத்தான் உழைச்சா. அவரே அவளை விட்டுட்டுப் போயிட்டா. நமக்கு உழைச்சானு சொல்றியே. நாம சும்மாவா விட்டோம்? அப்பப்ப ஏதாவது வாங்கித்தானே கொடுத்தோம்!”

    “கூலி கொடுத்தோம்னு சொல்றியாம்மா?”

    “ஒனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தியாப் போச்சு. இனிமே ஒன்னோட என்னால பேசமுடியாது.” என்று போய்விட்டாள் அம்மா.

    ஏதோ ஒன்று உந்தவே, நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு மீனாம்பா பாட்டி இருக்கும் கிராமத்திற்குச் சென்றேன். என் வயதுள்ள, என் ஒன்றுவிட்ட மாமா ராஜுதான் எட்டடிக் குச்சான ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்றான்.

    “பெரிம்மா, பெரிம்மா!” என்று சொல்லிக்கொண்டே ஆடும் கதவைத் திறந்தான்.

    “ஆரு வந்திருக்கா?” என்று மெல்லிய குரலில் கேட்டவாறே, தரையில், ஒரு பலகையைத் தலைக்கு வைத்திருந்த மீனாம்பா பாட்டி கையை ஊன்றிக்கொண்டு எழுந்திருந்தாள்.

    “நான்தான் பெரியபாட்டி, கண்ணன் வந்திருக்கேன்..” என்று உரத்த குரலில் சொன்னேன்.

    கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப் பார்த்த மீனாம்பா பாட்டி இனம் கண்டுகொண்டாள்.

    “வாடாப்பா, கண்ணா, வா.” என்று அன்புடன் சொன்ன அவள் பொங்கிப்பொங்கி அழுதாள்.

    “பாத்தியாடா என் நெலமைய? அநாதப் பொணமா இருக்கேண்டா. உடம்புலே தெம்பு இருந்தபோது என் ஒழைப்பு எல்லோருக்கும் தேவையா இருந்துது. மீனா, வாடீம்மா, நீ இல்லாம ஆத்திலே ஒரு விசேஷம் நடக்க முடியுமா அப்படீம்பா. இப்போ – நான்தான் சக்கையாப் போயிட்டேனே. அதுதான் தூக்கிப் போட்டுட்டா.”

    நான் என்ன சொல்லி அவளைச் சமாதானப் படுத்துவேன்?

    “பெரியபாட்டி, நீ கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. நான் படிச்சு முடிச்சதும் உடனே வேலையைப் பார்த்துப்பேன். நான் உன்னைக் கொண்டு என்னோட வச்சுக்கறேன். நான் சீக்கிரமே கல்யாணம் செஞ்சுக்கறேன். என் பொண்டாட்டி உன்னை நன்னாப் பார்த்துப்பா.” உணர்ச்சி வேகத்தில் என்னிடமிருந்து வார்த்தைகள் பெருக்கெடுத்தன.

    “இது போதும்டா, கண்ணா. நீ நல்ல குணவதியான பொண்ணைக் கல்யாணம் செஞ்சுண்டு நூறு வருஷம் நன்னா இருப்பே. ஒன் பொண்டாட்டி தொங்கத் தொங்கத் தாலியைக் கட்டிண்டு நூறு வருஷம் சுமங்கலியா இருப்பா. ஒன் புள்ளை, குட்டிகளெல்லாம் ஒன்னை நன்னாப் பாத்துக்குவா.

    “எம் மனக்கொறையைத் தீர்த்துட்டேடா, கண்ணா. இந்தக் கட்டை கண்ணை மூடி, காட்டிலே என்னை எரிக்கறச்சே, என் நெஞ்சு வேகுமோ, வேகாதோன்னு நெனப்பேன். இனிமே அப்படி நெனைக்கமாட்டேன்டா. எம் மனசு நெறஞ்சு போச்சுடா. எப்ப பகவன் கூப்படறானோ அப்பா நிம்மதியா போய்ச் சேருவேன். என்னா, என் நெஞ்சு வெந்துடும்டா.” என்றவள் தயங்கி, என்னிடம் கேட்டாள்.

    “கண்ணா, என்னால பிழிஞ்சு ஒணத்தவே முடியலடா. இப்ப நார்ப்பட்டுன்னு ஒண்ணு செய்யறாளாமேடா. அதைப் பிழியவே வேண்டாமாண்டா. வெறுன்ன நனைச்சுப்போட்டாலே ஒணந்து போகுமாமே. எனக்கு ரெண்டு நார்ப்பட்டுப் பொடவை வாங்கித் தறியாடா?”

    “கட்டாயம், பெரிய பாட்டி. கட்டாயம். நான் ஊருக்குப் போயி வாங்கி அனுப்பறேன்.”

    என் கையில் இருந்த ஐம்பது ரூபாயை அவளிடம் கொடுத்து, என் மாமன் ராஜுவிடம் அவளுக்கு உதவி செய்யுமாறு சொல்லிவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

    முதல் வேலையாக இரண்டு வெள்ளை நார்ப்பட்டுப் புடவைகளை வாங்கி என் அம்மாவிடம் கொடுத்து, மீனாம்பா பாட்டியிடம் சேர்த்துவிடச் சொல்லிவிட்டுக் கல்லூரி செல்ல ரயில் ஏறினேன்.

    அதுதான் நான் மீனாம்பா பாட்டியைக் கடைசியாகப் பார்த்தது. இரண்டு மாதங்கள்கூட ஆகி இருக்காது.

    கண்கள் உலர்ந்து, என் அம்மா மேலே எழுதியிருந்த வரிகள் தெளிவாகின.

    “நீ கொடுத்துவிட்டுப் போன நார்ப்பட்டுப் புடவைகளை சார்த்தித்தான், மீனாம்பா பாட்டியைத் தகனம் செய்தார்கள்.”

    Share
  • அத்துமீறல்

    மாதவன் இளங்கோ

    thalys

     

    இன்னும் சற்று முன்னதாகவே கிளம்பியிருக்கலாம்.

    என்ன செய்வது? சரவண பவனில் நான் கேட்டிருந்த கொத்துப் பராட்டாவையும், ரோஸ்மில்கையும் கொண்டுவருவதற்கு, கொஞ்சமல்ல நிறையவே தாமதம் செய்துவிட்டார்கள். நானோ அதை சாப்பிட்டுவிட்டுத்தான் இந்த பாரீஸ் நகரத்தை விட்டுச் செல்வது என்கிற உறுதியோடு இருந்தேன். ஆசை யாரை விட்டது? பெல்கியத்தில் ஒரு சரவண பவன் இருந்தால் நான் இந்த அற்ப கொத்துப் பராட்டாவிற்கு ஆசைப்பட்டிருப்பேனா? இருந்தாலும் தாலிஸ் இரயில் இன்னும் அரைமணியில் கிளம்பவிருந்த நிலையில், என் தாயாருக்கு வேகமாக நடப்பதில் பிரச்சினை இருந்த நிலையில், உருண்டையான மனைவியையும், ஐந்து வயது மகனையும், மூன்று பெரிய பயணப்பெட்டிகளை வைத்திருந்த நிலையில், இந்தக் கொத்துப் பரோட்டா ஆசை தேவையற்ற ஒன்று!

    இன்னும் இருபது நிமிடங்கள்தான். தாலிஸ் கிளம்பிவிடும். அவர்களை இரண்டு பெட்டிகள் மட்டும் எடுத்துக்கொண்டு நடந்து போகச் சொல்லிவிட்டேன்.

    இறுதியில் கொத்துப் பரோட்டா வந்து சேர்ந்தது. அதிவிரைவாக ஒரு வாய் பரோட்டா, ஒரு வாய் ரோஸ்மில்கென்று மருந்து விழுங்குவது போல் விழுங்கிவிட்டு, பெட்டியை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன்.

    இன்னும் ஐந்தே நிமிடங்கள்…

    பாரீஸ் வடக்கு இரயில் நிலையம் சரவண பவனிலிருந்து அத்தனை தூரமொன்றுமில்லை. நடக்கும் தூரமே. இருந்தாலும், தாலிஸ் ஆயிற்றே! அதுதான் இந்த ஓட்டம். எல்லோரும் என்னை ஒருமாதிரி பார்ப்பது தெரிந்தது. இவர்களோடு இது ஒரு பெருந்தொல்லை! இந்த ஊர்க்காரர்கள் ஓடினால், “பாவம், ஏதோ அவசரம் போலிருக்கு!” என்று பரிதாபத்துடன் பார்ப்பார்கள் அல்லது கண்டுகொள்ளக் கூட மாட்டார்கள். ஆனால் நான் அவசரத்துக்கு ஓடினால், “இந்தியன் ஓடுகிறான்”, “அநாகரிகமானவன்!” என்பது போன்ற பார்வையை வீசுவார்கள். அவர்கள் நினைப்பது எனக்கு எப்படித் தெரியுமா? அந்த முகத்தைப் பார்த்தாலே போதும். ஏதோ ஐந்து நாட்களுக்கு முன்பே அழுகிப்போன மாம்பழத்தை தெரியாமல் தொட்டுவிட்டது போன்று முகத்தை சுளிப்பார்கள். சிலர் ஏளனமாகச் சிரிக்கவும் செய்வார்கள்.

    பிரசல்சு நகரம் செல்லும் தாலிஸ் இரயில் எட்டாவது பிளாட்பாரத்திலிருந்து இன்னும் சில நிமிடங்களில் கிளம்பும் என்று பிரஞ்சிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி வந்த அறிவிப்பைக் கேட்டுக்கொண்டே எட்டாவது பிளாட்பாரத்திற்கு ஓடினேன்.

    தொலைவில் முதல் வகுப்புப் பெட்டிக்கு முன்பு அதிகாரியுடன் என் குடும்பம் நின்று கொண்டிருந்தது. முதல் வகுப்பு என்று கூறினேன். நான் வாங்கும் சம்பளத்திற்கு அத்தனை பேரையும் முதல் வகுப்புப் பெட்டியில் எல்லாம் அழைத்துப் போகவே முடியாது. முடிந்தாலும், தேவையற்ற ஒன்று. ஏதோ எங்கள் அதிர்ஷ்டம், நான் முன்பதிவு செய்த தினத்தன்று இரண்டாம் வகுப்பு விலைக்கே முதல் வகுப்பு பயணச்சீட்டு கிடைத்தது. அதுவும் தாலிசில்! அது என்ன தாலிஸ்? மணிக்கு முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவிரைவு இரயில் வண்டி அது. நான் வசிக்கும் பிரசல்சு நகரத்திற்கு ஒரு மணிநேரத்தில் சென்று விடலாம்.

    அந்த இரயில் வண்டியைப் பிடிக்காமல் விட்டால் என்னவாகிவிடப் போகிறது? என் மனைவிக்கு தாலிசில் முதன்முதலாக முதல்வகுப்பில் செல்லும் பாக்கியம் கிட்டாமல் போகும். வரும்போது இரண்டாம் வகுப்பே விமானத்தை விடப் பிரமாதமாக இருக்கிறது என்று கூறிய என் தாயாருக்கு அதைவிடப் பிரமாதம் என்ன என்பது தெரியாமல் போகும். எனக்கு? ஒன்றுமில்லை. நான் நேராக நிலா சலூனிற்குச் சென்று மொட்டை அடித்துக் கொள்ளலாம்.

    பாரீசில் நிலா சலூனா? அந்நகரின் வடக்கு இரயில் நிலையம் அருகே உள்ள லா சாப்பல் பகுதி ஒரு குட்டித் தமிழ் தேசம். முனியாண்டி விலாசு, மாணிக்க விநாகர் ஆலயம் உட்பட பல தமிழ் விஷயங்களை, விசேஷங்களை அங்கு காணலாம். எனக்கு தமிழகத்தின் நினைவு அழுத்தும் போதெல்லாம் ஒரு வார இறுதியில் கிளம்பி பாரீஸ் நகரம் சென்று விடுவேன். நம் மக்களைப் பார்க்கலாம். நிறைய தமிழ் கேட்கலாம். ஒரு மாதத்திற்குத் தேவையானவற்றை கணபதி அங்காடியில் வாங்கி வந்து விடலாம். முக்கியமாக முருங்கைக்காய்!

    இந்த முறை கணபதி அங்காடி மூடியிருந்தது. வி.எஸ்&கோ ட்ரேடர்ஸ் பேரங்காடியில் வாங்கிய முருங்கைக்காய் நிரம்பிய பையை முதுகில் மாட்டிக்கொண்டு, பயணப்பெட்டியை இழுத்துக்கொண்டு முதல் வகுப்பு பெட்டியை சென்றடைந்தேன். ஏற்கனவே எங்கள் அனைவருடைய பயணச்சீட்டுகளையும் அதிகாரியிடம் கொடுத்திருந்தாள் என் மனைவி. விதிப்படி 2 நிமிடங்களுக்கு முன்னதாகவே பிளாட்பாரத்தில் காலடி எடுத்து வைத்து விட்டதால், அவர் எதுவும் சொல்லவில்லை. புன்னகைக்கவும் இல்லை.சுளித்துக்கொண்டு பார்ப்பதற்கு இந்தப் பார்வை பரவாயில்லை என்று தோன்றியது. எனக்குப் பிறகு மூன்று ஐரோப்பியர்கள் ஏறினார்கள். என்னிடம் காண்பிக்காமல் சேமிக்கப்பட்ட புன்னகை அவர்களுக்கு பரிமாறப்பட்டதைக் கண்டேன். இதெல்லாம் பழகிவிட்டது.

    பயணப்பெட்டிகளை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது. முருங்கைக்காய் பையையும் என் மகனுக்கு தேவையான தின்பண்டங்கள் நிறைந்த பையையும் மட்டும் எடுத்துக்கொண்டேன். அதில் தான் அவனுக்குத் தேவையான தற்காப்பு வாந்தி உறையும் இருந்தது. இல்லையென்றால் தாலிஸ் நாறிவிடும் அபாயமிருந்தது. அந்த விசேஷ கைப்பையிலுள்ள பல சமாச்சாரங்கள் எதற்கு என்பது என் மனைவி மட்டுமே அறிந்த விஷயம். சில தாய்மார்கள் அவற்றை அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பிருக்கிறது.

    அந்தப் பெரிய மூன்று பயணப்பெட்டிகளை அவற்றிக்கான இடத்தில் அடுக்கி வைக்க அந்த அழகான பணிஞை உதவி செய்தாள். ‘மெர்சி’ என்று பிரெஞ்சு மொழியில் நன்றி தெரிவித்தவுடன். ‘நோ ப்ராப்ளம்’ என்று ஆங்கிலத்தில் அழகிய புன்னைகையுடன் பதிலளித்தாள். அது அவள் வேலை. அவள் டச்சுக்காரியாகவோ அல்லது பிளம்மியப் பெண்ணாகவோ இருக்கவேண்டும். என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். உள்ளே இருந்து என் மனைவி நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறாள். ஆனால், அவளுக்கு சிரிக்கும் போது என் மகனைப் போலவே கன்னத்தில் அழகாக குழி விழுந்தது எனக்குப் பிடித்திருந்தது.

    உள்ளே நுழைந்து என்னுடைய இருக்கையை அடைவதற்குள் தாலிஸ் கிளம்ப ஆரம்பித்தது. பெரும்பாலும் அத்தனை இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இரண்டாம் வகுப்புப் பெட்டியை விட இங்கு இருக்கைகள் அகலமானவை, எண்ணிக்கையும் குறைவு தான்.

    இருக்கையில் ஏறிக் குதித்துக் கொண்டிருந்த என் மகன், ‘கம்பர்ட் 1 சூப்பரா இருக்குப்பா!’ என்றான். ஆமாம். முதல்வகுப்புப் பெட்டியை தாலிசில் அப்படித்தான் அழைத்தார்கள். என் தாயும் அவள் தரப்புக்கு, ‘என்னடாது ப்ளைட்டவிட அசத்தரது! அறுபது வயசில நேக்கடிசிருக்கற யோகத்தப் பாரு!” என்று வரும்போது இரண்டாம் வகுப்புக்கு கூறியதையே மீண்டும் கூறினாள், சற்றே கூடுதலான பிரமிப்புடன்.

    “உக்காரு பாட்டி! அப்பா உக்காரு பா! ஜாலியா இருக்கும்” என்று கத்தினான் என் மகன். திடீரென ஏதோ தோன்றியவனாய் சுற்றி நோட்டம் விட்டேன். கிட்டத்தட்ட அத்தனைக் கனவான்களும், சீமாட்டிகளும் எங்களை சிறுத்த முகங்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் என் மகனுக்குப் பின்னால் இருந்த இருக்கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அந்த அம்மணி மூக்குக் கண்ணாடியினூடே பார்த்த பார்வை அழுகிய மாம்பழத்தை மீண்டும் நினைவுபடுத்தியது.

    பாரீசுக்கு வரும்போது நால்வரும் இருவேறு வரிசைகளில் அமர்ந்திருந்தோம். நல்லவேளை. கம்போர்ட் 1-ல் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தோம். ஆனால், ஒரே ஒரு பிரச்சினை. இரண்டு பேர் வண்டி செல்லும் திசைக்கு எதிராக அமர்ந்து சென்றாக வேண்டும். என் மனைவிக்கு இது அறவே பிடிக்காது. அதுவும் தாலிசில் – முடியவே முடியாது. அதனால் எனக்குப் பக்கத்தில் என் தாயார். எனக்கு எதிரே ஜன்னலோர இருக்கையில் என் மகன், அவனருகே என் மனைவி. எங்களுக்கு இடையே பெரிய தொரு மேஜை. கம்போர்ட் 1-ல் உணவு இலவசமாகத் தருவார்களாம். என்ன பெரியதாய் இருக்கப் போகிறது அந்த உணவில். பரோட்டாவிற்கும் குருமாவிற்கும் ஈடாகப்போவதில்லை.

    எங்களுக்கு எதிர்புற ஜன்னலருகே இரண்டு எதிரெதிர் இருக்கைகளில் ஒரு கனவானும் சீமாட்டியும் அமர்ந்திருந்தார்கள். இளம் வயதுதான். அநேகமாக கணவன் மனைவியாக இருக்கவேண்டும். நண்பர்களாகக் கூட இருக்கலாம். அந்தப் பெண் அவனுடைய கைவிரல்கள் ஒவ்வொன்றாக தடவி விட்டுக்கொண்டே டச்சு மொழியில் அவனிடம் என் மகன் காலைத் தூக்கி மேசைமீது வைத்துக்கொண்டிருப்பதைப் பற்றி புகார் சொல்லிக்கொண்டிருந்தாள். அதைப் புரிந்துகொண்ட என் மனைவி என் மகனை அதட்டி கால்களைக் கீழே போடச் சொன்னாள்.

    சிறிது நேரத்தில் எப்போதும் போல் என் மகன், ‘மெர்குரி, வீனஸ்…’ என்று கோள்களின் பாட்டை உரக்கப் பாட ஆரம்பித்துவிட்டான். நான் மெதுவாக அந்தப் பெண்ணை பார்த்தேன். அழுகிய மாம்பழம்! அதற்கு முன்பே அதை கவனித்துவிட்ட என் மனைவி, ‘அமைதியாக இருக்கப் போகிறாயா? இல்லையா?’ என்று அவனை அதட்டினாள்.

    நான் என் மகனுடன் மெதுவாகப் பேசினேன்.

    “காலை மேசையின் மேல் தூக்கி வைத்து அசுத்தப்படுத்தக் கூடாது. நாமும், அடுத்து இங்கு வந்து அமர்பவர்களும் சாப்பிடும் இடமலல்லவா? மேலும் அது அநாகரிகமான செயலும் கூட! பொது இடங்களில் நாம் சத்தம் போட்டு பேசவோ பாடவோ கூடாது! அதுவும் கம்போர்ட் 1-ல் கூடவே கூடாது. இங்கிருக்கும் கனவான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் அது பிடிக்காது. நாம் அவர்களுக்கு தொல்லை தருகிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள். அவர்களைப் பொருத்தவரை, நாம் ஏற்படுத்துவது இரைச்சல்; மாசு! ஒலி மாசு! அது ஒருவகையான அத்துமீறல்!” என்று அறிவுரைத்துக்கொண்டே அவன் தலையை வருடிவிட்டுக்கொண்டிருந்தேன்.

