Category: சிறுகதைகள்

கதைகள்

  • இளமைப் பருவத்திலே….

    ஜோதிர்லதா கிரிஜா

    செல்வியும் தியாகுவும் அந்த விடுதியை அடைந்து தங்களுக்குத் தரப்பட்டிருந்த ஒன்பதாம் இலக்கமிட்ட அறையை அடைந்து, கதவு திறந்து தங்கள் கைப்பெட்டிகளை அங்கிருந்த பெரிய  கட்டிலின் ஒரு பக்கமாய் வைத்துவிட்டு அதிலேயே உட்கார்ந்த போது அங்கிருந்த சுவர்க்கெடியாரம் ஒன்பது முறை அடித்தது.
    “மணி ஒம்போது! இன்னும் குளிர் விட்ட பாடில்லே!” என்ற தியாகு சோம்பல் முறித்தான்.
    “அண்ணே! இன்னும் ஒரு காப்பி குடிக்கலாமா?” என்று செல்வி கேட்டதும், தியாகு அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவனைப் போல் சடக்கென்று எழுந்து நின்றான்.
    “நானே சொல்லணும்னு நினைச்சேன்… இத வந்துர்றேன்,” என்று சொல்லிவிட்டு அவன் படியிறங்கினான்.

    செல்விக்குத் தெரியாமல் சங்கரலிங்கம் பிள்ளையின் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைக் கண்டுபிடிக்க விரும்பிய அவனுக்கு அவள் காப்பி கேட்டது வசதியாக இருந்தது. அவர்கள் தங்கிய அறையில் தொலைபேசி இல்லாததும் நல்லதாயிற்று. இருந்திருந்தால் அதன் மூலமே காப்பிக்குச் சொல்ல நேர்ந்திருக்கும்.
    கல்லாவில் இருந்தவரிடம் முதலில் தொலைபேசி வழிகாட்டியைக் கேட்டுப் பெற்றுப் புரட்டினான்.  சங்கரலிங்கம் எனும் பெயரில் யாருக்குமே தொலைபேசி இல்லை. கல்லாவில் இருந்தவர் நடுத்தர வயதுக்காரராக இல்லாமல் ஓர் இளைஞனாக இருந்ததும் அவனுக்கு வசதியாக இருந்தது. இல்லாவிட்டால், இருபது ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டுப் போன தன்னை அவர் அடையாளம் கண்டிருப்பார் என்று அவன் தன்னுள் நினைத்துக்கொண்டான்.  வயதானவர்களுள் எவர் பார்வையிலும் படாமல் தான் அங்கிருந்து கிளம்ப வேண்டுமே என்று அவன் கவலைப்பட்டான்.
    அந்த ஊரின் பெரும் பணக்காரரான அவர் பெயரில் தொலைபேசி இல்லாதிருக்க முடியாது என்று எண்ணியதால், ஒருகால் அவர் காலமாகி யிருக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. பார்வதியைப் பற்றித் தெரிந்து கொள்ள அவனுக்கு ஒரே துடிப்பாக இருந்தது.  அவன் காதலித்த முதல் பெண்… செல்வி பிற்பகல் தூக்கம் போடும் போது ஊருக்குள் ஒரு நடை போய்ப் பார்த்துவர வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
    காப்பி மேசைக்குச் சென்று ஒன்பதாம் அறைக்கு இரண்டு காப்பிகள் எடுத்துவரப் பணித்த பின் படியேறி முதல் மாடியில் தாங்கள் தங்கியிருந்த அறையை யடைந்தான்.
    சற்று நேரத்துக்கெல்லாம் காப்பிக் கோப்பைகளை எடுந்த வந்து குட்டை மேசை மீது வைத்த பணியாள், “காப்பிக்குச் சொல்லணும்னா நீங்க கீழ எறங்கி வரவேணாங்க. அதோ, சுவத்துல இருக்குற பெல்லை அடிச்சா வந்து விசாரிப்போம். இன்னும் கொஞ்ச நாள்ல ஃபோன் வந்துடும்…” என்று சொல்லிச் சென்றார்.
    காப்பியைக் குடித்து விட்டு அவன் கால் நீட்டிப் படுத்தான்.
    செல்வி, “அண்ணே! நான் ஊருக்குள்ள போய் என் ஃப்ரண்டு விமலா இருந்தாப் பாத்துப் பேசிட்டு வர்றேன்,” என்று, அவனது தலையசைப்பைப் பெற்ற பிறகு, முகம் கழுவிப் பொட்டு வைத்துத் தலை முடியைக் கோதிக்கொண்டபின், சேலையைச் சரிசெய்து கொண்டு புறப்பட்டாள்.
    வழியில் அவள் மனம் பார்வதியைப் பற்றித்தான் அசை போடலாயிற்று.  விமலாவைப் பார்ப்பதைக் காட்டிலும் பார்வதியைப் பார்க்க்கவே அவள் அதிகம் அவாவினாள். தியாகுவும் அவளைப் பற்றித்தான் யோசிப்பான்  என்று எண்ணிக்கொண்டாள்.
    தியாகுவுக்கு மாரியம்மனுக்குக் கண்மலர் சாத்துவதற்கான நேர்த்திக்கடன் ஒன்று பாக்கி இருந்தது.  அவன் மனைவி தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் திருநெல்வேலிக்குப் போயிருந்ததாள்.  எண்பது வயதான அவன் அம்மா அவனுடன் – தன் புருசன் வீட்டிலிருந்து வந்திருந்த, செல்வியையும் உடனனுப்பி வைத்திருந்தாள்.  நேர்த்திக் கடனில் எல்லாம் அவ்வளவாய் நம்பிக்கை இல்லாத அவன் சரியாக அதைச் செய்ய மாட்டான் என்கிற அவநம்பிக்கையால் தான் செல்வியையும் அவன் அம்மா உடனனுப்பி வைத்திருந்தாள்.
    இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தியாகுவுக்கும் பார்வதிக்குமிடையே தான் தபால்காரியாகப் பணி செய்தது செல்விக்கு ஞாபகம் வந்தது. எதிராளியின் வயதையோ, சாதியையோ கேட்டுத் தெரிந்துகொண்டபின் யாரும் காதலிக்க முற்படுவதில்லையே!  அப்படித்தான் அவர்கள் இருவரிடையேயும் காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டுகள் போல் கடிதப் பரிமாற்றம் செய்துகொண்டு தங்ககள் காதலை வளர்த்துகொண்ட இருவருக்குமிடையே இருந்த வயதுப் பிரச்சினையால்தான் அது நடக்காமல் போனது. பார்வதி அவனைவிடவும் ஒரு வயதும் சில மாதங்களும் மூத்தவளாக இருந்ததால், அவர்கள் மணம் செய்து கொள்ளுவதற்கு இரு தரப்புப் பெற்றோரும் சம்மதிக்கவில்லை!  கடைசியில் ஓடிப்போக முடிவு எடுத்தார்கள்.  பக்கத்து வீட்டு அம்மாளின் கழுகுக் கண்கள் இருவரும் இரவில் கிளம்பியதைப் பார்த்துப் பார்வதியின் அப்பாவுக்குத் தகவல் சொல்லிவிட, அவர்களது திட்டம் நடைபெறாது போயிற்று…. சேதியும் கசிந்து பார்வதியின் பெயர் கெட்டுப் போயிற்று.
    ஊரின் பெரும் பணக்காரரான சங்கரலிங்கம் அடியாள்கள் மூலம் விடுத்த மிரட்டலுக்கு அஞ்சி, அவர்களது குடும்பம் சென்னையில் இருந்த அவர்களுடைய பெரியப்பா வீட்டுக்குப் போயிற்று. வெகு நாள் வரையில் தியாகு திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்தான்.  பார்வதியையும் அவள் பெற்றோர் வேற்றூரில் குடியேற்றவே, எந்தத் தகவலும் கிடைக்க வழியற்றுப் போன நிலையில் அவன் கடைசியில் அவன் அம்மா பார்த்த பெண்ணை மணந்துகொள்ள சம்மதிக்க நேர்ந்தது. இப்போது அவனுக்கு இரண்டு குழந்தைகள் –  ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாக.
    பார்வதிக்குக் கலியாணம் ஆகியிருக்குமா என்று செல்வி யோசித்த கணத்தில், “ஏய்! செல்வி!” என்று கூவிய பெண்குரல் அவளது எண்ண ஓட்டத்துக்குத் தடை போட்டது.
    ஒரு திடுக்கீட்டுடன் தன் சிந்தனையிலிருந்து விடுபட்டுத் தலை உயர்த்தி பார்த்த செல்விக்கு வியப்புத் தாளவில்லை.
    “அட! பார்வதி! நீயா? உன்னையப் பத்தித்தான் யோசிச்சுக்கிட்டே வந்தேன்னு சொன்னா நம்புவியா?” என்ற செல்வி ஆசையோடு பார்வதியின் ஒரு கையைப் பற்றிக்கொண்டாள். மறு கையில் அவள் காய்கள் அடங்கிய பையை வைத்துக்கொண்டிருந்தாள்.
    “எங்கே இம்புட்டுத் தொலவு?”
    செல்வி சேதியைச் சொன்னாள்.  “உன்னையப் பாக்குறதுக்குத்தான் வந்துக்கிட்டே இருக்கேன். விமலாவைப் பார்க்கப் போறதா அண்ணன்கிட்ட பொய் சொல்லிட்டு வந்தேன். உன்னையப் பார்த்துப் பேசிட்டு, முடிஞ்சா அப்படியே அவளையும் பார்த்துருவேன்…”
    “விமலா ஊர்ல இல்லே, செல்வி. அது நாத்தனாருக்குப் பேறுகாலம்னு மணப்பாறைக்குப் போயிருக்குது…வாயேன் எங்க வீட்டுக்கு..”
    “உங்கப்பாம்மா எதுனாச்சும் சொல்லுவாங்களா?”
    “எங்கம்மா காலமாயாச்சு.  அப்பா இருக்காரு. ஆனா கண் தெரியாது. காதும் கேக்காது.  அதனால பயப்படாம வா…”
    “உங்க வீட்டுக்காரரு…”
    “முதக்கா எங்க வீட்டுக்கு வா. அப்புறமேட்டு எல்லாத்தையும் வெவரமாச் சொல்றேன்..”
    பார்வதியின் வீட்டுக்குள் நுழைந்த வரையில் அதன் பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
    செல்வியின் பார்வை மட்டும் அடிக்கடி பார்வதியின் மீது பதிந்து பதிந்து மீண்டது.  நாற்பதுக்கு மேற்பட்ட வயதுக்காரி மாதிரியே அவளைப் பார்த்தால் தெரியவில்லை. முப்பது-முப்பத்திரண்டுக்கு மேல் சொல்ல முடியாது. அவ்வளவு இளமையாக இருந்தாள். அவள் அப்பா தமது அறையில் படுத்துக்கொண்டிருந்தார்.

    “உக்காரு, செல்வி.  முதக்க உன்னையப் பத்திச் சொல்லு.  அப்புறமேட்டு நான் என்னையப் பத்திச் சொல்றேன். காப்பி குடிக்கிறியா?”
    “வர்றப்பதான் குடிச்சேன். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு டீ இருந்தாக் குடு.”
    “இருக்குது. தர்றேன். சொல்லு. உனக்கு எத்தினி பசங்க?”
    “ஒரே ஒரு பையன்.  எட்டு வயசு. எங்க வீட்டுக்காரரு போஸ்டல் டிபார்ட்மென்ட்ல இருக்காரு. அண்ணன் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட்ல இன்ஸ்பெக்டரா இருக்குது… ரெண்டு பசங்க. அவனுக்கு ஒரு ஆம்பளப் புள்ள, ஒரு பொம்பளப்புள்ள.  சரி…. உன் விசயத்தைச் சொல்லு…”
    பார்வதி பக்கென்று சிரித்து விட்டு, “ எனக்கு ஏகப்பட்ட பசங்க செல்வி…” என்றாள்.
    “   ?  “
    “டஜன் கணக்குல இருக்குதுங்க. நான் டீச்சர் வேலை பாக்குறேன், செல்வி.”
    “அப்ப, உனக்குன்னு பசங்க இல்லியா?”
    “இல்லே.  வீட்டுக்காரரும் இல்லே.”
    “என்ன சொல்றே? அப்படின்னா?”
    “நான் கலியாணமே கட்டல்லே, செல்வி.”
    “என்ன சொல்றே நீ?  ஏன் கட்டல்லே?”
    “எனக்குப் புடிக்கல்லே. பண்ணிக்கல்லே.  என்னைக் கலியாணங்கட்டச் சம்மதிச்சவங்களுக்கெல்லாம் ‘அந்தப் பொண்ணு வேணாம்.  அது ஓடிப் போய்ச் சீரழிஞ்ச பொண்ணு’ன்னு நானே மொட்டைக் கடுதாசி எழுதிப்போட்டுடுவேன்… அம்புட்டுத்தேன்..”
    “என்ன பார்வதி இது! சே. காலம் முச்சூடும் அப்ப தனியாவேயா இருக்கப் போறே?”
    “இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு நிறையவே விடுதிங்கல்லாம் இருக்குது, செல்வி…ஒண்ணும் பயப்படவே தேவையில்லே…”
    “ஏன் இப்பிடிப் பண்ணினே?”
    “உங்க அண்ணனைத் தவிர வேற யாருக்கும் என் மனசில இடம் குடுக்க முடியல்லே செல்வி! என்ன செய்ய?” என்ற பார்வதி தலையைக் குனிந்துகொண்டாள்.
    “ஒரேநிமிசம்.  டீ எடுத்தாறேன்…” என்று விட்டு அவள் எழுந்து போனது அவளது கண்களின் கலக்கத்தைத் தான் பார்த்துவிடக்கூடாது என்னும் எண்ணத்தில்தான் என்பது புரிய, செல்விக்கும் கண்கள் கலங்கின.
    சற்றுப் பொறுத்து இரண்டு தேநீர்க் கோப்பைகளுடன் வந்த பார்வதி, “இந்தா. .. ஒரு வேண்டுகோள், செல்வி… உங்க அண்ணன் கிட்ட நான் கலியாணம் பண்ணிக்கல்லைன்னு சொல்லாதே.  அவரு மனசு உடைஞ்சுபோவாரு.  எனக்கும் ரெண்டு பசங்க, எங்க வீட்டுக்காரரு டீச்சரா இருக்காருன்னு எனக்காக ஒரு பொய் சொல்லு, செல்வி!…” என்ற பார்வதி புன்னகை செய்தாள்.  செல்வியால் பதிலுக்குப் புன்சிரிப்புக் காட்டமுடியவில்லை.
    ………

    நன்றி: கோகுலம் கதிர்

    Share
  • பிராயச்சித்தம்

    சு.கோதண்டராமன்

     
    (இந்த என்னுடைய கதை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஓம் சக்தி மாத இதழில் வெளிவந்தது. மறு பகிர்வாக இங்கு வெளியிடுகிறேன்.- சு. கோதண்டராமன்)

     
    மூடிய கதவுக்கு வெளியே பெருங் கூட்டம். எல்லோர் முகத்திலும் சோகம் கப்பியிருந்தது. அவ்வப்போது சிலர் தணிந்த குரலில் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் ஜபம் செய்து கொண்டிருந்தனர்.

    அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே,

    பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே,

    உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

    பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும்

    எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.

    இந்த ஜபத்தைத் திரும்பத் திரும்பக் கூறித் தங்கள் மனத் துயரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

    அறையின் உள்ளே அவரது அன்புக்குப் பாத்திரமான ஃபாதர் சின்னசாமி படுத்திருக்கிறார். ஒரு வாரமாகக் கண் திறக்கவில்லை. உணவு தண்ணீர் இல்லை. அருகில் இரண்டு அணுக்கத் தொண்டர்கள் அவரது தேவையை உணர்ந்து செயல்படத் தயாராக இருந்தனர். அவ்வப்போது கதவைத் திறந்து அவரது உடல் நிலை பற்றிய செய்தியை வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியப் படுத்தினர்.

    ஃபாதர் அசையாமல் படுத்திருந்தார். அவரது மூடிய கண் இமைகளில் ஒரு சுழிப்பு. உதடுகளில் லேசான அசைவு. ஏதேனும் சொல்ல விரும்புகிறாரோ? குனிந்து காது கொடுத்தனர்.

    “அருள் நிறைந்த அன்னையே வாழ்க”

    ஆகா, எப்பேர்ப்பட்ட தூய உள்ளம்! தன் நிலை மறந்த நேரத்திலும் இறை வழிபாட்டை மறக்கவில்லையே என வியந்தனர்.

    ஃபாதரின் உடல் தான் கிழித்த நாராகக் கிடந்ததே தவிர, அவரது மனதில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. காட்சிகள் அவரது மனக் கண் முன் விரிந்து கொண்டிருந்தன.

    இதோ ஒரு குளத்தங்கரை மண்டபம். சிறுவர்களும் பெரியவர்களுமாகப் பல ஆண்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர். ஒரு சிறுவன் அவர்களிடையே பரபரப்பாக ஓடி ஓடிப் பூணூல் வினியோகித்துக் கொண்டிருக்கிறான்.

    “சுப்புணி, எல்லாருக்கும் பூணூல் குடுத்துட்டயா?” அவனது தந்தை கேட்கிறார். அவன் தலை அசைத்ததும் கூட்டத்தைப் பார்த்து ‘ஆரம்பிக்கலாமா?’ என்று கேட்டு விட்டு “சுக்லாம்பர தரம் விஷ்ணும் …..” சொல்கிறார். கூட்டம் அவரது சொற்களை எதிரொலிக்கிறது.

    இதோ மற்றொரு காட்சி.

    பள்ளிக் கூடம். இடைவேளை. சுப்புணி தனியே உட்கார்ந்திருக்கிறான். தலைமை ஆசிரியர் அங்கு வருகிறார்.

    “ஏண்டா, சாப்பிடலையா?”

    “இல்லை, ஃபாதர்.”

    “அம்மா சாதம் கட்டிக் கொடுக்கல்லியா?”

    “இல்லை ஃபாதர்.”

    “என் அறைக்கு வா. காசு தரேன். ஓட்டல்லே போய் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிடு.”

    “வேண்டாம், ஃபாதர்.”

    “ஏண்டா?”

    “பிறத்தியார் கிட்டே வாங்கிக்கக் கூடாது என்று எங்கம்மா சொல்லியிருக்கா, ஃபாதர்.”

    “உங்கப்பா புரோகிதர் தானேடா. அவர் பிறரிடம் தானம் வாங்கறது இல்லையா? அது தேவலாம் என்றால் இதுவும் தப்பில்லை. வாங்கிக்க.”

    “இல்லே, ஃபாதர். எங்கப்பா தானம் வாங்கினா, கொடுத்தவாளுடைய நன்மைக்காக ஜபம் பண்ணுவார், அல்லது காவேரி ஸ்னானம் பண்ணுவார், ஃபாதர்.”

    “அந்த மாதிரி நீயும் இதை இப்ப வாங்கிக்க, பின்னாடி எனக்காகவும் இந்த ஸ்கூலுக்காகவும் ஜபம் பண்ணிடு.”

    வாதத்தில் தோற்றுப்போன சுப்புணி வயிற்றுப் பசி தீர்க்கக் கை நீட்டுகிறான்.

    அந்தக் காட்சி மறைகிறது. அடுத்த காட்சி விரிகிறது.

    ஒரு விதவைத் தாய்.

    “வாடா சுப்புணி, சந்தியா வந்தனம் பண்ணிட்டுவா, சாப்பிடலாம். காலம்பறலேர்ந்து சாப்பிடலை, பாவம்.”

    “இல்லேம்மா, மத்தியான்னம் ஸ்கூல்லே சாப்பிட்டுட்டேன்.”

    “யார்டா சாதம் போட்டா?”

    சொல்கிறான்.

    “போன வருஷம் ஒரு நாள் நீ அந்த மாதிரி சாப்பிட்ட போதே, அது தப்புன்னு சொன்னேனே அப்பா. கண்டவா கிட்டேயும் வாங்கிக்கக் கூடாதுடா. உங்கப்பா எல்லார் கிட்டேயும் தானம் வாங்கிட மாட்டார். யார் சாதம் போடறாளோ அவா குணம் நமக்கு வந்துடும்னு, நல்ல சத்துக்கள் வீட்டிலே தான் சாப்பிடுவார்.”

    “இல்லேம்மா, ஃபாதர் ரொம்ப நல்லவர். நான் நன்னாப் படிக்கறேன்னு எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பார்ம்மா.”

    காட்சி மாறியது.

    அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறாள், “வாண்டாண்டா சுப்புணி, சொன்னதைக் கேளுடா, எனக்கு ஒரு கொள்ளி போட்டுட்டு நீ எப்படி வேணுமானாலும் போ. அவன் கையிலே சோறு வாங்கித் தின்னு அவன் புத்தியே உனக்கு வந்துடுத்தேடா.”

    சுப்புணியும் கெஞ்சுகிறான். “மதம் தான் மாறுகிறேனே தவிர, உன் பிள்ளை என்பது இல்லாமல் போகமாட்டேன் அம்மா. உன்னை மறக்க மாட்டேன்ம்மா. அப்பா இறந்தபின் எனக்காக நீ எப்படி உழைச்சு ஓடாப் போயிருக்கேங்கிறதை நான் பாத்துண்டு தானே இருக்கேன். எத்தனை வீட்டிலே பத்துப் பாத்திரம் தேச்சிருக்கே, எத்தனை கல்யாணத்திலே கல்லைக் கட்டி இழுத்து மாவு அறைச்சிருக்கே, இனிமே நீ கஷ்டப்பட வேண்டாம்மா. அடுத்த மாசத்திலேருந்து எனக்குச் சம்பளம் வரும். நீ சௌகர்யமா இருக்கலாம். உன்னைக் காப்பாத்தறது என் கடமை. நான் மறக்க மாட்டேம்மா.

    “அதே நேரத்திலே எனக்கு இன்னொரு கடமையும் இருக்கும்மா. எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்துப் படிக்க வைச்சு நான் பட்டினி கிடக்க நேரிட்ட போதெல்லாம் என் முகம் பாத்து சாப்பாடு போட்ட மதத்துக்கும் நான் நன்றி செலுத்தணும் அம்மா.”

    “அதுக்காக மதம் மாறித் தான் நன்றி செலுத்தணுமோ? இந்துவா இருந்துண்டே அவா நன்மைக்கு நீ உழைக்கப்படாதா?”

    ………..

    அன்று அவன் தான் செய்தது சரி என்று கருதி வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அம்மா அவனை அதன் பின் வீட்டில் அனுமதிக்கவில்லை.

    ஆயிற்று. அறுபது வருஷங்கள். எத்தனை பிரசங்கங்கள்! எத்தனை கூட்டங்கள்! எத்தனை பேருக்கு ஆறுதல் அளித்திருக்கிறார் ஃபாதர் சின்னசாமி! ஆனால் அந்த ஒரு ஜீவனுக்கு மட்டும் அந்திம காலத்தில் அவர் ஆதரவாக இருக்க முடியவில்லையே! மரண நேரத்தில் அந்த நினைவு வந்து வேதனை துளைக்கிறதே! ஜபம் சொல்லிப் பார்க்கிறார் ஃபாதர்.

    “அருள் நிறைந்த அன்னையே வாழ்க..”

    ‘என்னவோ இன்றைக்கு மரியே என்பதற்குப் பதில் அன்னையே என்ற சொல் தான் உள்ளத்தில் சுழல்கிறது. அவரது அன்னையைப் பொறுத்தவரை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! பெண்களுக்குள் அவள் ஒரு ரத்தினம் அல்லவா? என்ன தியாகம்! இருந்த ஒரே பிள்ளையை, வயதான காலத்தில் காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தவனை உயிருடன் தியாகம் செய்தவள் எவ்வளவு பெரிய மனது உடையவள்! ஆனால் அவளுடைய திருவயிற்றின் கனியாகிய நானோ பாவிகளுக்கெல்லாம் மேலான பாவியாகி விட்டேனே. எத்தனை பேருடைய பாவங்களுக்கு நான் மன்னிப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பிரத்தியட்சமான அன்னையைக் கடைசிக் காலத்தில் வறுமையில் வாட விட்டேனே!’

    ‘அவளுக்குத் தான் என்ன மன உறுதி! நான் அனுப்பிய பணத்தை விரலால் கூட தொட மாட்டேன் என்று மறுத்து விட்டாளே! அவளைப் பார்க்கக் கூட என்னை அனுமதிக்கவில்லையே! தான் பிறந்த மதத்தை அவள் நேசித்தது தவறா? வந்து குடி புகுந்த மதத்தை நான் நேசிக்கவில்லையா? நான் பிறந்த மதத்தை விட்டு வந்தது சரியா? என் தாயைத் தவிக்க விட்டது சரியா?

    ‘இது என்ன, இத்தனை நாள் இல்லாமல் அறுபது வருஷம் கழித்து இந்த சிந்தனை? அன்னையே, என் மரண நேரத்தில் எனக்காக வேண்டிக் கொள்ள மாட்டாயா?’

    ‘வெறும் ஜபம் செய்தால் மட்டும் ஒருவன் பாவங்களிலிருந்து தப்ப முடியாது. அவன் மனம் வருந்திப் பரிகாரமான செயல்களும் செய்து தான் திருந்தியதைத் தன் மனம் ஒப்பும் வகையில் நிரூபிக்க வேண்டும்.’

    அவர் மற்றவர்களுக்கு உபதேசித்த வார்த்தைகள் அவர் காதில் ரீங்காரமிட்டன. ‘என்ன செய்யலாம்? நாக்கைக் கூட அசைக்க முடியாத இந்த நிலையில் என் மனம் வருந்தியதை நிரூபிக்கும் பரிகாரம் நான் என்ன செய்ய முடியும்? அன்னையே, எனக்கு சக்தி கொடு.’

    அவரது உதடுகள் மெல்ல அசைந்தன. அணுக்கத் தொண்டர்கள் குனிந்து அவர் வாயருகே காதை வைத்துக் கேட்டனர்.

    “வைத்தி, வைத்தி”

    “யார் வைத்தி என்பது?” ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மீண்டும் அவரது உதடு அசைந்தது.

    “வைத்தி, பாஸ்கரராஜபுரம், பார்க்கணும்.”

    தங்கள் தெய்வத் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றத் தொண்டர்கள் பறந்தனர். எப்படியெல்லாமோ விசாரித்து வைத்தியைக் கொண்டு வந்துவிட்டனர்.

    அங்குக் கூடியிருந்த கூட்டத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத தோற்றம். குடுமி, துண்டு மட்டும் போர்த்திய மார்பு, பூணூல், பஞ்சகச்சம், நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம்.

    கூசிக் கொண்டு உள்ளே நுழைந்தார் வைத்தி. அவரது பால்ய நண்பன் சுப்புணி கட்டிலில் நார் போலக் கிடந்தான்.

    எவ்வளவு அன்யோன்யமாக இருந்தார்கள்! சுப்புணி வீட்டை விட்டு வெளியேறு முன் தாயையும் மகனையும் சேர்த்து வைக்க எத்தனை முயற்சிகள் செய்திருக்கிறார் இந்த வைத்தி. பின்னர் இவர் மூலம் தான் சுப்புணி அம்மாவுக்குப் பணம் அனுப்பினான். அம்மா காரியமும் சுப்புணி தான் செய்தார். அதன் பின் அவருடைய தொடர்பு விட்டுப் போயிற்று.

    “உட்கார்.”

    ஜாடை காட்டினார் சின்னசாமி. வைத்தி கூசிக் கொண்டே ஸ்டூலில் உட்கார்ந்தார். ‘அவரை எப்படிக் கூப்பிடுவது? சுப்புணி என்று கூப்பிடுவதா? சார் என்றா? எல்லோரையும் போல ஃபாதர் என்றா?’

    இருந்த சக்தி எல்லாம் திரட்டி ஃபாதர் பேசினார், மெதுவாக, ஆனால் நிதானமாக.

    “என் கணக்கிலே கொஞ்சம் பணம் இருக்கு. அதை நம்ம ஊர் வேத பாடசாலைக்கு சேர்ப்பித்து விடு. இந்த என் கடைசி ஆசையை நிறைவேத்துவியா?”

    அவரது குறிப்பு உணர்ந்த தொண்டர் அவரது செக் புத்தகத்தை நீட்டினார். நடுங்கும் கைகளால் அதில் கையெழுத்துப் போட்டு வைத்தியிடம் கொடுத்தார் ஃபாதர்.

    அடுத்த கணம் விவரிக்க முடியாத அமைதி அவரது உள்ளத்தில் தோன்றியது. அவரால் முடிந்த பரிகாரம் செய்துவிட்டார். மனம் லேசாகிக் காற்றில் பறப்பது போன்றும் தன் உடலைத் தானே மேலிருந்து பார்ப்பது போலவும் உணர்ந்தார். கண்கள் ஒரு கணம் மின்னின, பின் மூடிக் கொண்டன. அறுபது ஆண்டுக் காலம் இறை பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தது.

    அவரது நண்பர் வைத்தி- அவரைப் போலவே அறுபது ஆண்டு காலம் புரோகிதத் தொழில் செய்து மற்றவர்களின் நன்மைக்காக வேண்டுவதிலேயே காலம் கழித்த அந்தக் கிழவர் அந்த இடத்தை விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியேறினார்.

     

    Share
  • பேராண்மை!

    பவள சங்கரி

    “ஏண்ணா, கோவில் நடையைத் திறக்க நாழியாயிடுத்துன்னு பறந்துண்டு ஓடினேள்…. என்ன ஆச்சு, திரும்ப வந்துட்டேள்”

    “என்னத்தச் சொல்ல.. வழக்கம் போலத்தான். அந்தப் பக்கத்தாத்துல புதுசா குடி வந்திருக்காளே அந்த தில்லிக்காரா.. அந்தப் பொண்ணு காலங்கார்த்தாலே வந்து நிக்கிறா.. நல்ல காரியமா போறச்சே இவோ மூஞ்சியில முழிச்சுட்டுப் போக சங்கடமா இருக்கு. கொஞ்சம் தூத்தம் கொண்டாடி. குடிச்சிப்பிட்டு கிளம்பறேன்”

    “ஏண்ணா நம்மாத்தை விட்டு வெளியில் படியிறங்கறா வரையிலத்தான் சகுனம் எல்லாம் பார்க்க முடியும். தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிச்சப்பறம் யார், யாரோ வருவா.. போவா…  அதெல்லாம் சகுனத்தடையா நினைச்சா எப்படிண்ணா..”

    “அப்படியில்லைடி.. புதுசா எதிர்த்தாத்துக்கு வந்திருக்கவா, அந்தப் பொண்ணு ஏதோ ஒரு காரணத்துக்கு கரெக்டா எதிர்ல வந்துட்றா.. அவளைப் பார்த்துட்டு அப்படியே கிளம்ப மனசு ஒப்பலைடி நேக்கு. நல்ல காரியம்  பண்றதுக்கு கிளம்பும்போது இப்படி வெறுங்கழுத்தோடவும், பாழும் நெற்றியோடவும் இருப்பவளைப் பார்த்துட்டுக் கிளம்ப மனசு என்ன்மோ பண்றது.. அதான் வந்து, தண்ணி குடிச்சுப்பிட்டு, சித்த நாழி கழிச்சி புறப்படலாம்னு வந்தேன்”

    “அந்தப் பொண்ணு நம்ம பக்கத்துல இருக்கிற பள்ளியில டீச்சரா வேலை மாத்தி வந்திருக்காண்ணா.. குடும்பத்தோட வந்திருக்காங்க. அவ்ளுக்கு ஒரு பையனும் இருக்கான். ஐந்து வயசு இருக்கும். அவனையும் கூட்டிண்டு ஏதேதோ கிளாஸ், அப்பறம் பள்ளிக்கூடம் போவா.. தினமும் நீங்களும் அதே நேரத்துல கிளம்பறேள். இனிமேல் அரை மணி முன்னாலேயே கிளம்புங்கோ. அவ்ளோதானே. அதுக்கு ஏன் சலிச்சுக்கறேள்”

    “ ம்ம்.. அதுவும் சரிதான்.. சரி நான் வறேன்..”

