-தாரமங்கலம் வளவன்

கான்ஸ்டபிள் செங்கோடனால் முடிவு எடுக்க முடியவில்லை.

ஏற்கனவே சுகுணாவின் அப்பா அம்மாவைப் பார்த்து,  வெள்ளிக்கிழமை அதாவது நாளை தன் அப்பா அம்மாவைக் கூட்டிக் கொண்டு பெண் பார்க்க வருவதாகச் சொல்லி அவர்களிடம் சம்மதம் வாங்கி இருந்தான்.

சுகுணாவும் லீவு போடுவதாகச் சொல்லி இருந்தாள்.

அதற்குள் இப்படி ஆகி விட்டது.

அவளிடம் தான் சஸ்பென்ஸன் ஆகி உள்ளதைச் சொல்லி, நாளைக்கு பெண் பார்க்க வருவதாக இருந்ததை நிறுத்தி விடலாமா என்று யோசித்தான்.

தான் சஸ்பென்ஸன் ஆகி உள்ள விஷயத்தை மட்டும் அவளிடம் சொல்லி, உனக்குச் சம்மதம் என்றால், அப்பா அம்மாவைக் கூட்டிக் கொண்டு வருகிறேன், இல்லையென்றால், பெண் பார்க்க வருவதை நிறுத்தி விடலாம் என்று கேட்டுப் பார்க்கலாமா…

அப்படிக் கேட்டுப் பார்த்தால் அவளுடைய மன நிலை தெரியுமா…?

தானும் ஒரு கான்ஸ்டபிள் என்பதினால் இந்த சஸ்பென்ஸன் விஷயத்தை புரிந்து கொண்டு பெண் பார்க்க வாருங்கள் என்று அவள் சொல்வாளா…?

அப்படியே அவள் ஒப்புக் கொண்டாலும், அவள் வீட்டில் உள்ள மற்றவர்கள் ஒப்புக் கொள்வார்களா…? அவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

தன் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வாளா…அல்லது இந்த சஸ்பென்ஸன் விஷயத்தைத் தன் அப்பா அம்மாவிடம் சொல்லி விடுவாளா…

இது தற்காலிகப் பணி நீக்கம் என்பதையோ, தன்னிடமிருந்து தப்பித்த கைதி திரும்பவும் கிடைத்தால்  சஸ்பென்ஷனை வாபஸ் வாங்கி விடுவார்கள் என்பதையோ அவர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள்?

தான் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷனில் சுகுணாவைப் பற்றியோ அவள் எந்த போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்கிறாள் என்றோ தன்னுடன் வேலை செய்யும் மற்ற போலீஸ்காரர்களுக்கு அவன் எதுவும் சொல்லவில்லை.­­

தனக்கு ஒரு பெண் கான்ஸ்டபிள் மனைவியாக வருவதைப் பற்றி

மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள் என்று நினைத்தான்.

அவளை பெண் பார்க்க போகப் போவது பற்றி கூட உடன் வேலை செய்யும் மற்ற போலீஸ்காரர்களிடம் அவன் சொல்லவில்லை.  வேறு ஏதாவது காரணம் சொல்லி லீவு கேட்பதாக இருந்தான்.

இப்போது லீவு கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல், சஸ்பென்ஷன் ஆர்டரைக் கையில் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.

இரவு பூராவும் யோசித்தான்.

கடைசியில் தன் அப்பா அம்மா உட்பட யாரிடமும் சொல்லப் போவதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்தபடி சுகுணாவைப் பெண் பார்க்க போவது என்றும் முடிவு எடுத்தான்.

பெண் பார்த்து முடியும் வரைக்கும் இந்த சஸ்பென்ஷன் ஆன விஷயம் தெரியாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்று மனதில் பட்டது அவனுக்கு. அப்புறம் கல்யாணத் தேதி முடிவு செய்ய நாள் ஆகும். அதற்குள் தப்பிப் போன கைதி பிடிபட்டால், சஸ்பென்ஷன் ஆர்டரை டிபார்ட்மெண்ட்டில் வாபஸ் பெற்று விடுவார்கள்.

“இது டவுன் பஸ் இல்ல… இந்த ஸ்டாப்ல நிக்காது..  நீங்க போலீஸ்னு சொன்னதனால  நிறுத்தறோம்.. சீக்கிரம் எறங்குங்க…” என்று சொல்லி அவசரப்படுத்தினார் கண்டக்டர்.

அப்பாவையும், அம்மாவையும் வேகமாக இறங்கச் சொல்லி தானும் இறங்கினான் செங்கோடன்.