    கம்பர்ட் 1-ல் அமைதி பரவ ஆரம்பித்திருந்தது. மேஜையும் அப்படி ஒன்றும் அழுக்கடையவில்லை.

    ஜன்னலினூடே வெளியே நோக்கினேன். வண்டி போகும் வேகத்தில் வெளியில் இருந்த எதுவும் தெரியவில்லை. மாறாக வண்டிக்குள் நடப்பதெல்லாம் திரைப்படமாய் தெரிந்துகொண்டிருந்தது. குறிப்பாக எங்களுக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த அந்த சீமாட்டியின் இதழ்கள் அந்த கனவானின் வாய்க்குள் அடைபட்டுக் கிடந்தது தெரிந்தது. அவை ஏற்படுத்தும் சத்தமும் சன்னமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அவனுடைய வலதுகை அவள் மார்பின் மீது எதையோ தேடிக்கொண்டிருப்பதும் தெரிந்தது.

    என் மனைவி முகத்தை சுளித்துக்கொண்டே கண்களை மூடிக்கொண்டிருந்தாள். திரும்பி எனக்கருகே இருந்த என் தாயைப் பார்த்தேன். அவள் முகத்திலும் அதே பாவம். அவளும் என் மனைவிக்கு முன்பே கண்களை மூடியிருக்கவேண்டும். இருவரும் தூங்கிவிட்டதாய் தெரியவில்லை.

    என் மகன் கால்களைத் தொங்கபோட்டபடி, கைகளைக் கட்டிக்கொண்டு, கண்களை மூடியபடி ஜன்னலின் மீது சாய்ந்துகொண்டிருந்தான். அநேகமாக தூங்கியிருக்கவேண்டும். அவனை அப்போது எழுப்பவேண்டாம் என்று தோன்றியது. ஆனால், அந்த முகத்தில் ஒருவித இறுக்கம் தெரிந்தது. என் மீதான கோபத்துடனேயே தூங்கிப் போயிருக்கிறான்.

    என் அறிவுரை அவனுக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதுவும், “நாம் ஏற்படுத்துவது இரைச்சல்; மாசு! அது ஒருவகையான அத்துமீறல்!” என்று நான் கூறியது அவனுக்கு நிச்சயம் புரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

    oOo

     

    Share
  • உயர்ந்த இடம்

    –பொன்.ராம்.

    என்ன காமெராவைப் பாத்துட்டு ஓடி வந்துட்ட ………….!

    பசிக்குதுன்னு சொன்னியே! அதான் கூட்டிட்டு வந்தேன் பாப்பா….என்கிட்டயும் காசில்ல…..அப்பா கொடுத்த காசுக்கு பெட்ரோல் போட்டாச்சு……….

    ‘ப்ச்’….எத்தனையோமுறை அப்பாட்டயும், அம்மாட்டயும் சொல்லியாச்சு……ஊரைச்சுத்திக்கடன்….வித்துட்டு இருக்கறதை வச்சு சந்தோஷமா இருங்கன்னு……. ஊரு உலகத்துக்காக பயந்து வாழுற என் அப்பா அம்மாவுக்காக பாக்குறேன். பெரிய பிசினஸ் புள்ளி.  ஆனா நான் எங்க நிக்குறேன்….பாத்தீங்களா! ரமேஷ் அண்ணா…..நான் காருக்குள்ளயே இருக்கேன்………..அம்மா உணவகத்துல என்ன இருக்கோ அத வாங்கிட்டு வாங்க……………….!

    அதெல்லாம் அங்க வச்சே சாப்பிடணும்……….,

    இல்ல……என் ஃப்ரெண்ட் அப்பாவுக்கு உடம்பு ரொம்ப முடியாதவரு….வயசு ரொம்ப ஆயிட்டதால அவரால சமைக்கமுடியாது. அதனால அவ போய் அவங்கப்பாவுக்கு கேக்கறப்ப கொடுத்தாங்க………

    டிஃபன்பாக்ஸ் எதுவும் வச்சிருக்கியா!

    வேலைக்காரிகிட்ட அம்மா பாத்திரம் சரியா கழுவுலன்னு சண்டை போட்டுட்டு,  இன்னைக்கு வரலை…..அதான் நானே கழுவி கொண்டுவந்திருக்கேன்.

    உனக்கேன் பாப்பா இந்தவேலை…… அம்மா உன்னை திட்டலையா!

    அம்மா அப்பாவோட சேந்து தண்ணியடிச்சுட்டு காலைலவரைக்கும் எந்திரிக்கலை……….! சமையல்காரியும் வரலை……..நாலுமணிக்குமேல எனக்கு எழுத வேண்டியிருந்தது…அதான் அடுப்படிக்கு போகலை……இல்லைன்னா சாதமாவது வச்சிருப்பேன்………….,  போகும்போது எனக்கு சமையல் புக் ஒண்ணு வாங்கி வக்கிறியாண்ணா………,  வெளில வந்து சாப்பாட்டுக்கு நிக்கறது அசிங்கமா இருக்கு…….யாராவது பாத்தா அப்பாட்ட சொல்லிடுவாங்க………….

    கண்ணில் எழுந்த கண்ணீரை அவள் பார்க்காதபடி தூசி விழுந்ததுபோல லேசாகத் துடைத்தபடி ஏன் பாப்பா! உங்க ஸ்கூல்லயே காண்டீன் இருக்குல்ல!

    அங்க போறதுக்கும் கைல காசு வேணும்ல……..ரெண்டுபேருக்கும் குடிக்கறதுக்கும், கார்ல அடுத்தவங்க பாக்கறதுக்கும் கடன்வாங்கி செலவு செய்யறாங்க….ஃபாரீன் மாதிரி படிச்சுக்கிட்டே வேலைன்னு இந்தியாவுல வந்தா நல்லாருக்கும்…..பத்துகூட முடிக்காத எனக்கு யார் வேலை தருவா இப்ப………..? காரு ஏன் மாறிப்போவுது அண்ணா?

    நான் உன்னை எல்கேஜில இருந்து வண்டில இந்த ஸ்கூலுக்கு கொண்டுவந்து விட்டுட்டு இருக்கறேன் பாப்பா! என்னைக்கும் நீ பசின்னு சொன்னதில்ல……..அதான் மனசு கேக்கல….என் வீட்டுல சாப்பிட்டு போகலாம்.

    ஆமா! இதுவரை நீங்க தனியால்ல இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கேன்.

    இல்ல பாப்பா! எனக்குன்னு ஒரு சின்ன குடும்பம் இருக்கு…வா! வீடு வந்திருச்சு…இறங்கு………

    சுஜின்னு கூப்பிடு….எனக்கும் வயசாகுதுல்ல……….!

    இல்லை பாப்பா…..எனக்கு அப்படியே கூப்புட்டு பழகிடுச்சு……………..நீ கல்யாணமாகி புள்ளை பெத்தாலும் நீ எனக்கு பாப்பாதான்.

    கௌரி யார் வந்திருக்கான்னு பாரு………………!

    எட்டிப்பார்த்த கௌரி சுஜியை வாம்மா! வந்து உட்காரு என்றாள்.

    வீட்டைச்சுற்றிப் பார்த்த சுஜி அலமாரியில் இருந்த மதர் தெரசாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

    அலமாரி முழுவதும் ஷீல்டுகளால் நிறைந்தபடி இருந்ததை வியந்து பார்த்தாள். நடுவில் ஒரு தேவதை டிரஸ் போட்ட எட்டுவயதுப்பெண் பாப்தலையுடன் சிரித்துக்கொண்டிருந்தாள்.

    அண்ணா இது யாரு………..?

    இது என் பொண்ணு……..!

    இப்ப எங்க……………….?

    கடவுளுக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சுப்போச்சாம்….அதான் பூமில ப்ரைஸ் நிறைய வாங்கிட்ட………….., என்கூடவந்து இருந்துக்கோன்னு கூட்டிக்கிட்டார்.  உன்ஸ்கூலுதான் பாப்பா…. உன்னோட ஒரு வயசு கம்மி………இருந்தா உன்னோட பேசிட்டு இருந்திருப்பால்ல………..சுவரில் தொங்கிய ஃபோட்டோவை வெறித்தான்.

    வா பாப்பா! டைனிங்டேபிள்ல உட்காருன்னு சொன்ன கௌரியை முதன்முதலாகப் பார்த்தாள்.

    வீட்டில் பரப்பி வைத்திருக்கும் ஹாட்பாக்ஸ், ஆடம்பர கண்ணாடி டம்ளர்,வெள்ளி பழத்தட்டு எனப் பார்த்துப் பழகிய கண்களுக்கு பரப்பிய வாழைஇலை சாப்பாடு அவளுக்குப் புதிதாகத் தெரிந்தது. அதைவிட கௌரி பரிமாறக் காத்திருந்தது  புதிதாகத் தெரிந்தது.

    சுஜி…எனக்கு ப்யூட்டிபார்லர்ல வேலை இருக்கு. நீ போய் வேலைக்காரிட்ட சொல்லி சாப்பிட்டுக்க…….! என்ற குரல் மனதில் ஒலித்தது.

    நான் உங்க பொண்ணு மாதிரின்னு நினைச்சுதானே வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க….. தரையிலயே உக்காந்துக்கறேன்.

    வாஷ்பேசின் எங்க! ஓ சாரி! கொல்லைப்பக்கம் எங்கிருக்கு?

    ஓடிச் சென்று கையைக் கழுவித் துடைத்தபடி ஸ்கர்டை இழுத்துக்கொண்டு அமர்ந்த பெண்ணை பாசத்துடன் பார்த்தாள் கௌரி.

    இன்னைக்கு நீ வருவேன்னு தெரியாது…….டிஃபன் செய்யல……….அதுதான் உருளைக்கிழங்கு பொரியலும், முருங்கைக்காய்கூட்டும், தக்காளிக்குழம்பும், அப்பளமும் வச்சிருக்கேன். சாப்பிடுறியா……………….

    போடுங்க பசி உயிர் போகுது…..

    ரசித்துச் சாப்பிட்டாள் சுஜி.

    Swamiஅண்ணா! எனக்கொரு உதவி செய்வியா? சாப்பிட்டுக்கொண்டே பேசினாள் சுஜி.

    நான் டெய்லி இங்க வந்து சாப்புட்டுபோறதுக்கு எதாவது ஐடியா இருக்கா? படுத்துத் தூங்கக்கூடப் பிடிக்கல….எங்கயாவது போய் செத்துடலாம்னு தோணுது……….

    கௌரி தன் கணவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

    நீ சாப்பிட்டு கிளம்பு பாப்பா! ஸ்கூலுக்கு நேரமாய்டும்…..

    கதவருகில் யாரோ வந்து நிற்பதுபோல நிழலாட………! சிலையாய் நின்றாள் சுஜி. அப்பா என்று உச்சரித்த சொல் தொண்டைக்குள் பயத்தால் குழறியது.

    நான் அப்பவே நினைச்சேன். இவளைப்போய் இங்க கூட்டிட்டு வந்திருக்காரே…..அவங்க குடிச்சா உங்களுக்கென்ன? உங்களுக்கு இனி வேலை வெளில தேட வேண்டியதுதான். அலுத்துக்கொண்டாள் கௌரி.

    இரவுநேரத் தூக்கமின்மையாலா, அல்லது குடித்துச் சிவந்திருந்ததாலா எனத் தெரியாத அதிகாரக்கண்களில் என்றுமே கண்ணீரைப் பார்த்தறியாத சுஜி அன்று கண்ணீரைப் பார்த்தாள்.

    உனக்காகத்தானடா விழுந்து விழுந்து சம்பாதிக்கறேன். நம்ம கார் ஒண்ணை இங்க வொர்க்ஷாப்ல விட்டிருந்தேன். எடுக்கலாம்னு வந்தேன். வர்ற வழில உன் கார் இங்க நிக்குது…. என்னவோ டிரைவர் உன்னைச் என்ன செஞ்சிடுவானோன்னு பயத்துல மறைஞ்சு வந்தேன்.

    பாத்தா இங்க நீ இப்பிடி பேசுற…….ரமேஷ்! இனி இது உன் வீட்டுப்பொண்ணு மாதிரி நினைச்சுக்கோ! அது எப்ப சாப்பாடு கேக்குதோ போடுங்க…..  சுஜி முன்னாலேயே சொன்னமாதிரி கடனையெல்லாம் அடைச்சிடுறேன். மூட்டை தூக்கியாவது எம் பொண்ணைக் காப்பாத்துறேன்..  போதுமாம்மா..இனி நாங்க ரெண்டுபேரும் குடிக்கவும் மாட்டோம். அப்பாவோட ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்துடுறியாம்மா………!

    பன்னீர்ரோஜாக்களை யாரோ தனது தலைமேல் கொட்டியதுபோல உணர்ந்தாள் சுஜி. இதோ! சாப்பிட்டு வர்றம்பா…….ஆண்ட்டி நல்லா வச்சிருக்காங்க…………..

    நீங்களும் சாப்பிடுறீங்களாய்யா?

    சும்மாயிருங்க..! அவரு எவ்வளவோ ஒசந்த இடத்துல இருந்து வந்தவரு……அவர்கிட்டபோய்……..

    உசந்த இடம்கிறது பங்களாவுலயோ….போற கார்லயோ இல்லைம்மா…..பசிக்குதுன்னா…ஒருவேளை சாப்பிட சாப்பாடு கொடுக்கறாங்கபாருங்க …! அவங்கதான் உயர்ந்தவங்க……..கொண்டுவாங்க சாப்பாடை…….‘கீழேயே உக்காந்துக்கறேன்னு உயர்நதவன் என்ன! தாழ்ந்தவன் என்ன‘ எனப் பாடிய  அப்பாவைச் சிரித்தபடி பார்த்தாள் சுஜி. ‘சாதி இரண்டொழிய வேறில்லை‘ எனப் பக்கத்துவீட்டுகுடிசையில் யாரோ படிப்பதைக் கேட்ட சுஜி  அலமாரியில் ஒட்டியிருந்த விவேகானந்தர் படத்தின்கீழ்  ‘உன்னால் எதையும் சாதிக்க முடியும்‘ என்ற வாசகத்தை மனதுக்குள் மௌனமாகப் படித்தாள். அவளுக்கு வாழ்க்கையின் பொருள் புரிந்ததுபோல இருந்தது.

    Share
  • ஒரு செய்தி!

    -எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

    கண்ணன் வீடு ஒரே தடபுடலாக இருந்ததது. எல்லோருக்கும் சந்தோஷம் என்றால் சொல்லவே முடியாதபடி இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் தரையிலே கால்படாதபடி பறந்துதான் திரிந்தனர் எனும் அளவுக்கு அவர்களின் அந்த ஆனந்தமும் அவசரமும் காணப்பட்டது.

    கண்ணனின் தங்கை கலாவுக்கு வயது ஏறிக்கொண்டே வந்தது. ஆனால்   எந்தக் கல்யாணங்களும் சரிவராமல் போய்க்கொண்டே வந்தது. வடிவான பிள்ளை ஆனால் கால்தான் சற்று ஊனமாக இருந்தது. பல்கலைக்கழகத்தில்   பட்டம் பெற்றிருந்தாள். அதுமட்டுமல்ல கொம்யூட்டரிலும் சரியான கெட்டிக்காரி. ஆங்கிலம் எழுதினால் அது அத்தனை சுவையாக இருக்கும். ஆங்கிலத்தில் கவிதைகள் கூட எழுதுவாள். பல பத்திரிகைகளில் அவளது ஆக்கங்கள் வெளி வந்து பல பரிசுகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. நல்லாப் பேசுவாள்.         நல்லாய்ப் பாடுவாள்.

    ஆங்கில ஆசிரியையாக அவளுக்கு நியமனம் கிடைத்ததும் அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால் அவளுக்கு மனதில் மகிழ்ச்சியில்லை. பள்ளிக்கூடத்தில்   தன்னை நொண்டி என்று மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள் என்று மனதுக்குள் எண்ணியதால் மகிழ்ச்சி அவளிடம் வரமறுத்தது. ஆனாலும் தனது திறமையில் தன்னம்பிக்கை கொண்டகாரணத்தால் வேலைக்குப்போக ஒத்துக்கொண்டாள்.

    அவளின் விடாத உழைப்பால் பாடசாலையில் அவளுக்கு நல்ல மதிப்பு   தானாகவே வந்துசேர்ந்தது. வயதுமுப்பது ஆனாலும் வடிவு மட்டும் குறையவி       ல்லை. நல்ல மாநிறம். எடுப்பான மூக்கு. அகன்ற பெரிய கண்கள். பார்த்தால் இன்னொருதரம் பார்க்கத்தூண்டும் வசீகரம். கால்மட்டும்தான்குறை. அதை காலளவு குறை என்றுதான் கொள்ளவேண்டும்.

    உப அதிபர் மனோகரனுக்கு ஐம்பது வயது. அந்த மனிசனும் படி படி எனப் படித்து பல பட்டங்களைத் தனது பெயரோடு சேர்த்தாரே ஒழிய காதல் கல்யாணம் என்றால் அந்தப்பக்கம் மனிசன் தலைவைத்துப் படுத்ததே அறியார்.

    கலாவைப் பார்த்ததும் இவளைத் தனது வாழ்க்கைத்துணை ஆக்கினால்     எப்படி இருக்கும் என்று எண்ணம் ஏற்பட்டது. எண்ணத்தைத் தள்ளிப்போடாமல் உடனடியாகச் செயல்படுத்தவும் ஆயத்தமானார். கலாவின் வீட்டாரிடம் நேரடியாகவே சென்று கேட்டுவிட்டார். அவர்களுக்குச் சொர்க்கமே வந்து காலடியில் விழுந்ததுபோல இருந்தது. கல்யாணம் நடக்காதா என்று ஏங்கி நின்றவர்களுக்கு இந்தச்செய்தி சர்க்கரைப் பந்தலில் தேன்மாரியாக இருந்தது.

    கலாவுக்கும் மனோகரனுக்கும் கல்யாண ஏற்பாடுகளால்தான் கண்ணன் வீடு கலகலப்பில் மிதந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் சிவன் கோவில் மண்டபத்தில்தான் கல்யாணம். மாப்பிள்ளை வீடு கொக்குவில். பெண்வீடு மானிப்பாய். மணமகள் வந்து சேர்ந்துவிட்டாள் கல்யாண மண்டபத்துக்கு. மாப்பிள்ளை வீட்டாரை யாவரும் பார்த்தபடி நிற்கின்றனர். அவர்களோ வந்தபாடில்லை. கல்யாணமண்டபத்திலோ ஒரே படபடப்பு.

    அப்பொழுது வேகமாக மாப்பிள்ளையின் மச்சான் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துசேர்ந்தான் எல்லாரும் அவனைப்பார்த்து ”என்ன? என்ன?”  என்று கேட்டபடி கூடிவிட்டனர். மாப்பிள்ளை வந்த கார் இன்னொரு காரோடு மோதுண்டு மாப்பிள்ளை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில்… என்றதும் கல்யாண மண்டபம் கதிகலங்கிவிட்டது.

    ஆஸ்பத்திரிக்கு எல்லாரும் பறந்தார்கள். மாப்பிள்ளை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். டாக்டர் வந்து சொன்னார் மனோகரனுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் அவரின் குரூப் இரத்தம் இங்கில்லை. ஆராவது இருந்தால் கூட்டி வாருங்கோ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உனக்குத்தெரியுமா? ஆரும் இருக்கினமா? என்றபடியே இருந்தனர்.

    இப்படி எல்லோரும் திக்குமுக்காடிக்கொண்டு இருக்கின்றபொழுது ஒருவர் அல்ல மூவர் ஓடிவந்து எங்கள் குரூப் இரத்தம் டாக்டர் கேட்டதுதான் எடுங்கோ என்று பதட்டமாகச்சொல்லி நின்றார்கள். கடவுளைக்கண்டதுபோல அவர்களின் வருகை அங்கு இருந்தது.

    இரத்தம் மனோகரனுக்கு ஏற்றப்பட்டது. மனோகரன் நினைவு திரும்பிய     செய்தியைக் கேட்டதும் யாவரும் ”கடவுளே!” என்றனர். அப்பொழுது டாக்டர்   வெளியே வந்து ”கேசவன் என்பவர் யார்?” என்று கேட்டார். அவர்கள் சொன்னார்கள் கலாவின் கடைசித் தம்பியென்று. ”அவன்தான் உங்களின் கடவுள். அவன் மட்டும் இப்படிச்செய்யாது விட்டிருந்தால் நீஙகள் யாருமே சந்தோஷப்பட முடியாமல் போயிருக்கும்” என்றார்.

