–நாகை வை. ராமஸ்வாமி.

குக்கிராமமும் இல்லாத, டவுனும் இல்லாத அந்த ஊர், கடலூர் டவுன் ஒட்டியது. மலைகள் இல்லாவிட்டாலும்,  கடிலம் ஆற்றை ஒட்டி, மலர்கள் பூத்துக் குலுங்கும், அழகான செழுமையான இடம்.

அங்கே,  “திரு நாகலிங்கம் ஐயா உபய துணிக்கடல்”  மிகவும் பிரபலம் வாய்ந்தது.  மிகவும் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடை, வளர்ந்து, பல நகரங்களிலும் கிளைகள் பெருகியதால், துணிக்கடை, ‘துணிக்கடல்’ ஆக மாறியது.  நாணயம், நம்பிக்கை, தரம் இவற்றிற்குப் பெயர் பெற்றது.

அதன் உரிமையாளர் திரு கணேசன் அந்த ஊரின் பெரிய புள்ளி.  இலவசப் பள்ளிக்கூடம், இதர பல திட்டங்கள் அவர் நன்கொடையுடன் மக்களுக்கு நன்மை செய்து, அந்த செய்தி பரவி, பத்திரிகைகளிலும் வரத் தொடங்கியது.  அவர் எது செய்தாலும், ‘திரு நாகலிங்கம் ஐயா உபய….” என்ற பெயரில் தான் தொடங்குவார்.

அன்று காலை, ‘செய்தியாளர்’ என்று எழுதப்பட்ட ஒரு ஜீப் அந்தக்கடை வாசலில் நின்றது.  அதிலிருந்து இறங்கிய ஒரு நிருபர், “கணேசன் சார் இருக்கிறார்களா” என்று வினவியபடியே கடைக்குள் நுழைந்தார்.

“ஐயா வர இன்னும் நேரம் இருக்குங்க, நீங்க வேண்டுமானால் அவங்க தோட்டத்தில சந்திக்கலாம்” என்று விலாசம் கொடுத்தார்கள் சிப்பந்திகள்.

சிப்பந்திகளை தம் குடும்ப உறுப்பினர்கள் போல் கவனித்து வந்தார் உரிமையாளர் கணேசன்.  அதனால், சிப்பந்திகளும், தண்டத்திற்கு அழும் மற்ற வேலைக்காரர்கள்  போலல்லாமல், பொறுப்புடனும், அக்கறையுடனும் வேலை செய்து, வியாபாரம் வளர பெரிதும் பாடுபடும் வகையினர்.

தலையில் முண்டாசுடன் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த நடு வயது தாண்டிய,  ஆனால் கம்பீரம் குறையாத அந்த ஆசாமியிடம், நிருபர், “கணேசன் ஐயாவைப் பார்க்க வேண்டும், அழைத்துச் செல்கிறீர்களா” என்று கேட்டார்.

“என்ன விஷயம்?”

“எங்கள் பத்திரிகைக்கு ஒரு பேட்டி காண்பதற்காக”

“அப்படியா, உள்ள வாங்க”

உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் அவரை அமர்த்திவிட்டு உள்ளே சென்றார் அந்த ஆசாமி.

சிறிது நேரம் கழித்து உள்ளிருந்து, “வணக்கம், வாங்க, நான் தான் கணேசன்” என்ற குரல் கேட்டது.

அந்த நபரைப் பார்த்த நிருபருக்கு ஒரே ஆச்சரியம்.  ஏனென்றால், அவர் சந்தித்த அந்த தோட்ட ஆசாமிதான் அவர்.

“ஐயா, நீங்க..?”

“நான் தான் அது.  அப்போ தோட்ட தொழிலாளி, இப்போ கடை முதலாளி, என்ன வேண்டும் சொல்லுங்க.

“முதலில் கொஞ்சம் தேனீர் அருந்துங்க” என்று சொல்லிகொண்டிருக்கும் பொழுதே ஒரு அழகான ட்ரேயில் பீங்கான் கோப்பையில் சூடான தேனீர் பிஸ்கட்டுகளுடன் வந்தது.