    அருணா, அன்று சமையல் எல்லாம் முடித்துவிட்டு, ஓய்வு நேரத்தில் புதிதாகக் குடி வந்திருக்கும் அவர்கள் வீட்டில் போய் பேச்சுக் கொடுக்கலாம் என்று கிளம்பினாள். என்ன இருந்தாலும் தன் கணவர் இப்படி மூஞ்சியில் அடித்தாற்போல படக்கென்று திரும்பி உள்ளே வந்ததாலே, அந்தப் பெண் மனசு என்ன பாடு பட்டிருக்கும் பாவம் என்று வேதனையாக இருந்தது. அன்று மார்கழி மாத, ஆண்டாள் உற்சவத்திற்காக கோவிலில்  கொடுத்த அக்கார அடிசல் பிரசாதம் இருந்ததை, ஒரு தொண்ணையில் எடுத்துக் கொண்டு, அதன் மேல் மற்றொரு தொண்ணையால் மூடிக்கொண்டு கிளம்பினாள்..

    அவர்கள் வீட்டு வாசலை நெருங்கும்போதே வெளி நடையில் உட்கார்ந்து ’இந்து’ நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்த பெரியவர்,

    “வாங்க, வாங்கம்மா.. “ என்று இன்முகத்துடன் வரவேற்றார். உள்ளே எட்டிப் பார்த்து ’பிரமீளா’, என்று குரல் கொடுக்கவும்,

    “இதோ வ்றேன் மாமா” என்ற மெல்லிய குரல் வந்த திசையை ஆர்வமாகத் திரும்பிப் பார்த்தாள், அருணா. ஓரிரு முறை பள்ளிக்குச் செல்லும் தன் மாட்டுப் பெண்ணை வழியனுப்ப வாசல்வரை அந்த அம்மா வரும்போது பார்த்திருக்கிறாள். அதைத் தவிர அதிகமாக வெளியே பார்த்ததில்லை.

    “வாங்க.. வாங்கம்மா” என்று முகம் மலர வரவேற்றவர் அதற்குமேல் அதிகம் பேசவில்லை. அருணாவும், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் தம் ஒரே மகள் பற்றி சொல்லிவிட்டு, அதற்குமேல் அமைதியாக அமர்ந்திருக்கும் அந்த அம்மாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல், தான் வந்த விசயத்தை மெல்ல ஆரம்பிக்கலாம் என்று நினைத்து, கையில் கொண்டுவந்த பிரசாதத்தை அவர் கையில் கொடுத்துவிட்டு, மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.

    “நாங்க பரம்பரையா இதே ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு அர்ச்சகரா சேவகம் பண்ணிண்டிருக்கோம். அவர் கொஞ்சம் சகுனம் பார்ப்பவர். அதான் சில வேளைகளில் உங்க மாட்டுப் பெண்ணைப் பார்த்துவிட்டுக் கிளம்ப முடியாமல், திரும்ப வீட்டிற்குள் வந்துடுவார். அந்தப் பெண் மனசு எவ்வளவு சங்கடப்பட்டிருக்கும்னு நேக்குப் புரியறது. அவராண்டையும் அதைப்பத்தி சொல்லியிருக்கேன். ஆனாலும், அவர்  தன்னையறியாமல் ஒவ்வொரு முறையும்  அப்படியே நடந்துக்கறார். உங்க மாட்டுப் பொண்ணுகிட்ட அதை பெரிசா எடுத்துக்க வேண்டாம்னு சொல்லுங்கோ. எல்லாம் பகவான் கிருபை. நாம என்ன செய்ய முடியும். எந்தப் பொண்ணுதான் இந்தக் கோலத்தை விரும்பி ஏத்துப்போ.. என்னமோ மனசு சங்கடமா இருந்துச்சு. இப்ப பாரத்தை இறக்கி வச்சாப்பல இருக்கு. நான் வரேன்.. எந்த உதவி வேணும்னாலும் தயங்காம எங்காத்துக்கு வாங்கோ” என்று சொல்லிவிட்டு அதிகம் வாய் திறந்து பேசாத அந்த அம்மாவிற்கு, தான் இவ்வளவு நேரம் பேசியது ஏதாவது புரிந்ததா இல்லையா என்றே தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டே வந்துவிட்டாள். ஆனால் அன்று அவள் பேசிய விசயம் அவர்களுக்கு நன்றாகவேப் புரிந்திருந்தது என்பது அவர்களின் நடவடிக்கையில் தெரிந்தது. அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை தன் கணவன் கிளம்பும் நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை.

    “அருணா.. இங்க வாம்மா.. எதிர்த்தாத்துல யாரும் இல்லையா.. அவாளுக்கு ஏதோ கொரியர் வந்திருக்கு. அவா நம்மளாண்ட கொடுக்கச் சொல்லியிருக்காளாம்.  உன்கிட்ட ஏதாவது  சொல்லிட்டுப் போனாளா அவா…?”

    “ஆமாண்ணா, அவா எல்லாரும் தில்லியில ஏதோ விழாவாம். அதுக்குப் போயிருக்காண்ணா. கொரியர் வந்தா வாங்கி வைக்கச் சொல்லியிருக்கா. இன்னும் ஒரு வாரம் ஆகுமாம் திரும்பி வர்றதுக்கு”

    அன்று மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தபோது எதிர்த்த வீட்டின் கதவு திறந்திருந்ததைப் பார்த்து அவர்கள் ஊரிலிருந்து வந்துவிட்டது தெரிந்தது.

    “அருணா.. எதிர்த்தாத்துக்காராளுக்கு ஒரு கொரியர் வந்ததே. அவா வந்துட்டா போலயிருக்கே. அதைக் கொடுத்திட்டியோ?”

    “இல்லண்ணா மதியம்தான் வந்திருப்பாங்க போல. இனிமேதான் கொண்டுபோய் கொடுக்கணும். “

    “சரி, கொடு நானே கொடுத்துட்டு வறேன் என்று வாங்கிக் கொண்டு சென்றார். சென்றவர் அரை மணி நேரமாக வரவில்லையே. அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லையே என்று யோசிக்கும் போதே, மளமளவென உள்ளே வந்தவர் தன் அருகில் வந்து, ஒன்றும் பேசாமல் தரதரவென கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, எதிர் வீடு  நோக்கிச்  செல்பவரின் செயல் எதுவுமே புரியாமல் பின்னாலேயே சென்றாள். நேரே உள்ளே அழைத்துச் சென்றவர் அங்கு ஈசி சேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பெரியவரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டு, தன்னையும் விழுந்து வணங்கச் சொன்னதன் காரணம் ஏதும் புரியாவிட்டாலும், பெரியவரை வணங்குவதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை என்றே எண்ணி தானும் சற்றும் தாமதியாமல் விழுந்து வணங்கினாள். ஆனால் எவர் காலிலும் சட்டென விழத் தயங்கும் தன் கணவனின் போக்குதான் அவளுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவையனைத்தும் அவளுக்கு அந்த விசயத்தை தன் கணவன் மூலமாக அறிந்து கொள்ளும் வரைதான்……. அவர் அங்கு சென்ற போது நடந்ததைப் பற்றி சொன்ன விசயம் இதுதான்….

    “வாங்க.. வாங்க. நானே உங்களை வந்து சந்திக்கணும்னு இருந்தேன். எங்க வீட்டுப் பெண்ணால உங்களுக்கு சில சங்கடம்னு சொன்னாங்க. இனி அப்படி நடக்காம பார்த்துக்கலாம். டெல்லியில என் மகனுக்கு ஒரு பாராட்டு விழா வச்சிருந்தாங்க. அதுக்காகப் போயிட்டு வந்தோம். அதான் கொரியரை உங்ககிட்ட கொடுக்கச் சொல்லியிருந்தேன். சிரமத்திற்கு மன்னிக்கணும். வந்ததிலிருந்து ஒரே கால்வலி. அதான் வந்து வாங்க முடியல”

    “பரவாயில்லைங்க. கால்ல என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்கலாமா?”

    “அதுங்களா, செயற்கைக் கால் பொருத்தியிருக்கேன். வயசாகுதில்லையா, டிராவல் பண்ணினா வலி அதிகமாயிடுது” என்று சொல்லி, காலைக் காண்பித்தார். ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த ராமச்சந்திரனிடம் பெருமை பொங்க,

    ”1962ம் ஆண்டில் இந்தியாவிற்கும், சீனாவிற்குமான எல்லைப் பிரச்சனையினால் நடந்த போரில், இந்தியப் படையை முன்னின்று நடத்திச் செல்லும் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த யுத்தத்தில் ஒரு கால் போனதால் செயற்கைக் கால் பொருத்தியிருக்கேன” என்றார் சர்வ சாதாரணமாக.

    அவர்மீது இருந்த மரியாதை அதிகமாக இருக்கையின் விளிம்பிற்கு நகர்ந்து வந்த ராமச்சந்திரன், “மகனுக்கு ஏதோ பாராட்டுவிழா என்றீர்களே” என்று ஆர்வமாகக் கேட்டான்.

    தன் மகனைப் பற்றிக் கேட்டவுடன், கண்களில் மின்னல் தீப்பொறியாய் பிரகாசிக்க, பெருமை பொங்க,  ” சிங்கம் போல என் ஒரே மகன் வீரேந்திரன். நம் இந்திய இராணுவத்தின் கமாண்டரா பணிபுரிந்து கொண்டிருந்தான். கார்கில் போரில் அவனுடைய பங்கும் இருந்தது. கார்கிலில் முதன்முதலில் நம் நாட்டு தேசியக் கொடியை நட்டது வீரேந்திரன் தான்! அதற்குப் பிறகு பீகார்ல நடந்த நக்சலைட் தீவிரவாதிகளுக்கு எதிரான  போராட்டத்திற்கு தலைமை தாங்கிச் சென்றபோது, அங்கு நடந்த போரில் தன்னுடைய இன்னுயிரை இழக்க வேண்டிவந்தது. அந்த இறுதி நேரத்திலேயும், தம் ஆயுளை முழுமையா நாட்டிற்கு அர்ப்பணிக்க முடியலையே, அதற்குள்ளாக இறப்பு வந்துவிட்டதேன்னு வேதனைப்பட்டானாம் என் சிங்கக்குட்டி. தான் பெற்ற குழந்தையைக்கூட சரியாத் தூக்கி கொஞ்ச முடியலயேங்கற வேதனையைவிட நாட்டிற்குத் தன்னுடைய சேவையை முழுமையா அர்ப்பணிக்க முடியலையேன்னு நொந்து போனதோட, தன் மகனையும் இராணுவப் பள்ளியில் சேர்க்கணும்னு சொல்லியிருக்கான். என் பேரன் பரத்தும், என் மகனுக்குக் கொஞ்சமும் சளைத்தவன் இல்லை. அத்தனை சூட்டிப்பு. அத்தனை தேசபக்தி. அப்படியே அப்பாவைக் கொண்டு பிறந்திருந்தான். பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையில் இருக்கும்போது, எதிரிகளின் தாக்குதலால், பல உயிர்களைக் காக்கும் பொருட்டு தம் இன்னுயிரைக் கொடுத்தவன். தன்னுடைய  குழந்தைக்கு இரண்டு வயசாக இருக்கும் போதுதான் அவன் கடைசியாப் பார்த்தது. தம் மகனை இராணுவத்தின் ஒரு உயர் அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் பேரனுடைய தீராத ஆசை. அதை நிறைவேத்த வேணும்னுதான் ஆண்டவ்ன் என்னை இன்னும் வச்சிருக்கான் போல. பேரனை விரைவில் டேராடூனில் உள்ள இராணுவப் பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்”

    இதைச் சொல்லும்போது அந்தப் பெரியவரின் முகத்தில் துளியும் அச்சமோ, வேதனையோ இல்லை. மாறாக தாய்நாட்டிற்காக, பிறந்த மண்ணிற்காகத் தங்கள் கடமையைச் செவ்வனே செய்கிறோம் என்ற பெருமிதம்தான் தெரிந்தது.

    ராமச்சந்திரனின் உள்ளத்தில் சொல்லொணா பலவிதமான எண்ணங்கள் சூழ்ந்துகொண்டு இருக்கையில் உட்காரவும் முடியாமல் எழுந்தவன்,  செய்வதறியாமல் மனைவியை அழைத்துக் கொண்டு வந்து அந்தப் பெரியவரின் கால்களில் விழுந்தபோது பாரதமாதாவின் கால்களில் விழுந்து ஆசி பெற்றது போன்றதொரு உணர்வில் புளங்காகிதம் அடைய அவர் கைகளைப் பிடித்து தம் கண்களில் ஒற்றிக் கொண்டபோது, ஏற்பட்ட பரவசம் சாட்சாத் அந்தப் பெருமாளையேத் தீண்டிய இன்பம் பெற்றது போல உணர்ந்தான்..

    Share
  • “நடுத்தெரு நாராயணன்”

    தமிழ்த்தேனீ

    கனகா மிக ஆர்வமாக தன் கணவன் நாராயணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், என்னங்க நாளைக்கு காலையிலே 8 மணிக்கு நாம ரெண்டுபேரும் மந்தைவெளிக்கு போய்ட்டு வரணும்,

    என்னோட பெரியம்மா போன் பண்ணாங்க உங்களுக்கு கூட தெரியுமே என்னோட பெரியம்மா பொண்ணு அதாங்க அவங்க வீட்டுக்காரர் கூட பெரிய டாக்டர்  அமெரிக்காவுல இருக்காங்க,

    அவங்க இப்போ இந்தியாவுக்கு வந்திருக்காங்களாம், அவங்களுக்கு ரெண்டு பசங்க, நாளைக்கு அவங்களுக்கு அறுபதாம் கல்யாணம் அதுனாலே நாம ரெண்டுபேரும் போய் வாழ்த்திட்டு வரலாம் என்றாள்,

    நாராயணன் கனகாவிடம் ஆமாம் நமக்கு அறுபதாம் கல்யாணம் நடந்துதே அப்போ அவங்க வந்தாங்களா, என்றார்,

    ஏங்க அவங்க ரெண்டு பேரும் அப்போ அமெரிக்காவுல இருந்தாங்க, எப்பிடி வர முடியும் என்றாள் கனகா,

    சரி உங்க பெரியம்மாவாவது வந்தாங்களா என்றார் நாராயணன்,

    அவங்களும் வரலை, ஆனா நாம் போயிட்டுதான் வரணும், அவங்க எப்பிடி நடந்துகிட்டாலும் நாம விட்டுக்கொடுக்காம நடந்துக்குவோமே என்றாள் கனகா,

    சரி போய்ட்டு வரலாம், உனக்கும் உங்க உறவுக்காரங்களை எல்லாம் பாத்தா மாதிரி இருக்கும்னு ஒப்புக் கொண்டார் நாராயணன்,

    மறுநாள் காலை நாராயணனும் கனகாவும் கிளம்பினர், காரை ஓட்டிக்கொண்டே நாராயணன் ஆமாம் மந்தை வெளியிலே, எங்க நடக்குது அறுபதாம் கல்யாணம் என்றார்,

    இதோ பாருங்க எனக்கு அவங்க வீடு தெரியும் விலாசம் தெரியாது, ஆனா மந்தைவெளி பஸ் நிலையத்துக்கு போனா அங்கேருந்து அவங்க வீட்டுக்கு வழி தெரியும், நீங்க மந்தை வெளி பஸ்நிலையத்துக்கு காரை ஓட்டுங்க என்றாள் கனகா,

    சென்னை போக்குவரத்தில் நீந்தி மந்தைவெளி பஸ் நிலையத்தை அடைந்தவுடன், அங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க என்றாள், ஒரு ஓட்டுனரின் கவனத்தோடு அவள் சொல்லும் இடது பக்கம், வலது பக்கம் என்றெல்லாம் காதில் வாங்கிக் கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தார் நாராயணன்,

    அந்தசாலை ஒரு முட்டு சந்தில் சென்று முடிந்தது, மேலே போக வழியில்லாமல் காரை நிறுத்திவிட்டு கனகாவை ஏறிட்டார் நாராயணன்,

    கனகா கொஞ்சம் குழம்பியவளாய்  இங்கேதாங்க அவங்க வீடு,நான் அவங்க வீட்டுக்கு  10 வருஷத்துக்கு முன்னாடி வந்துருக்கேன்,ஆனா ஒரு அடையாளம் இருக்கு அவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு குப்பை மேடு பெரியமலை மாதிரி இருக்கும் அப்பிடீன்னா, கோவம் கோவமாக வந்தது நாராயணனுக்கு,

    இது ஒரு அடையாளமா? எப்பவோ அந்தக் குப்பையெல்லாம் அள்ளிகிட்டுப் போயிருப்பாங்க,அவங்க வீட்டுக்கு ஏதாச்சும் பேரு இருக்குமே அதுவாவது நினைவுக்கு வருதா பாரு என்றார் நாராயணன்,

     இல்லைங்க அந்த வீட்டைப் பார்த்தா உடனே கண்டு பிடிச்சுடுவேன் என்றாள் கனகா,பொறுமை இழந்தவராய் காரை விட்டு இறங்கி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் சென்று,ஏங்க இங்கே ஒரு குப்பைமேடு மலைமாதிரி இருந்துதாமே, அந்த இடம் எங்க இருக்கு என்று பலகீனமான குரலில் கேட்ட நாராயணனை,

    அந்த ஆட்டோஓட்டுனர் மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, ஏன் சார் பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க, விலாசம் இல்லாம இது மாதிரி ஒரு அடையாளம்சொன்னா எங்கே போயி தேடறது, ஆனா நீங்க அதிர்ஷ்டக்காரங்க அப்பிடியே பின்னாலே போயி மூணாவது லெப்டுலெ திரும்புங்க அங்கே வரும் அந்தக் குப்பை மலை என்றார்,

    அதே போல அவர் சொன்னது போலவே பின்னால் சென்று மூணாவது லெப்டுலெ திரும்பியவுடன் வந்தது குப்பை மலை, 10 வருஷத்துக்கு முன் கனகா பார்த்த அதே குப்பை மலை, திடீர்னு மகிழ்ச்சியோடு கனகா அதோ பாருங்க அந்த வீடுதான் என்றாள்,

    அவளின் அறியாமையை கண்டு சிரிப்பதா, ஆட்டோக்காரர் சொன்னது போல தாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா, அல்லது 10 வருடமாக ஒரேஇடத்தில் குப்பை மலையை வைத்திருக்கும் அரசாங்கத்தை கண்டிக்காத மக்களின் அறியாமையை எண்ணி கோவப்படுவதா, என்று புரியாமல் திகைத்து நின்றார் நாராயணன்,

    நாதஸ்வரம் ஒலிக்க அந்த கல்யாண வீடு கலகலப்பாய் இருந்தது, வந்திருந்த உறவினர்கள் அனைவருமே சென்னை வாசிகள், எல்லோருமே அந்தக் குப்பை மலையை அடையாளம் வைத்துதான் வந்திருக்கின்றனரோ என்று யோசித்தார் நாராயணன், நாமெல்லாருமே எத்தனை வருடங்கள் ஆனாலும் நடுத்தெரு நாராயணர்கள் தானா?

    எங்கே போய்க்கொண்டிருக்கிறோம், எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம், என்று எண்ணியபடியே, மணமக்களை வாழ்த்திவிட்டு உணவின் சுவையையும், குப்பை மலையின் நாற்றத்தையும் ஒருசேர அனுபவித்துவிட்டு ஒரு பீடாவையும் வாயில் போட்டுக்கொண்டு அவர்கள் அளித்த தேங்காய்ப் பையையும் வாங்கிக்கொண்டு அவர்களிடம் விடைபெற்று வெளியே வந்து மறுபடியும் காரில் ஏறி உட்கார்ந்து நாட்டைக் கொஞ்சமும் கவனிக்காத அரசாங்கத்தை ஒரு முறை எண்ணி வருந்தி விட்டு,

    அந்தக் குப்பை மலையை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்டு, நாற்றம் தாங்காமல் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் நாராயணன்.

    Share
  • அக்காவுக்குத் தெரிய வேண்டாம்!

          ஜோதிர்லதா கிரிஜா

    “சந்துரு சார்” என்று சுருக்கமாய் அழைக்கப்படும் தன் அலுவலர் சந்திரசேகரன் கொஞ்ச நாள்களாய்த் தன்னைப் பார்க்கிற பார்வையே சரி யில்லை என்று நளினிக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. சில ஆண்களைப் போல் அருவருப்பை உண்டாக்கும் பார்வையை அவள் மீது அவர் என்றுமே படரவிட்டவர் அல்லர்தான். ஒருகால், அம் மனிதன் தனக்கு எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வலிய விளைவித்துக்கொண்ட கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுகிறாரோ என்னவோ என்னும் எண்ணமும் அவளுக்கு அவ்வப்போது வந்துகொண்டிருந்தது. எனினும், கடந்த சில மாதங்களாய் அவரது பார்வையில் ஒரு வேறுபாட்டை அவள் தெளிவாய்த் தெரிந்து கொண்டிருந்தாள். பார்வை தப்பானதாக இல்லாவிட்டாலும் அதில் ஓர் ஆழத்தையும் ஏதோ சொல்ல வந்து அதை ஒத்திப்போட்டுக்கொண்டு இருந்ததையும் உள்ளுணர்வாய் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு நாற்பது வயது என்பதும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் புற்று நோய்க்கு தன் மனைவியைப் பறி கொடுத்தவர் என்பதும் அந்த அலுவலகத்து ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும். முப்பத்தைந்து வயதுக்குள் மனைவியைப் பறிகொடுத்துவிட்டு அதன் பின் மறுமணம் பற்றிச் சிந்திக்காமல் இருந்து வந்தவராய்த் தோன்றிய அவர் மீது எல்லாருக்குமே ஒரு மரியாதை இருந்தது. அவ்வலுவலகத்தைச் சேர்ந்த தலைமை எழுத்தர்கள், சக அலுவலர்கள் ஆகியோர் திருமண வயதில் தங்களுக்கு மகள்கள் இருந்த நிலையில் அவரை வளைத்துப் போட முயன்றது உண்டுதான்.  ஆனால், அந்த எண்ணம் தமக்கு இல்லை என்று அவர் திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். இந்தத் தகவலும் எல்லாருக்குமே தெரியும்.

    இந்த நிலையில், தன்னை அவர் அண்மைக் காலமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த வித்தியாசமான பார்வை நளினியைப் பாதித்தது. அவளும் அதனால் அவர்பால் கவர்ந்திழுக்கப்பட்டாள் எனும் பொருளில் அன்று. அது அவளுக்குப் பிடிக்கவில்லை எனும் பொருளில்தான் அந்தப் பாதிப்பு இருந்தது.  வாயைத் திறந்து ஒரு மனிதர் தம் எண்ணத்தை வெளிப்படுத்தாத வரையில் வெறும் பார்வைக்கு என்ன விதமாய் எதிரொலிப்பது என்று அவள் மலைத்தாள். தன் மேலதிகாரியை எரிச்சலோடு திருப்பி முறைத்துப் பார்ப்பது என்பது அவளது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அப்படி யெல்லாம் ஓர் அலுவலகத்தில் பணி புரியும் ஓர் இளம் பெண் தன் அலுவலரை முறைத்துக்கொள்ள முடியாது. அது அறிவுடமையும் ஆகாது. எனவே அவர் வாய் திறந்து அந்தப் பார்வை மாற்றத்துக்கான காரணத்தைத் தாமாகவே வெளிபடுத்துகிற வரையில் பொறுமையாக இருக்க வேண்டியதுதான் என்று காத்திருப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே அவள் காத்திருந்தாள்.

    இவ்வாறு அவரது பார்வை மாற்றத்தை அவள் கவனிக்கத் தொடங்கியதன் பின் சுமார் ஆறு மாதங்கள் கழித்து அவள் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது.

    வாய்மொழிக் கடிதங்களை வழக்கம்போல் சொன்னதன் பிறகு, “மிஸ் நளினி! உங்க கிட்ட நான் ஒரு பெர்சனல் விஷயம் பேசணும். நீங்க சம்மதிச்சா நாம வெளியே எங்கேயாவது ஓட்டலுக்குப் போய் காப்பி குடிச்சுக்கிட்டே பேசலாம். இல்லே, அதுக்கு நீங்க சம்மதிக்கல்லேன்னா, நீங்க சொல்ற எந்த எடத்துக்கும் நான் வரத்தயார்…. இல்லாட்டி, இங்கேயே கூட நான் அதைச் சொல்ல முடியும்,” என்று சன்னமாய்ச் சற்றே பிசிறடித்த தயக்கமான குரலில் கூறிய நேரத்தில் பாதி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவர் அவளை நேரடியாய்ப் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டார்.

    இப்படி ஒரு பேச்சை எதிர்பார்த்திருதவளாதலின், எவ்வாறு அதற்கு எதிரொலிக்க வேண்டும் என்பது பற்றி யோசித்து ஏற்கெனவே முடிவு செய்துவைத்திருந்த அவள், “என்ன சொல்லப் போறீங்க, சார்? ஓரளவுக்கு நான் ஊகிச்சேன்.  ஆனா அதை உங்க வாயிலேர்ந்து கேட்டதுக்கு அப்புறம் என் பதிலை நான் சொல்றேன்!” என்ற நளினியை அவர் சட்டென்று தலை உயர்த்தி வியப்புடன் பார்த்தார். ஏனெனில், அவள் குரலில் தேசலோ, தடுமாற்றமோ துளியும் இல்லை. அவளும் அவரை நேரடியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் வெட்கமோ, அது சார்ந்த செம்மையோ அறவே தென்படவில்லை என்பதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. கம்பீரம், தேவையற்றுச் சிரிக்காதிருத்தல், அளவான புன்சிரிப்பு, அடக்கமான ஆடை, அணிகலன்கள் ஆகியவற்றின் வாயிலாகத் தான் ஒரு மாறுபட்ட பெண் என்பதை அவருக்கு உணர்த்தியிருந்த நளினி அந்தப் பொதுமையான எதிர்ச்செயல் மூலம் அவரை மேலும் வியப்புற வைத்தாள். அவர் அவளை மரியாதையுடன் பார்த்தார்.

    அவரது வலக்கையின் விரல் மேசையின் விளிம்பில் இருந்த சிவப்பு மின்விளக்கின் பொத்தானை அழுத்தியதை அவள் கவனிக்கத் தவறவில்லை. அலுவலகம் தொடர்பான கமுக்கமான கடிதங்களை வாய்மொழிகையில் அவர் அந்தப் பொத்தானை அழுத்தி அறையின் வெளியே சிவப்பு விளக்கு எரியச் செய்வது வழக்கம். அலுவலரின் அறைக்கு வெளியே சிவப்பு விளக்கு எரியும் போது யாரும் கதவைத் தட்டிவிட்டும் கூட உள்ளே வரக்கூடாது– உள்ளே வர அனுமதி கேட்கவும் கூடாது-  என்பது அலுவலக விதி.

    “சொல்லுங்க, சார்!”

    சந்திரசேகரனை அவளது எதிரொலி தயங்க வைத்தது. அவரது தலை தாழ்ந்துகொண்டது. என்ன முயன்றும் அவரால் அவளை நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. எனினும், குரலைச் செருமிச் சரிப்படுத்திக்கொண்டு, “ நீங்களே சரியா ஊகிச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன்…” என்றார்.

    “நான் ஊகிச்சேனா இல்லையான்றதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சார்.  நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்க!”

    அதன் பின் அவர் சற்றே தலை உயர்த்தி அவளை அரையாகப் பார்த்தார்: “நான் மனைவியை இழந்தவன்கிறது உங்களுக்குத் தெரியும். இல்லியா?”

    “தெரியும்.”

    “என் மனைவி தவறிப்போய் அஞ்சு வருஷம் ஆயிடிச்சு. எனக்குக் குழந்தைகள் இல்லேன்றதும் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.”

    “தெரியும், சார்.”

    “அஞ்சு வருஷமா மறுமணத்துல ஆர்வம் இல்லாமதான் இருந்தேன்.  ஆனா இப்படியே முழு வாழ்க்கையையும் கழிச்சுட முடியாதுன்னு தோணுது.. அதனால, மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிறதுன்ற முடிவுக்கு வந்திருக்கேன்…”

    “அது உங்க சொந்த விருப்பம். அது சரியான முடிவும்தான், சார்.”

    அவள் இவ்வாறு சொன்னதும், அவரது அரைப் பார்வை ஒரு நம்பிக்கையுடன் முழுப் பார்வையானது.

    “என் வயசு தெரியுமா உங்களுக்கு?”

    “தெரியும், சார். வர்ற மே மாசம் உங்களுக்கு நாப்பது முடியுது. உங்க பெர்சனல் ஃபைல் என்கிட்ட தானே இருக்கு? அதனால தெரியும்.”

    அவளது ஜாக்கிரதையான பதிலை அவர் தம்முள் மெச்சிக்கொண்டார்.

    “உங்களுக்கு இருபத்தேழு ஆகுது. இல்லியா?”

    “ஆமா.”

    “பதிமூணு வயசு வித்தியாசம்.  ஆனா இன்னும் எனக்கு ஒரு நரை முடி கூடக் கிடையாது…”

    நளினிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதை மறைக்க அவள் முயலவில்லை.

    “சார்! ஒரு நிமிஷம்… உங்க ஆர்வத்துக்கு ரொம்ப நன்றி.  ஆனா அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட சில விஷயங்களைச் சொல்லணும். முதல் உண்மை எனக்கு இதிலே ஆர்வம் கிடையாது…”

    “அப்படிச் சொல்லாதீங்க, நளினி! உங்க மேல எனக்கு ஒரு பிடிமானம் ஏற்பட்டிருக்கு. அதை லவ்னே சொல்லலாம். என் மனைவியை நான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கல்லே. அது என் அம்மா-அப்பா செஞ்சு வெச்சது…அதுக்காக நான் அவளை நேசிக்கல்லேன்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.”