    ஒருவருக்கும் ஒண்ணுமே விளங்கவில்லை. ”அப்படிக் கேசவன் என்னதான் செய்திருப்பான்?” என்று யாவரும் யோசித்தபடி இருந்தனர். டாக்டர் சொன்னார் ”கேசவன் மட்டும் தனது போன்மூலம்– தெரிந்த எல்லாருக்கும்   எஸ்.எம். எஸ் மூலம் இரத்தம் தேவை!” என்ற செய்தியை உடனே அனுப்பாது மட்டும் இருந்திருந்தால் நிலைமை வேறுமாதிரிப் போயிருக்கும். கேசவனின் சமயோசிதமும் அதற்காக அவன் பயன்படுத்திய விஞ்ஞான அணுகுமுறையுமேதான் மனோகரனை இப்போது காப்பாற்றி இருக்கிறது என்று ஒரு பெரிய விளக்கமே அளித்தார். கேசவன் ஒரு மூலையில் நின்று கொண்டு மீண்டும் போன் மூலம் “அத்தான் பிழைத்துவிட்டார்” என்ற செய்தியை யாவருக்கும் எஸ். எம். எஸ் செய்துகொண்டு இருந்தான்.

    Share
  • இப்ப என்ன மாறிப் போச்சு?

    “ஒரு அரிசோனன்”

    “உஸ்ஸ்… என்ன வெய்யில், என்ன வெய்யில்? எப்படி வெக்கை கொளுத்தறது? இந்த மனுஷனுக்கு இந்த வயசிலே வேகாத வெய்யில்ல என்ன அப்படி வாக்கிங் வேண்டிக் கிடக்கு? எம்பத்திமூணு வயசாயிடும், இன்னும் நாலு மாசத்துலே! மனசில இன்னும் இருபத்திமூணுன்னு நினைப்பு! வேகுவேகுன்னு அதே நடை! சின்னப் பசங்ககூட இவர்கூட சேர்ந்து நடக்க முடியறதில்லே, ஓட வேண்டியிருக்கு! கிருஷ்ணா, ராமா, கோவிந்தான்னு வீட்டோட கெடக்காம இப்படி வெளிலே வெளிலே போயிட்டா, நான்னா வயத்திலே புளியைக் கட்டிண்டு இருக்க வேண்டியிருக்கு? மயிலாப்பூர் முந்தி மாதிரியா இருக்கு? காரும், ஸ்கூட்டரும், மோட்டார் சைக்கிளும், ஆட்டோவும், லாரியுமான்னா நெளியறது? தடுமாறிக் கீழே விழுந்துட்டா, கிழட்டுப் பிராணன்னா போயி வைக்கும்? நான் சுமங்கிலியா எப்படிப் போய்ச் சேர்றது?” என்று வாய்விட்டு முணுமுணுத்துக்கொண்டே, வெளியில் போன தன் கணவர் இன்னும் திரும்ப வரக் கொணோமே என்று ஆதங்கத்துடன் பார்த்தாள் பார்வதி.

    வாயில் கம்பிக் கதவில் நிழலாடவே பார்வதி தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தாள். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

    “அப்பாடா! இப்பவாவது மனுஷன் திரும்பினாரே!” என்று படுத்திருந்தவள் பெஞ்சிலிருந்து எழுந்து வாசல் கதவை நோக்கி நடந்தாள்.

    இருபத்திமூன்றிலிருந்து இருபத்தைந்து வயது மதிக்கக்கூடிய ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். நல்ல களையான புன்னகை ததும்பும் முகம், கனிவான பார்வை, நல்ல உயரம், வெளிர் நீலச் சட்டையும், வெள்ளை வேஷ்டியும் உடுத்தி இருந்தான். கையில் சிறிய எர்பாக். பார்வதிக்கு சாட்சாத் முருகப் பெருமானே வீட்டுக் கதவைத் தட்டியது போன்ற ஒரு பிரமை. கண்களை இடுக்கிக்கொண்டு, புருவத்தின்மீது கையை வைத்துக்கொண்டு, அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

    “பாட்டி, இது சிவராமத் தாத்தா வீடுதானே?” என்று அதே கனிவான புன்னகையுடன் கேட்டான் அந்த இளைஞன்.

    “யார் நம்மை பாட்டி, தாத்தா உறவு சொல்லி விசாரிக்கிறார்கள்?” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே, “ஆமாம்ப்பா! இது அவராம்தான். நீ யாருப்பா? எங்கேந்து அவரைத் தேடிண்டு வரே?” என்று கதவைத் திறக்காமலேயே கேட்டாள் பார்வதி. இந்தக் காலத்தில்தான் யாரையுமே சீக்கிரம் நம்ப முடிவதில்லையே?

    “பாட்டி, நான் மும்பையிலிருந்து வரேன். என் தாத்தாவும், சிவராமத் தாத்தாவும் வெள்ளைக்காரங்களை எதிர்த்து நடந்த போராட்டத்திலே, ஒண்ணா அமராவதி ஜெயில்ல ஆறு மாசம் இருந்தாங்களாம். ரொம்ப ப்ரண்ட்ஸாம். எனக்கு சென்னையில் வேலை கிடைச்சிருக்கு. என் தாத்தாதான் உங்க ரெண்டுபேரையும் பார்த்து, ஆசிர்வாதம் வாங்கின பின்னாலே வெளிலே சேரச் சொன்னார்.” என்று பதில் சொன்னான்.

    இதைக் கேட்டதும் பார்வதிக்கு மனம் நெகிழ்ந்து விட்டது. “அடாடா, உள்ளே வாப்பா! நான்பாட்டுக்கு ஆசீர்வாதம் வாங்க வந்த பிள்ளையை வெளீலையே நிறுத்தி வச்சுப் பேசிண்டிருக்கேனே! உள்ளே வாப்பா. உன் பேரு என்ன சொன்னே?” என்றபடி கதவைத் திறந்து விட்டாள்.

    “என் பேரு ராஜா, பாட்டி.”

    உள்ளே நுழைந்தவனை பெஞ்சில் உட்காரச் சொன்னாள். தன் ஏர்பாக்கைத் திறந்து, அதிலிருந்து ஒரு பொட்டலத்தையும், ஒரு அட்டைப் பெட்டியையும் எடுத்து அவளிடம் நீட்டினான்.

    “பார்வதிப் பாட்டி பழுத்த சுமங்கலி. வெறுங்கையா போகக்கூடாது, பூ கொண்டுபோன்னு தாத்தா சொன்னார். இந்த பொட்டலத்திலே பூ இருக்கு. சிவராமத் தாத்தாவுக்கு பாம்பே ஹல்வா பிடிக்கும்னு ஒரு பாக்ஸ் தாத்தா கொடுத்து அனுப்பினார்.’

    பார்வதிக்குக் கண்கள் பனித்தன. குழந்தை குட்டிகள், பேரன் பேத்திகள் என்று யாரும் கிடையாது. அவளுக்கு மூன்று முறை குறைப் பிரவசமாகவே பிறக்கவே, இதற்குமேல் கருத் தரித்தால், உயிருக்கு ஆபத்து என்று கருப்பையை எடுத்து விட்டார்கள். எனவே, ஒருவருக்கொருவர்தான் குழந்தை. அந்த ஔவைக்கு முருகன் நாவல் பழங்களை உதிர்த்தான். அதே முருகனே, யாரோ பெற்ற இந்த ராஜா வடிவில் பூ கொண்டுவந்து தருகிறானா?

    “என்ன பாட்டி, அப்படியே நின்னுட்டீங்க? இந்தாங்க!” என்று ராஜா உரிமையுடன் சொன்னது அவளை உலகிற்குக் கொணர்ந்தது. முகமலர்ச்சியுடன் அவனிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

    “கொஞ்சம் இரு ராஜா. வெள்ளிக்கிழமை கார்த்தாலே புஷ்பம் கொண்டு வந்திருக்கே. கற்பகாம்பிகைக்குச் சாத்திட்டு வந்துடறேன்.” என்று கிளம்பியவள், “அது சரி, நீ எங்கே தங்கப் போறே? சொந்தக்காரா யாரும் இருக்காளா? இருக்க ஜாகை பார்த்தாச்சா?” என்று வினவினாள்.

    “இல்லே பாட்டி. இனிமேத்தான் பார்க்கணும். நேரே இங்கேதான் வந்தேன்.”

    “பம்பாய்லேந்து வரேன்னு சொன்னே? ஒரே ஒரு சின்னப் பை மட்டுமே கொண்டு வந்திருக்கியே? நன்னா ஸ்நானம் பண்ணி வேஷ்டி சட்டை வேறே புதிசாப் போட்டுண்டு இருக்கே?” அவள் கவனத்திலிருந்து எதுவும் தப்பவில்லை.

    “நேரா அப்படின்னா, ரயில்வே ஸ்டேஷன்லேந்து நேர இங்கே வரலை பாட்டி. ஒரு ஹோட்டல்லே ரூம் எடுத்து, பெட்டியை எல்லாம் அங்கே போட்டுட்டு, அங்கேயே குளிச்சேன். வர்றபோது பூ வாங்கி வந்தேன். அதையே சுருக்கமா நேர வந்ததாச் சொன்னேன். ஆசீர்வாதம் வாங்க வர்றபோது பாண்ட் வேண்டாம்னுதான் வேஷ்டி கட்டி வந்தேன்.”

    “உன்னைப் பெத்து வளத்தவா ரொம்ப நல்லவா அப்பா. நல்லபடியா உன்னை வளத்திருக்கா. இப்படி மரியாதையா நடந்துக்க இப்ப எத்தனை குழந்தைகளுக்குத் தெரியறது? நன்னா, தீர்க்காயுசா, ஷேமமா இருப்பா.” என்று ஆசி வழங்கிவிட்டு, உள்ளே சென்று பூவை படத்தில் சாத்திவிட்டு வந்தவள், அவனோடு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்.

    சிவராமன் வாழை இலையில்தான் சாப்பிடுவார். வெளியே சென்ற அவரிடம் இலை வாங்கிவரச் சொல்ல மறந்துவிட்டது அவளுக்கு திடுமென்று ஞாபகம் வந்தது. “அடாடா! மறந்து போச்சே!” தன்னையும் அறியாமல் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன.

    “என்ன பாட்டி?” என்று கேட்ட ராஜாவிடம் விஷயத்தை விளக்கிய பார்வதி. “வயசான மனுஷன். பசியோட வருவார். இலை வாங்கி வரச் சொல்லி அவரைத் திரும்ப அனுப்பணுமே.”

    ஆதுரம் தோய்ந்த குரலில் வருத்தப்பட்டாள். என்ன தடுத்தும் கேட்காமல் தானே இலை வாங்கி வருவதாக, ஏர்பாக்கை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பினான் ராஜா.

    அவன் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடத்திலேயே கதவைத் தட்டினார் சிவராமன். அவரிடம் ராஜாவைப் பற்றி புகழாரம் சூட்டி விவரித்தாள் பார்வதி.

    “கலிகாலம், கலிகாலம்னு சொல்றா. எனக்கெனவோ திரேதாயுகம் திரும்பறதுன்னுதான் தோண்றது. இந்தக் காலத்துலே இந்த மாதிரியும் ஒரு பிள்ளையாண்டான் இருக்கறதைப் பார்த்தா மனசுக்கு எவ்வளவு குளிர்ச்சியாத் தெரியுமா இருக்கு? சாட்சாத் முருகப் பெருமானே நேரிலே வந்த மாதிரி இருக்கு,” என்று ராஜா புகழ் பாடி, அவர் வருவதற்கு முன்னால் நடந்ததை வாய் வலிக்க விளக்கினாள்.

    “அவனுக்கு இருக்க ஜாகை இனிமேத்தான் பாக்கணுமாம். நம்மாத்து மாடி ரூம் காலியாத்தானே இருக்கு. அவனே அங்கே தங்கிக்கட்டுமே! நமக்கும் இந்தத் தள்ளாத காலத்திலே ஒரு துணையாக கூட இருக்குமே. தவிர, அவன் உங்க ப்ரெண்டோட பேரன் அப்பிடீன்னு வேற சொல்றான்.”

    “நீயே முடிவு பண்ணிட்ட்டே! என்னிக்கு உன் முடிவு தப்பாப் போயிருக்கு? மனுஷாளைப் பார்த்தா ஒரு நிமிஷத்திலேயே அவா எப்படிப் பட்டவான்னு கரக்ட்டாச் சொல்லிடுவே. அப்படியே செஞ்சாப் போச்சு.” சிரித்தவாறே பார்வதியை ஆமோதித்தார் சிவராமன்.

    வாசலில் நிழலாடியது.

    “அதோ, அந்தப் பிள்ளையாண்டானே வந்துட்டான்.” வேகுவேகுவென்று சென்று வாசல் கதவைத் திறந்து விட்டாள் பார்வதி.

    “உனக்கு நூறு வயசு ராஜா! வா, வா!” கையில் இலைக்கட்டுடன் நுழைந்த ராஜாவை அன்புடன் வரவேற்றாள்.

    இலைக்கட்டை பார்வதியிடம் கொடுத்த ராஜா சிவராமனைக் கைகூப்பி வணங்கினான்.

    “வாப்பா ராஜா!” என்று அமைதி ததும்பும் குரலில் பாசமுடன் வரவேற்றார் சிவராமன்.

    “என் தாத்தா உங்களுடன் 1942ல் அமராவதி ஜெயிலில் ஆறு மாசம் இருந்தாராம். அவருக்காக நீங்க ஜெயிலர் கிட்ட நிறைய அடியும் உதையும் வாங்கி இருக்கீங்களாம். கூடப் பிறக்காத அண்ணன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.”
    உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே போனான் ராஜா.

    “என்னையும் சேர்த்து அஞ்சு பேரை ஒரே அறையில் அடைச்சு வச்சா. எல்லாரையும் மாட்டடி அடிப்பா. படாத இடத்திலே பட்டு ஜெயில்ல ஒர்த்தன் செத்துக்கூடப் போய்ட்டான். அதுனால ஒர்த்தரை அடிச்ச இன்னூர்த்தர் குறுக்கே வந்து அந்த அடியைக் கொஞ்சம் தாங்கிப்போம். அதுலே ஸ்பெஷலா ஒண்ணும் இல்லே.” என்று சிவராமன் விளக்கியபோது ராஜாவுக்கு கண்கள் கொஞ்சம் கலங்கின.

    “அது சரி, உன் தாத்தா பேரு என்ன சொன்னே?” சிவராமன் கேட்டார்.

    “காதர் பாட்சா ராவுத்தர்.” என்று ராஜா சொன்னவுடன், “அடேடே! நம்ம ராவுத்தர் பேரனா நீ? பார்வதி உன் பெரு ராஜான்னு சொன்னாளே…” என்று சிவராமன் இழுத்தார்.

    “அது சுருக்கமான பெயர் தாத்தா. என் பேர் சிக்கந்தர் ராஜா.” என்று தன் முழுப் பெயரைச் சொன்னான் ‘ராஜா’ என்ற ‘சிக்கந்தர் ராஜா’.

    “உன்னைப் பார்த்ததுமே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சுண்டே இருந்தேன். அப்படியே ராவுத்தர் ஜாடைதான் உனக்கு.” என்று அவனை மார்புடன் அணைத்துக் கொண்டார் சிவராமன்.

    “பார்வதி, பார்த்தியா! நம்ம காதர் பாட்சா ராவுத்தர் பேரன் நம்மைப் பார்க்க வந்திருக்கான்!” அவருக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. சொந்தப் பேரன் இருந்து, அவனே தங்களைப் பார்க்க வந்ததுபோல ஒரு மகிழ்ச்சி.

    “நீ துணைக்கு ஒருத்தர் இருந்தா சௌரியமா இருக்கும்னு சொன்னியே, அது எவ்வளவு சரியாப் போயிடுத்து பார்த்தியா!”

    “கொஞ்சம் உள்ளே வரேளா? வெளிலே வாக்கிங் போயிட்டு வந்திருக்கேள். காலை அலம்பிண்டு வந்து பேசலாமே!”
    பதவிசாய்க் கூப்பிட்டாள் பார்வதி.

    புருவத்தை உயர்த்தி, “என்ன விஷயம், புதிதாக?” என்று பார்வதியை மௌனமாகக் கேட்டுவிட்டு, “ராஜா, உக்காந்துக்கோப்பா. இதோ வந்துடறேன். நிறையப் பேசவேண்டிய விஷயங்கள் இருக்கு.” என்று புழக்கடைப் பக்கம் நடந்தார்.

    அவருடன் நடந்து வந்த பார்வதி, ராஜாவின் காதில் பேச்சு விழாத தூரத்திற்கு வந்து விட்டோம் என்று நிச்சயமானவுடன், “இந்தப் பிள்ளையாண்டானை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி விட்டுடுங்கோ. இவன் நம்மாத்தில் ஒண்ணும் தங்கவேண்டாம். நான் அவசரக் குடுக்கையாட்டம் தப்பாச் சொல்லிட்டேன்.” என்றாள்.

    அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த சிவராமன், “இப்ப என்ன மாறிப் போச்சு? மாடி ரூம்லே இருக்கட்டும், நமக்குத் துணையா இருக்கும்னு நீதானே சொன்னே?”

    மெதுவாகக் கேட்டாலும் அவர் குரலில் இருந்த கோபம் பார்வதியின் இரத்த ஓட்டத்தையே உறைய வைத்தது.

    இருந்தாலும், தன்னைச் சமாளித்துக்கொண்டு, “உங்களுக்கு நன்னாத்தான் பைத்தியம் பிடிச்சிருக்கு. பரம்பரை பரம்பரையா வேதகோஷம் நடந்த இந்த வீட்டிலே ஒரு துலுக்கப் பையனையா குடி வைக்கப் போறேள்? பேரு ராஜான்னு சொன்னான். முகத்திலே மீசை இல்லாம, வெள்ளை வேஷ்டியைக் கட்டிண்டு, புஷ்பம் வாங்கிண்டு வந்து, ஆசிர்வாதம் வாங்கிக்க வந்திருக்கேன்னு பதவிசாப் பேசினதைப் பார்த்தா பிராமணப் பையன் மாதிரி இருந்துது. அதுதான் சொன்னேன். இப்பத்தானே தெரியறது, இவன் யாருன்னு!” என்று நீட்டி முழக்கினாள்.

    “தப்பு பார்வதி! ரொம்பத் தப்பு. சாட்சாத் முருகப் பெருமானே நேரிலே வந்தது மாதிரி இருக்குன்னு சொன்னியே, அப்ப அவன் உன் கண்ணுக்கு முருகனாத்தானே தெரிஞ்சான்? இப்ப எப்படிடீ அவன் வேற ஒர்த்தனாத் தோணறான்? வெறும் ராஜா ‘சிக்கந்தர் ராஜா’ ஆனதுனாலையா? எதுவுமே மாறலைடீ. அறுபத்தஞ்சு வருஷமா நான் எப்படி வாழறேன், எதுக்கு வாழறேன்னு என்கூட இருந்து பார்த்துமா, என்னை நன்னாத் தெரிஞ்சுண்டுமா நீ இப்படிப் பேசறே?

    “இந்தப் பையனோட தாத்தாவைப் பத்தி உனக்குத் தெரியுமாடீ? நானும், அவரும் எப்படி இருந்தோம்னாவது உங்க யாருகிட்டயாவது சொல்லி இருப்பேனா? கவர்மென்ட்டுக்கு எதிரா சத்தியாக்கிரகம் பண்ணிட்டு, ஆறு மாசம் ஜெயிலுக்குப் போனேன்னுதான் உனக்குத் தெரியும்.

    “என் முதுகிலே வரிவரியா இருக்கற தழும்புகள் அங்கே ஜெயில்ல இருந்த வெள்ளைக்காரனோட கைக்கூலியான ஜெயிலர் எனக்குத் பரிசாத் தந்ததுன்னுதானே தெரியும்? முழுக் கதையையும் உனக்கு இப்பச் சொல்லறேன், கேட்டுக்கோ!”

    சிறிது நேரம் தன்னுள் பொங்கி எழும் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார் சிவராமன்.