“ஐயா, முதலில் முன்னறிவிப்பில்லாமல் வந்ததற்கு என்னை மன்னிக்கவும். தாங்கள் இந்த வட்டாரத்தில் செல்வாக்குடன் இருக்கும் பெரிய மனிதர்.  எங்கள் பத்திரிகையில் தங்கள் பேட்டி வரவேண்டும் என்று வாசகர் பலர் கேட்டுக்கொண்டதன் பேரில், வந்துள்ளேன்.”

“அப்படி என்ன தம்பி பேட்டி எடுக்கும் அளவுக்கு நான் செஞ்சிட்டேன்? உங்க பெயர் என்ன சொன்னீங்க?”

“நான் சென்னையிலிருந்து வருகிறேன் ஐயா, என் பெயர் ஸ்ரீதர், ‘சாதனை’’ பத்திரிகையின் சார்பாக வந்திருக்கிறேன்.

“அப்படியா, பெயர் நல்லா இருக்கே, உங்களுடையவும், உங்கள் பத்திரிகையுடையவும்.  அது என்ன சாதனை? பெயர் புதுசா இருக்கே?”

“ஆமாம் ஐயா, எங்கள் உரிமையாளர் திரு கிருஷ்ணஸ்வாமி எதையும் புதியதாக, ஒரு சாதனையாகச் செய்வார்.   எங்கள் பத்திரிகையில் வரும் பேட்டிகள், கட்டுரைகள் அனைத்தும் ஏதாவதொரு சாதனை பற்றியே இருக்கும்.  அது வருங்கால சந்ததியினருக்கு ஒரு படிப்பினையாகவும், ஊக்கமளிக்கும் முன்னோடியாகவும்,  அமையும்.  ”

“ரொம்ப நல்ல விஷயம்.  சொல்லுங்க, என்ன தெரிஞ்சுக்க வேணும் என்னய பத்தி?”

“எல்லாமே சொல்லுங்க, உங்க கடந்த கால வாழ்க்கை, எப்படி முன்னுக்கு வந்தீங்க, எல்லாமே”

“நான் ஒரு ஆறாங் கிளாஸ் மட்டும் தொட்ட படிப்பறிவில்லாதவன், ஏதோ எனக்குத் தெரிஞ்ச வரை சொல்லிட்டே போறேன், எப்படி எளுதணும்னு நினைக்கிறீங்களோ, எளுதிக்கிங்க, ஆனால், தப்பா மட்டும் எளுதிடாதீங்க, சரியா?”

“ஆகட்டும் ஐயா, சொல்லுங்க”

ஜவுளிக்கடைகமல் ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ஒரு காட்சி பின்னோக்கி செல்லும், வெகு பிரமாதமாக எடுத்திருப்பார்கள், அது போல, கணேசனின் நினைவலைகள் பல வருடங்கள் பின்னோக்கி சென்றன.

கணேசன் ஒரு 11 வயது சிறுவன்.  குடிகார கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, கணேசனையும், அவனுக்கு அடுத்த 6 வயது தங்கையையும் பராமரித்துக் கொண்டு, சமாளித்து வரும் அம்மாவின் மீது அளவு கடந்த பாசமுடைய நல்ல குணமுடைய சிறுவன்.  ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றினாலும், என்ன செய்வது எப்படி செய்வது என்று அறியாமல் திணறினான்.

அன்று பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய அவன் வீட்டில் நடந்ததைப் பார்த்து கதி கலங்கிப் போய்விட்டான்.   குடித்துவிட்டு வந்த அப்பா, காசு கேட்டு அம்மாவை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்.   இது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் இப்பொழுது தான் நேரில் பார்க்கிறான்.

சிறுவனாக இருந்தாலும், இப்பிரச்சினைக்குக் காரணம் பணம் என்பதைப் புரிந்து கொண்டான். ஒரு முடிவு எடுத்தான்.

மறுநாள், வழக்கம்போல் அம்மா, பள்ளிக்கூடம் போவதற்காக சோற்றுமூட்டை கட்டிக் கொண்டிருக்கும் பொழுது, “அம்மா, நான் இனி பள்ளிக்கூடம் போகமாட்டேன்.” என்றான்.

அம்மா திடுக்கிட்டு, “ஏண்டா கணேசு, இப்படிச் சொல்லறே?” என்று கேட்டதற்கு, “நான் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கிறேன் அம்மா, நீ இப்படி அப்பாவிடம் அடிபடுவது எனக்கு ரொம்ப தாங்கலை” என்று அழுதான்.