    “உங்க நேர்மையான பேச்சைப் பாராட்டுறேன், சார்! ஆனா, ஒரு நிமிஷம்… நான் இன்னும் பேசி முடிக்கல்லே. எங்க குடும்பத்தைப் பத்தி உங்க கிட்ட நான் பேச வேண்டியிருக்கு. நாங்க மொத்தம் அஞ்சு பேரு. நாலு பொண்ணுங்க. கடைசியா ஒரு தம்பி.  நான் மூணாவது பொண்ணு. எனக்கு அப்பா கிடையாது. எங்கப்பா செத்துப் போன போது எனக்குப் பதினஞ்சு வயசு. எனக்கு முந்தினவளுக்குப் பதினெட்டு.  எல்லாருக்கும் மூத்த அக்காவுக்கு இருபத்தொரு வயசு. கெட்ட வழக்கம் எதுவும் இல்லாத நல்ல அப்பா அவரு.  ஆனா ரொம்பப் படிக்காதவரு. ஒரு ப்ரைவேட் கம்பெனியில வாச்மேனா இருந்தவரு. அவரோட சொற்ப சம்பாத்தியத்துக்கு எங்களையெல்லாம் அவர் படிக்கவெச்சுக்கிட்டு இருந்ததே அதிகப்படி. அவர் காலமானதும் எங்களுக்கெல்லாம் கண்ணைக்கட்டிக் காட்டில விட்டது மாதிரி இருந்திச்சு. நிராதரவா உணர்ந்தோம். எங்கம்மா அப்படியே இடிஞ்சு போயிட்டாங்க. ஹார்ட் பேஷண்டாவும் ஆயிட்டாங்க. கையில சேமிப்பு எதுவும் இருக்கல்லே. இருந்த சொற்பத்துல அவங்களுக்கு வைத்தியம் பார்த்தோம். எல்லாமே கரைஞ்சிடிச்சு. ஆனா, எல்லாருக்கும் மூத்த எங்கக்காவுக்கு வேலை கிடைச்சிச்சு. மத்தவங்கல்லாம் படிச்சுக்கிட்டு இருந்தோம். அவளால தான் எங்க குடும்பம் அரையும் குறையுமாச்  சாப்பிட்டு வாழ்ந்திச்சு. சில நாள் ஒரு வேளைதான் சாப்பிட முடிஞ்சிச்சு. அவ வேலைக்கு வந்ததுக்கு அப்பால அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் அடுத்த அக்காவுக்கு வேலை கிடைச்சிச்சு. அதுக்கு ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு இந்தக் கம்பெனியில ஸ்டெனோ வேலை கிடைச்சிச்சு. எனக்கு அஞ்சு வருஷம் செர்வீஸ் ஆகுது.  அப்ப? எங்கக்காவுக்கு இப்ப முப்பத்து மூணு வயசு ஆகுது. அவளுக்கு இன்னும் கல்யாணம் பண்ணி வைக்க முடியல்லே. வரதட்சிணை வாங்குற பழக்கம் ரொம்பவே குறைஞ்சிடுச்சுன்னு பலரும் உளறிக்கிட்டு இருக்காங்க. அது பணக்காரக்குடும்பங்கள்ல தான் நடக்குது. அதனால, என்ன பிரயோசனம்? ஏழைங்களும், நடுத்தரக்குடும்பங்களும் இன்னும் இந்த வரதட்சிணைப் பேயால கஷ்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க….நீங்க என்னை லவ் பண்றதாச் சொன்னீங்க. அதை நான் தப்புன்னு சொல்லமாட்டேன்.  நீங்க லவ் பண்ற பொண்ணோட வேண்டுகோளை நிறைவேத்தி வெச்சிங்கன்னா, உங்க லவ் உண்மையான லவ்னு நான் நம்புவேன், சார். யாரை நாம லவ் பண்றோமோ அவங்களோட சந்தோஷம்தானே நம்ம குறிக்கோளாய் இருக்கணும்? இல்லியா, சார்?”

    அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவருக்குப் புரியவே செய்தது. அவர் மேலும் மரியாதையுடனும் களங்கமற்ற அன்புடனும் அவளைப் பார்த்தவாறு இருந்தார்.

    “சொல்லுங்க, சார்.”

    “விஷயத்துக்கு வாங்க.”

    “புரியாதவங்களுக்குத் தானே சார் விஷயத்தைச் சொல்லிட்டு இருக்கணும்? சரி. என் வாயாலே சொல்லிடறேன். என் மேல நீங்க வெச்சிருக்கிற அன்பு உண்மையானதாய் இருந்தா எங்க மூத்த அக்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்! அவளைப் பார்த்துட்டே நீங்க சம்மதமோ மறுப்போ சொல்லலாம், சார். அவ என்னை விட அழகாய் இருப்பா. ரொம்ப நல்லவ சார் எங்கக்கா. கல்யாணமே வேண்டாம்னு இருக்கா சார் அவ.  எங்களுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் அவளோட லட்சியமாம். ஏன்னா அவளுக்கு முப்பத்து மூணு வயசு ஆயிடிச்சாம். வரிசையாத்தான் பண்ணணும்னு முனைஞ்சா எல்லாருக்குமே வயசு ஆயிடுமாம். சொல்றா! தவிர, உங்க வயசுக்கு அவ அதிகம் பொருத்தமானவ. இல்லியா, சார்?”

    சந்திரசேகரன் கண்ணிமைக்காமல் நளினியைப் பார்த்தவாறு இருந்தார். முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. கடந்த ஆறு மாதகாலத்துக்கும் மேலாய் அவரது பார்வையில் தோன்றி இருந்த கள்ளம் காணாமல் போய் விட்டிருந்தது.

    “நீங்க சொன்னது ரொம்பவே சரி, மிஸ் நளினி! தன் அன்புக்கு உரியவளைச் சந்தோஷப்படுத்துறதுதான் ஒரு நல்லவனோட கடமை. நான் நல்லவன்னு உங்ககிட்டேருந்து செர்ட்டிஃபிகேட் வாங்கறதுல ஆர்வமுடையவனாய் இருக்கேன், மிஸ் நளினி!”

    “தேங்க்யூ, சார்! என்னிக்குப் பொண்ணு பார்க்க வர்றீங்க?”

    “நீங்க இவ்வளவு சொன்னதுக்குப் பெறகு, உங்க அக்காவைப் பார்க்காமயே என் பதில் ‘யெஸ்’ தான்! ஆனா அவங்க என்னைப் பார்க்கணுமில்லே? அதானால நீங்க என்னைக்கு வரச் சொல்றீங்களோ அன்னைக்ககு வர்றேன்.”

    “தேங்க்ஸ், சார்.  ஆனா மச்சினியை யாராச்சும் நீங்க, வாங்க, போங்கன்னு பன்மையில பேசுவாங்களா?”

    “மாட்டாங்கதான்! ஆனா அது எங்க கல்யாணத்துக்குப் பெறகு!” என்று அவர் சிரித்த சிரிப்பில் அவளும் கலந்துகொண்டாள்.

    இருவரும் சேர்ந்து இரைச்சலாய்ச் சிரித்தது வெளியே கேட்க, கதவுக்கு அருகே முக்காலியில் உட்கார்ந்திருந்த பியூன் கந்தசாமி, “ரெட் லைட்டைப் போட்டுக்கிட்டு கூத்தடிக்கிறாங்கப்பா உள்ளே ரெண்டு பேரும்!” என்றான்.

    இது பற்றி  அறியாத நளினி, “ஆனா நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தரணும்…” என்றாள்.

    “என்ன!”

    “இப்ப நாம பேசினது எதுவும் எங்க அக்காவுக்குத் தெரியவே கூடாது!”

    “சொல்லவே மாட்டேன்! நானென்ன மடையனா?” என்றார் சந்திரசேகரன்.

    Share
  • கோகுலத்தில் கோலாகலம்!

     

    -கவிநயா

    கோகுலமே ஒரே நிசப்தமாக இருந்தது. கொலுசுச் சப்தம் கூட பூதாகரமாகக் கேட்பது போல் இருந்ததால், நிசப்தமான இடத்தில் குரலெழுப்பாமல் இரகசியக் குரலில் பேசிக் கொள்வது போல், சப்தம் எழுப்பாமல் கொலுசணிந்த பாதங்களை மெதுவாக எடுத்து வைத்து நடந்தாள், ராகினி.

    ராகினி அவள் அம்மாவுடன் கோகுலத்தில் வசிக்கும் அத்தை மகள் லலிதை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள்.

    கிருஷ்ணன் பிறந்தது முதல் கோகுலத்தை விட்டு எங்கேயும் வருவதில்லை, லலிதை. அதனால் அவளை (கிருஷ்ணனையும்) பார்க்கும் ஆவலில், அம்மாவையும் இழுத்துக் கொண்டு இங்கேயே வந்து விட்டாள், ராகினி!

    ஆளரவமேயின்றி திறந்து கிடந்த வீடுகளை வியப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தார்கள், இருவரும். பகல் நேரத்தில் இப்படி ஒரு நிசப்தமா? கொஞ்சம் அச்சமாகக் கூட இருந்தது இருவருக்கும்.

    இதோ… லலிதையின் வீடு!

    லலிதையின் வீடும், இவர்கள் பார்த்த மற்ற வீடுகள் போலவே திறந்துதான் கிடந்தது. வீட்டில் யாரும் இருப்பது போலவே தெரியவில்லை. எல்லோரும் எங்கே போயிருப்பார்கள்? ‘லலிதை’ என்று சப்தமாகக் கூப்பிடக் கூட ஒரு மாதிரியாக இருந்தது. உள்ளே சென்று பார்க்கலாம்…

    உள்ளே… கூடத்தில்… அவர்கள் கண்ட காட்சி!

    ஒரு பெரிய பையன் குனிந்து கொண்டிருக்க, அவன் மீது ஒரு சின்னப் பையன் ஏறிக் கொண்டு, உறியிலிருந்த பானையை எடுத்துக் கொண்டிருந்தான்.

    “ஆ!” என்று தன்னையுமறியாமல் சப்தமிட்டாள் ராகினி.

    திடீரென்று கேட்ட குரலால் திடுக்கிட்டு, பானையைத் தவற விட்டு விட்டான், அந்த நீல வண்ணச் சிறுவன். பானை கீழே விழுந்து உடைய, அதிலிருந்த வெண்ணெய் வெள்ளை வெளேரன்று பந்து பந்தாய் ஆங்காங்கே சிதறியது. சட்டென்று கீழே குதித்த அவன், ராகினியும் அவள் அம்மாவும் அங்கே வாய் பிளந்து நிற்பதைக் கண்டும் காணாதது போல், சாவகாசமாகக் கீழே உட்கார்ந்து வெண்ணெயைக் கைகள் நிறைய அள்ளி வாய் நிரம்ப வைத்து உண்ண ஆரம்பித்தான். அந்த இன்னொரு சிறுவனையும் உண்ணும்படி சைகை செய்தான்.

    “மாட்டிக் கொண்டாயா!”

    என்ற உற்சாகக் குரலைக் கேட்டுத் திரும்பினாள், ராகினி.

    அங்கு நின்றிருந்தவள், சாட்சாத் அவள் அத்தையேதான்! லலிதையின் அம்மா.

    ராகினியையும், அவள் அம்மாவையும் பார்த்தவள், “வாருங்கள் அக்கா, வா ராகினி. உங்களைப் பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம். ஆனாலும் உங்களைக் கவனிப்பதற்கு முன், இந்தப் பயலை அவன் அம்மாவிடம் கொண்டு ஒப்புவித்து விட்டு வந்து விடுகிறேன்.”

    நீலப் பையன் தப்பிச் செல்ல எந்த அவசரமும் காட்டவில்லை. யாரோ என்னவோ நமக்குச் சம்பந்தமில்லாததைப் பேசுகிறார்கள் என்பது போன்ற பாவனையுடன், குறும்புச் சிரிப்புடன், வெண்ணெயை அள்ளித் தின்று கொண்டிருந்தான்.

    “இந்தக் கள்ளக் கிருஷ்ணன் வெண்ணெய் திருடுகிறான் என்று நான் சொன்ன போதெல்லாம் இவன் அம்மா யசோதா என்னை நம்பவே இல்லை. அவனைக் கையோடு பிடித்துக் கொண்டு வா, அப்போது பார்க்கலாம் என்று சொல்லி விட்டாள்! இவனைப் பிடிக்கத்தான் இத்தனை நேரம் ஒளிந்து கொண்டு காத்திருந்தேன்! இதோ இப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டானே!”

    என்று சொல்லியபடி, லலிதையின் அம்மா நீலக் கிருஷ்ணனின் ஒரு கரத்தை இறுகப் பற்றி இழுத்துக் கொண்டு, யசோதையின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ராகினியும், அவள் அம்மாவும் கூடவே, என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலுடன் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.

    இவர்கள் போகும் வழியில் இன்னொருத்தியும் ஒரு கையை நீட்டிப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தாள். யாரையோ பிடித்திருப்பது போல பாவனை இருந்தாலும், அவளுடன் வேறு யாரும் வருவதாகத் தெரியவில்லை; அவள் மட்டும் வருவதாகவே ராகினிக்குத் தெரிந்தது.

    கொஞ்ச தூரம் சென்றதும், இன்னொருத்தியும் அதே போல கையை நீட்டிப் பிடித்தபடி வந்தாள். (அதாவது, ஒருத்தி பிடித்திருந்த கிருஷ்ணனை இன்னொருத்திக்குத் தெரியவில்லை!) இப்படியே ஒவ்வொருத்தியாகச் சேரச் சேர, ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து விட்டது. பெரியதொரு ஊர்வலம் போல அனைவரும் சேர்ந்து யசோதையின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள்!

    “யசோதா!”

         “யசோதா!”

                 “யசோதா!”

    ஆளுக்கொரு குரலெழுப்பிக் கூப்பிட்டார்கள். யசோதா வெளியில் வந்தவள், இத்தனை பெரிய கூட்டத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

    “என்னடி இது? அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்? அது மட்டுமில்லாமல் எல்லோரும் ஒரு கையை ஒரு பக்கமாக நீட்டிக் கொண்டே வேறு இருக்கிறீர்கள்? எல்லோருக்கும் ஒரே சமயத்தில் கை சுளுக்கிக் கொண்டு விட்டதா?”, முகவாயில் கை வைத்துக் கொண்டு ஆச்சரியமாகக் கேட்டாள். அவளுக்கும் அவர்கள் எல்லோரும் பிடித்திருந்ததாக நினைத்த கிருஷ்ணர்கள் தெரியவில்லை.

    “யசோதா! உன் பிள்ளை எங்கள் வீடுகளில் வெண்ணெய் திருடுகிறான் என்று சொன்ன போது நம்ப மாட்டேனென்றாயே? கையோடு பிடித்துக் கொண்டு வா, பார்க்கலாம் என்றாயல்லவா? பார் உன் பிள்ளையை! வெண்ணெய் அள்ளிய கையோடு, அதை உண்ட வாயோடு, அப்படியே பிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன்! இப்போதாவது நம்புவாயல்லவா?”, லலிதையின் அம்மா, கையில் பிடித்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

    “ஆமாம்… பார், நாங்களும் உன் பிள்ளையைப் பிடித்து வந்திருக்கிறோம்”, என்று எல்லோரும் அவரவர் பிடித்து வைத்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் நிறுத்தினார்கள்.

    ஒவ்வொருத்திக்கும் தன் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் மட்டுமே தெரிந்தான். மற்றவர்கள் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் தெரியவில்லை. யசோதைக்கோ இவர்கள் கூட்டி வந்த எந்த கிருஷ்ணனுமே தெரியவில்லை!

    இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்ட யசோதைக்குக் கோபம் வந்து விட்டது!

    “என்னடி, விளையாடுகிறீர்களா? என் பிள்ளை காலையிலிருந்து எங்குமே போகவில்லை! இப்போது கூட உள்ளே ததியோன்னம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பார்க்கிறீர்களா?” என்றவள் உள் பக்கம் திரும்பி, “கிருஷ்ணா! கிருஷ்ணா! இங்கே வா!”, என்று உரக்கக் கூப்பிட்டாள்.

    “என்னம்மா… கூப்பிட்டாயா?” என்றபடி ததியோன்னமும் கையுமாக கிருஷ்ணன் உள்ளிருந்து வந்தானே பார்க்க வேண்டும்!

    வந்திருந்த அத்தனை கோபிகளின் வாயும் அடைத்து விட்டது! “என்ன இது? கிருஷ்ணன் உள்ளே இருந்து வருகிறானே!” என்று தன் கையில் இருந்த கிருஷ்ணனை ஐயத்துடன் பார்த்தார்கள்.

    தயிர் வழியும் வாயோடு, உள்ளிருந்து வந்த கள்ளக் கிருஷ்ணன் சிரிக்க, எல்லோருடைய கிருஷ்ணர்களும் வெண்ணெயுண்ட வாயோடு இப்போது எல்லோர் கண்களுக்கும் தெரிய… கோகுலம், ஒரு நொடியில் கோலாகலமானது!

    “தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு”,  தளர்நடை இட்டு வருவான்;
    பொன்னேய் நெய்யொடு பாலமுது உண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்!
    மின்னேர்  நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே!
    அன்னே  உன்னை அறிந்துகொண்டேன் ; உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே! 

    தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு = இரண்டு விதமாப் பொருள் சொல்லுவார்கள்:
    1.   தானும், தன் ஆயிரம் தோழர்களும்-ன்னு = 1000 friends, is too big a number, of the same age group:)
    2.   “தன் நேர்” = தன்னைப் போலவே ஆயிரம் பிள்ளைகள்; ஆயிரம் கண்ணன்கள்!!!
    தளர்நடை இட்டு வந்து, நெய் உண்டு, உண்ணவே இல்லை-என்று சாதிக்கும், பொய்யே தவழும்
    குட்டிக் கிருஷ்ணனைக் கண்டு யசோதையும் அஞ்சுகிறாள்!

     

    “அம்மா, அம்மா! லலிதையோடு நானும் இனி கோகுலத்திலேயே இருக்கிறேனம்மா!” என்று நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள், ராகினி!

     

    அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்!

     

    [நன்றி: பாசுரம், உதவி – KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர்]

    படத்துக்கு நன்றி: http://artstudio108.com/inspirational/Krsna_stealing_butter.jpg

    Share
  • பணப்பொருத்தம்!…

    எஸ். கோதண்டராமன்

     

    1 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் எம்.எஸ்சி படிச்சுட்டு காலேஜிலே லெக்சர………….. ”

    “சாரி. நாங்க ப்ரொபஷனல் மாப்பிள்ளையாப் பார்க்கிறோம். ”

    “இதுவும் ப்ரொபஷன் தானே. ”

    “சாரி, டாக்டர், எஞ்ஜினீயர்னா பேசுங்க. இல்லாட்டி போனை வெச்சுடுங்க.”

    2 டிர்ரிங்.. டிர்ரிங்

    “ஹலோ”

    “…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் பி.டெக். படிச்சுட்டு மெட்ராஸ்லே டைடல் பார்க்லே ஒரு கம்பெனிலே சாப்ட்வேர் இஞ்ஜினீயரா வேலை பார்க்கிறான். ”

    “பி.டெக். எந்த காலேஜ்? ”

    “சேலம். ”

    “சாரி. அண்ணா யுனிவர்சிட்டி, ஐ.ஐ.டி அல்லது பிலானிலே படிச்ச பையனா இருக்கணும். என் பெண்ணும் பி.ஈ. அதை விட அதிகம் படிச்சவரா, பாரின்லே எம். எஸ். முடிச்சு பாரின்லே வேலை பார்க்கிற பையன் தான் வேணும். ”

     

    3 டிர்ரிங்.. டிர்ரிங்

    “ஹலோ”

    “…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் சென்னை ஐ.ஐ.டி.லே பி.டெக். படிச்சுட்டு யு. எஸ்லே எம். எஸ் பண்ணினான். இப்போ பாஸ்டன்லே வேலை பார்க்கிறான். எங்களுக்கு இங்கே அடையாறிலே ஒரு பங்களா இருக்கு. நீலாங்கரையிலே பையன் பேரிலே ஒண்ணு வாங்கி இருக்கோம். அப்புறம் கொடைக்கானல்லே ஒரு பங்களாவும் எஸ்டேட்டும் இருக்கு. ”

    “வெரி குட். நீங்க பெண் பார்க்க எப்ப வரீங்க? ”

    “பையன் அடுத்த மாசம் தான் வருவான். நானும் என் வீட்டுக்காரரும் வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு வரோம். உங்க விலாசத்தைக் குடுங்க. ”

     

    4 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “ஆண்ட்டி, நான் பாஸ்டன்லேருந்து பாஸ்கர் பேசறேன். பானு போன் வேலை செய்யல்லியா? ”

    “ஒரு நிமிஷம். ”

    “பானு, மாப்பிள்ளே கூப்பிடறார்டி. ஏன் உன் போன் என்னாச்சு? ஏன் லேண்ட் லைன்லே கூப்பிடறார்? ”

    “பாட்டரி லோ. ஆப்ஃ ஆயிடுத்தும்மா. சார்ஜ் பண்ணலாம்னா கரண்ட் இப்பத் தானே வந்திருக்கு. ”

    “என்ன பொண்ணும்மா நீ. அவர் தான் தினமும் இந்த நேரத்துக்குக் கூப்பிடறார்னு தெரிஞ்சிருக்கே. முன்னுக்கு முன்னதா சார்ஜ் பண்ணி வெச்சுக்க வேண்டாமா? ”

     

    5 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “நான் பானு பேசறேம்மா. நான் நாளைக்குப் புறப்பட்டு சென்னைக்கு வரேம்மா.”

    “என்னடி இப்ப திடுதிப்புன்னு. இனிமே அடுத்த வருஷம் தான் லீவு எடுக்க முடியும்னு மாப்பிள்ளே சொன்னாரே. மாப்பிள்ளையும் வராரா? ”

    “அவன் வரல்லேம்மா. நான் மட்டும் தான் வரேன். ”

    “என்னடி இது? மாப்பிள்ளையைப் போய் அவன் இவன்னு பேசறே. ”

    “அவன் எனக்குப் புருஷனும் இல்லே. உனக்கு மாப்பிள்ளையும் இல்லே. ”

    “என்னடி சொல்றே நீ? ”

    “ஆமாம்மா நான் ஒரேயடியா வந்திடறேன். லக்கேஜ் ஹெவியா இருக்கு. ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க. ”

    “ஏண்டி? என்னடி ஆச்சு? ”

    “பின்னே என்னம்மா. தேடித் தேடி அமெரிக்க மாப்பிள்ளையைப் புடிச்சியே. சுத்த பழய பஞ்சாங்கம்மா. ”

    “என்னடி சொல்றே? ”

    “கொஞ்சம் கூட நாகரிகமா நடந்துக்கத் தெரியல்லே, அம்மா, அவனுக்கு. எப்போ பார்த்தாலும் பூஜை புனஸ்காரம். ரூமுக்கு ரூம் ராமகிருஷ்ணர், ரமணர், சாயிபாபான்னு சாமியார் படம் தான். அலமாரி பூரா விவேகானந்தர் புஸ்தகங்கள் தான். ஒரு க்ளப்புக்குப் போனோம், ஒரு டிஸ்கொதேயிலே கலந்துகிட்டோம் ஒண்ணு கிடையாது. ஒரு பீர் கூட குடிச்சதில்லையாம். வெளியிலே கூட்டிகிட்டுப் போனா, கோவில் இல்லாட்டா பஜனை, இந்த மாதிரித் தான். அமெரிக்காவிலே இருக்கிறவன் கொஞ்சம் நாகரிகமா இருப்பான்னு நெனச்சேன். இந்தக் கொட்டாம்பட்டியோட காலம் தள்ள முடியாது என்னாலே. ”

    “ஏண்டி, நிச்சயம் பண்ணி கல்யாணம் நடக்கிற வரைக்கும் ஆறு மாசம் நாள் தவறாமே போன்லே மணிக்கணக்காப் பேசினியே. என்னடி தெரிஞ்சுகிட்டே அவரைப் பத்தி?

    “அப்பல்லாம் நிறைய ஜோக் சொல்லிச் சிரிக்க வெச்சுக்கிட்டே தான் இருந்தான்.  நான் இந்த மாதிரித்தான் இருப்பேன்னு அவன் சொன்னப்போ, அமெரிக்காவிலே இருந்துகிட்டு இந்த மாதிரி யாராவது இருப்பாங்களா, விளையாட்டுக்குச் சொல்றான்னு தான் நான் நெனைச்சேன். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் நாம மாத்திடலாம்னு நெனச்சேன். அது முடியாதுன்னு தீர்ந்து போச்சு. நான் நாளை ராத்திரி பதினோரு மணிக்கு வருவேன். ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க”

     

     

    Share
  • மறுஜென்மம்

    நீச்சல்காரன்

    எடை கனமானாலும், வலுயில்லாததாக, தன்னால் மரபணு மாற்றப்பட்ட  மரத்துக் கட்டையால் அடிவாங்கியதால், பலமான காயமின்றி எழுந்த ஹான்ஹி வினித்தைத் தேடத் தொடங்கினார். மூலிகையின் வாசனை வழியே பயணிக்கத தொடங்கினார். தனது மூன்று மாதத் திருவிளையாடலின் பயனாக அந்த அபூர்வ மூலிகை வேர்களைக் கையாடல் செய்துவிட்டு, தனது திட்டப்படி இரகசிய இடம் நோக்கி மலை முகடுகளில் பயணித்துக் கொண்டிருந்தான் வினித்.
    யாரிந்த வினித்? கரட்டூர் கானதன்யாசி என்ற ஜோசியரின் வாக்குப்படி பெரிய அரண்மனையில், தன் இனத்திற்கே தலைவனாக இருந்தவனின்  மறுஜென்மம் தான் வினித்தாம். இந்த ஜென்மத்திலேயே முன்ஜென்மம் எடுக்கப் போகிறானாம். ஆனால் இதை எல்லாமல் துளியும் நம்பாத வினித்,  இந்திய மக்கள் தொகைக்  கணக்கின் படி  ஒரு மனைவி, மூன்று மகன்கள், நான்கு சகோதரிகள், இரண்டு தம்பிகள் என்று பெரிய குடும்பத்தின் மூத்த மகன். ஏறக்குறைய அனைத்துத் தொழில்களையும் முயன்று தோற்று, கடன்பட்டு, கஷ்டப்பட்டு, அடிபட்டு, ஊரைவிட்டு ஓடிவந்தவன். ஹான்ஹி என்ற சீன மருத்துவருடன் முதுமலைக் காட்டில் இதுவரை வசித்து வந்தான். ஹான்ஹி ஒரு இயற்கை மரபியல் ஆய்வாளர், எளிய மொழியில் சித்தர் என்றே சொல்லிவிட்டுப் போகலாம். தாவரங்கள் அல்லது விலங்குகளின் மரபணுக்களைச் சீண்டி புதிய குணங்களைக் கண்டுபிடிப்பதில் வல்லவர். வேப்ப மரத்தில் மாஞ்சுவையுடன் வேப்பங்கனிகள் உருவாக்குவார்;  மாமரத்தில் வேப்பஞ்சுவையுடன் மாங்கனிகள் உருவாக்குவார்; எளிதில் உரிக்கக்கூடிய தேங்காய், காரமான பாவற்காய்  என எவ்வளவோ செய்வார். ஆக ஒரு உயிரின் குணத்தையோ உருவத்தையோ மாற்றும் கலையில் கைதேர்ந்தவர். ஆனால் வெளியாட்களுடன் அவ்வளவாக பழகாதவர். முன்பு ஒருமுறை கள்ளக் கடவுச்சீட்டு பெற்று தான் நாடு கடக்க உதவிய  ஒரே காரணத்திற்காக வினித்தைத் தன்னுடன் இருக்க அனுமதித்தார்.

    வேறு வழியற்ற வினித்தும், தனது ஊருக்கே தெரியாமல் இவருடன் காட்டில் வசித்து வந்தான். ஹான்ஹி உடன் இருந்தபோது ஏதேனும் சூரணம், லேகியம் போன்று கற்றுவிட ஆசைப்பட்டான். முடியவில்லை. மாந்திரம், மாந்திரீகம், வசியம் என்றும் ஏதும் அமையவில்லை. பப்பாளி மரத்தில் தக்காளி பறிப்பது, ஆலமரத்தில் நாவல் பழம் பறிப்பது, சர்க்கரைப் பாறையிலிருந்து சர்க்கரை சுரண்டுவது, பேசும் குரங்கிடம் அடிவாங்குவது என்றே காலம் நகர்ந்தது. அந்த ஜோசியர் சொன்னதும் அவ்வப்போது இவன் நினைவுகளில் வந்து சென்றது. இறுதியாக ஒரு நாள் ஒரு உண்மை தெரிந்தது, ஹான்ஹி என்பவர் போன ஜென்மத்தில் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு சித்தராம், ஒரு அரிய மூலிகையின் பயனாக பழைய ஞாபகங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அதே தமிழ்நாட்டிற்கே வந்தவராம். இதைச் சற்றும் எதிர்பாராத வினித் விண்ணைத் தாண்டுமளவிற்குத் துள்ளல் கொண்டான். ஒரு மாசி மாத மாலை நேரத்தில் மண்டையைத் தடவியவாறே மல்லாந்து ஹான்ஹி படுத்திருந்த வேளையிலே, கட்டையால் கபாலத்தில் அடித்து அந்த மூலிகையைக் கைப்பற்றினான் என்பதே வினித்தின் முன்கதை. ஹன்ஹி வினித்தை நோக்கியும், வினித் இரகசிய இடம் நோக்கியும் ஓடிக் கொண்டிருக்க வானம் இருள் வசமானது.

    அந்த மூலிகையைக் குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் பழைய ஜென்மத்து உருவம் கிடைக்குமாம் மீண்டும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் இந்த ஜென்ம உடலை மீண்டும் பெறலாமாம். இதை நினைத்துக்கொண்டே வரவேண்டிய இடத்தை அடைகிறான் வினித். இராமசாமி பண்ணையாருக்கு ரெண்டு லட்சம், கருப்பாயி பேரனுக்கு ஒண்ண்ரை லட்சம், மனைவிக்கு அஞ்சு பவுன், தங்கைகளுக்கு மூணு பவுன், மகனுக்கு சைக்கள், கடைசியாக ‘உன் இனத்திற்கே தலைவன் என்று சொன்ன’ ஜோசியக்காரனுக்கு ஒரு பட்டு வேஷ்டி சட்டை என்று விருப்பப் பட்டியலையும் தயாரித்து முடித்தான். கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு,  எடுக்கப் போகும் ஜென்மத்தில் இந்த ஜென்ம ஞாபகங்கள் மறக்கக் கூடும் என்று யூகித்து, வேண்டிய குறிப்புகளைத் தெளிவாக காகிதத்தில் எழுதிக் கொண்டான். மூலிகையைப் பக்குவப்படுத்த தொடங்குகிறான்.  காபி இராகத்தில் பாடல் பாடிக் கொண்டே காபியைக் குடித்துக் கொண்டிருந்த வேளையிலே ஒரு ஞான உதயம். முன் ஜென்மத்தில் ஹான்ஹியைப் போல வேறு நாட்டில் பிறந்துவிட்டால் என்றும் யூகித்து, பல மொழிகளில் தான் யார் தனது குடும்பம் எங்கே உள்ளது எப்படி இப்படியானேன் என எழுதி வைத்துக் கொண்டான். எல்லாம் தயார் நிலையில் இருந்தது, சூரிய உதயம் வானைப் பிளந்தது. ஹான்ஹி எப்படியும் நம்மைப் பின் தொடர்வார் என யோசித்து, அவர் கண்ணில் பட்டுவிடக்கூடாது, விரைவில் முன்ஜென்மம் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் சீக்கிரமாக மூலிகைகளை உண்ணத் தொடங்கினான். கையில் காகிதங்களுடன், கண்கள் உருட்டி மயங்கி விழுந்தான். உலகம் இருண்டது…

    *                                   *                         *                                        *
    ஹான்ஹி இறுதியாக மூலிகை வேர் இருக்கும் இடத்தை அடைந்து எஞ்சியிருந்த வேர்களை சேகரித்தார், அவரருகே வினித்தின் உடையை மாற்றியவாறு இருந்த ஒரு கழுதையைக் கண்டார். ஏதோ அரண்மனைக் கழுதை போல, கழுதை இனத்திற்கே உரிய கம்பீரத்துடன் இருந்த அக்கழுதை ஏதோ பல்வேறு மொழியில் எழுதப்பட்ட காகிதங்களை மென்று கொண்டிருந்தது.!

    Share
  • பிரிவு ஒரு தொடர்கதையோ

    திவாகர்

    சென்னை ஏர்போர்ட் பகல் நேரத்தை இந்திய பிரயாணிகளுக்கும் இரவு நேரத்தை வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கும் பிரித்துக் கொடுத்துத் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதாக அதற்கு ஒரு நினைப்போ என்னவோ. அதுவும் பகலை விட ராத்திரி நேரம்தான் ரொம்ப பிஸி போலும்.. ஒருவேளை சென்னையில் உள்ள மக்கள் ஏதோ பொருட்காட்சியைப் பார்ப்பது போல பார்க்க வருகிறார்களா இல்லை மெய்யாகவே இத்தனை பேரும் பிரயாணிகளா என்று ஆச்சரியப்படவைக்கும்தான். அதுவும் அந்த பல்நாட்டு விமானநிலையம் இருக்கிறதே அது அந்த இரவு நேரத்தில் சந்தைக் கூடம்தான். எத்தனை விமானங்கள்.. எத்தனை அலுவலர்கள்.. விதம் விதமான அலங்காரத்தில் உதடு ஒட்டாமல் விரித்துக்கொண்டே உள்ளே செல்லும் விமானப் பணிப்பெண்கள்..தங்கத் தமிழ்நாட்டில் இந்தியில் கறாராகப் பேசி அனுமதிச் சீட்டு இல்லாமல் உள்ளே விட மறுக்கும் காவலாளிகள்.. பலவிதமான எண்ணக் கலவைகளுடனே மனதில் ஆவல் பொங்க வந்திருக்கும் பிரயாணிகள்.. கனவு, இன்பம், பரபரப்பு, போராட்டம், துன்பம் கடமை என பலவித உணர்ச்சிக்கலவையைத் தாங்கி வரும் பிரயாணிகள் கூட்டம்

    அட, இந்த பிரயாணிகளுடன் கூடவே வரும் உறவுக்கார ஜனங்களைப் பார்க்கவேண்டுமே.. பிரயாணிகளில் முக்கால்வாசிப் பேர் துபாய் போன்ற அரபு நாடுகள் போலும்.. அப்படித்தான் அவர்கள் பேசும் விதத்தில் தெரிந்தது கூட..

    “இவங்கள்லாம் துபாய்’ல கஷ்டப்பட்டு சம்பாதிச்சு இங்கே குடும்பம் காப்பாத்தறாங்க இல்லே.. நன்றிக்கடனா அத்தனை உறவுகளும் வழியனுப்ப வந்திருக்கும்மா”

    அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களைக் காண்பித்து தன் மகளிடமும் சொன்னான்.. அந்த மகள் இவனை ஏதோ மாதிரி பார்த்தாள். தன் அம்மாவிடம் கோள் மூட்டினாள்.

    ”அம்மா! என்னம்மா இப்படி பே’ன்னு அப்பா எல்லாரையும் அரக்கப் பரக்க பாத்துண்டிருக்கார்.. எப்படிம்மா இத்தனை வருஷமா தாங்கினே..”

    ”அது ஒரு சோகக்கதைதான்.. என்னாத்துக்கு இப்போ அதை ஞாபகமூட்டறே.. அவர் கிடக்கார்.. உன் டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் ஜாக்கிரதையா வெச்சுக்கோ”

    அந்த மகள் மறுபடியும் சலித்தாள். “ஐயோ உனக்கு அப்பாவே பரவாயில்லே.. எத்தனை தரம் சொல்வே.. பாஸ்போர்ட் டிக்கெட் இந்த கேட்’ல காட்டறதிலேருந்து கையிலேயே வெச்சுக்கணும்.. எனக்குத் தெரியாதா?

    ஆனாலும் இவர்கள் அந்த இடத்திலேயே நின்றிருந்தனர் “இன்னும் எத்தனை நேரம் இங்கேயே நிக்கறது.. எனக்கு காலை வலிக்கறதும்மா! உள்ளே வுடுவானா’ன்னு கொஞ்சம் கேளும்மா”:

    ”போப்பா.. மூணுமணிநேரம் முன்னாடி அவன் உள்ளேயே விடமாட்டான்.. எதுக்கு அவன்கிட்டே போய் ஹிந்தி’ல திட்டு வாங்கணும்..”

    “அப்போ உன்னைத் தமிழ்லேயே நல்லா திட்டலாமா?”

    ”ஐய்யோ கடவுளே! நீங்க ஏன் இப்படி வெளில வந்தாலும் இவகிட்டே வாயைக் கொடுக்கறீங்க..” அம்மாவின் சொல் மகளை மேலும் கோபமாக்கியது.

    “அப்ப..நான் வாயாடின்னு பட்டம் கட்டறியா அம்மா!.. இதுக்கு என்னை வீட்’லயே டாடா காட்டி அனுப்பிச்சுருக்கலாம்.. ஏர்போர்ட் வரை வந்து ஏன் மானத்தை வாங்கறீங்க. ச்சே.. மூடையே ஸ்பாயில் பண்றீங்க!.”

    “இப்ப, என்னடி சொல்லிட்டேன் இவ்வளோ கோபம் வரது.. வெளியூர் போறே.. உனக்கு கோபம் கூடாது..”

    ”ஆமாம்.. கோபம் கூடாதுதான்” என்ற அப்பாவையும் கோபம் குறையாமல் பார்த்தாள். அப்பா உடனே சமாதானப் படுத்தினார்.

    ”சரி.. சரி.. நாம் இங்க இவ்வளோ தூரம் வந்து உன்னை சமத்தா வழி அனுப்பவேண்டாமா.. நம்மளை வுடு.. அதோ அங்கே பார்.. அந்தம்மா எப்படிக் கேவி கேவி அழறாங்க.. பாவம் இப்போ போற புருஷன் எப்போ வருவானோ.”.

    ”அதெல்லாம் சரிப்பா.. பட் எதுக்கு ஏர்போர்ட் வரை வந்துட்டு அழணும்.. ரெடிகுலஸ்.. இப்போ மாடர்ன் உலகத்துல அழுகை எல்லாம் ஒரு ஓல்ட் ஃபேஷன்..”

    அம்மாவுக்கு கோபம் குறையவில்லை. “அதுக்காக உன்னையும் உங்கப்பாவும் மாதிரி உணர்ச்சியே இல்லாம ஜனங்க எல்லா இடத்துலேயும் இருந்துடுவாங்களா..”

    அவள் உடனே சண்டைக்கு மறுபடியும் மல்லுக் கட்டினாள்.. “இப்போ நான் சொல்றதுல என்ன தப்பு பாக்கறே.. இதோ பார்.. இவங்க.. ஐ மீன்.. துபாய்க்கு இந்த ரெண்டு மூணு மணி நேர பிரயாணம்தான்.. கைல எப்பவுமே மொபைல் போன்.. சதா பேசிட்டே இருக்கறமாதிரி வசதி வந்தாச்சு.. இதுக்கே இப்படி சீன் காமிக்கறாங்களே.. நானெல்லாம் கிட்டத்தட்ட 30 மணிநேரம் பிரயாணம் பண்ணனும்.. மூணு ஏர்போர்ட் டிரான்சிட் பண்ணனும்.. நான் எவ்வளோ சீன் காமிக்கணும்.. என்னப்பா அங்கேயே பாக்கறியே நான் சொல்றதை சரின்னு சொல்லேன்”

    அப்பா சிரித்தான். “ஆமாமா.. ஆனா பாவம்மா.. புருஷன் பெண்ஜாதி இல்லையா.. அப்படித்தான் இருக்கும்.. அங்கே பாரு ஒரு கும்பலே கூட்டம் போட்டு கண்ணைக் கசக்கிண்டு இருக்கு.. இதெல்லாம் தமிழ்நாட்டுல சகஜம்மா.. அந்தக் கிழவன் கூட பாரேன் சந்தடி சாக்குல கண்ணைத் துடைச்சுக்குறான்..”

    அப்பாவின் சிரிப்புக்கு மகளும் பதில் சொல்வது போல சிரித்தாள். “நிஜம்மா இந்த ஏர்போர்ட் ஒரு சினிமா தியேட்டர்தான்பா.. சினிமா’ல சோகக் காட்சியெல்லாம் வரச்சே நம்ம ஜனங்க அழுவாங்க இல்லே அதே மாதிரிதான்..”

    ”அதேதான்.. ஒருத்தர் ஊருக்குப் போறார்னா டீசெண்டா வழி அனுப்பி வெக்கணும்.. ஒரு பூங்கொத்து அப்படி இப்படி கொடுத்து” அப்பா சிரித்துக்கொண்டே தலையாட்டினான்.

    ”ஐய்யோ போதுமே அப்பாவும் மகளும் இங்கே சிரிச்சது.. அப்பறம் இங்கே ஏதோ காமெடி சீன் நடக்கறது’ன்னு நினைச்சு ஜனங்க எல்லாம் நம்மளை சினிமா பார்ப்பாங்க.. வுடுங்க.. டைம் ஆயிடுத்து.. உள்ளே வுடுவான் போல அந்த கடங்காரன்.. உங்க ஏர்போர்ட் டிக்கெட்டையும் அவளோட டிக்கெட்டையும் அவன் மூஞ்சி நேரா காமிங்க.. அப்பதான் உடனே உள்ள வுடுவான்.”

    உள்ளே சென்றவர்கள் மகளை மட்டும் கவுண்டருக்கு அனுப்பி வைத்தார்கள். அவள்: அங்கிருந்து தன் கைபேசியில் ‘அப்பா ஒரு கிலோ ஜாஸ்தியா யிருக்கு.. எதை எடுக்கறது..”

    அவன் உடனடியாக மனைவியைத் திட்டினான். “இதுக்குதான் நான் அப்பவே தலையாலே அடிச்சுகிட்டேன்.. கண்ட கண்டதையெல்லாம் பேக் பண்ணாதே’ன்னு.. பாரு இப்போ எக்ஸ்ட்ரா லக்கேஜ்.. மறுபடியும் பாக்கேஜ் எல்லார் முன்னாடியும் ஓபன் பண்ணனும்”

    அதற்குள் மறுபடியும் அவள் கைபேசியில் பேசினாள். “அப்பா.. டோண்ட் வொர்ரி, அவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாங்களாம்..” அப்பா மௌனமாய் கையை ஆட்டினான். “என்னவாம்” மனைவி அதட்டினாள்.

    அவன் அசடு வழிந்தான்.. “இல்லே ஒரு கிலோல்லாம் பரவாயில்லையாம்”.

    மனைவி உடனே சண்டையைத் துவங்கிவிட்டாள். “அவசரபுத்தி உங்களை விட்டுப் போகவே மாட்டேங்குதே.. ஒரு நிமிஷத்துல என்னவெல்லாம் என்னைத் திட்டிப்புட்டீங்க.. நான் இதை அவ்வளோ ஈஸியா விடப்போறதில்லே.. எனக்குத் தெரியாதா யார் யார் எந்தந்த ஏர்லைன்ஸ் எவ்வளோ அக்செப்ட் பண்ணிப்பாங்க’ன்னு..”

    “இரு.. இரு” இந்த சின்ன விஷயத்தை பெரிசுபடுத்தாதே.. இதோ பார் உன் மகள் வராள். சிரிச்சமூஞ்சியோட வழியனுப்பி வையேன்..”

    “ஆஹா.. எனக்கு சிரிச்ச மூஞ்சியில்லே’ன்னு எனக்கு நல்லாவே தெரியும்..அதைக் கூட உங்க மகளுக்கு நீங்களே செஞ்சுடுங்க.”.

    ”என்னம்மா.. இன்னும் ஏதாவது சண்டை போடறீங்களா.. இப்போ சினிமால ஃபைட் சீனாக்கும்.. ஒண்ணு தெரியுமா.. வெளிலே இருக்கற கூட்டம் மாதிரி உள்ளே இல்லே.. ஸோ.. ஆடியன்ஸ் உங்க ஃபைட் சீனுக்கு ரொம்ப குறைவுதான்….

    ”’நல்லா சொன்னே போ’..என்று சொல்லிவிட்டு ஹஹ என்று கொஞ்சம் கத்தி சிரித்த அப்பாவை விசித்திரமாகப் பார்த்தாள் மகள்.

    “அப்பா.. நான் போகறச்சே ஏன் இப்படி சிரிச்சு பயமுறுத்தறே.. அப்புறம் ப்ளேன்’ல தூக்கம் வராது. அப்படியே வந்தாலும் நீ இப்ப சிரிச்சயே ஒரு சிரிப்பு, அது என்னை தூங்க வுடாதுப்பா”

    அம்மாவும் கொஞ்சம் சிரித்தாள். ”ஜாக்கிரதையா போயிட்டு வாடா தங்கம்..”

    “இம்மிகிரேஷன முடிந்ததும் ஒரு கால் கொடுத்தாள். பாதுகாப்பு முறைகள் முடிந்ததும் இன்னொரு கால் கொடுத்தாள்.

    ”சரிப்பா! நீங்க கிளம்புங்க! இரண்டு மணிநேரம் போல ஆகும்.. நான் பாத்துக்கறேன்..”

    ”பரவாயில்லேம்மா..விமானத்துல ஏறி உட்கார்ந்ததும் சொல்லு, அப்பவே போறோமே. வீட்டில போயி என்ன பண்ணப்போறோம். உங்கம்மா வேற கர்புர்’னு இருக்கா.. அதுக்கு இங்கயே இருக்கோம்..” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவளும் கொஞ்சம் சத்தமாக சிரித்ததாக காதில் கேட்டது.

    இவர்களைப் போல ஒரு சிலர் உள்ளே வந்து வழி அனுப்பினாலும் அவர்கள் கண்களில் துக்கமும் ஒரு சேர இருந்ததை கவனிக்கவே செய்தான்.. ’உலகம் ரொம்ப சிறுசு.. என்பதை எப்போதுதான் இவர்கள் உணரப்போகிறார்களோ’ என்று மனைவியிடம் சொல்லி வருத்தப்படுவதைப் போல முகத்தை வைத்தான். அவள் இவனைச் சீண்டாமல் ஏர்போர்ட் முழுதும் பார்த்துக் கொண்டு கண்ணால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு மணிநேரம் போகவேண்டுமே என்பதாகக் கவலைப் பட்டாளோ என்னவோ..

    இரண்டு மணிநேரமும் கழிந்தது. மகள் கைபேசியும் ஒலித்தது. “என்னம்மா.. ப்ளைட்’ல உக்காந்திட்டியா?”

    “இதோ போகணும்பா.. ஆமாம்ப்பா.. நான் எதுக்காக இவ்வளோ தூரம் பிரயாணம் செஞ்சு என்ன சாதிக்கணும்னு போறேன்’னு இவ்வளோ நேரம் நினைச்சுப் பார்த்தேன்..பா.. ஒண்ணுமே விளங்கலே.. எதுக்காகப்பா உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் இப்படி தனியா போகணும்.. அப்பா எனக்கு இப்போ மனசெல்லாம் உங்க ரெண்டு பேரோடயே இருந்துடலாம்’னு தோணறது..” அவள் குரல் உடைந்திருந்ததைக் கவனித்ததும் இவனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது..

    “ஆமாம்மா.. நாங்க எதுக்கு உன்னை இப்படி கம்பெல் பண்ணி அனுப்பணும்.. நாம் இப்படியே அப்பப்ப சண்டை போட்டுண்டு ஜாலியா கமெண்ட அடிச்சுண்டு இருக்கவேண்டாமா.. நீ எதுக்காக போகணும்..” அவன் குரலும் கம்மியது..

    “அப்பா…” அவள் அழுதது போல அவனுக்குக் கேட்டது..

    “என்னம்மா..”

    “நான் போகலேப்பா.. நான் உங்களோடயே வந்துடறேன்பா..” என்றவளின் கேவி அழும் சப்தம் கேட்டு அப்பாவுக்கு கண்ணில் நீர் பொங்க ஆரம்பித்து விட்டது. இதைக் கவனித்த அம்மா அந்த போனை சட்டென்று அவனிடமிருந்து பிடுங்கினாள். மகள் அம்மாவிடமும் அதையேதான் கேட்டாளோ.. அந்த அழுகைக் குரல் அம்மாவையும் தொற்றிக் கொண்டது.

    “நீ வந்துடுறா செல்லம்..அழாதே அழாதே.. அம்மா நான் இருக்கேன்.. பரவாயில்லே.. என்ன பெரிய படிப்பு வேண்டிக்கிடக்கு.. அங்க போய் படிக்கறதை இங்கேயே படிக்கமுடியாதா என்ன?..நீ முதல்ல அழுகையை நிறுத்தும்மா”

    “இல்லேம்மா.. நான் இப்போ உள்ளே இருக்கேன்மா.. எல்லாத்தையும் உதறிவிட்டு வரமுடியாது..”:

    “அப்ப ஒண்ணு பண்ணு.. போனவுடனே அங்கே நிலைமையைப் பாரு.. பிடிக்கலேன்னு வெச்சுக்க, உடனே புறப்பட்டு வந்துடு, என்னடா செல்லம்..”

    “சரிம்மா.. நீ அழாதே.. போனை அப்பாகிட்டே கொடு”

    ”என்னம்மா”

    “அப்பா! அம்மாகிட்டே நான் இல்லாத சமயத்துல சண்டை போடாதேப்பா..”

    ”சரிம்மா.. நீ வந்தவுடனே உன் முன்னாடியே சண்டை போடறோம்.”

    சட்டென மகள் சிரித்த சப்தம் அம்மாவுக்கும் கேட்டது போலும். மெல்ல புருஷன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

    Share
  • ‘ஸ்மாட் போன்’ கதை.

    – கே..எஸ்.சுதாகர்

    வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன்.

    I – Phone ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன்.

    “அப்பா…. காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்!

    கார் இடையிலை நிண்டா… காட் அற்றாக் வந்தா ” என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் பயப்படுத்தியிருந்தான். அதற்கு முன்னர் என்னிடம் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அவனது அட்வைசிற்கு கட்டுப்பட்டு மிகக்குறைந்த விலையில் ஒரு கைத்தொலைபேசி ஒன்றை வாங்கியிருந்தேன். இப்போது அதை மாற்றுவதற்குரிய காலம் வந்துவிட்டது.

    மனைவி பிள்ளைகளுடன் போனால் பெரியதொரு ‘பிளானி’ற்குள் என்னைத் தள்ளிவிடக்கூடும் என நினைத்து தனியே கடைக்கு வெளிக்கிட்டிருந்தேன்.

    நண்பன் ஒருவன் மலிவான கடையென ஒன்றை அறிமுகம் செய்திருந்தான். அங்கே வந்திருந்த கஸ்டமர்ஸ் எல்லாரிடமும் புதிது புதிதான கைத்தொலைபேசிகள் விதவிதமான நாதமெழுப்பிய வண்ணம் இருந்தன. அவர்களுடன் வரிசையில் நின்றுகொண்டேன். கவுண்டரில் மூன்றுபேர்கள் நின்றார்கள். எனது முறை வந்ததும் அவர்க்ளிடமிருந்த பிளான்கள் பற்றிக் கதைத்தேன். நான் தற்போது பாவிக்கும் ரெலிபோனைப் பார்க்க முடியுமா என்று அவன் கேட்டான். பொக்கற்றுக்குள்ளிருந்த பழைய நோக்கியா போனை வெளியே எடுத்து அவனிடம் நீட்டினேன். அவன் பாம்பைக் கண்டுவிட்டவன் போல திடுக்கிட்டு, இரண்டு அடிகள் பின் நகர்ந்து மெதுவாக நழுவி உள்ளே ஓடினான். நான் எனது போனை உடனடியாக எனது பொக்கற்றுக்குள் செருகிக்கொண்டேன். கவுண்டரில் நின்ற மற்ற இருவரும் உதட்டிற்குள் புன்னகை ஒன்றைத் தவழவிட்டார்கள்.

    அந்தப்புன்னகை எனக்கா, அல்லது உள்ளே சென்றவனுக்கா என்று தெரியாமல் மலங்க விழித்தேன்.

    சற்று நேரத்தில் உள்ளே இருந்து ஒரு பெண் வந்து அந்தக்கவுண்டரில் நின்று கொண்டாள். அருகேயிருந்த ஒரு இருக்கையைக் காட்டி என்னை அதிலே அமரும்படி சொன்னாள்.

    நேரம் நகர்ந்தது. ஒருவரும் என்னைக் கவனிப்பதாக இல்லை. என்னைக்கண்டு மிரண்டு உள்ளே சென்றவன், கதவொன்றை மெதுவாக நகர்த்தி நான் போய்விட்டேனா என்று பார்த்தான். கடைக்கு அவர்கள் இனத்தவர்கள் வருகின்றார்கள், போகின்றார்கள்.

    “அவங்கடை கடை. வருவார்கள்…. போவார்கள். இதிலே நமக்கென்ன வேலை?” எழுந்து கொண்டேன். இன்னொருநாள் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் நடையைக் கட்டினேன்.

    உடுப்புக்கடையொன்றிற்கு முன்னால் ராசன் அண்ணன் தனது காரை எடுத்து இடம் மாற்றிக் கொண்டு நிற்கின்றார். கார்க்கண்ணாடியூடாக எனக்குக் கையைக் காட்டினார். ராசன் அண்ணை எனது ஊரவர். அவருடைய அம்மா கைராசி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா வந்திருக்கின்றார் என்று அறிந்திருந்தேன். அவ வந்து இரண்டு மாதங்கள் இருக்கும். இன்னமும் நாங்கள் அவரைப்போய் பார்க்கவில்லை.

    இக்கணம் ராசன் அண்ணை பேசப்போகின்றார். அவர் தொடங்குவதற்கு முன்னால் நானே தொடங்கிவிட வேண்டும்.

    “அண்ணை! இன்னும் உங்கடை அம்மாவை வந்து பார்க்கேல்லை. மகளின்ரை படிப்பு. ஒரே பிஷி”

    “எனக்குத் தெரியும்தானே தம்பி. அதைப்பற்றி நான் ஒண்டும் குறையா நினைகேல்லை. அம்மா உள்பட எல்லாரும் உடுப்புக்கடைக்குள்லைதான் நிக்கினம். ஒரு மணித்தியாலமாபோச்சு. இன்னும் உடுப்பு வாங்கினபாடில்லை. அதுதான் ஒருக்கா காரை மாத்தி விடுவோமெண்டு வந்தனான். இல்லாட்டி உடுப்புக்கு மேலாலை ஃபைன் கட்டவேண்டி வந்திடும்.”

    “அப்ப நல்லதாப்போச்சு. அம்மாவைப் பாத்து ஒரு ஹலோ சொல்லுவோம்.”

    இரண்டுபேருமாக கடைக்குள் நுழைந்தோம்.

    இந்த இடத்திலை கைராசியக்காவைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். இப்ப அவவுக்கு எண்பது தாண்டியிருக்கும். அப்ப அம்பது இருக்கேக்கை அது நடந்தது. சின்னனிலை ஒருமுறை சரியான இருமலாலை படுக்கையாக இருந்தேன். பத்துப்பன்னிரண்டு வயதிருக்கும். அப்ப ஒருநாள் அவ எங்கடை வீட்டுக்கு வந்தா. அம்மா எனது வருத்தம்பற்றி அவவிடம் ஆலோசனை கேட்டார். உடனே கைராசியக்கா ஒரு மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு எங்கடை வீட்டுத்தோட்டப்பக்கம் போனா. கொஞ்ச மண்புழுக்களைப் பிடித்துக் கொண்டு வந்தா. துடிக்கத் துடிக்க அவற்றை நறுக்கி தாச்சிச்சட்டிக்குள்ளை போட்டு வறுக்கத் தொடங்கினா. பிறகு அதுக்குள்ளை நீரை விட்டுக் காய்ச்சி, அந்தக் கசாயத்தை வடித்தெடுத்துக் கொண்டு வந்தா. நான் மூண்டுமுறை வீட்டைச் சுத்தி ஓட்டம் பிடித்துவிட்டு பனை வடலிக்குள்ளை ஓடி ஒளிச்சிட்டன். ஒவ்வொரு பனை பனையா ஒளிச்சிருந்து கடைசியிலை என்னை அமுக்கிப் பிடிச்சே விட்டா. பிறகென்ன… வாயை இழுத்துப் பிடிச்சு ஒரே அமுக்காக மருந்தை விட, மூக்குக்குள்ளாலை கொஞ்சம் வர வாயுக்குள்ளை மிச்சம் முழுவதும் போய்ச் சேர்ந்தது. அந்த ஒருமுறை மருந்தோடை இருமல் பறந்து போச்சு. ஆனா கைராசியக்கா பற்றின பயம் தொற்றிக் கொண்டது.

    உடுப்புப்போட்டுப் பார்க்கும் இடத்திற்கு முன்னால் எல்லாரும் குழுமி இருந்தார்கள். கைராசியக்காவைக் காணவில்லை.

    “எங்கே கைராசியக்கா?”

    “அப்பம்மா உள்ளுக்கை உடுப்புபோட்டுப் பார்த்துக் கொண்டு நிக்கின்றா” என்றாள் ராசன் அண்ணையின் கடைசி மகள். பேர்த்தியும் உரிச்சு வைச்சாப்போல கைராசியக்கா மாதிரித்தான். சூரியோதயத்திற்காகக் காத்து நிற்பவர்கள்போல அதைச் சூழ்ந்து எல்லாரும் நின்றார்கள்.

    ”இஞ்சை மீனாச்சியக்காவினரை மகன் சிவயோகன் உங்களைப் பாக்கவெண்டு வந்து நிக்கின்றார்” ராசன் அண்ணை குரல் கொடுத்தார்.

    “ஏன் என்னைப் பாக்கிறதுக்கு இதுதானோ அவருக்குக் கிடைச்சிருக்கிற இடம்?”

    கைராசியக்காவின் குரல் உள்ளிருந்து கேட்டது. தொடர்ந்து கதவை நீக்கியபடி கைராசியக்கா காக்ரா சோளியுடன் வெளியே வந்தார். சூரிய உதயம்!

    “அப்பம்மாவுக்கு நல்ல வடிவா இருக்கு. இதையே வாங்குவம்” என்றாள் பேர்த்தி.

    அவவைப் பார்க்க சோளக்கொல்லை பொம்மைக்கு சொக்காய் புதுசா மாட்டினமாதிரி இருந்தது.

    ”போகிற போக்கிலை குண்டியிலை தட்டினா லைற் எரியுறமாதிரிச் சீலை இருந்தாத் தாங்கோ எண்டு கைராசி அக்கா கேட்டாலும் கேட்பா”

    “என்ன கைராசியக்கா மொடேர்ணா நிக்கிறியள்?” எனது கேள்வி அவவைக் கோபப்பட வைத்திருக்க வேண்டும்.

    “உனக்கடா வெளிநாடு வந்து திமிர் கூடிப்போச்சு. உனக்கொண்டு சொல்லிறன் கேள். ’காக்காய்ச்சோளி’ போடவேண்டுமெண்டது என்ரை சின்ன வயசு ஆசை. இப்பதான் நிறைவேறியிருக்கு. அப்ப ஒரு பத்துப்பன்னிரண்டு வயசிருக்கும். என்ரை அப்பனிட்டைக் கேட்டன். என்னை மரத்தோடை கட்டி விளாசு விளாசெண்டு விளாசிப்போட்டான். பிறகு என்ரை புருஷனைக் கேட்டன். உஷூம்… பிறகு பிள்ளை! ஆர் உவன் ராசன் தான். உவனாலும் முடியாமல் போச்சு. இப்ப எத்தினையோ தலைமுறை கடந்து பேத்தி வாங்கித் தாறாள். ஒரு பெட்டைச்சியாலை முடியிற காரியம் ஆண்வர்க்கத்தாலை முடியாமல் போச்சுது எண்டதுதான் இப்ப என்ரை கவலை”

    “அம்மா. உது வடிவா இருக்கு. உதையே வாங்குவம்” என்றான் ராசன். எல்லாரும் ஒத்துக் கொண்டார்கள்.

    “நான் இந்த உடுப்போடையே வரப்போறன். நீ போய் கவுண்டரிலை காசைக் குடுத்திட்டு வா. நான் இந்தத் தம்பியோடை கதைச்சுக் கொண்டு நிக்கிறன்”

    “நல்லா இருக்கு கைராசியக்கா…. இப்ப உங்களைப் பாக்க சிம்ரன் மாதிரி இருக்கு” கைராசியக்காவுடன் கதைத்துக் கொண்டிருக்கும்போது எனது ரெலிபோன் கிணுகிணுத்தது. மனைவிதான்.

    ரெலிபோனைக் கையிலெடுத்து ஒரு ஹலோ சொல்லவில்லை. எனது ரெலிபோனைப் பறித்து அருகே இருந்த குப்பைக்கூடைக்குள் எறிந்தா கைராசியக்கா.

    “எட அறுவானே! உனக்கு ஒரு ரெலிபோன் வாங்க வக்கில்லை. என்னோடை கதைக்க வந்திட்டாய். உதாலை ஒரு படம் எடுக்கலாமோ சொல்லு… இந்தாபிடி… இதிலை கதை!” என்றபடியே தனது மார்புக்குள் செருகியிருந்த கைத்தொலைபேசியை எடுத்து நீட்டினா கைராசியக்கா.

    அது ஒரு ’ஐ போன் 5’ என்று உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை.

    Share
  • அனிச்ச மலர்கள்

    தேமொழி

    179584442_37af375c16மணி ஒரு மூன்றேகால் இருக்கலாம். கடைசி பீரியட். ஸ்டெல்லா டீச்சர் மின்கலன்களின் வகைகள் பற்றிய பாடத்தை நடத்திவிட்டு, பாடப் புத்தகத்தில் அந்தப் பாடத்தின் கீழ் இருந்த 2, 3, 6 கேள்விகளுக்கு விடை எழுதி வரவேண்டியது மறுநாளுக்கான வீட்டுப் பாடம் என்றும், மின்கலங்கள் 1, 2, 3 படங்களை டயாக்ராம் நோட்டில் வரைந்து அந்த வார இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். கடைசி மணி அடிக்கும் வரை மிச்சம் இருக்கும் நேரத்தில் வீட்டுப் பாடத்தையோ, படங்கள் வரைவதையோ செய்யலாம் என்று அனுமதி கொடுத்தார்கள். படிய தலை வாரி இரட்டை சடைகள் போட்டுக்கொண்டு, நீலம் வெண்மை நிறங்களில் பாவாடை சட்டை, தாவணி போன்ற சீருடை அணிந்த மாணவிகள் தங்கள் வேலைகளை மும்முரமாகச் செய்தார்கள். ஸ்டெல்லா டீச்சர் கையில் இருந்த சாக்பீஸ் பொடியை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே மாணவிகளின் இருக்கைகளின் இடையே இருந்த இடைவெளியில் நடந்து கொண்டே கண்காணித்தார்கள்.

    வகுப்புகள் அமைதியாக இருந்ததால் பள்ளியே அமைதியாக இருந்தது. அவ்வப்பொழுது வெளிய பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டிய சாலையில் ஓடும் பேருந்துகளின் ஓசையைத் தவிர வேறு ஓசை இல்லை. மாடியில் இருந்த அந்த ஸ்டெல்லா டீச்சரின் வகுப்பின் வெளியே, வராந்தாவில் வேக வேகமாக யாரோ நடந்து போகும் ஓசைக் கேட்டு அனைவரும் ஒட்டு மொத்தமாகத் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். தமிழாசிரியை இரங்கநாயகிதான் படபடப்பாக நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு கடைசியில் இருக்கும் வகுப்பிற்குச் சென்றார். அவர் நடையில் ஒரு பதட்டம் தெரிந்தது. இன்று மாலையில், மாடியில் இருக்கும் மெடோனா ஹாலில் நடக்கப் போகும் வீரமாமுனிவர் தமிழ்சங்க நிகழ்ச்சியை ஒட்டி நடக்கும் பள்ளியின் கலைநிகழ்ச்சியின் மொத்தப் பொறுப்பும் அவருடையது. அதனால்தான் அந்தப் படபடப்பு என அனைவருக்கும் புரிந்தது. சிறிது நேரத்தில் புயல் போல மீண்டும் அவர்கள் வகுப்பைத் தாண்டி வந்த வழியே திரும்பிச் சென்றார். ஸ்டெல்லா டீச்சரால் கேட்காமல் இருக்க முடியவில்லை. “என்ன மிஸ் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க?” என்றார். திரும்பிப் பார்த்த இரங்கநாயகி, “ஒன்னண்டயும் ஒருதரம் கேட்டுட்டாப் போறது” என்றவாறு இவர்கள் வகுப்பிற்குள் வந்தார்.

    “இன்னக்கி சாயங்காலம் ரீட்டா பரத நாட்டியம் ஆடுறா இல்ல, அலங்காரம் செஞ்சுட்டு கால்ல சலங்கையக் கட்டுறப்ப கைதவறி விட்டுட்டா, அது மேடைக்கும், பின் ஸ்க்ரீனுக்கும் சுவருக்கும் இடையே எங்கேயோ போய் இடுக்கிலே விழுந்துடுத்து, மேடை அடியில் இருட்டில் தேடியும் கிடைக்கலே. டொமினிக், ஜோசப் ரெண்டு பேரையும் கொஞ்சம் தேடிப் பார்த்து எடுத்து கொடுங்கோப்பான்னு கேட்டேன். அவாளும் மேடைக்கு அடியில் எலெக்ட்ரிக் வயர் போற இடத்திலே நன்னா தேடிட்டோம் அங்க இல்ல மிஸ் அப்படிங்கறா. என்ன செய்றதுன்னு நேக்கு தெரியலே. வேற சலங்கையும் இல்ல. ரீட்டாதான் சபிதா மிஸ் கிளாசில விஜயாவும், சாந்தா மிஸ் கிளாசில மீனாளும் டான்ஸ் ஆடுவாங்க டீச்சர். அவங்க வீட்டில இருந்து கொண்டு வந்து கொடுப்பங்களான்னு கேட்கிறேன்னு சொன்னா. இருடிம்மா நானே கேக்கிறேன். ஸ்டூடெண்ட் கேட்டா எந்த டீச்சரும் பெர்மிஷன் கொடுக்க யோசிப்பான்னு நானே வந்தேன். சபிதா மிஸ் ஸ்டூடெண்ட் இன்னைக்கி ஆப்செண்டாம். அதான் சாந்தா மிஸ் கிளாசுக்குப் போறேன், ஏன் ஸ்டெல்லா உன் ஸ்டூடெண்ட்ஸ் யாரானும் வச்சிருப்பாளோ?” என்று கேட்டவர், ஸ்டெல்லா டீச்சர் பதிலுக்குக் காத்திராமல் மாணவிகளை நோக்கி, “ஏண்டிம்மா உங்க யார் ஆத்திலேயாவது சலங்கை இருக்கா? ஆத்துக்குப் போயி எடுத்துண்டு வந்து கொடுத்தா ஷேமமா இருக்கும்,” என்றார்.

    மாணவிகள் அமைதியாக இருந்தார்கள், “பதில் சொல்லுங்கம்மா யார்கிட்டேயும் இல்லையா?” என்றார் ஸ்டெல்லா டீச்செரும் தொடர்ந்து. “என் மாமாப் பொண்ணு டான்ஸ் ஆடுவா டீச்சர், நான் போய் எடுத்து வரவா?” என்றாள் லலிதா. “நோக்கு புண்ணியமாப் போகும், ஸ்டெல்லா இவள ஆத்துக்கு அனுப்பி எடுத்துண்டு வரச் சொல்லேன், நாழியாறது” என்றார். “சரி மிஸ். நான் அனுப்பி வைக்கிறேன். நீங்க நிம்மதியா அடுத்த வேலையைப் பாருங்க,” என்றார் ஸ்டெல்லா டீச்சர். அவரை அனுப்பிவிட்டு, மாணவிகளிடம் திரும்பி லலிதாவுக்குத் துணையா அவகூடப் யாராவது போயிட்டு வாங்கம்மா, யாரு போறீங்க?” என்றார். “நான் போறேன் மிஸ்,” என்றாள் கோதை.

    கோதை அந்த வகுப்பின் கிளாஸ் லீடர், மிகவும் சூட்டிகை. உறையூரில் இருக்கும் வக்கீலின் பெண். நாச்சியார் கோயிலின் பக்கம் வீடு. தினமும் ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் பள்ளிக்கு வருவாள். அப்பா அரசு தரப்பு வக்கீல். பெண் இப்பொழுதே தன்னை அரை வக்கீல் என நினைத்துக் கொண்டுதான் வாதம் செய்வாள். துணிச்சலின் மறு பெயர் கோதை. குறிப்பாக ஒன்றும் சொல்ல முடியாதவாறு பார்வைக்கு மிகவும் சராசரியான தோற்றமுள்ள ஒரு பெண். ஆனால் தலைமை ஏற்று நடத்தும் தகுதிகள் அதிகம். அடுத்த ஸ்கூல் பீப்பிள் லீடராகத் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அவளைத் துணைக்கு அனுப்ப அதிகம் யோசிக்கத் தேவை இல்லாததால், “சரி, சீக்கிரம் போயிட்டு வாங்கம்மா” என்றார் ஸ்டெல்லா டீச்சர்.

    லலிதா மெதுவாக, “மிஸ் நான் சலங்கையை கோதையிடம் கொடுத்தனுப்பி விட்டு வீட்டிலேயே இருந்துக்கவா? திருப்பி வர்றச்சே ஸ்கூல் முடிஞ்சிருக்குமே” என்றாள். அவள் ஏற்கனவே மாலையில் நடக்கப் போகும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கு வரமுடியாத நிலை என்று அனுமதி கேட்டிருந்ததும் டீச்சரின் நினைவிற்கு வந்தது. “நல்ல யோசனைதான், ஆனால் திரும்பி வர்றப்ப கோதை தனியால்ல வரணும். இப்ப அவளுக்கும் துணைக்கு ஒரு ஆள் அனுப்பணுமா? யாரும்மா இவங்களோட போறீங்க?” என்று கேட்டு டீச்சர் வாய் மூடவில்லை, “நான் போயிட்டு வரேன் மிஸ்,” என்று ரஹமதுனிசா கிளம்பினாள். டீச்செருக்குப் பகீர் என்றது. ரஹமதுனிசா கோதை மற்றும் லலிதாவின் உற்ற தோழி. மூவரும் எங்கு போனாலும் பிரியாமல்தான் இருப்பார்கள்.

    ரஹமதுனிசா மிகவும் பெரிய இடத்துப் பெண். அவள் அப்பா ஜாஃபர்ஷா தெருவில் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் பெரிய பணக்காரர். உறையூர் பீடி, கல்கி பீடி, இஞ்சின் பீடி, ஹாட்டின் பீடி, சங்கு மார்க் லுங்கி போன்றவற்றை வாங்கி வெளிநாடுகளுக்கு மொத்தமாக விற்பனை செய்வார். அவருடைய பெண்ணை டிரைவரை நம்பி அவர்களது காரில் அனுப்பாமல், அவர் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கும் ரிக்க்ஷாக்களில் ஒன்றில் துணையுடன் பள்ளிக்கு அனுப்புவார். ஆட்டோவில் கூட அவள் பள்ளிக்கு வந்ததில்லை. யாரும் தனது பெண்ணை சுலபமாகக் கடத்திவிடக்கூடாது என்ற திட்டமோ என்னமோ. ரஹமதுனிசா ஒரு நாளுக்கு மொத்தமாக ஒரு கிலோ மீட்டார் கூட நடந்தால் அது அதிசயம்தான். இவளை அனுப்பினால் ஏதும் பெரிய இடத்து வம்பு வந்து சேருமோ என்று டீச்சருக்குத் தோன்றியது. ஆனால் அதைக் குறிப்பிட்டு வேறுபாடு காட்டி மாணவிகளுக்கு முன்பு சொல்லத் தயக்கமாக இருந்தது. “சரி சீக்கிரம் போயிட்டு பத்திரமா சீக்கிரமா வாங்கம்மா, வாட்ச்மேன் சூசையண்ணன் விடமுடியாதுன்னு சொன்னா, நான் ஹெச் எம்மிடம் பெர்மிஷன் சொல்லிக்குவேன்னு சொல்லுங்க, மாடிப்படியில் தட தடன்னு ஓடாதீங்க, ஸ்கூல் இன்னமும் முடியல்ல நினைப்பு வச்சுக்கோங்க,” என்றார்.

    “வாப்பா, இன்னா இவ்ளோ ஸ்லோவா இருக்க” என்றாள் ரஹமதுனிசா. அவளுக்கு தாய்மொழி உருது, தமிழ் அவளிடம் படாத பாடு படும். வாப்பா, போப்பா என்றுதான் பேசுவாள். “இருடி, இவ ஒருத்தி அவசரப்படுத்திண்டு” என்று முணுமுணுத்தவாறு தனது புத்தகங்களை சேகரித்து வயர் கூடைக்குள் திணித்தாள் லலிதா. தனது குடும்பப் பின்புலம், வளர்ப்புச் சூழ்நிலையால் யாரையும் வாடி போடி என்று ‘டீ’ போட்டுதான் லலிதா பேசுவாள். இருவருக்குமிடையில் கோதை பேசுவது கொஞ்சம் மொட்டையாக இருக்கும். யாரையும் ‘டீ’ போடுவது மரியாதைக் குறைவு என்று கண்டித்து வளர்க்கப் பட்டவள். எனவே,”சரி கிளம்புங்க ரெண்டு பேரும்” என்று தனது வழக்கமான முன்னின்று நடத்தும் பாணியில் பேசி அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

    டீச்சர் எதிர்பார்த்தது போலவே ஹெச் எம்மின் பெர்மிஷன் ஸ்லிப் இல்லாமல் சூசையண்ணா பள்ளி முடியும் முன் அவர்களை வெளியேற அனுமதிக்கவில்லை. ஸ்டெல்லா டீச்சர் ஹெச் எம்மிடம் எங்களுக்காகப் பெர்மிஷன் கேப்பாங்க, என்று மாணவிகள் சொன்னதும் அவர்கள் வகுப்பை அண்ணாந்து பார்த்தார். மாடி வராண்டாவில், நெட்டிலிங்க மரங்களுக்கிடையே தலையை  நீட்டிப்  பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெல்லா டீச்சர் அனுப்புங்க, அனுப்புங்க என்று கையால் ஜாடை காட்டினார்.  “இவங்க ஒருத்தங்க, ஹெச் எம் எனக்கு கண்டிஷனா சொல்லியிருக்காங்க, இப்போ நான் அனுப்பிச்சா, யாரைக் கேட்டு செஞ்சே, என் பெர்மிஷன் இல்லாம எப்படி அனுப்பலாமின்னு ஹெச் எம் என்னையில்ல திட்டுவாங்க” என்று முணுமுணுத்தவாறு பெரிய கேட்டில் இருந்த சிறிய திட்டிவாசல் போன்ற கேட்டைத் திறந்துவிட்டார் சூசை.

    மாணவிகள் வெளியே வந்ததும் பேசிக்கொண்டே இடதுபுறம் திரும்பி, செயின்ட் ஜோசப் சர்ச் நோக்கி நடந்தார்கள்.

    கோதை, லலிதாவின் வேகத்திற்கு ரஹமதுனிசாவால் ஈடு கொடுத்து நடக்க முடியவில்லை. அவள் காலில் அணிந்திருந்த, அவளது அத்தா சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்த கலையழகுள்ள புதுச் செருப்பும் கடித்தது, அதனால் அவள்  பின் தங்க ஆரம்பித்தாள்.

    “ஏம்ப்பா, ஒன் வீடு ஆண்டார் வீதிலதான இருக்கு”

    “ஆமாண்டி, இப்பவே ஆரம்பிச்சுட்டியா? நடக்க முடியலையா?”

    “என்னம்மா பேகம், புதுச் செருப்பு கடிக்குதோ? ” என்று விளையாட்டாகக் கேட்ட கோதை லலிதாவிடம், “கொஞ்சம் மெல்லப் போ, பாவம் ரஹமதுனிசாவுக்கு நம்மைப்போல நடந்து பழக்கம் இல்லை, பாரு இப்பவே முகம் சிவந்து வேர்த்து விட்டது,” என்று சொல்லி நடையை நிதானமாக்கினாள்.

    ரஹமதுனிசா கொஞ்சம் கழுக் மொழுக் வகை. பெண்கள் எல்லோரும் நீல நிறப் பாவாடை தாவணி, வெள்ளை சட்டை அணிந்து பள்ளி வந்தால், இவள் சீருடையைத் தலைகீழாக்கி வெள்ளை நிறப் பைஜாமா, நீல நிற குர்தா அணிந்து வெள்ளை துப்பட்டா போட்டு வருவாள். யாரும் கிள்ளிப் பார்க்க விரும்பும் சிறிது உப்பிய கன்னம், தலை நிறைய உள்ள நீண்ட அடர்த்தியான முடியை இரட்டையாகப் பிரித்து குதிரை வால் போலப் போடுவாள். சுருக்கமாகச் சொன்னால், அசப்பில் “காத்திருந்த கண்களே, கதை அளந்த நெஞ்சமே” எனப் பாடி ஆடும் ஜெயலலிதா போல உடை, நிறம், சாயல், வளர்த்தி எல்லாம்.

    பள்ளிக்குப் பின்புறம் உள்ள கோட்டை ஸ்ட்ஷனுக்கு இரயிலில் வந்திறங்கி பள்ளிக்கு வரும் பெருகமணி, எலமனூர், ஜீயபுரம், முத்தரசநல்லூர் போன்ற பக்கத்துக்கு கிராமத்துப் பெண்களோடு நிறுத்தினால் தள தள வென்று தனித்துத் தெரிவாள். அவள் காலில் தங்கக் கொலுசு போட்டிருப்பதை பிற மாணவிகள் அதிசயமாகப் பார்ப்பார்கள். தங்கத்த காலில் போடக்கூடாது, அது லக்ஷ்மி மரியாதைக் கொடுக்கணும் என்றும் சிலர் சொல்லிப் பார்ப்பார்கள். மொத்தத்தில் பள்ளியில் அவள் தனித்துத் தெரிவாள். யாராவது அவளை “பம்பிளிமாஸ்” என்று கேலி செய்தால் அவள் கண்டு கொள்ள மாட்டாள். ஆனால் கோதை அவளுக்கு வக்காலத்து வாங்கி சாமியாடி, வக்கீல் போலப் பேசிப் பேசியே நியாயம், அநியாயம் என்று நீதி கேட்டு பெண்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள். கோதையின் தாக்குதலில் அகப்பட்ட பெண்களுக்கு ஹெச் எம்மின் அறைவாசலில் செய்த தவறுக்கு அரை நாள் முட்டி போடுவது கூட பிச்சாத்து தண்டனையாகத் தெரியும். ரஹமதுனிசாவைத் திட்டவோ, கோபிக்கவோ உரிமையுள்ள ஒரே உயிர் கோதை என்பது பள்ளியில் எழுதாத சட்டம்.

    காந்தி சிலை, மெயின் கார்ட் கேட், செயின்ட் ஜோசெப் சர்ச் எனக்கடந்து, பர்மா பஜாரில் நுழைந்து, தெப்பக்குளம் அருகில் இடது பக்கம் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியை நோக்கி நடந்தார்கள். சிந்தாமணி சூப்பர் மார்கெட்டில் இருந்து வந்த பாப்கார்ன் வாசனை மூக்கைத் துளைத்தது.

    கோதை லலிதாவிடம், “லலிதா, உன்னை ஒண்ணு கேக்கணும்னு ரொம்ப நாளா நெனச்சேன், நீ ஏன் உன் வீட்டுப் பக்கம் இருக்கும் சாவித்திரி வித்யா சாலைக்குப் போகாம நம்ம ஸ்கூல்ல சேர்ந்தே?” என்றாள்.

    அதன் பொருள்… நீ ஏன் உங்க வீட்டுப் பக்கம் இருக்கும் மற்ற அய்யர் வீட்டுப் பெண்களைப் போல வீட்டின் அருகிலேயே இருக்கும் பிராமணர்கள் பள்ளியில் சேரவில்லை? ஏன் சிறிது தொலைவில் இருக்கும் கிறிஸ்துவ ஸ்கூல்லுக்கு வருகிறாய் என்பது. இப்படி கேட்பது நாகரிகமில்லை என்பது அவள் வளர்க்கப் பட்ட விதத்தினால் கற்றுக் கொண்ட பாடம். அதனால் மேலோட்டமாக நயமான வார்த்தைகளால் கேட்டாள்.

    “ஒ..அதுவாடி, என் அப்பா அம்மா ஆக்சிடெண்டுல போன பிறகு, மாமா அவராத்துக்கு என்ன அழச்சுண்டு வந்திட்டார். நான் எங்க ஊர்ல ஒரு கான்வெண்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். மாமா அவாட்டே என் ட்ரான்ஸ்ஃபர் சர்டிஃபிகேட் கேக்கறச்சே, எங்க ஸ்கூல்ல ஹெச். எம்மாக இருந்த மதர் நம்ம ஸ்கூல்ல சேர்க்கச் சொல்லி, டி சி யோட நம்ம ஸ்கூல் ஹெச் எம்மிற்கு ஒரு ரெகமண்டேஷன் லெட்டரும் கொடுத்தாங்க. அதனாலேதான் வருஷ நடுவிலயும் அட்மிஷனுக்கு சிரமப் படாம ஸ்கூல்ல சேர முடிஞ்சது. மாமாவாலயும் மறுக்க முடியல,” என்றாள்.

    கோதைக்கு அந்த பேச்சை அத்துடன் விட்டுவிட விருப்பமாக இருந்தது. லலிதாவின் பெற்றோர் மரணத்தை பற்றிய நினைவை தேவையில்லாமல் தூண்டிவிட்டு விட்டோமோ என்று யோசித்தாள். பேச்சை மாற்ற எண்ணி, “உன் மாமா பெண் டான்ஸ் கத்துக்கறாங்களே, நீ ஆட மாட்டியா?” என்றாள்.

    “நான் பாட்டு கத்துண்டிருக்கேன், நேக்கு சக்கீதம்னா ரொம்ப இஷ்டம். இரண்டு பேரும் படிப்பு முடிஞ்சதும் நான் பாட அவள் அதற்கு ஆடற மாதிரி ப்ரோக்ராம் கொடுக்க திட்டம் போட்டிருக்கோம். இப்போ கூட கொஞ்ச நாள்ல திருவானைக்கா கோயில்ல ஒரு ப்ரோக்ராமும், அத்திம்பேர் ஆத்து கல்யாணத்தில் ஒரு ப்ரோக்ராமும், எஸ். ஆர். காலஜில ஒரு ப்ரோக்ராமும் கொடுக்கப் போறோம்.”

    “ஏய் நீ ரொம்போ பெரிய ஆளுதாம்பா!!!”

    “ரஹமதுனிசா சொல்றது சரி, ப்ரோக்ராம் நடக்கறப்போ சொல்லு, நானும் வந்து பாக்கறேன்.”

    “சரி செஞ்சுட்டாப் போறது, இதுதான் என் மாமா வீடு” என்று ஒரு வீட்டைக் காட்டினாள். வீட்டு வாசலில் முற்றத்தில் செங்காவி கோலம் போட்டு, பச்சை வண்ணத்தில் வாசல் கம்பிக் கதவிற்கு வண்ணம் பூசி, சிறிது பழையதான தோற்றத்துடன் அந்த வீடு இருந்தது. வாசலில் இருந்த கம்பிக் கதவின் இடுக்கு வழியே உள்ளே கையை விட்டு, தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் லலிதா. நிலைப்படியில் இருந்து சற்றே சரிவாக இறங்கிய சிவப்பு சிமிண்ட் தரையின் இருபுறமும் தூணுடன் திண்ணைகள் இருந்தது. அடுத்து அக்கால மர வேலைப்பாடு உடைய கதவும், அதனுடன் மாவிலைத் தோரணமும், குங்குமம் சந்தனம் இட்ட நிலைப்படியும் இருந்தது. வீட்டின் வாசலில் இருந்து அடுத்து ஒரு அறை, பிறகு நடுவில் மேல் பக்கம் கம்பி போட்ட முற்றம், அதில் பித்தளை அண்டா சொம்பு, மாவாட்டும் கல், பிறகு ஒரு நீண்ட நடை, என்று கொல்லையில் துளசி மாடம் வரை வாசலில் இருந்தே தெரிந்தது. திண்ணையைக் கண்டதும் செருப்பைக் கழற்றி விட்டு, குடு குடு என்று ஒடி, “உஸ்… அப்பாடா” என்று பெருமூச்சு விட்டு, முகத்தை துப்பட்டாவால் துடைத்து விட்டு உட்கார்ந்து காலை அமுக்க ஆரம்பித்தாள் ரஹமதுனிசா. அவளது சோர்வைப் பார்த்து சிரித்தார்கள் கோதையும் லலிதாவும்.

    “போங்கப்பா, சிரிக்காதீங்கப்பா, என்னால முடியல, நானு இங்கன உட்காந்துப்பேன், கொஞ்சம் தண்ணி கொடுப்பா தாகமா இருக்கு.”

    இருடி, ஜலம் கொண்டு வரேன். அதோ அங்க பொஸ்தம் படிக்கறாளே அவ என் பாட்டி, தூணாண்ட பூ தொடுக்கறாளே அவள் என் மாமி.”

    முற்றத்தில் ஒரு ஈசிச்சேரில் உட்கார்ந்து, காவிப் புடவையுடன் தலையை முக்காடு போட்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு வயதான அம்மா ஆனந்த விகடன் படித்துக்கொண்டிருதார். இவர்களை ஒரே ஒரு முறை மட்டும் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தார், எதுவும் பேசவில்லை. பெண்கள் கொடுத்த வணக்கத்தையும் கண்டு கொள்ளவில்லை. மாமி புன்னகையுடன் “வாங்கோம்மா, லல்லி இவாள்ளாம் உன் பிரெண்ட்ஸா, ஏண்டி சுருக்க வந்திட்ட, ஸ்கூல்ல உங்கள சீக்கிரமா விட்டுட்டாளா?” என்றார் மாமி.

    லலிதாவிற்கு லல்லி என்று வீட்டில் பெயரா என்பது போல தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். லலிதா உள்ளே சென்று மாமியிடம் பேசிக் கொண்டே மாலை பள்ளி நிகழ்ச்சிக்கு சலங்கை வேண்டும் என்று கேட்பது அவர்களுக்கு கேட்டது. பிறகு ஒரு சொம்பில் நீரும், மறு கையில் சலங்கைகளையும் கொண்டு வந்து கொடுத்தாள். ரஹமதுனிசா தண்ணீரை வாங்கி அண்ணாந்து மடக் மடக்கெனக் குடிக்க, கோதை தனது காலில் சலங்கைகளை வைத்து அழகு பார்த்தாள். பிறகு சலங்கைகளை ரஹமதுனிசாவிடம் கொடுத்துவிட்டு பாதி நீரை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.

    “லல்லி” என்று உள்ளிருந்து மாமியின் குரல் கேட்டது.

    சரி, நீங்க ஜலம் குடிசிட்டு சொம்பை இங்கேயே வச்சிடுங்கோ, இதோ வந்திடறேன்”

    அவள் உள்ளே சென்றதும் வாசல் கம்பிக் கதவைத் திறந்து கொண்டு நடுத்தர வயதில் ஒரு பெரியவர் வேகமாக உள்ளே வந்தார், நெற்றியில் பட்டை, சிவ சிவ என்று எழுதியிருந்த காவித்துண்டைப் மேலே போர்த்தி, தலையில் குடுமி வைத்திருந்தார்.

    இவர்களைப் பார்த்து நட்புடன் சிரித்து, “வாங்கோம்மா, லலிதாம்பிகாவோட பிரெண்ட்ஸா?” என்று கேட்டு பதிலை எதிர் பார்க்காமல் வேகமாக உள்ளே சென்றுவிட்டார். பெண்கள் இருவரும் அரக்கப் பரக்க எழுந்து கும்பிட்டு, இவர்தான் லலிதாவின் மாமாவா? என்று யோசித்து “ஆமாம்… மாமா” என்று சொல்லுவதா? இல்லை  “ஆமாம்… சார்,” என்று சொல்லுவதா? என்று குழம்பியதைக் காண அவர் காத்திருக்கவில்லை.

    மீண்டும் வேகமாக உள்ளிருந்து அடுத்து இருந்த அறைக்கு வந்து நிலைக்கண்ணாடி பதித்த கதவுடன் இருந்த மர பீரோவைத் திறக்க முயன்றார். அது பூட்டி இருந்தது. அலமாரியின் மேல் கையால் துழாவி சாவியைத் தேடினார். அது கிடைக்கவிலை. உள்புறம் நோக்கி “லலிதாம்பிகா, அலமாரி சாவி” என்று தந்தி மொழியில் குரல் கொடுத்தார். பிறகு இவர்களைத் திரும்பிப் பார்த்து, “மாமி பண்டிகைக்கு பட்ஷணம் செய்திருக்கா, உங்களுக்கு தட்டையும் சீடையும் லலிதாம்பிகா கொண்டு வந்து தருவா, சாப்பிட்டுட்டு போங்கோ, காஃபி குடிப்பேளா, மாமி காஃபி நன்னாயிருக்கும், ” என்றார்.

    பெண்கள் இருவரும் மாமா என்று கூப்பிடலாம் என்று இதற்குள் முடிவு செய்துவிட்டது போல, “இல்லே மாமா, காஃபி குடிக்கிற பழக்கமில்லே” என்றார்கள் கோரஸ்ஸில்.

    “நினைச்சேன்,” என்று சொல்லிய அவரிடம் சாவியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு லலிதா வேகமாக உள்ளே ஓடத் திரும்பினாள்.

    பெண்கள் இருவரும், “லலிதா, நாங்க கிளம்பறோம் நேரமாவுது,” என்று கூறியவாறு எழுந்தார்கள்.

    “ஒரு நிமிஷம் இருங்கடி, இதோ வர்றேன்” என்று லலிதா மீண்டும் உள்ளே ஓடினாள்.

    மாமா அலமாரியைத் திறந்து, குடைந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு கதவை மூடாமல் அப்படியே விட்டு விட்டு மீண்டும் உள்ளேஅவசராமகச் சென்றார்.

    family album photo 1கோதை திண்ணையில் அமர்ந்தவாறே அந்த திறந்த அலமாரியின் கதவில் இருந்த நிலைக்கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அதில் எதிர் சுவரில் இவர்கள் கண்களுக்கு மறைவாக மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் பிரதிபலித்தது. அதில் ஏழெட்டு வயது உள்ள சிறுமி ஒருத்தி ஒற்றைச்சடை பின்னி குஞ்சம் வைத்து, சடையில் பூவைத்து தைத்து, அந்த சடை அலங்காரம் பின்புறம் இருந்த நிலைக்கண்ணாடியில் பிரதிபலிக்குமாறு நின்று கொண்டிருந்தாள். பட்டுப் பாவாடையும் நிறைய நகைகளும் அணிந்திருந்தாள். அந்த சிறுமியிடம் லலிதாவின் சாயல் இருப்பது போலத் தெரிந்தது.

    “ஏய் இவளே, இந்தப் பொண்ணு லலிதா மாதிரி இல்ல?”

    “யாருப்பா?”

    “அதோ அந்தக் கண்ணாடியில் தெரியும் படத்தைப் பார், அந்தப் பொண்ணு.”

    கையில் வைத்திருந்த சலங்கையுடன் எழுந்து, படத்தை நன்றாகப் பார்க்க நிலைப்படியைத் தாண்டி ஒரு காலை வீட்டின் உள்ளே வைக்கப் போனாள் ரஹமதுனிசா.

    “ஏய், நில்லுடி, யார் ஒன்ன ஆத்துக்குள்ள வரச் சொன்னா?” என்று அதட்டினாள் இதுவரை அவர்கள் அங்கிருப்பதையே கவனிக்காதது போல படித்துக் கொண்டிருந்த ஆனந்த விகடன் பாட்டி.

    செல்லப் பெண்ணாகவே வளர்க்கப் பட்ட பெரிய இடத்துப் பெண் ரஹமதுனிசா இந்த அதட்டலையும், அதில் இழைந்தோடிய அவமானப் படுத்தும் தொனியையும், தான் அவமரியாதை செய்யப்படும் காரணத்தையும் புரிந்து விக்கித்துப் போனாள். அவளுடைய தங்கக் கொலுசு போட்ட தூக்கிய கால் “காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே” பாடலுக்கு அபிநயம் பிடிப்பது போல் அந்தரத்திலேயே நின்றுவிட்டது. கையில் இருந்த சலங்கை கை நழுவி சிவப்பு சிமெண்ட் நடைபாதை சரிவில் கிண்கிணித்தவாறு சரிந்தோடியது.

    பாட்டியின் குரல் கேட்டு சட்டென்று எகிறிய கோபத்துடன் புயல் போல வெளியேறிய கோதை, வாசலைக் கடந்து நடு வீதிக்குச் சென்றதும் திரும்பிப் பார்த்தாள். ரஹமதுனிசா இன்னமும் அப்படியே திகைத்துப் போய் நிற்பதைப் பார்த்து ஆத்திரத்துடன், “ஏய் உனக்கு அறிவில்ல, ரோஷமில்ல, வா வெளியே,” என்று திட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

    அவள் குரல் கேட்டு அதிர்ச்சியிலிருந்து  மீண்ட ரஹமதுனிசா, “ஏய்…ஏஏய்… கோதை கொஞ்சம் இருப்பா” என்று கூவியவாறு வெளியே ஓடினாள். தவறவிட்ட சலங்கை நினைவிற்கு வர மீண்டும் உள்ளே ஓடி தரையில் கிடந்த சலங்கைகளை எடுத்துக் கொண்டு, வழியல் கிடந்த அவளது செருப்பை கவனியாது மிதித்து, அதில் இருந்த அலங்கார மணிகள் அவள் காலில் குத்தி பதம் பார்த்துவிட, வலி தாளாமல் இரண்டு நொண்டு நொண்டிவிட்டு செருப்பையும் சலங்கைகளையும் கைகளில் அள்ளிக் கொண்டு வெறுங்காலுடன் கோதையைத் தொடர்ந்து மூச்சிறைக்க ஓடினாள்.