    “ஜெயில்ல இருந்தாக்கூட நான் தினமும் சந்தியாவந்தனம் பண்ணுவேன். அப்ப ஒரு ஜெயிலர், எண்டா ஐயரே, நீ பாட்டுக்கு தெனமும் கோயிலுக்குப் போயி, செபத்தை சொல்லி, மணியடிச்சுட்டு, அவனவன் தட்டுலே போடற காசை எடுத்துட்டுப் போயி பொழப்ப நடத்தாம, கவிர்மின்ட்டுக்கு எதுரா சத்தியாக்கிரகம் பண்ணிட்டு இங்க வந்துட்டு, உனக்கு என்னடா செபம் வேண்டிக் கெடக்குன்னு அடிக்க வந்தபோது, குறுக்க விழுந்து அடியைத் தாங்கிட்டவன்தாண்டீ, துலுக்கன்னு சொன்னியே, அந்தப் பிள்ளையாண்டானின் தாத்தா – அது தெரியுமா உனக்கு?

    “அப்ப அந்த ஜெயிலருக்கு வந்ததே பாரு கோபம், ‘எண்டா ராவுத்தா, பாப்பானுக்கு என்னடா பரிஞ்சுக்கிட்டு வாரே? அவன் வீட்டுக்குப் பொண்ணைக் கொடுத்திருக்கியா, இல்லை பொண்ணை எடுத்திருக்கியா அப்படீன்னு அவனை நாயை அடிக்கற மாதிரி அடிச்சு வெளுத்து வாங்கிட்டான். எனக்குத் தாங்கலே. சந்தியாவந்தனத்தை நிறுத்திட்டு அடி விழறதைத் தடுக்கப் போனேன்.

    “வேண்டாம் ஐயரே! நீ ஜபத்தை தொடந்து பண்ணு. ஈஸ்வரு அல்லா தேரே நாம்னு சொல்ற மகாத்மாவை நாம ஏத்துக்கிட்டிருக்கோம். நான் எங்க அல்லாவைத் தொழுது நமாஸ் படிக்கறப்போ என்னை அடிக்க வந்தா நீ தடுக்க மாட்டியா? அதே மாதிரி நீ ஒங்க ஈஸ்வரரைக் கும்பிடற போது உனக்கு விழற அடியை நான் தாங்கிக்கறேன்னு அடியை வாங்கிண்டான்.

    “அதைக் கேட்டுண்டே போன ஜெயிலர் ரம்ஜான் அன்னிக்கு ராவுத்தர் கண்ணை மூடிண்டு தொழுகை நடத்தபோது அங்கே வந்தான். என்கிட்டே ‘ஐயரே, அன்னிக்கு உனக்காக இந்த ராவுத்தன் அடி வாங்கினான். இப்ப அவன் தொலை உரிக்கப் போறேன். முடிஞ்சாத் தடுத்துக்கோ’ அப்படீன்னு லாட்டியை எடுத்து அடிக்கப் போனான். நான் தடுத்தேன். என்னை வேணும்னா அடிச்சுக்கோ, தொழுகை பண்றவனை ஒண்ணும் செய்யாதேன்னு கெஞ்சினேன்.

    “இரக்கமில்லாத அந்த ஜெயிலர், சரி ஐயரே, நீ வாயைத் தொறந்து கத்தாதவரைக்கும் ராவுத்தனை அடிக்காம உன்னை அடிக்கறேன்’ அப்படீன்னு ஒத்துண்டான்.

    “நரக வேதனை, நரக வேதனை அப்படீன்னு சொல்லுவா, அதை நான் அடுத்த பதினைஞ்சு நிமிஷம் அனுபவிச்சேன். அப்படி ஒரு அடி விழுந்தது எனக்கு. ஜெயிலரும், அவனோட அசிஸ்டன்ட்டும் சேர்ந்து என்னை நொறுக்கித் தள்ளிப்பிட்டா. என் வாயை அடைச்சுடுப்பா ஈஸ்வரான்னு வேண்டிண்டு ருத்ரம், தேவாரம், திருவாசகம் எல்லாத்தையும் மனசிலே சொல்லிண்டே போனேன். சுண்ணாம்புக் காளவாயிலே போட்டப்போ அப்பர் சொன்ன ‘மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், ஈசன் எந்தை இணையடி நீழலே’ன்னு தேவாரத்தைச் சொல்றப்ப அடி தாங்க முடியாம எனக்கு நினைவு தப்பிடுத்து. கண்ணை முழிச்சுப் பாக்கறப்போ நான் ராவுத்தர் மடிலே கிடந்தேன்.

    “அவன் தினமும் என்னை தடவி ஒத்தடம் போடுவான். எனக்கு ரணம் சீக்கிரம் குணம் ஆகணும்னு அல்லாவை வேண்டிண்டு நமாஸ் படிப்பான். அப்ப இந்து என்னடி, முஸ்லிம் என்னடி, ஒரே இந்தியத்தாய் பெத்த சகோதரர்களாகத்தான் இருந்தோம். பெண் கொடுத்து பெண் எடுத்தால்தான் உறவுன்னு நாங்க நினைக்கலே. ஆனா, ஒத்தர் மேலே ஒத்தர் உயிரையே வச்சிருந்தோம். ஒத்தருக்காக ஒத்தர் உயிரையும் கொடுக்கத் தயாரா இருந்தோம்.
    “அப்படிப் பட்ட உத்தமன் சந்ததிலே வந்தவன்டீ இந்தப் பிள்ளையாண்டான்! அவனுக்கு எதிராப் பேச உனக்கு – சீ, சீ!” என்றவரின் வாயைப் பொத்தினாள் பார்வதி.

    “வேண்டாம்னா, வேண்டாம். உங்க வாயாலே என்னைச் சீச்சீன்னு சொல்லிடாதேங்கோ. எனக்குப் புத்தி வந்துடுத்து. வாங்கோ. அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஆசிர்வாதம் பண்ணி, சாப்பாடு போட்டு, ஆத்துலே தங்க வச்சுப்போம்!”

    தழுதழுத்த குரலில் சொன்னாள் பார்வதி.

    சிவராமனின் முகத்தில் நூறு கோடி சூரியப் பிரகாசம் மலர்ந்தது.

    *************************************************************************************************************

    Share
  • வடு

    –கே.எஸ்.சுதாகர்

    சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தற்செயலாகத்தான் அவரைக் கண்டேன். தன்னந் தனியாக ஒரு மேசையில் அமர்ந்திருந்தார். வழுக்கைத் தலை, வெள்ளை வெளேரென்ற ஆடைக்குள் புதைந்திருக்கும் தளர்ந்த உடல். முகத்தில்கூட சுருக்கங்கள் விழுந்து விட்டன. மூக்குக் கண்ணாடியினூடாக மேசையை உற்றுப் பார்த்தபடி இருந்தார்.

    அவரை எங்கேயோ பார்த்திருப்பதாக மனம் சொன்னது.

    வர்ண ஜால விளக்குகளின்கீழ், வட்ட வட்ட ரேபிள்களில், ஆண்களும் பெண்களுமாகச் சுற்றிச் சூழ இருந்து உணவருந்தும் அந்த ரம்மியமான காட்சியிலிருந்து அவரது ரேபிள் வேறுபட்டுக் காணப்பட்டது. அவர் ஏன் அப்படித் தனித்துப் போனார்?

    “அட தயாளன்! என்ன அவரையே உற்றுப் பார்த்தபடி இருக்கிறாய்? ஆர் எண்டு தெரியுதா?” என்றபடி குணசேகரன் என்னை நோக்கி வந்தான். குணசேகரன் மணப்பெண்ணின் அண்ணன். என்னுடன் பாடசாலையில் ஒன்றாகப் படித்தவன். அவனுக்காகத்தான் நான் கடல் கடந்து, அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கே வந்திருக்கின்றேன்.

    “எங்கட இரத்தினசிங்கம் மாஸ்ரடா!”

    இரத்தினசிங்கம் மாஸ்டர்!

    ஒரு காலத்தில் எப்படிக் கொடிகட்டிப் பறந்தவர். அந்த ஒரு சம்பவத்தின் பின்பு, எல்லோருக்கும் வேண்டாதவராகிப் போய் விட்டார்.

    “பூச்சி இருந்திருந்தானெண்டா – இப்ப எங்களைப் போல – குழந்தை குட்டியளோடை நல்லா இருந்திருப்பான். என்ன குணம்?”

    “நடந்து முடிஞ்சதுகளைப் பற்றிக் கதைச்சு இனிப் பிரயோசனம் இல்லை. நீ வடிவாச் சாப்பிடு தயாளன். சாப்பிட்ட பிறகு ஒருக்கா மாஸ்டரோடையும் போய்க் கதை!” மறப்பதும் மன்னிப்பதும் மனிதகுணம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டு அடுத்த ரேபிளுக்குத் தாவினான் குணசேகரன்.

    ********  *********  ********

    அப்பொழுது நாங்கள் நாலாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தோம். இரத்தினசிங்கம் மாஸ்டர் பாடசாலையில் மிகவும் பொல்லாதவர். எங்களுக்கு சமூகக்கல்வி பாடம் படிப்பிப்பார். அவர் மூக்குப்பொடி போடும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் பயமாக இருக்கும். இரண்டு மூக்கின் துவாரங்களையும் அகல விரித்து ‘ம்’ என்று ஒரே இழுவையாக பொடியை உள்ளே இழுப்பார். பன்றியள் மூக்கை விரித்தால் போல் இரண்டு கறுப்பு வட்டங்கள் விரிந்து சுருங்கும்.

    இரத்தினசிங்கம் மாஸ்டரின் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வருவது மிகவும் அருமை. அநேகமாக அவரின் எல்லா வகுப்புகளின் போதும் பயந்தபடியே காலத்தைக் கழித்தோம்.

    பள்ளிக்கூடத்தின் ஒருபக்க வேலியை மருவியபடி இருக்கும் பாதையில் இருந்துதான் பூச்சி வருவான். அவனும் அவனது நான்கு சகோதரர்களும் வயதுக்கேற்ற உருவங்களில் ஏழ்மையின் அவலம் தெரிய அணிவகுத்து வருவார்கள். சிலவேளைகளில் அவர்களுடன் தந்தையாரும் சைக்கிளை உருட்டிக் கொண்டு கூட வருவார். சைக்கிள் கரியரில் மண்வெட்டி, புல்லு செதுக்கும் உழவாரம், கடகம் என்பவை ஒய்யாரமாக வீற்றிருக்கும்.

    செல்வகுமாரனுக்கு ‘பூச்சி’ என்பது காரணப்பெயர். எந்த நேரமும் சதா புத்தகமும் கையுமாகவே இருப்பான். அதனாலொன்றும் அவன் படிப்பில் படு சுட்டி அல்ல. ‘லஞ்’ இடைவேளையின் போது கூட புத்தகத்துடனே இருப்பான். அல்லாவிட்டால் மேசை மீது குனிந்து படுத்து விடுவான். விளையாட்டில் நாட்டமில்லாத கலகலப்பற்ற சோம்பேறி.

    ஒருமுறை மேசைமீது படுத்திருக்கும் போது, அவனது காதிற்குள் யாரோ ஒரு பூச்சியைப் பிடித்து விட்டுவிட்டார்கள். அலறிக் கொண்டு எழும்பினான் செல்வகுமாரன். “புத்தகப்பூச்சியின்ர காதுக்குள்ளை பூச்சியை விட்டுட்டான்களடா” என்று சத்தமிட்டுக் கொண்டு சிலர் ஓடினார்கள். எங்கள் வகுப்பு ரீச்சர் வந்து நல்லெண்ணெயைக் காதிற்குள் விட்டுப் பார்த்தா. பூச்சி சொல்வழி கேட்கவில்லை. பிறகு உப்புத் தண்ணீர். பூச்சி மெதுவாக வெளியே வந்து மருண்டபடி உலகை எட்டிப் பார்த்தது. ரீச்சர் அதை ஒரே அமுக்காக அமுக்கி நசுக்கிக் கொண்டா. அவன் வேதனையில் துடித்தாலும் அழாமல் இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

    இரத்தினசிங்கம் மாஸ்டர், சிலவேளைகளில் காற்றோட்டம் கருதித் தனது படிப்பித்தலை ஒரு மர நிழலின்கீழ் வைத்துக் கொள்ளுவார். மரத்தின் கீழ் ஒரு கதிரையைப் போட்டு ஒரு குறுநில மன்னனாக நடுவில் இருப்பார். சுற்றிச் சூழ மாணவர்கள் ஒரு வட்டப் பாதையில் நிற்க வேண்டும். அவர் தலையில் பறவைகள் எத்தனை தடவைகள் எச்சமிட்டாலும் அவர் அந்த இடத்தை மாற்றமாட்டார். அவருக்கு என்றுமே நிழல். எங்களில் பாதிப்பேருக்கு வெய்யில். மாஸ்டரின் அருகில் நிழல் இருந்தாலும் – அவரின் கொடூரம் உணர்ந்து அந்த வேகாத வெய்யிலில் நிற்பதற்குத்தான் நாங்கள் முண்டியடிப்போம். அவரின் கற்கை நெறியில் ‘கேள்வி’களின் வகிபாகம் மூண்டின் கீழ் நாலு. கேள்விகள் அவரை மையம் கொண்டு, கடிகாரத்தின் திசையிலே அல்லது அதற்கு எதிராகவோ கடுகதி வேகத்தில் புறப்படும். கேள்விகளைவிட அவரது கையிலிருக்கும் பிரம்பு வீரியம் கொண்டது. சிலவேளைகளில் சரியான விடைகளுக்கும் அடி சரமாரியாக விழுந்திருக்கிறது.

    அன்று ஒரு விசித்திரமான கேள்வி. கேட்டுவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்க மரத்தின் பின்னால் ஒதுங்கினார்.

    “N P K என்றால் என்ன?”

    எல்லாரும் “என் பீ, என்பீ” என்று கே.பி.சுந்தராம்பாள் பாணியில் ராகமிழுத்தார்கள்.

    மாஸ்டர் திரும்பி வந்து கதிரையில் அமரும் போது, குணசேகரன் அவரைப் பார்த்து சிரிப்பது போல அவருக்குப் பட்டது. ஈரம் பட்ட வேட்டியை ஒரு தடவை குனிந்து பார்த்துவிட்டு, “எங்கை குணசேகரா நீ சொல்லு” என்று அவனை நோக்கிப் பிரம்பை நீட்டினார். மாஸ்டர் ஏதோ ஒன்றைத்தான் இப்படிப் ‘பொடி’ வைத்துக் கேட்கிறார் என நினைத்தான் அவன்.

    “வீட்டிலை சேர்!” என்றான் குணசேகரன். மாஸ்டருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

    “அப்பிடியில்லாட்டி பனை வடலிக்கை சேர்!”

    சிறுத்தை மானைப் பிடிப்பதற்கு பதுங்குவது போல பதுங்கி, பின் துள்ளி எழுந்தார் மாஸ்டர். குணசேகரன் வட்டத்தின் வழியே “இல்லை சேர். இல்லை சேர்” என்று தவளைப்பாய்ச்சல் பாய்ந்து ஓடத் தொடங்கினான். மூன்றாவது ரவுண்டிலே கலைத்துப் பிடித்தார் மாஸ்டர். சற்றே மூச்சை உள்ளே இழுத்துவிட்டுக் கொண்டு கடகடவென்று காலுக்குக் கீழே போட்டுத் தள்ளினார். அவன் ‘ஐயோ ஐயோ’ என்று கத்திக் கொண்டிருக்கும் போது, காத்திராப் பிரகாரமாக அவனது கமக்கட்டினுள் கையை விட்டு அந்தரத்திலே அவனைத் தூக்கினார். ‘ஐயோ ஐயோ’ என்ற சத்தம் பூமியிலிருந்து வானுக்குக் கிழம்பியது. அங்கிருந்தபடியே தொப்பென்று குணசேகரனைக் கீழே போட்டார்.

    “போய் நடுவிலை வெறுங்குண்டியோடை இரு. பாடம் முடியும் வரையும் எழும்பக்கூடாது.”

    குணசேகரன் காற்சட்டையை மெதுவாக நெகிழ்த்தி சுடுமண்ணில் குந்தினான்.

    இந்த அடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில்தான் நான் அநேகமாக பெண்பிள்ளைகளுக்குப் பக்கத்தில் நிற்பேன். அதுவும் பாலசுந்தரிக்குக் கிட்ட நின்றால் கேட்கத் தேவையில்லை. அவள் இரத்தினசிங்கம் மாஸ்டருக்கு உறவு. அவளும் நான் பக்கத்தில் நிற்பதைத்தான் விரும்புவாள். சிலவேளைகளிலை நாகநாதனும் போய் நிற்கப் பார்ப்பான். ‘ஓடு’ என்று அவனைக் கலைச்சுப் போட்டு ‘நீ வா’ என்று என்னைத்தான் கூப்பிடுவாள் அவள்.

    இவ்வளவு கலாட்டாவும் நடந்து கொண்டிருக்கும்போது, செல்வகுமாரன் மூச்சிரைக்க – மாடு நுரை தள்ளும் கோலத்தில் – அங்கே வந்து நின்றான். மாஸ்டர் அவனைக் கண்டும் காணாதது மாதிரி முகத்தை திருப்பி வைத்துக் கொண்டார்.

    “சேர் உள்ளே வரலாமோ?”

    “N P K எண்டால் தாவரங்கள் வளருவதற்குத் தேவையான மிக முக்கியமான கனியுப்புக்கள் என்பது அர்த்தமாகும். நைதரசன் பொசுபரசு பொட்டாசியம் என்பவற்றையே அந்த மூன்று எழுத்துகளும் குறிக்கின்றன” மாஸ்டர் விளக்கம் தந்தார்.

    “சேர் உள்ளே வரலாமோ? வரலாமோ சேர்?” விடாமல் சிணுங்கியபடி நின்றான் செல்வகுமாரன்.

    இரத்தினசிங்கம் மாஸ்டரின் காது விரிந்து சுருங்கியது. செல்வகுமாரனின் இடைவிடாத ரீங்காரம் அவரின் காதுகளை இம்சை செய்திருக்க வேண்டும். மூக்குப்பொடியை எடுத்து அதீதமாக உள்ளிழுத்ததில் காது மடலிற்குள் செருகியிருந்த பென்சில் கீழே விழுந்தது.

    “போ! போய் அந்த மண் கும்பானுக்குக் கிட்ட வெய்யிலிலை நில்” கர்ச்சித்தார் சிங்கம். செல்வகுமாரன் தலையைக் குனிந்தபடி போய் மண்மேட்டிற்குக் கிட்ட நின்றான். சூரிய ஒளி நேரே அவன் முகத்தில் விழுந்தது. கண்கள் கூசியது. வெப்பம் அதிகமாக தலை மெல்ல சுற்றுவது போல இருந்தது அவனுக்கு.

    புத்தகத்தை மாணவன் ஒருவன் வாசிக்க, காது குடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார் மாஸ்டர்.

    ‘ஆ!’ என்றொரு மெல்லிய சத்தம். சுற்றுமுற்றும் பார்த்தான் குணசேகரன். மண் திட்டியில் நின்ற செல்வகுமாரனைக் காணவில்லை.

    “சேர்! செல்வகுமாரன் விழுந்திட்டான் சேர்” கத்திக் கொண்டே காற்சட்டையைத் தூக்கிக் கொண்டு எழும்பினான் குணசேகரன். மண் திடலிற்குப் பின்புறமாக, மண்டை அடிபட விழுந்து கிடந்தான் செல்வகுமாரன். கூரிய கல்லொன்று அவனது தலையைக் குத்திக் கிழித்திருந்தது. மயங்கிப் போன நிலையில் இருந்த அவனைத் தூக்கிக் கொண்டு இரத்தினசிங்கம் மாஸ்டர் ஒஃபீஸ் நோக்கி ஓடினார். அவரது வேட்டி சட்டை எல்லாம் இரத்தமயமாகிக் கிடந்தது. செல்வகுமாரனுடைய தலை கவிழ்ந்து தொங்கியது.

    நாங்கள் செய்வதறியாது திக்கொன்றாய் ஓடினோம்.

    அதிபரின் அறையின் முன்னால் வாங்கொன்றில் அவனைக் கிடத்தியிருந்தார்கள்.