“எல்லாம் சரியாயிடும் கண்ணு, கடவுள் கண்ணைத் திறந்தார்னா, ஒரு நிமிஷத்தில் கஷ்டமெல்லாம் சரியாயிடும்,  அப்பா வேணுமின்னா அடிக்கிறாரு, அவருக்குள்ள ஒரு கஷ்மாலம் பூந்துகிட்டு ஆட்டுது. நீ இஸ்கூலுக்கு போய் படிச்சு பெரிய ஆளா வரணுமின்னு நான் கனா கண்டுகிட்டு இருக்கேன், நீ என்னடான்னா, என் தலையில இடி போடறே?”

“சரி வுடு, இன்னிக்கு போவல.”

அன்று இரவு தூங்காமல் மண்டைக்குள் கரப்பான் பூச்சி, தேள், பூரான் இவையெல்லாம் புகுந்து குடைந்தாற்போல் உணர்ந்தான், பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தான், மனசு லேசானது, மண்டையில் கலக்கம் இல்லை, தேள் இல்லை, தெளிவு இருந்தது.

“டேய், கணேசு, செல்லம், எளுந்திரிச்சி இஸ்கூல் போடா கண்ணு” என்று சொல்லிக் கொண்டே வந்த அவன் அம்மாவுக்கு அதிர்ச்சி.

படுக்கையில் கணேசன் இல்லை.  படுக்கை சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.  பட்சி பறந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.  வயிற்றில் கலக்கம், நெஞ்சில் கனம், கண்களில் தாரை.

ஆறு மாதங்களாகியும் கணேசன் என்ன ஆனான் என்று புரியாமல் தவித்தனர், அம்மாவும், தங்கையும்.

ஒரு நாள் விடியல், “அம்மா” என்று குரல் கேட்டு, கனவோ என்று படுத்துவிட்டாள், மீண்டும் “அம்மா” என்று கேட்டு, குடிசைக் கதவைத் திறந்து பார்த்து ஆச்சரியத்தில் மகிழ்ந்தாள்.  அங்கே, சற்று வளர்ந்த கணேசன்.  உச்சி முகர்ந்து கட்டி பரவசமடைந்தாள்.

அப்பா குடல் வெந்து இறந்த செய்தியும், அவன் ஒரு துணிக்கடையில் வேலையிலிருக்கும் விஷயத்தையும் பரிமாறிக்கொண்டனர்.

அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் வாங்கி வந்த துணிமணிகள், தின்பண்டங்கள் கொடுத்து அம்மாவின் கையில் ரூ.2000 கொடுத்து வணங்கினான்.  அன்று பூராவும் அம்மாவின் அரவணைப்பு அன்பில் திளைத்தான்.  அடிக்கடி வருவதாகச் சொன்னான்.

கணேசன் வேலையில் சேர்ந்தது ஒரு பிரபல துணிக்கடையில்.  அவன் முதலாளி திரு நாகலிங்கம் ஒரு பெரிய தனவந்தர், மனவேந்தர் (பெரிய மனம் படைத்தவர்களை, ஏன் மனவேந்தர் என்று அழைக்கக் கூடாது?)

அவனைப் பற்றி அறிந்து, முதலில் கவுண்டரில் உதவியாளராகச் சேர்த்து, வேலை கற்றுக் கொள்ளச் சொன்னார்.  பிறகு ‘டெலிவரி பாய்’ என்று சரக்குகளை  வீடுகளுக்குச் சென்று கொடுக்கும் பணி கொடுத்தார்.

கவுன்டரில் துணி காண்பித்து அளந்து கொடுக்கும் வேலையும் அவ்வப்போது.. அதற்குள் வியாபாரம் பற்றிய விபரங்கள் தெரிந்துகொண்டான்.  துணி மணிகள் மொத்தமாக சென்னை, பம்பாய், சூரத் முதலிய இடங்களிலிருந்து கொள்முதல் செய்வது, தரம் பிரிப்பது, விலை நிர்ணயம் செய்வது எல்லாம்.

அப்பொழுதுதான் அவனுக்குள் புகுந்தது பணத்தாசை பூதம்.  நாணயத்துடனும் கண்ணியத்துடனும் நடந்துகொண்ட அவன் துரோகம் செய்ய முற்பட்டான்.

“தம்பி கணேசா, நாளை அடுத்த ஊர் மிராசுதார் வீட்டுக்கு சரக்கு கொடுத்துவிட்டு, பணம் வாங்கி வந்துடு, ஜாக்கிரதை, பணம் பெருசு.  வெள்ளன கிளம்பி நம்ம வண்டியிலே போய்விட்டு வந்துடு” என்றார் முதலாளி.

“ஆகட்டும் ஐயா”

ஏற்கனவே கவுன்டர் வேலை வரும்பொழுதெல்லாம், அரை மீட்டர் அளவுக்கு துணிகளில் மிச்சம் பிடித்து, பிட் துணி வரும்பொழுதெல்லாம், அதை சுருட்டி, ஒரு நண்பராக்கிக் கொண்ட டெய்லரிடம் கொடுத்து சிறிது சிறிதாக பணம் சேர்த்தான்.

அங்குள்ள வங்கி ஒன்றில் கணக்கு ஆரம்பித்து அதில் சேமித்தும் வைக்கத் துவங்கியாகிவிட்டது.

மறுநாள் காலை வண்டி வந்ததும், ஐயாவிடம் சொல்லி, வண்டிக்காரர் வேண்டாம் என்று சொல்லி, தானே வண்டியை ஓட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

மாலை கடை திரும்பிய கணேசைப் பார்த்த முதலாளி பதற்றம் அடைந்துவிட்டார்.  ஏனெனில், அவன் உடம்பில் ரத்தக் காயங்கள்.

விசாரித்தபொழுது, வழியில் திருடர்கள் அவனை மடக்கி பணத்தைப் பறிக்க முயன்றதில், அவனுக்கு செமத்தியாகக் கொடுத்துவிட்டனர்.

“அடப் பாவமே, ஏண்டா கணேசா, பணம் பறி போய்விட்டதா?”

“பூரா போகல ஐயா, நான் மறைச்சு வச்சிருந்தேன், ஒரு இருபத்தி ஐயாயிரம் மட்டும் எடுத்துக்கிட்டு போயிட்டாங்க ஐயா, மீதி பத்திரமா இருக்கு ஐயா, இந்தாங்க, எழுபத்தையாயிரம். ஆனா ரொம்ப வருத்தமாயிருக்கு ஐயா, ஐயா பணத்த இப்படி கோட்டை  விட்டுட்டமேன்னுட்டு ”

“போனாப் போவது பயலே, நீ பத்திரமா வந்திட்ட இல்ல, டாக்டருகிட்ட போய் நான் சொன்னதாக சொல்லி மருந்து போட்டுக்கிடு”.

“சரிங்க ஐயா,”  உள்ளுக்குள் சந்தோஷம் அவனுக்கு.  இதுவரை சேர்த்ததில் இருபத்திஐயாயிரம், இப்போது சுளையாக இருபத்தி ஐயாயிரம், ஐம்பது ஆயிரம் சேர்த்தாகிவிட்டது, ஒரு சின்ன கடையாகப் போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட வேண்டியது தான்.

கடை வெச்சு, நல்லா பணம் பண்ணனும், தங்கச்சியை நல்லா படிக்கவெச்சு, நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கணும்.  அம்மாவை பத்திரமா பாத்துக்கணும், அவங்களுக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து சந்தோஷமா வச்சுக்கணும்.

அவன் கற்பனை இறக்கை முளைத்த வெண் குதிரையாக வானில் பறந்தது, அதில் அவன் ஒரு ராஜகுமாரானாக உட்கார்ந்திருந்தான்.  சினிமா பார்க்கும் பழக்கமுள்ளவனாதலால், அவன் உதடுகள் “ராஜாவின் பார்வை, ராணியின் பக்கம்….” என்ற பாடலை முணுமுணுத்தது, மனது, எம்.ஜி.ஆருக்குப் பதிலாக தன் உருவத்தைப் பதித்தது.

சற்று ஓய்வில், முதலாளி வெளியில் சென்றிருந்த சமயம், வண்டிக்கார அண்ணாச்சி, கணேசைத் தனியே அழைத்து, “தம்பி உங்கிட்ட தனியே பேசணும், ராத்திரி தூங்கப் போகயிலே, எங்க வீட்டு வாசலுக்கு வந்து ஒரு குரல் கொடு.” என்றதும் தான் சுய நினைவிற்கே வந்தான்.