தன் மகன்  போலீஸ்காரன் என்று அப்பா கண்டக்டரிடம் சொல்லி இருக்க வேண்டும்.

செங்கோடனுக்கு சுருக்கென்றிருந்தது; தான் இன்னமும் போலீஸ்காரன் தானா…?

அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருப்பது குறித்து, குற்ற உணர்வால் மனம் அடித்துக் கொண்டது.

மூவரும் நடக்க அரம்பித்தார்கள்…

அப்பாவின் முகத்தைப் பார்த்தான்.

பெண் பார்க்க போகும் போது இருக்க வேண்டிய சந்தோசம், அப்பாவுக்கு இல்லை. அப்பாவின் முகம் கடுகடு என்று இருந்தது.

நியாயமாகப் பார்த்தால் லட்சுமியைக் கல்யாணம் செய்துகொள்ள அவன் மறுத்ததற்கு அம்மாதான் கோபப்பட வேண்டும். ஏனெனில் லட்சுமி தாய் மாமனின் மகள்.

ஆனால், அம்மாவை விட அப்பாவிற்குத்தான் கோபம் அதிகம்.

ஒரு வேளை போலீஸ் யூனிபார்மில் சுகுணாவைப் பார்த்திருந்தால், அப்பாவுக்கு பிடித்துப் போயிருக்குமோ…

அல்லது, இந்த போலீஸ்காரி மருமகளாக வந்து என்ன செய்யப் போகிறாளோ என்று அவர் பயந்து போயிருப்பாரோ..?

சுகுணாவைப் பற்றிய நினைப்பில் கொஞ்சம் கவனக்குறைவாகத் தான் இருந்து விட்டதாகத் தோன்றியது அவனுக்கு.

சுகுணா அவனைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்த பிறகு அவன் மனம் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்தது.

அந்தக் கைதி தப்பிக்க அது தான் காரணமா…?

ஒருக்கால் சுகுணாவிற்கு விஷயம் தெரியும்போது, உன்னுடைய நினைப்பினால்தான் நான் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டேன், அதனால்தான் இந்தத் தவறு நடந்து விட்டது என்றால் அவள் ஒப்புக் கொள்வாளா…?

அதற்குள், “வாங்க.. வாங்க.. நான் பொண்ணோட சித்தப்பா… உங்கள கூட்டிக்கிட்டு போகத்தான் காத்திட்டுக்கிட்டு இருக்கேன்..” என்று ஒருவர் பஸ் ஸ்டாப் டீக்கடையிலிருந்து வெளிப்பட்டார்.

“உட்காருங்க… டீ குடிச்சிட்டுப் போகலாம்.” என்று அவர் சொல்ல, பஸ்சில் வந்த களைப்பில் அப்பாவும் அம்மாவும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். இருவருக்கும் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

செங்கோடனுக்கு லட்சுமியைப் பற்றிய ஞாபகம் வந்தது.

சின்ன வயதிலிருந்து தன் அண்ணன் மகள் லட்சுமிதான் தனக்கு மருமகள் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள் அம்மா. அவனும் லட்சுமிதான் தனக்கு வரப் போகிறவள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். லட்சுமியிடம் பேசும்போதுகூட அந்த மாதிரியான எண்ணங்களை அவளிடம் உருவாக்கியது உண்டு.

மாமனுக்குச் சொத்து என்று ஒன்றும் கிடையாது. இருந்த முக்கால் ஏக்கர் நிலத்தையும் அவர் விற்று, அத்தையின் வைத்தியச் செலவுக்காகக் காலி பண்ணிவிட்டார். வைத்தியம் பலிக்காமல் அத்தை போய்ச் சேர்ந்து விட, இப்போது மாமனும், லட்சுமியும், நடவு வேலை, அறுப்பு வேலை என்று கூலி வேலைக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். செங்கோடனுக்கு போலீஸ் வேலை கிடைத்தவுடன், அவனுக்கு லட்சுமி வேண்டாம் என்று மனதில் தோண ஆரம்பித்து விட்டது.

அவன் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷனில் பெண் கான்ஸ்டபிள் யாரும் கிடையாது. கோர்ட்டுக்கு போகும் போது பெண் கைதிகளைக் கூட்டிக் கொண்டு வரும் பெண் கான்ஸ்டபிள்களைப் பார்த்திருக்கிறான். யூனிபார்மில் இருக்கும்  பெண் கான்ஸ்டபிள்கள் அவன் மனதைக் கவர்ந்தார்கள். அப்போதுதான் அவன் முடிவு செய்தான், கான்ஸ்டபிளாக வேலை செய்யும் ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று.