    “ஆராவது கெதியிலை போய் கந்தசாமியின்ரை காரைப் பிடிச்சுக் கொண்டு வாங்கோ. மேற்குப் புற கோயில் வீதியிலை கந்தசாமி நிற்பான்” அதிபர் சத்தம் போடுகின்றார். பாடசாலைக்கு முன்பாக நிறையப் பேர் கூடிவிட்டார்கள். தியாகராஜா மாஸ்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு பாடசாலை வளவை விட்டு வெளியேறுகின்றார்.

    “உவர் இனி நத்தை மாதிரி ஊர்ந்து போய் வாறதுக்குள்ளை எல்லாம் முடிஞ்சிடும்.”

    சைக்கிள் பெரலிலை காலை வைச்சுக் கொண்டு கெந்தி ஏறும்போதே தியாகராஜா மாஸ்டர் விழப் பாத்திட்டார். பத்தாம் வகுப்புப் படிக்கும் யோகன் அதிபருடன் கதைத்துவிட்டு, சைக்கிளை எடுத்துக் கொண்டு தியாகராஜா மாஸ்டரையும் உன்னிக் கொண்டு விண்ணெண்று பறக்கின்றான்.

    இருவரும் போய்க்கொண்டிருக்கும் போதே மறுபுறத்திலிருந்து கந்தசாமியின் கார் வந்தது. யாரோ தகவல் குடுத்திருந்தார்கள். கந்தசாமி காரின் பின்புறம் திறந்து, துணிகளை எடுத்துவந்து சீற்றினில் பரப்பினான். இரத்தினசிங்கம் மாஸ்டர் கந்தசாமியின் உதவியுடன் செல்வகுமாரனைத் தூக்கிக் கொண்டு காரின் பின்புறம் ஏறினார். அதிபர் யாருடனோ தொலைபேசியில் கதைத்துவிட்டுக் காருக்குள் ஏறினார். கார் வைத்தியசாலை நோக்கிப் பறந்தது.

    அதன்பிறகு செல்வகுமாரனின் தந்தையும் தாயும் தலையிலடித்துக் குழறியபடி வந்தார்கள். அவர்களின் மற்றப்பிள்ளைகளும் பெற்றவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். பாடசாலை வளவிற்குள் நெடுநேரமாக ஆக்கள் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் எல்லாரையும் வகுப்பறைக்குள் போய் இருக்கும்படி உப அதிபர் சொன்னார்.

    எங்கள் புத்தகம் கொப்பிகள் மரத்தடியில் போட்டபடி கிடந்தன. அவற்றை எடுப்பதற்காக மரத்தடிக்குப் போனேன். மண் திடலிற்குக் கிட்ட பாலசுந்தரி குனிந்து எதையோ பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் நெஞ்சு விம்மித் தணிகிறது. நான் பின்னாலே சென்று பார்த்தேன். கூரான கல்லில் இரத்தக்கறை படிந்திருந்தது. கல்லுக்குப் பக்கத்தில் உடைந்த மண்டையோட்டின் துண்டு ஒன்றை எறும்புகள் மொய்த்தவண்ணம் இருந்தன. அவள் கண்கள் கலங்கியபடி குந்தியிருந்தாள். ‘வா வகுப்புக்குப் போவம்.’ அவள் அழத் தொடங்கினாள். அவளையும் கூட்டிக் கொண்டு வகுப்பறைக்கு வந்து சேர்ந்தேன். அதன் பிறகு எங்களுக்குப் படிப்பு நடக்கவில்லை.

    மதியம் கழிந்த நிலையில் – அதிபர் ஹொஸ்பிட்டலில் இருந்து பாடசாலைக்குத் தொலைபேசி எடுத்தார். பூச்சி இறந்து போய் விட்டதாக தகவல் சொன்னார். காரில் போகும் போது, இடைவழியில் கண் முழித்து ஒரு தடவை ‘அம்மா’ என்று கூப்பிட்டதாகவும், ஹொஸ்பிட்டல் போய் சேர்வதற்குள் அவன் இறந்து போய் விட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்.

                                ********  ********  *******

     இரத்தினசிங்கம் மாஸ்டருக்குப் பக்கத்தில் போய் நின்றேன்.

    “சேர்! என்னைத் தெரியுதா சேர்”

    “தம்பியை மட்டுக் கட்டேலாமல் கிடக்கு.”

    “என்ரை பெயர் தயாளன். உங்களிட்டைப் படிச்சனான்.”

    “என்ரை கண் பார்வையும் இப்ப மங்கிப் போச்சு. எந்த ஆண்டு மட்டிலை என்னட்டைப் படிச்சிருப்பீர்?”

    “சேருக்குப் பூச்சியை நினைவிருக்கா? செல்வகுமாரன் எண்டு பெயர். சின்ன வயசிலேயே தவறிப் போனான்.”

    மாஸ்டரின் முகம் சுருங்கிப் போனது.

    “அதடா தம்பி என்ரை வாழ்க்கையிலை நடந்த ஒரு கெட்ட கனவு. அப்படியே மனசில ஆழமாப் பதிஞ்சு கிடக்கு. ஒரு மாறாத வடுப் போல. உம்முடைய பெயர் என்ன சொன்னனீர்? தயாளனோ? இப்படி ஒருக்காக் கொஞ்சம் திரும்பும் பார்ப்போம்.”

    நான் அவரை நோக்கித் திரும்பினேன்.

    “உம். இப்ப தெரியுது” பெருமூச்சு விட்டார் மாஸ்டர்.

    இப்பொழுது எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டார்? எனக்கு வியப்பாக இருந்தது.

    “மண்ணிலை பிறக்கேக்கை எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத்தான் பிறக்கினம் எண்டு சொல்லுவினம். எனக்கு அதிலை நம்பிக்கை இல்லை. ஒரு சிலர் குறைகளோடையும் வந்து பிறந்து விடுகிறார்கள். நான் அடங்காத கோபத்தோடை வந்து பிறந்து விட்டேன். என்னுடைய குடும்பத்திலை என்னைப் போல இப்படியான குணத்தோடை ஒருத்தரும் இல்லையெண்டுதான் சொல்லுகினம். அம்மா கூடச் சொல்லுவா – இந்தச் சண்டாளனைப் போல ஒருத்தரும் எங்கடை பரம்பரையிலை இல்லையெண்டு. ஆனாத் தம்பி, எங்கையோ ஒரு அடி ஆழத்திலை – எங்கட பரம்பரையிலை – என்னைப் போல ஒரு ஆள் இருந்திருக்க வேணும். அது பரம்பரை அலகுகளுக்கூடாக என்னை வந்து சேர்ந்திருக்க வேணும்.

    இப்ப உம்மையே எடுத்துக் கொள்ளுவம். உம்முடைய காதைப் போல – சுளகுக் காதோடை ஆராவது உம்முடைய குடும்பத்திலை இருக்கினமா?”

    பிள்ளையார் காது! சுளகுக்காது!! இதை வைத்துத்தானா என்னை அவர் அடையாளம் கண்டு கொண்டார்!

    “சேர் என்னுடைய அம்மா சொல்லுறவா, என்னுடைய அம்மம்மாவின் தம்பி ஒருவருக்கும் இப்படிக் காது இருந்ததாம்.”

    “பார்த்தீரா தம்பி! மனிதனுடைய உடற்கலங்களிலை இருக்கிற நிறமூர்த்தங்களிலை உள்ள பரம்பரை அலகுகள் செய்யிற வேலையை. எப்பவோ ஒருக்கா அது தன்னுடைய வேலையைக் காட்டிப் போடுது. உடலிலை ஏற்படுகிற இந்தக் குறைபாடு ஒருவருடைய வாழ்நாளிலை மாற்றமடைகிறதில்லை. ஆனா உள்ளத்திலை ஏற்படுகிறது சிலருக்கு காலத்தோடை குறைஞ்சு போய் மறைந்து விடுகிறது” மாஸ்டர் சலித்துக் கொண்டார்.

    என்னுடைய நண்பர்கள் – மாஸ்டரிடம் படித்தவர்கள் ஒவ்வொருவராக வந்து என் பின்னே நிற்கின்றார்கள்.

    “தம்பி தயாளன், என்ரை கழுத்திலை இருக்கிறதை ஒருக்கா தடவிப் பாரும்” சிரித்தபடியே கழுத்தை என் முன்னே நீட்டினார்.

    அவருடைய கழுத்திலே ‘கோல்ஃ போல்’ (Golf ball) அளவிற்கு ஒரு உருண்டை திரண்டு இருந்தது. அது பந்து போல அங்கும் இங்கும் உருண்டு ஓடியது.

    “சேர் இதை ஒப்பரேஷன் செய்யலாமே!”

    “செய்யலாம்தான். செய்தால் செத்துப் போவன். இந்த வயதிலேயே சாகிறதுக்குப் பயப்பிடுகிற எனக்கு, ஒரு பையனைக் கொல்லுறதுற்கு மனம் வருமா? பிள்ளையள் ஒழுங்காகப் படிக்கவேணும் எண்டதுக்காகத்தான் வாத்திமார் அடிக்கிறவை. கோபம் கொள்ளுறவை. என்ரை இரண்டு பிள்ளையளுக்கும்கூட படிப்பிலை கவனம் செலுத்தாத வேளையிலை அடி போட்டிருக்கிறன். என்ன கொஞ்சம் கண் மண் தெரியாமல் அடிச்சுப் போடுவன்.

    என்னவோ விதித்தபடிதான் எல்லாம் நடக்கும். அந்தப் பையனின் பெற்றோர் சகோதரர் நண்பர்களுக்கு இருக்கும் வலி என்னவென்று புரிகிறது. இந்தக் கோபத்தை நிறுத்துகிறதுக்கு நான் நேராத கோயில் இல்லை. செய்யாத வைத்தியமில்லை. யோகா கூட செய்து பாத்தனான். குறைந்ததேயொழிய முற்று முழுதாக என்னை விட்டுப் போகவில்லை. கோபம், வெறி எல்லாம் காலம் என்ற நீட்சியுடன் மூப்பை நோக்கி நகர பரிணாமமடைந்து முற்று முழுதாக மறைந்து விடுகிறது. இப்ப எனக்கு எதுவுமே இல்லை.”

    “சேர் உங்கடை கழுத்திலை இருக்கிற அந்தக் கட்டி எப்பிடி வந்தது சேர்?” பின்னாலே நின்றவர்களில் ஒருவன் கேட்டான்.

    “நல்ல கேள்வி. சொல்லுறன். செல்வகுமாரன் இறந்து ஒரு கிழமை இருக்கும். நான் தெருவாலை போய்க் கொண்டிருக்கேக்கை ஒரு மாணவன் பனை வடலிக்குள்ளை இருந்து எனக்குக் கல்லால் எறிந்தான். அதாலை வந்த காயம் இது. என்னுடைய கோபம் குறையக் குறைய இது பெருத்துக் கொண்டே போகிறது” இரத்தினசிங்கம் மாஸ்டர் புன்முறுவல் செய்கின்றார்.

    எனது நாத் தழுதழுக்கிறது. ஓவென்று அழுது விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

    “சேர்! சேர்!!”

    “சொல்லும். சொல்லும் தம்பி.”

    “அந்தக் கல்லை எறிந்தது நான்தான் சேர்!”

    “எனக்கும் தெரியும்!” என்றார் மாஸ்டர் – ஒரு குழந்தையைப் போல.

    Share
  • தப்பி ஓடிய கைதி!

    -தாரமங்கலம் வளவன்

    கான்ஸ்டபிள் செங்கோடனால் முடிவு எடுக்க முடியவில்லை.

    ஏற்கனவே சுகுணாவின் அப்பா அம்மாவைப் பார்த்து,  வெள்ளிக்கிழமை அதாவது நாளை தன் அப்பா அம்மாவைக் கூட்டிக் கொண்டு பெண் பார்க்க வருவதாகச் சொல்லி அவர்களிடம் சம்மதம் வாங்கி இருந்தான்.

    சுகுணாவும் லீவு போடுவதாகச் சொல்லி இருந்தாள்.

    அதற்குள் இப்படி ஆகி விட்டது.

    அவளிடம் தான் சஸ்பென்ஸன் ஆகி உள்ளதைச் சொல்லி, நாளைக்கு பெண் பார்க்க வருவதாக இருந்ததை நிறுத்தி விடலாமா என்று யோசித்தான்.

    தான் சஸ்பென்ஸன் ஆகி உள்ள விஷயத்தை மட்டும் அவளிடம் சொல்லி, உனக்குச் சம்மதம் என்றால், அப்பா அம்மாவைக் கூட்டிக் கொண்டு வருகிறேன், இல்லையென்றால், பெண் பார்க்க வருவதை நிறுத்தி விடலாம் என்று கேட்டுப் பார்க்கலாமா…

    அப்படிக் கேட்டுப் பார்த்தால் அவளுடைய மன நிலை தெரியுமா…?

    தானும் ஒரு கான்ஸ்டபிள் என்பதினால் இந்த சஸ்பென்ஸன் விஷயத்தை புரிந்து கொண்டு பெண் பார்க்க வாருங்கள் என்று அவள் சொல்வாளா…?

    அப்படியே அவள் ஒப்புக் கொண்டாலும், அவள் வீட்டில் உள்ள மற்றவர்கள் ஒப்புக் கொள்வார்களா…? அவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

    தன் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வாளா…அல்லது இந்த சஸ்பென்ஸன் விஷயத்தைத் தன் அப்பா அம்மாவிடம் சொல்லி விடுவாளா…

    இது தற்காலிகப் பணி நீக்கம் என்பதையோ, தன்னிடமிருந்து தப்பித்த கைதி திரும்பவும் கிடைத்தால்  சஸ்பென்ஷனை வாபஸ் வாங்கி விடுவார்கள் என்பதையோ அவர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள்?

    தான் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷனில் சுகுணாவைப் பற்றியோ அவள் எந்த போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்கிறாள் என்றோ தன்னுடன் வேலை செய்யும் மற்ற போலீஸ்காரர்களுக்கு அவன் எதுவும் சொல்லவில்லை.­­

    தனக்கு ஒரு பெண் கான்ஸ்டபிள் மனைவியாக வருவதைப் பற்றி

    மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள் என்று நினைத்தான்.

    அவளை பெண் பார்க்க போகப் போவது பற்றி கூட உடன் வேலை செய்யும் மற்ற போலீஸ்காரர்களிடம் அவன் சொல்லவில்லை.  வேறு ஏதாவது காரணம் சொல்லி லீவு கேட்பதாக இருந்தான்.

    இப்போது லீவு கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல், சஸ்பென்ஷன் ஆர்டரைக் கையில் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.

    இரவு பூராவும் யோசித்தான்.

    கடைசியில் தன் அப்பா அம்மா உட்பட யாரிடமும் சொல்லப் போவதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்தபடி சுகுணாவைப் பெண் பார்க்க போவது என்றும் முடிவு எடுத்தான்.

    பெண் பார்த்து முடியும் வரைக்கும் இந்த சஸ்பென்ஷன் ஆன விஷயம் தெரியாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்று மனதில் பட்டது அவனுக்கு. அப்புறம் கல்யாணத் தேதி முடிவு செய்ய நாள் ஆகும். அதற்குள் தப்பிப் போன கைதி பிடிபட்டால், சஸ்பென்ஷன் ஆர்டரை டிபார்ட்மெண்ட்டில் வாபஸ் பெற்று விடுவார்கள்.

    “இது டவுன் பஸ் இல்ல… இந்த ஸ்டாப்ல நிக்காது..  நீங்க போலீஸ்னு சொன்னதனால  நிறுத்தறோம்.. சீக்கிரம் எறங்குங்க…” என்று சொல்லி அவசரப்படுத்தினார் கண்டக்டர்.

    அப்பாவையும், அம்மாவையும் வேகமாக இறங்கச் சொல்லி தானும் இறங்கினான் செங்கோடன்.

    தன் மகன்  போலீஸ்காரன் என்று அப்பா கண்டக்டரிடம் சொல்லி இருக்க வேண்டும்.

    செங்கோடனுக்கு சுருக்கென்றிருந்தது; தான் இன்னமும் போலீஸ்காரன் தானா…?

    அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருப்பது குறித்து, குற்ற உணர்வால் மனம் அடித்துக் கொண்டது.

    மூவரும் நடக்க அரம்பித்தார்கள்…

    அப்பாவின் முகத்தைப் பார்த்தான்.

    பெண் பார்க்க போகும் போது இருக்க வேண்டிய சந்தோசம், அப்பாவுக்கு இல்லை. அப்பாவின் முகம் கடுகடு என்று இருந்தது.

    நியாயமாகப் பார்த்தால் லட்சுமியைக் கல்யாணம் செய்துகொள்ள அவன் மறுத்ததற்கு அம்மாதான் கோபப்பட வேண்டும். ஏனெனில் லட்சுமி தாய் மாமனின் மகள்.

    ஆனால், அம்மாவை விட அப்பாவிற்குத்தான் கோபம் அதிகம்.

    ஒரு வேளை போலீஸ் யூனிபார்மில் சுகுணாவைப் பார்த்திருந்தால், அப்பாவுக்கு பிடித்துப் போயிருக்குமோ…

    அல்லது, இந்த போலீஸ்காரி மருமகளாக வந்து என்ன செய்யப் போகிறாளோ என்று அவர் பயந்து போயிருப்பாரோ..?

    சுகுணாவைப் பற்றிய நினைப்பில் கொஞ்சம் கவனக்குறைவாகத் தான் இருந்து விட்டதாகத் தோன்றியது அவனுக்கு.

    சுகுணா அவனைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்த பிறகு அவன் மனம் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்தது.

    அந்தக் கைதி தப்பிக்க அது தான் காரணமா…?

    ஒருக்கால் சுகுணாவிற்கு விஷயம் தெரியும்போது, உன்னுடைய நினைப்பினால்தான் நான் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டேன், அதனால்தான் இந்தத் தவறு நடந்து விட்டது என்றால் அவள் ஒப்புக் கொள்வாளா…?

    அதற்குள், “வாங்க.. வாங்க.. நான் பொண்ணோட சித்தப்பா… உங்கள கூட்டிக்கிட்டு போகத்தான் காத்திட்டுக்கிட்டு இருக்கேன்..” என்று ஒருவர் பஸ் ஸ்டாப் டீக்கடையிலிருந்து வெளிப்பட்டார்.

    “உட்காருங்க… டீ குடிச்சிட்டுப் போகலாம்.” என்று அவர் சொல்ல, பஸ்சில் வந்த களைப்பில் அப்பாவும் அம்மாவும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். இருவருக்கும் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

    செங்கோடனுக்கு லட்சுமியைப் பற்றிய ஞாபகம் வந்தது.

    சின்ன வயதிலிருந்து தன் அண்ணன் மகள் லட்சுமிதான் தனக்கு மருமகள் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள் அம்மா. அவனும் லட்சுமிதான் தனக்கு வரப் போகிறவள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். லட்சுமியிடம் பேசும்போதுகூட அந்த மாதிரியான எண்ணங்களை அவளிடம் உருவாக்கியது உண்டு.

    மாமனுக்குச் சொத்து என்று ஒன்றும் கிடையாது. இருந்த முக்கால் ஏக்கர் நிலத்தையும் அவர் விற்று, அத்தையின் வைத்தியச் செலவுக்காகக் காலி பண்ணிவிட்டார். வைத்தியம் பலிக்காமல் அத்தை போய்ச் சேர்ந்து விட, இப்போது மாமனும், லட்சுமியும், நடவு வேலை, அறுப்பு வேலை என்று கூலி வேலைக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். செங்கோடனுக்கு போலீஸ் வேலை கிடைத்தவுடன், அவனுக்கு லட்சுமி வேண்டாம் என்று மனதில் தோண ஆரம்பித்து விட்டது.

    அவன் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷனில் பெண் கான்ஸ்டபிள் யாரும் கிடையாது. கோர்ட்டுக்கு போகும் போது பெண் கைதிகளைக் கூட்டிக் கொண்டு வரும் பெண் கான்ஸ்டபிள்களைப் பார்த்திருக்கிறான். யூனிபார்மில் இருக்கும்  பெண் கான்ஸ்டபிள்கள் அவன் மனதைக் கவர்ந்தார்கள். அப்போதுதான் அவன் முடிவு செய்தான், கான்ஸ்டபிளாக வேலை செய்யும் ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று.