“என்ன அண்ணாச்சி, எதினாச்சும் சங்கடமா?”

“நேரில சொல்றேன், வா.”

அன்று இரவு அண்ணாச்சி சொன்ன விஷயம், அவனுக்கு அதள பாதாளத்தில் விழுந்த உணர்வை ஏற்படுத்தியது.

அவன், முதலாளிக்குச் செய்துகொண்டிருந்த துரோகம் அனைத்தும் முதலாளிக்குத் தெரியும் என்றும், அன்று வண்டிக்காரர் வேண்டாம் என்று சொல்லி அவனே மிராசுதார் வீட்டிற்கு அவன் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம், அண்ணாச்சியை பின் தொடர்ந்து பார்க்கச் சொல்லிவிட்டார் முதலாளி.   வரும் வழியில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி, அவனே காயம் ஏற்படுத்திக் கொண்டு, பணத்தை அவன் அறையில் பதுக்கி வைத்துவிட்டு வந்த விஷயம் முதலாளிக்குத் தெரிந்துவிட்டது என்று சொன்னதுமல்லாமல், அநேகமாக அவனுக்கு சீட்டு கிழிக்கப்படும் என்றும் சொன்னார்.

வியர்த்து வெலவெலத்துவிட்டது கணேசனுக்கு, இனி தன் வாழ்க்கை அவ்வளவுதான், கம்பி எண்ணி ஜெயில் வாசம் தான் என்ற பயத்தில் இரவைக் கழித்தான்.

என்னதான் இருந்தாலும், அடிப்படையில் நல்ல குணம் கொண்ட அவன், அம்மா சொல்லிக் கொடுத்த அரைகுறை கடவுள் வாழ்த்துக்களைச் சொல்லி, விபூதி இட்டுக் கொண்டு, கோயிலுக்குச் சென்று கும்பிட்டுவிட்டு முதலாளி வீட்டிற்கு கடை திறக்குமுன்னே சென்றான்.

முதலாளி, “எங்கடா பயலே வந்தே, காலங்கார்த்தால, என்று சொல்வதைப் பார்த்தால், அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, அண்ணாச்சி சொன்னது வேறு, நடப்பது வேறாக இருக்கிறதே?

எது என்னவானாலும் சரி என்று, முதலாளி கால்களில் நெடுஞ்சாணாக விழுந்து, “ஐயா, என்னை மன்னித்துவிடுங்க  என்ன வேண்டுமானாலும், எப்படி வேணுமானாலும் தண்டிச்சிடுங்க ஐயா, உங்க உப்பைத்தின்றுவிட்டு, உங்களுக்கே துரோகம் செய்துவிட்டேன் ஐயா”, என்று தேம்பித் தேம்பி அழுதவாறே செய்த தவறுகள் எல்லாம் சொல்லிவிட்டு, இதுவரை சேமித்து வைத்த ஐம்பதாயிரம் ரூபாயையும் கடையில் அவரிடம் கொடுத்துவிடுவதாகச் சொன்னான்.

“எளுந்திரடா பயலே, எனக்கு எல்லாம் தெரியும்.  நீ நல்லவனாச்சே, ஏன் இப்படி புத்தி போச்சு என்று யோசனை செய்தேன், உன்னுடைய கடந்த கால வாழ்க்கைக் கஷ்டம், நீ உன் அம்மாவிடமும் தங்கச்சியிடமும் வச்ச பாசமும் இப்படி செய்யத் தூண்டிவிட்டது தெரிந்தது.  நீ கெட்டுப் போறதுக்கு முன்னமே, நான் ஒன்னய ஒரு வழி செஞ்சிருக்கணும்.  பரவாயில்ல, நீ இன்னிக்கு கடைக்குப் போகவேண்டாம்.  சாயந்திரம் வீட்டுக்கு வா”  என்றார்.

வங்கிக் கணக்கை முடித்து பணத்தை எடுத்துக் கொண்டு, கையில் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு, முதலாளி வீட்டுக்குச் சென்றான்.  பணம் பூராவையும் அவர் காலடிகளில் வைத்துவிட்டு மீண்டும் ஒரு முறை கால்களில் விழுந்தான்.