    கையில் பலகாரத் தட்டுகளை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்த லலிதா, அவர்களைக் காணாது திகைத்து, என்ன இவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டார்கள் என நினைத்தாள். பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருப்பார்களோ என நினைத்து. “பாட்டி அவாள்ளாம் போய் நாழியாச்சா, பட்ஷணம் கொண்டு வரதுக்குள்ளே போய்ட்டாளே” என்றாள்.

    பாட்டியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. லலிதாவைப் பொருட்படுத்தி நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

    பலகாரத் தட்டுகளைத் திண்ணையில் வைத்துவிட்டு வாசல் கம்பிக் கதவைத் தாண்டி வெளியில் வந்து, மேற்கு நோக்கி மறையத் தொடங்கிய சூரியனின் ஒளியினை மறைக்க கையைத் தலைக்கு மேல் வைத்து லலிதா பார்த்த பொழுது, ஆண்டார் வீதி வளைந்து திரும்பும் முக்கில் ரஹமதுனிசாவின் வெள்ளை துப்பட்டா காற்றில் படபடத்து பார்வையில் இருந்து மறைந்தது.

     

     

    படம் உதவி:
    மாணவிகள்: http://www.flickr.com/photos/maemae/179584442/
    அனிச்ச மலர்: http://upload.wikimedia.org/wikibooks/ta/thumb/a/a7/Anicham.jpg/150px-Anicham.jpg

     

    Share
  • உள்ளம் கவர்ந்தானை

    ஷைலஜா

    shylajas snapஎங்கள் வீட்டிற்கு ரங்கன் வந்ததிலிருந்து தாத்தா ரொம்பவும் பிசி ஆக ஆகிவிட்டார். யார் அந்த ரங்கன்?. அப்படி என்ன அவனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு?.

    ரங்கன் சுமார் நாலு மாதக் குரங்கு. தாத்தாவுக்கு ரங்கனை குரங்கு என்று சொன்னால் கோபம் வரும். இனிமேல் நாமும் ரங்கன் என்றே அவனை அழைப்போம். அவன் இந்த வீட்டில் நுழைந்ததே தோட்டத்தில் ஏற்பட்ட ஒரு கவனக்குறைவு காரணமாகத்தான். தேங்காய் உரிக்க மண்ணுக்குள் சொருகியிருந்த கடப்பாரையை எடுக்க மறந்ததன் விளைவு தாய் குரங்கு கடப்பாரை நுணிக்கு பலியானது. அப்போது அனாதையாக இருந்த குட்டிக்குரங்கை, ஸாரி.. ரங்கனை உடனே தாத்தா வாரி அணைத்துக்கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார். தோட்டத்தில் இருந்த அத்தனை வேலையாட்களையும் கடிந்து கொண்டு ஒரு வாரம் பேசவேயில்லை.

    உள்ளே நுழைந்த உடனே நேராக தாத்தாவின் ரூமுக்குள் அவனுக்காக ஏகப்பட்ட வசதிகள் தயாராகிக்கொண்டிருந்தன. காஷ்மீரிலிருந்து அவரது மகளால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட சால்வை மெத்தையாகவும், சோலாபூர் கம்பளம் போர்வையாகவும் மாறியிருந்தன. பால் அருந்த பீங்கான் கப், சாப்பிட ஒரு ப்ளேட், பழங்கள் என்று ஒரு மினி ஜூவாகவே அந்த அறை மாறியிருந்தது.

    தாத்தாவின் அறை ஏறக்குறைய ஒரு ஐசியு அறையாகவே காணப்பட்டது. யாருக்கும் அனுமதி கிடையாது. முதல் ஒரு வாரம் நடந்த சம்பவங்களை வைத்து ஒரு சின்னத் திரை சீரியலே தயாரித்துவிடலாம். தாத்தாவுக்கு வேண்டிய உணவு, காபி, டிபன் கூட ரூமுக்கு வெளியேயிருந்து கொடுக்கப்பட்டது. ரங்கனுக்குத் தேவையான பால், வாழைப்பழம் ஆகியவையும் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டது.

    மாலை நேரத்தில் தாத்தாவின் பால்ய நண்பர் பாபு வந்து ரங்கனை பரிசோதிக்க வருவார். அவர் தான் அந்த ஊரின் முதல் வெடினெரி டாக்டர்.

    “இது ஒரு ஜெனரல் டிப்ரெஷன். கவலைப்படவேண்டாம். சரியாப் போயிடும். இன்னும் பதினைந்து நாளைக்குள் ரங்கனை காவேரிக்கரை ஓரம் உள்ள தாத்தாச்சாரியார் தோப்பில் விட்டு விடலாம். கவலைப்படாதேடா.. திருமலை” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

    ரங்கனுக்கு பாலோ பழமோ பிடிக்கவில்லை. தாத்தாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தனக்காக தயாரிக்கப்பட்டு வைத்திருந்த தட்டை திறந்தவுடன் ஓடி வந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டது. அவருக்காக வைத்திருந்த உப்புமாவை தனக்குத் தர வேண்டும் என்று கண்களால் கெஞ்ச, தாத்தா ரங்கனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார். கத்திரிக்காய் கொத்ஸு வையும் அது மிகவும் ரசித்து சாப்பிட தாத்தாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

    உடனே பாபுவுக்கு ஃபோன் போட்டு, “ பாபு.. ரங்கனுக்கு என்னோட உப்புமா தான் பிடிச்சுருக்கு. கொடுத்துவிட்டேன். தப்பில்லையே?” என்று கேட்டார்.

    பாபு “ஓ.கே. கோ.. அஹெட். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை” என்றார்.

    ‘எத்தனை பறவைகள், விலங்குகள், அதன் பசியை போக்கிக்கொள்ள பசியாறுகின்றன.. இப்படி ஒவ்வொறு உயிரினத்துக்கும், அதற்கு பிடித்த உணவை இறைவன் ஏற்கனவே படைத்துவிட்டான். ஒரு குரங்குக்காக இப்படி உயிரை விடுகிறானே… எத்தனை இளகிய மனஸு..’ என்று தனக்குள் பாபு சிரித்துக்கொண்டார்.

    அன்று இரவு அவனுக்கு காஷ்மிர் ஷால்வை, முள்ளாய் குத்தியதோ என்னவோ, தாத்தாவின் அருகிலே படுத்துக்கொண்டான். தாத்தாவின் வேட்டி நுணியை பிஞ்சு விரல்களால் பிடித்தவாறு மெல்ல தூங்க ஆரம்பித்தான்.

    சிறிய வயதிலே தன்னுடைய தாயை இழந்த திருமலைக்குத் தான் தெரியும் ‘ஒரு தாயின் பிரிவு என்றால் என்ன என்று. பாபு சொல்கிற மாதிரி பதினைந்து நாட்களுக்குள் எப்படி எப்படி சரியாகும்? இன்னமும் அம்மாவை இழந்த துக்கம் என்னுள் புதைந்து கிடக்கிறது. கொஞ்சம் தட்டி விட்டால் போதும், இப்பவும் இந்த தலையணையும் போர்வையும் நனையும் வரை கண்ணிலிருந்து ஜலம் வரும். மனிதர்களுக்கு மட்டும் தானா இந்த பிரிவு, ஏக்கம் எல்லாம்? மிருகங்களுக்கு கிடையாதா?. பதினைந்து நாட்கள் கழித்து ரங்கனை நிச்சயம் பிரியத்தான் வேண்டுமா?.. வேறு வழியே இல்லையா?’ இப்படி பல கேள்விகளுக்கும் விடை கிடைக்காமல் வேறு வழி இன்றி அவர் நித்திரையில் லயிக்க ஆரம்பித்தார்.

    மறு நாள் முதல் ரங்கன் ரொம்பவும் உரிமையுடனும், நீண்ட நாள் பழகிய தினுசில் தாத்தாவுடன் விளையாட ஆரம்பிக்க அந்த அறையில் சிரிப்பும், விளையாட்டும் வீட்டில் இருக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின

    அதற்கு மேல் அந்த அறையில் ரங்கனை வைத்திருக்க அவசியமே இல்லாமல் போயிற்று. ஹால், சமையல் அறை, மாடி, தோட்டம், என்று இப்படி எங்கெல்லாம் தாத்தா செல்கிறாரோ அங்கெல்லாம் அவன் அவருடன் உலவ ஆரம்பித்தான்.

    தாத்தா வாக்கிங்க் ஸ்டிக் வைத்துக்கொண்டு இருப்பதைப் போல அவனும் ஒரு சிறிய குச்சியுடன் அவர் பின் நடப்பது வேடிக்கையாக இருந்தது.

    “போகிற போக்கைப் பார்த்தால் அவன் பெயரில் உயிலையே எழுதி வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்று பாட்டி சொல்ல.

    தாத்தா “ பாவம் தாயில்லா ஜீவன். யாரு இருக்கா அவனுக்கு? மிருகங்கள் மனிதர்களுக்காக தங்களின் வாழ்க்கையே அர்ப்பணம் செய்யவில்லையா? அது நாம் நடமாடும் தெய்வமாக கும்பிடும் மாடாகட்டும் அல்லது நாயாகட்டும், நம் வாழ்க்கையில் எத்தனை பெரிய உதவிகளை பிரதி பலன் பார்க்காமல் செய்கின்ற்ன!. நாம தான் கடவுளுக்கு அர்சசனை செய்தால் அவர் நமக்கு என்ன கொடுப்பார்னு கணக்கு பார்க்கிறோம்.” தாத்தா உணர்ச்சி பொங்க பதில் அளிக்கவும் பாட்டிக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

    ஆயிற்று. பாபு சொன்ன பதினைந்தாம் நாள் ‘டாண்’ என்று வாசலில் நின்று கொண்டு, “ திருமலை! சீக்கிரம் வா.. காரில் ஏறு. ரங்கனை வழி அனுப்பிவிட்டு வரலாம்” என்று கூவ, திருமலை “ பாபு! சொன்னா கேளுடா.. கொஞ்ச நாளுக்கு அப்புறம்

    பார்துக்கலாம். இப்போ என்ன அவசரம்?” என்றார்.

    “இதோ.. ஐந்து நிமஷம். அவனுக்குப் பிடித்த அரிசி உப்புமா, கத்திரிக்காய் கொத்ஸு கொடுத்துவிட்டு அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

    அரை மனதுடன் காரில் ரங்கனுடன் ஏறிக்கொள்ள, பாபு காரை வேகமாக மாம்பழ சாலையை கடந்து இடது புறமாக செலுத்தினார். வெட்டிச்சாய்த்துவிட்ட பல மரங்களின் நடுவே அங்கும் இங்குமாய் தெரiிந்த நாலைந்து மரங்களை நோக்கி நெருங்க நெருங்க திருமலைக்கு துக்கம் தொண்டையை அடைத்துகொண்டது.

    பாபு காரைத்திருப்பிக்கொண்டு, “ திருமலை, காரை விட்டு இறங்க வேண்டாம். இங்கேயே அவனை இறக்கி விடு. அவன் போய் விடுவான்” என்றார்.

    மனதைக் கல்லாக்கிக்கொண்டு ரங்கனை காரின் கதவைத் திறந்தவுடன் விட்டு விட்டு வந்த வேகத்தில் வேகமாக காவிரிப் பாலத்தைக் கடந்து மெயின் கார்டு கேட் தேவர் ஹால் எதிரே உள்ள பத்மா காபியில் நுழைந்து காபியை ருசிக்க ஆரம்பித்தனர்.

    திருமலைக்கு காபி வேப்பிலை சாறு போல கசந்தது. அவர் மனம் எல்லாம் ரங்கனின் பின்னே. ‘தப்பு செய்து விட்டோமே. அவனை இனிமேல் பார்க்க முடியுமா? அவனை மற்ற குரங்குகள் ஏற்றுக்கொள்ளுமா?’ ஒரே கவலை திருமலைக்கு.

    திருமலையிடம் பாபு, “திருமலை! பீ ப்ராக்டிகல். நாம விலங்குகளின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. ரெண்டு நாளில் அதுக்கு எல்லாம் சரியாப் போயிடும்.” என்றார்.

    “என்ன செய்வது. உன் மாதிரி நான் கல் நெஞ்சக்காரன் இல்லை”
    திருமலையின் வார்த்தையில் சோகம் தோய்ந்திருப்பதை பாபுவால் உணர முடிந்தது.

    திரும்பி வருகையில் ஜோஸஃப் கல்லூரியைக்கடந்து சத்திரம் பஸ் ஸ்டான்டை தாண்டி காவேரிப் பாலத்தின் மேல் கார் செல்லும் போது திருமலையின் கண்கள் தாத்தாச்சாரியார் தோட்டத்தைத் துளைக்கத் தொடங்கியது.

    பாபுவின் கார் இடது புறம் திரும்பி அம்மா மண்டபம், காந்தி சிலையை கடந்து மேலூர் ரோடில் உள்ள வீட்டின் முன் நிற்கும் போது வீட்டின் வாசல் முன் ரங்கன் அவருக்காக காத்து நின்றான்.

    தாத்தாவுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

    தாத்தாவைக் கண்டதும் ஓடி வந்து அவரது வேட்டி நுனியை கையால் கவ்வி அவர் மேல் பாய்ந்து தனது அன்பை வெளிப்படுத்த, பாபு, “ என்னை மன்னிச்சுடுடா. அவன் இவ்வளவு திரும்பி வந்திருக்கிறான் என்றால் அதற்கு காரணம் இல்லாமலா போய்விடும்? பீ ஹாப்பி அண்ட் எஞ்சாய் வித் ஹிம். நான் வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார்.

    வழக்கம் போல இரவு 9 மணிக்கு தாத்தாவும் ரங்கனும் அவர்களின் அறையில் படுத்தனர். ரங்கன் தாத்தாவின் அருகில் படுத்துக்கொண்டான். தாத்தா “ என்னை மன்னிச்சுடுடா.. இனிமேல் அந்த தப்பு செய்ய மாட்டேன்” என்றபடியே ரங்கனை வாஞ்சனையாக வருடியபடியே தூங்கிப்போனார்.

    இரவு ஒரு மணி இருக்கும். திடீரென்று ரங்கன் தாத்தாவின் தோள்களைக் குலுக்கி ஆரவாரம் செய்ய, தாத்தா விழித்துக்கொண்டார். அவரை இழுத்துக்கொண்டு பாட்டி அருகில் சென்றான்.

    கீழே நிலை தவறி விழுந்திருந்த அம்புஜம் தலையில் லேசான அடி பட்டு இரத்தம் வந்து கொண்டிருந்தது. மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. முகத்திலும், கைகளிலும் வியர்த்திருந்தது. அவள் அப்போதுதான் விழுந்திருக்கவேண்டும்.

    ஆம்புலன்ஸை வரவைத்து, அமெரிக்கன் ஆஸ்பத்திரி விரைந்தார்.

    பாட்டிக்கு அவசர சிகிச்சை அளித்த டாக்டர் “ சிவியர் ஹார்ட் அட்டாக். நல்ல வேளை. உடனே வந்தீர்கள். கொஞ்சம் தாமதித்திருந்தாலும், உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும். இந்த மருந்துகளை உடனே வாங்கி வாங்கோ” டாக்டர் இப்படி சொன்னதும் திருமலையின் பார்வை ரங்கனின் பக்கம் சென்றது.

    ‘இப்படி ஒரு பெரிய விஷயத்தை செய்து விட்டு, ஒன்றுமே தெரியாதது போல உட்கார்ந்திருக்கிறானே!. ரங்கனின் வருகைக்கு பாபு சொன்ன காரணம் இது தானோ?’ என வியந்தார்.

    அப்புறம் என்ன!.. ரங்கனிடம் அந்த வீட்டில் எல்லோரும் அன்பைப் பொழிந்தனர். ரங்கனுக்கு கிடைத்த மரியாதையும் சலுகைகளும் ஏராளம்.

    ரொம்பவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த தாத்தாவுக்கு உடம்புக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டாக்டர் வந்து பார்த்துவிட்டு, “ கவலைப்படாதீர்கள். சரியாகிவிடும். வயசானாலே ஏதாவது சின்ன நோய் அப்பப்ப வருவது தான்.” வழக்கமான டயலாக்கை உதிர்த்துவிட்டு சென்றார்.

    தாத்தா அன்று இரவு அவருக்குப் பிடித்த உப்புமாவை சாப்பிடவில்லை. ரங்கனுக்கும் ஊட்டிவிடவில்லை.

    அன்று இரவு படுத்தவர்தான், மறு நாள் காலை எழுந்திருக்கவில்லை. ரங்கன் தாத்தாவின் பிரிவை பொறுக்கமுடியாமல் அவரைச் சுற்றி சுற்றி வந்தான்.

    தாத்தாவின் உடலைத் தகனம் செய்து காவிரியில் அஸ்தி கரைத்துவிட்டு வந்தாயிற்று.

    ரங்கனுக்கு தாத்தாவின் அறையில் இருந்த அவனுடைய தட்டில் உப்புமா பறிமாறப்பட்டது.

    மறு நாள் காலை எழுந்து பார்க்கும்போது ரங்கன் அறையில் இல்லை. தட்டில் உப்புமா அப்படியே இருந்தது.

    ரங்கனை கடைசியாக காவிரிக்கரை ஓரத்தில் பார்த்ததாக யாரோ சொன்னார்கள். அவனுடைய குச்சி மட்டும் வீடு வந்து சேர்ந்தது. அதற்கு அப்புறம் அவனை யாரும் பார்க்கவே இல்லை.

    Share
  • ‘நீர்’

    மாதங்கி

    நான் நின்றுகொண்டிருக்கிறேன். ஒருமணிநேரம், இரண்டுமணிநேரம் அல்ல, இரண்டு வாரங்களாக நின்றுகொண்டிருக்கிறேன்; தரையில் அன்று ; தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறேன். நேரடியாக இல்லாவிட்டாலும் நான் நின்றுகொண்டிருக்கும் இடம், நிலுவையில் உள்ள கப்பலில் இருக்கிறது; பாதகமில்லை, எனக்கு; ஆனால் இந்த மனித ஜீவனுக்கு? இந்த பாரக்கப்பலில் மாட்டிக்கொண்டிருப்பவருக்கு?

    நான் யார்? என் பெயர் என்ன என்பது தேவையில்லை. சித்தகாங்கு துறைமுகத்தில் பொருள்கள் அடங்கிய பெரிய பெட்டிகளை கப்பலில் ஏற்றிச்செல்ல நிறைய கண்டெய்னர்களைப், பார்த்திருப்பீர்களே, அவற்றில் ஒன்றுதான் நான்.

    சித்தகாங்கு துறைமுகம் பிரம்மாண்டமானது. கி.மு நான்கில் இங்கிருந்துதான் மலாயாவிற்கு புத்தகுப்தர் சென்றாராம்; பெரிப்ளக்ஸ் குறிப்புகளில் இருக்கிறதாம். யுவான் சுவாங்கு, ஃபாஹியன், டாலமி, இபின் படூடா எல்லோருமே இத்துறைமுகத்தைப் பற்றிக்குறிப்பிட்டிருக்கிறார்களாம். பிற்காலத்தில் போர்த்துகீசியர், ஆங்கிலேயர் ஆகியோர் வசம் இருந்ததாம். யாரோ பேசும்போது கேட்ட நினைவு.

    என் இப்போதைய கவலையெல்லாம் இந்த மனித உயிரைப் பற்றியது மட்டுமே. எந்த மதம், மொழி, இனம், நாடு என்ற பேதம் பார்க்க நான் மனிதப்பிறவி அல்லவே; எனக்கு அது ஒரு மனித உயிர் அவ்வளவுதான். அவனுக்கு ஜீவன் என்ற பெயரை நானே வைத்துவிட்டேன். ஜீவன் தற்சமயம் என்னுடன் தான் இருக்கிறான்.

    சித்தகாங்கு துறைமுகத்தில் நின்றுகொண்டிருக்கும்போது இவனைப்போன்ற பலரைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவன் இவன். தனியார் நிறுவனங்களின் நிரந்தரக் கூலிப் பட்டியலில் அன்றாடம் காய்ச்சிகளாய் இடம்பிடிக்கவும் முடியாமல் தற்காலிகக்கூலி என்ற பெயரில் நாள் ஒன்றுக்குப் பன்னிரண்டுமணிநேர உழைப்பையும் போட்டுவிட்டு கண்காணிப்பவன் என்ன சில்லரை கொடுக்கிறானோ அதை மறுபேச்சின்றி வாங்கிப்போய் வீட்டிலிருக்கும் ஒன்பது உயிர்களுக்கும் படியளப்பவன்.

    அவனுக்குப் பல கனவுகள் இருந்தன. எழுதப்படிக்கத் தெரியாததால், கண்காணிப்பவனிடம், அடிஉதை, கெட்டபேச்சு, இவற்றைக் கேட்டுத்தொலைக்கவேண்டியிருக்கும்போதெல்லாம், மாலை மங்கியபின் மகள் முக்தா எண்ணெய் விளக்கொளியில் குழிகள் நிறைந்த மண் தரையில் நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொண்டு எழுதியவாறு சத்தம்போட்டு படிக்கும் காட்சியை நினைத்துக்கொள்வான். எப்பவாவது மகள் முக்தா, தனக்குக் கொடுக்கும் தேத்தண்ணீரில் ஒருநாளாவது பாலூற்ற முடியுமா என்று தயங்கித்தயங்கி கேட்பாள். என் அன்பு முக்தாவுக்காக; நாளெல்லாம் உழைத்துவிட்டு இரவு படுக்கும்போதுகூட முழுமறைப்பு இல்லாத, கொசுக்கடியும் நாற்றமும் வீசும் தடுப்பு அடியில் படுத்துறங்கும் மனைவிக்காக. மடபாரி ரயில் நிலையத்தின் மறுபுறம் குப்பைக்கூளங்களுக்கு மத்தியில், இருப்பதைக் கொண்டு குடிசைகட்டி வசிப்பவர் பலர் இருந்தனர், இவனும் நான்கு குச்சிகளுக்கு மேல் பொருத்தியிருந்த ஒரு பழைய பிளாஸ்டிக் விரிப்பாலான கூரையை, விட்டு எங்குபோனாலும், நம்வீட்டுக்குப்போகணும் என்று மழலை மொழிபேசும் பவனுக்காக, என்று எண்ணி அடக்கிக்கொள்வான்.

    அடிமட்டக்கூலியைக் கொடுக்கும்போதும் அதிலிருந்தும் பாதிக்கும் மேல் கமிசன் எடுத்துக்கொண்டு சில்லரையை கூலி விநியோகிப்பவன் ஒருமுறை வீசிப்போட்டபோது, அவன் காட்டிய ரோசம் தற்காலிக கூலிவேலையை மட்டும் பறிக்கவில்லை, மருந்துவாங்கக் காசின்றி, பேதிகண்ட இரட்டைக்குழந்தைகளின் உயிரையும் பறித்துக்கொண்டது.

    சில நாள்கள் கழித்து, அந்தத் துறைமுகத்தில் இருந்த வேறொரு தனியார் நிறுவனத்தின் நிரந்தரக்கூலி ஒருவனின் நட்புகிடைத்து, அவன் உபகாரத்தால், தற்காலிகமாகச் சுமையேற்றும் வேலை கிடைத்திருந்தது. அப்போது ஏதோ கணக்கெடுக்க வெளிநாட்டுக்காரர்கள் சிலர் வந்தார்கள். கூடவே மொழிபெயர்த்துச்சொல்ல உள்ளூர்காரன் ஒருவனையும் கூட்டிவந்திருந்தார்கள். அவனுடைய மாத வருமானம் கேட்டார்கள். அவர்கள் பணத்தில் இவன் கூலி ஒரு நாளைக்கு ஒரு வெள்ளியாம், உள்ளூர்காரன் சொன்னான். இவர்கள் இப்படி வெளிநாட்டுக்கு கணக்கெடுக்க வந்திருக்கிறார்களே, இவர்களுடைய பெண்டு பிள்ளைகளுக்கெல்லாம் யார் காவல், ஜீவன் யோசித்தான். அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள். மனைவி பானுவுக்கு பாதுகாப்பு மட்டுமன்றி மகள் முக்தாவை யாரும் கடத்திப்போய்விடக்கூடாது, என்ற பயம் இப்போது அடிக்கடி வருகிறது. காலிப் பயல்கள்; மனுசன் காசின்றி இருந்தாலும் அது பெண்பிள்ளை என்னும் பட்சத்தில் ஏழை பணக்காரன், சாதி வேறுபாடு பார்ப்பதில்லையே, காசநோயில் வாழும் பெற்றோருக்கு ஒரு வாரமாகத்தான் மருந்து வாங்கிக்கொடுக்க முடிகிறது. என்றாவது ஒரு நாள், கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு மிதிசைக்கிள்வேன் ஓட்டுநராகி, பின் சொந்தமாக ஒரு மிதிசைக்கிள்வேன் வாங்கிவிட வேண்டுமென்று நினைத்தான். வாங்கியபின் பின்பக்கத்திலிருக்கும் கூண்டுக்கதவில் முக்தாவை வண்ணச்சாயத்தால் படம் எழுதச்சொல்லலாம். சாமான்களைக் கட்டிவைக்க பலத்த கயிறு ஒன்று வாங்கிக்கொள்ளவேண்டும். அப்படியே தொங்கும் விளக்கு ஒன்றை தயாராக வைத்துக்கொண்டால் இரவு சவாரி மிதிக்கும்போது வெளிச்சத்திற்கு உதவும். வியர்வையைத் துடைக்க இருக்கை அருகில் ஒரு கைத்துண்டு வைத்துக்கொள்ளலாம். வாரத்தில் ஒரு நாள் வீட்டினரை எங்காவது பின்புறக்கூண்டில் அமர்த்தி அழைத்துச்செல்லலாம். இவை எல்லாவற்றையும் விட தினமும் இரண்டு வேளை கஞ்சி வீட்டினர் எல்லோருக்கும் கிடைக்கும் என்பது அவனுக்கு ஒரு மனத்தெம்பைத் தந்தது. கொஞ்சம் துணிவாங்கி கோடிக்கடை பாய்’ இடம் கொடுத்து குழந்தைகளுக்கு நல்ல சட்டை தைத்துத்தரச்சொல்லிப் போட்டுப் பார்க்க வேண்டும்.

    பன்னிரண்டு மணிநேரம் பகல் ஷிப்ட் பார்த்தால் அடுத்த பன்னிரண்டு மணிநேரவிடுப்புக்குப் பின்தான் வேலைக்கு வரமுடியும். ஓரிருநாள்கள் இரண்டுமூன்றுமணிநேரம் தூங்கிவிட்டு, அடுத்த ஷிப்ட் பணி வரும் வரை சும்மா இருக்கவேண்டாமென்று, தளத்தைப் பெருக்கும் வேலை கிடைக்குமா என்று கேட்டுப்பார்த்தான்; விரட்டிவிட்டார்கள்.

    நான்கு நாள்கள் ஒருவேளை எல்லோருக்கும் உணவுகிடைத்தால் ஐந்தாவது நாள் ஏதேனும் புதிய பிரச்சனை ஒன்று முளைத்துவிடுகிறது. கைக்குழந்தை பவனுக்கு பால்மாவு வாங்க காசில்லாவிட்டாலும் கஞ்சிவேளைதவிர இக்கடுங்கோடையில் உதடுகள் அடிக்கடி உலர்ந்து வெடித்துப்போய் அழுகிறது. தெருவில் இருக்கும் அவர்கள் இருப்பிடத்திற்கு வெளியே வெட்டவெளியில் அவர்களுடைய சமையல் பாத்திரங்கள் அருகில் எங்கேனும் தண்ணீர் கிடைத்தால் குடித்துவிடுகிறது. பெற்ற பிள்ளைக்குக் குடிக்க நல்ல தண்ணீர்கூட கொடுக்கமுடியாத பாவி என்று ஜீவன் நேற்று முட்டிக்கொண்டு அழுதான். பானு ஆசையாக வளர்க்கும் நாய்க்குட்டி அருகிலிருந்த குட்டைநீரை ஓடிஓடிப்போய்க்குடித்து அடிக்கடி சுகவீனம் அடைந்துவிடுகிறது. எங்கோ கிடைத்த ஆரஞ்சுப்பழக்கொட்டைகளை முக்தா ஒரு தகர டப்பாவில் மண்நிரப்பி வைத்திருக்கிறாள். ஒரு மழை திடீரென்று வந்துவிட்டால் மூங்கில் கழிகள் விழுந்துவிடுகின்றன. ஒரு குடிசை கட்டிக்கொள்ளவேண்டும்.

    பத்துவயது முக்தா மெலிந்தவளாய் இருக்கிறாள். நல்ல மனம் கொண்ட வைத்தியர் ஒருவர், இலவசமாகக் கொடுத்த பால்மாவு டப்பா எத்தனை நாள்தான் வரும். இப்படித்தான் அவன் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.

    இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று பார்க்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன். பன்னிரண்டு மணி நேர பகல்நேரப் பணியில் பளுதூக்கும் வேலை முடிந்தபின் இரவுப்பணிக்கு கூலி ஒருவன் வராததால் ஜீவன் அதை ஒரு நாள் ஏற்றுக்கொண்டு, கிடைத்த கூலியை வீட்டில் கொடுத்துவிட்டு அடுத்த பகல்நேரப் பணி இல்லாததால், தளம் பெருக்கும் வேலையை முடித்துவிட்டு துறைமுகத்தில் கவனிப்பாரற்றுக் இருந்த ஒரு கண்டெய்னர் உள்ளே, அதாவது என் உள்ளே, ஒரு தேத்தண்ணீர்க் கிண்ணத்துடன் நுழைந்தவன் தன்னைமறந்து கண்ணயர்ந்துவிட்டான். .

    இருட்டியபின் அவன் உள்ளே இருப்பதை அறியாமல் என்னுடைய கதவு சீலிடப்பட்டுக் கப்பலில் ஏற்றப்பட்டு சிங்கப்பூரை நோக்கிக் கிளம்பியது. இங்கே ஒரு மனிதன் இருக்கிறான், சீலிடாதீர்கள் என்று என்னால் முடிந்தவரை அலறினேன். ஜீவன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். யார் காதிலும் நான் அலறியது விழவில்லை.