    அப்படி இருக்கும் போது தான், சுகுணாவைப் பார்த்தான். ஒரு பெண் கைதியைக் கோர்ட்டுக்குக் கூட்டி வந்திருந்தாள். முதலில் அவளிடம் பேசி அவளைச் சம்மதிக்க வைத்தான். பிறகு தன் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல், சுகுணாவின் அப்பா அம்மாவை ஒரு நாள் போய்ப் பார்த்து அவர்களையும் சம்மதிக்க வைத்தான்.

    பிறகு தன் அப்பா அம்மாவிடம் சொல்லிச்  சம்மதிக்க வைத்து, பெண் பார்க்கக் கூட்டி வந்தாயிற்று.

    அதற்குள் இப்படி ஒரு சஸ்பென்ஷன்…

    கடைவீதியில் நடந்த தகராறில், இந்தக் கைதி ஒருத்தனின் கையை வெட்டியவன்.

    அவனைச் செங்கோடன் கோர்ட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகும் போதுதான் அவன் தப்பி விட்டான்.

    சுகுணாவின் சித்தப்பா, அப்பா அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க, எதிர்ப் பக்கம் ஒரு நபர் மூச்சு இறைக்க ஓடி வந்தார். அந்த ஆள் சைகை காட்டி அந்தச் சித்தப்பாவைக் கூப்பிட, “ இருங்க ஒரு நிமிஷம்…” என்று சொல்லி விட்டு அந்தச் சித்தப்பா ஓடி வந்த நபரிடம் சென்றார்.

    இருவரும் ஏதோ பேசிக் கொண்டார்கள்.

    திரும்பி வந்த பெண்ணின் சித்தப்பாவின் முகம் கடுகடு என்றிருந்தது.

    நேரிடையாக அப்பாவிடம் சென்றவர், “என்னங்க இப்படி மோசம் பண்ணீட்டீங்க.. மாப்பிள்ளைக்கு வேலை போயிடிச்சாமே… சஸ்பெண்ட் ஆயிட்டாராமே.. இதை ஏன் எங்ககிட்ட சொல்லலை…” என்றார்.

    அப்பாவும் அம்மாவும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, செங்கோடன் பக்கம் திரும்பினார்கள்.

    செங்கோடன் பதில் சொல்வதற்குள், சுகுணாவின் சித்தப்பா கோபமாய், “ வேலை திரும்பக் கெடைக்கட்டும்… அப்புறம் பாத்துக்கலாம்னு அண்ணன் சொல்லி அனுப்பிச்சிருக்காரு…” 

    வீடு வந்து சேரும் வரை அப்பா எதுவும் பேசவில்லை..

    அப்பா பேசாமல் இருப்பதைப் பார்த்து செங்கோடன் விளக்க வேண்டியதாகிப் போய் விட்டது.

    “ஒரு கைதியை கோர்ட்டுக்குக் கூட்டிக்கிட்டு போனேன்.. வழியில அவன் தப்பிச்சிட்டான்… அதனால வேலையிலிருந்து சஸ்பெண்ட் பண்ணி வைச்சி இருக்காங்க.. ரூல்ஸ்படி அப்படித்தான் பண்ணியாகணும்… கைதியைத் தேடிக்கிட்டு இருக்காங்க டிபார்ட்மெண்ட்ல.. கைதி திரும்பக் கெடைச்சா வேலைக்குத்  திரும்ப கூப்பிட்டுக்குவாங்க…”

    ரொம்ப அவமானப்பட்டு போனதாக நினைத்துப் பேய் அறைந்தது போல் உட்கார்ந்து இருந்தார் அப்பா. அம்மாவும் எதுவும் பேசவில்லை.

    சூரியன் மறையும் நேரம்…

    வீட்டு ஜன்னலின் மறுபுறம் இருந்து ஒரு குரல்..

    “மாப்பிள்ள… ஒரு நிமிஷம்…”

    எட்டிப் பார்த்தால் மாமன் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார்..

    ”நான் வேல முடிஞ்சி வீட்டுக்குப் போனேன்.. லட்சுமி தலைவலின்னு சொல்லிப்  பவானி ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறதா பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க.. நா வந்தா உங்களயும் கூட்டிக்கிட்டு நம்ம இரண்டு பேரையும் ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னாளாம்.. எனக்கு பயமா இருக்கு.. ஒரு வேள நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கலேன்னு ஏதாவது விஷம் சாப்பிட்டாளோன்னு பயமா இருக்கு.. பணம்லாம் எதுவும் வேணாம்.. எங்கிட்ட இருக்குது பணம்…. நீங்க போலீஸ்ங்கறதனால வந்து உதவி செஞ்சா போதும்…. ”.

    அழுது விடுவார் போலிருந்தது.

    “அவளே நடந்து ஆஸ்பத்திரிக்கு போனான்னு சொல்றீங்க.. விஷம் சாப்பிட்டிருந்தா எப்படி போயிருக்க முடியும்.. அதுவும் தலைவலின்னு சொல்லிட்டுப் போனாதாச் சொல்றீங்க.. ”

    “அதுதான் எனக்கும் புரியல மாப்பிள்ள..” என்றார் மாமா.

    நேரடியாக ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள் இருவரும். ஆண்கள் வார்டு பக்கம் போகும் போது அங்கே சத்தமாக இருந்தது. ஒரே கூட்டமாய் இருந்தது..

    ”என்ன கலாட்டா?” என்று செங்கோடன் கேட்டான்.

    “ஒரு பொண்ணு கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கா. அந்தப் பொண்ண அவ புருஷன் ஏமாத்திட்டானாம். வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டானாம். சும்மா நெஞ்சுவலின்னு வந்து படுத்துக் கிட்டானாம்.. அவ வந்து சத்தம் போடறா..”

    கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு போய்ப் பார்த்தான்.

    அந்தப் பெண் லட்சுமி. அந்த ஆண், செங்கோடனிடம் இருந்து தப்பித்து ஓடிய கைதி.

    வியப்பின் உச்ச கட்டத்துக்குப் போன செங்கோடன், முதலில் ஓடிப் போய் அந்த கைதியின் காலரைப் பிடித்துக் கொண்டான். பிறகு பக்கத்தில் இருந்த ஒருவரின் தோளில் இருந்த துண்டை எடுத்து அந்தக் கைதியின் கைகள் இரண்டையும் பின்பக்கமாகச் சேர்த்துக் கட்டினான்.

    லட்சுமியைப் பார்த்து, “இது என்ன விளையாட்டு…” என்று கேட்டான்.

    அதற்கு அவள்,

    “அந்தக் கைதிக்கு எதிரிங்க இருப்பாங்க போலிருக்கு… இரண்டு பேரு வந்தாங்க அவனைக் காட்டிக் கொடுக்கிறதுக்காக.. உங்க வீட்டுக்கு போறதுக்கு பயந்துகிட்டு, என் அப்பாவைத்  தேடி எங்க வீட்டுக்கு வந்தாங்க.. அந்த சமயத்தில அப்பா வீட்ல இல்ல.. நான் என்னா விஷயம்னு கேட்டேன்.. இந்த மாதிரி உங்க மாமாகிட்ட இருந்து தப்பிச்சி ஓடின கைதி ஆஸ்பத்திரியில சும்மா படுத்துகிட்டு இருக்கான்னு சொன்னாங்க…  வந்தவங்கள கூட்டிக்கிட்டு இந்த ஆஸ்பத்திரிக்கு நான் ஓடியாந்தேன்… நீ வர்ற வரைக்கும்  அவன் தப்பிச்சி போகாம பாத்துகிறதுக்காக, சும்மா அவன் கிட்ட வம்பு இழுத்தேன். நீ வருவேன்னு தெரியும்.” என்றாள்.

    கொஞ்சம் இடைவெளி விட்டு,

    “இப்ப இவன் கெடைச்சிட்டான் இல்லியா.. உனக்குப் போன வேலை திரும்ப கெடைச்சிடுமா….”  ஆவலாய்க் கேட்டாள் லட்சுமி செங்கோடனிடம்.

    “ஆமா,  வேலை திரும்பக் கெடைச்சிடும்… சஸ்பென்ஷனை வாபஸ் பண்ணிப்பாங்க.. எனக்கு சஸ்பென்ஷன் ஆயிடிச்சுன்னு தெரிஞ்ச உடனே சுகுணா வீட்டுக்காரங்க இந்தக் கல்யாணம் வேணான்னு சொல்லி நிறுத்திட்டாங்க. உன்ன விட்டுட்டு அவளக் கல்யாணம் செய்ய நெனச்சது தப்பு தான்.. அதுக்குத்தான் கடவுள் இந்தத் தண்டனையை கொடுத்தார்னு நெனக்கிறேன்.. என்ன மன்னிச்சுடு…  இப்ப என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா..” என்றான் செங்கோடன் லட்சுமியிடம்.

    அதைக் கேட்ட மாமா,

    “என்ன மாப்பிள்ள.. மன்னிச்சுடுன்னு, பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு.. கடைசியில கடவுள் நமக்கு நல்ல வழி காண்பிச்சுட்டாரு பாருங்க.. ” என்றார்.

    அதைக் கேட்ட லட்சுமிக்கு சந்தோசத்துடன் கூடிய வெட்கம் ஏற்பட்டது.

    Share
  • Chithi

    Bhuvaneshwar

    I was a little girl those days. We lived in a village near Nagarkovil, in the extreme south of Tamil Nadu. My father worked as a supervisor in the rice mill in Nagarkovil. He was a good man, but a rather strict father with stern features. I do not remember having seen him laugh or joke in the home, as far as I can remember. The slightest infraction in discipline invited application of the dreaded cane. He was a figure of authority, more respected and feared than loved.

    Mother stayed at home and took care of us. She was a house wife. She was a sweet woman and my favourite at that age. She would make my favourite coconut burfi during festivals and my birthday. Father’s income must have been meagre, for we hardly ever visited the thatched theatre to watch movies. Father must have been an austere man; he would use the same set of clothes and sandals till they were no longer fit to be used. Same rule applied to mother.

    She had a day full of domestic labour and I am sure she slept light, as I remember whenever I woke up in the night for water or to visit the bathroom, she would be up too. I always slept in her arms, and she would pat me to sleep. I knew no fears while she was around. I hardly ever remember her beating me, I doubt if she ever did.

    I went to the local government school. Leela was my best friend. She was 2 years older than I was and lived in one of the houses in our street. We used to play paandi and pallaankuzhi in the evenings and holidays. I always wished I had the long luscious shiny straight black hair like she did. I had curly hair and it was short. Every morning her mother would spend half an hour to oil her hair and plait it into a braid.

    I and Leela would go to the Isakki Amman temple every day, on our way home, from School. It was no big temple. Just a small shrine under a Banyan tree with an idol of Isakki Amman installed. On Fridays and Tuesdays a Poojaari with a big moustache and pot belly would come and do Poojas and give us lemon fruit as prasadham. We once made lemon juice from the fruits to drink, and got scolded by our parents.

    We had heard that Isakki was a girl like us a long time ago and that her father married another lady after the death of her mother. The second wife of her father – Chithi – was a cruel lady who beat Isakki for everything and did not feed her properly. One day, she saw Isakki giving water to a thirsty cowherd boy and talking to him. She made up a story that there was an affair between them and spread the same in the town. The whole town abused Isakki and the poor Isakki hung herself. From then on, she is believed to haunt the banyan tree and they built a temple for her. She was believed to be a powerful goddess and we all believed she would make us pass in the exams and protect us by preventing maths miss from beating us when we scored low.

    The unending labour at home and the rice-husk-ash from the husk-stove took its toll on my mother’s health. She fell ill and remained ill for 4 months. I do not know what father felt about it, but I could not see any grief in him. But he did not scold mother like before, when she could not do all the chores in time.

    My mother, towards the end of her life, was closer to me than ever. She would talk to me about my future and the dreams she had about me, many nights, as father was in office, doing over-time, to meet mother’s medical expenses. She wanted me to study well, and become a doctor so that I could help people.

    One night, she had severe coughs, and the cough syrup we had had little effect. Father was in office and I was afraid. I asked her if I should run and bring father so that we could go to hospital. She said that was of no use. She asked for some warm water and held me close to her bosom and asked me to study well and take care of my father. She said he was a very good man who loved both of us. She said the God she prayed to will be with me and protect me always, when she is not with me. I asked her if she was going anywhere. She looked into my eyes, kissed me and gave a wry smile… She said she was going to see her mother. She blessed me again and we slept. Her eyes were moist and I remember that expression on her face like today. I slept with my arms around her neck. She sung her favourite lullaby softly and patted me to sleep. I do not know when I dozed off.

    Next morning, she did not respond to my calls – she was no more. I had never seen father shed a tear, till that day. It did not matter to me then, the only person who loved me was carried away and burnt. All I had of my mother were her saree and her ashes in a little copper urn.

    Father’s mother – my grandmother came to live with us, after my mother’s death. A term later, my grandmother told me that I would have a new mother. A chithi. She told me that my father should not be alone, raising a young girl and that I must have a mother.

    Leela was more terrified of the prospect than was I. She chided me “You foolish girl, did you agree to your father’s marriage?” as if my permission was sought.

    I said “What do you think I should do?”…

    She did not answer my question but asked me to be careful – “I don’t know. But be prepared to get more beatings if your chithi comes. We know from movies and stories, how chithies are”.

    And to top it all, when we went to Isakki’s temple, she reminded me of Isakki’s history and how she died. Now I was terrified. Leela had to tell me a way out.

    She said “Atleast pray to Isakki that your chithi should not have Children”. And I prayed like that every day for 2 years.

    So, the wedding happened we had a good feast, and a well-dressed and decorated chithi came home, much against my muffled wishes.

    My initial resentment towards her was twofold – I could not brook anyone taking my mother’s place in the home, and I was also afraid that she will be cruel. It did not help that she did not make my favourite coconut burfis like my mother.

    My father was his usual self. One night when chithi had gone to visit her brother’s new baby, I saw him holding my mother’s photo on his chest when sleeping. I silently cried.

    But as I grew up, things changed. I could see a bit beyond the veil of my prejudices. Chithi was not what I expected. I did not know her age, but she must have been younger than my mother. I inferred that as I grew up, because many strangers we met used to ask if I was her younger sister.

    Chithi never beat me or scolded as I expected. This was a peculiar lady, to me. How could a chithi be good? I even thought if she had some silent evil plan! Three years rolled by. We got along well, but nothing special was there between us.

    One day, I broke the wall-lamp while pouring oil and my grandmother was livid – “You broke the 20 year old lamp! A girl child with such carelessness….” – My chithi intervened and prevented her from beating me.

    When I became a ‘big-girl’ in 9th standard, chithi prepared black ulundhu (urad dal) halwa and also my favourite coconut burfi. I started liking her when she presented a photo of my mother, newly framed, after the function. I thought I could be her friend. We began to be friendlier, gradually. It helped that Leela’s father got a transfer and they moved to Madurai.

    One day, when I was in 10th standard, my father saw me talking to my class mate Ravi, in the street corner. I was asking him to give me his maths notes, as he was very good at maths. Once I came home, Father gave me a tight slap and unleashed a long sermon about how good girls had to behave. Grandmother said if I studied any more, I would run away with a boy surely. Chithi intervened and bore their ire, arguing strongly for me and took my father to task for not trusting his own daughter. And the dust settled. I had started to like her. She taught me Trigonometry. I did not know she was good at Maths and had a BSc in maths!

    I passed 10th with distinction and a 100 in Maths, and I passed 12th with 3 200s – one each in Maths, Physics and Biology. Chithi was happy and proud. My father and chithi wanted me to join BSc maths like Chithi, but I wanted to do medicine. I told chithi what I had never told anyone – I wanted to do medicine because of what my mother had told me on her last day. She won the argument with father, speaking for me, and also made sure father agreed to let me stay in Hostel, in Nagarkovil.

    She was happy every year, as I came out with great marks. And when I had the degree, and thanked her for her support, she asked me to thank my mother for inspiring me.

    For the second time in my life, I had to see someone in my family on their last legs. My grandmother was on her death bed now. While I was about to enter the room as I returned from hospital, I heard grandmother speak, and I waited outside for some strange reason. She lamented to my father “The first one gave a girl and this one is barren. I could not see a grandson before I die”.

    My father could not control his outburst. Despite protests from chithi, he said “Amma, please….. do not be so heartless to call her barren. On the very day I married her, she told me ‘Your daughter is my daughter, I do not want a child myself’, you will not go to a good heaven if you call her a barren lady”……….

    And, the rest is history. We are the best of friends now. I went on to become a gynaecologist. I am married to another doctor, a neurosurgeon from Tuticorin. And my chithi with father visits me once a month. We have a great time together, on the beach and shopping together. Father is retired and gets his pension but I and my husband send money to father. Chithi wanted to do MSc in maths, and I supported her case to father. She finished her MSc in Maths recently and is doing her MPhil.

    Six years have passed by since that day my veil of prejudice and resentment died with my grandmother and my chithi placed in my heart’s pedestal alongside my mother.  I still visit the Isakki temple. I hold my daughter who bears my mother’s name. I pray to Isakki that I get another daughter, so I could name her after my chithi………. Of course, chithi just told me in the temple that she’d rather have a boy named after father! That’s my chithi for you!

    ——

    All characters in this story are fictional.

    Share
  • கீசகன் வதம்

    –தஞ்சை வெ.கோபாலன்.

    பாரத புண்ணிய பூமியின் தலைசிறந்த இதிகாசங்களுள் மகாபாரதம் ஒன்று. அதில் பாண்டவர்களின் மூத்தவன் யுதிஷ்டிரன் சகுனியோடு சூதாடி தோற்றதன் விளைவாக ஓராண்டு காலம் அக்ஞாத வாசம் அதாவது தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமறைவாக இருத்தல் வேண்டுமென விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டு மறைந்திருந்த காலம். தாங்கள் யார் கண்ணிலும் படாமல் ஒரு வருஷ காலத்தை ஓட்ட வேண்டுமானால் அதற்குத் தக்க இடம் விராட மன்னன் ஆண்ட மத்சிய நாடு என்பதை முடிவு செய்தார்கள். அவர்கள் அந்த ஊரினுள் நுழையுமுன் ஊருக்கு வெளியே இருந்த ஒரு வன்னிமரப் பொந்தில் தங்களுடைய ஆயுதங்களையெல்லாம் மறைத்து வைத்துவிட்டுத் தனித்தனியாகப் பிரிந்து போய் நகரத்தினுள் நுழைந்தார்கள். தங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று யுதிஷ்டிரன் துர்க்கையிடம் வேண்டிக் கொண்டான்.

    விராட ராஜாவிடம் சென்று யுதிஷ்டிரன் தன்னை கனகன் எனும் பெயர் கொண்ட ஒரு பிராமண பண்டிதன் என்று சொல்லிக் கொண்டு பகடை ஆட்டத்திலும் வல்லவன் என்று சொல்லி அரசனின் தோழனாகச் சேர்ந்து கொண்டான். பீமன் தன்னை வல்லாளன் என்று சொல்லிக் கொண்டு, மல்யுத்தமும் செய்வேன் என்று சொல்லி விராட ராஜாவின் அரண்மனையில் சமையல் செய்பவனாகச் சேர்ந்தான். அர்ஜுனன் பெண் வேடமணிந்து கொண்டு சற்று ஆண்மை வெளிக்காட்ட தன் பெயர் பிரஹன்னளை என்றும் தான் ஒரு பேடு எனத் தெரிவித்து அந்தப்புரத்தில் வேலைக்கு அமர்ந்தான். நகுலனோ தமக்ரந்தி எனும் பெயரோடு அரண்மனை குதிரை லாயத்தில் குதிரைகளைப் பழக்கும் பணியில் ஈடுபட்டான். சகாதேவனோ தந்திரிபாலன் எனும் பெயரோடு மாட்டுத் தொழுவத்தில் பணியாற்றத் தொடங்கினான்.

    இப்படி பாண்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விராட மன்னனிடம் வெவ்வேறு பணிகளில் அமர்ந்து கொண்ட அதே நேரத்தில் விராட நகரத்து வீதிகளில் ஒரு வேலைக்காரி போல பாஞ்சாலி நடந்து செல்கிறாள். வேலைக்காரி என்பதை ‘சைரந்திரி’ என்று தன்னைக் கூறிக் கொண்ட பாஞ்சாலி அதற்கேற்ப கிழிந்த உடைகளை அணிந்திருந்தாள். பேரழகியான திரெளபதி என்னதான் கந்தை உடைக்குள் தன்னை மறைத்துக் கொண்டாலும் அழகு வெளிப்படாமல் போகுமா? தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அவள் மீது கவனம் செலுத்தினார்கள். அரண்மனை மேல்தட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ராணி சுதேசனா என்பாள் கண்களில் இந்த சைரந்திரி தென்பட்டாள். அவள் நிலைமையைக் கண்டு மனமிரங்கி அவளை அழைத்துவரச் செய்து அவள் வரலாற்றைக் கேட்டாள். அதற்கு சைரந்திரி சொன்னாள், “மகாராணி! எனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவன்களாக இருக்கிறார்கள். ஒரு சாபத்தின் காரணமாக ஒரு வருஷ காலம் நான் அவர்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டும். இந்த ஒரு வருஷ காலம் முடிந்ததும் அவர்கள் என்னை வந்து அழைத்துச் செல்வார்கள். அதுவரை எனக்கு அடைக்கலம் தாருங்கள். நான் தங்களுக்கு மலர்மாலைகள் தொடுத்தும், அழகுபடுத்தியும் தோழியாக இருந்து பணிவிடை செய்வேன்” என்றாள்.

    ராணி சுதேசனா உடனே ஒப்புக்கொண்டாலும், இவளது அழகு தொல்லை கொடுத்தால் என்ன செய்வது என்று யோசனை செய்தாள். அவளது சந்தேகத்தை சைரந்திரியிடமே கேட்டாள் ராணி. அதற்கு அவள் சொன்னாள், “தாயே! நான் தங்களுடனேயே தங்கிக்கொள்கிறேன். பிரிந்து சென்றாலல்லவோ தொல்லை. இருந்தாலும் எனது கந்தர்வக் கணவர்கள் எனக்கு எப்போதும் காவலாக இருந்து காப்பாற்றுவார்கள். முறைதவறி யாரேனும் நடக்க முயன்றால், அவர்களை என் கணவன்மார்கள் கொன்றுவிடுவார்கள், ஆகையால் அஞ்ச வேண்டாம்” என்றாள். ராணியின் பரிபூரண சம்மதத்தோடு சைரந்திரி அங்கேயே ராணியின் தோழியாகத் தங்கிக் கொண்டாள்.

    விராட நாடு, அற்புதமான வளம் மிகுந்த நாடு. அங்கு எப்போதும் திருவிழாக்கள் நடந்து கொண்டிருக்கும். மகாசிவராத்திரி அங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பல போட்டிகள் நடக்கும். அவற்றில் மற்போரும் ஒன்று. பல தேசங்களில் இருந்தெல்லாம் மல்லர்கள் வந்து அங்கு குவிந்தனர். அந்த ஆண்டில் நடந்த மற்போரில் வேற்று நாடு ஒன்றிலிருந்து வந்திருந்த மல்லன் ஒருவன் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றதோடு தன்னை எதிர்க்க எவரும் இல்லையென்று முழக்கம் செய்து கொண்டிருந்தான். மன்னருக்கு இந்தச் செய்தி மனவருத்தத்தைக் கொடுத்தது. அயலானான இவனை எதிர்த்து மல் யுத்தம் செய்ய நம் நாட்டில் எவரும் இல்லையா? என வருந்தினான். அப்போது கனகன் எனும் பெயரில் மன்னனிடம் நண்பனாக விளங்கிய யுதிஷ்டிரன் சொல்கிறார், “மன்னா! கவலை வேண்டாம். தங்கள் அரண்மனை மடைப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமையற்காரன் வல்லாளன் சிறப்பாக மற்போர் புரிவதை நான் பார்த்திருக்கிறேன். அவனை இந்த வேற்று நாட்டானோடு போட்டியிட்டு வேற்றி பெறச் செய்யலாம், அவன் நிச்சயம் வெல்வான்” என்றார்.

    அரசர் உடனே வல்லாளனை அழைத்தார். அவனை புதிய மற்போர் வீரனை எதிர்த்து மற்போர் புரிய முடியுமா என்றார். வல்லாளன் ஒப்புக்கொண்டான். அங்ஙனமே வல்லாளன் புதியவனை எதிர்த்துக் களம் இறங்கினான். இரண்டு யானைகள் மோதிக்கொண்டது போல இருவரும் மோதிக் கொண்டனர். எடுத்த எடுப்பில் வல்லாளன் தன் திறமைகளை வெளிக்காட்டவில்லை. மெல்ல மெல்ல அவன் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தான். ஆணவத்தோடு புதியவன் போரிடத் துவங்கும் சமயம் வல்லாளன் தன் திறமையை எடுத்து விட்டான். கூட்டம் ஆர்ப்பரிக்க புதியவன் மண்ணைக் கவ்வ, வல்லாளன் வெற்றி வீரனாக மார்பில் முஷ்டியால் குத்திக் கொண்டு தன் வெற்றியைக் கொண்டாடினான்.

    விராட தேசத்து ராணி சுதேசனாவுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் பெயர் கீசகன். பயங்கரமான பலசாலி அவன். அந்த நாட்டுப் படைத்தலைவன், அதோடு அரசரின் மைத்துனன் என்கிற திமிர் உண்டு அவனுக்கு. பாண்டவர்களின் அக்ஞாத வாசம் பத்து மாதங்கள் முடிந்த நிலையில் அவர்களுக்கு ஒரு சோதனை உண்டானது கீசகன் வடிவத்தில். ஒரு நாள் அவன் தன் சகோதரியின் அந்தப்புரத்துக்குச் சென்றான். அங்கு ராணிக்கு உதவி புரிந்து கொண்டிருந்த தோழி சைரந்திரியைப் பார்த்து விட்டான். அவளுடைய அழகில் மயங்கி அந்தப் பணிப்பெண்ணைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி சகோதரி சுதேசனாவிடம் கேட்டான். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக அந்த வேலைக்காரிதான் வேண்டுமென்று கீசகன் அடம் பிடித்தான். அவளுடைய கணவன்மார்கள் தீங்கு செய்வார்கள் எனும் எச்சரிக்கை செய்தும் அவன் கேட்பதாயில்லை.

    வேறு வழியறியாத ராணி தன் சேடியான சைரந்திரியை கீசகன் மாளிகைக்குச் சென்று சிறிது மதுபானம் எடுத்து வரும்படி கட்டளையிட்டாள். மறுத்துப் பேசமுடியாத சைரந்திரி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள், தனக்குப் பதிலாக வேறு யாரையாவது அனுப்பும்படி, ராணி கேட்கவில்லை, பிடிவாதமாக அவளையே போகச்சொன்னாள். கீசகன் கொடுத்த அழுத்தம் அல்லவா? வேறு வழியில்லை. இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுத் தன் கணவன்மார்கள் மீதிருந்த நம்பிக்கையில் தாம் எப்படியும் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் சைரந்திரி கீசகன் அரண்மனைக்குச் சென்றாள்.

    Raja_Ravi_Varma,_Keechaka_and_Sairandhri,_Oleograph_wiki pictureதான் விரும்பிய பெண் தன் அரண்மனைக்குள் வருவது கண்டதும் இன்ப உணர்வு மேலிட கீசகன் தன்னை மறந்து அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பினாள் சைரந்திரி. ஓடி அரண்மனையின் சபைக்கு நடுவே சென்று உதவி கேட்டு அலறினாள். அப்போது அங்கு குழுமியிருந்த விராட ராஜா உட்பட அனைவரும் பயத்தில் உறைந்து போயிருந்தனர். கீசகனைக் கண்டு அவர்களுக்கெல்லாம் அத்தனை பயம். அருகிலிருந்த யுதிஷ்டிரரும், பீமனும் கூட தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாளாவிருந்தனர். பீமன் கட்டுப்பாட்டை இழந்து பொறுமை இழக்கும் நிலைக்கு வந்தது கண்டு அருகிலிருந்த யுதிஷ்டிரர் அவனை சமையற்கட்டில் விறகு பிளக்க வேண்டுமாம் போ என்று அனுப்பி வைத்தார்.

    எப்படியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த சைரந்திரி சமையற்கூடத்தில் பீமனை ரகசியமாகச் சந்தித்துத் தன்னைக் காப்பாற்ற வேண்டினாள். சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்து பீமன் சைரந்திரியிடம் சொன்னான், “கீசகன் ஆசைக்கு இணங்குவது போல பாசாங்கு செய்து, நள்ளிரவில் தனித்து வந்து உன்னை சந்திக்கும்படி சொல். நான் அங்கு மறைந்திருந்து மற்றவைகளை கவனித்துக் கொள்கிறேன்” என்றான்.

    வலாளனாக இருந்த பீமன் சொன்ன ஏற்பாட்டின்படி திரெளபதி எனும் சைரந்திரி நடந்து கொண்டாள். அவள் சம்மதத்தைக் கேட்டு கீசகன் மட்டற்ற இன்ப அதிர்ச்சி அடைந்தான். இரவை எண்ணி தவமிருந்தான். இரவும் வந்தது. சைரந்திரி சொன்ன நாட்டியசாலைக்குள் எதிர்பார்ப்புகளோடும், இன்பக் கனவுகளோடும் நுழைந்தான். உள்ளே மங்கிய வெளிச்சம். அருகில் கட்டிலில் ஒரு உருவம் போர்வையால் மூடிக்கொண்டு படுத்திருந்ததைப் பார்த்தான் கீசகன். அவன் இதயம் மிக வேகமாக படபடவென்று அடித்துக் கொண்டது. உடலெங்கும் இன்ப உணர்பு பரவியது. கட்டிலுக்கருகில் சென்றான், மெல்ல போர்வையால் மூடிய தேகத்தைத் தொட்டான், அந்த உருவம் அசைந்தது, எழுந்தது பலம் மிகுந்த ஒரு ஆண் கீசகனோடு போரிடத் தொடங்கினான்.

    இருவரும் பலமாக மோதிக் கொண்டார்கள். ஒருவன் உள்ளம் காம இச்சையால் களி கொண்டிருந்தது. மற்றொருவன் உள்ளமோ பழிவாங்கும் உணர்வில் ரத்தப்பசி கொண்டு போராடியது. கையில் கிடைத்த கீசகனை மாவு பிசைவது போல பிசைந்து கொன்றான் வல்லாளன். பிறகு சென்று குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு உடலெங்கும் சந்தனம் பூசிக் கொண்டு படுத்து நன்கு உறங்கினான்.

    பொழுது விடிந்தது. ஊரெங்கும் செய்தி பரவியது. காம வெறி பிடித்த கீசகனை ஏதோ கந்தர்வர்கள் வந்து பிசைந்து கொன்றுவிட்டார்கள் என்று. விராட ராஜாவும், ராணி சுதேசனாவும், நாட்டு மக்களும், அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஐந்து ஜீவன்களைத் தவிர அனைவருமே கீசகனை கந்தர்வர்கள் வந்து கொன்றுவிட்டார்கள் என்று நம்பினார்கள். பாண்டவர்களும் எஞ்சியிருந்த ஒரு மாத காலத்தை அஞ்சாத வாசமிருந்து முடித்துக் கொண்டார்கள். கீசகன் வதம் மகாபாரதத்தில் வரும் ஒரு சுவையான கதை.

    படம் உதவிக்கு நன்றி: விக்கிபீடியா

    Share
  • ரேவதிக்கு நாய்க் குட்டி வேணுமாம்…

    –தாரமங்கலம் வளவன்.

    பங்களாவின் கேட் அருகே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை, மீனாட்சி ஏற்கனவே பார்த்திருக்கிறாள். தங்கள் அரிசி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்யும் சதாசிவத்தின் பெண் தான் அவள்.   பத்து வயது இருக்கும் என்று தோன்றியது.

    தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து,

    “ உள்ளே வா… தெறந்து தான் இருக்குது..” என்றாள் மீனாட்சி.

    வந்த பெண்ணைப் பார்த்து,

    “ நீ சதாசிவத்தின் பொண்ணு தானே.. பேரு என்னா…” மீனாட்சி கேட்டாள்.

    “ ரேவதி..”  என்றாள் அந்த பெண்.

    அந்த பெண் சற்று தயங்கி விட்டு,

    “ உங்க வீட்டு நாய், நாலு குட்டி போட்டு இருக்கிறதா சொன்னாங்க… எனக்கு நாய் வளக்கணும்னு ரொம்ப நாளா ஆசை… எனக்கு ஒரு குட்டி கொடுப்பீங்களா..”

    மீனாட்சிக்கு திகைப்பாய் இருந்தது அவள் கேட்டது.

    Rishikesh Animal Care Community FaceBook Pageசதாசிவம், தன் வீட்டில் நாய் வளர்ப்பதாகச் சொன்னாரே..

    அடிக்கடி, சாப்பாடு ஏதாவது மீதி ஆயிட்டா, வேஸ்ட் பண்ணாதீங்க, எங்க வீட்டு நாய்க்கு சாப்பிடறதுக்கு போடலாம்னு சொல்லி வாங்கிட்டு போவாரே..

    உண்மையில் சதாசிவத்தின் வீட்டில் நாய் ஏதும் இல்லையா.

    அப்படியானால், சதாசிவம் வாங்கிப் போன சாப்பாடு அவர் சாப்பிடத்தானா..

    சதாசிவம் வீட்டில் அவ்வளவு வறுமையா..

    ஐயோ பாவம் என்று மனதில் தோன்றியது.

    “ உங்க வீட்ல நாய் ஏதும் இல்லியா….” மீனாட்சி ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

    “ இல்ல… அப்பாகிட்ட ரொம்ப நாளா கேக்கிறேன்.. அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாரு..”

    கொஞ்சம் இடைவெளி விட்டு,

    “ நான் அந்த குட்டிகளை பாக்கணும்…” என்றாள் ரேவதி.

    “ சரி.. பாரு.. பின்பக்கம் தான் இருக்கு. போய் பாரு..” என்று சொல்லி விட்டு மீனாட்சி சமையல் வேலையை பார்க்க போய் விட்டாள்.

    பார்த்து விட்டு திரும்பி வந்த ரேவதி,

    “ அந்த வெள்ளக் குட்டியை எனக்கு கொடுப்பீங்களா..” என்றாள்.

    “ சரி கொடுக்கிறேன்.. ஆனா நான் கொடுத்ததா வீட்ல யாருகிட்டேயும் சொல்லாதே.. தெருவில அனாதையா இருந்திச்சி.. எடுத்து வந்தேன்னு சொல்லு..”

    சரி என்று தலையாட்டி விட்டு,  நாய்க்குட்டியை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றாள் அந்த பெண் ரேவதி.

    உள்ளே இருந்து வந்த மீனாட்சியின் கணவர்,

    “ அந்த பொண்ணு கிட்ட ஏன் அப்படி பொய் சொல்லச் சொன்னே..” என்று கேட்டார்.

    “ பாவம் நாலு பொண்ணுங்க… கஷ்ட ஜீவனம் போல இருக்கு.. இந்த மாசத்திலே இருந்து அவருக்கு சம்பளம் கொஞ்சம் கூட்டி கொடுங்க.. என்ன புரிஞ்சிதா..” என்று மீனாட்சி சொல்ல, அதற்கு அவள் கணவர் தலையாட்டினார்.

     

     

    ——————————————————————————————————————-
    படம் உதவிக்கு நன்றி:
    Rishikesh Animal Care Community FaceBook Page
    https://www.facebook.com/RishikeshAnimalShelter
    https://www.facebook.com/photo.php?fbid=452591534858573&set=pb.192122577572138.-2207520000.1405897050.&type=3&theater

    Share
  • கணேசன்

    –நாகை வை. ராமஸ்வாமி.

    குக்கிராமமும் இல்லாத, டவுனும் இல்லாத அந்த ஊர், கடலூர் டவுன் ஒட்டியது. மலைகள் இல்லாவிட்டாலும்,  கடிலம் ஆற்றை ஒட்டி, மலர்கள் பூத்துக் குலுங்கும், அழகான செழுமையான இடம்.

    அங்கே,  “திரு நாகலிங்கம் ஐயா உபய துணிக்கடல்”  மிகவும் பிரபலம் வாய்ந்தது.  மிகவும் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடை, வளர்ந்து, பல நகரங்களிலும் கிளைகள் பெருகியதால், துணிக்கடை, ‘துணிக்கடல்’ ஆக மாறியது.  நாணயம், நம்பிக்கை, தரம் இவற்றிற்குப் பெயர் பெற்றது.

    அதன் உரிமையாளர் திரு கணேசன் அந்த ஊரின் பெரிய புள்ளி.  இலவசப் பள்ளிக்கூடம், இதர பல திட்டங்கள் அவர் நன்கொடையுடன் மக்களுக்கு நன்மை செய்து, அந்த செய்தி பரவி, பத்திரிகைகளிலும் வரத் தொடங்கியது.  அவர் எது செய்தாலும், ‘திரு நாகலிங்கம் ஐயா உபய….” என்ற பெயரில் தான் தொடங்குவார்.

    அன்று காலை, ‘செய்தியாளர்’ என்று எழுதப்பட்ட ஒரு ஜீப் அந்தக்கடை வாசலில் நின்றது.  அதிலிருந்து இறங்கிய ஒரு நிருபர், “கணேசன் சார் இருக்கிறார்களா” என்று வினவியபடியே கடைக்குள் நுழைந்தார்.

    “ஐயா வர இன்னும் நேரம் இருக்குங்க, நீங்க வேண்டுமானால் அவங்க தோட்டத்தில சந்திக்கலாம்” என்று விலாசம் கொடுத்தார்கள் சிப்பந்திகள்.

    சிப்பந்திகளை தம் குடும்ப உறுப்பினர்கள் போல் கவனித்து வந்தார் உரிமையாளர் கணேசன்.  அதனால், சிப்பந்திகளும், தண்டத்திற்கு அழும் மற்ற வேலைக்காரர்கள்  போலல்லாமல், பொறுப்புடனும், அக்கறையுடனும் வேலை செய்து, வியாபாரம் வளர பெரிதும் பாடுபடும் வகையினர்.

    தலையில் முண்டாசுடன் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த நடு வயது தாண்டிய,  ஆனால் கம்பீரம் குறையாத அந்த ஆசாமியிடம், நிருபர், “கணேசன் ஐயாவைப் பார்க்க வேண்டும், அழைத்துச் செல்கிறீர்களா” என்று கேட்டார்.

    “என்ன விஷயம்?”

    “எங்கள் பத்திரிகைக்கு ஒரு பேட்டி காண்பதற்காக”

    “அப்படியா, உள்ள வாங்க”

    உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் அவரை அமர்த்திவிட்டு உள்ளே சென்றார் அந்த ஆசாமி.

    சிறிது நேரம் கழித்து உள்ளிருந்து, “வணக்கம், வாங்க, நான் தான் கணேசன்” என்ற குரல் கேட்டது.

    அந்த நபரைப் பார்த்த நிருபருக்கு ஒரே ஆச்சரியம்.  ஏனென்றால், அவர் சந்தித்த அந்த தோட்ட ஆசாமிதான் அவர்.

    “ஐயா, நீங்க..?”

    “நான் தான் அது.  அப்போ தோட்ட தொழிலாளி, இப்போ கடை முதலாளி, என்ன வேண்டும் சொல்லுங்க.

    “முதலில் கொஞ்சம் தேனீர் அருந்துங்க” என்று சொல்லிகொண்டிருக்கும் பொழுதே ஒரு அழகான ட்ரேயில் பீங்கான் கோப்பையில் சூடான தேனீர் பிஸ்கட்டுகளுடன் வந்தது.

    “ஐயா, முதலில் முன்னறிவிப்பில்லாமல் வந்ததற்கு என்னை மன்னிக்கவும். தாங்கள் இந்த வட்டாரத்தில் செல்வாக்குடன் இருக்கும் பெரிய மனிதர்.  எங்கள் பத்திரிகையில் தங்கள் பேட்டி வரவேண்டும் என்று வாசகர் பலர் கேட்டுக்கொண்டதன் பேரில், வந்துள்ளேன்.”

    “அப்படி என்ன தம்பி பேட்டி எடுக்கும் அளவுக்கு நான் செஞ்சிட்டேன்? உங்க பெயர் என்ன சொன்னீங்க?”

    “நான் சென்னையிலிருந்து வருகிறேன் ஐயா, என் பெயர் ஸ்ரீதர், ‘சாதனை’’ பத்திரிகையின் சார்பாக வந்திருக்கிறேன்.

    “அப்படியா, பெயர் நல்லா இருக்கே, உங்களுடையவும், உங்கள் பத்திரிகையுடையவும்.  அது என்ன சாதனை? பெயர் புதுசா இருக்கே?”

    “ஆமாம் ஐயா, எங்கள் உரிமையாளர் திரு கிருஷ்ணஸ்வாமி எதையும் புதியதாக, ஒரு சாதனையாகச் செய்வார்.   எங்கள் பத்திரிகையில் வரும் பேட்டிகள், கட்டுரைகள் அனைத்தும் ஏதாவதொரு சாதனை பற்றியே இருக்கும்.  அது வருங்கால சந்ததியினருக்கு ஒரு படிப்பினையாகவும், ஊக்கமளிக்கும் முன்னோடியாகவும்,  அமையும்.  ”

    “ரொம்ப நல்ல விஷயம்.  சொல்லுங்க, என்ன தெரிஞ்சுக்க வேணும் என்னய பத்தி?”

    “எல்லாமே சொல்லுங்க, உங்க கடந்த கால வாழ்க்கை, எப்படி முன்னுக்கு வந்தீங்க, எல்லாமே”

    “நான் ஒரு ஆறாங் கிளாஸ் மட்டும் தொட்ட படிப்பறிவில்லாதவன், ஏதோ எனக்குத் தெரிஞ்ச வரை சொல்லிட்டே போறேன், எப்படி எளுதணும்னு நினைக்கிறீங்களோ, எளுதிக்கிங்க, ஆனால், தப்பா மட்டும் எளுதிடாதீங்க, சரியா?”

    “ஆகட்டும் ஐயா, சொல்லுங்க”

    ஜவுளிக்கடைகமல் ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ஒரு காட்சி பின்னோக்கி செல்லும், வெகு பிரமாதமாக எடுத்திருப்பார்கள், அது போல, கணேசனின் நினைவலைகள் பல வருடங்கள் பின்னோக்கி சென்றன.

    கணேசன் ஒரு 11 வயது சிறுவன்.  குடிகார கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, கணேசனையும், அவனுக்கு அடுத்த 6 வயது தங்கையையும் பராமரித்துக் கொண்டு, சமாளித்து வரும் அம்மாவின் மீது அளவு கடந்த பாசமுடைய நல்ல குணமுடைய சிறுவன்.  ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றினாலும், என்ன செய்வது எப்படி செய்வது என்று அறியாமல் திணறினான்.

    அன்று பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய அவன் வீட்டில் நடந்ததைப் பார்த்து கதி கலங்கிப் போய்விட்டான்.   குடித்துவிட்டு வந்த அப்பா, காசு கேட்டு அம்மாவை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்.   இது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் இப்பொழுது தான் நேரில் பார்க்கிறான்.

    சிறுவனாக இருந்தாலும், இப்பிரச்சினைக்குக் காரணம் பணம் என்பதைப் புரிந்து கொண்டான். ஒரு முடிவு எடுத்தான்.

    மறுநாள், வழக்கம்போல் அம்மா, பள்ளிக்கூடம் போவதற்காக சோற்றுமூட்டை கட்டிக் கொண்டிருக்கும் பொழுது, “அம்மா, நான் இனி பள்ளிக்கூடம் போகமாட்டேன்.” என்றான்.

    அம்மா திடுக்கிட்டு, “ஏண்டா கணேசு, இப்படிச் சொல்லறே?” என்று கேட்டதற்கு, “நான் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கிறேன் அம்மா, நீ இப்படி அப்பாவிடம் அடிபடுவது எனக்கு ரொம்ப தாங்கலை” என்று அழுதான்.

    “எல்லாம் சரியாயிடும் கண்ணு, கடவுள் கண்ணைத் திறந்தார்னா, ஒரு நிமிஷத்தில் கஷ்டமெல்லாம் சரியாயிடும்,  அப்பா வேணுமின்னா அடிக்கிறாரு, அவருக்குள்ள ஒரு கஷ்மாலம் பூந்துகிட்டு ஆட்டுது. நீ இஸ்கூலுக்கு போய் படிச்சு பெரிய ஆளா வரணுமின்னு நான் கனா கண்டுகிட்டு இருக்கேன், நீ என்னடான்னா, என் தலையில இடி போடறே?”

    “சரி வுடு, இன்னிக்கு போவல.”

    அன்று இரவு தூங்காமல் மண்டைக்குள் கரப்பான் பூச்சி, தேள், பூரான் இவையெல்லாம் புகுந்து குடைந்தாற்போல் உணர்ந்தான், பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தான், மனசு லேசானது, மண்டையில் கலக்கம் இல்லை, தேள் இல்லை, தெளிவு இருந்தது.

    “டேய், கணேசு, செல்லம், எளுந்திரிச்சி இஸ்கூல் போடா கண்ணு” என்று சொல்லிக் கொண்டே வந்த அவன் அம்மாவுக்கு அதிர்ச்சி.

    படுக்கையில் கணேசன் இல்லை.  படுக்கை சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.  பட்சி பறந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.  வயிற்றில் கலக்கம், நெஞ்சில் கனம், கண்களில் தாரை.

    ஆறு மாதங்களாகியும் கணேசன் என்ன ஆனான் என்று புரியாமல் தவித்தனர், அம்மாவும், தங்கையும்.

    ஒரு நாள் விடியல், “அம்மா” என்று குரல் கேட்டு, கனவோ என்று படுத்துவிட்டாள், மீண்டும் “அம்மா” என்று கேட்டு, குடிசைக் கதவைத் திறந்து பார்த்து ஆச்சரியத்தில் மகிழ்ந்தாள்.  அங்கே, சற்று வளர்ந்த கணேசன்.  உச்சி முகர்ந்து கட்டி பரவசமடைந்தாள்.

    அப்பா குடல் வெந்து இறந்த செய்தியும், அவன் ஒரு துணிக்கடையில் வேலையிலிருக்கும் விஷயத்தையும் பரிமாறிக்கொண்டனர்.

    அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் வாங்கி வந்த துணிமணிகள், தின்பண்டங்கள் கொடுத்து அம்மாவின் கையில் ரூ.2000 கொடுத்து வணங்கினான்.  அன்று பூராவும் அம்மாவின் அரவணைப்பு அன்பில் திளைத்தான்.  அடிக்கடி வருவதாகச் சொன்னான்.

    கணேசன் வேலையில் சேர்ந்தது ஒரு பிரபல துணிக்கடையில்.  அவன் முதலாளி திரு நாகலிங்கம் ஒரு பெரிய தனவந்தர், மனவேந்தர் (பெரிய மனம் படைத்தவர்களை, ஏன் மனவேந்தர் என்று அழைக்கக் கூடாது?)

    அவனைப் பற்றி அறிந்து, முதலில் கவுண்டரில் உதவியாளராகச் சேர்த்து, வேலை கற்றுக் கொள்ளச் சொன்னார்.  பிறகு ‘டெலிவரி பாய்’ என்று சரக்குகளை  வீடுகளுக்குச் சென்று கொடுக்கும் பணி கொடுத்தார்.

    கவுன்டரில் துணி காண்பித்து அளந்து கொடுக்கும் வேலையும் அவ்வப்போது.. அதற்குள் வியாபாரம் பற்றிய விபரங்கள் தெரிந்துகொண்டான்.  துணி மணிகள் மொத்தமாக சென்னை, பம்பாய், சூரத் முதலிய இடங்களிலிருந்து கொள்முதல் செய்வது, தரம் பிரிப்பது, விலை நிர்ணயம் செய்வது எல்லாம்.

    அப்பொழுதுதான் அவனுக்குள் புகுந்தது பணத்தாசை பூதம்.  நாணயத்துடனும் கண்ணியத்துடனும் நடந்துகொண்ட அவன் துரோகம் செய்ய முற்பட்டான்.

    “தம்பி கணேசா, நாளை அடுத்த ஊர் மிராசுதார் வீட்டுக்கு சரக்கு கொடுத்துவிட்டு, பணம் வாங்கி வந்துடு, ஜாக்கிரதை, பணம் பெருசு.  வெள்ளன கிளம்பி நம்ம வண்டியிலே போய்விட்டு வந்துடு” என்றார் முதலாளி.

    “ஆகட்டும் ஐயா”

    ஏற்கனவே கவுன்டர் வேலை வரும்பொழுதெல்லாம், அரை மீட்டர் அளவுக்கு துணிகளில் மிச்சம் பிடித்து, பிட் துணி வரும்பொழுதெல்லாம், அதை சுருட்டி, ஒரு நண்பராக்கிக் கொண்ட டெய்லரிடம் கொடுத்து சிறிது சிறிதாக பணம் சேர்த்தான்.

    அங்குள்ள வங்கி ஒன்றில் கணக்கு ஆரம்பித்து அதில் சேமித்தும் வைக்கத் துவங்கியாகிவிட்டது.

    மறுநாள் காலை வண்டி வந்ததும், ஐயாவிடம் சொல்லி, வண்டிக்காரர் வேண்டாம் என்று சொல்லி, தானே வண்டியை ஓட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

    மாலை கடை திரும்பிய கணேசைப் பார்த்த முதலாளி பதற்றம் அடைந்துவிட்டார்.  ஏனெனில், அவன் உடம்பில் ரத்தக் காயங்கள்.

    விசாரித்தபொழுது, வழியில் திருடர்கள் அவனை மடக்கி பணத்தைப் பறிக்க முயன்றதில், அவனுக்கு செமத்தியாகக் கொடுத்துவிட்டனர்.

    “அடப் பாவமே, ஏண்டா கணேசா, பணம் பறி போய்விட்டதா?”

    “பூரா போகல ஐயா, நான் மறைச்சு வச்சிருந்தேன், ஒரு இருபத்தி ஐயாயிரம் மட்டும் எடுத்துக்கிட்டு போயிட்டாங்க ஐயா, மீதி பத்திரமா இருக்கு ஐயா, இந்தாங்க, எழுபத்தையாயிரம். ஆனா ரொம்ப வருத்தமாயிருக்கு ஐயா, ஐயா பணத்த இப்படி கோட்டை  விட்டுட்டமேன்னுட்டு ”

    “போனாப் போவது பயலே, நீ பத்திரமா வந்திட்ட இல்ல, டாக்டருகிட்ட போய் நான் சொன்னதாக சொல்லி மருந்து போட்டுக்கிடு”.

    “சரிங்க ஐயா,”  உள்ளுக்குள் சந்தோஷம் அவனுக்கு.  இதுவரை சேர்த்ததில் இருபத்திஐயாயிரம், இப்போது சுளையாக இருபத்தி ஐயாயிரம், ஐம்பது ஆயிரம் சேர்த்தாகிவிட்டது, ஒரு சின்ன கடையாகப் போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட வேண்டியது தான்.

    கடை வெச்சு, நல்லா பணம் பண்ணனும், தங்கச்சியை நல்லா படிக்கவெச்சு, நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கணும்.  அம்மாவை பத்திரமா பாத்துக்கணும், அவங்களுக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து சந்தோஷமா வச்சுக்கணும்.

    அவன் கற்பனை இறக்கை முளைத்த வெண் குதிரையாக வானில் பறந்தது, அதில் அவன் ஒரு ராஜகுமாரானாக உட்கார்ந்திருந்தான்.  சினிமா பார்க்கும் பழக்கமுள்ளவனாதலால், அவன் உதடுகள் “ராஜாவின் பார்வை, ராணியின் பக்கம்….” என்ற பாடலை முணுமுணுத்தது, மனது, எம்.ஜி.ஆருக்குப் பதிலாக தன் உருவத்தைப் பதித்தது.

    சற்று ஓய்வில், முதலாளி வெளியில் சென்றிருந்த சமயம், வண்டிக்கார அண்ணாச்சி, கணேசைத் தனியே அழைத்து, “தம்பி உங்கிட்ட தனியே பேசணும், ராத்திரி தூங்கப் போகயிலே, எங்க வீட்டு வாசலுக்கு வந்து ஒரு குரல் கொடு.” என்றதும் தான் சுய நினைவிற்கே வந்தான்.

    “என்ன அண்ணாச்சி, எதினாச்சும் சங்கடமா?”

    “நேரில சொல்றேன், வா.”

    அன்று இரவு அண்ணாச்சி சொன்ன விஷயம், அவனுக்கு அதள பாதாளத்தில் விழுந்த உணர்வை ஏற்படுத்தியது.

    அவன், முதலாளிக்குச் செய்துகொண்டிருந்த துரோகம் அனைத்தும் முதலாளிக்குத் தெரியும் என்றும், அன்று வண்டிக்காரர் வேண்டாம் என்று சொல்லி அவனே மிராசுதார் வீட்டிற்கு அவன் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம், அண்ணாச்சியை பின் தொடர்ந்து பார்க்கச் சொல்லிவிட்டார் முதலாளி.   வரும் வழியில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி, அவனே காயம் ஏற்படுத்திக் கொண்டு, பணத்தை அவன் அறையில் பதுக்கி வைத்துவிட்டு வந்த விஷயம் முதலாளிக்குத் தெரிந்துவிட்டது என்று சொன்னதுமல்லாமல், அநேகமாக அவனுக்கு சீட்டு கிழிக்கப்படும் என்றும் சொன்னார்.

    வியர்த்து வெலவெலத்துவிட்டது கணேசனுக்கு, இனி தன் வாழ்க்கை அவ்வளவுதான், கம்பி எண்ணி ஜெயில் வாசம் தான் என்ற பயத்தில் இரவைக் கழித்தான்.

    என்னதான் இருந்தாலும், அடிப்படையில் நல்ல குணம் கொண்ட அவன், அம்மா சொல்லிக் கொடுத்த அரைகுறை கடவுள் வாழ்த்துக்களைச் சொல்லி, விபூதி இட்டுக் கொண்டு, கோயிலுக்குச் சென்று கும்பிட்டுவிட்டு முதலாளி வீட்டிற்கு கடை திறக்குமுன்னே சென்றான்.

    முதலாளி, “எங்கடா பயலே வந்தே, காலங்கார்த்தால, என்று சொல்வதைப் பார்த்தால், அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, அண்ணாச்சி சொன்னது வேறு, நடப்பது வேறாக இருக்கிறதே?

    எது என்னவானாலும் சரி என்று, முதலாளி கால்களில் நெடுஞ்சாணாக விழுந்து, “ஐயா, என்னை மன்னித்துவிடுங்க  என்ன வேண்டுமானாலும், எப்படி வேணுமானாலும் தண்டிச்சிடுங்க ஐயா, உங்க உப்பைத்தின்றுவிட்டு, உங்களுக்கே துரோகம் செய்துவிட்டேன் ஐயா”, என்று தேம்பித் தேம்பி அழுதவாறே செய்த தவறுகள் எல்லாம் சொல்லிவிட்டு, இதுவரை சேமித்து வைத்த ஐம்பதாயிரம் ரூபாயையும் கடையில் அவரிடம் கொடுத்துவிடுவதாகச் சொன்னான்.

    “எளுந்திரடா பயலே, எனக்கு எல்லாம் தெரியும்.  நீ நல்லவனாச்சே, ஏன் இப்படி புத்தி போச்சு என்று யோசனை செய்தேன், உன்னுடைய கடந்த கால வாழ்க்கைக் கஷ்டம், நீ உன் அம்மாவிடமும் தங்கச்சியிடமும் வச்ச பாசமும் இப்படி செய்யத் தூண்டிவிட்டது தெரிந்தது.  நீ கெட்டுப் போறதுக்கு முன்னமே, நான் ஒன்னய ஒரு வழி செஞ்சிருக்கணும்.  பரவாயில்ல, நீ இன்னிக்கு கடைக்குப் போகவேண்டாம்.  சாயந்திரம் வீட்டுக்கு வா”  என்றார்.

    வங்கிக் கணக்கை முடித்து பணத்தை எடுத்துக் கொண்டு, கையில் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு, முதலாளி வீட்டுக்குச் சென்றான்.  பணம் பூராவையும் அவர் காலடிகளில் வைத்துவிட்டு மீண்டும் ஒரு முறை கால்களில் விழுந்தான்.

    “டேய் பயலே, எழுந்திருடா,  நீ உண்மையானவன், உழைப்பாளி, நல்லவன் என்று எனக்குத் தெரியும்.  இருந்தாலும், நீ பட்ட கஷ்டம் உன்னை சில தவறுகளை செய்ய வைத்துவிட்டது.  நான் உன்னைக் கண்காணித்து வந்தேன்.  நீ உன் தவறுகளை உணர்ந்து, எடுத்த பணத்தை பூராவும் திரும்ப கொடுத்த நேர்மையே நான் உன் மீது வைத்த நம்பிக்கை வீணல்ல என்று காட்டுகிறது” என்றார்.

    பிறகு,  அங்கு காத்திருந்த வண்டிக்கார அண்ணாச்சியைக் கூப்பிட்டார், “என்னப்பா, நான் சொன்னது உனக்கு சம்மதமா?” என்று கேட்டார்.  அண்ணாச்சி, “ஐயா, எது சொன்னாலும் செஞ்சாலும் அது நல்லதுக்குத் தானே ஐயா, நீங்க சொன்னா சரி ஐயா” என்றார்.

    பிறகு, கணேசனிடம், “இந்தாப்பா, நீ வேலை செஞ்சது போதும்..” என்றார்.

    அவனுக்குத் தலை சுற்றியது.

    “ஐயா, எனக்குத் தண்டனை கொடுங்க ஐயா, ஆனா, வேலையிலிருந்து மட்டும் நிறுத்திடாதீங்க ஐயா” என்று கதறினான்.

    “எலே, இருடா, நான் ஒன்னய வேலை செஞ்சது போதும் என்று தானே சொன்னேன், வியாபாரம் செய்ய வேண்டாமுனு சொன்னேனா?” என்றார்.

    திகைத்தான் கணேசன்.

    அவனை மன்னித்ததோடல்லாமல், அவனுக்காக ஒரு சிறிய துணிக் கடை வைத்துக் கொடுத்து, அண்ணாச்சி மகளையும் அவனுக்கு கல்யாணம் செய்து கொடுத்து அவனை வாழ வைத்துவிட்டது அந்த மனித தெய்வம்.

    அவன் நா தழுதழுத்தது.  “ஐயா, உங்கள் பெருந்தன்மைக்கும் என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும், என் தோலை செருப்பாகச் செய்து தங்களுக்குப் போட்டாலும் ஈடாகாது” என்று சொல்லி தேம்பினான்.

    “ஹலோ, தம்பி ஸ்ரீதர், என்ன, நான் சொன்னது கேட்டுச்சா? தூங்கிட்டீங்களா?” என்றதும் தான், அந்த நிருபருக்கு கனவிலிருந்து மீண்டது போல் இருந்தது..

    ஐயா, மெய் மறந்து விட்டேன் ஐயா, இப்ப புரியுது நீங்க ஏன் உங்க கடைக்கு  எல்லாம் அப்படி பெயர் வைத்தீர்கள் என்று.

    “எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகம்  வருது, சொல்லவா?” என்றார் அந்த நிருபர்.

    “சொல்லுங்க தம்பி, ஆனால், இந்த போர்டைப் பார்த்துவிட்டு சொல்லுங்க” என்றார் கணேசன்.  “அட, அதாங்க நான் சொல்ல வந்தது” என்று சொன்ன ஸ்ரீதர் பார்த்த அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது,

    “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்துவிடல்” என்ற குறள்.

    நான் எங்க முதலாளிக்கு துரோகம் செய்தேன், ஆனால், என்னை அவர் நான் எண்ணிப் பார்க்க முடியாத, எனக்குத் தகுதியே இல்லாத உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார வச்சிட்டார்.  அதனால தான் அந்த குறளை ஒரு படிப்பினைக்காக எளுதி வச்சிருக்கேன் தம்பி.

    “டாடி, நான் ஸ்கூலுக்குப் போய்ட்டு வரேன், பை” என்றவாரே வந்த அந்த பையனிடம், “அங்கிளுக்கு வணக்கம் சொல்லுடா தம்பி” என்றார்.

    வணக்கம் சொன்ன அந்த பையனிடம்,  “தம்பி, உன் பெயரென்ன?” என்று கேட்டதற்கு வந்த பளிச் –

    “நாகலிங்கம்”..

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  http://redtricom.files.wordpress.com/2013/07/sonia-selections-devon.jpeg?w=494&h=403

    Share