அப்படி இருக்கும் போது தான், சுகுணாவைப் பார்த்தான். ஒரு பெண் கைதியைக் கோர்ட்டுக்குக் கூட்டி வந்திருந்தாள். முதலில் அவளிடம் பேசி அவளைச் சம்மதிக்க வைத்தான். பிறகு தன் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல், சுகுணாவின் அப்பா அம்மாவை ஒரு நாள் போய்ப் பார்த்து அவர்களையும் சம்மதிக்க வைத்தான்.

பிறகு தன் அப்பா அம்மாவிடம் சொல்லிச்  சம்மதிக்க வைத்து, பெண் பார்க்கக் கூட்டி வந்தாயிற்று.

அதற்குள் இப்படி ஒரு சஸ்பென்ஷன்…

கடைவீதியில் நடந்த தகராறில், இந்தக் கைதி ஒருத்தனின் கையை வெட்டியவன்.

அவனைச் செங்கோடன் கோர்ட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகும் போதுதான் அவன் தப்பி விட்டான்.

சுகுணாவின் சித்தப்பா, அப்பா அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க, எதிர்ப் பக்கம் ஒரு நபர் மூச்சு இறைக்க ஓடி வந்தார். அந்த ஆள் சைகை காட்டி அந்தச் சித்தப்பாவைக் கூப்பிட, “ இருங்க ஒரு நிமிஷம்…” என்று சொல்லி விட்டு அந்தச் சித்தப்பா ஓடி வந்த நபரிடம் சென்றார்.

இருவரும் ஏதோ பேசிக் கொண்டார்கள்.

திரும்பி வந்த பெண்ணின் சித்தப்பாவின் முகம் கடுகடு என்றிருந்தது.

நேரிடையாக அப்பாவிடம் சென்றவர், “என்னங்க இப்படி மோசம் பண்ணீட்டீங்க.. மாப்பிள்ளைக்கு வேலை போயிடிச்சாமே… சஸ்பெண்ட் ஆயிட்டாராமே.. இதை ஏன் எங்ககிட்ட சொல்லலை…” என்றார்.

அப்பாவும் அம்மாவும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, செங்கோடன் பக்கம் திரும்பினார்கள்.

செங்கோடன் பதில் சொல்வதற்குள், சுகுணாவின் சித்தப்பா கோபமாய், “ வேலை திரும்பக் கெடைக்கட்டும்… அப்புறம் பாத்துக்கலாம்னு அண்ணன் சொல்லி அனுப்பிச்சிருக்காரு…” 

வீடு வந்து சேரும் வரை அப்பா எதுவும் பேசவில்லை..

அப்பா பேசாமல் இருப்பதைப் பார்த்து செங்கோடன் விளக்க வேண்டியதாகிப் போய் விட்டது.

“ஒரு கைதியை கோர்ட்டுக்குக் கூட்டிக்கிட்டு போனேன்.. வழியில அவன் தப்பிச்சிட்டான்… அதனால வேலையிலிருந்து சஸ்பெண்ட் பண்ணி வைச்சி இருக்காங்க.. ரூல்ஸ்படி அப்படித்தான் பண்ணியாகணும்… கைதியைத் தேடிக்கிட்டு இருக்காங்க டிபார்ட்மெண்ட்ல.. கைதி திரும்பக் கெடைச்சா வேலைக்குத்  திரும்ப கூப்பிட்டுக்குவாங்க…”

ரொம்ப அவமானப்பட்டு போனதாக நினைத்துப் பேய் அறைந்தது போல் உட்கார்ந்து இருந்தார் அப்பா. அம்மாவும் எதுவும் பேசவில்லை.

சூரியன் மறையும் நேரம்…

வீட்டு ஜன்னலின் மறுபுறம் இருந்து ஒரு குரல்..

“மாப்பிள்ள… ஒரு நிமிஷம்…”

எட்டிப் பார்த்தால் மாமன் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார்..

”நான் வேல முடிஞ்சி வீட்டுக்குப் போனேன்.. லட்சுமி தலைவலின்னு சொல்லிப்  பவானி ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறதா பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க.. நா வந்தா உங்களயும் கூட்டிக்கிட்டு நம்ம இரண்டு பேரையும் ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னாளாம்.. எனக்கு பயமா இருக்கு.. ஒரு வேள நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கலேன்னு ஏதாவது விஷம் சாப்பிட்டாளோன்னு பயமா இருக்கு.. பணம்லாம் எதுவும் வேணாம்.. எங்கிட்ட இருக்குது பணம்…. நீங்க போலீஸ்ங்கறதனால வந்து உதவி செஞ்சா போதும்…. ”.

அழுது விடுவார் போலிருந்தது.