    நானும் பதற்றம் கூடிட கவனித்துக்கொண்டிருந்தேன். சிலமணிநேரங்களில் விழித்தவன், நிலையைப் புரிந்துகொண்டு அலறினான். இரும்பாலான என் உட்சுவர்களைப் பலங்கொண்ட மட்டும் தட்டினான், கத்தினான், கதறினான். அவன் அவ்வப்போது உடைந்துபோய்ப் புலம்பியதை வைத்துதான் அவனைப் பற்றிய விவரங்களை நான் தெரிந்துகொண்டேன். அதை உங்களுக்கும் கூறி வந்தேன். ஆனால் கப்பல் தன் பயணத்தைத் துவங்கி பலமணிநேரங்கள் ஆகிவிட்டது. உறங்கினான், விழித்தான், புலம்பினான், உதைத்துப்பார்த்தான், அழுதான். என் பக்கவாட்டில் இருந்த தகடுகளில் அங்கங்கே ஆணிகளும் ஸ்க்ரூக்களும் பூட்டப்பட்டிருந்ததால் சுவாசிக்க காற்று சில துளைகள் வழியே வந்தது. பொதுவாக என் போன்ற கண்டெய்னர்களில் சணல் பொருள்கள், இரசாயன உரங்கள், மீனுணவுத் தயாரிப்புகள் போன்றவை பெட்டிகளில் இடப்பட்டு ஏற்றப்படும். என்னுள் ஒரே ஒரு பெட்டிதான் ஜீவன் வருவதற்கு முன் இருந்தது. அதில் என்ன இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை,

    ஜீவன், உன் சக்தியை வீணாக்காதே ஐந்து நாள்களில் சிங்கப்பூர் சென்றுவிடுவோம். உனக்கு ஒரு வழிபிறக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அதே சமயம் கள்ளத்தனமாக சிங்கப்பூருக்கு வேலைவாய்பைத் தேடி வருபவர்களுக்கு கடும் தண்டனை என்பதும் எனக்குத் தெரியும். முன்பொருமுறை இதேபோல் எங்கிருந்தோ வந்த சரக்குக் கப்பலின் இருவர் கண்டெய்னரின் மாட்டிக்கொண்டு, ஒருவன் கப்பல் வெய்யிலில் ஏற்பட்ட சூட்டில் இறந்திட பிணத்துடன் இருந்த மற்றொருவனை சிங்கப்பூரின் பாசில் பஞ்சாங் முனையத்தில் கப்பல் வந்த உடனேயே கண்டெய்னர்களை இறக்கிவிட்டதால் கண்டுபிடித்து, மருத்துவமனையில் சேர்த்து பின் சில தொண்டூழியர்கள் உதவியால் அவனை விசாரித்து, உண்மை நிலவரத்தைப் புரிந்துகொண்டபின், அவனை, அவன் நாட்டிற்கு, நல்லபடியாக திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதில் வந்தவனைப் பற்றியோ அவன் வாழ்க்கை பற்றியோ எனக்கு எதுவும் தெரியவில்லை. பயணமே நீண்டுவிட்டதுபோல் தோன்றியது, நாங்கள் கிளம்பியதிலிருந்து ஒரே மழை வேறு. சிங்கப்பூர் போய் சேர்வதுவரையாது ஜீவன் உயிரோடு இருக்கவேண்டுமே என்று வேண்டிக்கொண்டிருந்தேன். இவன் கதையைக் கேட்டபின் இவன் எதோ எனக்கு மிகவும் வேண்டியவன் போல் தோன்றிவிட்டதா, அல்லது இவனுடைய குடும்பத்திற்கு இவனுடைய அவசியத்தைப் பற்றி நினைத்தா என்று திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியவில்லை. இவன் உயிரோடு இருக்க வேண்டும், இருப்பான், அவ்வளவுதான்.

    சிங்கப்பூர் துறைமுகத்திற்கு வந்துசேர்ந்ததை எனக்குப் பழக்கமான வெளியுலக ஒலியாலும், வாசனை மூலமாகவும் தெரிந்துகொண்டேன். என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஜீவன், போராடிப் போராடி ஓய்ந்திருந்தான். கத்தாதே, துறைமுகம் சேர்ந்தவுடன் உரக்கக்கூவிட உனக்குத் தெம்பு வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடியது அவன் காதில் விழவில்லைநம்பிக்கையுடன் இருக்கத் தீர்மானித்தேன். வேறெதுவும் என்னால் செய்ய இயலாத பட்சத்தில், இது ஒன்றுதான் வழி.

    மறுநாள், இராட்சத கிரேன்கள் சில, துறைமுகத்தில் காத்துக்கொண்டிருந்த சில கப்பல்களில் இருந்த சில கண்டெய்னர்களை இறக்கின. நாங்கள் இறக்கப்படவில்லை. என்னை யாரும் சட்டை செய்யவில்லை. எங்கள் அருகிலேயே யாரும் வரவும் காணோம். ஒரு வாரமாக துறைமுகத்திலே காத்துக்கொண்டேயிருக்கிறேன். . உடலில் உள்ள தண்ணீர்சத்தெல்லாம் வற்றிட அவன் மயங்கியிருந்தது எனக்கு மிகவும் பதற்றத்தைத் தந்தது. ஒரு வேளை இறந்துவிடுவானோ, பவன், முக்தா இவர்களின் கதி, இவன் குடும்பம்,… கொஞ்சம் நிதானப்படுத்திக்கொண்டேன்.

    கோடைவெப்பம் என் இரும்புச்சுவர்களை இன்னும் அதிகமாகத்தாக்க, நான் என் சக்தியெல்லாம் திரட்டிக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறேன்.

    இதைத்தான் இக்கதையின் துவக்கத்தில் உங்களிடம் சொல்லத் துவங்கினேன்.

    ஜீவன் உடலின் நீர்ச்சத்தெல்லாம், வற்றி, பசியால் கண்கள் பஞ்சடைந்து அவ்வப்போது தூக்கமும், விழித்தால் அரை மயக்கமுமாய் இருந்தான். ஒவ்வொரு விழிப்புக்கும் பிறகு தன் சக்தியெல்லாம் திரட்டி சுவர்களில் ஓங்கி ஓரிரு முறை குத்துவான், கத்திப்பார்ப்பான், இப்போது இரண்டு நாள்களாக அதற்கும் அவனிடம் திராணி இல்லை.

    சில கிரேன்களின் உதவியால் நானும் வேறு சில கண்டெய்னர்களும் இடம்மாற்றப்பட்டோம். இவை வியட்நாம் செல்லும் கண்டெயினர்கள் என்று ஒலிபெருக்கியில் ஒருவர் அறிவித்துக்கொண்டிருந்ததைக் கேட்டு திடுக்கிட்டுப்போனேன்.

    சீருடை அணிந்த சிப்பந்திகள் இருவர் ஏதோ சோதனைக்கு நான் இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் வந்தபோது, ஜீவன், இதைவிட்டால் உனக்கு இனி வாய்ப்பு இல்லை, உன் உயிர் மட்டுமன்று உன் குடும்பத்தினரின் உயிரும் இப்போது நீ எடுக்கும் முயற்சியில்தான் உள்ளது அலறினேன். இங்கே இறங்காமலே வியட்நாம் பயணம் என்றால், ஜீவனின் கதை முடிந்தகதையாகிவிடுமே. கடைசியாக ஒரு முறை தள்ளாடிய ஜீவன், தன் பலத்தையெல்லாம் திரட்டி ஓங்கி ஒரு முறை தட்டினான். கூக்குரலிடக்கூட அவனுக்கு முடியவில்லை. சோர்வுற்று மயங்கி கீழே விழுந்தான். நாங்கள் வியட்நாம் செல்லும் கப்பலிலா இருக்கிறோம். அப்படியானால், இங்கு எங்களைத் திறக்கவே மாட்டார்களே. என் புலன்களை மூடிக்கொண்டேன், செவி மட்டும் விதிவிலக்காக.

    என்னுடைய பின்குறிப்பு

    பங்களாதேசத்திலிருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாம் செல்லும் சரக்குக் கப்பலுக்கு தெரியாமல் வந்துவிட்டோமே, என்று இருவர் முணுமுணுத்தனர். அவர்கள் சுங்கச் சாவடி அதிகாரிகள் என்பதை அவர்களுடைய சீருடையை வைத்துப் புரிந்துகொண்டேன்.

    அந்த இருவரில் ஒருவர், “நாம் படகிலிருந்து இறங்கும்போது ஏதோ ஒரு கண்டெய்னரில் லேசாக சத்தம் கேட்டதுபோல் இருந்ததே” என்று மற்றவரிடம் சொன்னார்.

    Share
  • பேச்சி

    IMG_5273பூங்கா வனங்கள், தாமரைத் தடாகங்கள், தெளிய நீர்வரவிகள், பூஞ்சோலைகள், நாடக சாலைகள், உல்லாச விடுதிகள், பந்தாடும் பவனங்கள், சிறந்த கல்விச் சாலைகள், கற்பகதரு, ஆல், வேம்பு மரங்களுமாய் வீதம்பட்டிக்கும், வாகத் தொழுவுக்குமாகக் காட்சிதரும் பேரூர் வா. வேலூர். அங்கேதான் பழமன் எனும் சிறுவன் வேளாண்மைக் குடியில் பிறந்து, மக்களொடு மக்களாய் கால தேவனின் சுழலில் அடித்து வரப்படுகிறான்.

    “எங்கடா போற?”

    “தெய்வாத்தா கடைக்கு சோறுங்கப் போறன்டா!”

    “ஏன் உங்கூட்ல யாரும் இல்லியாக்கூ?”

    “ஆமாடா, எங்கப்பனுமு, அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தையில சோளம் வித்த பணத்துக்கு ஆடு வாங்கப் போயிருக்காங்க!”

    ”ச்சேரி, ச்சேரி, நானுமு எங்கூட்டுக்குப் போறன், எனக்குமு பசிக்குது!”

    ”சரிடா பெருமாளு!”

    அந்த வில்வமரம் சூழ இருக்கும் வினாயகர் கோவிலடியின் ஊடாக, ‘வட்டப் வட்டப் பிள்ளையாரே, வாழைக்காயி பிள்ளையாரே, உண்ணுண்ணு பிள்ளையாரே, ஊமத்தங்காயிப் பிள்ளையாரே’ என்று பாடியவாறே தெய்வாத்தாவின் உண்டிச் சாலையை அடைகிறான் பழமன்.

    “பழமு, வா கண்ணூ! என்ன கண்ணூ, உன்றப்பன் வடைகிடை வாங்கியாறச் சொல்லுச்சாக்கூ?”

    “இல்லாத்தா, எங்கப்பனுமு அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தைக்கி போயிருக்காங்க. பொழுதுழுகத்தான் வருவாங்க!”

    “அப்பிடியா கண்ணூ. செரி, என்னுங்கற?”

    “என்னாத்தா இருக்குது?”

    “கட்டுச் சோறு, எடுப்புச் சோறு, ஏகாந்த போசனம், இதுல உனக்கு என்ன வேணும்?”

    “அப்பிடின்னா என்னாத்தா?”

    “கட்டுச்சோறுன்னா, இதா அந்த பாக்கு மட்டையில கட்டி வெச்சுருக்குறது. எடுப்புச் சோறுன்னா, கத்திரிக்கா கொளம்புமு, புடலைங்காக் கூட்டுமு, மோரும் உங்கலாம். ஏகாந்த போசனம்ன்னா, வடை பாயாசம் எல்லாமும், நம்ப கணேசன் கொண்டாந்து பரிமாறுவாங் கண்ணூ!”

    “எனக்கு அப்ப கட்டுச் சோறே போதுமாத்தா! எங்கம்மா வந்து பணந் தாறேன்னு சொல்லுச்சு!”

    “டேய் கணேசா, பாரு நம்ம சரோசினி ஊட்டுப் பொன்னான் வந்துருக்குறான். வந்து என்னன்னு பாத்துக் குடு சித்த!

    பசியாற கட்டுச் சோறு உண்டுவிட்டு, பெற்றோர் கூறிச் சென்றபடியே, ஊருக்குத் தென்புறமாய் இருக்கும் அவர்களது புலத்தை நோக்கிச் செல்கிறான். போகிற வழியில் கரும்பு ஆலை ஓடிக் கொண்டு இருக்கிறது. கருப்பங் கழிகளை ஆலையில் கொடுத்துப் பிழிந்து, சாற்றை உலையில் ஏற்றிக் காய்ச்சிக் கொண்டு இருந்தார்கள். பிறகு காய்ச்சின சாற்றை அச்சுப் பலகைகளில் ஊற்றினார்கள்.

    அது ஆறின உடனே வெல்ல அச்சுகள் ஆயின. இதை எல்லாவற்றையும் உற்று நோக்கிக் கொண்டு இருந்தான் பழமன். அதைக் கவனித்த வேலையாட்களில் ஒருவனான மாரி,

    “கண்ணூ பழமு! இந்தா ரெண்டு வெல்லம், வாங்கி வாயில போடு!!”

    ”இல்லீங்க, வேண்டாங்கண்ணா, எங்கம்மாக்குத் தெரிஞ்சா வையும்!”

    “அட, இந்தா வந்து வாங்கி வாயில போடு. நானு உங்கம்மாகிட்டச் சொல்லிகிறேன்!”

    அதை வாங்கி வாயில் போட்டுச் சுவைத்துக் கொண்டே பழமன் அவ்ர்களுடைய வயல் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பூத்திருந்த பூக்களைக் கண்டதும், ரெண்டொரு பூவையும் பறித்துக் கையிலேந்தியபடியே எதையோ நினைத்தவாறு சென்று கொண்டிருந்தான்.

    கவனம் அவன் செல்லும் வழியில் இல்லாதபடியால், கல்தடுக்கி அவன் தடுமாறியதில், அவனிடம் இருந்த அந்தப் பூக்கள் கை நழுவி அருகில் இருந்த ஓடையில் விழுந்து விடவே, சோகமாய்ப் பாடிச் செல்கிறான் பழமன்:

    சிந்தாம சிதறாமப் பொறித்தேன் பூவே,
    சித்தாத்துத் தண்ணியில போறயே பூவே,
    வாடாம வதங்காம வெச்சிருந்தேன் பூவே,
    வறட்டாத்து தண்ணியில போறயே பூவே!

    ஓடிக் கொண்டு இருந்த காட்டாற்றில், பூக்களை நழுவவிட்ட பழமன், அந்த ஆற்றின் கரையோரமாக வயல் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அந்த ஆறினாலேயே அந்த ஊர்கள் மிகச் செழிப்பு பெறுகிறது.

    பள்ளம் படுகையில் தென்னந் தோப்பு இருப்பதற்கு அந்த ஆறே காரணம். அந்த ஊரில், வெயில் காலத்திலும் கூட இனிமையான தென்றல் வீசும். அதற்குக் காரணமும் அந்த காட்டாறுதான். அதில் பாயும் வெள்ளம் சத்து வாய்ந்த எருவை நாலாபுறமும் இருந்து எடுத்து வரும். இரு கரைகளிலும்,தென்னை, மா, வேம்பு, ஆல மரங்கள் எனப் பலவகையான மரங்களைக் கொண்டு, எழிலாய் செழிப்பாய் எண்ணற்ற கதைகளை தன்னகத்தே கொண்டது அந்த உப்பாறு என்ற காட்டாறு. அது, வேலூரில் இருந்து, சிந்திலுப்பு, பூளவாடி, பெரியபட்டி, பப்பாளியூர் என்ற ஊர்கள் வழியாக வளைந்து நெளிந்து சென்று, இறுதியில் அமராவதியில் கலக்கிறது.

    இந்த ஆற்றின் கரையோரம் சென்று கொண்டிருந்த பழமன், அவர்கள் வயலுக்குச் செல்லும் இட்டேரி வந்ததும், கரையில் இருந்து இடது புறமாகப் பிரிந்து, அந்த இட்டேரியில் நடந்து சென்று கொண்டிருந்தான். சென்று கொண்டிருக்கும் போது, அந்த இட்டேரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சின்னமுத்து பழமனைக் கண்டதும், உற்சாகம் உற்றவனாய் பேச ஆரம்பித்தான்.

    ”பழமா, என்னடா மத்தியான சோறுண்டுட்டுப் போறயாக்கூ?”

    “ஆமாங்ண்ணா, நீங்க உண்டாச்சுங்களா?”

    “இல்லை, எனக்கு எங்கக்கா சாந்தாமணி ஒரு மணி வண்டி கெழக்க போனதுங் கொண்டு வருவா!”

    “சரீங்ண்ணா, அப்ப நான் போய்ட்டு வாறனுங்!”

    “இர்றா, நான் ஒரு கதை சொல்லுறேன், கேட்டுட்டுப் போவியாமா?”

    “சராங்கமா சொல்லுங்ண்ணா, நான் போகோணும்!”

    “உன்ன மாதரத்தான், ஒரு பையன் அவிங்க தோட்டத்துக்கு போயிட்டு இருந்தானாமா. அப்போ, போற வழியில ஒரு மண்ணாங்கட்டி இருந்துச்சாமா. அதைப் பாத்து இந்த பையன் கேட்டான், மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மழை வந்தா, நீ என்ன பண்ணேவேன்னு. அது சொல்ச்சாம், மழை வந்தா கரைஞ்சு போவேன்னு.

    செரீன்னு கேட்டுட்டு மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, எச்செலை ஒன்னு போற வழில கெடந்துச்சாம். இவங் கேட்டானாம், எச்செலை, எச்செலை காத்தடிச்சா நீ என்ன பண்ணுவேன்னு. அது சொல்லுச்சாம், காத்தடிச்சா நான் பறந்ந்ந்து போயிடுவேன்னு.

    செரீன்னு இதையுங் கேட்டுட்டு அந்த பையன் மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, ஒரு நாய்க்குட்டி ஒன்னு வாலை வாலை ஆட்டிட்டு, குழைஞ்சுட்டே இவங்கிட்ட வந்துச்சாம். அந்த நாய்கிட்டயும் இவங் கேட்டானாம், நாய்க்குட்டி நாய்க்குட்டி நீ என்ன பண்ணுவேன்னு. அதுக்கு அந்த நாய் என்ன சொல்லுச்சு தெரியுமாடா பழமா?”

    “தெரிலீங்ளே, நீங்களே சொல்லுங்க!”

    ”அந்த நாயி, ஒன்னுக்கு வந்தா பழமன் வாயில ஊத்துவேன்னு சொல்லுச்சாம்! ”, இப்படி சொல்லிவிட்டு பலமாக அஃகஃகாவென்று சிரிக்க ஆரம்பித்தான் சின்னமுத்து.

    இதைக் கேட்ட பழமனுக்கு ஒரே ஏமாற்றம், முகம் எல்லாம் சிவந்து பரிதாபமாக செய்வதறியாது, கண்ணீர் சிந்தியவாறு நின்று கொண்டிருந்தான். இதைப் பார்த்த சின்ன முத்துவுக்கும் மனம் வருத்தத்தில் ஆழ்த்தியது. உடனே, சமயோசிதமாக, இட்டேரி வேலிக்குள் பொளேரெனப் பாய்ந்து, அங்கே செக்கச் செவேல் எனச் சிவந்து பழுத்திருந்த இரண்டு கள்ளிப் பழங்களையும், வேலியில் இருந்த சூரிப் பழங்களையும் பறித்து பழமனிடம் கொடுத்து, அவனை தேற்றினான்.

    “இந்தாடா பழமு, இந்த ரெண்டு பழங்களையுமு உனக்கோசரமே, இவ்வளவு நாளுமு உட்டு வெச்சிருந்தேன் தெரியுமா? வாங்கிக்கடா!”

    “ம்ம்ம்… ம்ம்ம்… செரீங்க…ம்ம்!”

    சின்ன முத்துவும் சடாரெனச் சென்று, அங்கு குழியொன்றில் தேங்கியிருந்த தண்ணீரில் இரண்டு பழங்களையும் கழுவி வந்தான். பிறகு, அந்த இரண்டில் ஒன்றை சின்ன முத்துவின் எதிரிலேயே சுவைத்துப் பார்த்து, அது இனிக்கவும், பழமன் மனம் மாறி மகிழ்ச்சியில் ஒரு பாடலை முணுமுணுத்தவாறே மீண்டும் அவர்கள் வயல் நோக்கி நடையைக் கட்டினான்!

    பழமுன்னாப் பழம், எங்கூரு கள்ளிப்பழம்!
    எனக்காகப் பழுத்த, உப்பாத்துப் பெரியபழம்!!
    வாளவாடி, பூளவாடி, காணாத கள்ளிப்பழம்!
    சின்னவனே, பெரியவனே, உனக்கில்லை இந்தப்பழம்!!

    சூரிப் பழங்களையும், கள்ளிப் பழங்களையும் சுவைத்தவாறு, வயல் நோக்கிச் சென்று கொண்டிருந்தான் பாலகன் பழமன். சென்று கொண்டிருந்த இட்டேரியில் இருந்து பிரிந்து, சிறுகால்த் தடம் வழியாக அவ்ர்களுடைய வயலுக்குச் செல்லும் இடம் நெருங்க, அவனுள் இனம் புரியாத ஒரு அச்சம் மேலிட்டது.

    அந்த அச்சம் மேலிடக் காரணம், அவன் ஆறாம்மேடுகடந்துதான் அந்த சிறுகால்த் தடத்தை அடைந்தாக வேண்டும். ஆறாம்மேடு என்றால் பாலகனுக்கு ஒரே அச்சம். அவன், ஒரு நாள் அவனுடைய அப்பாருடன் வயலுக்கு வந்து கொண்டிருந்த போது, ஆர்வமிகுதியால் அவனுடைய அப்பாருடன் வினவினான்,

    “அப்பாரு, ஏன் இந்த எடத்தை ஆறாம்மேடு, ஆறாம்மேடுன்னு சொல்லிச் சொல்றாங்க?”

    “அதா, அது வந்து நம்மூரு மேக்கால வளவுல இருக்குற பெருமா கோயல்ல ஆறான், ஆறான்னு, ஆறுமுகம்ங்ற அன்னக் காவடி இருந்தான். அவன் ஊருக்குள்ள அன்னக்காவடி எடுத்து சோறுண்டுட்டு, ஊர்க் கோயலுகளுக்கு எல்லாம் சேவகம் செஞ்சிட்டு இருந்தான்.”

    “அன்னக் காவடின்னா என்னுங்க அப்பாரு?”

    “அதா, காவடி நொகத்துக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு குண்டாவுக, சங்கிலியில தொங்கிட்டு இருக்கும். அந்த சங்கிலியில மணியோசை சத்தம் வாற மாதர சலங்கை மணியெல்லாம் இருக்கும். அப்ப, ஆறான் ஊருக்குள்ள வரும்போது அந்த சத்தங்கேட்டு, ஊட்டை உட்டு வெளியில வந்து அவனுக்கு சோறு கஞ்சி ஊத்துவாங்க. அவனும், அந்த அன்னக்காவடியில இருக்குற குண்டாவுல அதை வாங்கி உண்டுட்டு பொழப்பு நடத்திட்டு வந்தான்!”

    “செரீங்க அப்பாரு!”

    ”அப்பிடியிருக்க, அவன் ஒரு நாளு இந்த இட்டேரி வழியா பூரண்டா பாளையம் பரமசிவங் கோயலுக்கு போயிட்டு இருக்குறப்ப, திடீல்ன்னு இந்த எடத்துல நெஞ்சு வலி வந்து உசுரை உட்டுட்டான். அதுனால, இந்த எடத்துக்கு ஆறாம் மேடுன்னு பேரு வந்ததுடா இராசா!”

    “அப்ப, ஆறானோட பேய் இங்க இருக்குமா அப்பாரு?”

    “நீ தெகிரியமா இருடா…அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லடா கண்ணூ!”

    இப்படியாக ஆறாம்மேட்டைத் தெரிந்து கொண்டதிலிருந்து இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், ஒரு வித அச்ச உணர்வுடனே செல்வான் பழமன். இன்றும் அவ்விதமாகவே, ஆறாம் மேட்டைக் கடந்து சிறுகால்த் தடம் வழியாக வயலுக்குள் நுழைந்தான். முதலில் வருவது, அவனுடைய பெரியப்பாவின் வயல்.

    வயலுக்குள், ஒரு பெரிய வேம்பு மரம் இருக்கும். அந்த வேம்பு மரத்தடியில் நாட்ராயன் சாமியும், அந்த சாமிக்கு நேர் எதிரே ஒரு வேலும் நடப்பட்டு இருக்கும். அந்த மரத்தடியில், பெரியப்பா பண்ணையில் வேலை செய்யும் தேவராசுவின் மனைவி முத்துலட்சுமி தன்னுடைய குழந்தையை, அந்த வேப்பமரத்தில் கட்டியிருந்த தொட்டிலில் கிடத்தி தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள்.

    ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
    சீராரும் பசுங்கிளியே தெவிட்டாத தெள்ளமுதே
    நேராக உறங்கிலையோ நிறையன்பு ஊக்கிலையோ
    ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

    இந்த பாடலையும் கேட்டவாறே, பாலகன் பழமன் பெரியப்பாவின் வயலைக் கடந்து அவனது வயலுக்குள் செல்ல முற்பட்டான். அப்பொழுது, இவன் தலை தெரியக் கண்டதும், அவனுடைய தோட்டத்து நாய் பேச்சி ஒரே ஓட்டமும் பாய்ச்சலுமாய் இவனை நோக்கி வந்தது.

    இவனுக்கு தன்னுடைய வயலுக்குள் வந்ததும் ஒரே குதூகலமும், பேச்சி வந்து கொண்டிருந்ததைப் பார்த்து, பிள்ளைப் பிறப்பு கண்ட தாய் போன்றதொரு உணர்வும் மேலிட்டது. அவனையறிமாலே, கீழ்க்கண்டவாறு கத்திக் கூச்சலிட்டான்,

    ஆத்தைக் கடந்துவந்தேன், மேட்டைத் தாண்டிவந்தேன்
    கம்பங்காடு பார்த்துவந்தேன், முத்தக்கா பாட்டு கேட்டுவந்தேன்
    பெரியப்பங் களத்துமேட்டு, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன்
    பாத்து வாரமல்லோ ஆச்சி!! வந்து தாவிக்கோடா பேச்சி!!

    தனது வயலுக்குள் மகிழ்வாய் நுழைந்த பாலகனைக் கண்டு, கூரைச் சோறு கண்ட காகம் போன்றதொரு விரைவில், அவனது செல்ல நாய் பேச்சிஓடோடி வந்தது. தன் வயலுக்குள் காலடி வைத்த குதூகலத்துடனும், தன் செல்லத்தைக் காணுகிற மகிழ்வுடனும் பேச்சியை நோக்கி குதியாட்டம் இட்டவாறு ஓடுகிறான் பழமன்.

    எதிரில் ஓடி வந்த பேச்சி, வாலை வாலை ஆட்டியவாறு முகமலர்ச்சியாய் வந்த வேகம் குறையாமல் முன்னங் கால்களை முன்னீட்டி, பின்னங் கால்களில் சிறுவன் பழமனின் உயரத்திற்கு நின்று, தனது முன்னங் கால்கள் இரண்டையும் அவன் மேல் வாஞ்சையாய்ப் பதிக்க, இவன், “என்றா பேச்சி, என்னடா பண்ணிட்டு இருக்கே? அப்பாரோட ஒத்தைச் செருப்பை எங்கடா கொண்டு போயி ஒளிச்சு வெச்சே படுவா ராசுகோலு?” என்றான் சிரித்தபடியே.

    பேச்சியும், நாக்கை வெளித் தள்ளிக் கொண்டு, மூச்சிரைத்தவாறு தலையை மேலும் கீழும் சில முறை அசைத்து விட்டு, குடுகுடுவென அருகில் இருந்த கம்பங் காட்டிற்குள் சென்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஒத்தைச் செருப்பைக் கவ்வியவாறு வாலை ஆட்டிக் கொண்டு வந்து, குழைந்து நின்றது. இவனுக்கோ அது கண்டு, மட்டில்லாத மகிழ்ச்சி.

    “அப்பாரய்யா! அப்பாரய்யா!! காணாமப் போன உங்க செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டான் பேச்சி, உங்க செருப்பு கெடச்சிருச்சீ!” என்று கத்தியபடியே, அவனது வயலில் இருக்கும் இரட்டைச் சாய்ப்பு சாளையை நோக்கி ஓடினான். பேச்சியும் அவனுடன் ஓடியது. ஆனால் அங்கு அப்பாரய்யனைக் காணாமல் ஏமாற்றமுற்றான் பாலகன். ”என்றா பேச்சி, அப்பாரய்யனைக் காணம்?” என வினவியபடியே, தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலனிடம் சென்றான்.

    “ஏனுங்க எங்க அப்பாரய்யன்?”

    “கண்ணூ, அப்பாரய்யன் சிக்கல்நூத்து போன அப்பத்தாவைக் கூட்டியாறதுக்கு நம்ம சவாரி வண்டீல மயிலைகளைப் பூட்டீட்டி போயிருக்காங்க கண்ணூ. இருட்டு கட்டுறதுக்குள்ள வாறமின்னு சொல்லிட்டுப் போனாங்க!”

    “ம்ம்… நேத்தைக்கு ஊருக்குள்ள வந்த அப்பாரய்யன் ஒத்தைச் செருப்பை பேச்சி கொண்டு போய் எங்கயோ போட்டுட்டான்னு சொல்லுச்சு. நாங் கேட்டதுமே, பேச்சி போயிக் காட்டுக்குள்ள இருந்த செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டானுங்ண்ணா!”

    “அவன் செரியான குறும்பு கண்ணூ, வாய்க்கா மேட்டுல வாறவிங்க போறவிங்களை எல்லாம் கடிச்சிப் போடுறான்!”

    “ஏண்டா பேச்சி அப்பிடியெல்லாம் பண்றே?”

    “ப்ளொள், ப்ளொள்” என்று செல்லங் கொஞ்சியது பேச்சி.

    “செரிச்செரி, வாடா சாளைக்கு போகுலாம்!”

    “ப்ளொள்!”

    “அண்ணா, நான் சாளைக்கு போயி பேச்சிக்கி சோறு போட்டுட்டு வாறன்!”

    “செரி கண்ணூ, பாத்துப் போ, எல்லாம் இப்பத்தான் தண்ணி பாஞ்சி ஈரமாக் கெடக்குது!”

    சிறுவன் பழமனும், செல்லப் பிராணியான பேச்சியும் வயக்காட்டில் இருந்த பொழிகளின் மீது ஓடுவதும், நடப்பதுமாக மீண்டும் சாளைக்கே திரும்பி வந்தார்கள். சாளை இரட்டைச் சாய்ப்பு கொண்டது, பக்கவாட்டில் கால்நடைகளுக்கு என ஒரு ஒத்தைச் சாய்ப்பும் இறக்கப்பட்டு இருக்கும். இவன் முன்வாசலுக்கு சென்று பார்க்கவே, முன்கதவு பூட்டப்பட்டு இருந்த்து. அது கண்டு திண்ணையின் மேல் ஏறி, மேலே உள்ள சட்ட்த்தில் வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து, கதைவைத் திறந்து கொண்டு சாளைக்குள் சென்றான். ஆனால், பேச்சி மட்டும் வாயிற் படியிலேயே வாஞ்சையுடன் குழைந்து கொண்டு நின்றது.

    உள்ளே சென்றவன், பேச்சிக்கென்று வழமையாக வைக்கப்பட்டிருக்கும் தூக்குப் போசியில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். அதில், சாமைச் சோறும், மோரும் கலந்த கூழ் இருந்தது கண்டு உற்சாகமடைந்து, தூக்குப் போசியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். பேச்சியும் அது கண்டு துள்ளிக் குதித்தது. நேராக பக்கவாட்டில் இருந்த சாளைக்குள் சென்று, பேச்சிக்கென வைக்கப்பட்டு இருந்த தட்டில் சாமைக் கூழை ஊற்றி, “பேச்சி வாடா, வா!” என்றழைத்தான். பின், அவனுக்குப் பிடித்த அவனுடைய நுங்கு வண்டி அங்கு இருக்க்க் கண்டு, கவட்டிக் கோலால் அதை உருட்டி விளையாட ஆரம்பித்தான் பழமன்.

    பேச்சி, நாக்கால் நக்கி கூழைப் பருகுவதும், வாஞ்சையுடன் எசமானனின் அருகே வந்து வாலை ஆட்டிக் குழைவதும், மீண்டும் வந்து கூழைப் பருகுவதுமென இருந்தது. அதற்குப் பசியாறவும் வேண்டும், அதேவேளையில் வந்த எசமானனும் தோழனுமாய் ஆனவனுடனும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம்.

