மாதங்கி

நான் நின்றுகொண்டிருக்கிறேன். ஒருமணிநேரம், இரண்டுமணிநேரம் அல்ல, இரண்டு வாரங்களாக நின்றுகொண்டிருக்கிறேன்; தரையில் அன்று ; தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறேன். நேரடியாக இல்லாவிட்டாலும் நான் நின்றுகொண்டிருக்கும் இடம், நிலுவையில் உள்ள கப்பலில் இருக்கிறது; பாதகமில்லை, எனக்கு; ஆனால் இந்த மனித ஜீவனுக்கு? இந்த பாரக்கப்பலில் மாட்டிக்கொண்டிருப்பவருக்கு?

நான் யார்? என் பெயர் என்ன என்பது தேவையில்லை. சித்தகாங்கு துறைமுகத்தில் பொருள்கள் அடங்கிய பெரிய பெட்டிகளை கப்பலில் ஏற்றிச்செல்ல நிறைய கண்டெய்னர்களைப், பார்த்திருப்பீர்களே, அவற்றில் ஒன்றுதான் நான்.

சித்தகாங்கு துறைமுகம் பிரம்மாண்டமானது. கி.மு நான்கில் இங்கிருந்துதான் மலாயாவிற்கு புத்தகுப்தர் சென்றாராம்; பெரிப்ளக்ஸ் குறிப்புகளில் இருக்கிறதாம். யுவான் சுவாங்கு, ஃபாஹியன், டாலமி, இபின் படூடா எல்லோருமே இத்துறைமுகத்தைப் பற்றிக்குறிப்பிட்டிருக்கிறார்களாம். பிற்காலத்தில் போர்த்துகீசியர், ஆங்கிலேயர் ஆகியோர் வசம் இருந்ததாம். யாரோ பேசும்போது கேட்ட நினைவு.

என் இப்போதைய கவலையெல்லாம் இந்த மனித உயிரைப் பற்றியது மட்டுமே. எந்த மதம், மொழி, இனம், நாடு என்ற பேதம் பார்க்க நான் மனிதப்பிறவி அல்லவே; எனக்கு அது ஒரு மனித உயிர் அவ்வளவுதான். அவனுக்கு ஜீவன் என்ற பெயரை நானே வைத்துவிட்டேன். ஜீவன் தற்சமயம் என்னுடன் தான் இருக்கிறான்.

சித்தகாங்கு துறைமுகத்தில் நின்றுகொண்டிருக்கும்போது இவனைப்போன்ற பலரைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவன் இவன். தனியார் நிறுவனங்களின் நிரந்தரக் கூலிப் பட்டியலில் அன்றாடம் காய்ச்சிகளாய் இடம்பிடிக்கவும் முடியாமல் தற்காலிகக்கூலி என்ற பெயரில் நாள் ஒன்றுக்குப் பன்னிரண்டுமணிநேர உழைப்பையும் போட்டுவிட்டு கண்காணிப்பவன் என்ன சில்லரை கொடுக்கிறானோ அதை மறுபேச்சின்றி வாங்கிப்போய் வீட்டிலிருக்கும் ஒன்பது உயிர்களுக்கும் படியளப்பவன்.

அவனுக்குப் பல கனவுகள் இருந்தன. எழுதப்படிக்கத் தெரியாததால், கண்காணிப்பவனிடம், அடிஉதை, கெட்டபேச்சு, இவற்றைக் கேட்டுத்தொலைக்கவேண்டியிருக்கும்போதெல்லாம், மாலை மங்கியபின் மகள் முக்தா எண்ணெய் விளக்கொளியில் குழிகள் நிறைந்த மண் தரையில் நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொண்டு எழுதியவாறு சத்தம்போட்டு படிக்கும் காட்சியை நினைத்துக்கொள்வான். எப்பவாவது மகள் முக்தா, தனக்குக் கொடுக்கும் தேத்தண்ணீரில் ஒருநாளாவது பாலூற்ற முடியுமா என்று தயங்கித்தயங்கி கேட்பாள். என் அன்பு முக்தாவுக்காக; நாளெல்லாம் உழைத்துவிட்டு இரவு படுக்கும்போதுகூட முழுமறைப்பு இல்லாத, கொசுக்கடியும் நாற்றமும் வீசும் தடுப்பு அடியில் படுத்துறங்கும் மனைவிக்காக. மடபாரி ரயில் நிலையத்தின் மறுபுறம் குப்பைக்கூளங்களுக்கு மத்தியில், இருப்பதைக் கொண்டு குடிசைகட்டி வசிப்பவர் பலர் இருந்தனர், இவனும் நான்கு குச்சிகளுக்கு மேல் பொருத்தியிருந்த ஒரு பழைய பிளாஸ்டிக் விரிப்பாலான கூரையை, விட்டு எங்குபோனாலும், நம்வீட்டுக்குப்போகணும் என்று மழலை மொழிபேசும் பவனுக்காக, என்று எண்ணி அடக்கிக்கொள்வான்.

அடிமட்டக்கூலியைக் கொடுக்கும்போதும் அதிலிருந்தும் பாதிக்கும் மேல் கமிசன் எடுத்துக்கொண்டு சில்லரையை கூலி விநியோகிப்பவன் ஒருமுறை வீசிப்போட்டபோது, அவன் காட்டிய ரோசம் தற்காலிக கூலிவேலையை மட்டும் பறிக்கவில்லை, மருந்துவாங்கக் காசின்றி, பேதிகண்ட இரட்டைக்குழந்தைகளின் உயிரையும் பறித்துக்கொண்டது.

சில நாள்கள் கழித்து, அந்தத் துறைமுகத்தில் இருந்த வேறொரு தனியார் நிறுவனத்தின் நிரந்தரக்கூலி ஒருவனின் நட்புகிடைத்து, அவன் உபகாரத்தால், தற்காலிகமாகச் சுமையேற்றும் வேலை கிடைத்திருந்தது. அப்போது ஏதோ கணக்கெடுக்க வெளிநாட்டுக்காரர்கள் சிலர் வந்தார்கள். கூடவே மொழிபெயர்த்துச்சொல்ல உள்ளூர்காரன் ஒருவனையும் கூட்டிவந்திருந்தார்கள். அவனுடைய மாத வருமானம் கேட்டார்கள். அவர்கள் பணத்தில் இவன் கூலி ஒரு நாளைக்கு ஒரு வெள்ளியாம், உள்ளூர்காரன் சொன்னான். இவர்கள் இப்படி வெளிநாட்டுக்கு கணக்கெடுக்க வந்திருக்கிறார்களே, இவர்களுடைய பெண்டு பிள்ளைகளுக்கெல்லாம் யார் காவல், ஜீவன் யோசித்தான். அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள். மனைவி பானுவுக்கு பாதுகாப்பு மட்டுமன்றி மகள் முக்தாவை யாரும் கடத்திப்போய்விடக்கூடாது, என்ற பயம் இப்போது அடிக்கடி வருகிறது. காலிப் பயல்கள்; மனுசன் காசின்றி இருந்தாலும் அது பெண்பிள்ளை என்னும் பட்சத்தில் ஏழை பணக்காரன், சாதி வேறுபாடு பார்ப்பதில்லையே, காசநோயில் வாழும் பெற்றோருக்கு ஒரு வாரமாகத்தான் மருந்து வாங்கிக்கொடுக்க முடிகிறது. என்றாவது ஒரு நாள், கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு மிதிசைக்கிள்வேன் ஓட்டுநராகி, பின் சொந்தமாக ஒரு மிதிசைக்கிள்வேன் வாங்கிவிட வேண்டுமென்று நினைத்தான். வாங்கியபின் பின்பக்கத்திலிருக்கும் கூண்டுக்கதவில் முக்தாவை வண்ணச்சாயத்தால் படம் எழுதச்சொல்லலாம். சாமான்களைக் கட்டிவைக்க பலத்த கயிறு ஒன்று வாங்கிக்கொள்ளவேண்டும். அப்படியே தொங்கும் விளக்கு ஒன்றை தயாராக வைத்துக்கொண்டால் இரவு சவாரி மிதிக்கும்போது வெளிச்சத்திற்கு உதவும். வியர்வையைத் துடைக்க இருக்கை அருகில் ஒரு கைத்துண்டு வைத்துக்கொள்ளலாம். வாரத்தில் ஒரு நாள் வீட்டினரை எங்காவது பின்புறக்கூண்டில் அமர்த்தி அழைத்துச்செல்லலாம். இவை எல்லாவற்றையும் விட தினமும் இரண்டு வேளை கஞ்சி வீட்டினர் எல்லோருக்கும் கிடைக்கும் என்பது அவனுக்கு ஒரு மனத்தெம்பைத் தந்தது. கொஞ்சம் துணிவாங்கி கோடிக்கடை பாய்’ இடம் கொடுத்து குழந்தைகளுக்கு நல்ல சட்டை தைத்துத்தரச்சொல்லிப் போட்டுப் பார்க்க வேண்டும்.

பன்னிரண்டு மணிநேரம் பகல் ஷிப்ட் பார்த்தால் அடுத்த பன்னிரண்டு மணிநேரவிடுப்புக்குப் பின்தான் வேலைக்கு வரமுடியும். ஓரிருநாள்கள் இரண்டுமூன்றுமணிநேரம் தூங்கிவிட்டு, அடுத்த ஷிப்ட் பணி வரும் வரை சும்மா இருக்கவேண்டாமென்று, தளத்தைப் பெருக்கும் வேலை கிடைக்குமா என்று கேட்டுப்பார்த்தான்; விரட்டிவிட்டார்கள்.

நான்கு நாள்கள் ஒருவேளை எல்லோருக்கும் உணவுகிடைத்தால் ஐந்தாவது நாள் ஏதேனும் புதிய பிரச்சனை ஒன்று முளைத்துவிடுகிறது. கைக்குழந்தை பவனுக்கு பால்மாவு வாங்க காசில்லாவிட்டாலும் கஞ்சிவேளைதவிர இக்கடுங்கோடையில் உதடுகள் அடிக்கடி உலர்ந்து வெடித்துப்போய் அழுகிறது. தெருவில் இருக்கும் அவர்கள் இருப்பிடத்திற்கு வெளியே வெட்டவெளியில் அவர்களுடைய சமையல் பாத்திரங்கள் அருகில் எங்கேனும் தண்ணீர் கிடைத்தால் குடித்துவிடுகிறது. பெற்ற பிள்ளைக்குக் குடிக்க நல்ல தண்ணீர்கூட கொடுக்கமுடியாத பாவி என்று ஜீவன் நேற்று முட்டிக்கொண்டு அழுதான். பானு ஆசையாக வளர்க்கும் நாய்க்குட்டி அருகிலிருந்த குட்டைநீரை ஓடிஓடிப்போய்க்குடித்து அடிக்கடி சுகவீனம் அடைந்துவிடுகிறது. எங்கோ கிடைத்த ஆரஞ்சுப்பழக்கொட்டைகளை முக்தா ஒரு தகர டப்பாவில் மண்நிரப்பி வைத்திருக்கிறாள். ஒரு மழை திடீரென்று வந்துவிட்டால் மூங்கில் கழிகள் விழுந்துவிடுகின்றன. ஒரு குடிசை கட்டிக்கொள்ளவேண்டும்.

பத்துவயது முக்தா மெலிந்தவளாய் இருக்கிறாள். நல்ல மனம் கொண்ட வைத்தியர் ஒருவர், இலவசமாகக் கொடுத்த பால்மாவு டப்பா எத்தனை நாள்தான் வரும். இப்படித்தான் அவன் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.

இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று பார்க்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன். பன்னிரண்டு மணி நேர பகல்நேரப் பணியில் பளுதூக்கும் வேலை முடிந்தபின் இரவுப்பணிக்கு கூலி ஒருவன் வராததால் ஜீவன் அதை ஒரு நாள் ஏற்றுக்கொண்டு, கிடைத்த கூலியை வீட்டில் கொடுத்துவிட்டு அடுத்த பகல்நேரப் பணி இல்லாததால், தளம் பெருக்கும் வேலையை முடித்துவிட்டு துறைமுகத்தில் கவனிப்பாரற்றுக் இருந்த ஒரு கண்டெய்னர் உள்ளே, அதாவது என் உள்ளே, ஒரு தேத்தண்ணீர்க் கிண்ணத்துடன் நுழைந்தவன் தன்னைமறந்து கண்ணயர்ந்துவிட்டான். .

இருட்டியபின் அவன் உள்ளே இருப்பதை அறியாமல் என்னுடைய கதவு சீலிடப்பட்டுக் கப்பலில் ஏற்றப்பட்டு சிங்கப்பூரை நோக்கிக் கிளம்பியது. இங்கே ஒரு மனிதன் இருக்கிறான், சீலிடாதீர்கள் என்று என்னால் முடிந்தவரை அலறினேன். ஜீவன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். யார் காதிலும் நான் அலறியது விழவில்லை.

நானும் பதற்றம் கூடிட கவனித்துக்கொண்டிருந்தேன். சிலமணிநேரங்களில் விழித்தவன், நிலையைப் புரிந்துகொண்டு அலறினான். இரும்பாலான என் உட்சுவர்களைப் பலங்கொண்ட மட்டும் தட்டினான், கத்தினான், கதறினான். அவன் அவ்வப்போது உடைந்துபோய்ப் புலம்பியதை வைத்துதான் அவனைப் பற்றிய விவரங்களை நான் தெரிந்துகொண்டேன். அதை உங்களுக்கும் கூறி வந்தேன். ஆனால் கப்பல் தன் பயணத்தைத் துவங்கி பலமணிநேரங்கள் ஆகிவிட்டது. உறங்கினான், விழித்தான், புலம்பினான், உதைத்துப்பார்த்தான், அழுதான். என் பக்கவாட்டில் இருந்த தகடுகளில் அங்கங்கே ஆணிகளும் ஸ்க்ரூக்களும் பூட்டப்பட்டிருந்ததால் சுவாசிக்க காற்று சில துளைகள் வழியே வந்தது. பொதுவாக என் போன்ற கண்டெய்னர்களில் சணல் பொருள்கள், இரசாயன உரங்கள், மீனுணவுத் தயாரிப்புகள் போன்றவை பெட்டிகளில் இடப்பட்டு ஏற்றப்படும். என்னுள் ஒரே ஒரு பெட்டிதான் ஜீவன் வருவதற்கு முன் இருந்தது. அதில் என்ன இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை,

ஜீவன், உன் சக்தியை வீணாக்காதே ஐந்து நாள்களில் சிங்கப்பூர் சென்றுவிடுவோம். உனக்கு ஒரு வழிபிறக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அதே சமயம் கள்ளத்தனமாக சிங்கப்பூருக்கு வேலைவாய்பைத் தேடி வருபவர்களுக்கு கடும் தண்டனை என்பதும் எனக்குத் தெரியும். முன்பொருமுறை இதேபோல் எங்கிருந்தோ வந்த சரக்குக் கப்பலின் இருவர் கண்டெய்னரின் மாட்டிக்கொண்டு, ஒருவன் கப்பல் வெய்யிலில் ஏற்பட்ட சூட்டில் இறந்திட பிணத்துடன் இருந்த மற்றொருவனை சிங்கப்பூரின் பாசில் பஞ்சாங் முனையத்தில் கப்பல் வந்த உடனேயே கண்டெய்னர்களை இறக்கிவிட்டதால் கண்டுபிடித்து, மருத்துவமனையில் சேர்த்து பின் சில தொண்டூழியர்கள் உதவியால் அவனை விசாரித்து, உண்மை நிலவரத்தைப் புரிந்துகொண்டபின், அவனை, அவன் நாட்டிற்கு, நல்லபடியாக திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதில் வந்தவனைப் பற்றியோ அவன் வாழ்க்கை பற்றியோ எனக்கு எதுவும் தெரியவில்லை. பயணமே நீண்டுவிட்டதுபோல் தோன்றியது, நாங்கள் கிளம்பியதிலிருந்து ஒரே மழை வேறு. சிங்கப்பூர் போய் சேர்வதுவரையாது ஜீவன் உயிரோடு இருக்கவேண்டுமே என்று வேண்டிக்கொண்டிருந்தேன். இவன் கதையைக் கேட்டபின் இவன் எதோ எனக்கு மிகவும் வேண்டியவன் போல் தோன்றிவிட்டதா, அல்லது இவனுடைய குடும்பத்திற்கு இவனுடைய அவசியத்தைப் பற்றி நினைத்தா என்று திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியவில்லை. இவன் உயிரோடு இருக்க வேண்டும், இருப்பான், அவ்வளவுதான்.

சிங்கப்பூர் துறைமுகத்திற்கு வந்துசேர்ந்ததை எனக்குப் பழக்கமான வெளியுலக ஒலியாலும், வாசனை மூலமாகவும் தெரிந்துகொண்டேன். என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஜீவன், போராடிப் போராடி ஓய்ந்திருந்தான். கத்தாதே, துறைமுகம் சேர்ந்தவுடன் உரக்கக்கூவிட உனக்குத் தெம்பு வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடியது அவன் காதில் விழவில்லைநம்பிக்கையுடன் இருக்கத் தீர்மானித்தேன். வேறெதுவும் என்னால் செய்ய இயலாத பட்சத்தில், இது ஒன்றுதான் வழி.

மறுநாள், இராட்சத கிரேன்கள் சில, துறைமுகத்தில் காத்துக்கொண்டிருந்த சில கப்பல்களில் இருந்த சில கண்டெய்னர்களை இறக்கின. நாங்கள் இறக்கப்படவில்லை. என்னை யாரும் சட்டை செய்யவில்லை. எங்கள் அருகிலேயே யாரும் வரவும் காணோம். ஒரு வாரமாக துறைமுகத்திலே காத்துக்கொண்டேயிருக்கிறேன். . உடலில் உள்ள தண்ணீர்சத்தெல்லாம் வற்றிட அவன் மயங்கியிருந்தது எனக்கு மிகவும் பதற்றத்தைத் தந்தது. ஒரு வேளை இறந்துவிடுவானோ, பவன், முக்தா இவர்களின் கதி, இவன் குடும்பம்,… கொஞ்சம் நிதானப்படுத்திக்கொண்டேன்.

கோடைவெப்பம் என் இரும்புச்சுவர்களை இன்னும் அதிகமாகத்தாக்க, நான் என் சக்தியெல்லாம் திரட்டிக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறேன்.

இதைத்தான் இக்கதையின் துவக்கத்தில் உங்களிடம் சொல்லத் துவங்கினேன்.

ஜீவன் உடலின் நீர்ச்சத்தெல்லாம், வற்றி, பசியால் கண்கள் பஞ்சடைந்து அவ்வப்போது தூக்கமும், விழித்தால் அரை மயக்கமுமாய் இருந்தான். ஒவ்வொரு விழிப்புக்கும் பிறகு தன் சக்தியெல்லாம் திரட்டி சுவர்களில் ஓங்கி ஓரிரு முறை குத்துவான், கத்திப்பார்ப்பான், இப்போது இரண்டு நாள்களாக அதற்கும் அவனிடம் திராணி இல்லை.

சில கிரேன்களின் உதவியால் நானும் வேறு சில கண்டெய்னர்களும் இடம்மாற்றப்பட்டோம். இவை வியட்நாம் செல்லும் கண்டெயினர்கள் என்று ஒலிபெருக்கியில் ஒருவர் அறிவித்துக்கொண்டிருந்ததைக் கேட்டு திடுக்கிட்டுப்போனேன்.

சீருடை அணிந்த சிப்பந்திகள் இருவர் ஏதோ சோதனைக்கு நான் இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் வந்தபோது, ஜீவன், இதைவிட்டால் உனக்கு இனி வாய்ப்பு இல்லை, உன் உயிர் மட்டுமன்று உன் குடும்பத்தினரின் உயிரும் இப்போது நீ எடுக்கும் முயற்சியில்தான் உள்ளது அலறினேன். இங்கே இறங்காமலே வியட்நாம் பயணம் என்றால், ஜீவனின் கதை முடிந்தகதையாகிவிடுமே. கடைசியாக ஒரு முறை தள்ளாடிய ஜீவன், தன் பலத்தையெல்லாம் திரட்டி ஓங்கி ஒரு முறை தட்டினான். கூக்குரலிடக்கூட அவனுக்கு முடியவில்லை. சோர்வுற்று மயங்கி கீழே விழுந்தான். நாங்கள் வியட்நாம் செல்லும் கப்பலிலா இருக்கிறோம். அப்படியானால், இங்கு எங்களைத் திறக்கவே மாட்டார்களே. என் புலன்களை மூடிக்கொண்டேன், செவி மட்டும் விதிவிலக்காக.

என்னுடைய பின்குறிப்பு

பங்களாதேசத்திலிருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாம் செல்லும் சரக்குக் கப்பலுக்கு தெரியாமல் வந்துவிட்டோமே, என்று இருவர் முணுமுணுத்தனர். அவர்கள் சுங்கச் சாவடி அதிகாரிகள் என்பதை அவர்களுடைய சீருடையை வைத்துப் புரிந்துகொண்டேன்.

அந்த இருவரில் ஒருவர், “நாம் படகிலிருந்து இறங்கும்போது ஏதோ ஒரு கண்டெய்னரில் லேசாக சத்தம் கேட்டதுபோல் இருந்ததே” என்று மற்றவரிடம் சொன்னார்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “‘நீர்’

  1. கதையின் சிறப்பைப் பாராட்ட சம்பிரதாய வார்த்தைகளை ஒட்டுமொத்தமாகப் போட்டாலும் போதாது!!. மெல்ல மெல்ல ஆழமாக மனதில் நங்கூரமிட்டு அழுத்துகிறது கதை வெளிப்படுத்தும் உணர்வு. கதை சொல்லி,  உயிரும் உணர்வும் இல்லாததாகக் கருதப்படும் ஒரு கன்டெய்னர் என்பதே வியப்பாக இருந்தது. கடல் சொன்ன கதைகள் கொஞ்சம். சொல்லாமல் விட்ட கண்ணீர் கதைகள் ஏராளம். அதில் ஒன்றை கன்டெய்னர் சொல்கிறது. படிக்கும் போதே சூழல் கண்முன் வந்து விட்டது. முடிவைச் சொன்ன விதம் அருமை. வாழ்த்துக்கள் மாதங்கி அவர்களே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.