“டேய் பயலே, எழுந்திருடா,  நீ உண்மையானவன், உழைப்பாளி, நல்லவன் என்று எனக்குத் தெரியும்.  இருந்தாலும், நீ பட்ட கஷ்டம் உன்னை சில தவறுகளை செய்ய வைத்துவிட்டது.  நான் உன்னைக் கண்காணித்து வந்தேன்.  நீ உன் தவறுகளை உணர்ந்து, எடுத்த பணத்தை பூராவும் திரும்ப கொடுத்த நேர்மையே நான் உன் மீது வைத்த நம்பிக்கை வீணல்ல என்று காட்டுகிறது” என்றார்.

பிறகு,  அங்கு காத்திருந்த வண்டிக்கார அண்ணாச்சியைக் கூப்பிட்டார், “என்னப்பா, நான் சொன்னது உனக்கு சம்மதமா?” என்று கேட்டார்.  அண்ணாச்சி, “ஐயா, எது சொன்னாலும் செஞ்சாலும் அது நல்லதுக்குத் தானே ஐயா, நீங்க சொன்னா சரி ஐயா” என்றார்.

பிறகு, கணேசனிடம், “இந்தாப்பா, நீ வேலை செஞ்சது போதும்..” என்றார்.

அவனுக்குத் தலை சுற்றியது.

“ஐயா, எனக்குத் தண்டனை கொடுங்க ஐயா, ஆனா, வேலையிலிருந்து மட்டும் நிறுத்திடாதீங்க ஐயா” என்று கதறினான்.

“எலே, இருடா, நான் ஒன்னய வேலை செஞ்சது போதும் என்று தானே சொன்னேன், வியாபாரம் செய்ய வேண்டாமுனு சொன்னேனா?” என்றார்.

திகைத்தான் கணேசன்.

அவனை மன்னித்ததோடல்லாமல், அவனுக்காக ஒரு சிறிய துணிக் கடை வைத்துக் கொடுத்து, அண்ணாச்சி மகளையும் அவனுக்கு கல்யாணம் செய்து கொடுத்து அவனை வாழ வைத்துவிட்டது அந்த மனித தெய்வம்.

அவன் நா தழுதழுத்தது.  “ஐயா, உங்கள் பெருந்தன்மைக்கும் என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும், என் தோலை செருப்பாகச் செய்து தங்களுக்குப் போட்டாலும் ஈடாகாது” என்று சொல்லி தேம்பினான்.

“ஹலோ, தம்பி ஸ்ரீதர், என்ன, நான் சொன்னது கேட்டுச்சா? தூங்கிட்டீங்களா?” என்றதும் தான், அந்த நிருபருக்கு கனவிலிருந்து மீண்டது போல் இருந்தது..

ஐயா, மெய் மறந்து விட்டேன் ஐயா, இப்ப புரியுது நீங்க ஏன் உங்க கடைக்கு  எல்லாம் அப்படி பெயர் வைத்தீர்கள் என்று.

“எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகம்  வருது, சொல்லவா?” என்றார் அந்த நிருபர்.

“சொல்லுங்க தம்பி, ஆனால், இந்த போர்டைப் பார்த்துவிட்டு சொல்லுங்க” என்றார் கணேசன்.  “அட, அதாங்க நான் சொல்ல வந்தது” என்று சொன்ன ஸ்ரீதர் பார்த்த அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது,

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்” என்ற குறள்.

நான் எங்க முதலாளிக்கு துரோகம் செய்தேன், ஆனால், என்னை அவர் நான் எண்ணிப் பார்க்க முடியாத, எனக்குத் தகுதியே இல்லாத உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார வச்சிட்டார்.  அதனால தான் அந்த குறளை ஒரு படிப்பினைக்காக எளுதி வச்சிருக்கேன் தம்பி.

“டாடி, நான் ஸ்கூலுக்குப் போய்ட்டு வரேன், பை” என்றவாரே வந்த அந்த பையனிடம், “அங்கிளுக்கு வணக்கம் சொல்லுடா தம்பி” என்றார்.

வணக்கம் சொன்ன அந்த பையனிடம்,  “தம்பி, உன் பெயரென்ன?” என்று கேட்டதற்கு வந்த பளிச் –

“நாகலிங்கம்”..

 

 

 

 

 

 

 

படம் உதவிக்கு நன்றி:  http://redtricom.files.wordpress.com/2013/07/sonia-selections-devon.jpeg?w=494&h=403

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.