    அது கண்டு, “டே பேச்சி, நான் உன்னிய உட்டுப் போட்டு எங்கியியும் போகுலடா, போ, பூராக் கூழும் இருந்து குடிச்சிட்டு வாடா!” என்றான் பழமன். ஆனாலும், அது இவனிடம் வந்து இரண்டு சுற்று சுற்றுவதும், பிறகு கூழ்க் குடிக்கப் போவதுமாகவே இருந்தது.

    இவன் சாளைக்கு முன்னால் இருந்த களத்து மேட்டில், நுங்கு வண்டியை உருட்டி விளையாடுவதில் மும்முரமானான். களத்துமேடும், அதற்கேற்றாற்ப் போல் சாணத்தால் மெழுகி, வெகுசுத்தமாக இருந்தது. மனம் முழுக்க குதூகலமே குடிகொள்ள, தென்னை மற்றும் இலவம்பஞ்சு மரங்கள் அசைந்தாட, தென்றல் தவழ்ந்து வர, இயற்கையின் வெண்சாமர வீசலில் மனம் விட்டு, பாட ஆரம்பித்தான் பழமன்.

    வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
    வெரசக்கூடி வேகம் போற வண்டி

    மாமனுக்கு பீடிவாங்கப் போகும் வண்டி
    மேடுபள்ளம் கடந்துநல்லாப் போகும் வண்டி
    கல்லமுட்டா வாங்கநல்லாப் போகும் வண்டி
    கவிட்டியால தள்ளநல்லாப் போகும் வண்டி

    வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
    வெரசக்கூடி வேகம் போற வண்டி

    ஆத்தா பலகாரம் சுமக்கும் வண்டி
    தோப்பு காயெல்லாம் சுமக்கும் வண்டி
    நோம்பிக்கு சிக்கநூத்து போற வண்டி
    மயிலைகூடப் போட்டி போடும் வண்டி

    வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
    வெரசக்கூடி வேகம் போற வண்டி

    வண்டி ஓட்டியதில் சலித்துப் போன பழமன், தாகம் தணிக்க மீண்டும் சாளைக்குள் சென்றான். அவனது அப்பத்தா எப்போதும் வைத்திருக்கும் கம்பங்கூழ்ப் பானையைத் துழாவி, அதில் இருந்து கொஞ்சமாக கம்பந்தண்ணீரைச் சிறுதாழியில் ஊற்றி, அதில் சிறிதளவு உப்பும் கலந்து, பின்னர் திண்ணையில் அமர்ந்து மாந்தினான். பழமன் மாந்தும் அழகினை வாலை ஆட்டியபடியே, கண் பிறழாமல் ஒரு விதமான லயிப்பில் ஆழ்ந்து, நெகிழ்ந்து, இரசித்துக் கொண்டு இருந்தது பேச்சி!

    Share
  • சொல் ஒன்று வேண்டும்!

    தி. சுபாஷிணி

    அது ஒரு குக்கிராமம். அங்கு செல்லவே இரண்டாம் ஜாமம் ஆயிற்று. நேராக அந்தக் கோயிலுக்குத்தான் சென்றோம். என்னுடன் மன்னிக்கவும் என்னைக் கூட்டி வந்தவர்கள் என் மாமியார், அவரது தம்பி, தங்கை ஆவார்கள். இரவை அங்குதான் கழிக்க வேண்டும். கோயிலில் சுற்றி ஓலைக் கூரை வேய்ந்த பிரகாரம். அதில்தான் அனைவரும் படுத்துறங்க வேண்டும். எங்களைப் போல் இன்னும் பத்து இருபது பேர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். என்னுடன் வந்தவர்கள் அப்படியே படுத்தனர். அவர்கள் உறங்கினார்களா? உறங்கியதுபோல் விழித்திருந்தார்களா என்பதை நான் கவனிக்கவில்லை. அதில் என் மனமும் செல்லவில்லை. நான் முற்றிலும் என்னைச் சுற்றியிருந்த இருட்டுடன் இருந்தேன். என்னவோ அந்த வெட்டவெளி இருட்டு முதலில் பயமுறுத்தினாலும், நேரம் செல்லச்செல்ல பழகிவிட்டது.

    எனக்கு அது தோழிபோல் என்னுடன் உறவாடயத்தனித்தது. இரவின் மடி நம் தாய் மடி போன்றது. அது தன் மடியில் நம்மைப்போட்டு, தலை வருடிக் கொடுக்கும். அது என் தலைவருடியது. அது என்னை வருட வருட என் கண்கள் அருவியாய்க் கொட்டியது. எங்கிருந்து இவ்வளவு கண்ணீர் என்றே புரியவில்லை. காதருகே குனிந்து வந்து ‘அழாதே’ என்றது. என் அம்மா பேச்சைக் கேட்காத பலனை இப்போது அனுபவிக்கிறேன் என்றேன். ‘கலக்கமுறாதே! எல்லாம் சரியாகிவிடும், கண்ணுறங்கு’ என்றது அது. மெல்ல மெல்ல இமை கனத்தது. தூக்கம் தழுவியது. அதன் பாதுகாப்பில் கண்ணயர்ந்தேன். இருட்டும் மெல்ல மெல்ல விலகி விடியலின் நம்பிக்கை மலரத் தொடங்கியது. பிரிந்தும் பிரியாத இருளில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் கலக்கமில்லை, தயக்கமில்லை, மயக்கமில்லை. அங்கு படுத்துறங்கியவர்கள் ஒவ்வொருவராய் எழத் தொடங்கவே, நாங்களும் எழுந்தோம். கோயில் முன் இருக்கும் குளத்தில் குளிக்கக் கிளம்பினோம். குளத்தில் இறங்கி தலை அமிழ்த்தினேன். உடல் அமிழ அமிழ உடலும் உள்ளமும் குளிர்ந்தது. இறுதியில் மூன்றுமுறை அமிழ்ந்து எழச் சொன்னார்கள் என் மாமியார். அப்படியே செய்தேன். ஒரு பதில், ஒரு சொல் இதுவரை அவர்களிடம் பேசவில்லை.

    அது அவர்களைச் சுட்டு இருக்கும். அது அவருடைய முகத்தில் தெரிந்தது. என்னால் அதற்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. ஈரத்துணியோடு குளத்திலிருந்து வெளிப்பட்டு குளக்கரையில் விற்கும் அர்ச்சனைத் தட்டு ஒன்றை வாங்கினேன். பணம் கொடுக்க அவர்கள் முன் வந்தார்கள், மறுத்துவிட்டேன். நானே 50 ரூபாய் கொடுத்து அதைப் பெற்றுக் கொண்டேன். தட்டில் 51 ரூபாய் தட்சிணை வைக்கச்சொன்னார்கள். பணத்தை வைத்தேன். அனைவரும் ஈரத்துணியை மாற்றிக் கொண்டோம். கோயிலுக்குள் சென்றோம். கர்ப்ப கிரகத்திலுள்ள சாமியை தரிசித்தோம். பின் நாங்கள் யாரைப் பார்க்க வந்தோமோ அவரைக் காண கோயில் பிரகாரம் வந்தோம். எங்களுக்கு முன் 10 பேர்கள் நின்றிருந்தனர்.

    ஒவ்வொரு முகம் ஒவ்வொரு விதமாய் உணர்வுகளை உமிழ்ந்து கொண்டிருந்தன. பதினோராவது ஆளாய் நாங்கள் நின்றோம். ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். அவர் அருகில் சற்றே 2 அல்லது 3 வயது குறைவில் ஒரு அம்மா அமர்ந்து இருந்தார்கள். அவருடைய மனைவி என்றனர். இந்தக் கோயிலில் குடியிருப்பது 7 கன்னிகைகள் என்றும் அந்த ஏழு கன்னிகைகளும் இவர் மீது வந்தமர்ந்து, அவரது வாக்கு மூலம் நம் குறைகளை தீர்ப்பார் என்றனர். மேலும் காணாமல் போன பொருட்கள், யார் எடுத்துச் சென்றது?, அவை கிடைக்குமா கிடைக்காதா என்பதிலிருந்து மக்கட்பேறு உண்டா, அதற்கு நிவர்த்தி உண்டா என்பது வரை அவர் சொல்லும் ‘குறி’யில் தெரிந்து விடும் என்றனர். நமக்கு அதில் ஐயம் இருப்பின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த அம்மா அவர்களிடம் கேட்டுச் சொல்வார்கள். மேலும் பலருடைய அனுபவங்கள் எல்லாம் வரிசையில் நிற்கும்போது செவிகளில் விழுந்தன.

    என் கவனம் முழுவதும் அந்த தெய்வத்திடம் இருந்தது. அன்று அம்மா எவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னார்கள். “உனக்கு திருமண வயதே வரவில்லை. சிறுபிள்ளைத்தனமாய் இப்படி அவர்தான் வேண்டும் என பிடிவாதம் பிடிக்காதே. அவர்கள் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. படிக்காத குடும்பம். பையனுக்கும் நிரந்தர வேலை இல்லை. நீயோ பல வேலைகள் தெரியும் என்கிறாய். ஏதாவது ஒரு வேலையில் தொடர்ந்து வேலை பார்த்திருக்க வேண்டாமா! உன்னை பெரியம்மாவுடன் இருக்க அனுப்பியதே அங்கு போய் உலக விவரம் கற்றுக் கொள்வாய் என்று. இம் முடிவை அவர்களிடம் கூறினால் பெரியம்மாவின் மனம் எப்படிப் பாடுபடும்?” என்று அம்மா மனம் நொந்து கூறியதெல்லாம் புத்திக்கு எட்டவில்லை. பிரகாரத்தில் வரும் வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக மேலே விழுகின்றது.

    ‘பெரியம்மா!’ நினைப்பு வந்ததும், அழுகைப் பொங்கிப் பொங்கி வந்தது. பெரியம்மா… நிஜம்மாலும் அவங்க பெரியம்மாதான்… தன் குழந்தைகளுக்கு இணையாக என்னையும் வளர்த்தார்கள். நானும் அவர்கள் குழந்தைகளை மிகவும் பத்திரமாய் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி என் பாதுகாப்பில் பல வாரங்கள் கூட வீட்டில் விட்டுச் செல்வார்கள். ஷம்மிம்பானு (அதுதான் என் உண்மையான பெயர். திருமணத்திற்குப்பின் மல்லிகாவாக மாறிவிட்டேன்). உனக்கு இன்னும் இரண்டு வருடத்தில் திருமணம் செய்யணும். பார்! இதெல்லாம் உனக்காகத்தான் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று ஒரு சிறிய நகைப்பெட்டியைக் காண்பித்தார்கள். ஏதேனும் நல்ல பொருட்களைப் பார்த்தால் இது! எங்கள் ஷம்மிமுக்கு என்று எடுத்து வைப்பார்கள். ஐயோ! பெரியம்மா! உங்களை நான் புரியாமல் போய் விட்டேனே! பெரியம்மா!

    நீங்கள் என்னை அம்மாவிடம் அனுப்பாமல் இருந்தது, அனுப்பினாலும் ஓரிரவு கூட அங்கு தங்க விடாதது ஆகியவையெல்லாம் நீங்கள் என்மேல் வைத்திருந்த அன்பு என்று எப்படி பெரியம்மா தெரிந்து கொள்ளாமல் போனேன்! அதை நீங்கள் அடிமையாய் என்னை நடத்துவதாகவும்; என்னுடைய சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டதாகவும் நினைத்து, ஏதோ விடுதலை பெற்றுப் போவதாய் நினைத்து…! காதலுக்கு கண் இல்லை என்பதை இப்போது புரிந்து கொண்டேன். எனினும் நான் எடுத்த வாழ்க்கை என்று அதில் வைராக்கியமாய் இருக்கிறேன் பெரியம்மா. இதோ! இந்த இடத்தில் ஒரு பழியை சுமந்து கொண்டு நிற்கின்றேன் என்றால் உங்கள் உங்கள் மனம் எப்படி வேதனைப்படும்.

    பெரியம்மா! எனக்கு அம்மாவிற்கும் மேலாய் இருந்தீர்கள். எப்படி வளர்த்தீர்கள்! தலையில் முக்காடு விலக அனுமதிக்கமாட்டீர்கள். அதிர்ந்து பேச, அதிர்ந்து நடக்க ஒப்பமாட்டீர்கள். அனைவரையும் நேசிக்கக் கற்றுக் கொடுத்தீர்கள். அம்மாவும் நீங்களும் எந்த நிலையிலும் பொய் சொல்லுதலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படுத-லும் கூடாது என்றல்லவா என்னை வளர்த்தீர்கள். பெரியம்மா! இந்த கணம்வரை நான் உங்கள் பெண்ணாகத்தான் இருக்கின்றேன். ஆனால் இவர்கள் பெரும்பழி சுமத்தி விட்டார்கள் பெரியம்மா!

    திருமணத்திற்கு பின்தான் எனக்குத் தெரியவந்தது. என் கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு என்று. அவரது அப்பாவும் குடிப்பாராம். என்ன சொல்வேன் பெரியம்மா?- எதை எப்படிச் சொல்வேன்! அவசரப்பட்ட வாழ்க்கை, அவசரத்தில் அள்ளித் தெளித்த நீர் போல்தான் ஆழமில்லாது இருக்கின்றது. தரையும் நனையவில்லை. தெளித்த கையும் நனையவில்லை. அவர் கொண்டு வரும் சம்பளம் பத்தவில்லை. பாதி நாட்கள் வேலைக்கே போவதில்லை. மதுபானக் கடை தான் கதியென்று கிடக்கும் வயதா பெரியம்மா! அங்குதான் மாலையில் அவரது நட்பு வட்டம் கூடுகிறது. இரவு முழுவதும் அடியும், வாயில் வரக்கூடாத வார்த்தைகள் எல்லாம் வந்து விழுகின்றன. வெளியில் என்னை அனுப்பாது வீட்டுக்குள் பொத்தி பொத்தி வளர்த்தீர்களே பெரியம்மா! உங்களுக்குத் தெரியுமா! நான் எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸில் வேலைக்குப்போய்க் கொண்டு இருக்கின்றேன். அதுதான் நம் சமீரா காலேஜுக்குப் போகும் போது நானும் அவ்வழியில்தான் போகிறேன். நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டே செல்கிறோம். ஆம்! அவள் ஆட்டோவில் செல்கிறாள். நான் சைக்கிளில் செல்கின்றேன். அதுசரி இங்கு இந்த நிலை ஏன் என்று கேட்கிறீர்களா! முழுக்க நனைந்தாகிவிட்டது இனி முக்காடு எதற்கு! சொல்வது என தீர்மானித்தபின், எல்லாவற்றையும் சொல்வதுதானே நியாயம்.

    பெரியம்மா! என் மாமியாரின் தங்கை இருக்கிறார்களே, (அவர்களும் என்னுடன்தான் இந்த வரிசையில் நிற்கிறார்கள்) அவர்கள் பூர்விக நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்று தன் அக்காவான என் மாமியாரிடம் உதவி கேட்டு போன மாதம் வந்தார்கள். நான், மாமியார் எல்லோரும் வீட்டில் இருக்கும் நகையை அடகு வைத்து ஒரு லட்சம் கொடுத்து உதவினோம். உடன் பிறப்பிற்குள் இந்த உதவிகூட இல்லைன்னா எப்படி பெரியம்மா! அதுவும் என் திருமணத்திற்கு அவர்கள் பணம் கொடுத்து உதவினார்களாம். அது முடிந்த கதை. அதன்பின் அவர்கள் வீட்டு நகைளை விற்றுத் தரச் சொன்னார்கள். நானும் மாமியாரும் அவர் இருக்குமிடம் சென்று, அங்குள்ள சேட்டுக் கடையில் விற்று மொத்தம் 46000 ரூபாய் வாங்கிக் கொடுத்துவிட்டு, பத்திரமாக அவர்களை அவரது வீட்டிற்கு கொண்டு விட்டு விட்டு நாங்கள் இங்கு கிளம்பி வந்துவிட்டோம். பின் நான்கு நாட்கள் போயின. என்னுடைய இளைய மாமியாரிடமிருந்து போன் வந்தது. என் மாமியார் முகம் மிகவும் கருத்து சிறுத்துப் போயிற்று. சரி. அவர்கள் அக்கா தங்கைக்குள் ஆயிரம் இருக்கும் என்று நான் விட்டு விட்டேன்.

    இரண்டு நாட்கள் கழிந்தன. நான் என் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நாட்களும் என் கணவர் குடிக்காது, வேலைக்குப் போய்வந்து கொண்டிருந்தார். மூன்றாவது நாள் நான் வேலையிலிருந்து வரவும் என்மாமியார், கணவர், என் மாமனார், நாத்தனார் ஆகிய நால்வரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். நான் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் பேச்சை நிறுத்தினர். என்னையே அனைவரும் பார்த்தனர். நானும் விளையாட்டாக,
    “என்ன அத்தை! ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் வந்ததும் நிறுத்தி விட்டீர்கள்!” என்று கேட்டேன்.

    அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு இருந்தனர். பின் மாமனார்தான் பிரச்சனையைச் சொல்லத் தொடங்கினார். மல்லிகா! மருமகளே! நாங்கள் உன்மேல் எந்த தவறையும் பழியையும் சுமத்தவில்லை. ஆனால் இப்படியொரு காரியத்தை உன்னுடைய அத்தையின் தங்கை லல்லி கூறுகிறாள். இதை எப்படி உன்னிடம் கூறுவது என்று விழித்துக் கொண்டிருக்கின்றோம்.

    “அப்படியென்ன பெரிய பிரச்சனை மாமா! ஏதாஇருந்தாலும் சொல்லி விடுங்கள்” என்றேன் நான். “சொல்ல நாக்கூசுகிறது அம்மா! நீ லல்லி விட்டுக்குப் போயிருந்தபோது அவர்கள் வைத்திருந்த பணத்தில் 4000 -ரூபாய் காணவில்லையாம். உங்கள் மருமகள் வந்து போனதற்குப் பின்தான் காணவில்லை என்று அடித்துக் கூறுகிறாள் அம்மா”. எனக்கு ஒரு நிமிடம் பெரியம்மா என் மூச்சே நின்று விட்டது. என் இஷ்டப்படி திருமணம் செய்து கொண்டேன் என்பதைத் தவிர வேறு ஒரு தவறும் செய்ததில்லை பெரியம்மா.

    அல்லா சத்தியமா சொல்றேன் பெரியம்மா! இவங்க இப்படியொரு பழியை என்மேல் போடுவாங்கன்னு நினைக்கல. அவங்க என் கம்பெனி வாசலில் பைத்தியம் மாதிரி நின்னுகிட்டு இருந்தாங்க பெரியம்மா! காலையிலிருந்து சாப்பிடலை மல்லிகா! வீட்டை ஆரம்பித்துவிட்டேன். எப்படி முடித்து சமாளிக்கப் போறேன்னு தெரியலைன்னு புலம்பினாங்க. நான்தான் சமாதானம் பண்ணி, சாப்பாடு வாங்கி சாப்பிடச் சொல்லி அத்தைகிட்ட பேசி கடனுக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்து எல்லாம் பண்ணினேன். இவ்வளவு ஏற்பாடு பண்ணுகிறவங்க எங்கேயாவது 4000 ரூபாயை எடுப்பாங்களா! நான் உறைந்து போய் விட்டேன் பெரியம்மா! ஒரே வார்த்தைதான் சொன்னேன். “என்னை எங்க அப்பா அம்மா, பெரியம்மா அப்படி வளர்க்கலை. அத்தை! மாமா! நீங்க எதிர்பார்க்கின்ற மாதிரி சீர் செனத்தி கொண்டு வரலைதான. ஆனால் எங்க அப்பா அம்மா உண்மையையும் நேர்மையையும் அன்பையும்தான் சீராக கொடுத்திருக்காங்க. எல்லா மதமும் அதைத்தான் சொல்லுது என்று சொல்லும்போது என் இரண்டரை வயது குழந்தை ஷாலினி வந்தாள். “அம்மா” என்று கட்டிக் கொண்டாள். அவர் கும்பிடும் நடு வீட்டு சாமி எதிரில் என் குழந்தை தலையின் மேல் சத்தியம் செய்தேன் பெரியம்மா “எவ்வளவு தாழ்ந்தாலும் திருடி என் வயிற்றை வளர்க்க மாட்டேன். நான் அந்தப் பணத்தை எடுக்கவில்லை” என்று.

    உடனே என் மாமியார், “அய்யோ! குழந்தைமேல் சத்தியம் பண்ணாதே குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும்” என்று அலறினாள். “ஏன் அத்தை நீங்க பயப்படறீங்க? நான் பொய் சொன்னால்தான் குழந்தையை பாதிக்கும். நான் ஒருபோதும் அந்த இழிவான செயலைச் செய்யமாட்டேன். உங்களுக்குத்தான் தெரியுமே எனக்கு உரிமையான கணவன் பர்ஸிலிருந்தே எடுக்க மாட்டேன்”. நான் சலனமே இல்லாது அன்றைய வேலையை செய்யப் போய்விட்டேன். ஆனால் என்மேல் பழி போட்டாங்களே! அவங்க மேல் எவ்வளவு இரக்கப்பட்டு எல்லாம் செய்தோம். ஏன் இந்த நிலை எனக்கு என்று யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.

    மறுநாள் கம்பெனிக்கு போன் வந்தது. நீ மாலையில் சீக்கிரம் புறப்பட்டு வா. லல்லி அத்தை வீட்டுக்கு வந்திருக்காங்க. நாங்கள் சென்றமாதம் வேலூர் கிட்ட ஒரு கிராமத்தில் ஒரு பழங்காலத்துக் கோயில் ஒன்று உண்டு. அங்க என் கணவரின் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்ட அங்குள்ள பூசாரியிடம் குறி கேட்கலாம் என்று என்னை என் மாமியார் கூட்டிச் சென்று இருந்தார்கள். சென்ற மாதம் முழுவதும் என் கணவர் திமிரில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டார். பாவம்! பாழும் மனசு அம்மாவிற்கு, என்னசெய்ய! அவனுக்கு நேரம் சரியில்லை அதான் என்று புலம்பவே அங்கு சென்றிருந்தோம். ஆனால் அங்குபோய் அவர் முன் பிரச்சனையை சொன்னவுடனே அவர் கூறிவிட்டார். உன் பையன் சோம்பேறி. முதலில் வேலைக்குப் போகச் சொல்லு. அவன் நீ இருக்கும் தைரியத்தில் இப்படிச் செய்கிறான். நீதான் கெடுக்கிறாய். அடுத்த மாதம் வா. ஒரு சாமியாரிடம் அனுப்புகிறேன். அவர் முடிகயிறு போட்டு விடுவார். அதன் பின் அவன் குடித்தால் அவனுக்கு மரணம்தான் என்று சொல்லி அனுப்பி விட்டார். எனக்கு மனத்திற்குள் சந்தோஷம். இப்போதாவது அத்தை உண்மையை உணருவார்களா! குடிப்பதற்கு இவங்களே பணம் கொடுத்து விட்டு, கலாட்டா பண்ணும்போது புலம்புவார்கள்.

    “அந்த வேலூர் சாமி கிட்ட உன்னைக்குறி கேட்கக் கூப்பிடுது அவர் நீ எடுக்கலென்னு சொன்னால்தான் நம்புவாங்களாம்” என்றது அந்த போன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த 4000த்தில் நாம் அப்படி என்ன செய்துவிடப் போகிறோம். ஒரு மாதம் உழைத்தால் இதைவிட ஒன்றரை மடங்கு சம்பளம் எனக்கு. மடியில் இருந்தால்தானே கனம். என்ன! நல்லவேளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. கம்பெனிக்கு லீவு போட வேண்டாம். குழந்தை ஷாலினியை என் நாத்தனாரும் அவரும் பார்த்துக் கொள்ளட்டும் என யோசனை ஓடியது.

    வீட்டில் போனதும், மாமியார் முகம் வாடியிருந்தது. நம் மருமகளை வீணாகப் பழி போடுகிறாளே என்று. ஆனால் லல்லி அத்தையோ, வந்ததும் வராததுமாக கிளம்பு கிளம்பு நான் உன்னை நம்பத்தயாராக இல்லை. அந்த சாமிக்கிட்ட வா! அது உன்னை காட்டிக் கொடுத்து விடும் என்று குதிகுதின்னு குதித்தாள். நான் பேசவே இல்லை பெரியம்மா! முந்தின இரண்டு நாட்களாக ஷாலினிக்கு மூச்சிரைப்பு. ஆஸ்பத்திரிக்குப் போய், இராத்தூக்கம் முழித்த அலைச்சல். என் உடம்பும் முடியலை ‘அம்மா’ என்று அம்மாவின் மடியில் படுத்துவிட மாட்டோமா என்று இருந்தேன் பெரியம்மா! தவறு செய்யாவிட்டாலும் இப்படி அவமானம் ஏன் வருகிறது. நம் குரானில் இருக்கிறதா சொல்லுங்கள் பெரியம்மா! என் விதியை நொந்து கொண்டே கிளம்பினேன். பெரியம்மா! நான் முந்தாநாள் மதியம் சாப்பிட்டது. இன்னமும் ஒரு சோற்றுப் பருக்கைக்கூட உள்ளே போகவில்லை. என்னதான் அறிவு தைர்யப்படுத்தினாலும், மனசு புடுங்கி, வயிற்றில் ஒரு குமட்டல் இருக்கிறது பெரியம்மா! அந்தக் குமட்டல் இந்த சன்னிதானத்தில் கொஞ்சம் அடங்கி இருக்கு பெரியம்மா!

    இதோ! என் கண்முன் கோயிலின் கர்ப்பகிரகத்தில் அந்த கன்னித்தெய்வங்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் பெரியம்மாவாகத்தான் தெரிகிறார்கள். தாயைவிட வேறு யாருக்கு குழந்தையைத் தெரியும். வாய் பெரியம்மா! என்று அரற்றுகிறது.

    அதற்குள் என் முறை வந்துவிட்டது. அந்த பூசாரிமுன் என்னை அமரச் சொன்னார்கள். என்னுடன் வந்தவர்கள் என் பக்கவாட்டில் அமர்ந்து இருந்தனர். நான் என் மனதை ஒரு நிலைப்படுத்தி அவரை என் தாயாக எண்ணிக் கும்பிட்டேன். நான் அந்தப் பணத்தை எடுக்கலை சாமி! நீதான் அவர்களுக்குத் தெரியப்படுத்தணும்னு வேண்டிக்கிட்டேன்.

    சாமியார் புன்னகைத்தார். தட்டில் இருக்கும் தேங்காயை உடைத்தார். “அம்மா! பெற்ற குழந்தை மேல் சத்தியம் பண்ணியுமா அவர்கள் உன்னை நம்பாது இங்கு என்னிடம் அழைத்து வந்திருக்காங்க. என்னம்மா! நான் உனக்கு உன் பெரியம்மாதான். சந்தேகம் வேண்டாம். பெரியம்மாவின் காலடியில் உன்னை அர்ப்பணித்து விட்டாய். கலங்காதே! இந்தப் பணம் அவர்களே செலவழித்துவிட்டு, அந்த நாலு சுவத்துக்குள் திட்டம் போட்டு நடத்தி விட்டு, பழியை உன்மேல் போட்டு விட்டார்கள். உனக்கு நான் உடனிருப்பேன் என்றும். தாய்முன் மதம் ஒன்றுமில்லையம்மா. போ. உனக்கு அவங்களை சபிக்க வேண்டுமென்றால் என் கோவில் முன் உள்ள மண்ணை அள்ளித் தூவி கோபத்தைத் தீர்த்துக்கொள்.”

    அய்யய்யோ! சாமி! வேண்டாம் சாமி! எனக்கு வேண்டியது நான் எடுக்கலை என்கின்ற சொல் ஒன்றுதான். அதை அவர்களுக்கு நிரூபிக்கணும். அவ்வளவுதான் சாமி! எப்படிசாமி. என் பெரியம்மாவிடம் புலம்பியதை நீங்கள்…

    போ தாயி! எல்லாம் நல்லபடியா நடக்கும். எப்போதும் இப்படியே தெளிவா இரு தாயி. உன்ன இந்த கன்னியம்மா எப்போதும் காப்பாத்துவாள். என்று கூறி ஆசி வழங்கினார். எனக்கு அப்போதுதான் நிம்மதி வந்தது. நான் அவரை வணங்கி எழுந்து அவ்விடத்தை விட்டு வருவதற்குள் லல்லி அத்தையைக் காணோம். என்ன அவளையா பார்க்கிறாய்! அவ ஓடிப் போய்ட்டாம்மா! அவளால் எப்படி நிக்க முடியும். வா! நாம் வீட்டிற்குப் போகலாம். என் மேல் உனக்கு வருத்தம் இல்லையே. நான் என்ன சொல்லட்டும்? எதுவும் பேசவில்லை. நான் வாய் திறந்து பேசியே ஒன்றரை நாட்களுக்கு மேலாகி விட்டது.

    அனைவரும் வீடு செல்ல பஸ்ஸில் அமர்ந்தோம். என் மாமியாரின் தம்பி அவருடைய குடும்ப பிரச்சனைக்கு குறி கேட்க வந்திருந்தார். அதற்கு ஒரு தீர்வும் அவருக்கு கிடைத்தது. அவர், அவர் பிரச்சனையில் மூழ்கியிருந்தார். அவரும் என்னிடம் எதுவும் பேசவில்லை. என்மேல் விழுந்த பழி எப்படி விலகப் போகிறது என்று இந்தக் கோயிலுக்கு வரும்போது இருந்தது. அந்த சஞ்சலமும் இல்லை. பஸ் புறப்பட்டது. ஒரு மணி நேரம் கழிந்தது. அடடா! நான் குளித்துக் களைந்த ஆடையை அங்கேயே விட்டுவிட்டது தெரிந்தது. சரி போகட்டும். அந்த பழையதுணி மாதிரி என் பழியும் நீங்கிவிட்டது. அதற்காக சங்கடப்பட வேண்டாம்.

    இந்த மனசு அமைதியாயிற்று. அதோடு நிற்கிறதா! அறிவு விழித்துக் கொண்டது. இந்த சாமி, சாமியார் எல்லாம் செய்தித்தாளில் வரும் செய்திபோல் ஏமாற்று வேலையாய் இருந்திருந்தால்…. அம்மாடி என நான் கத்தவும், பஸ் எதிரில் சாலையை திடீரென்று கடந்த ஆட்டுக்குட்டிக்காக பிரேக் போடவும் சரியாக இருந்நதது. நல்லவேளை அந்த சத்தத்தில் என் சத்தம் எடுபடவில்லை.

    சரி! எதற்கு நடக்காத ஒன்றை நினைத்து மனம் உருகுவானேன். பாவம்! லலிதா அத்தை! ஏதோ பணக்கஷ்டத்தில், அவர்கள் புத்தி வேலை செய்து விட்டது. குறுக்குவழியை நாடிவிட்டது. என்ன ஒரு லட்ச ரூபாய் ஏற்பாடு பண்ணிக் கொடுத்த தன் அக்கா ஒரு 4000 -ரூபாயைத் தரமாட்டங்களா! உண்மையைச் சொல்லியிருந்தால்… விட்டுவிடுவோம். மறந்து விடலாம்தானே பெரியம்மா!

     

    Share