“அவளே நடந்து ஆஸ்பத்திரிக்கு போனான்னு சொல்றீங்க.. விஷம் சாப்பிட்டிருந்தா எப்படி போயிருக்க முடியும்.. அதுவும் தலைவலின்னு சொல்லிட்டுப் போனாதாச் சொல்றீங்க.. ”

“அதுதான் எனக்கும் புரியல மாப்பிள்ள..” என்றார் மாமா.

நேரடியாக ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள் இருவரும். ஆண்கள் வார்டு பக்கம் போகும் போது அங்கே சத்தமாக இருந்தது. ஒரே கூட்டமாய் இருந்தது..

”என்ன கலாட்டா?” என்று செங்கோடன் கேட்டான்.

“ஒரு பொண்ணு கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கா. அந்தப் பொண்ண அவ புருஷன் ஏமாத்திட்டானாம். வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டானாம். சும்மா நெஞ்சுவலின்னு வந்து படுத்துக் கிட்டானாம்.. அவ வந்து சத்தம் போடறா..”

கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு போய்ப் பார்த்தான்.

அந்தப் பெண் லட்சுமி. அந்த ஆண், செங்கோடனிடம் இருந்து தப்பித்து ஓடிய கைதி.

வியப்பின் உச்ச கட்டத்துக்குப் போன செங்கோடன், முதலில் ஓடிப் போய் அந்த கைதியின் காலரைப் பிடித்துக் கொண்டான். பிறகு பக்கத்தில் இருந்த ஒருவரின் தோளில் இருந்த துண்டை எடுத்து அந்தக் கைதியின் கைகள் இரண்டையும் பின்பக்கமாகச் சேர்த்துக் கட்டினான்.

லட்சுமியைப் பார்த்து, “இது என்ன விளையாட்டு…” என்று கேட்டான்.

அதற்கு அவள்,

“அந்தக் கைதிக்கு எதிரிங்க இருப்பாங்க போலிருக்கு… இரண்டு பேரு வந்தாங்க அவனைக் காட்டிக் கொடுக்கிறதுக்காக.. உங்க வீட்டுக்கு போறதுக்கு பயந்துகிட்டு, என் அப்பாவைத்  தேடி எங்க வீட்டுக்கு வந்தாங்க.. அந்த சமயத்தில அப்பா வீட்ல இல்ல.. நான் என்னா விஷயம்னு கேட்டேன்.. இந்த மாதிரி உங்க மாமாகிட்ட இருந்து தப்பிச்சி ஓடின கைதி ஆஸ்பத்திரியில சும்மா படுத்துகிட்டு இருக்கான்னு சொன்னாங்க…  வந்தவங்கள கூட்டிக்கிட்டு இந்த ஆஸ்பத்திரிக்கு நான் ஓடியாந்தேன்… நீ வர்ற வரைக்கும்  அவன் தப்பிச்சி போகாம பாத்துகிறதுக்காக, சும்மா அவன் கிட்ட வம்பு இழுத்தேன். நீ வருவேன்னு தெரியும்.” என்றாள்.

கொஞ்சம் இடைவெளி விட்டு,

“இப்ப இவன் கெடைச்சிட்டான் இல்லியா.. உனக்குப் போன வேலை திரும்ப கெடைச்சிடுமா….”  ஆவலாய்க் கேட்டாள் லட்சுமி செங்கோடனிடம்.

“ஆமா,  வேலை திரும்பக் கெடைச்சிடும்… சஸ்பென்ஷனை வாபஸ் பண்ணிப்பாங்க.. எனக்கு சஸ்பென்ஷன் ஆயிடிச்சுன்னு தெரிஞ்ச உடனே சுகுணா வீட்டுக்காரங்க இந்தக் கல்யாணம் வேணான்னு சொல்லி நிறுத்திட்டாங்க. உன்ன விட்டுட்டு அவளக் கல்யாணம் செய்ய நெனச்சது தப்பு தான்.. அதுக்குத்தான் கடவுள் இந்தத் தண்டனையை கொடுத்தார்னு நெனக்கிறேன்.. என்ன மன்னிச்சுடு…  இப்ப என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா..” என்றான் செங்கோடன் லட்சுமியிடம்.

அதைக் கேட்ட மாமா,

“என்ன மாப்பிள்ள.. மன்னிச்சுடுன்னு, பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு.. கடைசியில கடவுள் நமக்கு நல்ல வழி காண்பிச்சுட்டாரு பாருங்க.. ” என்றார்.

அதைக் கேட்ட லட்சுமிக்கு சந்தோசத்துடன் கூடிய வெட்கம் ஏற்பட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *